இந்த உலகத்தின் கண்டுபிடிப்புகளிலேயே மகத்தானது புத்தகம் என்கிறார் ஐன்ஸ்டீன்.

சுந்தர தமிழை கசடற கற்க செய்த தமிழாசான் எங்கள் நாஞ்சில்.

நெஞ்சில் சுமந்த வலியை இறக்கி வைத்து இளைப்பாற அவர் எழுத்து பெரிதும் உதவியது.நாஞ்சில் நாடனின் புனைவைவிட கட்டுரைகளின் மீது பெரிதும் உவப்புண்டு எமக்கு.

“கட்டுரை என்பது comittment.கலை இலக்கியம், சமூகம், பொருளாதாரம், அரசியல் என எத்துறை பற்றி எழுதினாலும் அஃதோர் sworn statement.விவாதத்துக்கு இடம் தருவது,மாற்று முகாம் அறைந்தால் வலிப்பது “என்கிறார்.

நாஞ்சில் தீதும் நன்றும்,திகம்பரம், நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை, காவலன் காவான் எனின்,நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று என்பன போன்ற பல கட்டுரை தொகுப்புகள் எழுதியுள்ளார்.

அவர் கட்டுரைகள் எழுதும்போது கம்பனை,வள்ளுவனை,ஔவையை,திருமூலரை,பெருஞ்சித்திரனாரை,ஆண்டாளை,சேக்கிழாரை,பெரியாழ்வாரை, அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகரை, சித்தர்கள் பலரை, சங்க இலக்கியங்கள் யாவையும் உடனழைத்துக்கொள்வார்.

ஒன்றுக்கும் உதவாத அரசியல்வாதிகளை கொடுஞ்செயல் புரியும் சமூகவிரோதிகளை லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை ஊழல் செய்யும் அயோக்கியர்களை துவம்சம் செய்துவிடுகிறார்.

எழுத எழுத இடம் விட்டுக்கொண்டே இருந்தது கட்டுரை என்கிறார்.
கலை, இலக்கியம், சமூகம் , அரசியல்,நீதி, ஒழுக்கம், அறம் சார்ந்த தெளிவுகள் கிடைத்தது என்கிறார்.

படைப்பாளி நிராயுதபாணி, ஆனால் கோழையல்ல.கடிக்கும் வல்லரவுகூட எல்லாக் கொத்திலும் விடமேற்றிக் கொல்லதில்லை என்கிறார்.

அன்பு, அறம்,வாய்மை, தியாகம், காதல், கேண்மை போன்றவற்றின் சன்னிதானங்களில் நிராயுதபாணியாக நிற்பதில் பெருமை என்கிறார் .

கும்பமுனி குமுறும் பல இடங்கள் உண்டு.
எட்டுக் கோணல் வேதங்களுக்கும் இணையாக வந்து புட்டம் ஆட்டி, தனங்கள் குலுக்கி, தொடைகள் தட்டி,அல்குல் தைவரல் செய்து நடிப்பில் சிகரங்களை தொட்ட இஷ்ட காமி அஷ்ட நாயகிகளின் அட்டைப்படம் போடாத பருவ இதழ்களை,கட்-அவுட்களுக்கு , பால், தேன்,கருப்பஞ்சாறு, பன்னீர்,விஸ்கி, பீர், வைன் அபிஷேகங்கள் செய்யும் ரசிக குஞ்சுகளை, அகில பிரபஞ்சத்துக்கும்-சந்திரமண்டலம், செவ்வாய் கிரகம்,வீனஸ் கிரகத்துக்கும் ஆயிரத்து முன்னூற்று பத்து பிரிண்ட் போட்டு விநியோகம் செய்யும் விநியோகஸ்தர்களை ,
மேலும் அந்த பிரபஞ்ச நாயகன் அல்டிமேட் ஸ்டார், சூப்பர் ஸ்டார்,மெகா ஸ்டார்,உலக நாயகன், யுனிவர்சல் ஸ்டார், புரட்சி தளபதி, மக்கள் நாயகன், புரட்சி தமிழன்,ஐநா நாயகன், முதலமைச்சர், பிரதமர் கனவோடு இருப்பதையும்,சாடு சாடு என்று சாடுகிறார்.

சினிமா நடிகைகளின் முலை இடுக்குகளில் இருந்தும் தொடை நெருக்குகளில் இருந்தும்,பிருஷ்டங்களில் இருந்தும் கேமிராவை விலக்க மனமில்லாத டிவி சேனல்களை போட்டு தாக்குகிறார்.

தேர்தல் நடக்கும் முறையையும், தேர்தல் ஆணையத்தையும் ஒரு பிடி பிடிக்கிறார்.
திருடர்களையும் காவலர்களையும் சேர்த்தே கலாய்க்கிறார்.

கம்பனை கரைத்து குடித்தவர்.புரியாத வார்த்தைக்கு விளக்கம் கேட்டால் ஒன்றுக்கு பத்து விளக்கம் சொல்வார்.வாசகர்களுக்கு அவர் எழுத்தாளர் மட்டும் அல்ல,தமிழ் ஆசானும் கூட.மென்மையான உடல்மொழியும் காத்திரமான கருத்து மொழியும் கொண்ட நாஞ்சில் சாரிடம் உரையாடுவது என்பது எமக்கு மிகவும் பிடித்த ஒன்று.

நாஞ்சில் நாடன் நீடித்த ஆயுளும் நிறைந்த ஆரோக்கியமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அவரை வணங்குகிறோம்.அன்புடன்
மூர்த்தி விஸ்வநாதன்
வாழப்பாடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *