“அல்லாகு அக்பர்..அல்லா..” அதிகாலைப் பாங்கொலி. நாள்தோறும் ஐந்துமுறை ஒலிக்கும் உன்னத சங்கீதம். ஒவ்வொரு முறையும் பாங்கொலியின் கவித்துவ சஞ்சாரத்தை மனம் லயித்துக்கேட்கும். பாங்கொலி வழியாகவே நினைவுகள் ஊற்றெடுத்துப் பெருகி என்னை எங்கெங்கோ அழைத்துச் செல்லும். தேன்கூட்டின் பொந்துகளைப் போல ஏகப்பட்ட நினைவுகள். பாங்கொலியை எங்கு கேட்டாலும் ஒரு கணம் மனம் சிலைத்து நின்றுவிடும். கண்கள் கலங்கி விம்மி சட்டென்று பார்வையை மங்கச் செய்யும் கண்ணீர் ததும்பல்.
வடக்குவாச் செல்வி அம்மன் கோவிலைத்தாண்டினால் பாய்மார்கள் தெரு. கைரேகைகளை ஒத்த சிறிய சந்துகள். உள்ளொடுங்கிய அடைசலான வசிப்பிடங்கள். பிறை நிலாக்களும், 786 களும், இளம்பச்சை வர்ணங்களும் கொண்ட வீடுகள். பெரிய பள்ளிவாசலின் முன் சதுர வடிவிலான வெட்டவெளி. புறாக்கள் சடசடத்து பறந்தமரும் கலைசலான அரவம். வான்நோக்கிச் செல்லும் மினராக்கள். அகன்ற குவிமாடங்கள். தென்னைகளும், வேம்புகளும் ரகசியம் காக்கும் கபர்ஸ்தான் மதில்கள். கொஞ்சம் தெற்கே தள்ளி பால்பண்ணை. அதன் வடபுரம் பச்சைப்பட்டுடுத்தி அசையாமல் வான்ரகசியங்களை ஏந்தியிருக்கும் ஊருணி.
பாங்கொலி கேட்டதும் அம்மா என்னை எழுப்பி விடுவாள். சில்வர் துாக்குவாளி குலுங்க பால் வாங்க பண்ணைக்குச் செல்வேன். அதிகாலைத் தெருக்களின் லட்சணத்தைப் பார்க்க நெகிழ்ச்சியாக இருக்கும். பகலின் தொல்லைகள் அற்று சுதந்திரமாக மனம்போன போக்கில் நடக்கலாம். ஒட்டுமொத்த தெருக்களும் என் ஒருவனின் வருகைக்காக காத்திருக்கின்றன. புருவத் துாக்கலோடு உளவு பார்க்கும் கண்கள் இருப்பதில்லை என்பது பெரிய ஆறுதல். எங்கள் தெரு மத்தியில் பிள்ளையார்கோவில். மறைப்போ கூரையோ இன்றி வெட்டவெளியில் எட்டுத்திக்கும் ஏகாந்தம் நெருக்க பிள்ளையார் தனித்திருப்பார். கோவிலின் பின்னால் ஓடைத்தெரு, அதன் குறுக்காக போகும் ஒற்றைச் சந்து, சந்தின் விளிம்பில் பாழுங்கிணறு வாயகன்று வான் பார்த்து மல்லாந்து கிடக்கும். கருப்பு நுரைக்குமிழ்கள் சலம்பும் சாக்கடையில் நீரோடும் நலுங்கொலி. ஒளிரும் கண்களாகத் தோன்றி தெருக்களின் குறுக்கே அஞ்சி ஓடும் பெருச்சாளிகள். ஜன்னத்துல் பிர்தௌசின் தெருவழியாகச் செல்வது அதிகாலையிலும் அடிவயிற்றில் மின் அதிர்வுகளை உண்டாக்கிற்று. அவளை அந்நேரம் பார்க்கமுடியாது என்றாலும் இதோ இந்த வீட்டின் உள்ளே ஒரு அறையில் அவள் துயின்று கொண்டிருக்கிறாள் என்ற எண்ணம். பள்ளியிலும் பேசிக்கொள்வதில்லை. ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பிற்கு நான் சென்றபோது அவள் ஒன்பதாம் வகுப்பில் புதிதாக வந்து சேர்ந்திருந்தாள். என் முதல் பெண்.
அடுக்களையில் புகை மண்டியது. சிம்னி விளக்கின் ஒளியில் அம்மா நடமாடும் உருவெளித்தோற்றமாகத் தெரிந்தாள். கவலைகள் படிந்து நிரந்தரமாக உற்சாகத்தை தொலைத்துவிட்ட முகம். மங்கி நிறம் கலைந்த கைத்தறிச்சேலை. கழுத்தில் அழுக்கடைந்த மஞ்சள் கயிறு. மெலிந்த உடலில் தேமல் வரைந்த உருக்காட்சிகள். அவள் கண்களில் தீ எரிந்தது. ஊதுகுழலால் அடிக்கொருதரம் “வ்ஊவ்..வ்ஊவ்..” என்று ஊதி விறகினை உயிர்ப்பித்துக்கொண்டாள். அப்பச் சட்டியில் மாவு படிந்து வேகும் வாசனை. பெரிய சில்வர்தட்டில் பொன்னிறத்தில் நெய் ஒளிரும் ரவைக் கேசரி. குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் பாய்ந்து சதுரத்துண்டுகள் தனித்து நிற்க விளிம்புகள் காற்றில் உலர்ந்து விரைத்திருந்தன.
அம்மாதான் தெருவின் துயிலைத் தட்டி எழுப்புவாள். மிகப்பெரிய தெரு. நடுவில் நரம்போடி உயர்ந்து சிறிய பள்ளங்களைப் போல இருபுறமும் கீழிறங்கும் வாசல் முற்றங்கள். அம்மா வீட்டு முற்றத்தை பசுஞ்சாணிக்கரைசல் ஒலிக்க தெளித்து, பறட் பறட் என்ற ஓசை எழும்ப சுத்தம் செய்து பெருக்குவாள். பிள்ளையார் கோவிலைச்சுற்றி அவள் துாத்து முடிக்க கீழ்வானத்தில் காலைச்சூரியனின் செவ்வருகை. தெருவிற்குள் பசைக் கஞ்சியின் நிரந்தர வரித்தடங்கள். பகலில் கைத்தறி ஊடுபாவுகளின் ஊடாக நாடாக்கள் பாய்ந்து செல்வதால் எழும் மோதல் ஒலிகள். அதிகாலைகளில் தெருவை அடைத்து பாவாற்றுவார்கள். தெரு முழுக்க பாவை விரித்து நீளக் கோடுகளாக நீட்டி, பசைபோட்டு நீவி, ஆளுயுர கம்புகளால் தட்டி உலர்த்துவார்கள். சாக்கடைகள் வாசல்களை பிரித்திருக்கும். அரச மாளிகைகளின் அகழிகளைப் போல தெருச் சாக்கடைகள். அகழிகள் கொண்டிருக்கும் முதலைகளைப் போல பன்றிக்குடும்பங்கள். குட்டிகளின் அடாவடித்தனங்களோடு தாய்ப்பன்றி ராஜகம்பீரத்தோடு தெருவிற்குள் நடந்து வரும். கல்லெறிபட்டு வீய்ங்..என்று பன்றிகளின் கதறல் கேட்டுப் பதறாத ஒரு பகலையாவது நான் கடந்ததில்லை. தெருக்களும் அவசரங்கள் எதுவும் இன்றி சாவகாசத்தோடு இருந்தன. கோடிகள் வழியாகவே ஊரைச் சுற்றிவந்துவிடலாம். ரகசியப் பாதைகள் சிறுவர்களின் ஏகபோக உரிமையாக இருந்தது. பேட்டையில் சீட்டுக்கச்சேரி நடக்கும். வெளியாட்கள் நடமாட்டம் அறிந்து விநியோகிக்கப்படும் சொக்கம்பட்டியின் கள்ளச்சாராயம். தண்ணீரைப்போன்ற நிறம் கொண்ட வாற்றுச்சரக்கினை கிளாஸ்களில் ஏந்தி மந்திக்குடித்து தலையை உதறும் போதை விரும்பிகள். கொடுக்காப்புளி மரங்களை மொய்த்துக்கிடக்கும் பறவைகள். வைக்கோல்போர்களின் மீதேறி பறந்து காட்டும் சேவல்கள். செல்லாங்குச்சியும், கிட்டிப்புள்ளும் நிகழும் போர்க்களம்.
ஈழுவக் குடும்பங்கள் ஓடைத்தெருவிலும் முத்துதெருவிலும் வசித்து வந்தார்கள். ஈழவக் குடும்பங்களின் குலத்தொழிலாக நெசவும், விவசாயமும் இருந்தது. மருத்துவம் பார்க்கும் பாரம்பரிய வைத்தியக் குடும்பங்களில் ஒன்றுதான் அம்மாவினுடையது. சிந்தாமணியில் தாத்தாவின் வைத்தியச் சாலை. அரச மரங்களும் ஆல மரங்களும் சூழ பச்சிலைகள் மணக்கும் ஓட்டுச்சாய்ப்பு. சதா புகைமண்டிக் கசிந்து பனிஉருகும் போலிப்பாவனை ஏற்படுத்தும் நிலக்காட்சி. நாராயணப்பேரியும் கோவிந்தப்பேரியும் சிந்தாமணியின் நீரரண்கள். கரைகளின் சரிவுகளில் ஆட்கள் குந்தி மலம் கழிப்பார்கள். மேற்கில் இருந்து பாய்ந்துவரும் மலைக் காற்றில் கண்மாய்களின் தணுமையோடு நாற்றங்களின் கலவையும் உடல்களைத் தழுவும். கண்மாய் நீரில் ஒளிரும் பச்சைப் புல்நுனிகள். காற்றில் அலை அலையாக நெளிந்து ஒசிந்தாடும் நெற்கதிர்களின் சதிராட்டங்கள். வாசுதேவநல்லுார் சிவகிரி வரை நீளும் மரங்களின் செறிவும், கண்மாய் நீரோடும் வாய்க்கால்களும். நவாச்சாலையில் தாத்தாவிற்கு தென்னந்தோப்பிருந்தது.
அப்பா காந்திபஜாரில் ராஜகிளி துணிக்கடையின் முதலாளி. அம்மாவின் அப்பா ஏற்படுத்திக்கொடுத்த பிழைப்பு உபாயம். கைத்தறித் துண்டுகளும் சேலைகளும் கொள்முதல் செய்து வண்டிகளில் வீட்டிற்கு வந்துசேரும். ரகுமத் தறிச்செட்டில் உற்பத்தியாகும் கைத்தறி கைலிப் பண்டல்களை அப்பாவே நேரில் சென்று குதிரை வண்டிகளில் எடுத்து வருவார். அப்பா ஊர்சுற்றுவதிலும் உல்லாசத்திலும் மட்டுமே நாட்டமுள்ளவர். “பஞ்சத்துக்கு யோக்கியனா இருந்தவன் உங்க அப்பன்…நாலு துட்டப் பார்த்ததும் புத்தி பீத்தின்ன போயிருச்சு” என்பது அம்மாவின் கண்டுபிடிப்பு.
ஆறாண்டுகள் கழித்து நான் பிறந்தேன். அப்பா அதற்குள் இரண்டாம் திருமணத்திற்கான பூர்வாங்க வேலைகளில் இறங்கியிருந்தார். எப்பவும் வெற்றிலை குதப்பலும் சிவந்த உதடுகள் கொண்ட கறுத்த முகமும் அப்பாவினுடையது. துாய கதராடைகளில் நெடுநெடுவென வளர்ந்த ஒல்லித் தேகம். அம்மா அப்பாவின் இடுப்பிற்குத்தான் இருப்பாள். சாதாரணமாக பேசும்போது கூட அண்ணாந்து கழுத்து வலியெடுக்க நின்றிருப்பாள். அவர்கள் இருவரும் சிரித்துப் பேசியதை என் வாழ்நாளில் நான் ஒருமுறையேனும் கண்டதில்லை.
வீட்டின் பின்பகுதியில் நான்கு கைத்தறிகள் ஓடிக்கொண்டிருந்தன. ஜவுளி வியாபாரம் நொடிவிழுந்து கடையை சுப்பையா முதலியாருக்கு ஆண்டு ஒத்திக்கு விட்ட கையோடு அப்பா தறிக்குழிகளை மூடி ஆஷ்பெஷ்டாஸ் கூரை வேய்ந்த அறைகளை உண்டாக்கினார். தெருவில் இருந்து கோடி வழியாகச் சென்று வீட்டை அடையலாம். கொஞ்சக்காலம் சுப்பையா முதலியாரின் ஜவுளிக்கடையின் குடோனாக பின் வீடு இருந்தது. செண்டு அத்தை குடிவந்தபோது நானே காந்தி பஜாரில் கையாளாக வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன். கை முட்டியையும், கைலி கட்டவும் பழகியிருந்தேன். அப்பா எந்த வேலைக்கும் செல்லாமல் பழங்கதைகள் பேசிக்கொண்டிருந்தார். கோமணத்தின் விளிம்புகளை சரிசெய்தபடி தெருவில் வருகிறவர்களை வம்புக்கிழுப்பார். “ய்யோவ்..மாப்ள..பள்ளி இல்லத்துக்காரனோடது மொந்தப்பழந்தான் ஓய்…பாக்கீராவோய்…இன்னா..இங்கிட்டு வாரும்…இடுக்குக்குள்ள வாரும் ஓய்” என்று அவர் கத்தினால் ராமையா பிள்ளை தெருவில் சங்கடப்பட்டுப் போய்க்கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். கடுவாய் என்ற பட்டப்பெயரும் நாளடைவில் அப்பாவை வந்தடைந்திருந்தது. “ல்லே..கடுவாக்குட்டி..” என்பது என்னைச்சுட்டுவதாக ஆனது.
செண்டு அத்தையை வீரசிகாமணிக்குக் கட்டிக்கொடுத்திருந்தது. ஆறில் ஒருத்தியும் நான்கில் ஒருத்தியும் என இரண்டு பெண் பிள்ளைகள். மாமாவிற்கு தறிநெசவுதான் சம்பாத்தியத்திற்கான வழி. குடும்பச் சண்டையில் வீரசிகாமணி மாமா அரளிக்கொட்டையை அரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அறுபதுநாள் துக்கம் கழிந்ததும் செண்டு அத்தை தன் சட்டி பானைகளோடு இரு பெண்மக்களையும் அழைத்து வந்து, எங்கள் வீட்டின் பின்பகுதியில் வாடகைக்கு குடி இருந்தாள். எதிர்சாரியில் செண்டு அத்தையின் தாயார் மாரியம்மாள் வீடு. மாதம் நுாற்றியம்பது ரூபாய் குடிக்கூலி. செண்டு அத்தையின் நடையழகில் தனித்து வெளிப்படும் நளினம் பார்க்கும் ஆண்களை சுண்டி இழுக்கக்கூடியது. சடங்காகி அவள் தெற்குத்தெருவில் ராட்டு சுற்றித்திரிந்த காலத்திலேயே அவளுக்கு ரசிகர் பட்டாளம் உண்டு. நானும் கழுதை வாலில் கட்டிய எரியும் டயரினைப் போல கொழுந்துவிட்டு புகைய ஆரம்பித்தேன். மூன்று மாதங்களில் செண்டு அத்தையின் நடமாட்டங்களை மனத்தில் குறித்து வைத்துக்கொண்டேன். இரவுகளின் மூடிய போர்வை இருளுக்குள் உற்றுத்தேடும் முகம் செண்டு அத்தையினுடையதாக மாறிற்று.
முந்தல் மலையின் பாறைச் சிதைவுகளின் நடுவே புதர் அடர்வு. சுனையில் நீர் வந்து கொண்டிருந்தது. பெரிய பாறை இரண்டாகப் பிளந்து மேலேறும் வழித்தடம். ஓராள் மட்டுமே தாராளமாக நடந்து செல்ல முடியும். தைப்பொங்கலுக்கு மறுநாள். மலையில் தென்பட்ட நாணல் புதர்களுக்குள் ஆட்கள் குந்தியிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கட்டுச்சோற்றுப் பொதிகளோடு மலைநெடுக தென்பட்டார்கள். சிரிப்பும் ஆரவாரமும் மலை முகடுகளில் எதிரொலித்தன. கொலுசொலிகளும் மல்லிகை மணங்களும் கடந்து சென்றன. யானைப் பாறை அருகேதான் பாலுமச்சான் காத்திருப்பதாகச் சொன்னான். வாற்றுச்சாராயக்குப்பிகள் முதல்நாளே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதைக் கொண்டுவந்து சேர்ப்பது என் பொறுப்பு. முந்தல் மலை ஏறும் இடத்தில் போலீஸ்காரர்கள் மலை ஏறி வருகிறவர்களை சோதனை செய்து கொண்டிருந்தார்கள். நான் கைலியின் உள்ளே வயிற்றின் கீழே துண்டு வைத்து இறுக்கமாக பாட்டில்களைக் கட்டியிருந்தேன். செல்லத் தொந்தியை மறைக்க சட்டையை முன்னால் இழுத்துவிட வேண்டியிருந்தது. கையில் கொண்டுவந்திருந்த மஞ்சள் பையைப் பிரித்துப் பார்த்தார்கள். “புரோட்டாப் பார்சல் சார்” என்ற என் குரலில் பதற்றம் இருந்தது. குப்பிகள் கால்களின் வழியே வழுவி கீழே விழுந்துவிடுமோ என்ற அச்சம். முன்பு ஒருமுறை அப்படி நடந்திருக்கிறது.
பாறை நிழலில் வட்டமாக அமர்ந்திருந்தார்கள். இசக்கிமுத்து கண்ணாடித் தம்ளர்களில் மிக உன்னிப்பாக அளவு பார்த்து துளிப் பாகுபாடின்றி ஊற்றிக் கொடுப்பதில் நிபுணன். பாலுமச்சானை அடுத்து சுப்பையா, அவன் பின்னால் கருப்பசாமி, வடக்குப் பார்த்த திசையில் சுப்பு. நான் சென்ற போது அவர்கள் என் முன்பும் ஒரு கண்ணாடித் தம்ளரை நிறுத்தினார்கள். “கடுவா காதுக்கு மட்டும் போயிரக்கூடாதுடா மயிராண்டி” என்று சொல்லி பயங்கரமாகச் சிரித்தான் பாலுமச்சான். அவன் ஏற்கனவே ஒரு குப்பியைக் காலிசெய்திருந்தான்.
எலுமிச்சை ஊறுகாய் மட்டைகள் பொதுவில் கிடத்தப்பட்டிருந்தன. தொண்டை எரிந்தது. அடிவயிறுவரை உள்ளே ஓடிப்பாய்ந்து காந்தியது. காகங்கள் தலைக்குமேலே சுற்றிக் கரைந்தன. கண்களை மூடி ஒரே சாய்ப்பில் உள்ளே ஊற்றி விட்டிருந்தேன். ஆண்களும் பெண்களும் பேசிச்சிரிக்கும் ஒலிகள் மங்கலாகக் கேட்கத் தொடங்கின. செண்டு அத்தையின் உள்பாவாடையின் வாசனை மூக்கின் மிக அருகே. உடலில் பெண்வேட்கை கொப்பளித்திற்று. வெகு தொலைவில் தீபாராதனை காட்டும்போது ஒலிக்கும் மணியடிப்பு. சுருட்டிய பீடியை சுருள் நீக்கி உள்ளே இருந்த புகையிலையைத்தரையில் கொட்டி, இலைத்துகள்களை பரப்பி மீண்டும் உருட்டினான் சுப்பு. சுப்பு மட்டும் வாற்றுச்சாராயத்தை விரும்புவதில்லை. நான்கு சுற்றுகள் முடிந்திருந்தது. நெற்றியில் வியர்வைகள் அரும்பின. உடலுக்குள் வேறு ஒரு உடல் இருப்பதும் அதன் இருப்பு காற்றில் பறப்பதாகவும் ஒரு உணர்வு. சத்தமாக வாய்விட்டுச் சிரிக்க வேண்டும் போல் இருந்தது, தலை வலது பக்கமாகச் சாய்ந்து கிறுகிறுத்தது. கஞ்சாப் புகையின் மணம் காற்றில் பரவி முந்தல் மலை முழுக்க பரவியது.
“ஒக்கால ஓலி..என்னலே ஓன் அக்காக்குள்ளது மாறி உனக்குத் தொங்குது?”
“பக்கத்துல வா…வாய்ல வெய்க்கேன்..சப்பி உறிஞ்சிடா மாப்பு”
“வெண்ணியில உளுந்த எலிக்குஞ்சு..எப்படா பாம்பா மாறப்போகுது”
“மாப்ள..வாய் வெச்ச உடனே நடக்கும்…கொண்டு வரட்டா”
“துாமையைக் குடிக்கி..வடக்குத்தெருவில போயி ஒங்கக்காள கூட்டியால..எந்தில..துாரப்போல..”
மாப்பிள்ளை மச்சான்களின் இடையேயான ஆர்ப்பரிப்பு.
கைலிகளை விலக்கியிருந்தார்கள். ஊறுகாய்ப் பட்டைகள் இருந்த இடத்தில் வாராந்தரி ஒன்றின் நடுப்பக்கம். சினிமா நடிகையொருத்தியின் பருத்த உடல். குறைந்த துகிலில் மினுங்கும் சதைப் பிதுங்கல். வாழ்நாள் முழுக்க தனிமை கிடைக்கும்போதெல்லாம் எட்டிப்பார்த்து என்னை ஆட்டிப்படைக்கும் யட்சியை முந்தல் மலையில்தான் நான் முதன்முதலில் அறிமுகம் செய்து கொண்டேன். உள்ளங்கைகளுக்குள் கசிந்த கஞ்சித்தண்ணீர் ஆரோரூட் மாவுக்கரைசல் போலிருந்தது. மின்னல் வெட்டியதைப் போன்ற பரவசம். பாலுமச்சான் சுப்பையாவை குப்புறத்தள்ளி துளை தேடிக் கூவினார். உடல்முழுக்க பரவிய நடுக்கம் நிற்க நீண்ட நேரம் ஆனது. அதன்பின்னர் என்றுமே நான் அந்த உச்சத்தை அடைந்ததில்லை. அடைய மேற்கொண்ட முயற்சிகள் அனைத்துமே ஒருமாத்துக் குறைவாகவே இருந்தன. வாழ்விலே ஒருமுறைதான்.
சங்கீதா ஓடிப்போன பின்னர் மீண்டும் அப்பழக்கம் என்னைப் பீடித்தது. வாழ்தலின் இன்பமாக அது ஒன்றே நீண்ட நாட்கள் என்னை உயிர்ப்பித்தது. தனிமையின் போது தோன்றும் தேவதை என நான் எண்ணிய கணங்களும் உண்டு.