
சென்ற புத்தகக் கண்காட்சியில், அதற்கு முந்தைய புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களே வரிசையில் நிற்கின்றன. இருந்தாலும் தற்போதைய கண்காட்சியில் வாங்கிய ஷோபாசக்தியின் கருங்குயில் சிறுகதைத் தொகுப்புக்கு ஒரு சின்ன சலுகை தந்து, கையிலெடுத்து வாசித்து முடித்துவிட்டேன்.
வழக்கமாக ஷோபசக்தியின் சிறுகதைகள் இலங்கை, பிரான்ஸ் களத்துக்குள் போராட்ட இயக்கங்கள், சிங்கள அரசு, சிங்கள ஆதரவு போராட்ட இயக்கங்கள், சிங்களப் பிக்குகள், அகதியாகத் தஞ்சமடைந்த இடத்தில் வாழ்க்கைப் போராட்டம், அகதியாகப் பதிவதற்கான போராட்டம், வந்த இடத்திலும் ஜாதிய பேதம் பார்க்கப்படுவது எனப் பலதரப்பட்டதாக இருக்கும்.
அதே அலைவரிசையில்தான் கருங்குயில் தொகுப்பிலுள்ள கதைகளும் அமைந்திருக்கின்றன. அந்த வரிசையிலிருந்து மீறிய கதையென்றால் கருங்குயிலைச் சொல்லலாம். ஆறே கதைகள்.
முதல் கதையான ‘மெய்யெழுத்து’ நீரும் சோறும் மறுத்து உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்த திலீபனின் நண்பர் ஒருவரை பின்னணியாகக் கொண்டது. திலீபனின் மறைவுக்குப் பின் அவரது நினைவிடத்தையும் உடலையும் பாதுகாக்க முயலும் புலிகளோடு, அவரது உயிரைத்தான் பாதுகாக்க முடியவில்லை… உடலையாவது பாதுகாப்போம் என்ற ஏக்கத்தோடு திலீபனின் பள்ளிக்கால நண்பனான ராகுலன் என்ற மருத்துவர் முன்வருகிறார். ராகுலனால் அது முடிந்ததா என்பதை கதை விவரிக்கிறது. தன் முடிவுக்கு ராகுலன் எதையெல்லாம் விலையாகத் தரவேண்டியிருந்தது என்பதை ஷோபா அழுத்தமாகப் பதிவுசெய்கிறார்.
சிறுகதைத் தொகுப்புக்கு இடப்பட்டிருக்கும் தலைப்புக் கதையான கருங்குயில், கவிஞர் பாப்லோ நெரூதா இலங்கை வந்திருந்தபோது, அவர் தங்கியிருந்த வீட்டின் எடுப்புக் கழிவறையைச் சுத்தம்செய்ய வருகிறாள் ஒரு பெண். அவளை வலுவந்தமாக புணர்ந்த கதையை நெரூடா தனது சுயசரிதையில் பதிவுசெய்திருக்கிறார். அதில் மிச்சமிருந்த இடைவெளிகளை தனது படைப்புச் சுதந்திரத்தால் நிறைவுசெய்தாரா… இல்லை தரவுகளைத் தேடி இந்தச் சிறுகதையைப் படைத்தாரா… தெரியவில்லை. இரண்டையும் ஒருசேர பயன்படுத்தியிருக்க வாய்ப்பிருக்கிறது.
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டங்களில் ஈடுபட்ட சிங்கள இயக்கங்களில் ஒன்று ஜனதா விமுக்தி பெரமுனா இயக்கம். அதனை நிறுவியவரான ரோஹன விஜேவீர- பின்னாளில் இலங்கை அரசாங்கத்தால் ராணுவத்தின் மூலம் வேட்டையாடப்பட்டு கொலைசெய்யப்பட்டார். அவரை வேட்டையாடிய ராணுவ வீரர்களில் ஒருவன் கடந்தகாலத்தை நினைவில் மீட்டும் உத்தியில் ஆறாங்குழி கதை விரிகிறது.
உண்மையில் ரோஹன-வை சித்ரவதை செய்பவன், ரோஹனவின் வெளிக்காட்டிக்கொள்ளாத ஆதரவாளர்களில் ஒருவன். தவிரவும் தான் சித்ரவதை செய்வது ரோஹனவை என்பதை அப்போது அறிந்திருக்கமாட்டான். அரசியல்வாதிகளுக்கு தனது அதிகாரத்தைக் கேள்வியெழுப்புபவர்கள் தன் இனத்தவனாக இருந்தாலும் ஒன்றுதான்… பிற இனத்தவனாக இருந்தாலும் ஒன்றுதான். நயவஞ்சகம் செய்து, அவர்களை நரவேட்டையாடி, காலிசெய்யவே அவர்கள் தீவிரம் காட்டுவர் என்பதை கதை பதிவுசெய்கிறது. அதைத் தாண்டிய வேறுபல நுணுக்கமான விஷயங்களும் கதையில் பதிவாகியுள்ளன.
நாடுவிட்டு நாடு தாண்டிச் செல்பவர்களுக்கு தங்களது மொழி, கலாச்சாரம் மீதான பிடிப்பு அதிகமாகிவிடும். அப்படி பிரெஞ்சில் சென்று புகலிடம் பெற்ற மிதுனா என்ற பெண்ணின் தந்தை, தன் மகள் தமிழை ஆர்வமாகப் படிக்கவேண்டும் என ஆசைப்பட, அவரது கனவை வர்ணகலா எனும் ஆசிரியை சாத்தியமாக்குகிறாள். வர்ணகலா- ஆசிரியை என்பதிலிருந்து குடும்பத் தோழி என்ற அளவுக்கு மாறுகிறாள். மிதுனா பூப்பெய்தியதைக் கொண்டாடும் சடங்கில் விழாவின் முக்கிய விருந்தினராக வர்ணகலா மாறும் அளவுக்கு நெருக்கம் வளர்கிறது.
அந்த ஆசிரியைக்கு என்ன நேர்கிறது என்பதுதான் கதை. இலங்கையில் இறந்த வர்ணகலா என்பவரின் மரணம் குறித்தும், அந்த வர்ணகலாதான் தனக்கு தமிழ் கற்றுத்தந்த ஆசிரியையா என்ற மிதுனாவின் சந்தேகத்திலிருந்தே தொடங்குகிறது கதை. உள்ளடக்கம், உத்தி என்ற இரண்டையுமே சிறப்பாகக் கையாளும் ஷோபாசக்தி, இந்தக் கதையிலும் அசத்தியிருக்கிறார்.
பிரான்சுக்குச் சென்ற நான்கு சகோதரிகளும் ஒரு சகோதரனும் எத்தனை இன்னல்களுக்கு இடையில் வயதான தன் தாயை பிரான்சுக்கு வரவழைக்கிறார்கள் என ஒன் வே கதை பேசுகிறது. வழக்கமான அத்தனை உத்திகளும் பொய்த்துப் போன நிலையில் வேறொரு வழி அமைகிறது. அது அந்தக் குடும்பத்தை என்னென்ன நெருக்கடிக்கு இட்டுச்செல்கிறது… என்பதை உள்ளூர நகைப்புடன் வாசிக்கமுடிந்தது.
கடைசிக் கதையான பல்லிராஜா- தமிழர்கள் வாழும் பகுதியில் புத்தர் சிலையை நிறுவ முயலும் சீவலி பால தேரரின் கதையைப் பேசுகிறது. அங்குள்ள ஏழை ஜனங்கள் அவர் புத்தரை நிறுவும் பீடம் தங்களது காவல் தெய்வமான கொத்தியினுடையது என்று கூறி அனுமதிக்க மறுக்கிறார்கள்.
இளம் வயதில் பள்ளிக்கால நண்பன் தன் பேச்சுத் திறமையால் வஞ்சகமாக தேரரை ராஜதுரோக நடவடிக்கையில் சிக்கவைத்து சிறைக்கு அனுப்புகிறான். கெட்ட பின்பு வரும் ஞானம்போல, சிறைக்குள் அடைக்கப்பட்ட பிறகு தனக்கு இழைக்கப்படும் சித்ரவதைகளையெல்லாம் முகம்சுளிக்காமல் ஏற்றுக்கொள்கிறார் தேரர். கடைசியாக அவரை வதைக்கும் அமரக்கூன் என்ற ராணுவ அதிகாரி, இருபது வயது தமிழ்ப் பெண் கைதி மூலம் புத்த பிட்சு தன் வாழ்வில் உயர்வாகக் கருதும் அவரது பிரம்மச்சர்ய விரதத்தை அழிக்கமுயல்கிறார்.
தேரரையும் அவளையும் நிர்வாணமாக்கி, அந்தப் பெண்ணை அவர்மேல் வலுவில் படுத்து கட்டியணைக்கவும், கால்களால் தேரரை பின்னிக்கொள்ளச் சொல்லியும் உத்தரவிட, வேறு வழியின்றி அந்தப் பெண் அப்படியே செய்கிறாள். இந்த நிலையில், அதிகாரியின் பெல்ட் தேரரை இடுப்பில் விளாச, வலியில் புட்டத்திலிருந்து ரத்தமும், மற்ற இடத்திலிருந்து விந்தும் வெளியாகிறது.
தேரரை ராணுவம் சித்ரவதையும் பலவந்தமும் செய்ததெனில், தனது முதிய வயதில் புத்தர் சிலையை நிறுவ வரும் தேரரும், பக்தியின் பெயரில் ஏழைக் குடிகளை அதேதான் செய்கிறார்.
தென்மேற்கு திசைநோக்கி நிற்கும் பல்லி சத்தம் செய்தால் வந்த காரியம் நிறைவேறும் என்பது தேரரின் நம்பிக்கை. பல்லி சத்தம் செய்தால், அதற்கு இலங்கைத் தீவுக்கான அரசுரிமையைத் தருகிறேன் என்கிறார். பல்லி சத்தம் செய்ததா… இல்லையா என எதுவும் தெரிவிக்காமலே கதை முடிகிறது.