ஜே.சி குமரப்பா தனது கடைசி காலத்தில் தமிழகத்தில் உள்ள கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமத்தில் சேவையாற்றினார். அப்போது அங்கு ஒரு தனியார் முதலாளி அரிசி ஆலை வைக்க முயற்சிக்கிறார். ஆனால் குமரப்பா இந்த பகுதிக்கு இங்கு தயாரிக்கப்படும் கைக்குத்தல் அரிசி போதுமானது என்று தடுக்கிறார். ஆனால் அந்த ஆலை முதலாளி தமிழக அமைச்சர் வழியாக அனுமதி பெற்று கல்லுப்பட்டி எல்லை முடியும் இடத்தில் அமைத்து விடுகிறார் . இதன் பிறகு ராஜேந்திர பிரசாத் குமரப்பாவை சந்திக்க வந்தபோது அங்கு ஆலை அமைக்க உதவிய அரசியல்வாதியை காட்டி” தான் வாழ்நாள் முழுதும் எதை எதிர்த்தேனோ
அதை நான் சாகும் வரை என் காதில் விழும்படி உதவி செய்தவர் ” என்கிறார்! பெரு எந்திரங்களுக்கு, பெரு நிறுவனங்களுக்கு மாற்றாக கிராம பொருளாதாரம் , கிராம சுயசார்பு கைத்தொழில்கள் என தன் வாழ்நாள் முழுதும் உழைத்த மனிதரின் முடிவு காலத்தில் அவர் காணும் சூழல் எங்ஙனம் இருந்தது என்பதற்கு இது உதாரணம் . இப்படி நிறைய குமரப்பா வாழ்க்கை சார்ந்த பல தகவல்கள், அவர் நோக்கங்கள், அவர் வாழ்க்கையில் நிகழ்ந்தவைகள் அடங்கிய இந்த நூல்கள் நமக்கு குமரப்பா பற்றிய முழுமையான சித்திரத்தை அளிக்கிறது .
முருகப்பா இங்கிலாந்தில், பின் அமெரிக்காவில் கல்வி பயின்றவர். கல்வி அளித்த வேலைவாய்ப்பு காரணமாக ஆரம்பத்தில் செழிப்பாக வாழ்ந்தவர். அவர் காந்தியை சந்தித்த பிறகு அவர் வாழ்க்கை அப்படியே மாறி எளிய வாழ்க்கையும் பொதுசேவை பணிகளும் என்று மாறி விடுகிறது. அவர் வாழ்க்கை எப்படி மாறி விடுகிறது என்பதை இந்த நூல்கள் இரு நிகழ்வுகள் வழியாக அழகாகச் சொல்கிறது. குமரப்பா காந்தியை பார்த்த பிறகு காந்தி அவரை குஜராத் கிராம சூழல் சார்ந்த தகவல் சேகரிப்பு பணிக்காக குஜராத் வித்யா பீடத்தைச் சார்ந்த காலேல்கரை சந்திக்க அனுப்புகிறார். அவர் குமரப்பாவின் வசதியான தோரணையைப் பார்த்து இவர் செயலாற்ற வாய்ப்பு இல்லை என்று திருப்பி அனுப்புகிறார். சரியாக இது நடந்து 15 ஆண்டுகள் பிறகு இன்னொரு நிகழ்வு நடக்கிறது. குமரப்பா அப்போதே பெரும் தொகையான 19 லட்சம் மதிப்புள்ள காசோலையை எடுத்து ஒரு வங்கிக்கு கணக்குத் துவங்க செல்கிறார். ஆனால் வாசலிலேயே இவரது ஏழ்மைத் தோற்றத்தைப் பார்த்து காவலாளி உள்ளே விட மறுக்கிறார். உள்ளே சென்று இவர் தன் கல்வித் தகுதியைச் சொல்லி காசோலையை காட்டிய பிறகே இவரின் மதிப்பை அந்த வங்கியினர் உணர்கின்றனர்! காந்தியை சந்தித்த பிறகு, தன்னை காந்திய இயக்கத்தில் ஈடுபடுத்தி கொண்ட பிறகு மனம் , புறத்தோற்றம் என எல்லாவற்றிலும் எளிமையைக் கைக்கொண்டு முழுமையான காந்தியவாதி ஆகிவிடுகிறார்.
மா. பா. குருசாமி அவர்கள் இந்த நூலில் சொல்வது போல காந்தி மற்றும் குமரப்பாவின் முதல் சந்திப்பு என்பது பரமஹம்சர்- விவேகானந்தர் சந்திப்பு போன்ற ஒன்றுதான். காந்தி இவரை கண்டு கொள்வது இவரது திறனை மதிப்பிட்டு என்றாலும் குமரப்பா இவரைக் கண்டு கொண்டது அவரது ஆன்மீக மனநிலை பின்னணி காரணமாக என்று சொல்ல இயலும் . ஏனெனில் குமரப்பா கிருஸ்துவர் , மனிதர்கள் மீது இரக்கம் கொண்டு அவர்களுக்கு என இருக்கும் கிறிஸ்துவின்பால் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். காந்தியிடம் அவர் கிறிஸ்துவை கண்டு கொள்கிறார். கண்டவுடன் சட்டென தன்னை முற்றிலுமாக ஒப்புக் கொடுக்கிறார் ( இது என் பார்வை அல்ல , மா. பா. குருசாமி அவர்கள் சொல்லும் கருத்து இது, நானும் இது சரியானது என்று எண்ணுகிறேன் ) .
குமரப்பா தன்னிருப்புக்கான வாழ்க்கை செயல்பாட்டு முறைகளை ஐந்தாக வகுக்கிறார் .
1. கொலை வாழ்க்கை – அடுத்தவர்களை அழித்து வாழ்வது – புலி போன்ற மிருக வாழ்க்கை , அப்படி வாழும் மனிதர்கள் என .
2. கொள்ளை வாழ்க்கை – அடுத்தவன் உழைப்பை அபகரிப்பது – குரங்குகள் செய்வது போல
3. முயற்சி வாழ்க்கை – தானே முயன்று வாழ்வது – தேனீ போல .
4. குழு வாழ்க்கை – குழுவாக இயங்கி முன்னேறுவது – இதற்கும் தேனீ உதாரணம்
5. தாய்மை வாழ்க்கை – அடுத்தவருக்காக வாழ்வது – அம்மா குழந்தைகளுக்காக தன்னலமற்று வாழ்வது போல .
இதில் தாய்மை வாழ்கையை மேலானதாக வைக்கிறார். இந்த இயல்பை காந்தியிடம் பார்க்கிறார். கிறிஸ்துவின் இயல்பு என நம்புகிறார். இந்த நம்பிக்கையே காந்தியிடம் இவரை இணைக்கிறது.
காந்தியும் சரி, குமரப்பாவும் சரி தீவிர கடவுள் நம்பிக்கையாளர்கள். இவர்களது மன உறுதியின் மிக முக்கிய காரணி இந்த நம்பிக்கைதான் என்று தோன்றுகிறது . இவர்கள் இருவருக்கும் உள்ள இன்னொரு ஒற்றுமை இவர்களது அம்மாக்களின் இயல்பு இவர்களிடம் இருப்பது . இந்த நூலில் வேறு எதையும் படிக்க வில்லை என்றாலும். இவரது அம்மா வரும் பகுதிகளை மட்டுமாவது ஒருவர் படிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன் . கருணை எனும் அம்சத்தை இவரது அம்மா எப்படி மிக எளிதாக இவருக்குள் கொண்டு வருகிறார் என்பதை அம்மா வரும் பகுதிகள் அழகாக காட்டும் .
இப்போது இருக்கும் கிருஸ்துவ சூழலில் தசம பாகம் என்பது பத்தில் ஒரு பகுதியை சர்ச்க்கு அளிப்பதாக இருக்கிறது. ஆனால் குமரப்பா வாழ்ந்த இளம் சூழலில் அந்த தசம பாகம் என்பது இல்லாத எளியவர்களுக்கு அளிப்பது என்றாக இருந்திருக்கிறது. சம்பாத்தியத்தில் பத்தில் ஒரு பாகத்தை தானம் அளிக்க வேண்டும் . குமரப்பாவின் அம்மா இதை தன் பிள்ளைகளிடம் உறுதியாக கடைப்பிடிக்க வைக்கிறார் . பிறருக்கு உதவ வேண்டும் என்ற குணத்தை குமரப்பா தன் அம்மாவிடம் இருந்து பெற்று இருக்கிறார் . உண்மையான கிருஸ்துவ இயல்பு என்பது பிறருக்கு உதவுவது என்பதை அவர் அம்மா வரும் பகுதிகள் அழகாக, வாசிக்கும் நமக்கு காட்டுகிறது.
குமரப்பா ஆரம்பத்தில் தேசம் சார்ந்து என்று இருக்க வில்லை ,கணக்கு தணிிக்கை சார்ந்து படிக்கிறார். இங்கிலாந்தில் படித்த பிறகு அங்கேயே ஒரு நிறுவனத்தில் இணைந்து நன்றாக சம்பாதிக்கிறார். அங்கேயே இருக்கும் எண்ணத்தில்தான் இருக்கிறார் . அம்மாவின் வற்புறுத்தல் காரணமாக இந்தியா வந்து பாம்பேவில் பணிபுரிந்து ,பிறகு தனியாக நிறுவனம் ஆரம்பித்து நன்றாக சம்பாதிக்கிறார். அவரது சகோதரர் அமெரிக்கா அழைக்க அங்கு சுற்றிப் பார்த்து வரலாம் என்று சென்றவர் அங்கு படிக்க ஆரம்பிக்கிறார். அங்கு ஆய்வுக்கு என எடுக்கும் “பொது நிதியும் நமது வறுமையும் ” தலைப்புதான் இவருக்கு பிரிட்டிஷார் இந்தியாவை கொள்ளையடிப்பது சார்ந்த புரிதலை அளிக்கிறது . இதுதான் இவருக்கு பொதுநலன் சார்ந்து இயங்க தூண்டுதலை வைத்த முதற்புள்ளி, இந்த நூல் குமரப்பாவின் படிப்பு , பணி , மனநிலை சார்ந்த விரிவான தகவல்களை நமக்கு அளிக்கிறது .
காந்திக்கு இருக்கும் தனித்திறனை நூல் நமக்கு கூடுதலாக அளிக்கிறது. குமரப்பா எழுதிய ஆய்வை ( பொது நிதியும் நமது வறுமையும் ) வாசித்தவுடன் அவரை கண்டு கொண்டு விடுகிறார்! மேலும் அவரிடம் எது இல்லையோ அதை அவருக்கு அளிக்கிறார். குஜராத்தின் கிராமத்தின் சில பகுதிகளை தேர்ந்தெடுத்து அங்கு சென்று தரவுகள் சேகரித்து தரும் படி கேட்கிறார் ( ஆய்வு அறிக்கை ) . அதாவது குமரப்பா அதுவரை உயர் பின்னணி சூழலில் இருந்தவர், அவருக்கு நமது கிராமங்கள் எப்படி இருக்கின்றன எனும் அனுபவத்தை அளிக்க அந்த ஆய்வினை அவருக்கு அளிக்கிறார் . இந்த ஆய்விற்குப் பிறகு குமரப்பா கிராமங்கள் பற்றிய பல்வேறுவிதமான புரிதல்களை கண்டடைகிறார் !
குமரப்பாவின் பங்களிப்புகள் என ஒரு புரிதலுக்காக நான்காக வரையறுக்கலாம் .
1. ஆய்வுகள் ( தனிப்பட்ட கல்வி சார்ந்த ஆய்வு , கிராமச் சூழல்கள் சார்ந்த ஆய்வு, பிற நாடுகளில் சென்று அவை எப்படி இயங்குகின்றன என்பது சார்ந்த ஆய்வு )
2. எழுத்து பங்களிப்புகள் ( நூல்கள் , யங் இந்தியா போன்ற இதழில் எழுதியவை என )
3. கிராம கைத்தொழில் சார்ந்த செயல்பாடுகள் .
4. பீகார் பூகம்ப சமயத்தில் அவர் மீட்பு குழு சார்ந்து அளித்த கணக்குத் தணிக்கை சார்ந்த செயல்பாட்டு பங்களிப்புகள் .
இந்த நூல் இவரது மேற்கண்ட பங்களிப்புகள் சார்ந்த தகவல்கள் மற்றும் அந்த தகவல்களை ஒட்டி குமரப்பாவின் இயல்புகள் பற்றிய விரிவான சித்திரத்தை நமக்கு அளிக்கிறது .
குமரப்பாவின் இயல்புகள் என இந்த நூல் காட்டும் சிறப்புகள் என்பது.
1.நேரம் சார்ந்த கவனம் : காலத்தை முன்பே திட்டமிட்டு அந்த திட்டமிடல் சார்ந்தே செயல்படுவார் , அதில் இருந்து காந்தியே வந்து மாற்றச் சொன்னாலும் மாற மாட்டார் ( உண்மையாக இப்படி நிகழ்வு நடக்கிறது !)
2. நேர்மை/ துணிச்சல் : தவறு யார் செய்தாலும் அதை பொறுத்துக் கொள்ளாதவராக இருக்கிறார் , பல நிகழ்வுகள் இந்த நூலில் இதற்கு உதாரணங்களாக வருகின்றன.
3. தீவிரம் : எது ஒன்றிலும் முழுமையான தீவிரத்துடன் இயங்குபவராக இருக்கிறார் , காலேக்கர் இவரை தீவிரவாதி, காந்தியுடன் இருப்பதால் அகிம்சாவாதியாக இருக்கிறார் என்று நகைச்சுவையுடன் குறிப்பிடுகிறார் .
இன்னும் பல நற்குணங்கள் இந்நூல் நமக்கு காட்டுகிறது .
எனக்கு இந்த நூல் வழியாக குமரப்பா சார்ந்து மிக பிடித்த ஒன்று எல்லோருக்கும் ஒரு நிறை என்ற அவரின் பார்வைதான் , பீகார் பூகம்ப மீட்புக் குழு செய்யும் செலவுகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செய்வதாக இருந்ததால் எல்லோருக்கும் ஒரே அளவு தினப்படி என 3 அனா நிர்ணயிக்கிறார், தலைவர்கள் தொடங்கி தொண்டர்கள் வரை எல்லோருக்கும் ஒரே அளவுதான், காந்தி அங்கு வந்த போது அவருக்கு கார் செலவு என சற்று செலவு அதிகமாகிறது. அதை குமரப்பா ஒப்புக் கொள்ள மறுக்கிறார். காந்தி இந்த மீட்புகுழு விசயம் சார்ந்துதான் வந்தேன், எனவே செலவை ஏற்றுக் கொள்ள கேட்கிறார் , ஆனால் குமரப்பா உறுதியாக மறுத்து விடுகிறார் !
காந்திக்கு குமரப்பா மீது மிகுந்த பிரியம் இருப்பதை ஒரு நிகழ்வு காட்டுகிறது, குமரப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாத ஒரு சமயத்தில் காந்தி தன்னிடம் அவரை அழைத்து கொண்டு அவரே பார்த்துக் கொள்கிறார் !
குமரப்பா எழுத்தாளர் அல்ல. ஆனால் அவரை கண்டுணர்ந்து காந்தி அவரை யங் இந்தியாவில் எழுத வைத்து எழுத்தாளர் ஆக்குகிறார் ! காந்தி சிறை சென்ற சமயத்தில் குமரப்பா பொறுப்பில் யங் இந்தியா இதழ் வருகிறது. மிகத் தீவிரமாக எழுதுகிறார் , கூட இருந்த பெண் காந்தியிடம் முறையிடுகிறார், காந்தி அதற்கு “அவர் சென்னைக்காரர் ,சென்னைக்காரர்கள் காரம் அதிகம் சாப்பிடுபவர்கள், அதுதான் குமரப்பாவில் அந்த காரம் உள்ளது” என்று நகைச்சுவையாகசு் சொல்கிறார் .
மா பா குருசாமி இந்த கார இயல்பை அக்கினி ( நெருப்பு இயல்பு ) உடன் பாரதியின் பாடலுடன் இணைத்துசு் சொல்கிறார். இப்பகுதியும் நூலின் அழகான பகுதியில் ஒன்று .
குமரப்பாவின் பிற நூல்களையும் வாசித்துப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். ,முக்கியமாக அவரது பொருளாதாரச் சிந்தனைகள் சார்ந்து. இப்படித் தேடி வாசித்து பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்த நூல் நமக்குள் விதைக்கிறது .
நூல் விபரம்
டாக்டர். ஜே.ஸி.குமரப்பா.
எழுதியவர் – டாக்டர்.மா.பா.குருசாமி
வெளியீடு: காந்திய இலக்கிய சங்கம் ,மதுரை.