முத்தேடலின் சூக்ஷூமம்  (சிவராமன் கணேசனின் ‘மயல்’ நாவல்)

 

மனிதன் வெறும் உடலால் மட்டுமே இயங்கும் உயிரினமல்ல. அவனுக்குள் எண்ணங்கள், ஆசைகள், கனவுகள், கேள்விகள், ஏக்கங்கள், குழப்பங்கள் என ஒரு பெரும் அக உலகம் உள்ளது. இந்த அக உலகம் நிரம்பி இருக்கும்போதுதான் மனிதன் முழுமையான வாழ்வை அனுபவிக்கிறான். அந்த அகத்தை நிரப்பும் வலிமை ‘தேடல்’ ஒன்றிற்கே உண்டு. மனிதன் எதையாவது தேடத் தொடங்கும் தருணத்திலிருந்து அவன் மனம் உயிர்ப்படைகிறது. அந்தத் தேடல் பொருளாதாரமாக இருக்கலாம், அறிவுசார் தேடலாக இருக்கலாம், உறவுகளுக்கான தேடலாக இருக்கலாம் அல்லது ஆன்மிகத் தேடலாகவும் இருக்கலாம். தேடலின் வடிவம் எதுவாக இருந்தாலும், அதன் செயல் மனிதனின் அகத்தை நிறைவடையச் செய்வதாகவே அமைகிறது.

மனித வாழ்வு ஒரே மாதிரியான தேடலால் முழுவதும் நிரம்பியதல்ல. காலம், இடம், சூழல், வயது, பாலினம் போன்ற பல காரணிகளைப் பொறுத்து மனிதனின் தேடல்கள் மாறிக்கொண்டே இருக்கும். குழந்தைப் பருவத்தில் மனிதனின் தேடல் விளையாட்டாகவும், அறிதலாகவும் இருக்கும். ‘இது என்ன? அது ஏன்?’ என்ற கேள்விகள் குழந்தையின் தேடலின் வடிவம். இளமையில் அந்தத் தேடல் அடையாளம் காணும் முயற்சியாக மாறுகிறது. ‘நான் யார்? என் திறமை என்ன? என் இடம் எங்கே?’ என்ற கேள்விகள் எழுகின்றன. நடுத்தர வயதில் வாழ்க்கை நிலை, குடும்பம், பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகியவை தேடலாக மாறுகின்றன. முதுமையில் வாழ்க்கையின் அர்த்தம், வாழ்ந்த வாழ்க்கையின் மதிப்பு, மரணத்திற்குப் பின் என்ன என்ற சிந்தனைகள் தேடலாக உருவெடுக்கின்றன. இவ்வாறு மனித வாழ்வின் ஒவ்வொரு பருவத்துக்கும் ஒரு விதமான தேடல் அவசியமாகிறது.

இந்த தேடல்கள் லௌகீகமாக இருக்கலாம். அதாவது வேலை, பணம், பதவி, புகழ், வசதி போன்ற உலகியல் விஷயங்களைச் சார்ந்ததாக இருக்கலாம். சிலருக்கு ஆன்மிகத் தேடலாகவும் இருக்கலாம். கடவுள், ஆத்மா, வாழ்க்கையின் இறுதி உண்மை, மெய்ஞ்ஞானம் போன்றவற்றை அறிய விரும்பும் தேடலாக அது அமையும். எந்தத் தேடலாக இருந்தாலும், அதில் உண்மையான முனைப்பு இருந்தால் மனிதன் மனநிறைவை அடைகிறான். காரணம், தேடல் மனிதனுக்கு ஒரு நோக்கத்தை வழங்குகிறது. நோக்கம் உள்ள வாழ்க்கை சலிப்பைத் தாண்டி இயங்குகிறது.

தேடத் தொடங்குபவர்கள் மனநிறைவு கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது. இதன் பொருள், அவர்கள் கண்டடைந்துவிட்டார்கள் என்பதல்ல. தேடலே அவர்களுக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சியை வழங்குகிறது. ஒவ்வொரு நாளும் எழுந்து, ‘எதற்காக வாழ்கிறோம்?’ என்ற வினாவுக்குத் தேடல் ஒரு விடையைத் தருகிறது. அதனால் வாழ்க்கை வெறுமையாகத் தோன்றுவதில்லை. அதேசமயம், தேடத் தயங்குபவர்கள், தேடலையே தவிர்ப்பவர்கள், வாழ்நாள் முழுவதும் சலிப்பையே தம்முள் நிரப்பிக் கொள்கின்றனர். அவர்கள் வாழ்க்கையைக் கட்டாயமாக, சுமையாக அனுபவிக்கிறார்கள். எந்த நோக்கமும் இல்லாமல் தினமும் ஒரே செயல்களைச் செய்வது மனத்தில் வெறுமையையும் சலிப்பையும் உருவாக்கிக்கொள்கிறார்கள்.

‘தேடல் வெற்றியடைந்ததா, தோல்வியடைந்ததா’ என்பதைக் கணக்கிட வேண்டிய தேவையில்லை. பொதுவாக மனிதன் தேடலை எப்போதும் முடிவின் அடிப்படையில் மதிப்பிடுகிறான். கிடைத்தால் வெற்றி, கிடைக்காவிட்டால் தோல்வி என்று நினைக்கிறான். தேடலின் உண்மையான மதிப்பு அதன் முடிவில் இல்லை; அதன் பயணத்தில் உள்ளது. தேடலுக்காக எடுத்த முயற்சி, அதனால் உருவாகும் அனுபவங்கள், மாற்றங்கள், புரிதல்கள் ஆகியனவே முக்கியம்.

‘கண்டடைதல்’ என்பது தேடுபவர்களின் கைகளில் இல்லை. மனிதன் முயற்சி செய்யலாம், தேடலாம், உழைக்கலாம். ஆனால் இறுதியில் கிடைப்பது, கிடைக்காதது என்பது பல நேரங்களில் அவன் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. அதை தெய்வங்களின் ஆடலாகச் சொல்லலாம், விதியாகச் சொல்லலாம், இயற்கையின் ஓட்டமாகச் சொல்லலாம். இந்த உண்மையைப் புரிந்துகொள்வதே மனிதனுக்கு ஒரு பெரிய தெளிவை அளிக்கிறது. ‘நான் செய்ய வேண்டியது தேடுவது மட்டுமே; கிடைப்பது என் கைகளில் இல்லை’ என்ற புரிதல் வந்தால், தேடல் இனிக்கத் தொடங்குகிறது.

இந்தப் புரிதலுடன் செய்யப்படும் தேடலில் ஏமாற்றம் குறையும். தோல்வி என்ற உணர்வு பெரிதாக பாதிக்காது. காரணம், தேடல் ஒரு பயணமாக மாறுகிறது. அந்தப் பயணம் மனிதனை வளர்க்கிறது. அவன் எண்ணங்களை விசாலமாக்குகிறது. அவன் அகத்தை நிரப்புகிறது. தேடல் உள்ளவரை வாழ்க்கையில் சலிப்பு இருக்காது என்று கூறப்படுவது இதன் அடிப்படையில்தான். தேடல் இருக்கும் வரை மனிதன் உயிர்ப்புடன் இருக்கிறான். அவன் உள்ளம் செயல்படுகிறது. அவன் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக உணரப்படுகிறது.

எழுத்தாளர் சிவராமன் கணேசனின் ‘மயல்’ நாவலை ஆழமான ‘தேடல் பயணமாக’ விளக்குகிறது. மனித வாழ்வுக்கான ஒரு முக்கியமான வழிகாட்டுதலை அளிக்கிறது. வாழ்க்கையில் எதையாவது தேடிக் கொண்டே இருங்கள். அந்தத் தேடல் சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி. கிடைத்ததா, கிடைக்கவில்லையா என்பதைவிட, தேடுகிறோமா என்பதே முக்கியம். தேடல் மனிதனின் அகத்தை நிறைவடையச் செய்கிறது. தேடல் வாழ்க்கைக்குச் சுவையைக் கொடுக்கிறது. தேடல் உள்ளவரை மனிதன் சலிப்பின்றி, உயிரோட்டத்துடன் வாழ முடியும். 

மனித வாழ்வின் அடிப்படை உந்துதல்களாகக் கருதப்படும் காமம், உணவு, பெருநன்மை என்ற மூன்று தேடல்களையும் மையமாகக் கொண்டு இந்த நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றும் தனித்தனியான ஆசைகள் மட்டுமல்ல; மனித அகத்தின் வளர்ச்சிக்கும் மனநிறைவுக்கும் வழிகாட்டும் சக்திகளாகவும் இந்நாவலில் உருவாக்கப்பட்டுள்ளன.

முதலில் காமம் பற்றிப் பார்க்கலாம். காமம் என்பது மனித உடலின் இயல்பான தேவை. குறிப்பாக இளமையில் உடல் துள்ளும், உணர்ச்சிகள் பொங்கும் காலகட்டத்தில் காமம் மிகுந்த ஆற்றலுடன் மனிதனை ஆட்கொள்கிறது. இளமைக்குரிய காமத்தைச் சாந்தப்படுத்த வேண்டும் என்பதே மனிதன் எதிர்கொள்ளும் முதல் பெரிய தேடல். ‘மயல்’ நாவலில் காமம் வெறும் உடல் இச்சையாக மட்டுமல்ல; இளமையின் தீவிரத்தையும் அடங்காத உணர்வுகளையும் வெளிப்படுத்தும் சக்தியாகக் காட்டப்படுகிறது. காமம் ஒருபுறம் இன்பத்தைத் தருகிறது; மறுபுறம் குழப்பத்தையும் மனக்கலக்கத்தையும் உருவாக்குகிறது.  இருவித உணர்வுகளுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் மனித மனநிலையை நாவல் நுணுக்கமாகச் சித்தரிக்கிறது.

அடுத்ததாக உணவு பற்றிய தேடல். மனித வாழ்க்கையில் உணவு என்பது உயிர்வாழ்வின் அடிப்படை. ஆனால், நாவலில் உணவு வெறும் பசியைத் தீர்க்கும் சாதனமாக மட்டும் இல்லை. ‘நாச்சுவை’ எனக் கூறப்படும் ருசி, சுவை, அனுபவம் ஆகியவற்றின் தேடலாக விரிகிறது. வாழ்நாள் முழுக்க மனிதன் விதவிதமான உணவுகளை நாடுகிறான். அது உடலை மட்டுமல்ல, மனத்தையும் திருப்தி செய்யும் ஓர் அனுபவமாக மாறுகிறது. முதிர்ந்த இளமைக்குரிய இந்த நாச்சுவை தேடல், வாழ்க்கையை ரசித்து அனுபவிக்க வேண்டும் என்ற மனநிலையின் வெளிப்பாடாக நாவலில் காட்டப்படுகிறது. உணவு மனிதனை நிலத்தில் பிணைக்கிறது; அவனை வாழ்வின் இயல்புகளோடு இணைக்கிறது. இவ்வகையில் உணவு தேடல், காமத்திற்குப் பிறகான ஒரு நிலையான வாழ்க்கை உணர்வை உருவாக்குகிறது.

மூன்றாவது மற்றும் மிக முக்கியமான தேடல் பெருநன்மை. இது சாதாரண உலகியல் நன்மையல்ல. ‘அமானுஷ்யமான வரலாறுகொண்ட பெருநன்மை’ எனக் கருதலாம். அது தெய்வீகத்தையும் அதீத சக்திகளையும் அதிர்ஷ்டத்தையும் குறிக்கிறது. ராஜ பிரதம சூக்ஷூமம் போன்ற மர்மமான அம்சங்கள் இந்தப் பெருநன்மை தேடலோடு இணைக்கப்படுகின்றன. மனிதன் ஒருபோதும் திருப்தியடையாமல், எப்போதும் ஏதோ ஓர் உயர்ந்த சக்தியையும் அபூர்வமான அருளையும் நாடிக் கொண்டே இருக்கிறான். இத்தகைய தேடலே மனிதனைச் சாதாரண வாழ்வின் எல்லைகளைத் தாண்டச் செய்கிறது.

இந்த மூன்று தேடல்களும் தனித்தனியாக இருந்தாலும், ‘மயல்’ நாவலில் அவை ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவையாகக் காட்டப்படுகின்றன. முதிரா இளமைக்குரிய காமமும், முதிர்ந்த இளமைக்குரிய நாச்சுவையும், அமானுஷ்யங்கள் நிறைந்த சாஹசங்களும் ஆகிய அனைத்தும் இளமையின் தீவிரத்திற்கு ஓர் அறைகூவலாக அமைந்துள்ளன. இளமை என்பது வெறும் வயது மட்டுமல்ல; அது அனுபவங்களை முழுமையாகச் சுவைக்கத் துடிக்கும் ஒரு மனநிலையும் ஆகும். இந்த மனநிலையே நாவலின் ஒட்டுமொத்த சூழலையும் இயக்குகிறது.

இந்த மூன்று தேடல்களையும் ஒருசேர அனுபவிக்கும் அரிய வாய்ப்பு நாவலின் நாயகன் ‘கிட்டா (க்ருஷ்ணா)’வுக்கே கிடைக்கிறது. அவன் வாழ்க்கை ஒரு சாதாரண பயணமல்ல; அது காமம், உணவு, பெருநன்மை ஆகிய மூன்றுக்கும் இடையில் அலைந்து திரியும் அகப் பயணம். இம்மூன்றில் எதைத் தொடுவது, எதை விட்டு விடுவது என்ற குழப்பம் அவனது மனத்தை எப்போதும் ஆட்கொள்கிறது. இந்தத் தடுமாற்றமே நாவலின் மைய உணர்வாகவும் வாசிப்புச் சுவையை அதிகரிக்கும் காரணமாகவும் அமைகிறது.

க்ருஷ்ணாவின் மனநிலை மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பாக இருக்கிறது. மனிதனும் இப்படித்தான் பல ஆசைகளுக்கிடையில் சிக்கித் தவிக்கிறான். ஒன்று கிடைத்தால் மற்றொன்று குறைவாகத் தோன்றுகிறது. எதைத் தேர்வு செய்தாலும் எதையோ இழக்க வேண்டிய நிலை வருகிறது. க்ருஷ்ணாவும் இந்த மூன்று தேடல்களுக்காகப் பலவற்றை இழக்கிறான். உறவுகள், அமைதி, நிம்மதி போன்றவை அவனிடமிருந்து விலகிச் செல்கின்றன. ஆனால் அவன் தேடலை நிறுத்துவதில்லை. காரணம், அவனுக்குத் தேடலே வாழ்க்கையாக மாறிவிட்டது.

இந்த மூன்று தேடல்களிலும் ஈடுபட்டு க்ருஷ்ணாவின் அகம் நிறைகிறது. அவன் வாழ்க்கை அனுபவங்களால் செழிக்கிறது. அவன் தோல்விகளும் இழப்புகளும்கூட அவனை வளர்க்கின்றன. இறுதியில், ‘தெய்வங்களின் ஆடலில்’ அவனுக்கு வெற்றியே கிடைக்கிறது என்று கூறப்படுகிறது. இதன் பொருள், மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இறுதித் தீர்ப்பை வழங்குகிறது என்பதே!. மனிதன் தேட வேண்டும், முயற்சி செய்ய வேண்டும்; ஆனால் முடிவு அவன் கைகளில் இல்லை என்ற தத்துவம் இங்கு வலியுறுத்தப்படுகிறது.

காமம் உடலின் தேடல், உணவு வாழ்க்கையின் தேடல், பெருநன்மை ஆன்மாவின் தேடல் ஆகிய மூன்றையும் சமநிலையுடன் அனுபவிக்க முயலும் மனிதன்தான் முழுமையான வாழ்வை அடைகிறான். க்ருஷ்ணாவின் வாழ்க்கை அதன் சின்னமாக நின்று, வாசகனைத் தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது. 

எழுத்தாளர் சிவராமன் கணேஷன் எழுதிய இந்த ‘மயல்’ நாவலை ஒரு கலைப்பொருளாகக் கண்டு மதிப்பிட விரும்புகிறேன். குறிப்பாக அந்த நாவலின் மொழிநடை, கட்டமைப்பு, கதை சொல்லும் முறை ஆகியவற்றை நாட்டுக்கோட்டை செட்டியார் வீடுகளின் பர்மாத்தேக்கு மரச் செதுக்கலுடன் ஒப்பிடத் தோணுகிறது. 

நாட்டுக்கோட்டை செட்டியார் வீடுகள் தமிழ்நாட்டின் பாரம்பரிய கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகக் கருதப்படுகின்றன. அந்த வீடுகளின் முக்கியமான அடையாளமாக இருப்பது, பர்மாத்தேக்கால் செய்யப்பட்ட தலைவாசல் கதவுகள். அவை சாதாரண கதவுகள் அல்ல. ஒவ்வொரு கதவிலும் செதுக்கல்கள், வடிவங்கள், சின்னங்கள், அழகியல் அம்சங்கள் மிக நுட்பமாகவும் நேர்த்தியாகவும் செய்யப்பட்டிருக்கும். அந்தக் கதவுகள் வீட்டின் பெருமையையும் உள்ளே இருக்கும் செழுமையையும் முன்கூட்டியே சொல்லும் ஓர் அறிகுறியாக இருக்கும். இதேபோல, இந்த நாவலையும் எழுத்தாளர் சிவராமன் கணேஷன் வரிக்கு வரியாகச் செதுக்கி அழகூட்டியுள்ளார்.

இந்த நாவல் அவசரமாக எழுதப்பட்ட ஒரு படைப்பல்ல. ஒவ்வொரு வரியும் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சொல்லும் எங்கே அமைய வேண்டும், எந்த உணர்வைத் தூண்டும், வாசகனின் மனத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நன்கு உணர்ந்து எழுதியுள்ளார். பர்மாத்தேக்கு மரம் மிகவும் உறுதியானது, நீடித்தது, எளிதில் சேதமடையாதது. அதுபோல, இந்த நாவலின் மொழியும் கருத்தும் காலத்தைத் தாண்டி நிலைத்திருக்கும் வலிமை கொண்டவையே! 

எழுத்தாளர் இந்த நாவலின் வழியே சொல்லால், பொருளால், சொல்லிணைவுகளால், உவமைகளால் ஓர் உலகை உருவாக்கியுள்ளார். சாதாரணமாகக் கதை சொல்வது ஒன்று; ஆனால் மொழியையே ஒரு கலைப்பொருளாக மாற்றுவது மற்றொன்று. இந்த நாவலில் சொற்கள் வெறும் தகவலைச் சொல்லுவதற்காக மட்டுமல்ல; வாசகனை உணர்ச்சிப் பயணத்திற்குள் இழுத்துச் செல்லும் கருவிகளாகவும் செயல்படுகின்றன. சொல்லிணைவுகள் வாசிப்புக்கு ஓசைத் தன்மையையும் ஓட்டத்தையும் வழங்குகின்றன. உவமைகள் காட்சிகளை வாசகனின் கண் முன் நிறுத்துகின்றன.

குறிப்பாக, காதலும் காமமும் இந்த நாவலில் மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன. காதல் என்பது மென்மையான உணர்வு; காமம் என்பது தீவிரமான உணர்வு. இந்த இரண்டையும் எழுதுவது எளிதான காரியம் அல்ல. அதிகமாக எழுதினால் அது விரசமாகிவிடும்; குறைவாக எழுதினால் அதன் தீவிரம் குறைந்துவிடும். இந்த நாவலில் அந்த சமநிலை மிக நுட்பமாகக் கையாளப்பட்டுள்ளது. காதல் வாசகனின் மனத்தை நெகிழ வைக்கிறது; காமம் உடலுணர்வைச் சுட்டிக்காட்டினாலும் அது கலைநயத்தோடும் மரியாதையோடும் சொல்லப்படுகிறது. இதுவே இந்த நாவலின் சிறப்பு.

அதேபோல, உணவின் நுட்பமான பல்வேறு சுவைகள் வாசகருக்குத் தன்னனுபவமாக்கப்பட்டுள்ளன. உணவை விவரிப்பது என்பது வெறும் பெயர்களைப் பட்டியலிடுவது அல்ல. அதன் வாசனை, சுவை, நிறம், தயாரிக்கும் முறை, அதைச் சாப்பிடும் தருணத்தின் உணர்வு ஆகிய அனைத்தையும் வாசகன் தானே அனுபவிப்பதுபோல் எழுத வேண்டும். இந்த நாவலில் அந்தக் கலை சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. வாசகன் உணவைப் பற்றிப் படிக்கும்போது, அது அவன் நாவிலேயே சுவைப்பதுபோன்ற அனுபவத்தை அளிக்கிறது. இதனால் நாவல் வாசிப்பது ஓர் உணர்ச்சி அனுபவமாக மாறுகிறது.

பொதுவாக நாவல்கள் குடும்ப நாவல், சரித்திர நாவல், மர்ம நாவல் என்று தெளிவான வகைப்பாட்டுக்குள் அடங்கிவிடும். ஆனால் இந்த நாவல் அப்படிப்பட்ட எளிய வரையறைகளுக்குள் அடங்காது. சில இடங்களில் இது குடும்ப நாவலாகத் தோன்றும். குடும்ப உறவுகள், பாரம்பரியம், தலைமுறை நினைவுகள் போன்றவை அதில் பேசப்படும். மற்ற சில இடங்களில் இது சரித்திர நாவலாக மாறுகிறது. கடந்த காலச் சம்பவங்கள், வரலாற்றுச் சூழல்கள், பழைய வாழ்க்கை முறைகள் ஆகியவை விரிவாகக் காட்டப்படுகின்றன. இன்னும் சில பகுதிகளில் மர்ம உணர்வுகள் தோன்றுகின்றன. எதிர்பாராத நிகழ்வுகள், மறைந்த ரகசியங்கள், புரியாத சூழல்கள் வாசகனின் ஆர்வத்தைத் தூண்டும். இதையெல்லாம் தாண்டி, இது எல்லாம் கலந்த பொதுவாசிப்புக்குரிய நாவலாகவும் அமைகிறது. இந்த வகைமைதான் வாசகரை குழப்புகிறது. ஆனால் அந்தக் குழப்பம் வாசிப்பைச் சலிப்பாக்குவதில்லை; மாறாக, அடுத்த பக்கம் என்ன நடக்கும் என்ற ஆவலை அதிகரிக்கிறது. எந்த வகை நாவல் என்று முன்கூட்டியே முடிவு செய்ய முடியாததால், வாசகன் தொடர்ந்து நாவலோடு பயணம் செய்கிறான். இதுவே இந்த நாவலின் கதை சொல்லும் வித்தை.

இந்த நாவலை ஒரு ‘கலை நாவலாக’, அதிலும் குறிப்பாக ‘உணவுக்கலை நாவலாக’ வரையறுக்க முடியும். இந்த நாவலை நான் சுவாரஸ்யமான ‘கலை’ நாவலாகவே கருதுகிறேன். அது ‘உணவுக்கலை’. ஆம்! இது ‘உணவுக்கலை’ பற்றிய நாவல். உணவு என்பது மனித வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவையாக இருந்தாலும் அதை ஒரு கலை என்ற நிலைக்கு உயர்த்திப் பார்ப்பது ஒரு தனித்த பார்வை. ‘உணவுக்கலை’ என்பது, வெறும் சமைப்பது மட்டுமல்ல; எந்தப் பொருட்களைத் தேர்வு செய்வது, எவ்வாறு சமைப்பது, எப்படிப் பரிமாறுவது, எந்த நேரத்தில் எப்படிப் புசிப்பது என்பதெல்லாம் சேர்ந்த ஒரு முழுமையான அனுபவம். இந்த நாவல் அந்த முழுமையையே பேசுகிறது.

இந்த நாவலின் செம்பாதி உணவு சார்ந்தே அமைந்துள்ளது. உணவு இந்தக் கதையில் ஒரு பின்புலம் அல்ல; அது மையமாகவே இருக்கிறது. கதையின் சம்பவங்கள், பாத்திரங்களின் நினைவுகள், உணர்வுகள், உறவுகள் ஆகிய இவை அனைத்தும் உணவோடு பின்னிப் பிணைந்துள்ளன. சில நேரங்களில் உணவு கதையை நகர்த்தும் சக்தியாகவும், சில நேரங்களில் கதாபாத்திரங்களின் மனநிலையை வெளிப்படுத்தும் கருவியாகவும் செயல்படுகிறது.

இந்த நாவலில் நல்லுணவுக்குரிய இடுபொருட்கள் பற்றிப் பேசப்படுகிறது. எந்த உணவாக இருந்தாலும் அதன் தரம் அதில் பயன்படுத்தப்படும் பொருட்களைப் பொறுத்தே அமையும். அந்தப் பொருட்களைத் தேர்வு செய்வதில் இருக்கும் கவனம், பாரம்பரிய அறிவு, அனுபவம் ஆகியவை இந்த நாவலில் கதையோட்டத்தோடு சொல்லப்படுகின்றன. இது ஒரு சமையல் குறிப்புப் புத்தகம்போல் நேரடியாகக் கற்றுக் கொடுக்கவில்லை; மாறாக, கதையின் ஓட்டத்தில் இயல்பாக அந்தத் தகவல்கள் கலந்து செல்கின்றன.

அடுத்ததாகச் சமைக்கும் பக்குவம் பற்றிப் பேசப்படுகிறது. பக்குவம் என்பது அனுபவத்தால் வரும் ஒரு நுட்பம். எவ்வளவு நேரம் சமைக்க வேண்டும், எந்த வெப்பத்தில் வைக்க வேண்டும், எந்த வரிசையில் பொருட்களைச் சேர்க்க வேண்டும் ஆகிய இவை அனைத்தும் இணைந்தேதான் உணவின் சுவையைத் தீர்மானிக்கும். இந்த நாவல் அந்தச் சமையல் நுணுக்கங்களை ஒரு கலைஞனின் கைப்பாகை போலச் சித்தரிக்கிறது. வாசகன் அதை வாசிக்கும்போது, சமையலறையின் வாசனையும் சூட்டும் அவன் மனத்தில் உயிரோடு தோன்றும்.

பரிமாறும் நுட்பம் என்பதும் முக்கியமான அம்சமாகக் குறிப்பிடப்படுகிறது. உணவு சமைத்தால் மட்டும் போதாது; அதை எப்படிப் பரிமாறுகிறோம் என்பதும் முக்கியம். யாருக்கு எவ்வளவு, எந்த வரிசையில், எந்தப் பாத்திரத்தில் ஆகிய இவையெல்லாம் உணவின் அனுபவத்தை உயர்த்தும் அல்லது குறைக்கும். இந்த நுட்பங்களும் நாவலில் கதையோடு இணைந்து வருகின்றன. இது உணவு என்பது சமூக உறவுகளோடும் மரியாதையோடும் தொடர்புடையது என்பதையும் நினைவூட்டுகிறது.

அதேபோல், உண்ணும் நேர்த்தியைப் பற்றியும் இந்த நாவல் பேசுகிறது. உணவை அவசரமாக விழுங்குவது அல்ல; ரசித்து, மரியாதையோடு, அளவோடு உண்ண வேண்டும் என்ற பண்பாடு இங்கு வெளிப்படுகிறது. உண்ணும் முறை ஒருவரின் மனநிலையையும் பண்பாட்டையும் வெளிப்படுத்துகிறது. இந்த நாவலில் அந்த நேர்த்தி வாழ்க்கையின் ஒழுக்கமாகவும் கலையாகவும் காட்டப்படுகிறது.

இந்த எல்லாத் தகவல்களும் தனித்தனியாகச் சொல்லப்படாமல், கதையோட்டத்தோடு இணைத்தே சொல்லப்படுவது இந்த நாவலின் முக்கியச் சிறப்பு. அதனால் வாசகனுக்குப் போதனை போலத் தோன்றுவதில்லை. கதை வாசிக்கிறோம் என்ற உணர்வோடு, உணவுக்கலை பற்றிய அறிவும் அனுபவமும் தானாகவே மனத்தில் பதிகிறது.

ஒரு சுவையைக் கொண்டு நாக்கினைத் திருப்திப்படுத்திவிட முடியுமா? நாவின் தேடலுக்கு எல்லையே இல்லை. உணவின் சுவை ஒரு தருணத்தில் திருப்தி அளிக்கலாம். ஆனால், மனித நாக்கு எப்போதும் புதிய சுவைகளைத் தேடிக் கொண்டே இருக்கும். இன்று இனிப்பு பிடிக்கும்; நாளை காரம் வேண்டும்; மறுநாள் புளிப்பு தேவைப்படும். இந்த முடிவில்லாத தேடல்தான் மனித இயல்பு. இந்தச் சுவைத் தேடலுக்கு எல்லையே இல்லை. எல்லையற்ற எதுவும் கலையே!. 

கலைக்கு எல்லை இல்லை. அது தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும். அதுபோல, சுவைக்கான தேடலும் முடிவில்லாதது. இந்த உணவுத் தேடலை மையமாகக் கொண்டதால், இந்த நாவல் ‘உணவுக் கலை’ நாவலாக அமைந்துள்ளது. உணவு இங்கு ஒரு பொருள் அல்ல; அது ஒரு கலை அனுபவம், ஒரு தேடல்.

இனி, இத்தகைய நாவல்கள் தமிழுக்குப் புதுவையான இலக்கிய வகைமையாக அமைவுகொள்ளும். தமிழிலக்கியத்தில் இதுவரை குடும்ப நாவல், சமூக நாவல், வரலாற்று நாவல், அரசியல் நாவல் போன்ற வகைகள் இருந்தன. இப்போது, உணவையே மையமாகக் கொண்ட, உணவுக்கலையை இலக்கியமாக மாற்றும் நாவல்கள் ஒரு புதிய வகையாக உருவாகலாம் என்ற நம்பிக்கை இந்த நாவலின் வழியாக ஏற்பட்டுள்ளது.  இந்த நாவல் வெறும் கதையல்ல; அது உணவின் சுவை, மணம், நுட்பம், தேடல் ஆகியவற்றை இலக்கியமாக மாற்றிய ஒரு கலைப் படைப்பு. மனிதனின் நாக்கின் தேடலை, அவன் மனத்தின் தேடலோடு இணைத்துக் காட்டும் இந்த நாவல், தமிழிலக்கியத்தில் ஒரு புதிய பாதையைத் திறக்கும் திறன் கொண்டதாக விளங்குகிறது.

(மயல் – நாவல், சிவராமன் கணேசன், எழுத்து பிரசுரம், ஸீரோ டிகிரி பப்ளிஷிங், சென்னை. பக்கங்கள் – 263, விலை ரூபாய் – 320.)

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *