கைம்மா மிசிறி என்ற தேசத்தை நோக்கிப் பறந்தான். அந்த தேசம் நீண்ட தூரத்தில் இருந்தது. மிக வேகத்தில் அவன் சென்றான். மிசிறி நாட்டை அடைவதற்கு இரண்டு நாட்கள் ஆனது. அவன் இரவு பகல் இரண்டிலும் சற்று நேரம் மட்டுமே வழியில் ஏதேனும் ஒரு இடத்தில் இறங்கி ஓய்வு எடுத்தான். பெரும்பாலும் மனிதர்கள் இல்லாத காடுகளின் அருகிலேயே இறங்கினான். அங்கேயே அவனுக்கு உணவு கிடைத்தது. பழங்களோ அல்லது ஏதேனும் விலங்குகளோ அவனுக்கு உண்ணக் கிடைத்தன.
பறக்கும் குதிரைக்கும் சிறிது நேர ஓய்வு மட்டுமே தேவையாக இருந்தது. அது மற்ற குதிரைகளைப் போல அல்லாமல் புற்களுடன் பல செடிகளின் இலைகளுடன் மரங்களின் இலைகளையும் கூட உண்டது. அது யானையைப் போல உண்கிறது என்பதை கைம்மா கவனித்தான். சில சமயம் தன் பெரிய சிறகுகளை விரித்து மரத்தின் கிளையை வளைத்து ஒடித்தது.
குகைத் தாத்தா கைம்மாவிற்கு ஏற்கனவே விண்வெளிப் பயணம் குறித்து தெளிவாகக் கூறி இருந்தார். இந்த பறக்கும் குதிரையால் விண்ணில் அப்படியே பறக்க முடியும். காற்று மண்டலத்திற்கு அப்பால் செல்லும் போது அது மூக்கினால் சுவாசிக்கத் தேவையே இல்லை. அதன் தோல் சூரியனின் ஒளியைப் பெறும் போது அதில் உள்ள நுண் துழைகள் அந்த வெப்பத்தை அதன் உடலின் உள்ளே கொண்டு செல்லும். அதன் உள்ளே இருக்கும் சில உறுப்புகள் வெப்பத்தை காற்றாக மாற்றி அதன் நுரை ஈரலுக்கு கொண்டு சென்று விடும்.
விண்வெளியில் பயணிக்கும் போது குதிரையின் உடலில் மின்மினிப் பூச்சிகள் போல ஒளி மின்னும். அதன் நுரை ஈரலிலிருந்து வெளிப்படும் வெளி மூச்சுதான் அது. அந்த வெளி மூச்சு தோலின் சிறு துளைகள் வழியாக ஒளியாகத் தோன்றும்.
இந்த குதிரை இந்த பூமியைச் சேர்ந்தல்ல. இது வேறொரு பூமியைச் சேர்ந்தது. அந்த பூமி விண்ணில் மிகத் தொலைவில் இருக்கிறது. அந்த பூமி நம் பூமியை சில வகைகளில் ஒத்தது.
ஆனால் அந்த குதிரையைப் போல கைம்மாவால் நேரடியாக விண்வெளிக்குச் சென்று விட முடியாது. காற்று மண்டலத்திற்கு அப்பால் அவனால் சுவாசிக்க முடியாது. அத்துடன் சூரியனின் கதிர் வீச்சை அவனுடைய உடலால் தாங்க முடியாது. எனவேதான் தாத்தா அவனை மிசிறி நாட்டிற்கு செல்லும் படி சொன்னார்.
மிசிறி நாட்டின் பெரும் பகுதி அடர்ந்த காடாக இருந்தது. அங்கு காட்டின் நடுவே மிளிர் என்ற ஒரு மலை இருந்தது. அந்த மலையின் மீது இருந்த சமநிலத்தின் நடுவே ஒரு பெரிய செவ்வக வடிவ பாறை இருந்தது. அந்த பாறை பல லட்சம் ஆண்டுகள் பழைமையானது. அந்த பாறையின் அடியில் ஒரு கல்லால் ஆன பெட்டி இருக்கிறது. அதற்குள் கைம்மாவின் விண் பயணத்திற்குத் தேவையான பொருட்கள் இருப்பதாக தாத்தா சொன்னார். அதைக் கொண்டு அவன் விண்ணில் பயணம் செய்ய முடியும்.
கைம்மா மிளிர் மலையின் மீது பறந்து சென்றான். அந்த செவ்வகப் பாறையைச் சுற்றி வானில் வட்டமடித்தான். எவ்வளவு பெரிய பாறையாக இருக்கிறது? இதன் அடியில் கல் பெட்டி இருக்கிறது என்றால் அதை எப்படி எடுப்பது? இந்த பெரிய பாறையை எப்படி நகர்த்துவது என்று யோசித்தான். நிச்சயமாக தனி ஒருவனாக அவனால் அதை அசைக்கக் கூட முடியாது.
எனவே கைம்மா மலையின் கீழ் நோக்கிப் பறந்தான். ஆறு ஒன்று அந்த மலையைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது. அது காடுகளுக்குள் புகுந்து சென்றது. கைம்மா ஆற்றின் மீது தாழ்வாகப் பறந்த போது பாறைகளில் மோதி ஓடும் நீரின் ஓசை பெரிதாகக் கேட்டது. அவன் ஆற்றைக் கடந்து சென்று ஒரு இடத்தில் இறங்கினான். குதிரையில் இருந்து இறங்கி சுற்றும்முற்றும் பார்த்தான்.
ஒரு பக்கம் ஆறு அதற்கு அப்பால் மிளிர் மலை மறுபக்கம் அடர்ந்த காடு. ஒரு பக்கம் ஆற்றின் ஒலியும் மறுபக்கம் காட்டு உயிர்களின் ஒலிகளும் போட்டி போடுவது போல ஒலித்துக் கொண்டிருந்தன.
கைம்மாவிற்கு ஒன்றும் தோன்றவில்லை. அந்த மலைப் பாறையை அசைக்க வேண்டும் என்றால் நான்கு யானைகள் அல்லது அய்ம்பது மனிதர்கள் வேண்டும்.
அவன் அந்த ஆற்றின் கரையில் நடந்து சென்றான்.
அப்போது திடீரென்று பறவைகள் மரங்களில் இருந்து கூச்சலிட்டுக் கொண்டு வானில் எழுந்து பறந்தன. கைம்மா நின்று கவனித்தான். ஏதாவது யானை போன்ற விலங்குகள் வருகின்றனவா?
பல குதிரைகளின் குளம்படி ஓசைகள் கேட்டது. அடர்ந்த காட்டின் நடுவே ஒற்றையடி பாதையாகத் தென்பட்ட வழியில் இருந்து ஒரு கருப்புக் குதிரை வந்தது. அதில் அமர்ந்திருந்தவன் வில் வைத்திருந்தான். தொடர்ந்து வெள்ளைக் குதிரை ஒன்று வந்தது. அதன் பிறகு பழுப்பு நிறக் குதிரை. அப்படி வரிசையாக குதிரைகள் வந்தன. அய்ம்பதுக்கு மேல் இருக்கும். அவர்கள் வில் அம்புகள் வைத்திருந்தனர். சிலரிடம் ஈட்டி இருந்தது.
அவர்கள் கைம்மா நின்றிருந்த ஆற்றங்கரைக்கு வந்து அவனுக்கு முன்பாக அணி வகுப்பு போல வரிசையாக நின்றனர். அவற்றில் நடுவில் இருந்த ஒரு வெள்ளை குதிரை முன்னால் வந்தது. அதில் மிக அழகான ஒரு இளைஞன் அமர்ந்து இருந்தான். அவன் கையில் வில் வைத்திருந்தான். தோளுக்குப் பின்னால் அம்பறாத் தூணியில் அம்புகள் நிறைந்திருந்தன. அவனது இடையில் குறுவாள் ஒன்று இருந்தது.
அவன் குதிரையில் இருந்தவாறே கேட்டான்,
”நீங்கள் கைம்மாவா?”
”ஆம்” என்றான் கைம்மா. அவனுக்கு வியப்பாக இருந்தது என்னுடைய பெயர் இவனுக்கு எப்படித் தெரியும் என்று.
”என்னுடைய பெயர் அஷ்வந் இந்த மிசிறி நாட்டின் இளவரசன். நீங்கள் இங்கு வருவீர்கள் என்று என் நண்பன் எனக்கு கடிதம் எழுதி இருந்தான். உங்களுக்கு தேவையான உதவிகளை நான் செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தான்” என்றான் அவன்.
”உங்கள் நண்பர் என்னைப் பற்றி கடிதம் எழுதினாரா? உங்கள் நண்பர் யார்?”
அஷ்வந் புன்னகைத்தான். ”என்னுடைய நண்பர் மணிவாசகம் என்பவர் தான் ஓலை அனுப்பி இருந்தார்”
கைம்மாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. மணிவாசகத்திற்கு நான் இங்கே வருவது எப்படி தெரியும்? நான் அவனிடம் எதுவும் சொல்லவில்லையே என்று நினைத்தான்.
”இப்போது முதல் நீங்களும் என் நண்பர் தான். என்னை நீங்கள் அச்சு என்று அழைக்கலாம்” என்றான் அஷ்வந்.
”நன்றி அச்சு” என்றான் கைம்மா.
”நீங்கள் உணவு அருந்தி இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். வாருங்கள் உணவு அருந்தலாம். பிறகு உங்களைப் பற்றி விரிவாக சொல்லுங்கள்” என்றான் அச்சு.
பிறகு அவன் தன் படை வீரர்களின் தலைவனுக்கு உத்தரவு இட்டான். படை வீரர்கள் சென்று சில சிறு மரங்களை வெட்டிக் கொண்டு வந்தார்கள். தாங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களைக் கொண்டு அந்த ஆற்றங்கரையில் தோல் கூடாரம் ஒன்றை உருவாக்கினார்கள். மரத்துண்டுகளைக் கொண்டு அமர்வதற்கு நாற்காலிகளை செய்தார்கள். அவர்கள் அவ்வளவு விரைவாக அவற்றை செய்தது கைம்மாவிற்கு வியப்பாக இருந்தது.
அச்சு கைம்மாவை கூடாரத்தின் உள்ளே அழைத்துச் சென்றான். அங்கே வீரர்கள் இருவர் கொண்டு வந்து போட்ட நாற்காலிகளில் அவர்கள் அமர்நது கொண்டார்கள்.
பிறகு ஒரு வீரன் ஒரு மர மேசையை கொண்டு வந்து போட்டான். அது மூங்கிலால் செய்யபட்டிருந்தது. அதன் மீது வாதுமை மரத்தின் பின்னப்பட்ட இலைகள் இரண்டு போடப்பட்டு அதில் பல வகை பழங்களும் உணவு வகைகளும் பறிமாறப்பட்டன. ஒரு பீங்கான் கலத்தில் குடிப்பதற்கு நீர் வைத்தனர்.
”சாப்பிடுங்கள் நண்பரே” என்றான அச்சு.
கைம்மாவும் அச்சுவும் சாப்பிட்டனர். உணவு மிகவும் சுவையாக இருந்தது.
மிகவும் கெட்டியான தோல் கொண்ட ஒரு பழத்தைக் கையில் எடுத்து உரித்து கைம்மாவின் கையில் தந்தான் அச்சு.
”இது எங்கள் மிசிறி நாட்டில் மட்டுமே கிடைக்கும் பழம். இதை பாறைப் பழம் என்பார்கள். இதன் தோல் கடினமாக இருக்கும். ஆனால் உள்ளே மென்மையாக இருக்கும். மிகவும் சுவையானது. சத்தானது” என்றான்.
கைம்மா அதை சாப்பிட்டுவிட்டு ”ஆமாம். இது நான் இதுவரை எங்குமே கண்டிராத சுவை” என்றான்.
அச்சு புன்னகை செய்தான். ”இதன் தோல் உரிக்கக் கடினமாக இருப்பதால் சிலர் பாறையில் தோல் உரிப்பதும் பாறைப் பழத்தைத் தோல் உரிப்பதும் ஒன்று தான் என்பார்கள்” என்றான்.
”ஆனால் ஒன்று ஒருவன் இந்த பழத்தின் தோலை கையால் உரித்துப் பழகினால் அவனுடை விரல்கள் வலிமை வாய்ந்தவையாக ஆகி விடும். எனவே சிறுவர்களாக இருக்கும் வயதில் இருந்தே இப்பழத்தின் தோலை உரிக்க பயிற்றுவிப்பார்கள். அது அவர்கள் பிற்காலத்தில் விற்கலை கற்றுக் கொள்ளத் தேவையான வலிமையை கைகளுக்கும் விரல்களுக்கும் தந்துவிடும்” என்றான்.
அவர்கள் உணவு உண்ட பிறகு அச்சு கைம்மாவிடம் கேட்டான், ”விவரமாகச் சொல்லுங்கள் கைம்மா. உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும்?”
கைம்மா ஆரம்பம் முதல் தனக்கு தெரிந்த அத்தனை விஷயங்களையும் அச்சுவிடம் சொன்னான். திண்டுவும் முத்துவும் எப்படியாவது மீட்கப்படாக வேண்டும் என்று கூறினான். மிளரி மலையின் செவ்வகப் பாறையைப் இடம் பெயர்க்க உதவ வேண்டும் என்று கேட்டான்.
”செய்வோம் கைம்மா” என்றான் அச்சு. பிறகு சிரித்துக் கொண்டே சொன்னான், ”நான் உங்களுக்கு பாறைப் பழத்தை உரித்துக் கொடுத்தேன். நீங்கள் எனக்கு பெரிய பாறையை பெயர்த்து எடுக்கும் வேலையைத் தருகிறீர்கள்”
கைம்மா சிரித்தான்.
பிறகு இருவரும் எழுந்து கொண்டார்கள்.
அச்சு கைம்மாவின் தோளில் கை போட்டுக் கொண்டு ”செல்வோம். இன்றே இந்த பணியை முடித்து விடுவோம்” என்றான்.
கைம்மா அச்சுவை தன்னுடைய பறக்கும் குதிரையின் அருகே அழைத்து வந்து அதை அவனுக்குக் காண்பித்தான்.
அச்சு அதை மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்தான். ”எவ்வளவு அழகாக இருக்கிறது” என்றான்.
பிறகு ”நல்லது கைம்மா. நான் எனது வீரர்களுடன் மலையின் மீது ஏறி வந்து விடுகிறேன். நீங்கள் உங்கள் குதிரையில் பறந்து அங்கே வந்து விடுவீர்கள் இல்லையா? என்று கேட்டான்.
அத்துடன் ”நாங்கள் இப்போதே புறப்படுகிறோம். நீங்கள் ஆறு நாழிகை நேரம் கழித்து புறப்படுங்கள். நாங்கள் அங்கு சென்று சேர்வதற்கும் நீங்கள் அங்கு வருவதற்கும் சரியாக இருக்கும்” என்றான்.
”அச்சு..உங்களிடம் ஒன்று கேட்கலாமா?” என்று கேட்டான் கைம்மா.
”என்ன கைம்மா? என்ன வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள்”
”ஒன்றுமில்லை. இந்த பறக்கும் குதிரையைப் பார்த்தவுடன் அது உங்களுக்கு வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா அச்சு?” என்று கேட்டான் கைம்மா.
“அது எப்படி? அது உங்களுடைய குதிரை ஆயிற்றே” என்றான் அச்சு.
கைம்மாவிற்கு அச்சுவின் மீது மிகுந்த மதிப்பு ஏற்பட்டது. இளவரசன் அச்சு எவ்வளவு நல்லவனாக இருக்கிறான். கைம்மா அந்த பாவலர்களை நினைத்துக் கொண்டான். உடனே அவனுக்கு சிரிப்பும் வந்தது. அந்த கனசேகரனை பறக்கும் குதிரை உண்டு இல்லை என்று செய்து விட்டது.
கனசேகரன் வானில் பறந்தபோது குளிர் தாங்க முடியாமல் கத்தினார். வேகமான காற்றில் குதிரையில் இருந்து நழுவி விழுந்தார். அவர் அலறிக் கொண்டு கீழே தரையை நோக்கி வந்து கொண்டிருந்த போது குதிரை மிக வேகமாக அவருக்கு கீழாக பறந்து வந்து அவரை தன் முதுகின் மீது விழும்படி செய்தது. அவர் மீண்டும் நழுவி விழ மீண்டும் கீழே விரைந்து சென்று தன் முதுகில் வாங்கிக் கொண்டது. அப்படியே மீண்டும் அவர் விழ ஒரு பந்தை தட்டித் தட்டி கொண்டுவருவது போல அவரை தரைக்குக் கொண்டு வந்து சேர்த்தது.
அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் மிகவும் பயந்து போய் விட்டார்.
புல் தரையில் இருந்து புரண்டு எழுந்த அவர் ”போய்யா கைம்மா நீயும் உன் குதிரையும்” என்று சொல்லி திட்டிவிட்டு தினசேகரனை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
அதை நினைத்து கைம்மா சிரித்துக் கொண்டிருந்த போது ”என்ன கைம்மா எதையோ யோசித்து சிரிக்கறீர்கள். எனக்கும் சொன்னால் நானும் சிரிப்பேன் அல்லவா?” என்று கேட்டான் அச்சு.
”ஒன்றுமில்லை அச்சு. பிறகு சொல்கிறேன்” என்றான் கைம்மா.
பிறகு ”அச்சு! நீங்கள் என்னுடன் பறக்கும் குதிரையில் வாருங்களேன். உங்கள் படை வீரர்கள் இப்போது புறப்பட்டு செல்லட்டும்” என்றான்.
ஒரு கணம் யோசித்து விட்டு ”சரி அப்படியே செய்வோம் என்றான் அச்சு.
படை வீரர்கள் அனைவரும் மிளிர் மலையின் உச்சியை நோக்கிச் சென்றார்கள்.
கைம்மாவும் அச்சுவும் அந்த ஆற்றங்கரையிலேயே இருந்து பேசிக் கொண்டிருந்தனர். ஆறு நாழிகை நேரம் கழித்து பறக்கும் குதிரையில் ஏறி மலை உச்சியை நோக்கி பறந்தனர்.
(மேலும்)