‘வன்மத்தின் தராசு என்றைக்கும் சமமாகாது’ -ஆலம் நாவல் விமர்சனம்

 

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ள ‘ஆலம்’ நாவல், தமிழில் வெளிவந்த முக்கியமான ‘விரைவுப் புனைவு’ (Thriller Fiction) வகையைச் சேர்ந்த படைப்பு. பொதுவாக, ‘விரைவுப் புனைவு’ என்றாலே மனத்தில் தோன்றுவன குற்றவியல் சம்பவங்கள், துப்பறியும் கதை, வேகமான திருப்பங்கள், துரத்தல், தப்பித்தல் போன்ற அம்சங்களே. குறிப்பாகப் பொது வாசகர்களிடையே ராஜேஷ்குமார் போன்ற எழுத்தாளர்களின் இந்த வகையான நாவல்கள் பிரபலமாக இருந்தன. 

ஆனால், ஜெயமோகனின் ‘ஆலம்’ நாவல் இந்த வகையை மீறிச் செல்கிறது. இது வெறும் வேகமான கதை அல்ல, அதற்கும் மேலான இலக்கிய அணுகுமுறையைக் கொண்டுள்ளது. ‘விரைவுப் புனைவு’ என்பதற்குரிய சுவாரஸ்யம், திகில், வேகம் ஆகியவை இதில் இருந்தாலும் அவை ஆழமான உளவியல், தத்துவம், சமூகச் சிந்தனை, மனித மனத்தின் இருண்ட பக்கங்கள் போன்றவற்றோடு கலந்திருக்கின்றன. இதனால், இந்த நாவல் சாதாரண ‘கிரைம்’ நாவலின் எல்லைகளை மீறி, ‘கிரைம் இலக்கியம் (Crime Literature) எனும் உயர்ந்த நிலையைக் அடைகிறது.

ராஜேஷ்குமார் நாவல்களில் குற்றம் ஒரு சம்பவம்; அது கதையை நகர்த்தும் கருவி. ஆனால் ‘ஆலம்’ நாவலில் குற்றம் ஒரு சம்பவமாக மட்டும் இல்லை, அது ஒரு சிந்தனை, ஒரு சூழல், ஒரு மனநிலை. குற்றம் எதனால் உருவாகிறது? மனிதன் ஏன் அவ்வாறு செய்கிறான்? சமூகம் இதில் என்ன பங்கு வகிக்கிறது? ஒருவரின் உள்ளுணர்வுகளும் அனுபவங்களும் அவரை எந்த வகையில் திசை திருப்புகின்றன? போன்ற வினாக்கள் இந்த நாவலின் உள்ளடுக்குகளில் பின்னிப் பிணைந்துள்ளன.

பொதுவாக விரைவுப் புனைவில் ‘சுவாரஸ்யம்’ இறுதிவரை வாசகரைத் தக்க வைத்துக்கொள்ளும். ஜெயமோகனின் ‘ஆலம்’ அதையும் செய்கிறது; அதைத் தாண்டி வாசகர் கதையைப் படித்து முடித்த பின்னரும் அது மனத்தில் நீண்ட நேரம் நிற்கும் விதமாகக் கருத்து செறிவையும் இலக்கிய உணர்ச்சியையும் வழங்குகிறது. இதுதான் அதைச் சாதாரண பொழுதுபோக்கு ‘கிரைம்’ கதையிலிருந்து வேறுபடுத்துகிறது.

‘கிரைம் இலக்கியம்’ என்பது ஒரு நிலை உயர்ந்த வகை. அதில் குற்றம் ஒரு கதைத் தூண்டுகோல் மட்டுமல்ல; அது மனித சமூகத்தைப் புரிந்துகொள்ள ஒரு முகப்பு. அந்த வகையில் ‘ஆலம்’ நாவல் குற்றத்தை வெறும் திகில் உண்டாக்கும் யந்திரமாகக் காட்டாமல், மனித வாழ்வின் சிக்கல்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகப் பயன்படுத்துகிறது. இதுவே இந்த நாவலுக்கு இலக்கியத் தரத்தைச் சேர்க்கிறது.

மனித மனம், சமூகம், நெறி, தீமை, உண்மை போன்ற பல பரிமாணங்களையும் இந்த நாவல் தொட்டுச் செல்கிறது. இதனால், ‘ஆலம்’  சுவாரஸ்ய நாவலைத் தாண்டி, குற்றத்தை இலக்கியப் பார்வையில் ஆராயும் படைப்பாக அமைவு கொண்டுள்ளது.  

மனிதன் என்ற உயிரின் உள்ளுணர்வுகள் மிகச் சிக்கலானவை. அவன் உள்ளத்தில் ஒரே நேரத்தில் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. நஞ்சும் அமிழ்தமும் கலந்து ஊற்றப்பட்ட ‘போத்தல்’ போல மனிதனின் நெஞ்சம் இருக்கிறது. 

ஒரு தருணத்தில் மனத்தின் அடிப்பகுதியில் இருந்த நஞ்சு மேலெழலாம். கோபம், வெறுப்பு, பொறாமை, குரோதம், கொலைவெறி போன்ற இருண்ட உணர்ச்சிகள் ஆகியன அடங்கிய நஞ்சு மேலெழும் போது மனிதன் தனது மனிதநேயம், கருணை, நெறி போன்றவற்றை மறந்து விடுகிறான். அவன் செயல்கள் அரக்கனின் செயல்களைப் போல ஆகிவிடுகின்றன. மற்றவர்களுக்குத் தீங்கு ஏற்படுத்துவது, வன்முறையில் ஈடுபடுவது, சுயநலத்தால் இயக்கப்படுவது போன்றவை இந்த நிலையின் வெளிப்பாடுகள். மனிதனின் உள்ளே உறைந்திருக்கும் நஞ்சு மேலெழும் தருணங்கள் மனித வரலாற்றின் பல துயரங்களுக்கும் காரணமாக இருந்திருக்கின்றன.

இதே மனம் மற்றொரு தருணத்தில் அமிழ்தத்தை மேலெழச்செய்யும். அன்பு, இரக்கம், கருணை, மன்னிப்பு, பிறருக்காக எதையும் செய்யும் தன்னலம் இல்லாத மனம் ஆகியன அடங்கிய அமிழ்தம் மேலெழும் போது மனிதன் தெய்வத்துக்கு நிகராகி விடுகிறான். அவனது செயல்கள் புனிதமானவையாக மாறுகின்றன. பிறரின் நலனில் தன்னை மறந்து ஓடுபவன், பகைவரையும் மன்னிக்கும் பெருந்தன்மை கொண்டவன், உயிரைக் காக்க கைக்கொடுக்கும் கருணையாளர் — இப்படிப்பட்ட மனிதர்களை நாம் மெய்யாகவே புனிதர்கள் எனப் பார்க்கிறோம்.

ஆனால், இவற்றில் எதுவும் மனிதனின் நிலையான தன்மை அல்ல. நஞ்சோ அமிழ்தமோ எது மேலெழினும் மனிதன் எல்லையைத் தாண்டிவிடுகிறான். நஞ்சு மேலெழும்போது அவன் அரக்கன். அமிழ்தம் மேலெழும்போது அவன் புனிதன். ஆனால், மனிதன் உண்மையில் மனிதனாகத் தோன்றும் நேரங்கள், இந்த இரண்டும் சமநிலை பெற்றிருக்கும் அரிதான சில கணங்களில் மட்டுமே நிகழ்கின்றன. இந்தச சமநிலை நிலை மிகச் சிறியது — சிக்னலில் மஞ்சள் நிறம் ஒளிர்வது போல. அது சிவப்பாக மாறலாம், பச்சையாக மாறலாம்; அதுபோல மனிதன் புனிதனாகவும் மாறலாம், அரக்கனாகவும் மாறலாம்.

இந்த மஞ்சள் நிற ஒளியின் தருணமே மனிதனின் இயல்பான நிலை. அங்குதான் சிந்தனை உள்ளது, தேர்வு செய்யும் திறன் உள்ளது, நெறி-தெளிவு ஆகியனவும் உள்ளன. இதில்தான் அவன் உண்மையான மனிதன். ஆனால், இந்த நிலை மிகக் குறுகியது. ஒருவேளை சில நொடிகள் மட்டுமே. அந்தக் குறுகிய மனிதநேயம் நிறைந்த தருணத்தை நீட்டிக்க முடியுமா? மனிதனை மனிதனாக அதிக நேரம் வைத்திருக்க முடியுமா? 

‘முடியும்’ என்பதுதான் அதற்குப் பதில். மனிதன் தனது கோபத்தை அடக்கப் பழகினாலும் அன்பை வளர்த்தாலும் இரக்கத்தை நெஞ்சில் இருத்தினாலும் கருணையால் செயல்பட முயன்றாலும் அவன் உள்ளேயுள்ள மனித தன்மையை நீட்டித்திருக்கச் செய்ய இயலும். தன்னை அறிதல், சிந்தனை, ஒழுக்கம், உணர்ச்சி கட்டுப்பாடு, பிறரைக் கருதும் மனப்பான்மை ஆகியவை மனிதனை ‘மஞ்சள் ஒளி’ நிலைக்குச் சேர்த்துக் கொண்டு சென்று அவனை மனிதனாகவே நீட்டிக்க உதவும் வழிகள்.

மனிதரின் உள்ளத்தில் இருளும் ஒளியும் உள்ளன. ஆனால், எந்த ஒன்றை மேலெழச் செய்வது, எவ்வளவு காலம் மேலெழச் செய்வது என்பதற்கு அவனே பொறுப்பு.

மனித வாழ்க்கை ஓர் அமைதியான நீரோடை போல ஒழுங்காகவும் இலகுவாகவும் ஓடிக் கொண்டே இருக்கும். ஓர் அழகிய நீரோடை ஒரு திசையில் அமைதியாகப் பாய்வது போல, மனிதனின் தினசரி வாழ்க்கையும் இயல்பாகச் செம்மையாக இயங்குகிறது. ஆனால், அந்த ஓட்டத்தில், ஒரு தருணத்தில் எதிர்பாராமல் ஒரு கல் விழுந்தாலோ, யாரோ திட்டமிட்டுக் கல் எறிந்தாலோ, அந்த நீரோடையின் அமைதியான ஓட்டத்தில் மாற்றம் பெறும். சிறிது நேரம் அது தண்ணீரைச் சுழல வைக்கும், ஓட்டத்தைத் தடுக்கும், சில துளிகளைச் சிதறடிக்கவும் செய்யும். பின்னர் காலப்போக்கில் தண்ணீர் தனது பழைய ஓட்டத்துக்கு மீண்டுவிடும்.

இந்த உவமை மனித வாழ்க்கையைப் புரிந்துகொள்ள மிகச் சிறந்ததாகும். எல்லோரின் வாழ்விலும் திடீர்ச் சிக்கல்கள், எதிர்பாராத பிரச்சனைகள், ஒருவரின் சொற்கள் அல்லது செயல்கள் ஏற்படுத்தும் காயம், தோல்வி, துரோகம், மனஉளைச்சல் போன்றவை ஒரு கல்லைப் போல வாழ்க்கையின் ஓட்டத்தில் விழுகின்றன. அந்தப் பிரச்சனையின் தாக்கம் எவ்வளவு என்பது, அந்தக் கல்லின் அளவு மற்றும் அது விழும் வேகம் போன்றவற்றைப் போல, பிரச்சனை எவ்வளவு பெரியது, எப்போது திடீரென தாக்கியது என்பதையே பொறுத்தது.

கல் விழும் தருணத்திலிருந்து நீரோடை தன் பழைய ஓட்டத்துக்குத் திரும்பும் வரை என்ன நடக்கிறதோ, அதுவே கொந்தளிப்பான காலம். மனிதனுக்கும் அப்படியே. ஒரு திடீர்த் துன்பம் வந்தவுடன் அவனது மன அமைதி குலைகிறது. அவன் உள்ளத்தில் குழப்பம், கோபம், துயரம், பயம் போன்ற உணர்ச்சிகள் சுழற்சி செய்யத் தொடங்கும். சில நேரம் அவனை நிறுத்தி வைத்தும்விடும். சில தருணங்களில் அவன் உறைந்தவன் போல, பித்துப் பிடித்தவன் போலத் தோன்றுவான். ஆனால், நீரோடை பின்னர் தன்னை மீட்டுக்கொண்டு முன்புபோலவே ஓடுவதுபோல மனித மனமும் மீண்டும் இயல்பைப் பெற முயலும்.

ஆனால், கல் விழுந்த அந்த மாறுபட்ட தருணத்தில் மனிதனுக்கு முன் இரண்டு வழிகளே இருக்கும். 

முதல் வழி — கிளர்ந்தெழும் மூர்க்கத்தனம். அதாவது, அவன் தன்னலம் மறந்து கோபத்தில் கொந்தளிக்க நேரிடலாம். அவன் யோசிக்காமல் செயல்படலாம். அவன் உள்ளத்தைத் தாக்கிய காயத்திற்குப் பழி வாங்க ஆசைப்படலாம். இந்த நிலையில் மனிதன் தன்னையும் பிறரையும் காயப்படுத்தும் முடிவுகளை எடுக்கலாம். தண்ணீர்க் கலகலப்புடன் மோதிச் சிதறுவது போல, மனிதன் தன் உணர்ச்சிகளால் அடிமைப்படும் நிலை இது.

இரண்டாவது வழி — பணிந்து, தன்னுள் புதைந்து போதல். மனம் சோர்ந்து மடங்கி விடுவதுபோல. சிலர் பிரச்சனை நேரத்தில் தாங்களே அமைதியாகிவிடுவர்; தங்கள் உணர்ச்சிகளை அடக்கி வைத்து வெளியுலகைத் தவிர்க்கப் பார்க்கலாம். இது ஒரு தற்காப்பு முயற்சியைப் போலத்தான் இருக்கும். ஆனால், இந்த நிலையும் மன அழுத்தத்தை மிகுவிக்கும். கல் விழும் போது நீரோடையின் ஓட்டம் சிறிது நேரம் அடங்கிவிடுவது போல, மனிதனும் தற்காலிகமாக உள்ளுக்குள் அடைபட்டு மூடப்படலாம்.

இவ்விரண்டு நிலைகளும் மனித மனத்தின் இயல்பான எதிர்வினைகள். வாழ்க்கையின் தடங்கல்கள் ஒரு சோதனை; அந்தச் சோதனைக்கு நாம் எப்படிப் பதிலளிக்கிறோம் என்பதுதான் நம்மை ஆளாக்கும் முக்கிய அம்சம். ஆனால், உண்மையான வலிமை என்பது, கல் விழுந்தாலும் நீரோடை மீண்டும் தனது இயல்பை அடையும் திறன் போல, மனிதன் தனது மனநிலையைச் சமநிலைக்குக் கொண்டு வருவதில்தான் இருக்கிறது.

வாழ்க்கையில் பிரச்சனைகள் தவிர்க்க முடியாதவை; ஆனால் அந்தப் பிரச்சனைகளை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதே நம் மனிதத் தன்மையை வரையறுக்கும் மிகப் பெரிய அளவுகோல்.

வாழ்க்கையில் அநீதி, துரோகம், இழப்பு, அவமானம் போன்றவற்றைச் சந்திக்கும் போது மனிதன் எப்படிச் செயல்படுகின்றான் என்பது, அவனது உடல் வலிமை, பணவலிமை, அறிவு, மனநிலை போன்றவற்றைப் பொறுத்தே மாறுபடுகிறது. 

பணம், உடல் வலிமை ஆகிய இரண்டும் உள்ளவர்கள் அல்லது குறைந்தது இவற்றில் ஒன்றைப் பெற்றிருப்பவர்கள் பெரும்பாலும் முதல் வாய்ப்பைத் தேர்ந்தெடுப்பர். 

முதல் வாய்ப்பு என்பது அவர்களுக்கு நேர்ந்த நஷ்டத்தை அல்லது துன்பத்தை வன்முறையின் மூலம் பழிதீர்க்க முயற்சிதான். இப்படிப்பட்டவர்கள், அவர்களின் கோபமும் அகங்காரமும் அவர்களை முன்னெடுக்கும். அவர்கள் சட்டத்தை மீறிப் பழிவாங்கலாம்; எதிரியைச் சேதப்படுத்தலாம்; சில சந்தர்ப்பங்களில் கொலைக்கூடச் செய்யலாம். இதன் விளைவாக, அவர்கள் சிறையில் அடைபடலாம் அல்லது பழிதீர்க்கும் செயலில் தன் உயிரையும் இழக்க நேரிடலாம். இது அவர்களின் அழிவிற்கு வழிவகுக்கும் ஒன்றாகும்.

இரண்டாவது வாய்ப்பு பெரும்பாலும் திறனற்றவர்களுக்கும் வளமற்றவர்களுக்கும் உரியது. பணமோ உடல் வலிமையோ இல்லாதவர்கள் தங்கள் மீது நிகழ்ந்த துன்பத்தை வெளிப்படுத்த முடியாமல் உள்ளுக்குள் குமுறி வாடுவார்கள். அவர்கள் எதிரியை எதிர்கொள்ள முடியாது; பழிதீர்க்கும் வலிமை அவர்களுக்கு இருக்காது. அவர்களின் மனம் முற்றிலும் தளர்ந்துபோகும். அவர்கள் தங்கள் கோபத்தையும் துயரத்தையும் அடக்கிக் கொண்டே வாழ்வார்கள். இதன் விளைவாக அது மனத்தை உலுக்கும்; மனநோய், மனஅழுத்தம், குற்ற உணர்வு போன்றவை உருவாகும். சிலர் வாழ்க்கை முழுவதும் இந்த வலி மாறாமல் மனவேதனையுடனேயே வாழ்ந்து இறந்துவிடுவார்கள். அவர்களுக்குத் ‘தீர்வு’ என எதுவும் கிடைக்காது; மன வேதனை அவர்களின் வாழ்நாளையே விழுங்கிவிடும்.

மிக மிகச் சிலருக்கு மட்டுமே மூன்றாவது வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பு அவர்களாகவே உருவாக்கிக்கொள்வதுதான். இந்த வாய்ப்பில் ஒருவர் உடல் வலிமையையோ பணத்தையோ மட்டும் நம்பாமல், அறிவு, யோசனை, புத்திசாலித்தனம், திட்டமிடல் ஆகியவற்றை ஆயுதமாகப் பயன்படுத்துவார். அவர் பழிதீர்க்கும்போது தனக்குப் பாதிப்பு இல்லாமல், தான் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாகவே செயல்படுவார். இதனால், அவருக்கு உடல் காயமோ மன வேதனையோ வராது. அவர் பழிதீர்த்த பிறகும் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவார். அவருடைய வாழ்க்கை இயல்பாகவும் அமைதியாகவும் செல்லும். இத்தகையோர் அரிதானவர்கள்.

இந்த நாவலில் வரும் சந்தானம் என்ற கதாபாத்திரம் இதே மூன்றாவது வாய்ப்பைத் தேர்பவர்களுள் ஒருவர் எனலாம். அவருக்கு நேர்ந்த தீமையை அவர் நேரடியாக வன்முறையால் பழிவாங்கவில்லை; தன்னுள்ளே புதைந்து வாடிவிடவும் இல்லை. மாறாக, அவர் அறிவையும் பணத்தையும் சேர்த்துக் கொண்டு, கோபத்தை யோசனையாக்கிக் கொண்டு, வலிமையைத் திட்டமிடலாக மாற்றிக் கொண்டு பழிதீர்க்க முடிந்தது. அவர் இதைச் செய்யும்போது தன்னுடைய பாதுகாப்பையும் மன அமைதியையும் தக்கவைத்துக் கொண்டார். இதனால் அவரால் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பவும் முடிந்தது.

ஆனாலும் சந்தானத்துக்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. அவரால் பழிதீர்க்க முடிந்தாலும் வாழ்க்கையின் இறுதிப்படிக்கு ‘இயல்பாக இறப்பு’க்கு அவர் செல்ல முடியவில்லை. விதி அவரது வாழ்க்கையில் ஒரு பகுதியை மட்டுமே அவருக்கு வழங்கியது. இதனால் அவரது பயணம் பாதி வெற்றியுடன் முடிவடைந்தது.

வாழ்க்கையில் அநீதி நிகழும்போது மனிதன் எப்படிச் செயல்படுகிறான் என்பதே அவனது எதிர்காலத்தை முடிவுக்குக் கொண்டு செல்கிறது. வலிமையற்ற பழிதீர்ப்பு அழிவைத் தரும்; அடக்கி வாழ்வது மனநோயைத் தரும்; ஆனால் புத்திசாலித்தனமான பழிதீர்ப்பு மட்டுமே மனிதனைப் பாதுகாப்புடன் முன்னேற்றும். ஆனால் அதுவும் விதியின் கைகளால் சோதிக்கப்படும்.

உலகம் முழுவதும் பரவிவரும் உணர்வுகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவை அன்பும் பகையும் ஆகும். அன்பு தென்றல் காற்று போல மெதுவாகவும் நிதானமாகவும் பரவுகிறது. அது எவரையும் வன்முறையால் தாக்காது; வேகமாக ஓடாது; ஆனால், அது பரவும் இடங்களில் அமைதி, சாந்தி, நம்பிக்கை ஆகியவற்றை விதைத்து, வளர்த்துக் கொள்கிறது. அதே சமயம், பகை காட்டுத்தீயைப் போலக் கிளம்பும். ஒரு சிறிய தீப்பொறிகூட சில நொடிகளில் வன்முறையாகப் பரவி அனைத்தையும் அழித்து விடும். இந்தப் பகையின் வேகத்தை யாரும் தடுக்க முடியாது.

இந்த இரண்டு உணர்வுகளின் வேகம் வேறுபடும். அன்பு மெதுவாகப் பரவும்; பகை மிக வேகமாகப் பரவும். அதனால்தான் பல தருணங்களில், அன்பு பின் தங்கிவிடுகிறது; பகை முன்னேறிவிடுகிறது. மனித சமூகத்தின் பல பிரச்சனைகளுக்கும் காரணமானது இந்த ‘வேக’த்தில் உள்ள வித்தியாசமே. 

நாவலின் கதாபாத்திரமான சந்தானத்தின் வாழ்க்கையும் இந்த உணர்வுகளின் வேகத்தைக் கடந்து செல்கிறது. அவர் சாதித்த பாதி வெற்றிக்குக் காரணம் அவரின் அன்பு, பொறுமை, அறிவு ஆகியவற்றின் நடைமுறைப் பின்பற்றும் வேகம். அதேநேரத்தில், அவரது பாதித் தோல்விக்கும் காரணம் அவரை நோக்கி விரைந்துக் கொண்டிருந்த பகைத் தாக்குதலின் வேகம். அவர் எவ்வளவு புத்திசாலித்தனமாகச் செயல்பட்டாலும், அவர் செய்யும் திட்டங்களைவிட பகை மிக வேகமாகப் பரவியதால், சில சிக்கல்களில் இருந்து தப்ப முடியவில்லை. 

இந்த நாவலில் வழக்கறிஞர் தொழிலின் நுட்பங்கள் மிகச் சிறப்பாகச் சித்தரிக்கப்படுகின்றன. சட்ட உலகம் வெளியில் தெரிவதுபோல் எளிமையானதல்ல; அதன் உள்ளே நுட்பமான செயல்முறைகள், குறுக்குவழிகள், பலவிதமான சட்ட ஓட்டைகள் உள்ளன. இவை அனைத்தும் ஆழமாகவும் நிஜமாகவும் இந்த நாவலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சட்டத்தில் உள்ள ஓட்டைகள் எவ்வாறு திறமையானவர்களால் பயன்படுத்தப்படுகின்றன, நீதிமன்றத்தின் உள்ளிருக்கும் சிக்கல்கள் எவ்வாறு தொழில்நுட்பமாக இடம்பெறுகின்றன என்பதையும் எழுத்தாளர் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

ஜூனியர் வழக்கறிஞர், சீனியர் வழக்கறிஞர் ஆகியோருக்கு இடையிலான நட்பு, நம்பிக்கை, மோதல், விலக்கம் போன்ற தொடர்புகள் இந்த நாவலின் இயங்கு பரப்பாக உள்ளன. சீனியர் எப்படி ஜூனியரை வழிநடத்துகின்றார், சீனியரின் அனுபவம் எவ்வாறு ஜூனியரின் தொழில்முறையை வடிவமைக்கிறது, சில சமயம் அவர்களுக்கிடையே ஏற்படும் முரண்பாடுகள் எவ்வாறு தொழில் வாழ்க்கையையும் மனநிலையையும் பாதிக்கின்றன போன்ற அம்சங்கள் இந்த நாவலின் நெடுநடையைக் கட்டியெழுப்புகின்றன.

இந்த அனைத்து அம்சங்களும் நாவலை ஒருவிதமான நீதிமன்ற உலகின் உண்மைச் சூழலைக் காட்சிப்பதிவாக மாற்றுகின்றன. சட்டம், மனித உணர்ச்சிகள், பழிதீர்ப்பு, அன்பு–பகை ஆகியவை ஒன்றுக்கொன்று இணைந்து நகரும் ஒரு சிக்கலான உலகை இந்த நாவல் நமக்குக் காட்டுகிறது.

இந்த நாவலில் கூறப்படும் ‘பூஞ்சைத் தொற்று’ என்பது உண்மையில்  சாதாரண மருத்துவத் தொற்றல்ல; அது முழுக் கதையையும் நகர்த்தும் ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாய்களிடையே பரவும் பூஞ்சை நோய் எப்படி மெதுவாகப் பரவுகிறதோ, அதேபோல் மனிதர்களிடமும் சில தீய மனப்போக்குகள் (குறிப்பாக கொலைவெறி அல்லது கொலையாடல்) பரவி அவர்களைப் பாதிக்கின்றன என்பதைக் குறிப்பிடும் விதமாக இது அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொற்று நேரடியாக மனிதர்களைத் தாக்குவதில்லை; ஆனால், மனிதர்கள் தாமே தங்கள் உள்ளத்தில் கொண்டிருக்கும் பணவெறி, கொலைவெறி, பதவிவெறி, சமுதாயத்தில் பெரியவன் எனத் தோன்ற வேண்டுமென்னும் வெறி போன்றவை அந்தப் ‘பூஞ்சைத் தொற்று’ போல் வளர்ந்து, பரவி விடுகின்றன.

இந்த வெறிகள் ஒருவரிடம் தோன்றினால் அது மெதுவாக மற்றவர்களுக்கும் பரவுகிறது. நாவலின் பாத்திரங்கள் ஒவ்வொருவரும் இப்படிப்பட்ட வெறியின் பாதிப்பில் அகப்பட்டவர்களாகத் தோன்றுகின்றனர். இந்த வெறி ஒருவரை எப்படி மாறச் செய்கிறது என்பதை எழுத்தாளர் விரிவாகக் காட்சிப்படுத்தியுள்ளார். அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் வரையாட்டை வேட்டையாடி தின்றுவிட்டு, பின்னர் தன் முகவாயை நாவால் சுத்தம் செய்துகொள்ளும் வேங்கை போல், மனிதர்களும் தங்கள் செய்கைகளின் கொடூரத்தை உணராமல், அதில் திளைப்பவர்களாக மாறுகின்றனர்.

அவர்கள் செய்வது தவறு என்பதைத் தெரிந்தும் அதில் அடிமையாகிக் கிடக்கிறார்கள். இந்த வெறி அவர்களது உள்ளத்தை முழுவதும் பிடித்துவிட்டதால், அதை விட்டொழிக்க வேண்டும் என்ற எண்ணங்கூட அவர்களுக்கு வருவதில்லை. அவர்களே அதைத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டு நாளுக்கு நாள் தங்களையே அந்த வெறிக்குப் பலியிடுகிறார்கள். வீரலட்சுமி என்ற பாத்திரம் இதற்குச் சிறந்த சான்றாகக் காட்டப்படுகிறாள். அவள் இந்த வெறியின் அடிமையாகி, அதை நாளுக்கு நாள் தீவிரமாக வளர்த்துக் கொண்டே செல்கிறாள்.

ஒரு கட்டத்தில் அந்த வெறியில் மிதந்து வாழ்ந்தவர்கள், பின்னாளில் அதிலிருந்து வெளியேற வேண்டும் என முயற்சி செய்தாலும் அந்த வெறியின் பயங்கரமான பிடியிலிருந்து மீள்வது முடியாத நிலைக்குச் சென்று விடுகிறார்கள். அது மனிதனின் சுயநினைவையே அழித்து, அவரை ஒருவித வெறித்தனமான உருவமாக மாற்றுகிறது.

இந்த நாவலில் ‘ஜூனியர் வழக்கறிஞர் கிருஷ்ணசாமி’ என்பவரும் இதே போன்ற வெறியின் (குறிப்பாகப் பணவெறி) பிடியிலிருந்து தப்பிக்க முடியாமல் அகப்பட்டவராக வருகிறார். அவரின் உள்ளத்தில் உருவாகும் ஆசைகள் அனைத்தும் மெதுவாக அவரையே உண்ணும் ஒரு பூஞ்சை போல மாறுகின்றன. வெளிப்படையாக அவர் சாதாரண மனிதராகத் தோன்றினாலும் உள்ளரங்கில் அவர் அனுபவிக்கும் மாற்றம் ‘வேங்கை’ போன்ற அரக்கத்தனமாக அவரை மாற்றுகிறது.

இந்த நாவல், மனிதனின் உள்ளத்தில் உருவாகும் அளவில்லா ஆசைகள், வெறிகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை மிகத் துல்லியமாகச் சொல்கிறது. பூஞ்சை எப்போதும் மேற்பரப்பில் தெரியாமல் மெதுவாகப் பரவுவது போல, இந்த மனவெறிகளும் மனிதனின் உள்ளத்தைக் கொத்தி கொத்தி அழித்து, ஒருபோதும் திரும்ப முடியாத இருளுக்கு அவரை இட்டுச் செல்வதையே இந்த நாவல் வலுவாக எடுத்துரைக்கிறது.

வன்மம் கொண்ட மனம் உடலில் அல்ல, மனத்தில் நச்சை உருவாக்கும். மனத்தில் வெறுப்பு, பகை, பழிவாங்கும் எண்ணம், கோபம் போன்றவை அதிகமாக இருந்தால் அது போதைப் பழக்கத்தைவிட ஆபத்தானதாக மாறிவிடும். போதை உடலைக் கொன்று உயிரைக் குடிக்கும்; ஆனால், வன்மம் மனத்தைக் கொன்று உயிரையே விழுங்கும். வன்மமான எண்ணம், ஒருவரின் நடத்தை, பேச்சு, நடத்தையை மாற்றி, அவரைத் தர்மத்தின் வழியிலிருந்து விலக்கி விடும்.

இந்த நாவல் முழுவதும் இப்படிப்பட்ட வன்மத்தால் நிரம்பிய நெஞ்சுகள்தான் பெரும் பங்கு வகிக்கின்றன. வன்மம் உள்ள மனிதர்கள் எங்குச் சென்றாலும் அங்குத் துன்பம், பயம், அச்சம், அழிவு ஆகியவை உருவாகின்றன. அவர்கள் வன்மத்தை ரசித்து, வன்மத்தாலேயே மகிழ்ச்சியடைகின்றனர். வன்மம் அவர்கள் வாழ்வின் ரத்த ஓட்டமாகவே மாறிவிடுகிறது. வன்மத்தை வன்மத்தால் அழிக்க முடியாது.

ஒரு கொலைக்குப் பதிலீடாக இன்னொரு கொலை ஒருபோதும் நிகர்நிக்காது. இதனால் வன்மத்தின் அளவு மிகுமேயன்றிக் குறையாது. வன்மத்தைப் பயன்படுத்தி வன்மத்தைத் தணிக்க வேண்டும் என்பது வரலாற்றிலும் சமுதாயத்திலும் ஒருபோதும் நிகழ்ந்ததே இல்லை. உலகின் எந்தச் சமாதானமும் எந்த நீதியும் எந்த மாற்றத்தும் வன்மத்தின் மூலம் தோன்றியதில்லை. வன்மம் எப்போதும் புதிதாக வன்மத்தையே உருவாக்கும். 

வன்மத் தராசு என்றைக்கும் சமநிலையை அடையாது. வன்மத்தை அளவிடும் தராசு ஒருபோதும் சமமாக இருக்காது. ஒருபுறம் ஒருவன் வன்மம் செய்தால், மறுபுறம் அதற்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் தோன்றும். அதன் பிறகு மீண்டும் பதிலடிக்குப் பதிலடி வந்தே தீரும். இப்படியாக அந்தத் தராசு இடைவிடாமல் ஆடிக்கொண்டே இருக்கும்.

வன்மத்தை வன்மத்தால் அழிக்க, தணிக்க இயலாது. அதாவது, ஒரு கொலைக்குப் பிறிதொரு கொலை ஈடாகாது. வன்மத் தராசு என்றைக்கும் சமநிலையை அடையாது. சமநிலை என்பது வன்மத்தின் உலகில் இல்லாத ஒன்று.  வன்மம் என்பது ஒரு நச்சு. அது மனத்தை மட்டுமின்றி, மனிதனின் வாழ்வையும் மனிதத் தன்மையையும் அழிக்கும். அதைக் களைப்பதற்கு ஒரே வழி அமைதி, புரிதல், பழியிலிருந்து விலக வேண்டுமென்ற நெஞ்ச உறுதி. எந்தச் சமுதாயத்திலும் எந்த மனிதரிடமும் வன்மம் நிலைத்து நிற்கும் பொழுது அங்கு நன்மை, சமநிலை, நீதி ஆகியன வாழ முடியாது.

(ஆலம் (நாவல்), ஜெயமோகன், விஷ்ணுபுரம் பதிப்பகம், கோயம்புத்தூர், இந்தியா. பக்கங்கள் – 248, விலை – ரூ. 300.)

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *