ம.நவீன் எழுதிய “தாரா” நாவல் வாசிப்பனுபவம் வித்தியாசமாகவும் விருப்பத்துக்கேதுவாகவும் அமைந்து விட்டதை அதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும். படைப்பாளி ஒருவன் தனது சிருஷ்டிக்கு அளிக்கின்ற முக்கியத்துவத்தைப் போல, பிற எழுத்தாளர்களை வாசிப்பதற்கும் அளிப்பான். தன்னைச் சுற்றி நிகழ்கின்ற சம்பவங்களை விட, தன் கால் பதியாத அந்நிய நிலங்களின் மாந்தர்களை, அவர்களின் வாழ்வியலை நுகர்வதில் பெருவிருப்பம் கொண்டிருப்பான். அவ்வகையில் டால்ஸ்டாய்,தாஸ்தயேவ்ஸ்கி,காப்கா,மார்க்வேஸ்,போல்ஹேஸ்,லுாசுன்,மோயான்,யசுனாரி கவாபட்டா,ஹென்றி டேவிட் தோரோ, ஜாக்லண்டன், சினுவா அச்சிபே,நுகுகிவா தியாங்கோ, ஈழ எழுத்தாளர்கள் என்று நாம் ஒரு பெரிய வரிசையை வாசித்து ஓய்ந்திருக்கிறோம். ஆனால் சிங்கப்பூர்- மலேசியத் தமிழ் எழுத்துகள் நான் அப்போது வாசித்துப் பார்த்தவரைக்கும் பெரிய ஈர்ப்பினை அளித்ததில்லை. ஒருவேளை அது என் போதாமையாகக் கூட இருக்கலாம். பேய்ச்சி, சிகண்டி என நவீனின் நாவல்கள் வெளியாகும் வரை அந்நிலை நீடித்ததாகவே அறிகிறேன். நவீனின் வருகையை ஜெயமோகன் மூலமாகவே நான் அறிந்துகொண்டேன். மலாய் இலக்கியத்தில் எஸ்.எம்.ஷாகீர் போன்றவர்கள் கவனத்துக்குரிய ஆக்கங்களைத் தந்திருப்பதையும்,அரவின்குமார் போல சமீபத்தில் எழுதத்தொடங்கியிருப்பவர்களிடத்தும் கூட ஒரு தெளிவையும், தன்னம்பிக்கையையும் கண்டு வியந்ததும் அப்படித்தான். நவீன் சிறந்த புனைவெழுத்துக்காரராகவும் இதழாளராக, பதிப்பாளராக, திரைத்துறைப் பங்களிப்பாளராகவும் இருக்கிறார்.
தாரா நாவலை இரண்டு இனக்குழுக்களுக்குள் நடைபெறும் மோதல், அதன் தொடர்பான சம்பவங்கள் என குறுக்கிக் காண இயலாது. “வயல்ல மேயுற காக்காவ வெரட்டுற வேலைக்குன்னு“ ஒட்டன் தலைமுறையின் ஒரே ஜாதி சார்ந்த முப்பது குடும்பங்களைச் சேர்ந்த ஜனங்களைக் கங்காணிமார் பகாங்கு காட்டுக்குள் கொண்டு வந்து சேர்க்கிறார்கள். சுத்தமான கள்ளை ராசாக்களுக்கு கொண்டு சேர்க்கும் நம்பிக்கையான இனம். குலதெய்வம் நின்னுகெடந்த ஒரு பிடி மண்தான் அவர்களுக்கு தெய்வம்.கரட்டு நிலத்தைத் திருத்தி கழனியாக மாற்றி வேர் பிடித்தபோது வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேறுநிலம் தேடி அலைந்து கரங்கான் நதி பாயும் கரங்கான் வட்டாரம் சுங்கை கம்பம் வந்து சேர்கிறார்கள். நல்ல கண்ணுப் பெரியவர்தான் கரங்கான் நதி நீரின் சுவையறிந்து அந்த நிலத்தைத் தேர்வு செய்கிறார். இந்த சுங்கை கம்பம் உருவான வரலாறு கட்டை பிரம்மச்சாரியாகிய முத்தையா பாட்டனுக்குத்தான் தெரியும்.
கி.ராஜநாராயணன் தனது “கோபல்ல கிராமம்” நாவலில் தெலுங்கு தேசத்திலிருந்து துலுக்கராஜாவின் இன்னல்களைத் தாளாமல் புலம் பெயர்ந்து தமிழ் நாட்டின் கரிசல் காட்டுக்கு வந்த கம்மவார் நாயுடு ஜனங்களையும் காட்டைத் திருத்தி அவர்கள் தங்கள் வாழ்க்கையைச் சீரமைத்துக்கொண்டதையும் எழுதியிருப்பார். அது 175 பக்கங்களுக்குள் எழுதப்பட்ட ஒரு இனக்குழுவின் கதை. ம.நவீன் தாரா நாவலில் ஒட்டன் தலைமுறை புலம்பெயர்ந்து சுங்கை கம்பம் வந்து சேரும் சித்திரத்தை எழுதும்போது நமது மனக்கண்களில் கி.ரா.வின் கோபல்ல கிராமமும் தோன்றி நீங்குகிறது. ஆனால் இரண்டு நிலங்களுக்கும் பாரிய வித்தியாசங்கள் உண்டு. ராஜநாராயணன் காட்டியது மழையே பெய்யாத வானம் பார்த்த பூமி. நவீன் காட்டுவது கரங்கான் நதி பாயும் செழிப்பான பிரதேசம்.
சுங்கை கம்பத்து ஜனங்களின் குலதெய்வம் கோபம் மிக்க கந்தாரம்மன். பெருத்த நீல உடலும் கையில் மண்டையோட்டு மாலையுங் கொண்ட அகோரச் சிரிப்புக்காரி. தென்னங்கள்ளை விருப்ப பானமாகக் குடிக்கும் இவள் ஆச்சரியப்படத்தக்க வகையில் சைவ சாப்பாட்டுக்காரி. காலடி மிதிபட்டு ஒருவன் கிடக்க, இடிமுடியைச் சூட்டி நாக்கில் குங்குமம் தடவுகையில் காண்போர் கதிகலங்குவர். இந்த குலதெய்வத்துக்கும் ஒட்டன் தலைமுறை மூதாதையருக்கும் முன்பகை இருந்தது. இந்தப் பகையின் காரணமாக கந்தாரம்மனுக்கு கோவில் கட்டாமலேயே இருக்கிறார்கள். குலதெய்வத்துக்கும் அதை வழிபடும் ஜனங்களுக்கும் முன்பகை இருப்பதும்- அதனால் கோவில் கட்டப்படாமல் இருப்பதும், மீறிக்கட்டியபோது தொடர்ந்து துர்சம்பவங்கள் நிகழ்வதும் போன்ற கதையாடலை தாரா நாவலில் தான் முதல்முறையாக வாசிக்கிறேன். அதுதான் முனியாண்டி இருக்கிறாரே- பிறகு எதற்கு கந்தாரம்மனுக்கு கோயில் என்று ஜனங்களிற் சிலர் நினைக்கிறார்கள். “முனியாண்டி வீதியில் காவல் காப்பார்,.வீட்டுக்கு வருவாரா?” என்று அவர்களில் சிலர் அதற்கு பதிலும் கூறிக்கொள்கின்றனர். காலமெல்லாம் கந்தாரம்மன் கோவிலே கதியென்று கிடக்கும் அஞ்சலையின் குணசித்திரத்துக்கும் நாவலில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அஞ்சலையின் கணவன் சங்கரன் “இனிவரும் உலகம்” படிக்கின்ற பெரியாரிஸ்டாக சித்தரிக்கப்படுகிறார். பெரியார் பினாங்கு வந்திருந்தபோது பெற்றோரிடம் சொல்லாமல் ஓடிப்போய் கூட்டத்தில் கலந்துகொண்டு நான்கைந்து நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்தவர் அவர். ஆனால் நகைமுரணாக கந்தாரம்மனுக்குக் கோவில்கட்ட அவர்தான் தன்னுடைய விளைநிலத்தை 99 வருடக் குத்தகைக்கு வழங்குகிறார்.
சாமி வாணாம் சாதி வாணாம்ங்கிறவனோட புத்தகத்தைப் படிக்கிறவன், கோவிலுக்கு நிலத்தை வலியக் கொடுத்ததில் சிலருக்குச் சந்தேகமும் ஏற்படுகிறது. ஆனாலும் பெட்டிக்குள் வைத்துப் பாதுகாத்த ஒருபிடி மண்ணிலிருந்து கந்தாரைம்மன் கோவில் எழுகிறது.-நதிக்குப் பக்கத்தில் ரம்மியமான தோற்றத்தில். தேவகோட்டைச் சிற்பி முத்துக் கருப்பர் அம்மனின் திருமேனியை வடிவமைக்கிறார்.
நதியுடன் ஒட்டிய குன்றுக்கோவிலாக அது பிரபலமடைகிறது. இவ்வாறிருக்க,கோவிலுக்கு நிலத்தைக் குத்ததைக்கு விட்ட மறுவருடமே சங்கரன் எலும்புப் புற்றுநோயால் இறந்து விடுகிறார். அஞ்சலையும் மகள் அமிர்தவள்ளியும் நிராதரவாகின்றனர். கோவில் கட்டிய மறுவருடம் கோவிலுக்கு நிலம் கேட்டு அரசாங்கத்துடன் போராடிய அரசியல்வாதி சாமிநாதனின் பதவி பறிபோகிறது. இதுபோன்ற காரணங்களால் கம்பத்து ஜனங்கள் கோவிலுக்கு வருவதை நிறுத்திக்கொள்கின்றனர். அவளை வணங்கினால் தங்கள் குடும்பங்களிலும் துர்சம்பவங்கள் நிகழுமோ என்கிற அச்சம். அதிர்ஷ்டமற்ற கோவில் எனச் செய்தி பரவியதால் கோவிலுக்கு வருமானம் குறைகிறது. ஆனாலும் எல்லா ஜனங்களையும் போல அம்மனைக் கைவிடுவதில்லை அஞ்சலை. முத்தையா பாட்டன் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் அமைதியாக கோவில் கோபுரத்தைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்.
அஞ்சலையின் மகள் அமிர்தவள்ளி. அமிர்தவள்ளியின் மகள் கிச்சி. (கிச்சி என்றால் மலாயில் சிறிய உருவம் என்று பொருள் சுட்டப்படுகிறது). அமிர்தவள்ளி சுப்ரமணியத்துடன் ஒடிப்போய் திருமணம் செய்துகொண்டதில் பிறந்தவள் கிச்சி. லிங்கம், கோகிலா எனத் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்துகொண்டு கிச்சி கோவில் குளத்துக்குள் மூழ்கிக் காசு எடுக்கின்ற காட்சியுடன்தான் நாவல் தொடங்குகிறது. வாழைத்தோப்புகள்,காய்கறித்தோட்டங்களின் வழியே கிச்சியும் கூட்டாளிகளும் பயணிக்கின்ற மற்றோர் இடம்,மல்லிகை விவசாயம், மல்லிகை மலர்களின் வாசனை என்று அந்த அத்தியாயம் இயற்கையுடன் இயைந்ததாக அமைகிறது. “பெரியவனானதும் பணம் சேர்த்து நிலம் வாங்கி விவசாயம் செய்வேன்” என்று கூறும் லிங்கத்தை “நீ குகன் அபாங்காட்டம் ஆகணும்னு சொன்னியே” என்று கோகிலா மடக்க, “நான் அப்படியுமிருப்பேன் இப்படியுமிருப்பேன்“ என்று லிங்கம் சமாளிக்கிறான்.
குகன் இந்நாவலில் மூர்க்கம் நிறைந்த ஒரு இளைஞனாக, கிட்டத்தட்ட எதிர்மறைக் கதாநாயகன் அந்தஸ்து பெறுகிறான். குகன் தமிழர்களுக்கு மாற்றாக அங்கு வசிக்கின்ற நேபாளிகளை வெறுக்கிறான். அவர்களைப் பிழைக்க வந்தவர்கள் என்று விமர்சிப்பதுடன் அஞ்சி ஒடுங்கும் அவர்களின் சுபாவத்தைச் சாக்காகக் கொண்டு பணம் பறிக்கிறான். இது மற்ற தமிழ் இளைஞர்களுக்கும் முன்னுதாரணமாகஅமைகிறது. நேபாளிகள் தொடர்ந்து சீண்டலுக்கும், தாக்குதலுக்கும், பொருளிழப்புக்கும் ஆளாகின்றனர். வாஸ்தவத்தில் தமிழ்களுமே கூட அங்கு பிழைக்க வந்தவர்கள்தாம். என்ன,நேபாளிகளுக்குச் சற்று முன்னர் வந்தவர்கள், அவ்வளவுதன். இது நாவலில் பகிரங்மாகவே சுட்டிக்காட்டப்படுகிறது. மேலும் பாதிப்புக்குள்ளாகும் நேபாளிகளின் மீதான நாவலாசிரியரின் கருணையையும் இனங்காண இயல்கிறது.
கிரீன் மர ஆலை உருவாகிறது. தமிழ் இளைஞர்கள் நிலத்தில் வேலை செய்வதைக் கைவிட்டு, மர ஆலையில் வேலைக்கு இணைகிறார்கள். எந்த நேரத்திலும் விவசாயம் தங்கள் கையைவிட்டுப் போய்விடும், நிலம் தங்களின் கையைவிட்டுப்போனால் அரசாங்கம் தங்களை வெளியேற்றக் கூடுமென்று பெரியவர்கள் அஞ்சுகின்றனர். ஆனால் இளைஞர்களுக்கு அப்படியான பிரக்ஞை இல்லை. அந்த மர ஆலையிலுமே கூட தமிழர்களுக்கும் நேபாளிகளுக்குமிடையில் மனக்கசப்பு ஏற்படுகிறது.
நேபாளத்தில் சாதிய முறை இறுக்கமானது. அது ஆளும் மேல்வர்க்கத்தால் கட்டமைக்கப்படுவது என்ற வாசகர் அறிந்துகொள்ளும் அதேசமயத்தில் நேபாளிகளில் “பொதயா” என்னும் தாழ்ந்த சமூகத்தைச் சேர்ந்த சனில், கூலிம் நகரத்து நேபாளிகளின் தலைவரைப் போல அறிமுகமாகிறார். சனிலின் மனைவி திமிலா. இவர்களுடைய மகள் அந்தரா. அந்தரா கற்றுக்கொள்ள ஆவல் கொள்ளும் “ஷர்யா நிர்த்யா” பண்பாட்டு நடனத்தின் வழியே- நாவல் அதுவரை பயணப்பட்டுவந்த யதார்த்தவாதத் தன்மையை நவீன் மாய யதார்த்தவாதத்துக்குத் திசைமாற்றுகிறார்.
ஷர்யா நிர்த்யா நேவாரியின் பண்பாட்டு நடனம். அதை “பஜ்ராச்சார்யா” என்கிற உயர்ஜாதியினர் மட்டுமே ஆடுகின்றனர். மீறி அந்த நடனத்தைப் பிற ஜாதியினர் ஆடினால் தண்டிக்கப்படுகின்றனர். ஷ்ர்யாநிர்த்யா நடனத்தை முறையாக மனம் ஒன்றி ஆடும்போது ஆடுபவர் உடலுக்குள் தாராதேவி நுழைந்து ஆக்ரமிப்பாள். அப்படி அவளை உடலுக்குள் அழைப்பதுதான் இந்த நடனம். உலகில் மக்கள்படும் துன்பங்களைக் கண்டு அழுத அவலோகிதேஷ்வரர் எனும் புத்தரின் கண்ணீர் பெருங்குளமாகி அதில் பூத்த 21 தாமரைகளிலிருந்து பிறந்து வந்தவர்கள்21 தாராக்கள். இவர்களுள் பச்சை நிறத்தாராவே மூத்தவள். உயர்ந்த குணங்களின் அதிபதி தாரா. சரி, இந்த உயர்ந்த குணங்கள் தான் என்ன?, பதில்- நிபந்தனையின்றி மன்னித்தல். கருணையும் அன்பும் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். தாராவின் பிரதான பணி, மனிதர்களை ஞானத்தை நோக்கி அழைத்துச் செல்வதாகும்.
சனிலின் மகள் அந்தரா “ஷர்யா நிர்த்யா” நடனம் ஆட ஆவல் கொள்கிறாள். ஆனால் மறுக்கப்பட்டு தண்டனைக்குள்ளாகிறாள். “பஜ்ராச்சார்யா ஜாதியினர் மட்டும் இந்தப் பண்பாட்டு நடனத்தை ஆடுதல் முறையாகாது. நம்மைப் போல் தீண்டத்தகாத ஜாதியைச் சேர்ந்த ஒருத்தி ஆடுவது எப்படி தண்டனைக்குரியதாகும்” என்று மகளுக்குப் பரிந்து கேள்வி எழுப்புகிறார் சனில். பவுத்த நாத்தில் பச்சை நிறத் தாராவின் ஓவியத்தை வாங்க சனிலிடம் காசு இல்லை. பல்லாயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் பச்சைத்தாராவை மனதுக்குள்ளேயே உருவாக்கிக்கொள்கிறாள் அந்தரா.
நாவலில் அந்தராவுடன் அஞ்சலையின் மகள் கிச்சி இணைவதும், இருவரும் ஆங்கிலத்தில் உரையாடிக்கொள்வதும், லிங்கமும் கோகிலாவும் அதை அதிசயித்துப் பார்ப்பதும் எழுதப்படுகிறது. இருவரின் பயணம் நீள்வதும் இறுதியில் முடிவை அடைவதுமாக நாவல் முற்றுப்பெறுகிறது. இவ்வாறான மாயப்புனைவுத் தருக்கத்தைத் துணிச்சலாக நாவலின் மையப்புள்ளியுடன் இணைத்து அதில் வெற்றியும் பெறுகிறார் நவீன். ஒரு யதார்த்தப் பிரதி இதன் வழியே தனது நேர்கோட்டுப் பயணத்திலிருந்து கிளைத்து மற்றொரு பரிணாமம் அடைகிறது.
குகன் கொலையுண்டு அதன் மர்மம் துலங்காத இடத்திலிருந்து தொடங்கிப் பல முடிச்சுகளோடு நாவல் வளர்ந்து செல்கிறது. சம்பவங்களை முன்னுக்குப்பின் பின் நகர்த்தி கதை கூறிச் செல்கிறார் நவீன். அஞ்சலையின் மகள் அமிர்தவள்ளி, சுப்ரமணியம் என்பவனுடன் ஓடிப்போய் குழந்தை பெற்றுக்கொண்டு, பத்து வருடங்களுக்குப் பின் திரும்பிவந்து தாயைச் சந்திக்கிறாள். அஞ்சலை அவளை விரட்டுவதும், அமிர்தவள்ளி தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு அவளிடம் மன்றாடுவதுமான போராட்டம் நெகிழ்த்துகிறது. அதேபோல அஞ்சலை தன் பேத்தியிடம் கண்டிப்புடன் நடந்து கொள்வதும். அமிர்தவள்ளி தன் கணவன் இற்நத விவரத்தை ஏன் அவ்வளவு காலம் கழித்துத் தாயிடம் கூறவேண்டும் என்னும் கேள்வி எழவே செய்கிறது. தலைவர் மருதுவுக்கு குகன் கொலையில் தொடர்பிருக்கும் என்பதும் சூசகமாகவே உணர்த்தப்படுகிறது.
நாவலில் சனில்- திமிலா தம்பதியினரின் அந்நியோன்யம் வாசக கவனத்துக்குள்ளாகிறது. “ஏன்நம்மை அடிக்கிறார்கள், ஏன் நம்மைக் கொல்ல நினைக்கிறார்கள், ஏன் இந்தப் பகை” என்று கரகரத்து சனில் திமிலாவின் வயிற்றில் புதைவதும், “அவர்கள் இந்நாட்டில் தங்களை பலவீனமாக உணர்கிறார்கள். பலவீனமானவர்கள் அச்சத்தை வன்மமாகத்தான் பார்ப்பார்கள்” என்று திமிலா அதற்கு பதில் கூறுவதும் நாவலின் அந்தரங்கத்தைப் பகிர்ந்து கொள்வது போலிருக்கிறது. அதேபோல சனில், ராக்காயியும் மருதுவும் தன்னிடம் தர்க்கிக்கும்போது “இது உங்கள் தேசம்.நாங்கள் இங்கே எலிகள் போல வாழ்கிறோம், பாருங்கள் அழுக்கடைந்த இடத்தில் ஒருவரை ஒருவர் உரசிக்கொண்டு” என்று சரணடைவதும் நிகழ்கிறது. அபி என்கிற நேபாளி இளைஞனுடன் ராக்காயி மகள் கவிதா ஓடிப்போவது இரண்டு இனங்களுக்கிடையிலான பகையை உச்சத்துக்குக் கொண்டு செல்கிறது.
சாதி ஒரு முக்கிய விடயமாக நாவலில் விவாதிக்கப்படுகிறது. நேபாளிகள் என்றில்லை தமிழர்களுக்குள்ளும் சாதி உள்ளோடிக் கொண்டிருப்பதை பிரதியின் பல இடங்களில் அவதானிக்கிறோம். “புத்தமதத்திலும் சாதி இருக்காடா?” என்கிற கேள்வியையும் எதிர்கொள்கிறோம்.
“அடங்காத மாட்டுக்கு அரசனோட மூங்கில்தான் தடி“ ”ஊரார பகச்சாரில்ல உசுரோட பொழச்சாரில்ல“ “அம்மாபாடு அம்மணமாம் கோயிலுக்கு கொடுத்தாளாம் கோதானமாம்” “இங்கிதம் தெரியாதவளுக்கு என்னாடி சங்கீதம்” “நாயிக்கி வேலை இல்லியாம் நிக்க நேரமில்லையாம்““பிஞ்சுல முத்துன பீர்க்கங்கா சந்தைக்குப் போகாது” போன்ற பழமொழிகளை இந்நாவலிலிருந்து சேகரித்துக் கொண்டேன். தாரா ஒரு சிறந்த நாவல் வாசிப்பனுபவம். நவீனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.