மகடூஉ முன்னிலை
ஆளற்ற வீதியில் நீ நடந்து வருவதை மொட்டை மாடியின் விளிம்பில் நின்று கண்டேன். சட்டென்று என் மனதில் தைத்த உன் கோலம் ஒரு துறவியினுடையதாக இருந்தது. நிலம் நோக்கிய உன் பார்வை, நிழலைக் கண்காணிக்கும் தீவிரம் கொண்டிருந்தது. அன்றைய நாளின் பாடுகளை அப்போதே தாள முடியாதவளாய் நீ வந்து கொண்டிருந்தாய். உன் நடையில் நான் கண்டுணர்ந்த சோர்வும் தனிமையும் இன்றும் என் நினைவில் நிற்கின்றன.
சக வாசிகள் அறைக்குள் பேசிச் சிரித்தார்கள். உன் வருகை உபரியாக என் காதுகளுக்குள் வந்து விழுந்தது. அந்நிலம் வந்து ஆறுநாட்கள் கடந்த பின்னரே உன் வருகையை நான் அறிந்தேன். என் அண்ணனின் கொழுந்தியாள் என்ற தகவலை மட்டும் நான் பத்திரப்படுத்திக் கொண்டேன். என் மனப்பெண்களில் ஒவ்வொருத்தியாக கண் முன்னே உருப்பெற்று உன்னை வடித்தெடுக்க விழைந்தனர். கண்ணாடி அணிந்து சுருள் ரோமங்கள் ததும்பும் பெண். கூர் நாசியும் ஒளிரும் கன்னக்கதுப்புகளும் மென்செம்மை பாய்ந்த உதடுகளும் கொண்டவள். மதர்த்த காம்புகளின் நுனி நீண்டு அகலித்த மெல்லிடைப் பெண். விம்மித்திரண்ட பின்புறமும் கொழுத்த சதைத்திரட்சியும் மினுங்க கற்சிலை வடிவுடையவள். பொன்னார் திருமேனியில் சுடரென திரண்டெழுந்த பெருந்திரு. பனித்திரைக்குப் பின் புலனாகும் சிற்றுரு போல அரூபமாய் தோன்றுபவள். உன்னைப் பற்றி ஏதுமறியும் முன்பே உன்னை விரும்பத் தொடங்கினேன்.
ஏனெனில் நான் தீராக் காதலன். என் தனிமையை, கையறு நிலையை யாருமற்ற நிராதரவை என் மனப்பெண்களின் உடனான நீடித்த உரையாடலினால் கடந்து கொண்டிருப்பவன். ஓயாத கதையாடலும் நிறையாத பித்தும் நிலைத்த என் அகத்தில் தனிமையின் எதிரொலியாக காதலும் அதன் உன்மத்தக் கணங்களும். ஆதியில் காதல் ஒற்றைச் சொல்லாக இருந்தது. தனிமையின் வாதைகள் அச்சொல்லை பல்கிப் பெருகச் செய்தன. புறக்கணிப்பும் தாழ்வுணர்ச்சியும் எனக்குள் ஓராயிரம் சொற்சுனைகளைக் கிளர்த்தின. நான் அவ்விதம் பால்யம் அழிந்து உருவானேன்.
பெருநகரத்தின் வீதிகள் என்னை எதிர் நோக்கின. ஒரு நாளை நான் தொலைக்கும் வீதி எங்கிருக்கிறதோ? இராமகிருஷ்ணபுரத்தின் முட்டுச்சந்தில் என் விதி அன்றன்று எழுதப்படுகிறது. இந்நேரம் நான் கிளம்பியிருக்க வேண்டும். உண்டு உடுத்தி முகம் எழுதி கிளம்பிய நான் உன்னைப் பார்த்தது வெகு தற்செயல். நீ தான் நீ என்பதை என் அகம் எவ்விதம் அறிந்தது? அந்நேரத்தில் அவ்வீதியில் வந்து செல்லும் மனிதர்களை நான் அறிவேன். ஐந்தாறு ஆண்டுகளின் அன்றாடங்களை அங்கே செலவழித்தவன் என்ற முறையில். எனக்கு அவ்வீதியும் அதன் மனிதர்களும் நல்ல அறிமுகம். நீ புதிது. உன் வருகையை வீதியும் அதன் வீடுகளும் அந்நியம் கொண்டு நோக்கின. உன் வருகை நல்வரவாகட்டும் என்றேன். ஒரு காவிய நாயகியை வரவேற்கும் காவிய கர்த்தாவைப் போல என் மனதிற்குள் உன் வருகையைக் கொண்டாடினேன். உன் சிவந்த நுதலும் மெலிந்த கைகளும் அதன் பொன்னிற ரோமங்களும் என்னை ஈர்த்தன. யாரையும் உற்றுப் பார் என நிர்ப்பந்திக்காத ஒரு உடையைத்தான் அணிந்திருந்தாய். ரப்பர் செருப்பணிந்த உன் பாதங்கள் அத்தனை துாய்மையாக இருந்தன. தேவதையின் வருகை என உள் மனம் கொந்தளித்தது. நீ ஏறிட்டு என்னை அங்கீகரிப்பாய் என்று ஏங்கினேன். மதில் சுவர் மீறி காற்றிலாடிய செம்பருத்தியின் ஒயில் கூட உன் கவனத்தைக் கலைக்க வில்லை. நீ நீயாக மட்டும் சென்று கொண்டிருந்தாய். உன் முன்னால் ஒரு பெருநகரத்தின் நகர்வு. அதன் ஓலமிடும் உராய்வுகள். உந்தித் தீ தணிக்க பாய்ந்தோடும் மனிதர்களின் காலடித்தடங்கள். வளைந்தும் நெளிந்தும் உன்னைக் கடந்து செல்லும் வாகனங்கள். எதிலும் உன் கவனம் சிதறவில்லை. உன்னைத் தவமிருந்த என்னைக் கூட கவனிக்கவில்லை. உன் முன்னால் காம்புகள் தளும்ப வந்து கொண்டிருந்த நாய்க்காக மட்டுமே ஒரு கணம் தயங்கி நின்றாய். உன் தயக்கம் காலத்தை உறையச் செய்தது. பிரபஞ்சம் திகைத்து நின்றது. பூமிப்பந்தின் சுழற்சிக்கு தற்காலிக ஓய்வு.
புலரியின் முதற் கணம் இசைத்து எழுப்பியது. துயில் நீங்கி மீண்ட என் பிரக்ஞை அந்நாளை எங்கிருந்தோ ஒலித்த இசைத்துணுக்கோடுதான் நேர்கொண்டது. சொந்த ஊரில் பிழைப்பற்று முந்நுாறு மைல்கள் தாண்டி வந்திருக்கிறேன். பொருள் வயின் பிரிவுதான். என் அன்னையை, தவழ்ந்து வளர்ந்த இல்லத்தை, விளையாடித் திரிந்த தெருக்களை, பழகிச் சிரித்து சண்டையிட்டு விரோதித்த நண்பர்களை, குளித்துச் சிவந்த கண்களும் களைத்து ஓய்ந்த கால்களும் கொண்டு அந்தி விளையாடி ஊர் திரும்பிய முந்தல் மலை முகடுகளை. அதன் செம்மண் பூரித்த தரிசு நிலங்களை.
சொந்த ஊரில் இருந்து உந்தித் தள்ளி விரட்டப்பட்டேன். விருப்பமற்று நிகழ்ந்த புலம்பெயர்வு என்னை மௌனி என்றாக்கியது. யாரிடம் என்றில்லாமல் அனைவரிலும் பகைமை வளர்த்தது. அன்பையும் ஆதரவையும் சந்தேகித்தது. சூடு கண்டு திகைத்த பூனையின் தடுமாற்றம் என் இயல்பென்றாகியது. மெலிந்த என் உடலுக்குள் நடுநடுங்கும் நான். நடுக்கமே என் நிலை திரும்புதல்.
ஓலை வேய்ந்த குடில். உள்ளே செறிந்திருந்த இருளுக்குள் புரண்டு படுத்தேன். சில்வண்டுகள் இசைத்தன. நீட்டி நீட்டி அவை ரீங்கரித்து எதையோ சொல்ல முயன்றன. தெரு நாயின் வான் நோக்கிய ஓலம். இரண்டாம் ஆட்டம் முடிந்து வீடு திரும்பும் தெருவாசிகள். எப்படியோ என் அகம் விழித்துக்கொண்டது. இருளை ஒற்றறிந்தவாறு இருளை வெறித்திருந்தேன். குடிலின் கதவு அசைந்தது. யாரோ கதவிற்கு அப்பால் நின்றிருக்கிறார்கள். வறுமை பீடித்த ஓலைக்குடிலுக்குள்ளும் கள்ளம் பாவிக்க துணிந்தவன். தாழ்ப்பாளைத் திறக்கும் வண்ணம் அருகே ஒரு குறுஞ்சதுரம். அப்பால் முழுநிலவின் பால்பொழிவு. சட்டென்று ஒளி மறைந்து குறுஞ்சதுரம் இருளுக்குள் தொலைந்தது. நான் பற்கள் கிட்டிக்க அம்மாவின் சேலைநுனியைப் பிடித்துக்கொண்டேன். இருள் சிதைந்து முழுநிலவின் ஒளிக்கீற்று தோன்றி மறைந்தது. நெடு நெடு உரு ஒன்று குடிலுக்குள் நுழைந்தது. நாயின் ஓலம் தீனம் கூடியது. பால்யத்தின் முதல் பெருந்நடுக்கத்தை அவ்விரவு ஏற்றியது. இரவுகள் அச்சம் அளிப்பவை என்றாயின.
நீரின் புழங்கலொலி என்னை எழுப்பியது. கை நீட்டி பாயின் மீது தேடினேன். கொசுக்கள் உடல் முழுக்க உறிஞ்சத் தவித்தன. என்னைச் சூழுந்து ஆவேச ரீங்கரிப்பு. அம்மா அகன்றிருந்தாள். அவளின் மூச்சுப் பாய்ச்சல் எழும்பும் அரவம் அங்கில்லை. கதவுகள் சாத்தியிருந்தன. எனில் திறந்து மூடப்பட்டிருந்தன. ஈயப் பானையில் பித்தளைச் சொம்பு மோதி எழுப்பிய ணங்கொலி. நீரின் சலசலப்பு. பூனைப்பாதம் கொண்டு வெளியே வந்தேன். நிலவற்ற காரிருள். ஆச்சியின் வீட்டை காணாமல் ஆக்கியிருந்தது. ஆச்சி வீட்டின் கூரைமேல் படர்ந்திருந்த முருங்கை அசைவற்று விரைத்திருந்தது. அம்மா குளித்துக் கொண்டிருந்தாள். அம்மையின் அம்மணம் இரவின் நிழற் படமாய். அவளின் மேடு பள்ளங்கள் இருளுக்குள் புலப்பட்டன. வெட்ட வெளியில் அவ்விதம் அச்சமற்று அவள் குளித்ததை கண்டேன். நிசியில் குளிக்க வேண்டிய தேவை என்ன என்று அன்று எனக்குப் புரியவில்லை. என் தலைகோதி ஈரம் பிசுபிசுத்த உடம்போடு அணைத்துக்கொண்டு வீட்டிற்குள் அழைத்து வந்தாள். அம்மா ஏதும் பேசவில்லை. முகம் இறுகி வீம்பு கூடியிருந்த நடை. அம்மாவின் கனத்த மௌனம் கூட கூடக் இருளின் எடை கூடியது. அம்மா பேயைப் போலிருந்தாள். அம்மாவின் அடங்காத கொதிப்பு குடிலை வெக்கை கொண்டு மூடியது. பேய்களை அம்மா அறிமுகம் செய்து வைத்தாள். அம்மாவின் ஊடாக பேய்கள் என்னுலகில் பிரவேசித்துச் சென்றன. இரவுகள் பேய்களை அழைத்து வந்தன.
குருவக்காவினுடையவை மென்முலைகள். முதுகில் அவை அழுந்தின. கூச்சமாக இருந்தது. குருவக்கா பின்னால் வந்து என்னை அதிர்ச்சியூட்டினாள். முருகனைத் தேடி அவன் வீட்டிற்கு சென்றிருந்தேன். முருகன் இருந்தால் பொன்மாலையாகி முடியும் அந்நாள். பள்ளி விடுதியில் இருந்து விடுமுறைக்கு ஊர் திரும்பிய மறுநாள். பகல் முழுக்க அவனைத் தேடி அஞ்சடிச்சான் முக்கில் காத்திருந்தேன். உள்ளங்கையில் அள்ளிப் பதுக்கிய நீரினைப் போல பகல் விரைந்து ஒழுகியது. அந்தி மங்கி இருள் வெகுதொலைவில் வானிலிருந்து வந்து கொண்டிருந்தது. பறவைகள் கூடடைய விரைந்தன. நான் முருகனின் வீட்டிற்குச் சென்றேன்.
சிலோன் ரேடியோவின் தேனிசைக் கீதங்கள். குருவக்கா பீடித்தட்டை மடியில் ஏந்தி பீடிகளை வடித்துக் கொண்டிருந்தாள். காதலின் குழைவு தந்த கிரக்கம் அவள் கண்களில். எதிரே சென்று அமர்ந்த என்னை அவள் உடனே அடையாளம் கண்டுகொள்ளவில்லை. பொன்னந்தியின் மாலைப்பொழுது அவளின் போதையைக் கூட்டியிருந்தது. செவ்வக வடிவ பீடியிலையின் நரம்பெடுத்து நீவி துாள் நிரவி அவள் உருட்டினாள். சட்டென்று இரவு எங்களின் அருகமர்ந்தது. அக்கா சிம்னியை துடைத்து சுடர் ஏற்றினாள். வா என்பதாக தலையை அசைத்தாலும் நான் ஒன்றும் பேசவில்லை. நெற்குதிர் மேலே பொன்வண்டுகள் அடைத்த தீப்பெட்டிகள் என் நினைவிற்கு வந்தன. முருகன் தளவாய்புரத்தில் இருந்து பொன்வண்டுகளை வாங்கி வந்திருந்தான். அவற்றைப் பார்க்கும் ஆர்வம் எழும்ப அறைக்குள் சென்றேன். அக்கா என்னைப் பின் தொடர்ந்தாள். ஒற்றைக் கதவினைச் சாத்தி தாளிட்டாள். சட்டென்று சிம்னி விளக்கை ஊதி அணைத்தாள். உடனே அருகிருந்த பிரத்யட்ச உலகம் ஓடி ஒளிந்து கொண்டது. எங்கிருந்தோ கனத்த இருள் எங்கள் இடையே வந்து குதித்து நெரித்தது. அப்போதுதான் அக்கா பின்புறமாக வந்து என்னை அணைத்தாள். நான் திரும்பி அவளை நெஞ்சோடு இறுக்கினேன். அக்காவின் உதடுகள் உப்புச்சுவை கொண்டிருந்தன. அக்கா அன்று கணக்காக பிச்சிப்பூக்களை சூடியிருந்தாள்.
நாராயணப்பேரியின் மறுகால் நீர்மடை. மதகுகள் பாசி படிந்து பச்சையம் காய்ந்திருந்தன. வெளிக்கிருக்கும் ஆட்கள் மட்டுமே வந்து நீங்கும் நடைபாதை. நீர் வற்றி பசுமைத் தோல் போர்த்தி நாராயணப்பேரியின் நீர்ப்பரப்பு அடர்ந்திருந்தது. மீன்கள் அப்பட்டமாக துள்ளிக் குதித்தன. மலக்குவியலை மோதித்தவிர்த்து உருண்டு வந்து மேலேறிய காற்று இதம் அளித்தது. பாதி நிர்வாணம் கொண்டிருந்த பெண்ணுடல்கள். பிரபல வார இதழின் நடுப்பக்கத்தை அக்கறையோடு வெட்டி எடுத்து சேகரித்திருந்த கன்னிக் கோர்ப்பு. அண்ணன்களும் மாமாக்களும் கைலிகள் விலக்கி நீர்மடையின் வளையத்தினை இணைத்து அமர்ந்திருந்தார்கள். நடுவில் நடுநாயமாக எண்திசையிலும் வெண்ணிற தொடைகளும் இடைகளும் முலைமேடுகளும். சிவப்புச் சாயம் செறிந்த உதடுகள் கொண்டிருந்தனர் அப்பெண்கள் அத்தனைப் பேரும். விரைத்த குறிகளை உள்ளங்கைகளுக்குள் ஏந்தி இயக்கினர். யாருடையது பேருருக்கொண்டது என்பதை கள்ளப்பார்வையால் நோட்டம் இட்டனர். யார் முதலில் என்பதில் அவர்களுக்குள் போட்டியிருந்தது. யாருடைய ஊற்று கரைமீது விரிந்து பரந்திருந்த வெட்டவெளியில் அதிக தொலைவு பீறிடுகிறது என்கிற எதிர்பார்ப்பிருந்தது. வியர்வை பொங்க வெப்பம் முடுக்கிய முகங்கள் ஆவேசம் கொண்டிருந்தன. காற்றை மோதிப் பாய்ந்த வெண்ணிறத் துளிகள் முதலில் எழுந்ததும் அனைவரும் ஆர்ப்பரித்தனர். அவர்களிடம் கற்றுக்கொண்டதை நான் என் வீட்டின் தனிமையில் முயன்று பார்த்தபோது நினைவில் தோன்றிய முகம் குருவக்காவினுடையது.
பிறகு உன்னிடம் என்னை அர்ப்பணித்தேன். நாம் சந்தித்துக்கொண்ட நாள் முதல் என்னைக் கிழித்து உள்ளே கெட்டித்துக்கிடந்த அத்தனையையும் கொட்டினேன். பிற்பாடு நான் மறந்த அத்தனைப் பாடுகளையும் நீ அறிவாய். நமக்குள் பிணக்கு மூண்டெழும் தருணங்களில் நீ அவற்றை ஆயுதங்களாக ஏந்தி என்னைத் தாக்கிக் குலைத்தாய். “வண்ணாத்தீட்ட எச்ச சோறு வாங்கித்தின்ன பயதான நீ” என்று ஏளனித்தாய். கடும் துவேசம் கொண்டு உன்னை வெறுக்கும் கணம் அப்போதுதான் துளிர்த்திருக்குமோ?