நாஞ்சில் நாடனின் இச்சிறுகதை தொகுப்பு 2021 டிசம்பர் முதல் 2023 ஏப்ரல் வரை பல்வேறு இணைய இதழ்கள், இலக்கிய மாத இதழ்களில் வெளியானவை. இச்சிறுகதைகள் தொடர்போன்றே எழுதப்பட்டது.
இடதோ ,வலதோ இல்லை கடவுள் நம்பிக்கை பொதுவானது , நாட்டார் வழக்கில் கும்ப முனியையும், தவசிப்பிள்ளை கண்ணுப்பிள்ளையும் , தமிழாசிரியர் சோணாசலத்தை இணைத்து மாபெரும் யாகமாக நல்ல தமிழில் எழுதியும், நாஞ்சில் வட்டார வழக்கில் பகடியாக தன்மொழி வளத்தால் மதிப்பீட்டில் பெரும் சவாலாக கலக்குபவை. பகடியாக வெளிப்படும் சொற்கள் நிச்சயம் வீரியத்தை இழக்காமல் இருமுறைகளிலும் தன் பாயச்சலை நிறுத்தாமல் பாய்கிறது. சிறுகதைகளில் இருக்கும் கட்டுகோப்புகள் பெரும்பாலும் இவ்வகை கதைகளில் காண முடியாது. ஆரம்பமும் மையமும் முடிவும் இருந்தாலும் அவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். முக்கியமாக அவரே அவரை வைது கொள்வதும் பாராட்டும் வகையில் பகடியால் மனவருத்தத்தை , கசப்பை , மகிழ்ச்சியை இக்கதைகளில் விரித்து வைக்கிறார்.
கட்டன் சாயாவில் ஆரம்பிக்கும் உரையாடல்கள் நாட்டு நடப்பை, அரசியல் போக்கை , நடுவன் அரசையும் போகிற போக்கில் விமர்சனங்களால் நேரிடையாகவும் மறைமுகமாகவும் குத்திக் காட்டுவதில் முதன்மையாவை. வயிறு வலிக்க சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் செய்யும்.
தமிழ் சொற்களை கையாளுவதிலும் அறிமுகப்படுத்துவதிலும். இது நல்ல உத்தி. சங்கால பாடல்கள் , திருக்குறள் , பன்னிருதிருமுறை போன்றவைகளிலிருந்தும் எடுத்து கையாண்டு இப்படியும் தமிழ் சொற்களை அதிகம் பயன்படுத்த வேண்டுமென வலியுறுத்த எழுதப்பட்டவை.
பரம் எவ்விடம்.?
கடவுள் இருக்கிறாரா? கனகலிங்கத்திற்கு ஏற்பட்ட மனமயக்கத்தால் செய்யக்கூடாததை செய்ததால் வீட்டை விட்டு வெளியேறும் சூழல் அமைந்ததில் அனுபவ உண்மையினால் முப்பிடாரி அம்மன் கோயில் படிப்புரை வாசம் , நிகழும் நிகழ்வுகளால் கனகலிங்க சித்தர் உருவாகிறார், சித்தர் பாடல்களினாலும் வாக்குவன்மையாலும் சித்தராக மாறுவாரா?
- இடமோ, வலமோ
பெற்ற, வளர்த்த தகப்பனை மறதி நோயுள்ளவனை எங்கோ திரும்பி வரத் தெரியாத இடத்தில் நிர்கதியாக விட்டுவிட்டு போவதை சொல்லும் கதை. பெயர் தெரியாத ஊரில் மறதியால் நடந்து பசியால் ஊர் கடைசியில் சுடுகாட்டில் கிடைக்கும் தேங்காயை சாப்பிட வேண்டிய சூழலை அடையும் நபரை சுடலை மாடன் ஆட்கொண்டானா?
சுடுகாட்டு குழிகளை முற்படுத்தப்பட்ட , நடுபடுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட, எனச் சொல்லி எதிர்காலத்தில் காந்தீய ,திராவிட, சாநாதன உண்டாகலாம் என்ற புனைவை முன்வைத்த திரிகால முனியின் வாக்காக எடுத்துக் கொள்வோம். தோங்காய் தின்று பசி போக்கிய பின்பு தூங்கும் வயதானவரை என்ன செய்யலாம் யோசித்தவர் சுடலைமாடனிடம் அவ்வாய்ப்பை வழங்கி விடுகிறார். சவம் என்ன செய்யுதுன்னு பாக்கலாம் என்ற ஆர்வம்.
- கை இரண்டு போதாது காண்
உண்மையில் இத்தொகுப்பில் உள்ள கதைகளில் இதுவே சிறந்தது என முடிவுக்கு வரலாம். பகடியின் உச்சமாக எழுத்தையும் எழுத்தாளரைப் பற்றிய பதிவு.
முருங்கை மரத்திற்கு யூரியா உரம் போடும் கும்பமுனி எழுதுவோரை
“அந்த ரோகம் வந்தா செணம் போகாதுவே , சவம், செரங்கு மாதிறில்லா ! ….. சொறிஞ்சிகிட்டே இருக்க சொல்லுமே
இதுவொரு ஒட்டுவார் ஒட்டியாக்கும் நம்மளையும் பொறவு அண்டி ஒச்சு இருக்க விடாது.
கண்ணுபிள்ளே கவிதை எழுத புனைபெயர் வைக்க, எழுத்தாளாராகி பாரத் பெல்லே ஷிப் கிடைத்தால் என்ன தான் ஆகும் இக்கதையில் குலுங்கி குலுங்கி சிரித்து வயிறு வலிக்க படிக்கலாம். மொளச்ச மசிரு எல்லாம் விசம்யா உமக்கு என்று முடிக்கிறார்.
- சாய் சம்மேளனம்.
மத்திய அரசிமிருந்து தேநீர் விருந்திற்காக வரும் கடிதத்தை வைத்து கும்பமுனியும் கண்ணுப்பிள்ளையும் அடிக்கும் கூத்தை ரசித்து சிரிக்கலாம்.
கும்பமுனி பின்நவீனத்துவ நிஷ்டையில் ஆழ்ந்தார் , பழையாறு விஸ்கியாக பாய்ந்தாலும் நாய் நக்கித்தானே குடிக்க வேணும். வரிகள் நம்மை பிரமிக்குள்ளாக்குவது நிச்சயம்.
- அழக்கொண்ட எல்லாம் தொழப்போம்
தமிழாசிரியர் சோணாசலம் கலக்கும் கதை நிற்க.
நகராட்சியில் வரிகட்ட வரிசையில் நிற்க அப்போது நிகழும் நிகழ்வுளை நகைச்சுவையாக சொல்லி நம்மையும் தயார்படுத்துகிறார் அது உண்மையும் கூட , சாலைகள், தெருக்களின் அவலத்தையும் உவத்தல் என்ற தமிழ் வார்த்தைக்கு கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
- நகக்குறி, பற்குறி, மயிர் குறி.
கும்பமுனியின் கற்பனாவாதம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுவதை கண்டிக்கிறார் கண்ணுபிள்ளை.
மயிர் என்னும் தமிழ் வார்த்தையை கொண்டு , உள்குத்தொன்றை வைத்து செய்து காட்டியது எதற்கு என்ற கேள்வி மிஞ்சுகிறது. அது எதற்கு உவமையாக காட்டியுள்ளார் தெரிந்தவர்கள் சொல்லலாம்.
- அவரவர் கைவிடம்.
- எவரெவர் கைவிடம்.
சோணாசலம் (நாஞ்சிலார்)புகுந்து விளையாடிய களம், அடுக்கக வியாபார ஸ்தலங்களில் நடக்கும் சம்பவத்தை அடிபடையாக கொண்டு புனையப்பட்டது . நிகழும் தில்லுமுல்லை தன் பாணியில் இரு சிறுகதையின் மூலம் விடத்தை (விஷம்) விடத்தினாலே நேர் செய்கிறார்.
- சாப்பிள்ளை
கவிஞருக்கு வரும் திருமணப்பத்திரிக்கையும், அதற்காக எடுக்கும் நடவடிக்கையும்
கடைசியில் தீர்வாக தீர்ப்பை நம்மிடம் விட்டுவிட்டார்.
- நன்றே செய்வாய்,பிழை செய்வாய்
தவசிப்பிள்ளை குடுத்த கட்டன் சாயா குடிக்க இருந்தபோது கவிதைத் தொகுப்பை வெளியிட விரும்பும் பெண்மணியின் கோரிக்கையை நிறைவேற இருவரும் கலந்தாய்வதை பாகடியாக விவரிக்கிறார்.
- அரக்கரும் குரக்கினமும்
கைக்கெட்டும் தூரத்தில் கிடந்த அலைபேசி ஓங்கி ஒலித்தது. சிலரின் அழைப்போசை கானக் குயிலோசையாகவும் சிலரின் அழைப்போசை ‘கொல்றான்டோ, கொல்றாண்டோ’ என்றும் ஒலிப்பதன் மர்மம் என்னவாக இருக்கும்?
இப்படி துவங்கும் இச்சிறுகதை பொது நல நோக்கோடு சோணாசலம், கும்ப முனி, தவசிப்பிள்ளை இல்லாமல் சொல்லப்பட்ட கதை.
- ஈயார் தேட்டை
திருநளினம் விருதை புனைவாக (உண்மையாக இருக்குமோ வேறு பெயரில்) பெறுவதற்காக கும்ப முனியும், தவசிப்பிள்ளையும் உரையாடலின் வழியே அவர் சிரிக்காமல் நம்மிடையே புன்னகையுடன் படிக்கவைக்கிறார்.
புத்தகம் கிடைத்தவன் படிப்பானா?
- படையும் பாடையும்.
சாலைகளின் துயரநிலையும் நாம் படும் அவதியையும் சோணாசலம் அனுபவித்து விவரித்தலினுடே குறுகிய தெருவில் சீறிப் பாயும் வாகனமும் எதிர்த்து கேட்டால் நமக்கு கிடைக்கும் வசனமும்.
- ஓடும் தேர் நிலையில் நிற்கும்.
27.823 எண்ணிக்கை தான் வாழ்ந்த நாட்களை கணக்கிட்டு வாழும் வரை மரணபயமின்றி வாழ முன்னோடியை சந்திக்குமிடம் . தேர் நிலைக்கு வரும் நேரம் வரும் அப்போ பாத்துக்கலாம் என்கிறார்.
- ஆராம்புள்ளி ஆத்தாவும் அகில நாயகியும்.
எழுத்தாளர் நாகராஜன் எழுதியது போல மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்ற வாசகமே நினைவிலாடியது . ஆத்தாள் நின்று பார்த்தவன்னமே இருப்பாளா?
தெய்வம் துணை நிற்குமா?.
மொத்தமாக கட்டுரை எழுத முடியாத அளவுக்கு மிகச் சிறப்பான கதைகள் அதனாலேயே ஒவ்வொரு சிறுகதைக்கும் தனித்தனியே எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது கும்பமுனியும், தவசிப்பிள்ளையும் சோணாசலமும் பொறுத்தருள்க. மூவரும் ஒருவரே என்கிறார் நாஞ்சிலார்