Discovering Doseteovsky is like discovering love or seeing the sea for the first time, it marks an important moment in life.
-Jorge Luis Borges
குற்றமும் தண்டனையும் நாவலை நான் முதன்முதலில் வாசித்தது 2015ல், கல்லூரி நூலகத்திலிருந்து கனமான அந்த புத்தகத்தை எடுத்து வந்து ஒன்றரை மாதங்களாக வாசித்துக் கொண்டிருந்தேன். மனிதன் பிற தண்டனைகளிலிருந்து மீட்கப்பட்டாலும், சொந்த குற்றவுணர்ச்சியினால் தன்னை அழித்துக்கொண்டுவிடுவான் எனும் புரிதலை எனக்கு அந்நாவல் வழங்கியது. ஒரு நாவலை எப்படி வாசிப்பது எனும் அடிப்படை புரிதல் ஏதும் இல்லாமலேயே அன்று நான் தஸ்தவெய்ஸ்கியை வாசிக்கத் துவங்கினேன் (இன்றும் வாசிக்கும் அனைத்து நாவல்களின் பண்பாட்டு வரலாற்றுப் பின்புலத்தையும் அறிந்தபின் வாசிக்கும் முறைமையை பின்பற்றவில்லை). டால்ஸ்டாயின் குறுநாவல்களும் புத்துயிர்ப்பு போன்ற நாவல்களையும் நான் வாசித்திருந்தாலும், தஸ்தவெய்ஸ்கியே எனக்கு மனித மனத்தின் பிரம்மாண்டங்களை திறந்து காண்பித்தவராக உணர்கிறேன். இன்றும் எனக்குள் குற்றச்செயலில் ஈடுபடவேண்டுமென்ற இச்சையெழும்போது ரஸ்கோல்னிகோவின் மனப்போராட்டங்கள் நினைவில் எழுகின்றன.
காலவரிசையில் தஸ்தவெய்ஸ்கியின் கடைசி நாவல் கரமசோவ் சகோதரர்கள். முதலில் குற்றத்தையும் அதற்கு வழங்கப்படும் தண்டனையையும் ஆராயும் குற்றமும் தண்டனையும் நாவலை எழுதினார். பின்னர் சமூகத்தின் எந்த களங்கமும் இல்லாத ஒரு புதிய மனிதனை கனவுகண்டு மிஷ்கினை “அசடன்” மூலம் கொணர்ந்தார். ஆனால் அதன்பிறகு ஏன் அவருக்கும் கடவுள் மீதும் சாத்தான்மீதும் மனித இச்சைகளின் கொந்தளிப்புகள் மீதும் இவ்வளவு கேள்விகள் எழுந்தது என்று ஆச்சர்யமாக இருக்கிறது. எழுத்தின்மூலம் அந்த எழுத்தாளன் தனது கேள்விகளை கடந்து சென்றிருக்கவேண்டும் அல்லவா, மிஷ்கினை படைத்தபிறகு ஏன் தஸ்தவெய்ஸ்கிக்கு கரமசோவை உருவாக்கும் தூண்டுதல் எழுந்தது என்பது கேள்வியாக எனக்குள் நீடிக்கிறது.
பியோதர் கரமசோவ் எனும் தந்தைக்கும் அவரது புதல்வர்களான திமீத்ரி, இவான் மற்றும் அலெக்சேய் எனும் மூன்று கரமசோவ்களுக்கும் இடையிலான சிக்கல்களை பேசுவதே இந்நாவலாகும். இவர்கள் நால்வருமே எப்பொழுதும் மனிதர்களுக்குள் இருப்பவர்கள்தான், காமத்தின் மறுவடிவமாக பியோதர் கரமசோவ் சித்தரிக்கப்படுகிறார், குரோதமோகங்களினால் அலைகளிக்கப்படுபவனாக திமீத்ரியும்; இவான் முக்குணங்களின் கலவையாக ஒரு சிந்தனையாளனாக முன்வைக்கப்பட்டிருக்கிறான் மற்றும் மகத்தான மனிதனாக இல்லாமல் ஒரு சாத்வீகமான கதாபாத்திரமாக இவானையும் தஸ்தவெய்ஸ்கி உருவாக்கியுள்ளார். மேலும் கத்ரீனாவும் குரூசென்காவும் முதன்மை கதாபாத்திரங்களாக நாவல் நெடுக வருகிறார்கள்.
இக்கதாபாத்திர அறிமுகங்களுடன் நாவல் துவங்குகிறது, ”ஒரு வினோதமான பிராணி இவர். கேடுகெட்ட ஆள். மண்டைக்குழப்பம் மிக்கவர், காசு பண விவகாரத்தில் எல்லாவித தப்புத்தவறுகளும் கூசாமல் செய்யும் மோசடிக்காரர்” என்று தந்தை கரமசோவை கதைசொல்லி அறிமுகப்படுத்துகிறார். இவருடைய முதல் மனைவிக்கு திமீத்ரியும் இரண்டாவது மனைவிக்கு இவானும் அலெக்சேயும் பிறக்கிறார்கள். முதல்மனைவி இறந்த பிறகு வீட்டை விபச்சார விடுதியைப்போல மாற்றிக்கொண்டு, மூழ்கி தனது மகன்களை கவனித்துக்கொள்ளாமல் காமக்களியாட்டத்தில் வாழ்கிறார். திமீத்ரிக்கு சேரவேண்டிய சொத்தை அளிக்காமல் அவனை ஏமாற்றி துரத்துவதுடன் கதை துவங்குகிறது. இரண்டாவது பாகத்தில் கொலைசெய்யப்படும் பியோதர் கரமசோவின் குற்ற விசாரணையுடன் முடிவடைகிறது.
தந்தையைப்போலவே கடுமையான உளக்கொந்தளிப்புகளுடன் வாழும் ஒருவனாக திமீத்ரி இருந்தாலும் மனசாட்சியை கண்டு பயப்படும் ஒரு எளிய மனிதனாகவேயிருக்கிறான்,. குற்றவுணர்ச்சிகளால் தன்னை நிறைத்துக்கொண்டு மேலும் மேலும் வதைத்துக்கொள்ளும் ஒருவனாக வாழ்கிறான். வான்யா என்றழைக்கப்படும் இவான் கரமசோவ் ஒரு சிந்தனையாளன் மதத்திற்கு அரசாங்கத்தின்மீதுள்ள ஆதிக்கத்தை குறித்து அவனது கட்டுரை தனிப்பட்ட வகையில் முக்கியமான கட்டுரையாகும் (இன்றைய இந்திய மற்றும் இஸ்லாமிய நாடுகளின் அரசியலை தொடர்புபடுத்தி சிந்திக்கவேண்டிய கட்டுரையாக எனக்குத் தோன்றியது) எழுத்தாளனாக சிந்தனையாளனாக முன்வைக்கப்படும் இந்த கதாபாத்திரம் வெளிப்பார்வைக்கு இறுக்கமான தோற்றத்தைக் கொடுத்தாலும், அவனுக்குள் இருக்கும் கேள்விகளால் அவனையே வதைத்துக்கொள்ளக்கூடியவனாகவே நாவலில் வருகிறான். அவன் எழுதிய மாபெரும் விசாரணை அதிகாரி எனும் நாடகம் இயேசுவின் மறுவருகையை மையப்படுத்தி எழுதப்பட்டு தனி படைப்பாக இன்றும் வாசிக்கப்படுகிறது.
தஸ்தவெய்ஸ்கி இறந்துபோன தனது மூன்றாவது மகனான அல்யொஷாவை அலெக்சேய் கரமசோவாகவும் இல்யோஷா எனும் சிறுவனாகவும் மீட்டுருவாக்கம் செய்து காலத்தால் அழியாமல் நிலைக்கச் செய்துவிட்டார். இயல்பிலேயே சாதுவான குணம் கொண்ட அலெக்சேய் துறவி ஜொசீமாவின் மீது கொண்ட பக்தியால் சந்நியாசியாக மாற முடிவெடுக்கிறான். பின்னர் ஜொசீமாவின் கட்டளைப்படி தனது சகோதர்களுடன் கூடி வாழ்வதற்காக வரும் அலெக்சேய் கரமசோவிற்கும் மற்ற கரமசோவ்களுக்கும் இடையிலான சிக்கல்களே நாவலாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
பியோதர் கரமசோவின் கொலையே நாவலின் பிரதான கருவாக இருந்தாலும் நாவலில் வெளிப்படும் மனித மனங்களின் இருமையான போக்குகளே நுண்மையாக கவனிக்கப்படவேண்டியவை. நாவலுக்குள் ஜொசீமாவின் ஆன்மீக உரை, இவானின் கடவுளையும் சாத்தானையும் கேள்விக்குள்ளாக்கும் சிந்தனைகளும், குற்றமும் அது உருவாக்கும் அகப்போராட்டங்களும் என எண்ணற்ற ஊடுபாவுகளை எழுத்தாளர் நெய்திருந்தாலும், முதல் வாசிப்பில் எனக்கு மனிதர்கள் அனைவரின் இயலாமையையும் பலவீனத்தையும் அன்புக்காகவும் மன்னிப்பிற்காகவும் ஏங்கும் எளியர்களாக பார்க்கும் மனப்பக்குவத்தை அளித்திருப்பதாக உணர்கிறேன். எவ்வளவு காமந்தகனாக தந்தை கரமசோவ் இருந்தாலும் தனது முதல் மனைவி இறந்தபொழுது ஒரு குழந்தையைப்போல அழுகிறார், மிகக் கொடிய விஷம் எதுவும் முழுமையான விஷமல்ல அதனுள்ளும் ஒரு துளி நன்மை ஒளிந்திருக்கிறது, எவ்வளவு இருளிலும் மனிதனால் ஒளியைக் கண்டுகொள்ள முடியுமென்று திமீத்ரி அலெக்சேயுடன் சிறையில் உரையாடும் பொழுது கண்டுகொள்ள இயல்கிறது.
தஸ்தவெய்ஸ்கி எனக்கு அளித்தது என்னவென்றால் எவ்வளவு கொடிய குற்றத்தையும் மன்னிக்கமுடியும், எந்த பாவமும் மன்னிக்கத்தக்க பாவமே என்ற ஒரு புரிதலை அளிக்கிறார், இது மட்டும்தானா என்று அவரை என்னால் குறுக்கவியலாது. இந்நாவலை கருத்தூன்றி வாசிக்கும் எவரும் மனிதர்களுடனான தங்களது உறவில் ஒரு கனிவையும் புரிதலையும் இது ஏற்படுத்துவதை நிச்சயம் உணர்வார்கள். ஒவ்வொரு நான்கு வருடத்திற்கும் ஒரு முறையும் தஸ்தவெய்ஸ்கியின் இந்தப்படைப்பை மீள்வாசிப்பு செய்தபடியே இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது, குறைந்தபட்சம் அவ்வாறேனும் தஸ்தவெய்ஸ்கியை முழுவதுமாக அறியக்கூடலாம்.