இந்த நூலில் உள்ள அனைத்து கட்டுரைகளும் ஆசிரியரின் சொந்த அனுபவங்களின் வழி அவர் அடைந்த இலக்கியம் குறித்தான திறப்புகளை உள்ளடக்கியுள்ளது. வாசிப்பதற்கு புனைவுக்கினையான சுவாரஸ்ய தன்மையுடன் உள்ளது.
ஆசிரியரின் வெவ்வேறு காலகட்டத்தில் அவருக்கு இலக்கியம் குறித்து ஏற்பட்ட புரிதல்களை, அவை கால, இடம் சார்ந்த புரிதல்கள் மட்டும் அல்ல, ஒட்டு மொத்தமாக வாழ்க்கையில் இலக்கியத்தின் பயன்மதிப்பு என்ன என்று அவர் அடைந்தவற்றை இக்கட்டுரைகளின் வழியே கடத்துகிறார். அதற்கு அவர் பயன்படுத்தியிருப்பது ஒரு சம்பவத்தின் வழியாக அவர் அடைந்த புரிதலை ஒரு படிமத்துடன் இனைத்து கூறுவது. அது அனைத்து கட்டுரைகளையும் புனைவுக்கு நிகரான அனுபவமாக ஆக்கிவிடுகிறது. பன்னிரண்டு தலைப்புகளும் ஒவ்வொரு படிமங்களே. குறிப்பாக ‘அகாலகாலம்’ என்ற கட்டுரை, ஆசிரியர் தனது முதல் சிறுகையான ‘படுகை’ யை எழுத நேர்ந்த விதத்தை சொல்லும் கட்டுரை. அதில் அவர் அடைந்த திறப்பு என்பது, மெய்யான இலக்கியத்திற்கு காலம் என்ற ஒன்று கிடையாது. அது எக்காலத்திற்குமான வினாக்களையும், விடைகளையும் தன்னுள் பொதித்திருக்கும் என்பதே. இப்படி ஒவ்வொரு கட்டுரையும் நமக்கு தமிழிலக்கிய சூழல், இந்திய இலக்கிய சூழல் என விரிந்து உலக இலக்கிய சூழல்கள் எப்படி அவை அவர்களின் பண்பாடு, அரசியல், வரலாறு, தத்துவம் ஆகியவற்றுடன் ஊடாடி சமூக மனத்தை மாற்றி வடிவமைத்திருக்கின்றன. புதுமைபித்தனின் இந்திய பன்பாட்டின் மீதான கேள்விகள், கேரளத்தில் ‘கிறிஸ்துவின்றே ஆறாம் திருமுறை’ நாடகத்திற்காக
பி.எம். ஆண்டனி சந்தித்த பிரச்சனைகள்,
தஸ்தோய், தஸ்த்தவஸ்கி உருவாக்கி அளித்த நவீன விழுமியங்களை முன்வைத்த கிறிஸ்து என்பதிலிருந்து ஒட்டுமொத்தமாக இலக்கியம் என்பது வாழ்க்கைக்கு என்ன பொருளை அளிக்கிறது, எழுத்தாளன் இலக்கியத்தின் வழி எதை உருவாக்கிவிட்டு செல்கிறான்? என்பதை அவரே உசாவி அனுபவபூர்வமாக கண்டடைந்ததை முன்வைக்கிறார்.
அவை நமக்குள்ளும் இலக்கியம் குறித்த பல திறப்புகளை ஏற்படுத்துகின்றன. இலக்கியத்தை கால, இடம் சார்ந்த தனித்தனி கூறுகளாகவும் அதே சமயம் ஒட்டுமொத்தமாகவும் அதன் அழகியல் இயல்புகள், இயங்குதளம், பயன்மதிப்பு என்ன என்பதை தெளிவாக வரையறுக்கின்றன அனைத்து கட்டுரைகளும்.
இந்த கட்டுரைகளின் வழியே ஜெயமோகன் தான், தனிமனித அனுபவங்களுக்குள்ளேயும், வடிவ போதத்திற்குள்ளும், விழிப்பு நிலை எழுத்துக்குள்ளும் அடைந்து கிடந்த தமிழிலக்கியத்தை மடைமாற்றி பிரபஞ்ச பேருண்மைகள், ஆழ்மன வெளிபாடுகளை நோக்கிய செவ்விலக்கிய பாதைக்குள் கொண்டு வந்திருக்கிறார் என்று ஆணித்தனமாக கூறலாம். இந்த நூலிலுள்ள பன்னிரண்டு கட்டுரைகளும் இலக்கியம் குறித்த பலவேறு தெளிவுகளையும், ஆழமான புரிதல்களையும் அளிக்க வல்ல முக்கியமான பதிவுகள்.