ஜெயமோகனின் ஆறு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு படையல். சற்றேறக்குறைய பிரபஞ்சனின் ”மானுடம் வெல்லும்”, ”வானம் வசப்படும்” நாவல்கள் பேசும் காலத்தின் சமகாலத்தை ஒட்டி தமிழ்நாட்டில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளின் பின்னணியில் அமைந்த கதைகள்.
அந்த காலம் பொதுவாக மக்களுக்கு அவ்வளவு நல்லதாக இருக்கவில்லை. நாயக்க, முகம்மதிய, மராத்திய ஆட்சியாளர்கள் இவர்களுடன் சென்னையை மையம் கொண்ட பிரிட்டிஷ்காரர்கள், புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்கள் என்ற தரப்புகளின் – அவர்களின் ஆடல்களின் காலம். மானுடம் வெல்லும் நாவல் தமிழ் நிலத்தின் மோசமான அரசியல் மற்றும் ஆபத்தான வாழ்க்கைச் சூழலை, அதில் சிக்கிக் கொண்ட மனிதர்களின் துயர்களை காண்பித்து அதிலிருந்து வெளியேறும் மக்களுக்கு அடைக்கல பூமியாக புதுச்சேரி திகழ்ந்ததை சொல்லி இருக்கும். எனினும் அது புதுச்சேரியின் கதை.
படையல் சிறுகதைகள் தமிழகத்தைக் காட்டுகின்றன. நிச்சயமற்ற அரசு, மக்களின் கஷ்டங்களை பொருட்படுத்தாத ஊழல் மலிந்த அதிகார வர்க்கம் என்ற பின்னணியில் அன்றிருந்த மனிதர்களின் வாழ்க்கையை வரைகிறது. தியாகம், பிரேமை, பேராசை,, நிமிர்வு, திறன் என்று வெவ்வேறு வடிவு கொண்டு மனிதர்கள் எழுந்து நம்மை பலவித உணர்வுகளுக்கு உள்ளாக்குகிறார்கள்.
அன்பின் விதைகளை அங்காங்கே சில பாத்திரங்கள் வாயிலாகத் தூவி ”மானுடம் வெல்லும்” என்று நம்பிக்கையளிக்கும் விதமாக அந்த நாவலை அமைத்திருப்பார் பிரபஞ்சன். அது அவ்வாறென்றால் படையல் சிறுகதைத் தொகுப்பு ஆன்மிகமான ஒரு அடிப்படையைக் கொண்டது.
கந்தர்வன் என்ற கதை மதுரை பெரிய நாயக்கர் என்னும் விஜயரங்க சொக்கநாதரின் ஆளுகைக்கு உட்பட்ட ஊர்களில் (திருக்கணங்குடி, பணகுடி, வள்ளியூர், நாங்குநேரி) மிகுதியான வரிவிதிப்பின் காரணமாக கஷ்டப்படும் வேளாளர்களின் சூழலைத் தெரிவிக்கிறது. நல்லவரான போதும் தெலுங்கு பிராமண அதிகாரிகளின் வர்க்கத்தை கடந்து மக்களால் அணுகப்பட முடியாதவராக அரசர் இருக்கிறார். தங்கள் முறையீட்டை அரசரிடம் கொண்டு சேர்க்க ஒரு உத்தியைக் கையாள்கிறார்கள் வேளாளர்கள். ஒரு மனிதனின் உயிர்த் தியாகத்தின் மூலம் அதைச் செய்கிறார்கள். ஊரில் பண்டாரமாக வாழும் அணைஞ்ச பெருமாள் என்பவர் முருகப்பன் என்ற வேறு ஒருவரின் பெயரில் உயிர் தியாகம் செய்விக்கப்படுகிறார். அதாவது முருகப்பனாக அவர் உயிர் விடுகிறார். அரசரிடம் வேளாளர்களின் முறையீடுகள் சேர்க்கப்படுகிறது. அவ்வாறு அவர்கள் பிரச்சினை தீர்கிறது.. அவர்களுக்காக உயிர் தியாகம் செய்த அவர் தெய்வமாக்கப்படுகிறார். அவரது சிதையுடன் தீப்பாயும் முருகப்பனின் மனைவியும் அவரது உடனுறை தெய்வமாக்கப்படுகிறார்.
முருகப்பனுக்கும் அவனது மனைவிக்குமான உறவு கதையில் காண்பிக்கப்படுகிறது. ஊராரிடம் பெற்று உண்ட உணவின் பொருட்டு ”செஞ்சோற்றுக் கடனுக்காக” ”முருகப்பனாக” உயிர்விடும் அணைஞ்சபெருமாளின் சிதையில் முருகப்பனின் மனைவி ஏன் உடன்கட்டை ஏறுகிறாள்? ஊர் வேளாளர்களின் திட்டம் அவளுக்கு தெரியாததனால் அது முருகப்பன் என எண்ணி அவள் மேற்கொண்டாளா? அல்லவெனில் ஏன் அவ்வாறு செய்தாள்? என்ற கேள்விகள் வாசகர்களின் ஊகத்திற்கு விடப்படுகின்றன.
யட்சன் கதை கந்தர்வன் கதையில் கூறப்படும் முருகப்பனின் வாழ்கையைச் சொல்கிறது. முருகப்பன் பொருள் சேர்ப்பதில் தீவிரமாக இருப்பவன். தன்னுடைய பெயரில் இறந்தவனின் பொருட்டு ஊர் நீங்க நேரும் அவன் கேரளா செல்கிறான். அங்கு தன் திறமையால் பணக்காரனாகும் அவன் பின்னர் விலைமாதர் தொடர்பினால் பொருள் இழக்கிறான் நோயாளி ஆகிறான். பின்னால் அவன் சொந்த ஊர் திரும்ப, அங்கு தன் பெயரில் தெய்வமாக நிற்கும் அணைஞ்சபெருமாளின், அவருடன் உடனுறை அம்மனாக நிற்கும் தன் மனைவியின் கோவிலைக் காண்கிறான். அதில் வசிக்கத் துவங்குகிறான். தெய்வமாக நாட்டப்பட்ட தன் மனைவியை வசைபாடிக் கொண்டு காலத்தைக் கழிக்கிறான். தான் தான் முருகப்பன் என்று சொல்லும் அவனை ஊர்க்காரர்கள் பொருட்படுத்துவதில்லை. அவனை ஒரு சித்தனாக கருதத் துவங்குகிறார்கள். அங்கேயே பின்னர் இறக்கும் அவன் அவர்கள் இருவருடனும் உடன் நிற்கும் தெய்வமாக ஆக்கப்படுகிறான். இக்கதை முருகப்பன் சித்தனாக உருக்கொள்வதை கேலி தொனிக்க சொல்கிறது.
கந்தர்வன், யட்சன் என்ற இரண்டு கதைகளும் உலகியலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தெய்வங்களைச் சொல்கின்றன என்றால் அடுத்த கதையான ”படையல்” அசல் ஆன்மிகத்தைக் காட்டுகிறது. எந்த சூழ்நிலையிலும் அசைவற்ற இஸ்லாமிய எறும்பு பாவா என்ற ஞானியைக் காட்டுகிறது. அவரது இருப்பிடத்திற்கு வரும், மரணத்தின் அச்சத்தை மரணத்தை அறிந்தே கடக்க முடியும். என்று அவ்வாறு கடந்துவந்த சிவனடியார் ஒருவரைக் காட்டுகிறது. திருவண்ணாமலை ஆலயத்தில் வெட்டி கொன்று குவிக்கப்பட்ட படைவீரர்களின் பிணங்களை, துண்டிக்கபட்ட அங்கங்கள், தசைகள் ரத்தமும் சலமுமாக – அவற்றையெல்லாம் கடந்து சென்று இறைவனை தரிசித்து அவர் தனக்கான மெய்மையை அடைகிறார். படைவீரர்களால் தாக்கப்படும் எறும்பு பாவாவின் காயத்திலிருந்து வெளிப்படும் ரத்தம் சிந்திய அரிசி முதலில் சமையலுக்கு விலக்கப்படுகிறது. பிறகு வந்த சிவனடியாரின் கதையைக் கேட்டபிறகு அது உண்பதற்கு ஏற்கப்படுகிறது. படையல் ஆகிறது.
எழுத்தாளர் அஜிதன் சமீபத்தில் எழுதிய ”ஓர் இந்திய ஆன்மிக அனுபவம்” சிறுகதை அருவருப்பை அதன் உச்சத்திற்கு சென்று கடக்கும் ஓர் அனுபவத்தைச் சொல்கிறது. அக்கதை இங்கு ஒப்பு நோக்கத் தக்கது. இங்குள்ள ஆன்மிகம் ஒற்றைப்படையானதல்ல. வாழ்க்கையின் விலக்கப்பட்ட, தவிர்க்கப்பட வேண்டியவை என்று கருதப்படும் அம்சங்களையும் காச்சாப் பொருள் போலப் பயன்படுத்தி கடந்து செல்லும் வழிமுறைகள் இங்குள்ளன. ஆன்மிகத்தைப் பொருத்தவரை இந்தியா மிகப் பெரிய ஆய்வகம் போன்றது. மிக நீண்டகாலமாக தொடர்ச்சி இழக்காமல் செயல்பட்டுக்கொண்டும் இருப்பது.
எரிசிதை – கர்பிணியான அரசவிதவையான சின்னமுத்தம்மாள் குழந்தை பிறந்தால் உடன்கட்டை ஏறி ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறாள் (அதன் பின்னால் அரசியல் கணக்குகள்). எரிசிதையை குறித்து மரண பயத்தில் இருக்கும் அவள். அதிலிருந்து தப்புவதற்கு வயிற்றிலிருக்கும் தன் குழந்தையைக் கொன்றுவிட்டால் தப்பி விடலாம் என்ற வாய்ப்பை ரகசியமாக பெறுகிறாள். ஆனால் அதை மேற்கொள்வதன் முன் கனவில் தோன்றும் தன் பிறக்கவிருக்கும் மகனைக் காண்கிறாள். பின் அவள் தன் முடிவை மாற்றிக் கொண்டு எரிசிதையை ஏற்க முடிவு செய்கிறாள். உயிருக்கு அஞ்சிய எளிய பெண்ணாக இருக்கும் அவள், தன் மகனை எதிர்காலத்தின் பேரரசன் என்று கருதும் அன்னையாக, தன்னை ஒரு அரசமாதாவாக உணரும் அந்த மாற்றம் – ஒரு பேருருக் கொள்ளல். முந்தைய கதையில் சிவனடியார் பிணங்களின் வழியாகச் சென்று அச்சத்தின் உச்ச அனுபத்தைக் கடந்து மரண பயத்தைக் கடக்கிறார் என்றால் இங்கு சின்னமுத்தம்மாள் தன் குழந்தையின் மீதான பாசத்தால் அச்சமற்றவளாகிறாள்.
இங்கு விவேகானந்தர் வீரத்தைக் குறித்து சொன்னது நினைவுக்கு வருகிறது. அச்சம் மிகுந்தவளான ஒரு பெண் தன் குழந்தையை சிறுத்தை கவ்விச் செல்கிறது என்னும்போது சிறுத்தையுடன் போராடும் துணிவு கொள்கிறாள். தன்னை சிறுத்தையின் வாயில் தந்தாவது தன் குழந்தையை மீட்க முயல்கிறாள். அந்த துணிவு அன்பினால் வருவது.
திருவள்ளுவரும் சொன்னது ”அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார்
மறத்திற்கும் அக்தே துணை.”
திரை – அடுத்த கதை. திருச்சிராப்பள்ளி ராணி மீனாச்சி தாயுமானவரின் மீது கொண்ட, பெருமாளைப் போல அவரைக் கருதும் பக்தி பிரேமையைச் சொல்கிறது. தாயுமானவர் திருச்சியை விலகி உத்திரகோசமங்கையில் வாழ்ந்து வருகிறார். திருச்சி மீது படைகளுடன் வரும் சாந்தா சாகிபுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் அவள் தாயுமானவரை மதுரை அரசின் எல்லைக்குள் கொண்டுவர ஒருவனைத் தூதனுப்புகிறாள். தனித்து பாதுகாப்பற்று இருக்கும் அவரை, அவர் மீது அவளுக்குள்ள அன்பை அறிந்து எதிரி சிறைப்பிடிக்கக் கூடும் என்று அஞ்சுகிறாள். மீனாட்சியின் தூதை தாயுமானவர் மறுக்கிறார். எனினும் அவரைக் கண்ணனைப் போல காணும் அவளது அன்பை அவர் புரிந்து கொண்டவரே. ஒவ்வொருவரும் தங்களைச் சுற்றி தாங்களே உண்டாக்கிக் கொண்ட திரையைக் கொண்டவர்களே. தங்கள் திரைகளையே அவர்கள் காண்கிறார்கள். திரையை விலக்கிக் காண்பவர்கள் அரிதான சிலரே. அவர்கள் மெய்ஞானிகள். ராணி மீனாட்சியின் திரை அழகியது எனினும் அது திரையே. ராணி மீனாட்சியின் தூய பிரேமையையும் தாயுமானவரின் மெய்மையையும் காட்டுகிறது இக்கதை. இக்கதையிலும் உலகியல் நோக்கு கொண்டவர்கள் தங்கள் கணக்குகளை போடத் தவறுவதில்லை.
ஆறாவது கதை ”மங்கம்மா சாலை.” ராணி மங்கம்மாவின் ஆட்சித்திறனை அதற்கு சான்றாக அமைந்த மங்கம்மா சாலை அமைந்த கதையைச் சொல்கிறது. நிமிர்வும் திறனும் மிக்க அந்த அரசியின் மீது மதிப்பு மிகுகிறது.
ராணி மீனாட்சி சாந்தா சாகிப்பால் ஏமாற்றப்படுகிறாள். திறன் வாய்ந்த ஆட்சியாளரான ராணி மங்கம்மா பழியால் துரோகத்தால் வீழ்த்தப்படுகிறார். இவ்விரு பெண்களை ஒரு தட்டிலும் எறும்பு பாவாவையும் தாயுமானவரையும் மறுதட்டிலும் கொள்கிறேன்.
மானுடம் வெல்லும் நாவல் சாந்தா சாகிப்பிற்கும் புதுச்சேரி பிரெஞ்சு கவர்னருக்குமான நல்ல நட்பை சிலாகித்து சொல்லி இருக்கும். சாந்தா சாகிப் பின்னர் மராத்தியர்களால் தோற்கடிக்கப் படுகிறார்.
ஜெயமோகனின் இந்த ”படையல்” சிறுகதைத் தொகுப்பு எப்போதும் அவர் ஆழமான அனுபவங்களை அளிக்கத் தவறுவதே இல்லை மீண்டும் நிறுவுகிறது. ”ஆழமற்ற நதி” என்று அவர் தலைப்பிட்டாலும் கூட அது இயல்பாகவே ஆழம் கொள்கிறது.
மொத்தமாக, எவ்வளவுதான் உலகியல் சூழல் நிச்சயமற்றதாக, அச்சமூட்டுவதாக இருந்தாலும், வாழ்க்கை கடினமாக இருந்தாலும் அதற்கெல்லாம் அப்பால், இவையெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லும் நம்பகமான ஒரு மெய்மையின் அடித்தளம் இங்கு இருக்கிறது. அது இங்கு என்றும் இருக்கிறது. அதைப் படையல் உறுதி செய்வதாக தோன்றுகிறது.