திண்டுவின் பயணங்கள் 25

மிதக்கும் வனத்தைக் கடந்து வெகு தொலைவுக்கு சென்றுவிட்டிருந்தார்கள் திண்டுவும் முத்துவும்.  சமநிலம்.  நீல நிறமும் சிவப்பு நிறமும் கலந்த மண்.  நீண்ட பயணத்தின் விளைவாக இருவரது காலணிகளும் தேய்ந்து அவற்றில் ஓட்டைகள் விழுந்து விட்டன.  அதன் வழியாக மண் காலில் வெப்பத்துடன் மெதுவாகச் சுட்டது.  யுரேனசின் அக சூரியன் வானில் கீழிறங்கி அதிகபட்ச வெப்பத்தையையும் ஒளியையும் பொழிந்து கொண்டிருந்தது.  இருவருமே களைப்படைந்திருந்தனர்.

”திண்டு….என்னால் நடக்க முடியவில்லை” என்றான் முத்து.

”சரி முத்து…நாம் ஓய்வு எடுத்துக் கொள்வோம்” என்றான் திண்டு்.  இருவரும் அவர்களுக்கு சற்று தொலைவில் இருந்த பெரிய நீல வைர மரத்தின் அடியில் சென்று அமர்ந்தார்கள்.  அந்த மரத்தின் அடி மரமும் கிளைகளும் இலைகளும் நீல நிறத்தில் இருந்தன.  இலை அடர்வுகளுக்கு நடுவே சிறு மலர்கள் வைரத்தின் துளிகள் போல ஒளி வீசின.

திண்டுவும் முத்துவும் மரத்தின் அடியில் படுத்துக் கொண்டனர்.  திண்டு மரத்தின் கிளைகளையும் இலைகளையும் மலர்களையும் பார்த்தான்.  மரத்தில் பறவைகளோ வேறு உயிர்களோ எதுவும் இல்லை.  நீல மரத்தின் பின்னால் வானம் பச்சை நிறத்தில் இருந்தது.  அதன் நடுவே இருந்த சூரியனின் ஒளி மரத்தின் இலைகளால் சிதறி பல குட்டி சூரியன்கள் இருப்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியது.

”பச்சை வானில் சூரியன்….கண்றாவியாக இருக்கிறது” என்றான் முத்து.

திண்டுவுக்கு சிரிப்பு வந்து விட்டது.  ”இதுவும் ஒருவிதத்தில் நன்றாகத் தான் இருக்கிறது முத்து” என்றான் அவன்.

”உனக்கு எல்லாமே நன்றாக இருப்பதாகத் தான் தோன்றும் திண்டு.  இதோ பார்…மரத்தில் இருக்க வேண்டிய நிறம் வானில் இருக்கிறது.  வானில் இருக்க வேண்டிய நிறம் மரத்தில் இருக்கிறது.  நம் பூமியில் நீல வானில் வெண் மேகங்களுக்கு இடையே சூரியன் செல்வது காண்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கும்” என்றான் முத்து.

”ஆம் முத்து.  அது இயற்கையின் உலகு.  இது செயற்கையின் உலகு” என்றான் திண்டு.

யுரேனசின் அக உலகம் உருவாக்கப்பட்ட வரலாற்றை ஆசிரியர் வகுப்பில் சொன்னதை திண்டு நினைவு கூர்ந்தான்.

ஆசிரியர் சொன்னார்:

“நீண்ட காலம் முன்பு பூமிக் கோளில் பேராற்றால் மிக்க மனிதர்கள் சிலர் இருந்தார்கள்.  அவர்களைச் சுற்றி வாழ்ந்த ஏராளமான சக மனிதர்களைப் போல அவர்கள் முட்டாள்கள் அல்ல.  அவர்களின் விழைவுகள் பூமியைக் கடந்து விண் நோக்கி விரிந்தது.  மற்ற மனிதர்களுக்குத் தெரியாமல் அவர்கள் தங்கள் ஆராய்ச்சிகளையும் முயற்சிகளையும் செய்து கொண்டிருந்தார்கள்.  அவர்கள் தான் முதன் முதலில் யுரேனசுக்கு வந்தார்கள்.  மாபெரும் இயற்கை உலகான யுரேனஸ் நான் ஏற்கனவே சொன்னது போல எந்த வகையிலும் உயிர் வாழ்க்கைக்கு ஆதரவு அளிப்பதல்ல.  எனினும் அவர்கள் அதை ஒரு பெரும் சவாலாக எடுத்துக் கொண்டார்கள்.  

யோசித்துப் பாருங்கள் இந்த மாபெரும் பனிக்கோளத்தைத் துளைத்து அதன் ஆழத்திற்கு சென்று தாங்கள் வாழ்வதற்கு என்று ஒரு உலகையே உருவாக்குவது என்றால் எவ்வளவு அசாத்தியமான ஒன்று….அக்காலத்தில் பூமியில் வாழ்ந்த பிற மனிதர்கள் கற்பனை கூட செய்ய முடியாது.  

யுரேனஸ் கோளின் மையத்தில் மிகப் பெரிய வெற்றிடம் இருக்கிறது என்ற விஞ்ஞானி ரிச்சர்டின் கண்டுபிடிப்பு அதற்கு முதற்படியாக அமைந்தது.  விஞ்ஞானி ரிச்சர்டும் மாபெரும் விஞ்ஞானி ரொனால்டோ ட்ரம்பும் நண்பர்கள்.  அவர்கள் குழுதான் பூமியிலிருந்து பெரும் முயற்சி செய்து யுரேனஸை வந்தடைந்தது.  ரொனால்டோ டிரம்ப் விஞ்ஞானிகள் குழுவின் தலைவராக இருந்தார்.  அவர் விஞ்ஞானி மட்டுமல்ல.  மிகத் திறமையும் பேராவலும் வாய்ந்த நிர்வாகியும் கூட.

துவக்கத்தில் அவருடன் கூட வந்தவர்களில் பலருக்கு யுரேனசிலும் பிற கோள்களிலும் கிடைக்கும் விலைமதிப்பற்ற பொருட்களை பூமிக்கு கொண்டு சென்றால் போதும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.  அவற்றைக் கொண்டு அவர்கள் பூமியில் பெரும் செல்வந்தர்கள் ஆகி விடமுடியும்.  ஆனால் டிரப்பின் கனவு மிகப் பெரியதாக இருந்தது.  அவர் அதை அவர்கள் யாரிடமும் முதலில் வெளிப்படுத்தவில்லை.

யுரேனசின் ஆழத்தில் இருக்கும் வெற்றிடத்தில் ஈர்ப்பு விசை தலைகீழாக இருப்பதையும் ரிச்சர்ட் கண்டறிந்தார்.  தலைகீழ் ஈர்ப்பு விசை அல்லது மையத்தில் இருந்து விலக்கும் விசை.  அந்த விசை தான் சுற்றிலும் இருக்கும் மண் மையம் நோக்கி சரியாமல் தடுத்து வைத்திருக்கிறது.

இருண்ட அந்த வெற்றிடத்தில் ஒரு பெரும் உலகை உருவாக்கும் ஆசை ட்ரப்புக்குத் தோன்றியது.  அதுவே அவர் இலட்சியக் கனவாகவும் ஆனது.  ரிச்சர்ட் அதற்கு உடன்படவில்லை.  நண்பர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.  ட்ரம்பின் உயிர் நண்பரான ரிச்சர்ட் சில காலத்திற்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டார்.  அது ட்ரம்ப்பை மிகவும் பாதித்தாலும் அவர் தன் கனவை கைவிடாமல் தொடர்ந்தார்.

அத்தனை எளிய காரியமல்லவே அது.  மேலிருந்து பெரும் பனி அடுக்குகளை துளைத்து உள்ளே வர வேண்டும்.  பிறகு நீர்கடலை கடந்து மேலும் கீழே வர வேண்டும்.  அதற்கும் கீழே மண்ணைத் துளைத்து வந்து மையத்தை அடைய வேண்டும்.  எவ்வளவு தூரம்! எவ்வளவு கடினம்!

இவற்றையெல்லாம் செய்து கீழே வந்தாலும் இருப்பது மாபெரும் இருண்ட வெற்றிடம் …..அங்கு என்னவெல்லாம் இருக்கும் என்பதும் தெரியாது.  ஆனால் ட்ரம்ப் அந்த சவாலை மேற்கொண்டார்.  யுரேனசின் மேற்பரப்பில் மனிதர்கள் வாழத்தக்க தாற்காலிக இருப்பிடங்களை, மனிதர்களுக்கு உகந்த தட்பவெப்பம் அமைக்கப்பட்ட காற்று அடைக்கப்பட்ட கட்டிடங்களை உருவாக்கினார்.  அவற்றில் இருந்து கொண்டு அவர்கள் தங்கள் பணியைத் துவக்கினர்.

அக்காலத்தில் பூமியில் இருந்த அரசர்கள் எவரும் இந்த திட்டத்தை இதைப் புரிந்து கொள்ளக்கூடியவர்கள் அல்ல.  ஆனால் மிகப்பெரிய அளவில் செல்வமும் மனிதர்களின் உழைப்பும் இல்லாமல் இதை நிறைவேற்ற முடியாது.  பூமிக்கும் யுரேனசுக்குமான தொலைவின் பயண நேரமே மிகவும் நீண்டதாக அன்று இருந்தது.  அந்த நேரத்தை குறைக்க அதிவேக விண் ஊர்திகளைத் தயாரிக்க வேண்டி இருந்தது.  

யுரேனசில் பணியைத் துவக்கும் முன் அதன் பொருட்டு அதைவிட பல மடங்கு பணிகளை பூமியில் செய்ய வேண்டி இருந்தது.  அதுவும் எந்த நாட்டின் அரசுக்கும் மக்களுக்கும் தெரியாமல்.  ட்ரம்ப் தனக்கான மனிதர்களைக் கண்டடைந்தார்.  அவர்கள் பூமிக்கும் யுரேனசுக்கும் இடையில் தொடர்ந்து பயணித்து தம் பணிகளை மேற்கொண்டனர்.  பூமியில் அவர்களது மனிதர்கள் காடுகளில் செயல்பட்டனர்.  காட்டில் வாழ்ந்த மனிதர்களையும் வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்த மனிதர்களையும் பிடித்து பயிற்றுவித்தனர்.  அவ்வாறு பயிற்றுவிக்கப்பட்ட மனிதர்கள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கான செயல்திட்டங்கள் தரப்பட்டன.  முதன்மையாக இரண்டு பிரிவுகள்.  ஒரு பிரிவு மனிதர்களைப் பிடித்து யுரேனசுக்கு அனுப்பிக் கொண்டிருந்தது.  மற்றொரு பிரிவு பூமியில் இத்திட்டதிற்கு தேவையான செல்வத்தை திரட்டிக் கொண்டிருந்தது.  அப்படி செல்வம் திரட்டிக் கொண்டிருந்தவர்களை மற்ற அரசுகளும் மக்களும் ”கொள்ளையர்கள்” என்று முட்டாள்த்தனமாக அழைத்தனர்”

திண்டு அப்போது குறுக்கிட்டான். ”கொள்ளையர்கள் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பார்கள்? அவர்கள் முறையான வழியிலா பொருள் சேர்த்தார்கள்? மக்களைக் கொன்று அவர்களது பொருட்களைக் பிடுங்கிக் கொண்டார்கள்” என்றான்.

”கொள்ளையர்கள் என்று சொல்வது தவறு.  நீ அறியாமையில் பேசுகிறாய்.  அறிவற்ற அந்த மக்களிடம் வேறு வழிகளைக் கையாள முடியாது” என்றார் ஆசிரியர்

மரத்தடியில் புரண்டு படுத்த முத்து ”என்ன திண்டு ஏதோ யோசித்துக் கொண்டிருக்கிறாய்?” என்றான்.

”ஒன்றுமில்லை முத்து.  ஆசிரியர் வகுப்பில் சொன்னவற்றை நினைத்துக் கொண்டிருந்தேன்” என்றான் திண்டு.

”ம்….யாரோ ஒரு பேராசை மிக்க மடையன் ….அந்த ட்ரம்பை பெரிய மேதை என்றும் சாதனையாளன் என்றும் இந்த மூடர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்” என்றான் முத்து.

திண்டு எதுவும் சொல்லவில்லை.

சற்று நேரத்தில் இருவரும் உறங்கி விட்டார்கள்.

—–

கனசேகரனும் தினசேகரனும் துறவிகள் போல மாறுவேடத்தில் இருந்தார்கள்.  பாலூர் என்னும் கிராமத்தின் தலைவரின் வீட்டுத் திண்ணையில் அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.  கிராம மக்கள் சிலர் அவர்களைச் சுற்றி குழுமி இருந்தனர்.

ஒரு இளைஞனின் கையைப் பற்றி தன் இரு கைகளுக்குள்ளும் வைத்துக் கொண்டு கண்ணை மூடி இருந்தார் கனசேகரன்.  அவர் தியானம் செய்வது போல காண்பித்துக் கொண்டார்.  பிறகு அந்த இளைஞனின் கையை விட்டார்.

”தம்பி….உனக்கு வாழ்க்கையில் கொஞ்சம் கூட நிலா வெளிச்சம் அருளப்படவில்லையா?” என்று கேட்டார்.

கனசேகரனின் அந்த கேள்வி அந்த இளைஞனுக்குப் புரியவில்லை.

”மன்னிக்க வேண்டும் அய்யா.  நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை.  நிலா வெளிச்சம் அருளப்படுவது என்றால் என்ன?” 

”தம்பி….இறைவனின் அருள் மண்ணுலகின் மீது நிலா வெளிச்சமாகத்தான் பொழியப்படுகிறது.  ஒருவனின் வாழ்வில் வரும் இனிமையான மகிழ்ச்சியான தருணங்களையே நான் நிலா வெளிச்சம் என்கிறேன்” என்றார் கனசேகரன்.

”அப்படியானால் சூரிய வெளிச்சம்…” என்றார் சீடன் வேடத்தில் இருந்த தினசேகரன்.

”மூடனே…நான் பேசும் போது குறுக்கிடாதே என்று எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன்” என்று கோபமாக சொன்னார் கனசேகரன்.

”மன்னிக்க வேண்டும் குருவே” என்றார் தினசேகரன்.

”நீ சொல் தம்பி…உனக்கு வாழ்க்கையில் இதுவரையில் எப்போதுமே மகிழ்ச்சி கிடைக்கவில்லையா? உண்மையைச் சொல்” என்றார்.

”அப்படி ஒரேடியாக சொல்லிவிட முடியாது அய்யா….என் வாழ்க்கையிலும் மிக மிக கொஞ்சகாலம் இனிமையானதாக இருந்திருக்கிறது” என்றான் அவன்.

”ஆம்..  அப்படித்தான் இருக்கும்.  இந்த பூமியில் தம் வாழ்வில் கொஞ்சம் கூட இனிமையை உணராத உயிர்கள் எதுவும் இல்லை” என்றார் கனசேகரன்.

”ஆனால் என் வாழ்க்கையில் துயரங்களே மிகுதி.  இப்போதும் கூட என் வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கிறது.  இன்று நான் வறுமையில் உழல்கிறேன்.  என் வேலைக்கு மிகவும் சொற்ப சம்பளமே கிடைக்கிறது” என்றான் அவன்.

கனசேகரனுக்கும் அவனைப் பார்க்க பாவமாக இருந்தது.  ”தம்பி….நீ சற்றுபொறு…உனக்கு இன்னும் சில நாட்களில் நல்ல வழி பிறக்கும்” என்றார்.  பிறகு ”என் சீடன் சூரிய வெளிச்சம் பற்றிக் குறிப்பிட்டான் அல்லவா? அது பற்றி சொல்கிறேன்.  நிலா வெளிச்சம் இறைவனின் அருள் என்பதைப் போல சூரிய வெளிச்சம் இறைவனின் நிர்வாக நடவடிக்கை.  அப்போது அவர் கடமை உணர்வுடன் கடுமையாக செயல்படுவார்.  அப்படி செயல்படும்போது சில சமயம் கொடுமையானவராகவும் ஏன் கெட்டவராகவும் கூட செயல்படுவார்” என்றார்.

கிராம மக்கள் வியந்தனர்.  ”என்ன? இறைவன் கெட்டவராக செயல்படுவாரா?” என்று ஒருவர் கேட்டார்.

”அதில் என்ன சந்தேகம்?….இறைவன் பகலில் சற்று கெட்டவராகவும் இரவில் நல்லவராகவும் செயல்படுவார்” என்றார் கனசேகரன்.

”நீங்கள் சொல்வதெல்லாம் எந்த சமய நூலில் உள்ளது?” என்று வெறொருவர் கேட்டார்.

”எந்த சமய நூலும் தேவையில்லை.  யாம் யாவற்றையும் அறிவோம்.  நான் சொன்னவை சரிதான் என்று நீங்களும் அனுபவத்தில் அறிவீர்கள்” என்றார் கனசேகரன்.

”உண்மையான முனிவர்கள் இப்படியெல்லாம் சொல்ல மாட்டார்கள்” என்றார் அந்த நபர்.

கனசேகரன் கோபமடைந்தார்.  ”நீ எத்தனை உண்மை முனிவர்களை பார்த்திருக்கிறாய்? மூடனே என்னை சோதித்துப்பார்க்க ஆசைப்படுகிறாயா? சொல்….என்பிலதனை வெயில் போல சூரிய வெளிச்சம் எப்போதும் உன்னைக் காயும் படி செய்வேன் பார்கிறாயா?” என்றார்.

அந்த நபர் மிகவும் பயந்து விட்டார்.  ”என்னை மன்னித்துவிடுங்கள் முனிவரே” என்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

அன்று இரவு கனசேகரனும் தினசேகரனும் அந்த கிராமத்தை விட்டு புறப்பட்டனர்.  அங்கிருந்து புறப்படும் போது கிராமத் தலைவரிடம் அந்த ஏழை இளைஞனுக்கு நல்ல வேலை ஒன்றைப் பெற்றுத்தருமாறு கனசேகரன் கேட்டார்.  அவனுக்கு அந்த கிராமத்தில் உள்ள வாய்ப்புகள் குறைவு என்று கிராமத் தலைவர் கூறினார்.

உடனே கனசேகரன் மணிவாசகத்திற்கு அந்த இளைஞனுக்கு நல்ல பணி அளிக்குமாறு வேண்டுகோள் செய்து ஓலை எழுதினார்.  அதை அந்த இளைஞனிடம் கொடுத்துவிட்டு தனசேகரனுடன் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

(மேலும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *