திண்டுவின் பயணங்கள் 23

“ஈர்ப்பு விசை குறைந்த பகுதி இங்கு துவங்குகிறது” என்று மஞ்சள் ஒளியால் ஒரு  கண்ணாடிப் பாளத்தில் எழுதப்பட்டிருந்தது.  அந்த ஒளி எழுத்துக்கள் அணைந்து எரிந்து மாறி மாறி மின்னின.  அந்த கண்ணாடிப் பாளம் இருந்த பாதையின் வலது புறம் மற்றொரு கண்ணாடிப் பாளம் இருந்தது.  அதில் ”மிதக்கும் வனத்திற்குள் நுழைய வேண்டாம் – ஆபத்து” என்று எழுதப்பட்டிருந்தது.  யுரேனக நகரின் எல்லையை கடந்து வெகு தூரம் வந்துவிட்டிருந்தார்கள் திண்டுவும் முத்துவும்.

அவர்கள் யுரேனசின் அக சூரியன் உதித்த காலைப் பொழுதிலேயே புறப்பட்டு விட்டனர்.  முதல் நாள் இரவு திண்டு அதற்கு திட்டம் போட்டிருந்தான்.  அதை முத்துவிடம் கூறி இருந்தான்.  அவர்கள் தாங்கள் தங்க வைக்கப்பட்டருந்த இடத்தில் இருந்து தப்பிச் செல்ல முடிவு செய்திருந்தார்கள்.  அவர்களை கவனித்துக் கொள்ள நியமிக்கப்பட்டிருந்த பெண்ணிடம் காலை அவர்கள் புல்வெளிக்குச் சென்று சூரிய உதயத்தைப் பார்க்கப் போவதாக சொல்ல அவள் அனுமதித்தாள்.

சூரியன் கீழிறங்கி பெரியதாக தோன்றும் மதியம் வரை அவர்கள் நடந்தார்கள்.  வெகுதூரத்திற்கு பரந்திருந்த அந்த நீலப் புல்வெளியைக்  கடந்த பிறகு ஒரு நதிக்கரையை அடைந்தார்கள்.  அந்த நதி திண்டுவிற்கும் முத்துவிற்கும் வியப்பை ஏற்படுத்தியது.

”இதென்ன திண்டு…இந்த ஆற்றின் நீர் இவ்வளவு பொன் நிறமாக இருக்கிறது? இது நீரா?…அல்லது நெருப்பா?” என்றான் முத்து.

”ஆமாம்” என்றான் திண்டு.  இருவரும் ஆச்சரியம் விலகாமல் அந்த ஆற்றை சற்று நேரம் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

”பொன்னி ஆறு” என்றான் திண்டு.

”ஆம். பொன் உருகி ஓடுவது போல் இருக்கிறது” என்றான் முத்து.  ஆற்றங்கரையின் மண் கருப்பு நிறத்தில் இருந்தது.

திண்டு புல்வெளியின் வழியாக வரும் பொழுது பறித்த ஒரு நீண்ட நீலப் புல்லை கையில் வைத்திருந்தான்.  அதை நீட்டி ஆற்றின் நீரோட்டத்தைத் தொட்டான்.  புல்லுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

”நெருப்பு அல்ல” என்றான் அவன்.  அவன் புல்லை ஆற்று நீரில் இருந்து வெளியே எடுத்த போது அதிலிருந்து பொன்னிறத் துளிகள் சொட்டின.  ஒரு சொட்டை அவன் தன் விரலில் விட்டான்.  ”குளிர்ச்சியாக இருக்கிறது” என்றான்.  அவன் விரலில் பட்ட சொட்டு கீழே விழுவது போல விழுந்து பின் வளைந்து மேலெழுந்து பக்கவாட்டில் விலகி மிதந்தது.

இருவரும் மேலும் ஆச்சரியம் அடைந்தனர்.

”இது எப்படி? என்று முத்து கேட்டான்.  பிறகு ”இந்த ஆற்றை எப்படிக் கடப்பது?” என்று கேட்டான்.

திண்டு சில கணங்கள் யோசித்தான்.  பிறகு சிரித்தான்.

”என்ன சிரிக்கிறாய் திண்டு?”

”வா..” என்று சொல்லி முத்துவின் கையைப் பற்றிக் கொண்டான் திண்டு.

திண்டுவும் முத்துவும் நதியில் இறங்கினார்கள்.  அவர்களது உடலைத் தொட்ட குளிர்ச்சியான பொன்னிற நீர் சில நொடிகளில் அவர்களின் இருபக்கமும் அவர்களது முன்பக்கமும் விலகி உயர்ந்து நகர்ந்தது.  ஒரு பெரும் மஞ்சள் மலரில் புகுந்து செல்லும் போது அதன் இதழ்கள் காற்றில் விலகுவது போல அந்த பொன்நிற ஆற்று நீர் விலகியது.

அவர்கள் கடந்து செல்லச் செல்ல அவர்களுக்குப் பின்னால் நீர் மீண்டும் இணைந்து கொண்டது.

”இதென்ன அதிசயமாக இருக்கிறது? என்றான் முத்து.

”உனக்கு கண்ணபிரான் கதை தெரியுமல்லவா முத்து?” திண்டு கேட்டான்.

”ஓ தெரியுமே……ம்….குழந்தை கண்ணனை கொண்டு செல்லும் போது யமுனை ஆறு விலகி வழிவிட்டது அதைத் தானே சொல்ல நினைத்தாய்?” என்றான் முத்து.

”ஆமாம்.  கண்ணனுக்கு யமுனை வழிவிட்டது போல இந்த பொன்னி நமக்கு வழி விடுகிறது” என்றான் திண்டு.

அவர்கள் அந்த நதியைக் கடந்து வந்து பிறகு மேலும் கொஞ்ச தூரம் நடந்து வந்தார்கள்.  பிறகு தான் அந்த எச்சரிக்கை கண்ணாடிப் பாளங்கள் இருந்த இடத்திற்கு வந்தார்கள்.  அங்கிருந்து நிலம் மேடாக ஏறிச் சென்றது.  அவர்கள் நின்றிருந்த இடத்தில் இருந்து பார்த்தபோது ஒரு பிரம்மாண்ட மலை போலத் தெரிந்தது.

”ஈர்ப்பு விசை குறைந்த பகுதி” என்று எழுதி இருக்கிறதே? ஆபத்து என்றும் எழுதி இருக்கிறதே?” என்று அச்சத்துடன் கேட்டான் முத்து.

”அஞ்ச வேண்டாம் முத்து.  ஆபத்துக்களை கடந்து வருவது நமக்கு ஒன்றும் புதியது அல்லவே? என்றான் திண்டு.

”மிதக்கும் வனம் என்று எழுதி இருக்கிறது”

”விண்ணிலேயே மிதந்தாகி விட்டது.  இதையும் தான் பார்ப்போமே” என்றான் திண்டு.

”விண்வெளியில் நாம் விண் கலத்திற்குள்ளாகத்தான் மிதந்தோம்.  அதற்கு வெளியே அல்ல” என்றான் முத்து.

திண்டு வேகமாக முன்னால் மேலேறிச் சென்றான்.  முத்து அவனை விரைந்து பின் தொடர்ந்தான்.  மலை போன்று தோன்றிய அந்த மேட்டின் மீது அவர்கள் ஏறிச் செல்லச் செல்ல ஈர்ப்பு விசையில் மெலிதாக மாறுபாட்டை உணரத் தொடங்கினார்கள்.

”திண்டு…வழக்கமாக மேட்டில் ஏறுவது கடினமாக இருக்கும்.  மூச்சுத் திணறும்.  இது ஏற ஏற எளிதாகிக் கொண்டு இருக்கிறது” என்றான் முத்து.

உண்மையில் அது மலை அல்ல.  மேட்டிற்கு மேல் ஒரு சம நிலம் தான் இருந்தது.  முழுவதும் பெரும் நீல நிற மரங்கள் அடர்ந்து மிகப் பெரிய காடு.  ஆனால் அந்த மரங்கள் எதுவும் மண்ணில் நின்றிருக்கவில்லை.  அவை வானில் மிதந்து கொண்டிருந்தன.  அவற்றின் வேர்கள் மட்டும் கொடிகள் போல நீண்டு அவற்றின் ஒருமுனை மண்ணில் புதைந்தும் மறுமுனை மரங்களுடன் இணைந்தும் இருந்தன.

மேட்டின் மீது ஏறி அவர்கள் நின்ற இடத்திலிருந்து பார்க்க ஒரு பிரம்மாண்டான காடே மிதந்து கொண்டிருந்தது.  ஆயிரக்கணக்கான மரங்கள்.  அவை தான் கீழே தொலைவில் இருந்து பார்க்கும் போது மலை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தின.

அம்மரங்களின் வேர்களைப் பார்த்து ”கொடிகள் போல இருக்கின்றன” என்றான் முத்து.

”வானிலிருந்து பொழியும் மழையின் தாரைகள் போல” என்றான் திண்டு.

”ஆஹா… திண்டு ..நாம் பூமியில் பட்டங்களைப் பறக்க விடுவோம்.  இங்கே ஒரு காடே பட்டம் பறப்பது போல பறக்கிறது” என்றான் முத்து.  அவன் மிகவும் உற்சாகம் அடைந்தான்.

அவர்கள் நின்ற இடத்தில் இருந்து சில அடிகள் எடுத்து வைத்து முன்னால் சென்றவுடன் முத்து பயத்தில் அலறினான்.  ”அய்யோ திண்டு..!” அவன் வானில் எழுந்து உயர்ந்து மேலே சென்றான்.  திண்டுவும் மேலே உயர்ந்தான்.  அவன் முத்துவின் கையைப் பற்றிக் கொண்டான்.  மற்றொரு கையால் ஒரு மரத்தின் வேரைப் பற்றிக் கொண்டான்.  அந்த வேரைப் படித்துக் கொண்டே அவனும் முத்துவும் ஒரு பெரிய மரத்தின் கிளைக்குச் சென்றார்கள்.

சற்று நேரத்திலேயே அது அவர்களுக்கு சுவாரசியமான விளையாட்டாக ஆகி விட்டது.  ஒரு மரத்தின் கிளையை விட்டு அடுத்த மரத்தின் கிளைக்குத் தாவினார்கள்.  ஒரு மரத்திலிருந்து அதைவிட உயரமான மரத்தின் கிளை நோக்கி தாவினார்கள்.  மிதந்து சென்று அதைப் பற்றினார்கள்.  பின்னர் அங்கிருந்து கீழே இருந்த மரத்தின் கிளையைப் பற்ற வேகமாக குதித்தபோது சற்று கீழே வந்து விட்டு அவர்கள் உடல்கள் மேல எழத் தொடங்கியது.  உடனே கையில் ஒரு கிளையைப் பற்றிக் கொண்டு உடலை இழுத்துக் கொண்டு கீழே வந்தார்கள்.

”திண்டு மேலே செல்வது எளிதாக இருக்கிறது.  கீழே வருவது தான் கடினமாக இருக்கிறது.  நாம் இப்படி கிளை பற்றிக் கொணடு கீழே வராமல் அப்படியே கையை விட்டு மேலே சென்றால் எவ்வளவு தூரம் செல்வோம்? சென்று பார்க்கலாமா?” என்று கேட்டான் முத்து.

”வேண்டாம் முத்து”.  திண்டு மேலே பார்த்தான்.  ஒரு சிறிய ஒற்றை மரம் மலையின் உச்சி போல அந்த காட்டின் உச்சியில் மிதந்து கொண்டிருந்தது.  அதன் வேர்கள் மிக நீண்டு வந்து மண்ணில் இணைந்திருந்தது.

”மேலே அந்த ஒற்றை மரத்தைக் கடந்து அப்பால் சென்று விட்டால் நாம் மீண்டும் கீழே வரவே முடியாது.  அப்படியே போய் விட வாய்ப்பிருக்கிறது” என்றான் திண்டு.

”ஏன்?”

”ஏனா?..அதன் பிறகு எதைப் பற்றிக் கொண்டு கீழே வருவது?”

”அந்த மரம் மட்டும் இருக்கிறது?”

”இதென்ன கேள்வி முத்து? மரத்தை வேர் மண்ணுடன் பிணைத்திருக்கிறதே!”

”ஆமாம் திண்டு.  எனில் நாம் மேலே செல்ல வேண்டாம்.  இந்த காட்டை எப்படி கடப்பது?” 

”நாம் நன்கு கீழே சென்று விடுவோம்.  பிறகு இந்த மரங்களின் வேர்களைப் பற்றிக் கொண்டே இந்தக் காட்டைக் கடப்போம்” என்றான் திண்டு.

இருவரும் கிளைகளையும் பின் அடி மரத்தையும் பிறகு வேர்களையும் பற்றி தங்களைத் தாங்களே இழுத்துக் கொண்டு கீழே வந்தார்கள்.

பிறகு மரங்களின் வேர்களை மாறி மாறி பற்றி நகரத் தொடங்கினார்கள்.  வெவ்வேறு மரங்களின் வேர்களைப் பற்றி அப்படிச் சென்றபோது திண்டு முத்துவிற்கு எந்த மரத்தின் வேரைப் பற்ற வேண்டும் எந்த மரத்தின் வேரைப் பற்றக் கூடாது என்பதைச் சொல்லிக் கொண்டே வந்தான்.

”அந்த மரத்தின் வேரைப் பற்ற வேண்டாம் முத்து”

”ஏன் திண்டு?”

”சிறிய மரம் அது…பார் மேலே உயரத்தில் இருக்கிறது.  வேர் மெல்லியதாக இருக்கிறது அறுந்து விட வாய்ப்புள்ளது” 

”ஆமாம் திண்டு…நல்லவேளை சொன்னாய் இல்லாவிட்டால் பட்டத்துடன் பறந்து சென்றுவிட்ட பரந்தாமனைப் போல என் நிலைமை ஆகிவிடும்” என்றான் முத்து.

”பட்டத்துடன் பறந்து சென்ற பரந்தாமனா?

”ஆம்…திண்டு …உனக்குத் தெரியாதா? ..நம் ஊரில் பல ஆண்டுகள் முன்பு பரந்தாமன் என்ற சிறுவன் இருந்தான்.  அவன் ஒருமுறை பக்கத்து ஊருக்குப் பட்டம் விடச் சென்றான்.  அவன் ஒரு பெரிய பட்டத்தை பறக்க விட முயன்றான்.  அது பறந்தபோது கயிற்றைப் பிடித்துக் கொண்டிருந்த அவனையும் அப்படியே தூக்கிச் சென்று விட்டது”

”அவன் கையை விட்டிருக்க வேண்டியது தானே முத்து?”

”விட்டிருப்பான்.  அதற்குள் அதிக உயரம் சென்று விட்டான்.  பிறகு கையை விட்டால் கீழே விழுந்து விடுவோம் என்று பயந்து கையை விடாமல் சென்றான்” என்றான் முத்து.

”பிறகு?”

”அவன் அப்படியே பறந்து வேறு ஒரு நாட்டிற்குச் சென்று விட்டான்.  அங்கு காற்று சற்று குறைந்த போது பட்டம் சற்று கீழிறங்கி ஒரு பெரிய குளத்திற்கு மேலாகப் பறந்து சென்றது.  அவன் கயிற்றை விட்டு விட்டு குளத்தில் விழுந்தான்.  அந்த குளம் அந்த நாட்டு மக்களால் மிகவும் புனிதமானதாக கருதப்பட்டது.  அந்த குளத்தில் புனித நீராடிக் கொண்டிருந்த மக்கள் அவன் வானிலிருந்து குளத்தில் விழுந்ததைப் பார்த்தனர்.  ஆனால் யாரும் அவன் வந்த பட்டத்தைப் பார்க்கவில்லை.”

”ம்”

”அவனை வானில் இருந்து புனித குளத்தில் இறங்கிய கடவுளின் குழந்தையாக அந்த நாட்டு மக்கள் கருதினர்” என்றான் முத்து

”சுவராசியமாக இருக்கிறது” என்றான் திண்டு.

”அந்த பெரிய குளத்தில் விழுந்து நீந்தித் தவித்த அவனை மக்களில் சிலர் நீந்திச் சென்று கரைக்கு மீட்டு வந்தனர்.

நீ யார் தம்பி? வானில் இருந்து விழுந்தாயே எப்படி? என்று மக்களில் ஒருவர் அவனிடம் கேட்டார்.  மிகவும் களைத்து மூச்சுத் திணறிக் கொண்டிருந்த அவன் ”கடவுள் காப்பாற்றினார்” எனத் தொடங்கி தன்னைப் பற்றி சொல்ல நினைத்து ”கடவுள்…..” என்றான்.  பிறகு களைப்பால் ”கடவுள்…கடவுள்” என்று மட்டும் சொல்லி மயக்கம் அடைந்தான்.

அவன் கண் விழித்த போது ஒரு மாளிகையின் மஞ்சத்தில் படுத்திருந்தான்.  அந்த நாட்டின் அரசரும் அரசியும் மந்திரிகளும் அவன் எதிரில் கை கூப்பி வணங்கி நின்றனர்.  அவன் என்ன என்று புரிந்து கொள்வதற்கு முன்னால் ”ஓய்வெடுங்கள் கடவுளின் குழந்தையே….இந்த மாளிகையை தங்களின் வசிப்பிடமாக ஏற்று இந்த ஏழை அரசனுக்கு அருள் புரியுங்கள்” என்றார் அரசர்.  முத்து கதையை சொல்லி முடித்தான்.

‘ஹஹஹஹ” முத்து சிரித்தான்.

”இந்த கதையை யார் உனக்கு சொன்னார்கள் முத்து?” என்று திண்டு கேட்டான்.

”என் அம்மா தான் சொன்னார்.  ஆனால் இது கதையல்ல உண்மையிலேயே நடந்தது” என்றான் முத்து.

”ஆனால் நம் ஊரில் இந்த பரந்தாமன் கதையை வேறு யாரும் சொல்லி நான் கேள்விப்பட்டதே இல்லையே..  உன் அம்மா எப்போது இதை உனக்குச் சொன்னார்கள்?” என்று கேட்டான் திண்டு.

”அதுவா? நான் ஒருமுறை பட்டம் விடுவதற்காக தனியாக வெளியே செல்ல வேண்டும் என்று கேட்டேன்.  அப்போது அம்மா தனியாக பட்டம் விட செல்லக் கூடாது என்று சொன்னார்.  அப்போது தான் இந்த வரலாற்றையும் கூறினார்.” என்றான் முத்து.

(மேலும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *