திண்டுவின் பயணங்கள் – 17

மிளிர் மலையின் செவ்வகப் பாறையின் அருகே கைம்மாவும் அச்சுவும் இறங்கிய போது அச்சுவின் வீரர்கள் அங்கு வந்து சேர்ந்து விட்டனர்.  பின்மதிய நேரம் ஆகி விட்டது.

”மாலை கதிர் மறைவதற்குள் இந்த பாறையைப் பெயர்த்து விட முடியுமா?” என்று கைம்மா கேட்டான்.

”தங்கள் அவசரம் புரிகிறது கைம்மா.  ஆனாலும் சற்று கடினம் தான்.  மாலை வரை எவ்வளவு தூரம் பணி முடிகிறது என்று பார்ப்போம்.  இரவிலும் பணியைத் தொடர்வோம்” என்றான் அச்சு.

பின் ”கைம்மா! தாங்கள் எப்போது புறப்பட வேண்டும் என்று சொன்னீர்கள்?” என்று கேட்டான் அச்சு.

”நாளை முழு நிலவு நாள்.  நாளை காலை விடிவதற்குள் இங்கிருந்து நான் புறப்பட்டு விட வேண்டும் என்று குகைத் தாத்தா கூறினார்” என்றான் கைம்மா.

”ஆம்.  அதற்குள் முடித்து விடுவோம்” என்றான் அச்சு.

அச்சு தன் வீரர்களுடன் ஆலோசனை செய்தான்.  அவர்களுடன் பேசி விட்டு திட்டம் ஒன்றை உருவாக்கினான்.  அய்ம்பது வீரர்களையும் பத்து பத்து பேர் கொண்ட குழுக்களாக பிரித்தான்.  அந்த பத்து பேரில் எட்டு பேர் பணி செய்பவர்களாகவும் இரண்டு பேர் அவர்களை வழி நடத்துபவர்களாகவும் இருக்க முடிவு செய்யப்பட்டது.  அச்சுவும் கைம்மாவும்  மொத்தமாக பணியை மேற்பார்வை செய்தார்கள்.

அச்சுவின் வீரர்கள் அவனது திட்டப்படி காட்டிலிருந்து மரங்களின் பெரிய கிளைகள் சிலவற்றை வெட்டிக் கொண்டு வந்தார்கள்.  அவற்றை மேலும் வெட்டி நீண்ட தடிகளாக செய்தார்கள்.  சற்று நீண்ட ஒரு பெரிய கல்லைக் கொண்டு வந்து போட்டார்கள்.  சம அளவில் வெட்டப்பட்ட மரத்தடிகளை காட்டுக் கொடிகளால் ஒன்றுடன் ஒன்று இணைத்துக் கட்டினார்கள்.  அவற்றை அந்த நீண்ட கல்லின் மீது வைத்து உயரமாக ஆக்கி அதை நெம்புகோலாக அமைத்துக் கொண்டார்கள்.  அந்த செவ்வக பெரும் பாறையின் அடியில் ஒரு பக்கமாக மூன்று இடங்களில் தோண்டினார்கள்.  அதன் வழியாக அந்த செவ்வகப் பாறையின் அடியில் மூன்று தடிகளை உள்ளே செலுத்தினார்கள்.  பாறையின் அடியில் நன்கு உள்ளே செல்லும் வகையில் அவை செலுத்தப்பட்டன.  அந்த தடிகளின் மையம் நெம்புகோல் அமைப்பின் மீது இருந்தது.  அவற்றின் மறுமுனைகள் அந்த நெம்புகோல் அமைப்பின் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.

வீரர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து உயர்ந்து நின்ற தடிகளின் மறுமுனைகளை கீழே இழுத்தார்கள். ஒரு தடிக்கு பதினைந்து பேர் என்ற வீதத்தில் மூன்று தடிகளிலும் சேர்த்து நாற்பத்தைந்து பேர் இழுக்க செவ்வகப் பாறை மெல்ல அசையத் தொடங்கியது.

அச்சு உற்சாகத்துடன் கைதட்டினான்.

மெல்ல அசைந்த செவ்வகப் பாறை பிறகு சட்டென்று அந்த பக்கமாக மேலே எழுந்து உயர்ந்தது.  அச்சு வீரர்களைப் பாராட்டினான்.  பின் அவன் ஜாடை காட்ட பிற நான்கு வீரர்கள் வேறு ஒரு பெரிய சதுரக் கல்லை எடுத்து வந்தார்கள்.  அதை செவ்வகப் பாறை மேலெழுந்து உருவான இடைவெளியில் வைத்தார்கள்.

”கைம்மா! நாம் இதை முழுவதுமாக இடம் பெயர்க்க வேண்டியதில்லை என்று எண்ணுகிறேன்” என்றான் அச்சு.

கைம்மா அச்சு என்ன சொல்ல வருகிறான் என்பதைப் புரிந்து கொண்டான்.

”இதை நாம் தேவையான அளவு உயர்த்தி நிறுத்தினால் போதும்.  இதன் அடியில் சென்று நீங்கள் தேடிவந்த கல்பெட்டி இருக்கிறதா என்று நாம் தோண்டிப் பார்க்கலாம்” என்றான்.

”ஆம் அச்சு” என்றான் கைம்மா.

அவர்கள் அந்த செவ்வக பெரும் பாறையை ஒரு பக்கமாக உயர்த்திக் கொண்டே அதன் அடியில் நான்கு இடங்களில் பெரிய சதுர கற்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கினார்கள்.  அவை கொஞ்ச நேரத்தில் நான்கு சிறு தூண்களைப் போல தோற்றமளித்தன.  சில இடங்களில் மரத் தடிகளைப் பொருத்தினார்கள்.

”ஒரு சிறு குகை போல இருக்கிறது” என்றான் கைம்மா.

”ஆம்.” என்று சிரித்தான் அச்சு.

மாலை நேரம் கடந்து நன்கு இருட்டத் தொடங்கியது.  அவர்கள் தீப்பந்தங்களை கொளுத்திக் கொண்டார்கள்.

”நன்றி வீரர்களே.  நீங்கள் இனி உணவு அருந்தி சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.  பிறகு மீண்டும் பணியைத் தொடர்வோம்” என்றான் அச்சு.

அ்வர்கள் அனைவரும் உணவருந்தி விட்டு சற்று நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டார்கள்.  வானில் நிலவு எழுந்திருந்தது.  அச்சு வீண்மீன்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.  கைம்மாவும் அவனும் ஒரு கல்லின் மீது அமர்ந்திருந்தார்கள்.

அச்சு விண்மீன்களைப் பார்த்துக் கொண்டே சொன்னான், ”பாறைத் தானியத்தின் விதைகளைப் போல யாரோ விண்மீன்களை வானில் அள்ளித் தெளித்துள்ளார்கள் என்று தோன்றுகிறது”

”பாறைத் தானியத்தின் விதைகளா?” கைம்மா கேட்டான்.

”ஆம் கைம்மா.  எங்கள் நாட்டில் மட்டுமே கிடைக்கும் ஒரு வகைத் தானியம்.  அதை நாங்கள் பாறைத் தானியம் என்போம்” என்றான் அச்சு.

கைம்மாவிற்கு சிரிப்பு வந்தது.  ”பாறைப் பழம், இப்போது பாறைத் தானியமா?” என்றான்.

அச்சு சத்தம் போட்டு சிரித்தான்.  ’”ஆம் கைம்மா.  எங்கள் நாட்டில் அப்படி பாறை என்று சொல்லும் பல தாவர வகைகள் இருக்கின்றன” என்றான்.

”பாறைத் தானியமும் சத்தானதா? என்று கைம்மா கேட்டான்.

”அதிலென்ன சந்தேகம் ? மிகவும் சத்தானது” என்றான் அச்சு.

”பாறைப் பழம், பாறைத் தானியம், பாறைக் கீரை எல்லாமே சத்தானவை தான்” என்று மேலும் சொன்னான் அச்சு.

”உங்கள் நாட்டில் சத்தற்றவை என்று எதுவுமே கிடையாது போலும்” என்றான் கைம்மா.

”ஆமாம் கைம்மா” என்றான் அச்சு.

”அது எப்படி?” என்று கைம்மா கேட்டான்.

”நீங்கள் அறிவீர்களே கைம்மா.  நீங்களும் காட்டில் வாழ்பவர் தானே.  காடும் மலையும் ஒருபோதும் சத்தற்றவற்றைத் தருவதே இல்லை” என்றான் அச்சு.

”ஆம்.  அது உண்மை தான்” என்றான் கைம்மா.

”எங்கள் மிசிறி நாட்டில் பெரும் பகுதி காடும் மலைகளும் தான்” என்றான் அச்சு.

பிறகு வீரர்கள் பணியைத் தொடர்ந்தார்கள்.  பின்னிரவில் அவர்களது பணி முடிந்தது.  செவ்வகப் பாறைக்கு கீழே இருந்த ஒரு இடத்தில் தோண்டிய போது ஒரு கல்பெட்டி கிடைத்தது.  அதை வீரர்கள் எடுத்து அச்சுவிடம் தர அவன் அதை கைம்மாவிடம் ஒப்படைத்தான்.

விடிவதற்கு சில நாழிகைகள் முன்பு கைம்மா அச்சுவிடம் விடை பெற்றான்.  அவனும் அச்சுவும் அந்த குறுகிய காலத்திலேயே மிகவும் நண்பர்கள் ஆகி விட்டார்கள்.  அச்சு கைம்மாவை அணைத்துக் கொண்டான்.  கைம்மாவின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

”வென்று திரும்புங்கள் கைம்மா.  மிசிறி நாட்டில் உங்களுக்கு ஒரு நண்பன் இருக்கிறான் என்பதை மறக்காதீர்கள்” என்றான் அச்சு.

”ஒருபோதும் மறக்க மாட்டேன் அச்சு.  உங்கள் அன்பை, உங்கள் உதவியை” என்றான் கைம்மா.

பிறகு ”விண்ணில் உங்கள் பயணம் சுவாரசியமானதாக அமையட்டும்” என்று வாழ்த்தினான் அச்சு.

”நீங்கள் இப்படி சொல்வீர்கள் என்று எனக்குத் தெரியும்” என்றான் கைம்மா.  ”அதாவது சுவாரசியமாக இருக்க வேண்டும் என்று சொல்வீர்கள் என்று தெரியும்” என்றான்.

”எப்படித் தெரியும்?” அச்சு கேட்டான்.

”பாறைப் பழம் சாப்பிடுபவர்கள் எப்போதும் சுவாரசியத்தை விரும்புவார்கள்” என்றான் கைம்மா.

”ஹஹஹ ஹஹஹ” அச்சு சிரித்தான்.

கைம்மா அச்சுவிடம் விடை பெற்றுக் கொண்டு தன் பறக்கும் குதிரையில் அந்த கல்பெட்டியை வைத்துக் கட்டிக் கொண்டு கேளிர் நாட்டை நோக்கிப் பறந்தான்.

குகைத் தாத்தாவின் அறிவுரைப்படி அவன் அன்று மதியத்திற்குள் கேளிர் நாட்டிற்குச் செல்ல வேண்டும்.  அங்கே எழில் என்ற ஒரு கிராமம் உள்ளது.  அங்கே பல நூற்றாண்டுகள் பழைமையான ஒரு அனுமன் கோவில் உள்ளது.  அந்த கோவிலின் பூசகரை சந்திக்க வேண்டும்.  அவரை தனியாக சந்தித்து ”குகைத் தெய்வம் என்னை அனுப்பியது” என்று சொல்லி விவரங்களைச் சொல்ல வேண்டும்.  அவர் புரிந்து கொள்வார்.  அந்த பூசகரின் வீட்டில் பல நூற்றாண்டுகள் பழைமையான ஒரு ஓலைச்சுவடி உள்ளது.  அதை அவரிடம் கேட்க வேண்டும்.  அவர் அந்த ஓலைச் சுவடியை எடுத்து கைம்மாவிற்கு அதை முழுமையாக வாசித்து விளக்கிச் சொல்வார்.  அவருக்கு அந்த பழங்கால மொழியை வாசிக்கத் தெரியும்.  அந்த ஓலை சுவடி ஒரு பழங்கால பொறியியல் நூல்.  அதில் அந்த கல்பெட்டியை எப்படி திறப்பது என்ற விவரத்தில் இருந்து அதில் உள்ள பொருட்களை எப்படி இணைப்பது, எப்படி பயன்படுத்துவது என்று எல்லா விஷயங்களும் விரிவாக விளக்கப்பட்டிருக்கும்.

கேளிர் நாடு மிசிறி நாட்டின் அருகில் இருக்கும் நாடு.  கைம்மா அங்கே விரைவாகவே சென்று விட்டான்.  எழில் கிராமத்தில் பறக்கும் குதிரையை யாரும் பார்க்காதவாறு புதர்கள் அடர்ந்த ஒரு இடத்தில் மறைவில் விட்டான்.  பிறகு அனுமன் கோவில் பூசகரை சந்திக்கச் சென்றான்.

அவன் எண்ணியதை விட எல்லாமே விரைவாக நல்ல விதமாக நடந்து விட்டது.  பூசகர் அவனிடம் மிகவும் நட்புணர்வுடன் நடந்து கொண்டார்.  அவர் தன்னுடைய வீட்டில் கைம்மாவிற்கு உணவளித்தார்.  பிறகு அந்த ஓலைச் சுவடியைத் தேடி எடுத்து வாசித்து அவனுக்கு விளக்கிச் சொன்னார்.  அந்த ஓலைச் சுவடி பெரியது.  முழுவதுமாக ஒரு நாளில் வாசி்த்து புரிந்து கொண்டுவிட முடியாது.  அவர் அவனுக்குத் தேவைப்படும் விவரங்களை மட்டும் முழுமையாக வாசித்தார்.  அந்த கல்பெட்டியை திறந்து அதில் உள்ளவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என விளக்கினார்.  கைம்மா அவற்றை நன்கு தெரிந்து கொண்டான்.

பிறகு அவர் நீண்ட நேரம் ஓலைச் சுவடியைப் புரட்டி பார்த்தார்.

அவன் அவருக்கு நன்றி கூறி புறப்பட்டான்.  அவர் அவனை வாழ்த்தினார்.

அவன் புறப்படும் முன் அவர் ”கைம்மா உங்களிடம் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும்” என்று தயங்கினார்.

”சொல்லுங்கள் அய்யா” கைம்மா கேட்டான்.

அவர் அவனிடம் அந்த ஓலைச் சுவடியை தந்து ”இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் கைம்மா” என்றார்.

”ஏன் அய்யா? இது உங்களிடமே இருக்கட்டுமே.  நான் தான் எனக்குத் தேவையான எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு விட்டேனே.  தவிரவும் எனக்கு இதன் பழைய மொழியை வாசிக்கத் தெரியாதே” என்றான்.

”இருக்கலாம் கைம்மா.  ஆனால் இதை நீங்களை கொண்டு செல்லுங்கள்.  ஏனெனில் இங்கு முன்பு ஒரு தவறு நடந்து விட்டது” என்றார் பூசகர்.

”தவறா? நீங்கள் சொல்வது புரியவில்லை அய்யா” என்றான் கைம்மா.

”விவரமாகச் சொல்கிறேன் கைம்மா.  இந்த ஓலைச் சுவடியை நான் சிறுவனாக இருந்தபோது என்னுடைய அப்பா என்னிடம் தந்தார்.  இது மிகவும் முக்கியமானது இதை மிகவும் ரகசியமாக பாதுகாத்து வைக்க வேண்டும் என்று சொன்னார்.  இதில் என்ன எழுதியிருக்கிறது என்று பிற்காலத்தில் சொல்வதாக சொன்னார்.  அதுவரை இதை நான் படித்துப் பார்க்கக் கூடாது என்றும் இது ஒரு குகைத் தெய்வத்தினுடையது என்றும் சொன்னார்.  

என் அப்பா எனக்கு பழங்கால மொழியை ஏற்கனவே கற்றுத் தந்திருந்தார்.  எனவே நான் நினைத்திருந்தால் இந்த ஓலைச் சுவடியை பிரித்து படித்திருக்க முடியும்.  ஆனால் அப்பாவின் சொல்லை மீறக் கூடாது என்று இதை படிக்காமல் இருந்தேன்.  பிறகு கொஞ்ச காலத்தில் என் அப்பா இறந்து விட்டார்.  இதில் என்ன எழுதி இருக்கிறது என்று பின்னாளில் சொல்கிறேன் என்று அவர் சொன்னது நிறைவேறாமலேயே போய் விட்டது.  பிறகு எனக்கும் இதைப் படிக்க வேண்டும் என்று ஆர்வம் ஏற்படவில்லை.  இதை பாதுகாப்பாக எடுத்து வைத்து விட்டேன்”

”பிறகு சில வருடங்கள் கழித்து ஒருவர் என்னிடம் வந்து தன்னை என் அப்பாவின் நண்பர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.  அவர் இந்த ஓலைச் சுவடியைப் பற்றி கேட்டார்.  இதை தன்னிடம் தந்து விட வேண்டும் என்று வற்புறத்தினார்”

”எனக்கு அவர் மீது நம்பிக்கை வரவில்லை.  அவர் என் அப்பா பற்றி கூறிய சில தகவல்கள் முன்னுக்குபின் முரணாக இருந்தன.  எனவே நான் அவரிடம் ஓலையைத் தர மறுத்தேன்.  அவர் தன்னுடைய தம்பி என்னவென்றே அடையாளம் காணமுடியாத  ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொன்னார்.  இந்த ஓலைச் சுவடியில் தன்னுடைய முன்னோர்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு நோய் பற்றிய விவரம் இருப்பதாக சொன்னார்.  ஒருவேளை தன் தம்பிக்கு அந்த நோய் வந்திருக்கலாம் என்று தான் சந்தேகப்படுவதாகவும் அது பற்றி தெரிந்து கொண்டால் மட்டுமே அவனுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்ற முடியும் என்று சொன்னார்.  என்னிடம் கெஞ்சி அழுதார்.  ஓலைச் சுவடியை இரண்டு நாட்கள் மட்டும் தன்னிடம் தந்தால் போதும் அந்த நோய் பற்றி தெரிந்துகொண்டு விட்டு என்னிடமே திருப்பித் தந்து விடுவதாக சொன்னார்”

”அவரை நம்பி நான் இதை அவரிடம் கொடுத்தேன்  அவரும் இதைக் கொண்டு சென்று விட்டு இரண்டு நாட்கள் கழித்து திருப்பித் கொண்டு வந்து தந்து நன்றி கூறிவிட்டுச் சென்றார்”

”ஆனால் கைம்மா இப்போது உனக்காக இதை வாசித்த போது தான் அவர் என்னை ஏமாற்றி விட்டார் என்று தெரிந்து கொண்டேன்.  இதில் நான் உனக்கு விளக்கிய விஷயங்கள் போக மற்றவை முழுவதுமாக விண்கலம் செய்யும் விதம் குறித்ததாகவே இருக்கின்றன.  இதில் நோய் பற்றி எந்த குறிப்பும் இருப்பதாக தெரியவில்லை.  அப்படியென்றால் வந்தவருடைய நோக்கம் வேறு.  அவர் இதைக் கொண்டு சென்று இதில் உள்ளவற்றை வேறு ஓலையில் எழுதி கொண்டு சென்றிருப்பார் என்று எண்ணுகிறேன்.  வந்தவர் நிச்சயம் நல்ல நோக்கம் உடையவர் என்று சொல்ல முடியாது.  ஏனென்றால் அவர் நல்லவர் என்றால் உன்னைப் போல தன்னுடைய உண்மையான நோக்கத்தை சொல்லி இதைக் கேட்டிருப்பார்.  என் அப்பா என்னிடம் கூறியவாறு என்னால் இதை பாதுகாக்க முடியாமல் போய் விட்டது.  எனக்கு வருத்தமாக இருக்கிறது.  நான் ஏமாந்து விட்டேன்”

பூசகர் சொல்லி முடித்தார்.

”வருந்தாதீர்கள் அய்யா.  உண்மையும் நன்மையுமே எப்போதும் இறுதியில் வெல்லும்.  உங்கள் விருப்பதிற்காக இதை நான் எடுத்துச் செல்கிறேன்” என்றான் கைம்மா.

அவன் ஓலைச் சுவடியை தன்னுடைய பையில் பத்திரப்படுத்திக் கொண்டான்.  பிறகு அவரிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டான்.

கொள்ளையர்களால் எப்படி விண்வெளியில் செல்ல முடிந்தது என்பது இப்போது புரிகிறது என்று கைம்மா தனக்குள் நினைத்துக் கொண்டான்.

மேலும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *