திண்டுவின் பயணங்கள் 21

தன் குதிரையில் பறந்து சென்று கொண்டிருந்த கைம்மா கரிய முகில்கள் சூழ்ந்த வெளியைக் கடக்க நேர்ந்தது.  குதிரை ஒரு பெரும் கருமுகில் தொகுதிக்குள் புகுந்து கடந்தது.  அவனால் எதையும் பார்க்க முடியவில்லை.  சட்டென்று வீசப்பட்ட ஒரு சாட்டையைப் போல ஒரு மின்னல் கீற்று அவனது தோளைத் தொட்டது.  அவனது இயந்திர உடை அதை மணல் நீரை உள் இழுத்துக் கொள்வது போல இழுத்துக் கொண்டது.  முதலில் அவன் சற்று அச்சம் அடைந்தாலும் அவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது அவனுக்கு உவகை ஏற்படுத்தியது.  அவனுடைய குதிரையின் வலது சிறகை மற்றொரு மின்னல் தாக்கியபோது குதிரையின் மீது நெருப்பு பிடித்துக் கொண்டது போல அதன் உடலில் ஒளி எழுந்தது.  நெருப்புக் குதிரையில் பறப்பது போல அவனுக்குத் தோன்றியது.  குதிரைக்கு என்ன ஆகுமோ என்று அவன் எண்ணினான்.  அது பெரும் குரல் எழுப்பியது.  அடுத்த கணம் அது பழைய படி ஆனாது.  என்ன ஆனது என்று புரியாமல் கைம்மா குழப்பமடைந்தான்.  பின் சில நொடிகளில் குதிரை வாய் திறந்து நெருப்பை உமிழ்ந்தது.  அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.  ஒவ்வொரு முறை அதை மின்னல் தாக்கியபோதும் அதன் உடலில் நெருப்பு பற்றியது போன்ற ஒளி தோன்றி மறைந்தது.  அதன் தொடர்ச்சியாக சில நொடிகளில் வாய் திறந்து நெருப்பை உமிழ்ந்தது.

அவன் மிகவும் வியப்படைந்தான்.  அந்த குதிரை எவ்வளவு ஆற்றல் மிக்கது! தன்னுடைய இயந்திர உடையை உருவாக்கியவர்கள் எவ்வளவு திறமைசாலிகள் என்று நினைத்தான்.  அவன் தோளில் மின்னல் தாக்கியது எந்த பாதிப்பையும் அவனுக்கு ஏற்படுத்தவில்லையே! 

கருமுகில்களைக் கடந்த பிறகு அவன் மேலும் உயர்ந்து வெண்முகில்கள் மீது சென்றான்.  இப்போது அவனது குதிரையின் இரு பெரும் சிறகுகளும் அந்த வெண்முகில்களுடன் இணைந்து அவையும் முகில்கள் போல தோற்றம் அளித்தன்.  ஒவ்வொரு வெண்முகிலைக் கடந்த போதும் குதிரையின் சிறகுகள் பெரிதாவது போலவும் சிறிதாவது போலவும் மாறி மாறி தோற்றம் அளித்தன.

பிறகு மாலை மஞ்சள் பொன் ஞாயிறு அவன் பறந்து கொண்டிருந்த உயரத்தில் இருந்து பார்த்தபோது கீழே தெரிந்தது.  இரவில் தன் காட்டு கிராமத்தில் பயணத்தை துவங்கிய அவன் அந்த இரவு முழுவதும் பூமியை கால்பங்கு சுற்றி விட்டிருந்தான்.  தொடர்ந்து பகல் முழுதும் பறந்து இப்போது மீண்டும் மாலைப் பொழுது துவங்கி இருக்கிறது.

ஒவ்வொரு கணமும் ஒரு புதிய அனுபவத்தால் கைம்மா உவகை கொண்டிருந்தான்.  உவகையும் வியப்பும் மாறி மாறி தோன்ற அவனுக்கு பயணம் சலிப்பற்றதாக இருந்தது.

 பொன் வண்ணம், செவ்வண்ணம், அடர் செவ்வணம், கரும் பச்சை வண்ணம், பின் நீலம், அடர் நீலம், கருமை என வானம் மாறியது.  விண்மீன்கள் நிறைந்த வானம் எழுந்தது. சூரியன் மேலும் மேலும் கீழிறங்கி அதன் கொஞ்சமும் புவியின் வளைவில் மறைய தொடங்கியது.  அவனுக்கு சூரியனை விரட்டிக் கொண்டு செல்ல வேண்டும் போல ஆவல் ஏற்பட்டது  

சட்டென்று ஒளியின் வண்ணங்கள் சுழன்று செல்லும் ஒரு பெரும் சுழியில் தான் நுழைந்து செல்ல இருப்பதாக அவனுக்கு தோன்றியது.  புவியின் காற்று மண்டல எல்லையைக் கடந்து விண்வெளியில் புக இரண்டு நாட்கள் ஆகும் என்று அந்த நூலில் படித்தது அவன் நினைவுக்கு வந்தது.

———-

”நீண்ட பயணங்கள் நினைக்கும் போது இனியவையாகத் தோன்றினாலும்  பல சமயங்களில் செல்லச் செல்ல ஏன் புறப்பட்டோம் என்று தோன்றச் செய்வது உண்டு.  பொதுவாக மனிதர்கள் தாம் அறிந்த எல்லைக்குள்ளேயே வாழ்கிறார்கள்.  சிலர் அரிதாக வெகு தொலைவு செல்கிறார்கள்.  அவர்கள் ஆர்வம் மிகுந்தவர்கள்.  துணிச்சல் மிக்கவர்கள்” என்றான் மணிவாசகம்.

”ஆம்.  நீண்ட பயணங்களில் எதிர்கொள்ளும் இன்னல்களை அவர்கள் அஞ்சுவதில்லை.  பயணங்கள் வீரம் மிக்கவர்களுக்கு மட்டுமே உரியவை” என்றான் அச்சு.  பிறகு அச்சு யோசனையில் ஆழ்ந்தான்.

”என்ன யோசனை இளவரசே?” மணிவாசகம் கேட்டான்.

”பாவம் கைம்மா.  ஒரு அப்பாவியான காட்டுவாசி இளைஞன்.  எவ்வளவு பெரிய ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறான்? இந்த பூமியிலேயே நாம் அறிந்திராத எவ்வளவோ இடங்கள் இருக்கின்றன.  அவற்றையே நாம் இன்னும் முழுதாக அறிந்திருக்கவில்லை.  இங்குள்ளது போன்ற உயிர் வாழ்கைக்கு எவ்விதத்திலும் ஆதரவளிக்காத ஏதோ ஒரு விண்கோள் என்றால் என்ன சொல்வது? என்றான் அச்சு.

”உண்மை தான்.  தெய்வங்கள் தான் அவருக்கு துணை நிற்க வேண்டும்” என்றான் மணிவாசகம்.

அச்சு தலையசைத்தான்.  பின் மௌனமாக மணிவாசகத்தைப் பார்த்தான்.

பிறகு ”சரி மணிவாசகம்.  நான் விடை பெறுகிறேன்” என்றான் 

”நல்லது இளவரசே” மணிவாசகம் அவனுக்கு விடை கொடுத்தான்.

அச்சு மாறுவேடத்தில் வந்திருந்தான்.  அவனது குதிரை தெருவின் கடைசியில் சென்று திருப்பத்தில் மறைவது வரை பார்த்திருந்துவிட்டு மணிவாகசம் வீட்டிற்குள் சென்றான்.

அன்று மாலை மணிவாசகம் தன் ஊரின் பேராலயத்திற்கு சென்றான்.  இறைவனிடம் கைம்மாவிற்காக உருக்கத்துடன் வேண்டிக் கொண்டான்.  இப்புவியும் வானும் விண்வெளியும் யாவையும் ஆன சிவபெருமானின் அருள் இருந்தால் இயலாதது என்று என்ன இருக்கிறது?

மணிவாசகம் ஆலயத்தில் அமர்ந்திருந்தபோது திருவாசகம் இசையுடன் பாடப்பட்டது.

“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பு அரும் தன்மை, வளப் பெரும் காட்சி

ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின்

நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன

இல் நுழை கதிரின் துன் அணுப் புரைய

சிறிய ஆகப் பெரியோன்”

மேற்கண்ட திருவாசக வரிகள் அண்டப் பெருவெளியின் அழகையும் பிரம்மாண்டத்தையும் கூறுகின்றன.  அவை அனைத்தும் கூட வீட்டிற்குள் நுழையும் சூரியக் கதிரில் தெரியும் சிறு துகள்களைப் போல மிகச் சிறியன என்று தோன்றும் அளவிற்கு மிகப் பெரியவர் சிவபெருமான்.

மாணிக்கவாசகர் அண்டத்தைப் பற்றி கூறி இருப்பது மணிவாசகத்திற்கு வியப்பளித்தது.

வியப்பு! ஒருமுறை அச்சு சொன்னது அவன் நினைவிற்கு வந்தது.  ஒருமுறை அச்சு ஏதோ பேச்சின் இடையே சொன்னான்.  ”வியப்பு! வியப்பு தான் மனித வாழ்க்கை.  நாம் வியப்பதற்காக மட்டுமே இருக்கிறோம்.  ஒவ்வொரு கணமும் வியப்பு!”

”நீங்கள் சொல்வது புரியவில்லை அச்சு” என்றான் மணிவாசகம்.  அச்சு பதில் ஏதும் கூறவில்லை.  அச்சு அப்படித்தான் ஏதாவது கூறுவான் பிறகு மௌனமாக ஆகிவிடுவான்.

மணிவாசகம் ஆலயத்திலிருந்து தன் வீட்டிற்கு புறப்பட்டான்.


கனசேகரனும் தினசேகரனும் அருகருகே குதிரையில் சென்று கொண்டிருந்தனர்.

”என்ன நடக்கும் என்று நீர் எண்ணுகிறீர்?” என்று கனசேகரன் கேட்டார்.

”என்ன நடக்கும்? ஒரு நாள் நீர் எழுதும் போலிப் பாக்களுக்கு தர்ம அடி கிடைக்கும்” என்றார் தினசேகரன்.

”மூடரே! எப்போதும் முட்டாள்தனமாகவே பேசுவீரா? கொஞ்சமாவது பொறுப்புடன் நடந்து கொள்ளும்.  நாம் ஒற்றர் என்பதை மறக்க வேண்டாம்” என்றார் கனசேகரன்.

தினசேகரனி்ன் முகம் மாறியது.  ”சரி சொல்லுங்கள்.  எதைப் பற்றி கேட்கிறீர்கள்?”

”வேறென்ன? அந்த சிறுவர்கள் திண்டுவும் முத்துவும் தான்.  அவர்கள் மீண்டு வருவார்களா?” என்று கேட்டார் கனசேகரன்.

”ஏன்? கைம்மா சென்றிருக்கிறானே.  உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?” என்றார் தினசேகரன்.

”அப்படியல்ல.  இது அவ்வளவு எளியதா என்ன?” கனசேகரன் கேட்டார்.

”இல்லை.  மிகவும் அரியது தான்.  ஆனால் அரியவற்றை செய்யவதற்கு என்றே அரிய மனிதர்களும் தோன்றத் தானே செய்கிறார்கள்” என்றார் தினசேகரன்.

”கைம்மா அவ்வாறான அரிய மனிதன் என்கிறீரா?”

”ஆம்.  அவ்வாறு தான்.  அன்று நீங்கள் அவன் குதிரையை வாங்கி சவாரி செய்ய முயன்று எவ்வளவு அவதிப்பட்டீர்.  ஆனால் அதற்கு முன்பு அவன் எவ்வளவு திறமையாக எல்லைநல்லையின் பன்றிமலையை வானில் வட்டமிட்டான்?”

கனசேகரன் தலையசைத்தார்.

“சரி.  எல்லை காவல் தலைவரான திண்டுவின் அப்பா இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? திண்டுவும் முத்துவும் விண்ணிற்கு கடத்தப்பட்ட பிறகு அவர் வெறுமே எதுவும் செய்யாமல் தன் எல்லைப் பணியைத் தான் பார்த்துக் கொண்டு இருக்கிறாரா?” என்று கேட்டார்.

”அதெப்படி? அவர் அவர்கள் நாட்டின் அரசருடன் தொடர்பு கொண்டிருப்பார்” என்றார் தினசேகரன்.

”ஆமாம்.  அவ்வாறெனில் அவர்கள் சிலவற்றை திட்டமிட்டிருப்பார்கள்.  இந்நேரம் செயல்படுத்த தொடங்கியும் இருப்பார்கள்” என்றார் கனசேகரன்.

”நீர் என்ன தான் சொல்வருகிறீர் கனம்? இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்?” என்று கேட்டார் தினசேகரன்.

”நாம் மணிவாசகத்திடம் இது பற்றி பேச வேண்டும்.  திண்டுவின் அப்பாவின் திட்டத்தையும் அறிந்து கொள்ள வேண்டும்.  மணிவாசகம் இதைப்பற்றி நம் இளவரசர் அச்சுவிடம் பேசுவார்” என்றார் கனசேகரன்.

”அதனால் என்ன?” தினசேகன் கேட்டார்.

”அட..! என்ன ஒற்றர் அய்யா நீர்? நம் இளவரசர் கைம்மாவிற்கு உதவி செய்து சிறுவர்களை மீட்க அனுப்பி இருக்கிறார்.  அது இந்நேரம் திண்டுவின் அப்பாவிற்கும் தெரிந்திருக்கக் கூடும் இல்லையா?.  ”

”ஆம்.  தெரிந்திருக்கலாம்.  இல்லாமலும் இருக்கலாம்”

”அது தான் என் சந்தேகம்.  அப்படி தெரிந்திருந்தால் அவர்கள் நம் இளவரசரை தொடர்பு கொண்டிருப்பார்கள்.  அப்படி தொடர்பு கொண்டிருந்தால் அது மணிவாசகத்திற்கு தெரிந்திருக்கும்.  அப்படி அது மணிவாசகத்திற்கு தெரிந்திருந்தால் இந்நேரம் நமக்குத் தெரிந்திருக்கும்” என்றார் கனசேகரன்.

”என்னய்யா குழப்புகிறீர்? தலை சுற்றுகிறது” என்றார் தினசேகரன்.

”நீர் ஒற்றர் வேலைக்கே லாயக்கு இல்லாதவர்.  இந்த எளிய விஷயத்திற்கே தலை சுற்றுகிறது என்கீறீர்” என்றார் கனசேகரன்.

”இப்போது நாம் எங்கே செல்கிறோம்? அதைச் சொல்லும் முதலில்” என்றார் தினசேகரன்.

”அதற்காகத்தான் செல்கிறோம்.  திண்டுவின் அப்பாவும் அவரது அரசரும் என்ன முடிவு செய்தாலும் ..என்ன திட்டமிட்டாலும் அவர்கள் நம் இளவரசருடன் இணைந்து திட்டமிடுவது நல்லது.  அதாவது இந்த விஷயத்தில்…”

”அதாவது இரு நாடுகளும் இதில் இணைந்து செயல்பட வேண்டும் என்கிறீர்” என்றார் தினசேகரன்.

”அதே தான்.  இப்போதாவது உம் மர மண்டைக்கு புரிந்ததே” என்றார் கனசேகரன்.

”சரி சரி.  இப்போது எங்கே செல்கிறோம்? அதை சொல்லுங்கள்.

”திண்டுவின் அப்பா இருக்கும் இடத்திற்கு.  அதற்கு முன்பாக மணிவாசகத்தை சந்திக்க வேண்டும்.” என்றார் கனசேகரன்.

”திண்டுவின் அப்பா எங்கே இருக்கிறார்? எல்லையில் தானே” தினசேகரன் கேட்டார்.

”தெரியவில்லை.  அவர் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து செல்ல வேண்டும்” என்றார் கனசேகரன்.

”சரி ….அதோ பாரும் ஒரு பலகாரக் கடை என்று நினைக்கிறேன்.  அங்கு பருத்திப் பால் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.  எனக்கு பருத்திப் பால் குடிக்க வேண்டும் போல இருக்கிறது” என்றார் கனசேகரன்.

”எனக்கு கம்பளிப் பால் தான் வேண்டும்” என்றார் தினசேகரன்.

”கம்பளிப் பாலா?”

”ஆம்.  பருத்திப் பால் இருக்கும் போது கம்பளிப் பால் இருக்காதா?” தினசேகரன் கேட்டார்.

”விதி அய்யா…விதி” என்றார் கனசேகரன்.

”என்ன விதி?”

”உம்முடன் பயணம் செய்ய வேண்டும் என்பது என் தலை விதி” என்றார் கனசேகரன்.

(மேலும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *