ஆழத்திலிருந்து எரிமலையின் வாய் வழியாக வெடித்து வரும் நெருப்புக் குழம்பை போல விண்கலம் வேகமாக வெளியே வந்தது. அது அப்படியே தலைகீழாக திரும்பி பறந்து சென்று விரிந்த தாமரையைப் போன்ற ஒரு பெரிய கண்ணாடி கட்டிடத்தில் சென்று பொருந்தி நின்றது. விண்கலத்தின் அடியில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு இப்போது விண்கலம் தலைகீழாக இருந்ததால் மேல் நோக்கி எரியும் சுடர் போல தெரிந்தது. கண்ணாடித் தாமரை கட்டிடத்தின் மையத்தில் இருந்து மேலே எழுந்து தெரிந்த அந்த நெருப்பு அந்த கட்டிடத்தை ஒரு பெரும் மலர் விளக்கினைப் போல தோன்றச் செய்தது.
திண்டுவும் முத்துவும் அமர்ந்திருந்த விண்கல அறை விண்கலத்தின் தலைகீழ் திருப்பத்தின் போதே அதற்கு இணையாக எதிர்திசையில் சுழன்று நேராக திரும்பிக் கொண்டது. இவை சில நொடிகளில் நடந்தன.
”பூமியின் குழந்தைகளே எங்கள் யுரேனக நகருக்கு உங்களை வரவேற்கிறேன். வருக” என்று இயந்திர மனிதன் சொன்னான். திண்டுவும் முத்துவும் எழுந்து அவன் பின்னால் நடந்தார்கள். அந்த அறையைக் கடந்து வெளியே வந்த போது ”எத்தனை மாதங்கள் என்றே தெரியவில்லை. இங்கேயே அடைபட்டுக் கிடந்தோம்” என்றான் முத்து. திண்டுவும் அதையே நினைத்தான். அவர்களுக்கு விடுதலை அடைந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. என்றாலும் இது நம் பூமி அல்லவே என்ற வருத்தமும் ஏற்பட்டது.
அந்த கண்ணாடிக் கட்டிடத்தின் பத்தாவது தளத்தில் கதவு திறந்தது. அந்த தளத்தில் அவர்கள் நடந்து சென்றபோது சுற்றிலும் நோக்கினார்கள். அந்த கட்டிடம் முழுவதுமே கண்ணாடியால் ஆனாது. அதன் கண்ணாடிச் சுவர்களுக்கு அப்பால் சுற்றிலும் ஏராளமான அழகிய கண்ணாடிக் கட்டிடங்கள் இருந்தன. அவை வெவ்வேறு உயரம் கொண்டவை. சில மிக உயரமானவை. அவற்றின் உள்ளே எரிந்து கொண்டிருந்த விளக்குகளின் ஒளி கண்ணாடிகளால் பிரதிபலிக்கப்பட்டது. அது மொத்தமாக அவற்றை ஒளிரும் வைரங்களின் குவியல் போலக் காட்டியது.
திண்டு மேலே பார்த்த போது தலைகீழாக இருந்த அவர்கள் வந்த விண்கலத்தின் பகுதி தெரிந்தது. அது மிகப் பெரிய கோட்டையைப் போன்று இருந்தது. அவர்களுடன் இணையாக பல இயந்திர மனிதர்கள் கூடவே நடந்து வந்தபோது தான் அவர்கள் அனைவருமே தங்களது அதே விண்கலத்தில் வந்தவர்கள் என்பது திண்டுவிற்கும் முத்துவிற்கும் தெரிந்தது.
”இவர்கள் அனைவருமே நம்முடைய கலத்தில் தான் இருந்திருக்கிறார்கள்” என்றான் முத்து.
”ஆம். இவர்களில் எத்தனை பேர் நம் பூமியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை” என்றான் திண்டு.
அவர்கள் அனைவரும் அந்த கட்டிடத்தின் தரைத் தளத்திற்கு வந்து வெளியே வந்தனர். அங்கே இரண்டு பக்கங்களிலும் மூன்று மூன்று பேர்களாக பிரிந்து நின்ற ஆறு பெண்கள் அவர்களை வரவேற்றனர். திண்டு திகைத்து நின்று விட்டான். முத்துவும் அந்த விண்கலத்தில் வந்த பலரும் திகைத்து நின்றனர். அந்த பெண்கள் இயந்திர மனிதர்களாக இல்லை. அவர்கள் பூமியில் இருப்பதைப் போலவே உடையணிந்து பூமியில் எப்படி இருப்பார்களோ அதே போல இருந்தனர். திகைத்து நின்றவர்களை நோக்கி அப்பெண்களில் ஒருவர் சிரித்துக் கொண்டே சொன்னார்,
”யுரேனகப் பெருநகர் உங்களை வரவேற்கிறது”
அப்பெண்கள் வந்தவர்கள் அனைவர் கையிலும் சிறு கண்ணாடி மலர் ஒன்றை அளித்தனர்.
”இதை சாப்பிட வேண்டுமா? கண்ணாடி போல இருக்கிறதே” என்றான் முத்து.
”இது சாப்பிடும் பொருள் அல்ல. இது கண்ணாடியும் அல்ல. இது வைரம். வைரத்தைக் கையில் கொடுத்து வரவேற்பது யுரேனக நகரின் பண்பாடு” என்றாள் ஒரு பெண்.
முத்து ஏமாற்றம் அடைந்தான்.
”நீங்கள் மட்டும் பூமியில் இருப்பதைப் போலவே இருக்கிறீர்கள்? என்று திண்டு கேட்டான்.
”நீங்களும் சற்று நேரத்தில் எங்களைப் போலவே உங்கள் இயல்பான தோற்றத்திற்கு வந்து விடுவீர்கள்” அந்த பெண் சொல்லி புன்னகைத்தாள்.
”அப்படியா? அப்படியென்றால் நாங்கள் இயந்திர மனிதர்களாக மாறியது?” என்று கேட்டான் முத்து.
”உண்மையில் மனிதர்கள் யாரும் முழுவதும் இயந்திர மனிதர்களாக மாற முடியாது. அது விண் பயணத்திற்காக உங்கள் மீது பொருத்தப்பட்ட ஒன்று” என்றாள் அவள்.
”உடை போலவா?”
”ஒரு வகையில் அவ்வாறுதான்”
திண்டுவும் முத்துவும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
”எனக்கும் அப்போதே சந்தேகம் தோன்றியது. ஆனால்…” என்று முத்து அப்பெண்ணை பார்த்தான்.
”அப்படியென்றால் நான் பழைய படி சாப்பிட முடியுமா? அல்லது நாக்கில் கதிர் வீச்சு செலுத்தி பசி போய் விடும்படி செய்து விடுவீர்களா? ”
அந்த பெண் சிரித்தாள். ””நிச்சயமாக உன்னால் நன்றாக சாப்பிட முடியும். இனி கதிர் வீச்சு தேவை இருக்காது” என்றாள்.
”வாருங்கள்” அந்த பெண் திண்டு முத்து இருவரையும் அழைத்துச் சென்றாள். மற்றவர்களை மற்ற பெண்கள் வேறு பாதைகளில் அழைத்துச் சென்றார்கள்.
—-
உண்மையில் பூமியிலும் மிகக் கடும் குளிரான பகுதிகள் உண்டு என்பதை திண்டு அறிந்திருந்தான். ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்து அப்படியே மேல் நோக்கி வீசினால் அது பனித் துகள்களாகப் பொழியும் இடங்கள் இருக்கின்றன. நீர் பனிக்கட்டியாக மட்டுமே இருக்க முடியும் என்ற அளவிற்கு கடும் குளிர் உடைய இடங்கள் அவை. சூரியனின் வெப்பம் மிக மிகக் குறைவாகவே கிடைக்கும் இடங்கள் அவை. அத்தகைய இடங்களில் மனிதர்கள் வாழ்வதில்லை அல்லது மிக மிக அரிதாகவே ஒரு சிலர் அங்கு வாழ்கின்றனர் . அந்த சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொண்டு அவர்கள் வாழ்கின்றனர். திண்டு வாழ்ந்த ஊரைப் போல ஒருவர் மிகவும் சுதந்திரமாக சுற்றித்திரியும் வாழ்க்கையை அந்த குளிர்ப் பகுதிகளில் நினைத்துக் கூட பார்க்க முடியாது. குளிர் காலத்தில் பெரும்பாலும் வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும்.
பூமியில் அத்தகைய இடங்கள் தொலை தூரத்தில் வடக்குப் பகுதியில் இருப்பதாக அவன் கேள்விப்பட்டிருந்தான். ஆனால் யுரேனஸ் முற்றிலும் வேறு மாதிரியானது. யுரேனஸ் கோளில் மனித வாழ்க்கை எந்த வகையிலும் சாத்தியமே இல்லை. மனிதனால் எவ்வகையிலும் அதன் காலநிலைக்கு தகவமைத்துக் கொள்ளவே இயலாது. அப்படி இருக்கும் போது, இப்படி ஒரு மனித வாழ்க்கை யுரேனஸ் கோளில் சாத்தியமாகும் என்பது அவனுக்கு மிகவும் வியப்பளித்தது. யுரேனசின் ஆழத்திற்குள் துளைத்துச் சென்று மிக பிரம்மாண்டமாக நகரை மனிதர்கள் அமைத்திருக்கிறார்கள் !
திண்டுவும் முத்துவும் அந்த பெண்ணால் அழைத்துச் செல்லப்பட்டு ஒரு மாளிகையில் தங்க வைக்கப்பட்டார்கள். அவர்கள் தங்கள் இயந்திர தோற்றத்தை மாற்றி தங்களுடைய இயல்பான தோற்றத்திற்கு வந்தார்கள். யுரேனக நகரின் விருந்தினர்களுக்கான பண்பாட்டு உடை என்று ஒரு உடையை அப்பெண் திண்டுவிற்கும் முத்துவிற்கும் தந்தாள். அது ஒரு பாட்டடை மேல் சட்டையும் கால் சட்டையும் வைரங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. அவர்கள் அந்த மாளிகையில் இரவு உணவு உண்டார்கள். வியக்கத்தக்க வகையில் அவர்களுக்கு பூமியில் இருப்பதைப் போன்றே உணவுகள் கிடைத்தன, ஆனால் அவர்கள் முன்பு அறிந்திராத யுரேனக நகரில் மட்டுமே விளையும் காய்கறிகள், பழங்கள், நீர் வாழ் பிராணிகளின் இறைச்சி என்று அந்த விருந்தில் பல இருந்தன. அவை ஒவ்வொன்றைப் பற்றியும் அவர்கள் இருவருக்கும் அப்பெண்ணிடம் விளக்கினார். அப்பெண்ணுடன் மற்றொரு பெண்ணும் இணைந்து அவளுடைய பணியில் உதவினாள்.
பிறகு அவர்கள் அணிந்திருந்த பண்பாட்டு உடைகளை மாற்றி இரவு உடைகள் அணிந்து கொள்ளும் படி சொன்ன அந்த பெண் அவர்களுக்கு இரவு ஆடைகள் தந்தாள். திண்டுவும் முத்துவும் உடை மாற்றிக் கொண்டனர். பின் மென்மையான, கதகதப்பான ஒரு மஞ்சத்தில் படுத்துக் கொண்டார்கள்.
”இந்த கண்ணாடி அறையில் நாங்கள் உறங்குவதை வெளியே இருந்து மற்றவர்கள் பார்க்க முடியும் அல்லவா?” என்று முத்து கேட்டான்.
”இல்லை. நாம் அவ்வாறு தெரிய வேண்டும் என்று விரும்பினால் மட்டுமே அவ்வாறு தெரியும்” என்றாள் அப்பெண்.
”நீங்கள் சொல்வது புரியவில்லை” என்றான் திண்டு.
அந்த பெண் அந்த அறையின் கண்ணாடிச் சுவற்றில் வரையப்பட்டிருந்த ஒரு வட்டத்தைத் தொட்டார். இப்போது சுற்றிலும் இருந்த கண்ணாடிச் சுவர்கள் நீல நிறச் சுவர்களாக மாறி விட்டன. அவள் மீண்டும் அதைத் தொட்டபோது அவை மீண்டும் கண்ணாடிச் சுவர்களாக மாறின.
”ஏன் இப்படி இங்கு எல்லாமே கண்ணாடிக் கட்டிடங்களாக இருக்கின்றன?” என்று கேட்டான் திண்டு.
”யுரேனக நகரின் பாதுகாப்பு காரணங்களுக்காக அவ்வாறு அமைக்கப் பட்டுள்ளன” என்றாள் அவள்.
”பாதுகாப்பு காரணங்களா….?”
”அவற்றைப் பிறகு சொல்கிறேன். நீங்கள் இருவரும் இப்போது உறங்குங்கள்” என்றாள் அவள்.
”எங்களை எதற்காக பூமியில் இருந்து இங்கு கொண்டு வந்தீர்கள?” என்று கேட்டான் திண்டு.
”பிறகு பேசுவோம்” அவள் புன்னகையுடன் மீண்டும் சொல்லி விட்டு அறையின் சுவர்களை நீலச் சுவர்களாக மாற்றி விட்டு சென்று விட்டாள்.
திண்டுவும் முத்துவும் அந்த அறையின் கூரையைப் பார்த்தார்கள். அதுவும் நீல நிறமாக மாறிவிட்டிருந்தது.
”நமக்குக் கீழே தரை அதன் கீழே நீர் அதன் கீழே பனி அதன் கீழே வான்” என்றான் முத்து. ”அப்படியென்றால் நாம் இப்போது தலைகீழ் உலகில் இருக்கிறோம் இல்லை திண்டு?” என்று அவன் கேட்டான்.
”ஆம்.” என்றான் திண்டு.
”மையத்தில் வானம் என்றானே இயந்திர மனிதன்?” என்றான் முத்து.
”ஆம். அப்படியெனில் அதன் பொருள் யுரேனஸ் கோளின் மையம் வெற்றிடம் என்று தான் பொருள்” என்றான் திண்டு.
”வெற்றிடத்தை சுற்றி எப்படி கோள் அமைய முடியும்?” முத்து கேட்டான்.
”தெரியவில்லை முத்து” என்றான் திண்டு.
”இங்குள்ள வானில் ஒரு சூரியன் இருக்கிறது என்றானே?” என்று மேலும் கேட்டான் முத்து.
”ஆம். நாளை காலை இங்கு சூரியன் உதிப்பதைக் காண்போம்” என்றான் முத்து.
மறுநாள் காலை விடிவதற்கு முன்பே அவர்கள் இருவரும் எழுந்து விட்டனர். அவர்கள் எழுந்த சற்று நேரத்திலேயே அந்த பெண் அவர்களது அறைக்கு வந்து விட்டாள். அவர்கள் இருவரும் அந்த மாளிகை அருகே இருந்த சுற்றுப்புறங்களில் சுற்றித் திரிய விரும்பினார்கள். அதை அந்த பெண்ணிடம் அவர்கள் சொன்னார்கள். அவள் சரி என்றாள் ஆனால் தானும் உடன் வருவேதாக கூறினாள்.
அவர்கள் தங்க வைக்கப்பட்ட மாளிகையின் அருகே ஒரு பெரிய புல்வெளி இருந்தது. அவர்கள் மாளிகையின் வெளியே வந்து பார்த்தபோது சுற்றிலும் இருந்து வந்த ஒளியில் அதன் புற்கள் வாட்களைப் போலத் தெரிந்தன. அவை காற்றில் அசைந்த போது அங்கே வாட்களின் போர் நடப்பதைப் போல தோற்றத்தை ஏற்படுத்தியது.
அவர்கள் புல்வெளிக்கு சென்றபோது இன்னும் சூரியன் உதித்திருக்கவில்லை. வானில் தெரிந்த நட்சத்திரங்கள் சில இடங்களில் தனித்தனியாகவும், பல இடங்களில் கொத்துகளாகவும், சில இடங்களில் கோடுகள் போலவும் தெரிந்தன. ஆனால் அந்த நட்சத்திரங்கள் மின்னவில்லை.
”இந்த நட்சத்திரங்கள் மின்னவில்லையே?” என்று கேட்டான் திண்டு.
”அவை நட்சத்திரங்கள் அல்ல. அவை இவ்வுலகின் எதிர்பக்கத்தில் இருக்கும் விளக்குகள்” என்றால் அப்பெண்.
”விளக்குகளா?” அவன் வியந்தான்.
”ஆம் நம்மைச் சுற்றி இருக்கும் கட்டிடங்களிலும், சாலையிலும் விளக்குகள் இருக்கின்றன அல்லவா? அதுபோல யுரேனசின் உள் உலகின் எதிர்பக்கத்தில் இருக்கும் ஊர்களின் விளக்குகள் அவை” என்றாள் அவள்.
”புரியவில்லை” என்றான் முத்து.
திண்டுவிற்கு புரிந்து விட்டது. அவன் ”பூமியின் பின்பக்கம் போல. இங்கே இந்த ஆழ் உலகில் எதிர்ப்பக்கம்’ என்றான்.
”அதே தான்” என்றாள் அவள். மேலும், ”ஆனால் ஒரு வேறுபாடு. பூமியில் ஒரு பக்கம் இரவு என்றால் மறுபக்கம் பகலாக இருக்கும். இங்கே இந்த ஆழ் உலகில் அப்படி கிடையாது. இங்கே இரவாக இருக்கும் போது எதிர் பக்கத்திலும் இரவு. இங்கே பகலாக இருக்கும் போது எதிர்பக்கத்திலும் பகல்” என்றாள்.
”இங்கே முன் பக்கம் பின் பக்கம் கிடையாது” என்ற அவள் வானைச் சுட்டிக் காட்டி ”நமக்கு அவர்கள் எதிர்ப்பக்கம். நாம் அவர்களுக்கு எதிர்ப்பக்கம்” என்றாள்.
”ம்….ஒன்றும் புரியவில்லை” என்றான் முத்து.
”நான் உனக்கு பிறகு விளக்குகிறேன்” என்றான் திண்டு.
திண்டு சுற்றிலும் பார்த்து விட்டு ”இங்கே எப்படி சூரியன் உதிக்கும்?” என்று கேட்டான்.
”இன்னும் சில நிமிடங்களில் உனக்குத் தெரிந்து விடும்” என்று அந்தப் பெண் புன்னகைத்தாள்.
அவள் ஒரு திசை நோக்கி கை காண்பித்தாள். திண்டுவும் முத்துவும் சூரியன் உதிக்கப் போவதை எதிர்பார்த்து ஆவலுடன் தொடுவானை நோக்கினார்கள்.
”அதோ” என்றாள் அப்பெண்.
”எங்கே? தெரியவில்லையே” என்றான் திண்டு.
”கீழே அல்ல. மேலே பார்” என்றாள் அவள்.
அந்த சூரியன் அடிவானிலிருந்து எழவில்லை. அவள் காண்பித்த திசையில் மேலே உயரத்தில் ஒரு சிறு ஒளிப்புள்ளி தோன்றியது. அது நட்சத்திரம் போலத் தோன்றியது. சற்று நேரத்தில் அது பெரிதாகிக் கொண்டே இருந்தது.
”அது பெரிதாகிறது” என்றான் முத்து.
”ஆம்” என்றாள் அவள்.
திண்டுவும் முத்துவும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சற்று நேரத்தில் அது இன்னும் பெரிதாக ஆனது.
“அது எவ்வளவு பெரிதாகும்?” என்று முத்து கேட்டான்.
”நீங்கள் பூமியில் காணும் சூரியனின் அளவிற்கே இதுவும் பெரிதாகும்” என்றாள் அவள்.
பச்சை நிற, மஞ்சள் நிற முகில்கள் வானில் வெவ்வெறு இடங்களில் ஒளி மிகுந்து தென்பட்டன.
”இங்கே பூமியைப் போல அல்ல. இங்கே சூரியன் தெற்கே உதிக்கிறது” என்றாள். பிறகு ”சரி நேரமாகிறது. போகலாம் வாருங்கள்” என்றாள்.
”இன்னும் கொஞ்ச நேரம் இருப்போமே” என்றான் முத்து.
”சரி” என்றாள் அவள்.
திண்டுவும் முத்துவும் அந்த புல்வெளியில் ஓடினார்கள். அவர்களைப் பார்த்து புன்னகையுடன் நின்றாள் அவள்.
(மேலும்)