6.நாஞ்சில் என்னும் மனிதர்

 

        நண்பர் இராயகிரி சங்கர், முன்னோடி எழுத்தாளர் நாஞ்சில் நாடன்    அவர்களுக்குத் தான் நடத்தி வருகின்ற “மயிர்“மின்னிதழ் மூலமாக ஒரு சிறப்பிதழ் கொண்டு வரும் தகவல் அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இதை அவர் சில மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்தார். காலம் இப்போது கனிந்து, நாஞ்சில் பிறந்த நாளான 31.12.2024 அன்ற அந்த சிறப்பிதழ் வெளிவரவுள்ள செய்தி இன்னும் கூடுதல் மகிழ்சிச்யை அளிக்கிறது. நாஞ்சிலுக்கு இது 77 வது பிறந்த நாள். தேசம் விடுதலை பெற்ற ஆண்டின் இறுதி நாளில் பிறந்தவர் அவர். இன்றைக்கும் 27 வயது இளைஞனைப் போல சுறுசுறுப்புடன், படைப்பூக்கத்துடன் இயங்கி வருகிறார். புத்தகத் திருவிழாக்ககளில், வெளியூர்களில் நடைபெறுகின்ற இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு பேசுகிறார். உயிர் எழுத்துக்கு கதை,கவிதை, கட்டுரைகள் எழுதுகிறார். இணைய இதழ்கள் நடத்துகின்ற நண்பர்கள் படைப்புகள் தேவைப்பட்டுக் கேட்டால் உடனே எழுதி, சொந்த செலவில் டைப் செய்து அனுப்புகிறார். அன்றாடம் அவர் வசிக்கின்ற கோவைப்புதுாரிலிருந்து பஸ் ஏறி உக்கடம் தாண்டி டவுன்ஹால் வந்து ராஜவீதியிலுள்ள விஜயா பதிப்பகம் சென்று, வேலாயுதம் அண்ணாச்சியுடன், அங்கு வந்து போகின்ற பிற எழுத்தாளர்களுடன், வாசகர்களுடன் உரையாடி மகிழ்கிறார். புதிய எழுத்தாளர்களின், புதிய புத்தகங்களின் வருகையை அறிந்து, வாங்கி வாசித்து, பிடித்திருந்தால் அவர்களுடைய எண்களைக் கஷ்டப்பட்டுத் தேடிக் கண்டடைந்து, பேசி உற்சாகப்படுத்துகிறார். இணையவழி சந்திப்புகளின் மூலம் கம்பராமாயணத்தை, மரபிலக்கியங்களைக்
குறித்து உரை நிகழ்த்துகிறார்.

             நானும் நாஞ்சிலும் அடிக்கடி மொபைல் மூலமாக உரையாடிக்கொள்வது வழக்கம். இத்தனை கதைகள் எழுதினேன், கட்டுரை-கவிதைகள் எழுதினேன், அவற்றைப் பிரதி எடுத்தேன், அனுப்பினேன்- இம்மாத உயிர் எழுத்தில் கதை வந்திருக்கிறது, தமிழினியில் கட்டுரை வந்திருக்கிறது- என்று தான் பேச்சைத் தொடங்குவார். அந்தப் பட்டியலைச் சொல்லி முடிக்க மட்டுமு் பத்து நிமிடங்கள் எடுத்துக்கொள்வார்.

       எல்லாவற்றையும் மூச்சு வாங்கச் சொல்லிவிட்டு “எதையாவது செஞ்சுக்கிட்டுக் கெடப்போம்“ என்று முடிப்பார். “இந்த எதையாவது செஞ்சுக்கிட்டுக் கெடப்பதுதான் எழுத்தாளனின் வேலை தம்பி, ஜாக்கிரதை“என்று அவர் என்னை எச்சரிப்பது போலவே நான் அதை எடுத்துக்கொள்வேன். கடந்த சில மாதங்களாக அவருடன் போனில் அடிக்கடி உரையாடுவதைக் குறைத்துக்கொண்டேன். காரணம்“ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன்“ என்பதைத் தவிர அவரிடம் அடுக்குவதற்கு என்னிடம் ஏதுமில்லை. ஒரு பக்கம் நாஞ்சில்-மறுபக்கம் ஜெயமோகன்-மற்றொரு பக்கம் சுரேஷ் பிரதீப் என்று எனக்குச் சவால்கள் காத்திருப்பது பிடித்திருக்கிறதுதான். ஆனாலும் ஏழு அத்தியாயம் ஐந்து அத்தியாயம் மூன்று அத்தியாயம் என்று எழுதி, தொடராமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கின்ற  நாவல்களின் எண்ணிக்கை ஆறு. எழுதி முடித்தும் பிரதி எடுக்காமல், இதழ்களுக்கு அனுப்பாமல் வைத்திருக்கின்ற கதைகளின் எண்ணிக்கை பத்து. இப்படி எல்லாம் சொல்லி, பெருமைப்பட்டுக்கொள்கிறாயா என்று நீங்கள் கேட்கலாம். என்னைவிட என் நண்பர்கள் (அவர்களும் எழுத்தாளர்கள்தான்) நான் இடர்பாடுகளின்றி எழுத வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்காக மெனக்கெடுகிறார்கள். இது நான் வாங்கி வந்த வரம். சாபம் என் இயலாமை. ஆனால் நாஞசிலுக்கு ஒரு சிறப்பிதழ் வருவதை அறிந்தவுடன் உட்கார்ந்து ஒரு கட்டுரை எழுதிவிட முடிகிறதல்லவா- அது படைப்பாளி உயிர்ப்புடன் இருப்பதற்கான அடையாளம்.

         நாஞ்சில் நாடனிடம் எனக்குப் பித்தமான அம்சங்கள் நிறைய இருக்கின்றன. அவரை நினைத்தவுடன் மனத்தில் தோன்றும் சித்திரம், அவருடைய கம்பீரமான உருவம். கொரோனா கொஞ்சம் அவரை இளைக்க வைத்திருக்கிறது. மற்றபடி அந்த கம்பீரத்துக்கு இன்றுவரை ஒரு குறைச்சலுமில்லை. அவருடைய Dressing sense  முக்கியமானது.  முழுக்கைச் சட்டையை insert செய்து, பெல்ட் பூட்டி, சாக்ஸ் அணிந்து, ஷூ போட்டு புன்னகையுடன் நடந்து வருகின்ற நாஞ்சில் நாடன், நுாறு கதாநாயகன்களைவிட மேல். Insert செய்யாமல் சாதாரணமாக சட்டையைத் தொங்கவிட்டுக்கொண்டு வருகின்ற, ஆடைகள் விஷயத்தில் அலட்சியம் காட்டுகின்ற நாஞ்சில்நாடனை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. தலை நரைக்குச் சாயம் பூசிக்கொள்ளாமல் எழுபத்தாறு வயதைக் கடந்திருக்கிறார். இந்த ஒப்பனை யுகத்தில் எனக்கு இதுவும் வியப்பாகத்தானிருக்கிறது.

           நாஞ்சிலின் உணவு ரசனை அவருடைய பால்யகாலக் கசப்பான நினைவுகளுடன் தொடர்புடையது. சிறுபிராயத்தில் உறவினர் வீட்டுப் பந்தியிலிருந்து பாதியில் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை அவர் நேரடிப் பேச்சிலும் எழுத்திலும் பலமுறை பதிவு செய்திருக்கிறார். அது ஒரு புனைவின் துயரக்காட்சியைப் போல என்னுள் ஆழமாகக் கிடக்கிறது. அப்பதின்ம வயதில் விரும்பிய உணவை, பண்டத்தைச் சுவைக்க முடியாமல் வறுமை வயப்பட்டிருப்பது கொடுமை. அது தீராத ஏக்கமாக மாறி வாழ்க்கையின் இறுதிவரை கூடவே பயணிக்கும் என்பதை நாஞ்சில் அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர். சாப்பாட்டு இலையில் ஒரு பருக்கையைக் கூட வீணாக்காமல் உண்ணும் நாஞ்சிலின் பழக்கத்துக்குப் பின்னே இருப்பது, அந்த இளமைக்கால அனுபவம் தான் என்று நான் கருதுகிறேன். அதேபோல தீனிவகைகளின் மேல் இன்றளவும் அவருக்குள்ள பிரியம், ஒரு முருக்கை எடுத்து அவர் கடிக்கும்போது வெளிப்படுகிறவர் முதிர்ந்த நாஞ்சில் நாடன் அல்ல- பத்து வயது வீரநாராயண மங்கலத்து சுப்பிரமணியன் என்கிற ஏக்கங்கள் நிறைந்த சிறுவன்தான்.

       மீனைப் பொரித்துக் குழம்பில் ஊற வைத்துச் சாப்பிடும் கல்கத்தா பிராமணர் பாணியையும், பச்சை மிளகாயைக் கடித்துக்கொண்டு “வடா பாவ்“ சாப்பிடும் மராட்டியர் வழக்கத்தையும் அவர் விவரிக்கும்போது, அந்தப் பதார்த்தங்களை நாமே சாப்பிட்டதைப் போன்ற உணர்வை ஏற்படுத்திவிடுவார். எந்த உணவையும் மறுதலிக்காமல் ஏற்றுக்கொண்டு உண்ணும் நாஞ்சில், “நாஞ்சில் நாட்டு உணவு“ என்னும் அவருடைய நீண்ட கால தயாரிப்புக் கொண்ட நுாலை 2024 சென்னை புத்தகக் காட்சியில் வெளியிடுகிறார். அது வெறும் சமையல் புத்தகமல்ல. பண்பாட்டு ஆவணம். “நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை“ என்கிற அவருடைய முன்வெளிவந்த நுாலின் தொடர்ச்சி.

“நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

உண்டி முதற்றே உணவின் பிண்டம்“

 என்று குடபுலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடிய பாடல் புறநானுாறில் இடம் பெற்றுள்ளது. இந்தப்பாடலையும்,

“மரம் கொல் தச்சன் கைவல் சிறாஅர்

மழுவுடைக் காட்டகத்து அற்றே-

எத்திசைச் செல்லினும் அத்திசைச்  சோறே“

என்கிற அவ்வை அதியமானுக்குப் பாடிய பாடலையும் எனக்குத் தன் கட்டுரைகளின் வழியே கற்றுக் கொடுத்தவர் நாஞ்சில்.

        இரண்டு தடவைகள் எங்கள் வீட்டில் நாஞ்சில் பிரியாணி சாப்பிட்டிருக்கிறார். ஸ்ரீராம் நகர் வீட்டில், பிரியாணி சமைத்து வைத்துவிட்டு, என் மனைவி ஒரு திருமணத்தில் கலந்து கொள்ளச் சென்று, சற்றுத் தாமதமாகத் திரும்பினார். பரிமாறும்போது பிரியாணி கொஞ்சம் ஆறிவிட்டிருந்தது, பொறுத்துக்கொண்டு சுவைத்துச் சாப்பிட்டார். இரண்டாவது தடவை இப்போதுள்ள தென்றல்நகர் வீட்டில், அன்றைக்கும் மட்டன் பிரியானிதான். ஆனால் அளவாகச் சாப்பிட்டார். இரண்டுமுறை கொரோனா பாதிப்புக்குள்ளாகி அவர் மீண்டிருந்த நேரம் அது. எனவே அசைவ உணவு வகைகளில் சற்றுக் கட்டுப்பாடுடன் இருந்தார். பிரியாணிக்கு, நாங்கள் எங்க ஊர் வழக்கப்படி சீரக சம்பா அரிசிதான் பயன்படுத்துவோம். பழனி-கீரனுார் பகுதிகளில் கிடைக்கின்ற சீரக சம்பா அரிசையைக் கையிலெடுத்து முகர்ந்தாலே பிரியாணி வாசனை அடிக்கும். தஞ்சாவூரில் கிடைக்கின்ற சீரகசம்பா அரிசி, விலை அதிகமே தவிர, தரமானதாக இல்லை. தனக்கு “பாஸ்மதி“ அரிசியில் தயாரிக்கின்ற பிரியாணிதான் பிடிக்கும் என்று நாஞ்சில் அப்போது சொன்னதை மனத்தில் வைத்திருக்கிறேன். அடுத்து அவர் எங்கள் வீட்டில் சாப்பிடும் பிரியாணி, பாஸ்மதி அரிசியில் தயாரித்ததாகவே இருக்கும்.

       எளிமையாக வாழ்வதிலுள்ள இன்பத்தை எனக்குக் கற்றுத் தந்தவர் நாஞ்சில். கோவைப்புதுாரில் அவர் கட்டிக்கொண்டுள்ள சொந்த வீட்டில், இன்றுவரை குளிர்சாதன வசதி கிடையாது. ஒரு கோடைகாலத்தில், இதைக்குறித்து அவரிடம் கேட்டேன். “கோயம்புத்துார் க்ளைமேட்டுக்கு ஏ.சி. தேவையில்லை ஜாகிர்“ என்று பதில் தந்தார். நாஞ்சிலின் மகளும், மருமகப் பிள்ளையும் மருத்துவர்கள். பக்கத்திலேயே அவர்களுடைய வீடு இருக்கிறது. ஒருமுறை பக்கத்து வீட்டுக்கு விளையாடச் சென்ற நாஞ்சிலின் கடைசிப் பேரன் “அங்கிள், எங்க தாத்தா ஏழை“ என்று கூறியிருக்கிறான். பக்கத்து வீட்டுக்காரர் சற்று அதிர்ந்து “ஏன் அப்படிச்  சொல்கிறாய்?“ என்று கேட்க, “எங்க அப்பா கார் வைத்திருக்கிறார். எங்க தாத்தாவிடம் கார் இல்லை. அப்படியென்றால் எங்க தாத்தா ஏழைதானே“ என்றிருக்கிறான்.நாஞ்சில் இந்த சம்பவத்தை என்னிடம் போனில் சொல்லிச் சிரித்துக்கொண்டார். நான் சிரிப்பதற்கு பதிலாக இதைக்குறித்துச் சிறிதுநேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். இரண்டு பேரன்களின் மீதும் அவருக்குப் பிரியம் அதிகம். வெளியில் சென்று வீடு திரும்பினால், பேரன்கள் பண்டம் எதிர் பார்த்து, தாத்தாவின் வருகைக்காகக் காத்திருப்பார்கள் என்கிற பதைபதைப்பு அவருக்கு இருந்து கொண்டேயிருக்கும். மாநகரப் பேருந்துக்காக அவர் காத்திருக்கும் காட்சியை நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு. எத்தனையோ இலக்கிய நிகழ்ச்சிகளுக்குப் பேசப்போய் ஒரு சிறு சன்மானத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பியதை அவர் சொல்லும்போது எனக்குக் கடுமையான கோபம் வரும். “உங்களுக்கான தொகையை நிர்ணயம் செய்து கொண்டு அவர்களிடம் டிமாண்ட் செய்யுங்கள் அண்ணா“ என்பேன் நான். “அப்படியெல்லாம் கறாராகப் பேசி நமக்குப் பழக்கமில்லையே ஜாகிர்“என்று பதில் தருவார். பட்டிமன்றப் பேச்சாளர்கள் எல்லாம் விமான டிக்கெட்டுடன் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என்று கேட்டு வாங்குகின்ற இந்தக் காலத்தில்தான் மேடையில் இலக்கியத்தரமாக உரையாற்றுகின்ற, சாகித்திய அகாதெமி விருதுபெற்ற, தமிழின் மூத்த எழுத்தாளருக்கு சமூகம் இப்படியான அநீதியைச் செய்கிறது. வெளியூர் நிகழ்ச்சிகளுக்குச் சென்றால், நெருங்கிய நண்பர்கள் விழா ஏற்பாட்டாளர்கள் என்றால், அவர்களுடைய வீட்டிலேயே தங்கிக்கொள்வதை விரும்புவார்.- ஹோட்டல், லாட்ஜ் போன்றவற்றைத் தவிர்ப்பார்.

         நாஞ்சில் சிக்கனவாதியே தவிர கருமியில்லை. இதை நான் என் அனுபவத்திலிருந்து கூறுகின்றேன். “கீரனுார் புக்ஸ்“ என்று பதிப்பகம் தொடங்கி, என் புத்தகங்களை வெளியிட்டுக்கொள்ள நான் ஆசைப்பட்டபோது “கீரனுார் புக்ஸ்க்கு வாழ்த்துகள்“என்று ஒரு காகிதத்தில் எழுதிக் கையெழுத்திட்டு அத்துடன் ரூபாய் பத்தாயிரத்துக்கு காசோலை அனுப்பி மகிழ்ந்த உள்ளத்துக்குச் சொந்தக்காரர்தான் நாஞ்சில். புத்தகங்களை நாமாக அன்பளித்தால் பெற்றுக்கொள்வார்- மற்றபடி புத்தகங்கள் வாங்க அவர் ஆயிரக் கணக்கில் செலவு செய்வதை நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். மது அருந்துவதில் கூட அவரிடம் ஒரு எளிமையும் கட்டுப்பாடும் உண்டு. கிடைக்கிறதே என்பதற்காக லிட்டர் கணக்கில் மண்ட மாட்டார். இரவு உணவுக்கு முன் இரண்டு லார்ஜ் என்பது அவர் கணக்கு. அனேகமாகஅது லெமன் பகார்டி ரகமாக இருக்கும். அதையும் “ஆன் த ராக்ஸ்“ ஆக அருந்த விரும்புவார். இப்படி ஒரு கௌரவமான மதுப்பிரியரை என் வாழ்நாளில் நான் சந்தித்ததில்லை. “அமரநாதன் கூப்பிட்டிருக்கிறார் ஜாகிர். பாண்டிச்சேரிக்குப் போக வேண்டும். வீட்டில் ஒரு பொட்டு சாராயம் இல்லை.” என்று ஒருமுறை சொன்னார். “ஒரு பொட்டு சாராயம் இல்லை“ என்கிற நகைச்சுவையை நினைத்து நினைத்து நான் அடிக்கடி சிரித்துக் கொள்வதுண்டு.

         நாஞ்சிலை நான் முதன்முதலில் அறிமுகம் கொண்டது என்னுடைய துருக்கித் தொப்பி நாவல் தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில். நாவலை 125 பக்கங்களில் முடித்து பதிப்பாளர் அகல் பஷீரிடம் கொடுத்துவிட்டேன். அவரும் கையெழத்துப் பிரதியைப் படித்துப் பார்த்து, தட்டச்சு செய்யக் கொடுத்துவிட்டார். அப்போது நான் சென்னை கோபாலபுரத்திலிருந்த எய்ட்-இந்தியா என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கிருந்து பஷீர் அலுவலகம் பக்கம்தான். (டி.டி.கே.சாலை). நாவல் நிலவரம் அறிந்து கொள்ள நான் அவ்வப்போது அங்கே செல்வது வழக்கம். அப்படி ஒருமுறை சென்றிருந்த சமயத்தில் “துருக்கித் தொப்பி நாவலுக்கு யாரிடம் முன்னுரை வாங்கப் போகிறீர்கள்?” என்று என்னிடம் பஷீர் கேட்டார். நான் “ முன்னுரை தேவையில்லை“ என்றேன். பஷீர் அது கேட்டு வியந்தார். துருக்கித் தொப்பிக்கு முன்னால் வெளிவந்திருந்த என்னுடைய மீன்காரத் தெரு, கருத்த லெப்பை இரண்டு நாவல்களுக்கும், ஏன் அதற்கும் முன் வந்திருந்த இரண்டு சிறுகதைத் தொகுப்புகளுக்குமே கூட நான் வேறு எந்த எழுத்தாளரிடமும் முன்னுரை வாங்கியிருக்கவில்லை. அணிந்துரை, முன்னுரை என்கிற திட்டமே எனக்கு அப்போது இருந்ததில்லை. ஆனால் பஷீர், துருக்கித் தொப்பி நாவலுக்கு முன்னுரை வேண்டும் என்பதில் ஏனோ ஆர்வமாக இருந்தார். நான் அரைமனத்துடன் அதற்கு இணங்கினேன். நாஞ்சிலிடம் முன்னுரை வாங்கலம் என்றார். நான் அதற்கு முழுமனத்துடன் சமமதித்தேன். காரணம் நாஞ்சிலுடன் பழகாமலேயே எனக்கு ஒரு வாசகனாக அவர் மீதிருந்த அபிமானந்தான்.

        பஷுர் தட்டச்சு செய்த துருக்கித்தொப்பி நாவலின் 125 பக்கங்களை ஜெராக்ஸ் செய்து நாஞ்சிலுக்கு அனுப்பி வைத்தார். இதற்கிடையில் நாஞ்சில் என்னுடைய மீன்காரத்தெரு, கருத்த லெப்பை நாவல்கள் இரண்டையும் கேட்டு வாங்கிப் படித்திருந்தார். துருக்கித் தொப்பி நாவலின் 125 பக்கங்களையும் வாசித்த நாஞ்சில் “நாவல் இன்னும் முடிவடையவிலலை, ஜாகிரைத் தொடரச் சொல்லுங்கள்“ என்றிருக்கிறார். அப்போது நான் ரகமத்துல்லா சின்ன வீட்டின் சார்த்தப்பட்ட கதவு ஓட்டை வழியே பெரிய வீட்டின் நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருப்பதுடன் “போதும்“ என்று திருப்தி கொண்டு நாவலை முடித்திருந்தேன். அனுபவம் வாய்ந்த நாஞ்சில், நாவல் இன்னும் முடியாததைக் கண்டுபிடித்து விட்டார். வேறுவழி – நாவலை நான் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.125 பக்க நாவல் 220 பக்கங்களாக மாறியது. நாஞ்சில் முன்னுரை எழுதினார். அந்த முன்னுரையில்தான் “கி.ரா.பாணியில் சொல்லப்போனால் வசமான கை“ என்று என்னை நாஞ்சில் பாராட்டியிருந்தார். அந்த ஆண்டு வெளிவந்த நாவல்களில் துருக்கித் தொப்பி பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி, ஆனந்த விகடனின் சிறந்த நாவல் விருதை வென்றது.

        2008-இல் த.மு.எ.ச.சார்பில் சாத்துாரில் ஒரு நாவல் கருத்தரங்கம் நடைபெற்றது. கோணங்கி,எஸ்.ராமகிருஷ்ணன், சு.வெங்கடேசன் கலந்துகொண்ட அக்கருத்தரங்கத்துக்கு என்னையும் நாஞ்சிலையும் அழைத்திருந்தனர். அங்குதான் நாஞ்சிலை நான் முதன்முதலில் நேரில் சந்தித்தேன். முதல் சந்திப்பிலேயே எங்களுக்குள் ஒரு இணக்கம் ஏற்பட்டிருந்தது. இன்றுவரை அந்த சிநேகம் சிறு தடங்கல் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதை “சிநேகம்“என்கிற சிறு வார்த்தையில் சுருக்காமல், “பாசம்“ என்கிற பெரும் சொல்லால் பெருமிதப்படுத்தவே விரும்புகிறேன். அண்ணனாக, தந்தையாக, நண்பராக, முன்னோடியாக, தமிழாசானாக அவரை நான் பல ரூபங்களில் காண்கிறேன்.

        நவீன எழுத்தாளர்களுக்கு, ஏன் பல முன்னோடிகளுக்குமே கூட மரபிலக்கியப் பரிச்சயம் இல்லாததை ஜெயமோகன் அவர்கள் அடிக்கடி சுட்டிக்காட்டிக் கொண்டிருப்பார். நானும் கூட நவீன இலக்கியம் என்பது, மரபிலக்கியத்தை முற்றிலும் நிராகரிப்பது என்கிற நம்பிக்கையில் இருந்தவன்தான். புதுக்கவிதை மரபினரில் வானம்பாடிக் கவிஞர்களுக்கு மட்டுமே மரபிலக்கியப் பரிச்சயம் இருந்தது. ஜெயமோகனும்,நாஞ்சில்நாடனும்தான் புதுமைப்பித்தன், ஜெயகாந்தனுக்குப் பிறகு மரபிலக்கியப் பரிச்சயம் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். உதகமண்டலத்தில் காவிய முகாம்கள் நடைபெற்றன. நாஞ்சில் கம்பன் வகுப்பகள் எடுத்தார். கம்பனின் அம்பறாத்துாணி, சிற்றிலக்கியங்கள் போன்ற அவருடைய தனித்தன்மை கொண்ட நுால்கள் வெளிவந்தன. கொற்றவை,சங்கச்சித்திரங்கள் என்று ஜெயமோகன் எழுதினார்.

       நான் மரபிலக்கியங்களை அறிமுகம் செய்துகொள்ளவும், கம்பனை ரசித்து ருசித்துக் கற்கவும் இவ்விருவரும் தான் காரணம். கம்பனின் அம்பறாத்துாணி செய்த வேலைதான் இன்று என் டைரி முழுக்க கம்பனின் மேற்கோள்கள் நிறைந்திருக்கின்றன. பழந்தமிழ்ச் சொற்களை எடுத்துக்கொண்டு நாஞ்சில் நாடன் எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரைகள் நுாற்றுக்கணக்கிலானவை. இதற்காகவே ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அவரை அழைத்து டாக்டர் பட்டம் தரவேண்டும்.

             கம்பராமாயணத்தில் ஜடாயு என்பது ஒரு கழுகு. ஆனால் அதுதான் ராமனுக்காக உயிர் துறந்த ஜீவன். நாஞ்சில், ஜடாயுவைப் பற்றி சொல்லிச் சொல்லி அது என் உள்ளத்தை விட்டு நீங்காத ஒரு கதாபாத்திரமாகிவிட்டது.

“என்தாரம் பற்றுண்ண

ஏன்றாயை சான்றோயை

கொன்றானும் நின்றான்

கொலையுண்டு நீ கிடந்தாய்

வன்தாள் ஏந்தி வாரிக் கடல் சுமந்து

நின்றேனும் நின்றேன்

நெடுமரம் போல் நின்றேனே.“

என்கிற கம்பனின் பாடல் இன்று எனக்கு மனனமாகிவிட்டது மட்டுல்ல

“மீசையுள்ளான் பிள்ளைச் சிங்கங்கள்

என் கூட வெளியினில் வாருங்கள்

காணும் நாசி நிரம்பவும் மயிர்தான்

இரண்டு கால் நடுவிலும் ஒரு கூடை மயிர்தான்“

 என்று குணங்குடி மஸ்தானைப் பரிச்சயமாக்கினார். நான் தொகுத்து வருகின்ற சொல்லகராதியைக் குறித்து அவர் சொல்லாத மேடையில்லை.

            இப்பிறவியில் நான் நாஞ்சிலைப் பற்றியது என்பேறு. அவர் நுாறாண்டு நல்ல தேக ஆரோக்கியத்துடன் வாழ்ந்து மேலும் தமிழுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *