அந்த சுரங்க வழி வெகு தூரம் சென்றது. பல இடங்களில் வளைந்து வளைந்து சென்றது. அந்த பாதையின் இரு பக்கவாட்டுச் சுவர்களிலும் மேல் பகுதியில் ஒளி வீசும் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அவை இருபது அடிக்கு ஒன்று என்ற வீதத்தில் அமைக்கப்பட்டிருந்தன. அவை அந்த பாதைக்கு குறைந்த ஒளியை தந்தன. அதைக் கொண்டு அந்த பாதையில் செல்பவர்கள் தடுமாறாமல் செல்ல முடியும். அந்த கற்கள் எங்கிருந்து ஒளியைப் பெற்று பிரதிபலிக்கின்றன என்று கண்டுபிடிக்க திண்டு நினைத்தான். அவன் ஒரு ஒளி வீசும் கல்லின் அருகில் சென்று அதை பாரத்தான்.
முத்துவும் வியப்பில் ஆழந்திருந்தான். அவன் ”என்ன பார்கிறாய் தி..ண்டு? என்று கேட்டான்.
”இந்த கற்கள் எப்படி ஒளி வீசுகின்றன என்று பார்க்கிறேன்” என்றான்.
”இயற்கையிலேயே ஒளி வீசும் கற்கள் உள்ளன. வைரம் ஒளி வீசும்” என்றான் முத்து.
”ஆமாம் ஆனால் அவை ஒளியை எங்கிருந்தாவது பெற்று தான் வீச முடியும். இந்த இருண்ட சுரங்க வழியில் அவை எங்கிருந்தோ ஒளியைப் பெறுகின்றன” என்றான் திண்டு.
”நாம் முன்பு பார்த்த அந்த நீர்த்துளிகள் விழும் இடத்தில் இருந்ததை போல மேலே ஏதாவது வெளிச்சம் வரும் வழி இருக்கும்” என்றான் முத்து.
”இருக்கலாம். ஒருவேளை இவற்றின் பின்னால் எங்காவது” என்றான் திண்டு.
”இந்த பாதை எங்கு செல்லும் என்று நீ நினைக்கிறாய் தி..ண்டு?” என்று முத்து கேட்டான்.
”தெரியவில்லை. ஆனால் இதை அமைத்தவர்கள் பெரிய திட்டங்களுடன் தான் இதை அமைத்திருக்க வேண்டும்” என்றான் திண்டு.
”இதை அவர்கள் நீண்ட காலமாக பயன்படுத்திக் கொண்டுதான் இருக்க வேண்டும்” என்றான் முத்து.
”இல்லை முத்து அவர்கள் இதை கொஞ்ச காலமாகத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்றான் திண்டு.
”எப்படி சொல்கிறாய்?
”இந்த ஒளிவீசும் கற்களைப் பார். இவை புதியவை போல எவ்வளவு தூய்மையாக இருக்கின்றன. பழைய பாதை இப்படி இருக்காது. இது கொஞ்ச காலத்திற்கு முன் அமைக்கப்பட்டதாக தான் இருக்க வேண்டும்” என்றான் திண்டு.
”எதற்காக இதை அமைத்தார்கள்? யார் அவர்கள்?” முத்து கேட்டான். அவன் திண்டு ஏதாவது சொல்வான் என்று ஆவலுடன் எதிர்பார்த்தான்.
திண்டு எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவன் முத்துவிடம் கேட்டான் ”உனக்கு என்ன தோன்றுகிறது முத்து? நீ சொல்” என்றான்.
”எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. எனக்கு பயமாக இருக்கிறது” என்றான் முத்து.
”பயப்படாதே. ஒன்றும் தோன்றவில்லை என்று சொல்லாதே ஏதாவது யோசித்துப் பார்” என்றான் திண்டு.
”யோசனையா?”
”ஆமாம். என்றான் திண்டு. அவனும் யார் இதை உருவாக்கி இருப்பார்கள்? என்று யோசித்தான்.
”ஒருவேளை என் அப்பாவை பிடித்துச் சென்ற கொள்ளையர்களா?” என்றான் முத்து.
”இருக்கலாம். நாம் நுழைந்த வழி முதல் காட்டில் இருக்கிறது. இந்த இரு கிளைப் பாதைகளும் எங்கே செல்கின்றன என்று தெரியவில்லை. அவர்கள் மற்றவர்கள் கண்ணில் படாமல் நடமாடுவதற்கு இதைப் பயன்படுத்தலாம்”
”யாராவது விரட்டி வந்தால் தப்பிச் செல்வதற்கும்” என்றான் முத்து.
”ஆமாம். அதனால் தான் ஒவ்வொரு கட்டத்திலும் பாதை மூடிக் கொள்ளும்படி அமைத்திருக்கிறார்கள். விரட்டி வருபவர்கள் பின் தொடர்ந்து வந்தால் தடுக்கப்பட்டு நடுவே மாட்டிக் கொள்வார்கள்” என்றான் திண்டு.
திண்டு மேலும் தொடர்ந்து ”கொள்ளையர்கள் தான் இதை அமைத்தார்கள் என்றும் உறுதியாக சொல்ல முடியாது” என்றான்.
”ஏன் அப்படி? அவர்கள் இல்லையெனில் வேறு யார் இதை உருவாக்கி இருப்பார்கள்? முத்து கேட்டான்.
”ஒருவேளை நம் நாட்டு அரசே இதை உருவாக்கி இருக்கலாம்” என்றான் திண்டு.
”நம் நாட்டு அரசா? நம் நாட்டு அரசு எதற்காக இதை உருவாக்க வேண்டும்?”
”காட்டுப் பகுதியில் கொள்ளையர்களின் நடமாட்டத்தையும் எதிரி நாட்டு ஒற்றர்களின் நடமாட்டத்தையும் கண்காணிக்கவும் ஏற்படுத்தி இருக்கலாம்” என்றான் திண்டு.
”ஒருவேளை எதிரி நாடே இதை உருவாக்கி இருந்தால்?” என்று கேட்டான் முத்து.
”வாய்ப்பே இல்லை. நாட்டின் எல்லை ஏழு காடுகளைக் கடந்து எட்டாம் காட்டின் அப்பால் தான் உள்ளது. இவ்வளவு தூரம் அவர்கள் நம் நாட்டிற்குள் பாதை அமைத்துக் கொண்டு வந்திருக்க முடியாது. நம் எல்லை வீரர்களின் கண்காணிப்பில் தப்பி இருக்க முடியாது.” என்றான் முத்து.
”சரி தி…ண்டு…அது எப்படியோ? நாம் இங்கிருந்து எப்போது தப்புவோம்? எனக்கு வேறு பசிக்கிறது” என்றான் முத்து.
”கொஞ்சம் பொறு முத்து. நம்பிக்கையுடன் இரு நாம் விரைவில் இதிலிருந்து வெளியே சென்று விடுவோம். இனி தாமதிக்க வேண்டாம். நாம் விரைந்து செல்வோம்” என்றான் திண்டு.
இருவரும் வேகமாக அந்த பாதையில் நடக்கத் தொடங்கினார்கள்.
”இன்னும் எவ்வளவு தூரம் தான் இருக்கிறதோ” முத்து களைப்புடன் சொன்னான்.
திண்டுவிற்கு பலவிதமான எண்ணங்கள் தோன்றியது. ஒருவேளை இது நம் நாட்டு அரசு அமைத்த பாதை என்றால் கவலைப்படவே வேண்டியதில்லை. எப்படியும் இந்நேரம் முகிலன் மாமாவுடன் அந்த நான்கு வீரர்களும் திண்டுவும் முத்துவும் காணாமல் போன அந்த மரத்தடிக்கு வந்து பார்த்திருப்பார்கள். அந்த வீரர்களுக்கு இந்த பாதை பற்றி தெரிந்திருக்கலாம். அல்லது அவர்களுக்கு தெரியாவிட்டாலும் அவர்கள் திண்டுவின் அப்பாவிற்கு தகவல் தெரிவித்து பறவைத் தூது அனுப்புவார்கள். அப்பாவிற்கு நிச்சயம் தெரிந்திருக்கும். எனவே ஒன்று அவர்கள் திண்டுவும் முத்துவும் வந்த வழியிலேயே பின்னால் வருவார்கள் அல்லது இந்த பாதை எங்கு சென்று முடியுமோ அந்த வழியாக வந்து எதிர்கொள்வார்கள். இப்படியெல்லாம் திண்டு நினைத்தான்.
ஒருவேளை இது கொள்ளையர்கள் உருவாக்கிய வழி என்றால்? அப்போது இது உண்மையிலேயே பெரிய ஆபத்துதான் என்று நினைத்தான்.
ஆனால் இதுபற்றி எதுவும் முத்துவிடம் பேசக் கூடாது என்று நினைத்தான். அவன் மிகவும் பயந்துவிடுவான்.
சற்று தூரத்தில் வெளிச்சம் தெரிந்தது. அத்துடன் சத்தத்துடன் நீர் ஓடும் ஓசையும் கேட்டது.
”நாம் பாதையின் முடிவுக்கு வந்து விட்டோம் முத்து” என்றான் திண்டு.
அவர்கள் அந்த பாதையின் முடிவிற்கு அருகே மெல்ல சென்று பார்த்தார்கள். அதன் கீழே இருபது அடி பள்ளத்தில் ஒரு காட்டாறு வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றின் எதிர்பக்கம் நீண்ட தூரம் சரிவாக உயரமாக மேலேறிச் செல்லும் நிலம். அதில் பல மிக உயரமான மரங்கள் இருந்தன. அந்த காடு முதல் காட்டை விட பெரியதாக இருக்கக்கூடும் என்ற திண்டுவிற்கு தோன்றியது.
”நல்ல வேளை வேகமாக வந்திருந்தால் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டிருப்போம்” என்றான் முத்து.
எப்படி கீழே இறங்குவது? ஆற்றில் விழுந்து விடாமல் எப்படி ஆற்றைத் தாண்டுவது என்று திண்டு சுற்றிலும் பார்த்தான். அவன் அப்பாவை போன்ற பதினைந்து பெரியவர்கள் இரண்டு கைகளையும் நீட்டி கோர்த்துக் கொண்டு நேராக நின்றால் எவ்வளவு தூரம் இருக்குமோ அவ்வளவு அகலமாக இருந்தது அந்த ஆறு.
திடீரென்று ஒரு புலியின் உறுமல் சத்தம் பெரிதாகக் கேட்டது. ஒரு பெரிய புலி ஆற்றின் மறுகரையில் சரிவில் இருந்த மரத்தின் பின்னால் இருந்து வந்தது. அது ஆற்றை நோக்கி சரிவில் இறங்கியது. முத்துவும் திண்டுவும் சுரங்க வழியில் நின்று அதைப் பார்ததார்கள். முத்து நடுங்கினான்.
”அது இங்கே வந்து விடுமா?” எனறு கேட்டான்.
”அது இவ்வளவு தூரம் மேலே ஏறி வர வாய்ப்பில்லை” என்று சொல்லி முத்துவின் கைகளை உறுதியாக பிடித்துக் கொண்டான் திண்டு. உண்மையில் அவனுக்கும் பயமாகத்தான் இருந்தது. ஒருவேளை அது இங்கு பாய்ந்து ஏறி வந்து விடுமோ? என்று தோன்றியது. ஆனால் புலி இவர்களைப் பார்க்கவில்லை. அது ஆற்றில் நீர் குடித்துவிட்டு மீண்டும் சரிவில் ஏறச் சென்று விட்டது.
திண்டு மனதிற்குள் நினைத்தான், ”ஒருவேளை இங்கிருந்து கீழிறங்கி ஆற்றைக் கடந்து சென்றாலும் இந்த காட்டில் பயணிப்பது மிகவும் ஆபத்தானது”
”என்ன தி..ண்டு என்ன நினைக்கிறாய்?”
”ஒன்றுமில்லை முத்து”
திண்டுவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவன் அச்சமடைந்தான். ஆனால் தன் அச்சத்தை முத்துவிடம் காட்டவில்லை.
”முத்து நாம் சற்று நேரம் உட்காரலாம்” என்றான்.
”சரி திண்டு”
முத்துவை அழைத்துக் கொண்டு மீண்டும் சுரங்கப் பாதையின் உள்ளாக சற்று தூரம் சென்றான் திண்டு. பின் கீழே கால் மடித்து அமர்ந்தான். முத்து அவன் பக்கத்தில் உட்கார்ந்தான்.
திண்டு கண்களை மூடிக் கொண்டான். அவன் மனக்கண்ணில் நீலவானில் மதிந்து செல்லும் வெண் மேகங்கள் தெரிந்தன. ஒரு வெண் மேகத்தின் பின்னால் மறைந்திருந்த சூரியன் வெளியே வந்தது. சூரியனின் ஒளிக் கதிர்கள் மரக்கிளைகளின் வழியாக சிதறி, இலைகளின் இடைவெளி வழியாக சிதறி ஒரு குளத்தில் சென்று விழுந்தன. குளத்தில் காற்றால் மெல்லிய அலைகள் தோன்றின. அந்த அலைகள் சூரியனின் கதிர்கள் பட்டு மின்னின. மின்னும் ஒளியின் வளையங்கள் ஒளியின் நடனம் போல இருந்தது.
அவன் குகைத் தாத்தாவை நினைத்துக் கொண்டான்.
குதிரைகளின் குளம்படி ஓசைகள் கேட்டன.
திண்டுவும் முத்துவும் எழுந்து கொண்டார்கள். அவர்கள் சுரங்கத்தின் வாயிலருகே சென்று நின்றார்கள். ஆற்றின் எதிர்க்கரையில் ஒரு பழுப்பு குதிரையில் முகமூடி அணிந்த ஒருவன் வந்தான். அவனைத் தொடர்ந்து ஏழு குதிரைகளில் அவனைப் போலவே முகமூடி அணிந்தவர்கள் வந்தார்கள். முதலில் வந்தவன் சரிவில் இறங்காமல் அங்கு குதிரையில் இருந்தவாறே திண்டுவையும் முத்துவையும் பார்த்தான். அவன் பின்னால் வந்தவர்கள் தங்கள் குதிரைகளுடன் அவன் அருகே வந்து நின்றார்கள்.
அவன் திண்டுவையும் முத்துவையும் உற்றுப் பார்த்தான். பிறகு சத்தமாக
”என்னடா இது சுண்டெலிகள் வந்திருக்கின்றன?” என்று தன் அருகே இருந்தவனிடம் சொன்னான்.
அவன் ”தெரியவில்லை தலைவரே” என்றான்.
”ஏய் சிறுவர்களே யாரடா நீங்கள்?” என்று கேட்டான்.
முத்து ”நாங்கள்…” என்று சொல்லத் தொடங்க, திண்டு தன் கையால் அவன் வாயை பொத்தினான்.
”ஓ அவனை நீ சொல்ல விட மாட்டாயோ? அவ்வளவு பெரிய அறிவாளியா நீ? என்றான் அந்த கூட்டத்தின் தலைவன். பிறகு
”இவர்கள் யாராக இருந்தால் நமக்கு என்ன? நாம் செல்வோம்” என்றான்.
அப்போது அவனது அருகில் இருந்தவன் அவனிடம் வந்து ரகசியமாக என்னவோ சொன்னான். அது திண்டுவிற்கும் முத்துவுக்கும் காதில் விழவில்லை.
‘ஓ அப்படியென்றால் சரி” என்ற தலைவன் மீண்டும் சத்தமாக சொன்னான் ”ஓ சிறுவர்களே இப்போது நான் சொன்ன படி நீங்கள் கேட்டாக வேண்டும்” என்றான்.
வேறொருவன் ஒரு ஈட்டியை கொண்டு வந்தான். அதை ஒரு வலையுடன் பிணைத்தான். பின் அந்த ஈட்டியை திண்டுவும் முத்துவும் நின்றிருந்த சுரங்கத்தின் கீழே பக்கவாட்டில் இருந்த ஒரு மரத்தை நோக்கி வேகமாக வீசினான். அது அந்த மரத்தின் தடித்த கிளையில் குத்தி நின்றது. மிக நீண்ட அந்த வலையின் மறு முனைகளை இரண்டாக விரித்தான். அந்த இரண்டு முனைகளையும் அவன் நின்றிருந்த இடத்திற்கு அருகே இருந்த இரண்டு மரங்களில் கட்டினான்.
தலைவன் சொன்னான். ”சிறுவர்களே. இப்போது என்ன செய்கிறீர்கள். இந்த வலையில் இரண்டு பேரும் குதிக்கிறீர்கள். சரியா?”
”நீங்கள் யார்? நாங்கள் எதற்காக நீங்கள் சொன்னபடி கேட்க வேண்டும்?” என்று திண்டு கேட்டான்.
”தம்பி தேவையற்ற கேள்விகள் கேட்கக் கூடாது. சொன்னதைச் செய்” என்றான் தலைவன்.
”திண்…டு நாம் உள்ளே ஓடிவிடுவோம்” என்று சொல்லி திரும்பினான் முத்து. அடுத்த நொடி ஒரு அம்பு பாய்ந்து வந்து அவன் கழுத்துக்கு அருகே கடந்து சென்று சுரங்கத்தின் சுவரில் தைத்தது. அந்த கூட்டத்தில் ஒருவன் தான் அந்த அம்பை எய்திருந்தான். அவன் கையில் வில்லுடன் அம்பை அவர்களை நோக்கி குறிவைத்து குதிரையில் அமர்ந்திருந்தான்.
”பார்த்தீர்களா? நீங்கள் நான் சொன்னதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும். உள்ளே ஓடுவதற்காக ஒரு அடி நகர்ந்தாலும் உங்கள் தலை இருக்காது. என்ன சொல்கிறீர்கள்?” என்றான் தலைவன்.
”பொறுங்கள். நீங்கள் சொன்ன படி கேட்கிறோம்” என்றான் திண்டு.
”ஹா ஹா ஹா ஹா” தலைவன் சிரித்துக் கொண்டே தலையை ஆட்டினான். மற்றவர்களும் சிரித்தார்கள்.
”திண்…டு எனக்கு பயமாக இருக்கிறது” என்றான் முத்து.
”பயப்படாதே முத்து. நமக்கு இப்போது வேறு வழியில்லை” என்றான் திண்டு.
திண்டு முத்துவின் கையைப் பிடித்துக் கொண்டான். இருவரும் அந்த வலையில் குதித்தார்கள்.
”ஓ….” என்று கத்திக் கொண்டே அந்த வலையில் சரிந்து சென்றார்கள். ஆற்றின் மறுகரையில் குதிரையில் இருந்த அந்த கூட்டத்தின் தலைவன் முன்னால் சென்று விழுந்தார்கள். விழுந்த வேகத்தில் கொஞ்சம் சரிவின் மேலே உருண்டு சென்ற அவர்கள் பின் கீழ் நோக்கி ஆற்றின் திசையில் உருண்டார்கள்.
இருவர் குதிரையில் இருந்து குதித்து அவர்களை பிடித்து நிறுத்தினார்கள். பின் எழுப்பி நிறுத்தினார்கள்.
திண்டுவிற்கும் முத்துவுக்கும் சிறிய சிராய்ப்புகள் ஏற்பட்டிருந்தன. பெரிய காயங்கள் ஏற்படவில்லை. இருவருக்கும் வியர்த்து கொட்டியது. முத்து மிகவும் களைப்படைந்திருந்தான். அவன் ”தாகம்…தாகம்….” என்றான்.
”ஏய் அவனுக்கு தண்ணீர் கொடு” என்றான் தலைவன்.
இவர்களைப் பற்றிப் பிடித்தவர்களில் ஒருவன் முத்துவுக்கு தோல்பையில் தண்ணீர் கொண்டு வந்து தந்தான். திண்டுவும் தண்ணீர் குடித்தான்.
பின் ”இவர்களது கை கால்களைக் கட்டி கொண்டு வாருங்கள். நேரமாகிறது. செல்வோம்” என்றான் தலைவன்.
அவர்கள் திண்டு, முத்துவின் கை கால்களைக் கட்டி ஒரு குதிரையின் மீது குறுக்காக போட்டார்கள். முத்து அழுதான். அவன் ”எனக்கு பசிக்கிறது” என்றான்.
”அப்படியா? அப்படியென்றால் இதை சாப்பிடு” என்று அவர்களைக் கட்டியவன் ஒரு துணியை எடுத்து வந்து முத்துவின் வாயில் திணித்தான்.
திண்டுவிற்கு கோபமாக வந்தது. அவனுக்கு முத்துவைப் பார்க்க பாவமாக இருந்தது.
”எங்களை ஏன் இப்படி அழைத்துச் செல்கிறீர்கள். எங்கள் கட்டுகளை அவிழ்த்து குதிரையில் அமரவைத்து அழைத்துச் செல்லுங்கள்” என்றான் திண்டு.
”ஓ… நீ எங்களுக்கே உத்தரவு இடுகிறாயா? நீங்கள் பெரிய இளவரசர்கள்” என் சொல்லி அந்த ஆள் திண்டுவின் கன்னத்தில் அறைந்தான்.
”வாயை மூடிக் கொண்டு இரு. இல்லாவிட்டால் உன் வாயிலும் துணியை அடைப்பேன்” என்றான் அவன்.
”இளவரசர்களாக இருந்தால் இவர்களை நாம் குதிரையில் உட்காரவைத்து அழைத்துச் செல்வோமா?” என்று வேறொருவன் கேட்டான்.
”சே சே..இவர்கள் இளவரசர்களாக மட்டும் இருந்தால் இப்படி குதிரையில் குறுக்காக போட்டு கொண்டு செல்ல மாட்டோம். தலைகீழாக தொங்கவிட்டு கொண்டு செல்வோம்” என்றான் அவன்.
அவர்கள் அனைவரும் சிரித்தார்கள்.
”என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது இவர்களது நாடு?. இவர்களின் வீரர்கள் நம்மைக் கண்காணித்து பிடிக்கப் போகிறார்களாம்? என்ன திமிர்” என்றான்
”பெருச்சாளியை போல வழி தோண்டி வைத்திருக்கிறார்கள்” என்றான் இன்னொருவன்.
”ஆம்…இந்நேரம் அந்த நான்கு பெருச்சாளிகளும் சிக்கி இருக்க வேண்டியது”
”அவற்றை வெட்டி இந்த காட்டின் விலங்குகளுக்கு போட்டிருக்கலாம்”
”ஆமாம். பாவம் இந்த சுண்டெலிகள் வந்து மாட்டிக் கொண்டன.
குதிரையின் மீது கிடத்தப்பட்டிருந்த முத்து மயக்கமடைந்து விட்டான். அவனைப் பார்த்த திண்டு வேதனைப்பட்டான். ”முத்து…முத்து” என்று கூப்பிட்டான். முத்து கண் திறக்கவில்லை.
”கடவுளே இப்போது என்ன செய்வது?” அவன் தவித்தான்.
இவர்கள் நான்கு பெருச்சாளிகள் என்று குறிப்பிடுவது அப்பாவின் நண்பர்களான அந்த நான்கு வீரர்களாக இருக்கக் கூடும் என்று அவனுக்குத் தோன்றியது.
அவனுக்கு கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டது.
(மேலும்)