தொடர்ச்சியாக பனிக்காற்று வீசிக் கொண்டிருந்தது. பனிப் பொழிவு அதிகரித்துக் கொண்டே சென்றது. திண்டுவும் முத்துவும் முகிலனும் குளிர் தாங்க முடியாமல் எழுந்து கொண்டனர். வில்லரும் வாளரும் எழுந்து கொண்டனர். என்ன நடக்கிறது என்று அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. கொள்ளையன் தொடர்ந்து மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தான்.
சிலம்பர் அவன் அருகே சென்று ”ஏய் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டதற்கு அவன் பதில் சொல்லவில்லை.
”சிலம்பரே இந்த இடத்தில் எப்போதும் இ்ப்படி பனி பொழிவது இல்லை. இவன் ஏதோ மாயம் செய்கிறான். இவனை உடனே தடுக்க வேண்டும்” என்று வேலர் சொன்னார்.
அவர் கூறியது பனிக்காற்றின் சத்தத்தால் சிலம்பரின் காதுகளில் விழவில்லை. அவர் ”என்ன வேலரே? என்று கேட்டு வேலரின் அருகில் வந்தார். அதற்குள் வேலர் கொள்ளையனை பிடித்து உலுக்கி ”நிறுத்துடா உன் மந்திரத்தை நிறுத்து” என்றார். அவன் தொடர்ந்து நிறுத்தாமல் சொல்லிக் கொண்டிருந்தான். அவர் அவன் வாயை பொத்துவதற்காக கை நீட்டிக் கொண்டு அவன் அருகே சென்றார். ஆனால் பனி வேகமாக பொழிந்து தரையி்ல் நிறையத் தொடங்கி விட்டது. பனியில் கால் வைத்துச் சென்ற அவர் ஒரு கல்லில் கால் தடுக்கி கீழே விழுந்தார்.
சிலம்பரால் நடப்பவற்றை நம்ப முடியவில்லை. இப்படியெல்லாம் நடக்குமா என்று அவர் வியந்தார். மந்திரத்தால் பனிப்பொழிவை உண்டாக்க முடியுமா? அது எப்படி நிகழ முடியும் என்று நினைத்தார். திண்டுவிற்கும் ஆச்சரியமாக இருந்தது. முத்து பற்கள் கிட்டித்து நடுங்கிக் கொண்டிருந்தான்.
”வேறு வழியே இல்லை. இவனைக் கொன்று விட வேண்டியதுதான்” என்றார் வாளர்.
”ஆம்” என்று தன் வில்லையும் அம்பையும் எடுத்தார் வில்லர். அதற்குள் குளிரும் பனியும் தாங்க முடியாத அளவிற்கு வேகமாக அதிகரித்தது. அவரது கைகள் பனியில் விரைத்தது. இரத்தம் உறைந்து விட்டது போல உணர்ந்தார். விரல்களை மடக்கி வில்லைப் பற்றிப் பிடிக்கவோ அம்பை மற்றொரு கை விரல்களால் பிடிக்கவோ முடியவில்லை. அவர் திரும்பி வாளரைப் பார்த்தபோது அவர் பனி மூடி பனிச் சிற்பம் போல ஆகிவிட்டார். அவரது கண்கள் மட்டும் இரண்டு துளைகள் போலத் தெரிந்தது. பிறகு சில நிமிடங்களில் அதுவும் மறைந்து விட்டது. வேலரும், சிலம்பரும், வில்லரும் பனி பொம்மைகள் போல ஆகி, பிறகு மேலும் பனியில் மூழ்கி பனி்ப்பாறைகள் போல ஆகிவிட்டனர். முகிலனும் பனியில் மூழ்கி விட்டார்.
ஆச்சரியப்படும் விதமாக திண்டுவும் முத்துவும் பனியில் மூழ்கவில்லை. அவர்கள் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தனர் என்றாலும் பனி அவர்கள் மீது படியவில்லை. அதே போல கொள்ளையன் மீதும் பனி பொழியவில்லை.
திண்டுவிற்கு அதன் காரணம் என்னவாக இருக்கும் என்று குழப்பமாக இருந்தது. அவன் வானை நோக்கினான். அப்போதுதான் கவனித்தான். உச்சி வானில் இருந்து முழு நிலா மிகவும் பெரிதாக மாறி மிகவும் நெருங்கி கீழே அருகே வந்து விட்டது போல தோன்றியது. அதனால் தான் இவ்வளவு ஒளியாக இருக்கிறது என்று நினைத்தான். முத்து திண்டுவை கட்டி அணைத்துக் கொண்டான்.
அமர்ந்திருந்த கொள்ளையன் மந்திரத்தை நிறுத்திவிட்டு எழுந்து நின்றான்.
அவன் திண்டுவின் அருகே வந்தான்.
”சிறுவனே என்ன பார்க்கிறாய்? நான் சொன்னேன் இல்லையா? நீங்கள் கற்பனை கூட செய்திருக்காத இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்வேன் என்று” என்றான்.
”நீ என்ன செய்தாய்? இங்கு என்ன நடக்கிறது?” திண்டு கேட்டான்.
”ஹஹஹஹா” கொள்ளையன் சிரி்த்தான்.
”நிலா எப்படி இவ்வளவு அருகே வந்தது?” என்று திண்டு கேட்டான்.
”நிலாவா?…..இதுவா?…..ஓ …ஆம் இது எங்கள் நிலா….நாங்களே உருவாக்கிய நிலா” என்றான் கொள்ளையன்.
பின் வானில் அவர்கள் தலைக்கு மேல் மிகப் பெரியதாக தெரிந்த அந்த நிலாவில் இரண்டு கருப்பான கோடுகள் தோன்றியது. அந்த கருப்பான கோடுகள் அகன்று பெரியதாக ஆன போது அது கதவுகள் போன்று தோன்றியது.
அந்த கரிய கதவுகள் வழியாக இரு சிறு புள்ளிகளை போல நீல நிற ஒளி தோன்றியது. அந்த இரண்டு ஒளிக்கதிர்களில் ஒன்று கொள்ளையன் மீது பட்டது. உடனே அவன் மாயமாக மறைந்து விட்டான்.
இது நிச்சயம் நிலாவாக இருக்க முடியாது. இது வேறு ஏதோ ஒன்று என்று திண்டு புரிந்து கொண்டான். மற்றொரு ஒளிக்கதிர் திண்டுவின் மீதும் முத்துவின் மீதும் பட்டபோது அவர்கள் மாயமாக மறைந்தனர்.
நிலாவைப் போல தோன்றிய அது ஒரு விண்கலம். திண்டுவுக்கும் முத்துவுக்கும் தரையில் படுத்துக் கொண்டிருப்பது போல தோன்றியது. பின்னர் தரை வேகமாக பெரும் சத்தத்துடன் சுழன்றது. சில நொடிகளில் பெரும் சத்தம் முழுவதுமாக நின்றுவிட்டது. அமைதியாக இருந்தது. இப்போது தரை மெதுவாக சுழல்வது போல இருந்தது. பின் ஒரு நொடியில் அவர்கள் இருவரும் தரையில் இருந்து மேலெழுந்து மிதக்கத் தொடங்கினர். முத்து திண்டுவை விட்டு விலகி மிதந்து சென்றான். அவன் ”தி….ண்டு…தி…ண்டு” என்று கையை நீட்டிக் கொண்டு கத்தினான்.
ஒரு பெரிய வெள்ளை மாளிகையைப் போல இருந்தது அந்த விண்கலம். நாம் வீட்டிற்குள் மதிந்து பறந்து கூரையை சென்று தொட முடியும் என்றால் எப்படி இருக்கும்? அப்படி திண்டுவும் முத்துவும் அந்த விண்கலத்தின் அறையில் மேல் கூரை அருகே சென்றனர்.
”தி…ண்டு…தி..ண்டு” என்று கத்திக் கொண்டிருந்த முத்துவிடம்
”பயப்படாதே முத்து” என்றான் திண்டு. அவன் ஒரு விஷயத்தை கண்டு கொண்டான். அவன் சுழன்றான். கை கால்களை உந்தினான். நீரில் நீந்துவது போல நீந்த முடியவில்லை. ஆனால் சிறிது நேரம் நகர்ந்து செல்ல பலவிதமாக முயன்ற பிறகு அவனால் நகர முடிந்தது”
”முத்து….இங்கே பாரேன்” என்று அவன் அப்படி சென்று காண்பித்தான்.
”முத்து நாம் இப்போது விண்வெளியில் இருக்கிறோம் என்று நினைக்கிறேன்” என்றான். அவன் முத்துவின் அருகே சுழன்று சென்று அவன் கைகளைப் பற்றிக் கொண்டான்.
”விண்வெளியிலா?” முத்து மேலும் அச்சமடைந்தான்.
திண்டு அவனை தைரியப்படுத்த முயன்றான். அவனுக்கு தன்னைப் போல நகர சொல்லிக் கொடுத்தான். சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் அந்த விண்கலத்தின் அறையில் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்கு செல்ல பழகிவிட்டனர். அவர்கள் அந்த அறையின் எல்லா மூலை முடுக்குகளுக்கும் சென்றார்கள். அது மிகப் பெரிய அறை.
எல்லாப் பக்கமும் வெள்ளை நிறமாக இருந்த அந்த அறையின் ஒரு பக்கம் திடீரென்று கருமையாக மாறியது. அது ஒரு கண்ணாடி. முதலில் அதைக் கண்டு திண்டுவும் முத்துவும் குழப்பம் அடைந்தனர். பிறகு அதன் வழியாகத் தெரிந்த விண்வெளியைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறது!
அந்த விண்கலம் மெதுவாக சத்தமில்லாமல் சுழன்று திரும்பியது. அந்த கண்ணாடியின் வழியாக விண்வெளியின் வேறுவேறு பகுதிகள் தெரிந்தன. கணக்கற்ற விண்மீன்களும் கோள்களும் கொண்டு எல்லையற்று தெரிந்தது. வண்ணங்கள் ஒளியின்…எழில் !
—–
கொள்ளையன் திண்டுவையும் முத்துவையும் விண்கலத்தில் கொண்டு சென்ற பிறகு அந்த பனிப்பொழிவு ஏற்பட்ட காட்டுப்பகுதியில் பனி உருகி நீராக ஓடத் தொடங்கியது. பனியில் மூழ்கடிக்கப்பட்டு பனிப்பாறைகளாக ஆகியிருந்த அந்த நான்கு வீரர்களும் முகிலனும் பனி விலகிய பின் அங்கேயே மயக்கத்தில் கிடந்தனர். காலை வெயில் துவங்கி மெல்ல வெப்பம் அதிகரித்தது. மேலும் நேரம் கடந்தபின் வில்லர் முகத்தில் பட்ட வெயிலின் சூட்டால் மெதுவாகக் கண் திறந்தார். பின் அவர் எழுந்து சுற்றிலும் பார்த்தார். மற்ற மூவரும் முகிலனும் இன்னும் எழவில்லை. அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்று அவருக்கு அய்யமாக இருந்தது. அவர் வாளரின் அருகே சென்றார். அப்போது அந்தக் காட்டுப் பகுதியில் வாழும் வேடர் மக்களில் ஒருவன் அங்கே வந்தான். அவன் ஒரு இளைஞன். அவன் கையில் மூங்கில் வில் வைத்திருந்தான். ஏதோ ஒரு விலங்குத் தோலினால் செய்த பை ஒன்றையும் வைத்திருந்தான். அவனிடம் நிறைய சிறிய புல் அம்புகள் இருந்தன.
அவன் வில்லரின் அருகே வந்தான். கீழே கிடந்த நான்கு பேரையும் பார்த்தான்.
”நீ யார்?” என்று அவனை வில்லர் கேட்டார். ஒருவேளை அவனும் ஒரு கொள்ளையனாக இருக்கக் கூடுமோ என்று அவர் நினைத்தார். ஆனால் அவனது புலித்தோல் ஆடையும் அவன் தலையில் சூடியிருந்த கழுகின் இறகும் அவன் அணிந்திருந்த கல் மணி மாலையும் கண்டு அவன் ஒரு காட்டுவாசி என்று புரிந்து கொண்டார்.
”நான் இந்த காட்டில் வாழ்பவன்” என்று மட்டும் சொன்ன அவன் ஒருவர் பின் ஒருவராக அந்த நால்வரிடமும் சென்றான். அருகே அமர்ந்து மூச்சற்று கிடந்தவரின் நெஞ்சில் தன் வலது கையை வைத்து தன் கண்களை மூடிக் கொண்டான்.
வில்லர் அவர்கள் மூச்சு விடவில்லை என்பதால் அவர்கள் இறந்திருப்பார்கள் என்று நினைத்தார். ஆனால் அந்த வேடன்”நான்கு பேரும் உயிருடன் தான் இருக்கிறார்கள்” என்றான்.
பின்னர் அவன் வேகமாக காட்டிற்குள் ஓடிச் சென்றான். ஒரு மரக்குடுவையில் நீரும் மூலிகைகள் சிலவற்றையும் கொண்டு வந்தான். வேறு சில பொருட்களும் அவனிடம் இருந்தன.
மரக்குடுவையிலிருந்து நீரை அள்ளி அவர்கள் முகத்தில் தெளித்தான். அவர்கள் உடலில் அசைவு ஏற்படவில்லை. பின் தரையில் சில குச்சிகளை ஒடித்துப் போட்டு தன்னிடமிருந்த சிக்கிமுக்கி கற்களை உரசி நெருப்பு பற்ற வைத்தான். அந்த நெருப்பில் மூலிகை இலைகளைப் போட்டான். பச்சை மூலிகைகள் நெருப்பில் தீய்ந்து வாடை எழுந்தது. புகை அதிகமாக வந்தது. வில்லருக்கு ஜாடை காண்பித்து அவருடன் சேர்ந்து ஒவ்வொருவராக நால்வரையும் தூக்கி வந்து நெருப்பைச் சுற்றி அமர வைத்தான். இன்னும் அதிக மூலிகைகளைப் போட்டான். புகை அதிகமாக எழுந்தது.
”நீ என்ன செய்கிறாய்? இவர்களை விஷ ஜந்துக்கள் எதுவும் கடித்து விட்டதாக எண்ணுகிறாயா? இவர்களை பாம்பு கடித்து விட்டதாக எண்ணி சிகிச்சை அளிக்கிறாயா? அப்படி எதுவும் நடக்கவில்லை” என்றார் வில்லர்.
”தெரியும். இவர்கள் உறைபனியில் மூழ்கினார்கள்” என்றான் அவன்.
வில்லர் ஆச்சரியம் அடைந்தார். ”உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.
”நான் ஒரு முறை கடும் பனிப்பொழிவை நேரில் கண்டேன். எங்கள் உறவினர் ஒருவர் அந்த பொழிவில் மாட்டிக் கொண்டார்” என்றான்.
”அப்படியா?” என்றார் வில்லர்.
”ஆனால் பொதுவாக இது உறைபனி பொழியும் காடல்ல. அது ஒரு இரவு நேரம் வானிலிருந்து நிலவு பூமிக்கு வந்து விட்டது போல தோன்றியது. பனி மேலேயிருந்து வேகமாகப் பொழிந்தது. அதில் என் உறவினர் மூழ்கி பனிச்சிலை போல ஆகி விட்டார். நான் சற்று தொலைவில் இருந்ததால் தப்பி விட்டேன்” என்றான்.
”எனில் இது இயற்கையானது அல்ல” என்றார் வில்லர்.
”ஆம். ஏதோ மாய மந்திரம் போலத் தோன்றியது” என்றான் அவன்.
அவன் மேலும் மூலிகைகளை அள்ளி நெருப்பில் போட்டுக் கொண்டே இருந்தான். சற்று நேரத்தில் வாளரின் உடலில் அசைவு ஏற்பட்டது. பிறகு வேலரும் சிலம்பரும் அசைந்தார்கள். பின் மூவரும் இருமிக் கொண்டே கண் திறந்தார்கள். அவர்கள் கண்களில் நீர் வழிந்தது.
”மூச்சு நின்று விட்டவர்களை மீண்டும் சுவாசிக்கச் செய்யக் கூடியவை இந்த மூலிகைகளை. இவை இந்த காட்டில் மட்டுமே கிடைக்கின்றன” எனறான் காட்டுவாசி.
உயிர் பிழைத்த நால்வரையும் கண்டு வில்லர் மகிழ்ச்சி அடைந்தார். பின் அந்த காட்டுவாசியின் அருகே வந்து அவனை அன்புடன் அணைத்துக் கொண்டார்.
”நண்பா..நீ என் நண்பர்களை காப்பாற்றி விட்டாய் நன்றி. உன் இந்த உதவியை என்றும் மறக்க மாட்டேன்” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் வில்லர். அவர் தன் மோதிரத்தை கழற்றி அவனுக்கு பரிசளிக்க விரும்பினார். அவன் அதை மறுத்து விட்டான்.
”தயவு செய்து வாங்கிக் கொள் மறுக்காதே நண்பா. இது நீ செய்த உதவிக்கு கைமாறு இல்லை. நான் இந்த நாட்டின் படைகளில் விரைவு வில்லவர் படைப்பிரிவின் தலைவனாக இருக்கிறேன். இது என் மோதிரம். இதை நீ வைத்திரு. எந்த ஒரு படைவீரனிடம் இதைக் காட்டினாலும் நீ நண்பன் என்று அறிந்துகொள்வான். உனக்குத் தேவையான உதவி கிடைக்கும். நான் எங்கிருந்தாலும் எனக்கு உன் செய்தியை அவர்கள் மூலம் தெரிவிக்க முடியும். என்னை நேரில் வந்து சந்திக்கவும் முடியும்” என்றார் வில்லர்.
அவன் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டான்.
நான்கு வீரர்களும் முகிலனும் பிழைத்துக் கொண்டார்கள் என்றாலும் அவர்கள் மிகவும் வருத்தமடைந்தார்கள். இரண்டு சிறுவர்களையும் தொலைத்து விட்டோமே என்று வருந்தினார்கள்.
(மேலும்)