8.பத்து வைரங்கள் – கன்னட சிறுகதைத் தொகுப்பு- நுால் அறிமுகம்

அப்பா சாகேப் சிறுகதை தொகுப்பை கன்னடத்தில் இருந்து தமிழில் ஆசிரியர் கே. நல்லதம்பி மொழி பெயர்த்துள்ளார்அகநி வெளியீடு. வரிசை எண்கள் இல்லாமல் பத்து கதைகள் உள்ளன. பத்து ஆசிரியர்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் பத்து  கதைகள் மூலமாக. எளிமையான நடையில் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். சம கால மொழி நடையில் வாசகர்கள் எளிதாக படிக்கும் வண்ணம் மொழி கையாளப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த புத்தகத்தில் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு உலகத்தை, இருளும் ஒளியும் கொண்டு திறந்து காட்டுகிறது. பெரும்பாலான சிறுகதைகள் பெண்களின் உலகத்தை காட்டுகிறதுஎந்த கதையும் எந்தவொரு பிறழ்வும் விலகலும் இல்லாமல் சொல்ல வந்த கதையை சிறப்பாக தனித்துவமாக எடுத்துக் கூறுகிறது.

முதல் கதைவிலக்குகதை விவேகானந்த காமத் எழுதியது. துறவியின் கதை. குழந்தைப் பருவத்திலேயே  பெற்றோர்கள் விருப்பத்துடன் சீடனாக மடத்தில் சேர்க்கப்பட்டு, தன் மொத்த இளமைப் பருவத்தையும் இழந்தவனின் கதை. அவனுடைய ஏக்கங்கள் கதை முழுவதும் பயணம் செய்கிறது. பின்பு  ஒரு பெண்ணைப் பார்த்து அவள் இவன் மீது கொண்ட அன்பால்  ஏற்பட்ட சபலமா அல்லது இளமையில் இழந்ததை, துறவைத் துறந்து மீட்கற்பட்ட மனமாற்றமா. அவன் என்ன முடிவை எடுத்தான் இறுதியில் என்பதே மீதிக் கதைஆனால் அவன் எடுக்கும் முடிவு அபாரம்.

ஒரு பாசக் கதைஎழுதியது மதுசூதனன் வை. என். வாசகன் எழுத்தாளரிடம் விவாதம் செய்கிறான். எழுத்தாளன் அவனுக்கு விளக்கம் அளிப்பது போன்று வருகிறது. உபகதைகள் வருவது மிகச் சிறப்பு. இந்த கதை திலிப்குமார் தாக்கம் கொண்ட கதை போல் உள்ளது. வித்தியாசமான நடையில் உள்ளது. ஒரு சில கருத்துகளை நேரடியாக சொல்லாமல் ஆசிரியர் கதைகளின் வழியே போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார். சிறப்பான திறப்புகள் கொண்ட கதை.

அடுத்துமீதம்கதை. எழுதியது எச்.எஸ்.அபர்ணா. விநாயக் ஜோஷி என்ற வங்கி ஊழியரின் கதை. அவர் ஓய்வு பெற்றவுடன் எப்படி அன்றாடத்தை எதிர்கொள்கிறார் என்பதே கதை. புதிய தொழில்நுட்பத்தை கையாள முடியாமல் தவிப்பு. பின்பு கால ஓட்டத்தில் சமாளித்து செல்வதுஇந்தப் பிரச்சனை எங்கும் உள்ளது தான். அவர் ஒரு தனிமை விரும்பி. சட்டென்று அவருக்கு ஏற்படும் அனுபவம். அதில் மாட்டிக் கொண்டு எவ்வாறு அதிலிருந்து அவர் மீள்கிறார் என்பது மீதிக்கதை. ஜோஷியின்  மாற்றங்களை சிறப்பாக கதையாக்கியிருக்கிறார் ஆசிரியர். மொத்த நடுத்தர வர்க்கத்தை பருந்துப்  பார்வையில் விளக்குகிறார்

அப்பா சாகேப்கதை வியாசராவ் நிஞ்ஜூர் எழுதியது. எனக்கு மிகவும் பிடித்த கதை. இதை ஒரு அரசியல் கதை என்று மட்டும் சொல்லிவிட முடியாது. மூன்று தலைமுறைகளின் மாற்றத்தை விரிவாக எளிமையாக ஆசிரியர் கூறுகிறார். செல்வம் என்ற ஏரியில் மூழ்காமல் எவ்வாறு லாவகமாக நீந்தி நீந்தி எப்படி கடக்கிறார் சாகேப். செல்வம் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதும் ஒரு அரசியல் தான். இது செவ்வியல் தன்மை கொண்டது. கை விடப்பட்ட சிறுவன் எவ்வாறு அப்பா சாகேப் ஆகிறான். ஒரு சமூகம் தன் நிறத்தை சிரிதும் இழக்காமல் எப்படி வாழ்ந்தது. பின்பு எப்படி அரசியல் உள்ளே நுழைகிறது. அரசியல் என்றால் என்ன. காந்தியின் தாக்கத்தால் மனிதர்கள் எவ்வாறு இந்த சமூகத்தை தன் வீடு போல் தோளில் சுமந்தார்கள். இதில் மக்கள் ஏன் இடம்பெயர்கிறார்கள், குடும்பங்கள் சிதறுகிறது, தொண்டு அமைப்புகள் ஏன் தேவைப்படுகிறது என்று அழகாக கூறுகிறார். எளிமையான வாழ்க்கை என்றால் என்ன என்பதை கதைகளில் கதாபாத்திரங்களின் வழியே தெரிந்து கொள்ளலாம்.

 “பிரா கழற்றி வைத்த ஒரு நாள்கதை எழுதியது ஸ்ரீதேவி களசதா. குடும்பங்கள் எவ்வாறு பெண்களை பார்க்கிறது. சமூகங்கள் எவ்வாறு பெண்களை பார்க்கிறது. பெண்ணின் மன ஓட்டத்தை அழகாக கதையாக்கியிருக்கிறார் ஆசிரியர். கதையை கொஞ்சம் கவனம் கொண்டு படித்தால் நாம் முத்துக்களை கண்டுபிடிக்கலாம்

 “சுவருடன் பேசும் அவள்…!” கதை எழுதியது பாரதி ஹெக்டே. அம்மம்மா என்ற அம்மாவின் கதை. எல்லா அம்மாக்களின் கதையும் கூட. சுவர்தரை, சீப்பு எல்லாம் நிஜ கதாபாத்திரம் போல் கதையில் வருகிறது. அம்மம்மா ராணி போல் அழகாக இருக்கிறாள். அவள் எண்ணற்ற ஆடை அலங்காரங்கள் நகை நட்டுகள் அணித்திருக்கிறாள். அவள் ஏன் சுவருடன் மட்டுமே பேசுகிறாள் என்ற பல கேள்விகள். சுவர் அவளிடம் பேசியதா . அம்மம்மா அவள் கணவன் யங்கி தாத்தா இருவரும் எப்படி சேர்ந்தார்கள் என்பதே மீதிக் கதை. ஒரு அம்மாவின் முழு உலகத்தையும் திரையில் போட்டு காட்டி விட்டார். இறுதியில் அம்மம்மாவின் மருமகள் நிலை எப்படி மாற்றம் கண்டது என்பது தான் கதையின் சிறப்பு.

 “கார்த்தியாயினிகதை அப்துல் ரஷீத் எழுதியது. கார்த்தியாயினி என்ற பெண்ணின் கதையானாலும் பல கிளைக் கதைகள் உள்ளன. கதையின் ஆரம்பத்தில் மக்கள் தங்கள் பாடுகள் வலிகள் போக்க புலம்ப ஒரு துறவியின் ஜீவ சமாதிக்கு மலை மீது செல்கிறார்கள். மக்கள் ஏன் சேரிக்கு வந்தார்கள் . சேரி எப்படி உருவானது. கதையின் ஒரு இடத்தில் வரும் இரயில் திரும்பி பார்ப்பதற்குள் சேரியை கடந்தது. கார்த்தியாயினி பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்கிறாள் எப்படி என்பதை வாசகர்களின் யூகத்திற்கு விட்டு விட்டார். ஆனால் யூகத்திற்கு வழி செய்யும் பொருள்களை நமக்குக் கொடுக்கிறார். மிக கவனிக்க வேண்டிய கதை.

வெடிகதை தீப்தி பத்ராவதி எழுதியது. நாம் அனைவரும் வெடி போன்று வெடித்து கொண்டு புதியவர்களாக வெளியே வர வேண்டும். அனைத்திற்கும் பெண் தான் காரணம் என்ற சமூக பார்வையை ஆசிரியர் நமக்கு காட்டுகிறார். அவள் படும் பாடு மற்றும் மன வேதனையை கதையின் வழியே அழுத்தமாக புதிய களத்தில் நின்று கூறுகிறார். அவள் எடுக்கும் முக்கியமான முடிவு கதையை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்கிறது.

“24 கேரட்கதை ஸ்ரீதர் பனவாசி எழுதியது. இந்த கதை பெண்ணின் ஆழ்மனது பற்றி பேசுகிறது. ஒரு பெண்ணின் மண வாழ்க்கை பிரச்சனையாகிறது. அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறாள். மீண்டும் புதிய வாய்ப்புகள் வந்தாலும் பழைய கசப்புகள் தடுக்கிறது. கண்ணாடி  எல்லாவற்றையும் காட்டுகிறது. வெண்குஷ்டம் பற்றி பேசுகிறது. அவளை ஒருவன் காதலிக்கிறான். அவனுக்கு திருமணத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்ற தயக்கம். காதலில் காமமும் அன்பும் எந்த இடத்தில் என்பது விவாதத்திற்கு உள்ளன. ஆண் பெண் உறவு பற்றி  உளவியல் ரீதியான கதை சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது

கடைசி கதைஅபிமானிஎழுதியது பிரசன்ன சந்தேகடூர். ஒரு கதையின் கதாபாத்திரமே கதையில் வந்து தன் பாத்திர படைப்பு பற்றி விவாதத்திற்கு அழைக்கிறது. இரு  பக்கத்தில் அருமையாக கதை எழுதபட்டுள்ளது.

இந்த தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளும் சமூகத்தை விட்டு விட்டு அகத்தை மட்டுமே பேசவில்லை  மனிதர்கள் அவர்கள் வாழும் சமூகங்கள் குறிப்பாக பெண்கள் அவர்களுடைய பிரச்சனைகளைப் பற்றி விரிவாக பேசுகிறது. அதிகமான விவரணைகள் இல்லாவிட்டாலும், அது ஒரு குறையாக எங்கும் தெரியவில்லை. கதைகளுக்கு வலுச் சேர்க்கும் விதமாக தான் உள்ளது. இந்த தொகுப்பு கன்னட சிறுகதைகள் மீது ஒரு பெரிய வெளிச்சத்தை பாய்ச்சுகிறது. இந்த மொத்த தொகுப்பில் உள்ள எல்லா கதைகளும் கீரிடத்தில் உள்ள வைரங்கள் போல் மின்னிக் கொண்டே இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *