உண்மையில் முத்து அப்படி ஒரு சண்டையை இதற்கு முன் பார்த்ததே இல்லை. பயணம் துவங்கிய அன்று போருக்கா போகிறோம் என்று அவன் கேட்டதும் கிட்டத்தட்ட அப்படித்தான் என்று திண்டு சொன்னதும் அவன் நினைவுக்கு வந்தது.
முத்து மிகவும் அச்சத்துடனும் பசியுடனும் இருந்தான். அவனை கொள்ளையர்கள் குதிரையில் குறுக்காக போட்டு கொண்டு சென்றபோது அவன் மயக்கம் அடைந்திருந்தான். சற்று நேரம் கழித்து நினைவு வந்தபோது அவர்கள் அடர்ந்த காட்டின் வழியாகப் போய்க் கொண்டிருந்தனர். அவன் மிகவும் துயர் கொண்டிருந்தான். அவன் வாழ்நாளில் அவன் அவ்வளவு கஷ்டப்பட்டதே இல்லை. என்னையும் திண்டுவையும் எங்கே கொண்டு செல்கிறார்கள், என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லையே என்று தவித்தான்.
திண்டுவை வேறொரு குதிரையில் கிடத்தி இருந்தார்கள். அவன் ஏதேனும் செய்ய முடியுமா என்று எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போதுதான் திடீரென்று அந்த சிறு போர் துவங்கியது. மிக வேகமாக பாய்ந்து வந்தது ஒரு வேல். அது இந்த கொள்ளையர்கள் சென்று கொண்டிருந்த வழியில் முன்னாலிருந்த ஒரு பெரிய மரத்தில் குத்தி நின்றது. முன்னால் சென்ற குதிரை அதில் கால் தடுக்கி விழுந்தது. அடுத்தடுத்து பாய்ந்து வந்த அம்புகள் சில கொள்ளையர்களை வீழ்த்தியது. அப்போதுதான் காட்டின் குறுக்கு வழியாக புகுந்து வந்து கொண்டிருந்த குதிரைகளின் குளம்படி ஓசைகள் கேட்டது. ஆம் அந்த நான்கு வீரர்களே தான். அவர்களது குதிரைகள் நெருங்கி வரும் முன்னால் கொள்ளையர்கள் சுதாரித்துக் கொண்டு திருப்பி தாக்கினார்கள்.
ஆனால் வில்லரின் அம்புகளின் வேகம் அசாதாரணமாக இருந்தது. அவர் கொள்ளையர்களுக்கு நேரம் கொடுக்கவே இல்லை.
ஒரு நொடியில் வந்த அம்பு முத்துவின் கை கால் கட்டுகளை வெட்டிச் சென்றது. மற்றொரு அம்பு பட்டு அவனைக் கொண்டு சென்ற குதிரையில் இருந்த கொள்ளையன் கீழே விழுந்தான். கீழே விழ இருந்த முத்துவை மற்றொரு குதிரையில் பாய்ந்து வந்த வேலர் அப்படியே விழாமல் தூக்கி தன் குதிரையில் அமர்த்திக்கொண்டார்.
முத்துவைப் போலவே திண்டுவையும் மீட்டார்கள். அவனை சிலம்பர் தன் குதிரையில் அமர்த்திக்கொண்டார்.
தலைமைக் கொள்ளையன் தடுமாறி குதிரையில் இருந்து கீழே விழுந்தான். ஏற்கனவே விழுந்து தடுமாறி எழுந்து போரிட்ட கொள்ளையர்களை வாளர் தன் வாளால் சண்டை செய்து வீழ்த்தினார். முத்து அந்த காட்சியைக் கண்டு பயந்து தன் கண்களை மூடிக் கொண்டான். தலைமைக் கொள்ளையன் கையில் வாளுடன் வாளரை நோக்கி பாய்ந்தான். தன் வாளால் ஒரே வீச்சில் அவனுடைய வாளை தெறிக்கச் செய்தார் வாளர். அதற்குள் வில்லர் நெருங்கி வந்து விட்டார்
கொள்ளையர்களில் அம்பு பட்டு கீழே விழுந்து புரண்டவர்கள் தவிர ஒரு சிலர் பள்ளத்தில் உருண்டு தப்பி ஓடிவிட்டார்கள். தலைமைக் கொள்ளையனை பிடித்து அவனது கைகளை பின்னால் கட்டி இழுத்து வந்தார் வாளர்.
பின்னர் சிறிது தூரம் சென்றவுடன் நான்கு வீரர்களும் திண்டு, முத்துவுடன் ஒரு குன்றின் அருகே சென்று நின்று குதிரையில் இருந்து இறங்கினார்கள்.
”ஆமாம் முகிலன் மாமா எங்கே?” என்று திண்டு கேட்டான்.
”இங்கே தான் இருக்கிறார்” என்று சொன்னார் சிலம்பர்.
அப்போது முகிலன் மாமா ஓடி வந்து முத்துவையும் திண்டுவையும் கட்டி அணைத்துக் கொண்டார். அவர் அழுதார்.
”அழாதீர்கள் மாமா” என்றான் திண்டு.
“ஆமாம் நீங்கள் ஏன் இவர்களோடு வரவில்லை” என்று முத்து கேட்டான்.
”நாங்கள் தான் வேண்டாம் என்று சொன்னோம். நீ நீண்ட நேரம் சாப்பிடாமல் பசியோடு இருக்கிறாய் அல்லவா? உன்னை விரைவில் அழைத்து வந்து விடுவோம் என்று சொன்னோம். உனக்காக சமைப்பதற்காக அவர் இங்கே இருந்தார்” என்றார் சிலம்பர்.
”அப்படியா மாமா? உடனே சாப்பிட வேண்டும். ஆனால் முதலில் தாகமாக இருக்கிறது”
”ஆமாம்.” முகிலன் கண்களை துடைத்துக் கொண்டு விரைந்து சென்று தண்ணீர் பையைக் கொண்டுவந்து முத்துவிடம் தந்தார். அவன் அருந்தினான். பின் ”என்ன செய்தீர்கள்?” என்று கேட்டான்.
”மானிறைச்சி. சுவையானது” என்றார்.
அவர்கள் அனைவரும் உண்டார்கள். பலவித பழங்களையும் உண்டார்கள். வில்லர் முன்னதாக அந்த மானை வேட்டையாடி இருந்தார். வேலர் பழங்களை திரட்டி இருந்தார்.
அவர்கள் சாப்பிட்ட பிறகு அந்த கொள்ளையனின் கட்டுகளை அவிழ்த்து அவனை சாப்பிடச் சொன்னார்கள். வேலர் தன் வேலுடன் அவன் அருகே நின்றார்.
”சாப்பிடு. தப்பிக்க நினைத்தால் உயிரோடு இருக்க மாட்டாய்” என்றார் அவர்.
அவன் அலட்சியமாக சிரித்தான். ”என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது” என்றான்.
”அவ்வளவு திமிரா உனக்கு? உங்கள் கொள்ளைக் கூட்டத்தை முழுமையாக அழிப்போம்” என்றார் வில்லர்.
”அது ஒருபோதும் உங்களால் முடியாது” என்றான் அவன்.
”பார்க்கத்தான் போகிறாய்” என்றார் வில்லர்.
அவன் அவரை நோக்கி கேலியாக புன்னகை செய்தான். பிறகு உணவு உண்டான்.
பின்னர் அவர்கள் மீண்டும் புறப்பட்டார்கள்.
”நாம் இப்போது எங்கே செல்கிறோம்” என்று திண்டு கேட்டான்.
”மூன்றாம் காட்டிற்கு. நம் அரசின் ரகசிய காவல் அரண் ஒன்று அங்கு இருக்கிறது. அங்கு இந்த கொள்ளையனை கொண்டு செல்கிறோம். இவனிடமிருந்து கிடைக்கும் தகவல்கள் நமக்கு முக்கியமானவை” என்றார் சிலம்பர்.
அவர்கள் இரண்டாம் காடு முடியும் இடத்திற்கு வந்தனர். அங்கே மலைத் தொடர்களுக்கு இடையே ஒரு அகன்ற கணவாய் இருந்தது. அந்த கணவாய் வழியாக சென்றபோது மாலை நேரமாகிவிட்டது. இருட்டத் தொடங்கியது. அவர்கள் கிழக்காக சென்று கொண்டிருந்தனர். அங்கே வானில் முழு நிலா எழுந்து ஒளி வீசியது. திண்டு மகிழ்ச்சியாக இருந்தான். அந்த கணவாய் வழியாக பயணம் செய்வது அவனுக்கு பிடித்திருந்தது. அவன் மனதில் அந்த கொள்ளையர்களுக்கும் வீரர்களுக்கும் நடந்த சண்டை நினைவுக்கு வந்தது. வில்லரும் வாளரும் எவ்வளவு திறமையுடன் அஞ்சாமல் போர் செய்தார்கள் என்று எண்ணி வியந்தான். தானும் அவர்களைப் போன்ற ஒரு வீரனாக ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அவன் அப்பா போர் செய்து அவன் நேரில் கண்டதில்லை. அப்பாவும் சிறந்த போர் வீரரே. பின் அவன் முத்துவைப் பார்த்து புன்னகை செய்தான். பாவம் முத்து மிகவும் பயந்து போய் விட்டான் என்று நினைத்தான்.
”நாம் நிலாவை நோக்கி செல்வது போல இருக்கிறது” என்றான் முத்து.
”ஆமாம்” என்றான் திண்டு.
”ஆமாம் இந்த கணவாயை கடக்கும் போது நிலாவில் சென்று இறங்கி இருப்போம்” என்ற சொன்னார் முகிலன்.
”அப்படியா?” என்று அவர் உண்மையாகவே சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டு கேட்டான் முத்து.
”முத்து ….” என்று திண்டு சிரித்து ஏதோ சொல்ல வர, அதற்குள் அந்த தலைமைக் கொள்ளையன், ”நிலாவில் அல்ல. இந்த கணவாயின் முடிவில் இருண்ட பாதாளத்தில் சென்று விழுவீர்கள் நீங்கள் அனைவரும்” என்றான்.
முத்து அஞ்சினான்.
”ஏய் வாயை மூடிக் கொண்டு வா. இல்லாவிட்டால் அடி வாங்குவாய்” என்று அவனை அதட்டினார் சிலம்பர்.
”இந்த கணவாயின் முடிவில் என்ன இருக்கிறது?” என்று கேட்டான் முத்து.
”இந்த கணவாய் முடிந்தவுடன் மூன்றாம் காடு துவங்கும்” என்றார் சிலம்பர்.
”அரசின் காவல் அரண் மூன்றாம் காடு துவங்கும் இடத்தில் தானே உள்ளது?” என்று கேட்டார் வேலர்.
”இல்லை. அது காட்டிற்கு உள்ளே சற்று தொலைவில் உள்ளது.” என்றார் வாளர்.
”நாம் இரவு மூன்றாம் காட்டிற்குள் செல்லப்போவதில்லை. காடு துவங்கும் இடத்திலேயே தங்குவோம். காலை காவல் அரணுக்குச் செல்வோம்” என்றார் சிலம்பர்.
’ஹஹஹஹா” கொள்ளையன் சிரித்தான்.
”என்னடா சிரிக்கிறாய்?” என்று கேட்டார் வேலர்.
”நீங்கள் என்னை காவல் அரணுக்கு அழைத்துச் செல்வற்குள் நான் உங்கள் அனைவரையும் நீங்கள் கற்பனை கூட செய்திருக்காத இடத்திற்கு அழைத்துச் செல்லப்போகிறேன்” என்றான்.
”இன்னொரு சொல் பேசினால் ….” வேலர் அவனை அடிக்க தன் வேலை ஓங்கினார்.
”வேண்டாம் வேலரே” சிலம்பர் அவரைத் தடுத்தார்.
சிலம்பர் கொள்ளையனின் கண்களை உற்றுப் பார்த்தார். அவன் கண்கள் நிலவின் ஒளியில் பிரகாசித்தன. சிலம்பர் மனதிற்குள் யோசனை செய்தார். இவன் இவ்வளவு திமிராக..தன்னம்பிக்கையுடன் பேசுகிறான் என்றால் ஏதோ ஒரு திட்டம் இவனிடம் இருக்கிறது என்று நினைத்தார். இவனது திட்டம் என் என்று கண்டுபிடிக்க வேண்டும். அவர் தன் குதிரையை நிறுத்தினார். மற்றவர்களும் குதிரைகளை நிறுத்தினார்கள். பின் அவர் குதிரையில் இருந்து இறங்கி ”வில்லரே சற்று வாருங்கள்” என்று அழைத்தார். ”வேலரே,..வாளரே நீங்கள் இருவரும் இங்கேயே இருங்கள். இவன் தப்பி விடாமல் கவனமாக இருங்கள்” என்று சொன்னார்.
சிலம்பர் வில்லரை தனியாக அழைத்துக் கொண்டு நடந்து சென்றார். சற்று தொலைவு சென்ற பின்னர் ”வில்லரே நீங்கள் கவனித்தீர்களா? இந்த கொள்ளையன் நடந்து கொள்ளும் விதம் சந்தேகமாக இருக்கிறது” என்றார்.
”ஆம் சிலம்பரே” என்றார் வில்லர்.
”அவனிடம் ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது” என்றார் சிலம்பர்.
”இருக்கலாம். அல்லது…”
”என்ன வில்லரே?”
”நாம் இந்த கொள்ளையர்களுடன் போரிட்டபோது ஒரு சிலர் தப்பிச் சென்றார்கள் இல்லையா? ஒருவேளை அவர்கள் சென்று தங்கள் கூட்டத்தைச் சேர்ந்த வேறு ஆட்களை கூட்டிக்கொண்டு மீண்டும் வரக் கூடும்” என்றார் வில்லர்.
”ஆம் வில்லரே. அப்படி நிகழ வாய்ப்பிருக்கிறது.” என்றார் சிலம்பர்.
”இம்முறை அவர்கள் பெரும் கூட்டமாக வரக் கூடும். அப்படி வந்தால் நாம் நான்கு பேர்கள் அவர்களை சமாளிக்க முடியாமல் போகலாம்” என்றார் வில்லர்.
”ஆம். இதை நாம் முன்னரே யோசித்திருக்க வேண்டும். நல்லவேளை இந்த கொள்ளையனே திமிராகப் பேசி நம்மை ஊஷாராகச் செய்து விட்டான்” என்றார் சிலம்பர்.
”எனில் இப்போது என்ன செய்வது?” என்று கேட்டார் வில்லர்.
”நாம் மூன்றாம் காட்டின் காவல் அரணை நோக்கி செல்வோம் என்பதையும் இந்த கணவாய் வழியாகத் தான் செல்வோம் என்பதையும் அவர்கள் ஊகித்திருப்பார்கள். எனவே நாம் இங்கிருந்து பாதையை மாற்றிக் கொள்வோம்.” என்றார் சிலம்பர்
”எனில் நாம் மூன்றாம் காட்டின் காவல் அரணுக்கு செல்ல வேண்டாமா?” வில்லர் கேட்டார்.
”வேண்டியதில்லை. இப்போதைக்கு வேறு பக்கம் செல்வோம். மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்வோம்” என்றார் சிலம்பர்.
சிலம்பரும் வில்லரும் திரும்ப வந்தார்கள்.
கொள்ளையன் மீண்டும சிரித்தான் ”ஹஹஹஹா”
சிலம்பர் அவனை பொருட்படுத்தவில்லை. அவர் ”வேலரே…வாளரே.. நாம் இந்த கணவாயில் மேற்கொண்டு செல்லப்போவதில்லை. நாம் தெற்கு திசையில் செல்லப்போகிறோம்” என்றார்.
திண்டு வியப்படைந்தான். அவனுக்கு புரிந்து விட்டது. கேலியாக சிரித்துக் கொண்டிருந்த கொள்ளையனின் முகம் கடுமையாக மாறியதை நிலா வெளிச்சத்தில் திண்டுவால் நன்கு பார்க்க முடிந்தது. சிலம்பரும் அதை கவனித்தார்.
அவர்கள் பாதை மாறி தெற்கு நோக்கி மலைச் சரிவில் ஏறத் தொடங்கினார்கள்.
”ஓ நீங்கள் எல்லோரும் மலை மீது ஏறி அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போகிறீர்களா?” என்று கொள்ளையன் கோபத்துடன் கேட்டான்.
”இல்லை. உன்னை மட்டும் மலையிலிருந்து கீழே தள்ளி விடப் போகிறோம்” என்றார் வில்லர்.
”சிலர் தங்களை பெரிய புத்திசாலிகளாக நினைத்துக் கொள்கிறார்கள். மக்களிடம் திருடும் கொள்ளையனுக்கு அவ்வளவு யோசனை இருக்கும் என்றால் மக்களை காக்கும் எங்களுக்கு எவ்வளவு யோசனை இருக்கும்” சிலம்பர் கொள்ளையனைப் பார்த்துக்கொண்டே சொன்னார்.
கொள்ளையன் எதுவும் சொல்லவில்லை.
அவர்கள் அந்த மலைச் சரிவில் ஏறிச் செல்லச் செல்ல கடினமாக இருந்தது.
”இங்கே வழி இருக்குமா?” என்று வேலர் கேட்டார்.
”தெரியவில்லை வேலரே. ஒருவேளை பாதை இருந்தாலும் இரவு பயணிக்க முடியாது. நாம் தொலைவு சென்று விட்டு ஏதேனும் ஒரு இடத்தில் தங்க வேண்டும்” என்றார் சிலம்பர்.
ஒரு இடம் வந்ததும் சற்று சம நிலமாக காணப்பட்டது.
”நாம் மலைச் சரிவில் இதற்கு மேல் செல்ல வேண்டியதில்லை. இங்கேயே தங்குவோம். காலை மலையைச் சுற்றிச் செல்வோம்” என்றார் சிலம்பர்.
அவர்கள் அங்கேயே உண்டு ஓய்வு எடுத்தனர். திண்டுவும் முத்துவும் முகிலனும் உறங்கி விட்டனர். தோலில் செய்த தரைவிரிப்பில் அவர்கள் போர்வை போர்த்தி படுத்திருந்தனர். வாளரும் வில்லரும் அருகே உறங்கினர். சிலம்பர் உறங்காமல் ஒரு கல்லின் மீது அமர்ந்திருந்தார். வேலர் கொள்ளையன் அருகே காவலாக உறங்காமல் அமர்ந்திருந்தார். முழு நிலா உச்சி வானுக்கு வந்திருந்தது.
மெல்ல பனி பெய்து கொண்டிருந்தது.
கொள்ளையன் உறங்கவில்லை். அவன் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான். அவன் ஏதோ மந்திரம் சொல்வதைப் போல இருந்தது.
”என்னடா சொல்கிறாய்?” வேலர் கேட்டார்.
அவன் தொடர்ந்து மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தான். முதலில் மெதுவாக சொல்லிக் கொண்டிருந்த அவன் பிறகு சற்று குரல் உயர்த்தி சொன்னான்.
சிலம்பர் எழுந்து அவன் அருகே வந்து அவன் என்ன சொல்கிறான் என்பதை கவனித்தார்.
”நெப்டே நெப்டே நெப்டியூன லிங் நெப்டியூன லிங் நெப்டியூன லிங் ரீரீரீ” என்று சொல்லிக் கொண்டிருந்தான் கொள்ளையன்.
பனி பொழிவது அதிகரித்தது. இன்னும் அதிகமாக பனி பெய்ய ஆரம்பித்தது. ”ஷ்ஷ்ஷ்ஷ்” என்ற சத்தத்துடன் பனிக் காற்று வேகமாக வீசியது.
குளிர் மிகவும் அதிகமானது.
(மேலும்)