“ஏம்மா… எங்க போணும்” என்று கேட்டபடி அம்மாவை படியில் தடுத்து நிறுத்தினார் விரைவுப் பேருந்து ஓட்டுநர்.
“சென்னைக்கு” என்றேன் பின்னால் வந்து நின்ற நான். அங்கிருந்து திருப்பதிக்குச் சென்று, திருமலையில் அம்மாவைத் தொலைத்துவிடும் உத்தேசம் எனக்கிருந்தது.
ஓட்டுநர் என்னையும் அம்மாவையும் ஏற இறங்கப் பார்த்தார். அம்மா வாகை மரத்தின் நுனிக்கிளைகளைப் பார்த்து மந்தகாசமாகச் சிரித்தாள். தலையை வெடுக் வெடுக்கென்று இடதுபுறமாக வெட்டிக்கொண்டாள். உதடுகள் டபடபவென துடித்தன. காற்றில் மோதி ஒலியெழுப்பின. முன்நெற்றி முடிகளும் தாறுமாறாக சிதறி ஓய்ந்தன. அம்மாவைப் பார்க்க நேரிடும் அத்தனைப்பேரும் ஒரு கணம் பயந்துதான் போவார்கள். அம்மாவின் கோலம் அப்படி.
நடிகை சரிதாவைப் போலிருந்தவள். திரண்ட கறுப்பு. தரை தொடும் நெடுஞ்கூந்தல், துள்ளலும் குஷியும் தெறிக்கும் குட்டியானையின் நடை. அம்மாவின் பருவம் வனப்பு மிகுந்தது. என்ன சீக்கு என்று தெரியாத வகையில் அம்மாவின் உடல் மெலிந்தது. மருத்துவமனைக்கு வருவதையே வெறுத்தாள். அடிப்படையில் அவள் கை வைத்தியத்தின் மகத்துவங்கள் தெரிந்தவள். எத்தனையோ முறை வற்புறுத்தி அழைத்திருக்கிறேன். ஒரு நாளும் ஆஸ்பத்திரி நடை ஏறியதில்லை. அவளுக்கு சயரோகம் இருந்திருக்கலாம். அதற்கான அறிகுறிகள் அவளிடம் உண்டு. பத்துப்பதினைந்து ஆண்டுகள் பீடி சுற்றியவள். மணிக்கணக்காக பீடித்தட்டோடு அமர்ந்திருப்பாள். ஈரத்துணியில் பொதிந்த பீடி இலைகளை காலியாக்காமல் எழுந்திருப்பதில்லை. பேச்சும் சிரிப்பும் என ஆர்ப்பாட்டமாக பொழுது சென்றாலும் பீடி உருளைகள் பிளாஸ்டிக் டப்பாவில் உயர்ந்தபடியே இருக்கும். அதனால் மூலத்தொந்தரவும் உண்டு. வீட்டிற்குள் சகட்டுமேனிக்குக் காறித்துப்புவாள். முறையான துாக்கம் கிடையாது. செரிமானமின்மையும் உடற் சோர்வும் உறக்கச் சடவும் அதனால் உடலில் ஏற்பட்ட பின்விளைவுகள். போதை மிகுந்து தள்ளாடுபவரைப்போன்ற அலைநடை.
மனச்சிதைவிற்கு ஆளான அத்தனைப் பேருக்கும் ஒரே விதமான உடற்தோற்றம் இருப்பதை அம்மாவைத் தேடி அலைந்த நாட்களில் நான் கண்டிருக்கிறேன். சுக்காக வற்றிய உடல், ஒட்டிய கன்னங்கள், உட்குழிந்து பித்தேறிய கண்கள், தன்னையும்மீறி வெளியே வரத்துடிக்கும் வார்த்தைகளை முணுமுணுக்கும் உதடுகள். அருகில் சென்றால் வந்து தாக்கும் முடைநாற்றம். சிடுக்கும் பீடையும் அப்பிய தலைமுடி. அழுக்கேறிய கசங்கல் ஆடைகள்.
அம்மா செய்கின்ற ஒவ்வொன்றும் தினுசாக இருக்கும். கழிவறையில் நாம் வழக்கமாக இருக்கும் திசையில் அமர்வதில்லை. எதிர் திசையில்தான் நின்று கொண்டு இருந்து விட்டு வருவாள். ஒழுங்காக தண்ணீர் ஊற்றி அலசி விட்டு வருவதில்லை. கையோடு அழைத்துச் சென்று காட்டினாலும் தான் செய்யவில்லை என்பதில் பிடிவாதமாக இருப்பாள். சாப்பிடும் சில்வர்தட்டில் அவளுக்கு வைத்த சோற்றில் கோழிகளும் சேவல்களும் சில நேரங்களில் நாயும் சேர்ந்து உண்ணும். பாம்போ, பாம்புராணியோ அருகில் வந்தால் அதைக்கண்டு பதறுவதில்லை. மதுரா கோட்ஸ் பாலத்தின் அடியில் பாய்ந்து செல்லும் தாமிரபரணியில் குளிக்கச் செல்வாள். வெயில் ஏறி மதியத்தைத் தொடும் நேரந்தான் அவளுக்கு உகந்தது. படித்துறையில் துவைத்துக்கொண்டு இருப்பவர்கள் அம்மாவைக் கண்டதும் அருவருப்பு அடைந்து துணிகளை ஒதுக்கிக் கொள்வார்கள். சிலர் “ச்சீ..அங்கிட்டுப்போ மூதி” என்று விரட்டுவார்கள். அம்மா கையில் ஒரு துண்டும் சில்வர் செம்பும் கொண்டு செல்வாள். சேலை அவளுக்கு சரிவரவில்லை என்பதால் நைட்டியை அணிவித்திருந்தோம். படித்துறையில் நீர்மட்டத்தின் அடுத்த படியில் அமர்ந்து கொண்டு மிகச் சிக்கனமாக ஆற்றில் இருந்து கோரி தலையில் ஊற்றிக்கொள்வாள். அம்மாவிற்கு கால்களில் ஆறாத புண்கள் இருந்தன. மீன்கள் அவளை சும்மா விடுவதில்லை. குளித்து வீடு திரும்பும்போது சில நாட்களில் கால்களில் இருந்து செங்குருதி வடிந்து கொண்டிருக்கும். கண்களில் ஏதோ கோளாறு இருந்திருக்க வேண்டும். ஓயாமல் பாறையிலோ, கல்லிலோ தடுக்கி விழுந்திருப்பாள்.
அம்மா கடைசி வரை கண்ணீர் விட்டு அழுது நான் பார்த்ததில்லை. அதைப்போல என்னிடம் பணம் தா என்றோ சாப்பாடு வாங்கித்தா என்றோ ஒரு நாளும் கேட்டதில்லை. ஒரே ஒருதடவையைத் தவிர. உரிமையோடு என் சட்டைப்பையில் இருந்து எடுத்துக்கொள்வாள். வீட்டில் திருடுவாள். வீட்டைத்துறந்து வெளியில் வாழந்த நாட்களில் பிச்சை எடுத்திருக்கக்கூடும்.
திருமணத்திற்கு பின்னர் கரூரை காலி செய்து சொந்த ஊருக்குத் திரும்பினேன். அம்மா சாகக் கிடந்தாள். செத்துவிடுவாள் என்றுதான் தங்கை சொன்னாள். செத்துத் தொலைந்தால் நிம்மதி என நானும் விரும்பினேன். ஆனால் அம்மா மீண்டு வந்தாள்.
தாத்தாவும் அம்மாவும் அடுத்த அடுத்த அறைகளில் நோயடித்துக் கிடந்தார்கள்.. அம்மா நெஞ்சு எலும்புகள் புடைத்துத்தெரியும் வண்ணம் மெலிந்திருந்தாள். கனத்த மார்புகள் காணாமல் போயிருந்தன. ஆண்களின் காம்புகளைப் போலிருந்தன. தலையும் இடுப்பெலும்பும் மட்டுமே உடலாக இருந்தது. பீழை சாடிய கண்கள். கையில் கிடைப்பதைக்கொண்டு கூந்தலை ஒட்ட நறுக்கிக் கொள்வாள். நெட்டையும் குட்டையுமாக தான்தோன்றித்தனமாக கலைந்திருக்கும் கூந்தல். மனைப்பலகையை தலைக்கு அண்டக் கொடுத்து கால்களை நீட்டிப் படுத்திருப்பாள். அறை முழுக்க மூத்திரமும் மலமும் நாறும். கக்கூஸ் போய்வர முடியவில்லை. கோழையும் சளிக்குவியலும் உறைந்த முற்றம். ஈக்கள் மொய்க்கும் ரீங்காரம்.
தாத்தாவிற்கு சிறுநீரகக் கோளாறு. விதைப்பை பலுானைப் போல வீங்கியிருந்தது. மயிரடர்ந்த காலிடுக்கில் எலிக்குஞ்சினைப் போல குறி நீண்டிருக்கும். சொட்டுச் சொட்டாகத்தான் இருப்பார். அந்த நிலையிலும் அம்மாவும் தாத்தாவும் ஒருவரை ஒருவர் கடும் சொற்களால் தாக்கிக் கொள்வார்கள். அம்மா “சண்டாளன் என்னைக் கொண்டு போய் பாழுங்கிணத்துல தள்ளி சீரழிச்சிட்டான்” என்பாள்.
நேரந் தவறாமல் கிடைத்த சாப்பாடு அம்மாவைத் தேற்றியது. பேய்த்தீனி. ஒரு வேளைக்குப் பத்துப் பதினைந்து இட்லிகள். மதியம் இரண்டு தட்டு நிறையச் சோறு. துளி தயிரும், தேக்கரண்டி கொத்தமல்லித் தொவையலும் இருந்தால் போதும். உள்ளே பத்திருபதுபேர் குடியேறி இருந்து பசி அடங்காமல் சாப்பிடுவதைப் போல இருக்கும். அருகில் இருந்து பார்த்து மிரண்டு போனேன். ஒரு மாதத்தில் உடல் தெளிச்சி கண்டது. மார்புகள் விம்மிப்புடைத்தன. காலிச்சாக்குப்பை போலிருந்த பின்பகுதியில் தசைத்திரட்சி தோன்றியது. சுவர்களைப் பிடித்தவாறு நடக்க ஆரம்பித்தாள். குச்சிக்கால்கள் நடுங்கும். தாத்தாதான் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி மறைந்தார். மதியம் டீயைக் கொடுத்துவிட்டு சிறிது நேரம் துாங்கி எழுந்து வந்து பார்த்த போது குளிர்ந்திருந்தார். ஈஸிச் சேரில் சாய்ந்தவாறு, உத்தரத்தை வெறித்தபடி.
தாத்தாவின் இறப்பிற்கு பின்னர் புளியங்குடி வீட்டை அடிமாட்டு விலைக்கு விற்றேன். மூன்று பெண்மக்களுக்கும் உரிய பங்குகள். அண்ணனின் கடன் நெருக்கடியும் ஒரு காரணம். சேர்ந்து விற்றால் மட்டுமே விலைபோகும் என்ற நிர்ப்பந்தம். அப்படி விற்ற பணத்தை மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையை புதிதாக ஆரம்பிக்க வேண்டும். கரூரில் எட்டாண்டுகள் கற்றுக்கொண்ட புரசல் அதன் பின்னர் பயன்படவில்லை. இலக்கியப் பித்தில் கருத்தாக காசு சேர்த்திருக்கவில்லை. காந்திபஜாரில் ஜவுளிக்கடைகள் இருக்கின்றன. அங்கே வேலைக்குச் செல்லலாம். அல்லது தாத்தாவைப் போல பன்னீர், ஊதுபத்தி, ஜவ்வாது, புணுகு, தலைவலித் தைலம் போன்றவற்றை வீட்டில் தயாரித்து கடைகளுக்கு கொண்டு சென்று விற்கும் சுய தொழில் தொடங்கலாம். அல்லாத போது ஒரு பெட்டிக்கடையை ஆரம்பிக்கலாம். அதுவும் இல்லையெனில் தெரிந்தவர்ளுக்கு ஐந்துபைசா வட்டிக்குக் கொடுத்து வாங்கலாம். பலவிதமான ஆலோசனைகள் வந்தன. நான் வீடு விற்று தங்கையின் திருமணக் கடனை அடைத்தது போக இருந்த பணத்தைக் கையிருப்பாக வைத்துக்கொண்டு, வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து படித்து அரசு வேலையை அடைந்துவிடலாம் என்று திட்டம் போட்டேன்.
புளியங்குடி அதற்கு உதந்த நகரம் அல்ல. தெருவிற்குள் வெட்டியாக இருந்துவிட முடியாது. கண்காணிப்பின் அரசியல் கழுத்தில் சொற்களை சொருகிக்கொண்டே இருக்கும். சொந்த சாதி சனம் அப்படி இருக்க விடாது. வார்த்தைகளால் குத்திக் காயப்படுத்தும். தொழில் அதிபர்கள் ஏளனமாகப் பார்த்து தலையில் அடித்துக்கொள்வார்கள். உறவினர்கள் புத்திமதி சொல்லி கரைசேர்க்க முனைவார்கள். தபால் வழியில் ஒரு பட்டப்படிப்பு படிப்பதையே தண்டம் என்று போற்றிப்பாடிய சுற்றம். எனவே மனைவியின் பிறந்த ஊருக்கு குடிமாறுவதே நல்லது என்ற முடிவிற்கு வந்தேன். அம்மாவும் அவளால் முடிந்த அளவு ஊர்ப்பகையை,தெருப்பகையை சம்பாதித்து வைத்திருந்தாள். அவள் ஏசாத ஒருவர் தெருவில் இல்லை. அண்டை வீட்டார்களோடு கடும் பகை. சுற்றமும் அப்படித்தான். ஸ்திதி குறைந்த போது துணிச்சலாக ஏளனம் செய்தது. அம்மா அதற்கு மூர்க்கமாக எதிர்வினை ஆற்றினாள். துாமைத்துணியை துாக்கி வீசுவது. பேப்பரில் மலம் கழித்து பொட்டலமாக்கி கடாசுவது. பேசிச் சிரிப்பவர்கள் அவளைத்தான் கிண்டல் செய்கிறார்கள் என்கிற கற்பனையில் ஆவேசம் பொங்கி சுவருக்கு இந்தப்பக்கம் நின்று கொண்டு குதித்தவாறு கெட்ட வார்த்தைகளால் குமுறுவது என பலவிதமானத் தாக்குதல்கள்.
குஜராத்தில் மீன் பண்ணை வேலைக்குச் சென்ற இடத்தில்தான் அம்மாவிற்கு மனச்சிதைவு ஆரம்பித்திருக்க வேண்டும். கடன் தொல்லையால் முன் வீட்டாரோடு சச்சரவு. போலிசில் புகார் சென்றது. அம்மா தங்கையைக் கூட்டிக்கொண்டு தலைமறைவானாள். என்னைப் பிடித்து மிரட்டினார்கள். நான் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ஜவுளிக்கடைக்கு சென்று கொண்டிருந்தேன். தொள்ளாயிரம் ரூபாய் மாதச்சம்பளம். பாட்டி என்னை வளர்த்து அவளையும் பேணிக்கொண்டாள். குடும்ப மானம் சந்திக்குச்சென்று கேலிப்பொருளாக மாறிவிட்டதே என்று கொதித்தார்கள். பாட்டியைப் போல நானும் அம்மாவை வெறுத்தேன். அம்மா திரும்பி வராமல் அப்படியே காணாமல் போய் விட வேண்டும் .
நான்கு ஆண்டுகள் மீன் பண்ணையில் மீன்களை ஐஸ் இட்டு பதப்படுத்தும் வேலை. ஆனந்த் பக்கத்தில் வேரவால் என்ற நினைவு. கடிதங்கள் போடுவேன். ஆண்டிற்கு ஒருமுறை ஊருக்கு வருவாள். முதலாண்டு முடிந்து ஓர் இரவில் திரும்பி வந்திருக்கிறாள். அதிகாலையில் கடன் காரர்கள் பஞ்சாயத்தார்களோடு வீட்டிற்கு வந்து விட்டார்கள். உறவினர் ஒருவர்தான் அம்மா வந்த செய்தியை துரித அஞ்சல் செய்தார். நான்காவது ஆண்டில் பாதியில் உடல் நலம் குன்றவே தனியாக ஊர் திரும்பினாள்.
தேரோடும் வீதி போன்ற அகலமான தெரு எங்களுடையது. ஒரே நேரத்தில் இரண்டு லாரிகள் ஒன்றாகச் செல்லலாம். ஒவ்வொரு வாசலின் முன்பும் தெருவில் குடிதண்ணீர் தொட்டிகள் தோண்டப்பட்டு, சிமிண்ட் படிகள் உள்ளே இறங்கிச் செல்லும். நகராட்சிக் குழாய் இணைப்புகளில் நீர் விழும் சலம்பல் இரவில் கனத்துக் கேட்கும். சிமிண்ட் தொட்டிகளை தகர மூடியால் மூடியிருப்பார்கள். இல்லையென்றால் பன்றிகளோ நாய்களோ உள்ளே விழுந்து வாய் பிளந்து பிலாக்கணம் படிக்க நேரிடும். தெருவில் இறங்கிய வீடும் அதற்குப் பின்னால் தறிச் செட்டும் இருந்தது. மேல்பக்கத்தில் நான்கு தென்னைகளும், பப்பாளி, முருங்கை, செம்பருத்தி, வேம்பு, கரிவேப்பிலை, என்றளவில் சிறிய தோட்டமும். குடும்பம் நொடித்துப் போக ஆரம்பித்ததும் ஒவ்வொன்றாக விலை போயின. உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும் தாங்கிய உறவினர்கள் முன்பக்க வீட்டினை புத்தியோடு வாங்கிக் கொண்டார்கள். தவணை முறையில் அவ்வப்போதைய தேவைகளுக்கு வாங்கிய பணத்திற்கு முன்பகுதி வீட்டை சல்லிசான விலைக்கு எழுதிக்கொடுத்தார் பாட்டி. அந்நாட்களில் தெருவில் இருந்த பெரிய வீடுகளில் அதுவும் ஒன்று. உரத்த உத்தரங்களும், அகன்ற தேக்குக்கதவுகளும் பனந்தடிகள் ஏந்திய மட்டப்பா வீடு. தறிகள் ஓடிக்கிடந்த பின்பகுதியை நான்கு வீடுகளாக்கினர். பத்துக்குப் பத்து அளவுள்ள இரண்டு அறைகள். செம்மண் ஓடுகள் வேய்ந்தவை. தாத்தா சம்பாதித்து வாங்கியவை. அதற்கும் வடக்கே வாசலையொட்டிய சமையல் கட்டும், ஒட்டினாற்போல் படுக்கை அறையும் என இரு பத்திகள் கொண்ட இரண்டு வீடுகள். ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் வேய்ந்தவை. பனங்கம்புகள் தாங்கிய கூரை. புறாக்களும் குருவிகளும் சடசடத்து வந்து ஓய்வெடுக்கும் நிழற்தாங்கல்.தெருவில் இருந்து கோடிக்குள் இறங்கி வீட்டிற்கு வரவேண்டும். தெருவின் இரைச்சல் கொஞ்சம் தாமதித்தே உள்ளே வரும். கூடைக்காரிகளும், தயிர்க்காரிகளும், கீரைக்காரிகளும் நான்கு குடும்பங்கள் வசிக்கின்றன என்பதை அறியாமலே கடந்து போவார்கள். குரல் கேட்டு தெருவிற்கு ஓடி வருவதற்குள் முக்குத்திரும்பி விடுவார்கள்.
ஓராள் மட்டுமே சென்று வரக் கூடிய அளவிலான கோடிப்பாதை. அம்மா அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தாள். நடையில் யாரையோ துரத்திச் செல்லும் வேகம். பௌர்ணமி இரவு வழக்கமான அதன் சாயல்களோடு ஒளிர்ந்து கிடந்தது. வாத்தியார் வீட்டு தார்சா இருளுக்குள் “வாராயோ வெண்ணிலாவே..கேளாயோ எங்கள் கதையை”. இரவின் சுப்ரபாதம் அது. துக்காரம் பிள்ளை வீட்டு வாசலில் நின்று ஈரிழைத் துண்டால் கால்களில் உதறி கொசுக்களை விரட்டிக்கொண்டிருந்தார். வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிவனை “துாமையைக் குடிக்கி…என்னைப் படுக்க கூப்பிடுதாம்ல..அவஞ் சுண்ணியை அறுத்திட்டு வால” பற்களைக் கடித்தபடி கொதிப்பில் நின்றாள் அம்மா.
அவள் என்ன சொல்கிறாள் என்பதையே உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. திகைப்பும் நடுக்கமும் சேர உடல் பதற ஆரம்பித்தது. அம்மாவின் அந்நேரத்தைய பாவனைகளும் உடல்மொழியில் இருந்த ஆங்காரமும் என்னையும் தீவிரம் கொள்ளச் செய்தன.
நான் மீண்டும் தெருவிற்கு ஓடினேன். கிழக்கும் மேற்கும் பார்த்தேன். தெரு மத்தியில் அமர்ந்திருந்த பிள்ளையாரைத் தவிர யாருமில்லை. தெருவிளக்குகளும், எப்போதும் கிடக்கும் தெருநாய்களும், ஒரு அம்பாசிடர் காரும், வேனும் குரோட்டன்சும் இருந்தன. பேங்க் அண்ணாச்சி வீட்டின் வாசலில் நின்றிருந்த காகிதப் பூ மரத்தின் நிழலில் யாரோ ஒளிந்து நிற்பது போன்ற அசைவு. கைகள் உதற நடுங்கியபடியே துரித நடை. கைலாசம் என்னைப் பயத்தோடு பார்த்து ”என்ன சங்கரு…இந்நேரத்தில” என்றான். உதடுகளின் மினுக்கம் அந்த நிழலாட்டத்திலும் தெரிந்தது. குப்பென்று பவுடர் வாசனை. அப்போதுதான் குளித்திருப்பான் போல. உடம்பில் ஈரத்தின் மினுமினுப்பு. அவன் வாய்ப்புணர்ச்சிக்கு ஆளை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
தெரு அடங்க இரண்டு மணி ஆகும். அதுவரை ஆட்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும் பத்து மணிக்கு மேல்தான் பெரும்பாலான கடைகளை எடுத்து வைப்பார்கள். பலசரக்குக் கடைகள், மளிகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், மெடிக்கல்கள், பெட்டிக்கடைகள், ஜெனரெல் மெர்ச்செண்ட்கள், பழக்கடைகள், காய்கறி மார்க்கெட், உணவகங்கள் என்று வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்புவார்கள். சிகரெட் பீடி, மண்டையடித் தைலம் வாங்கவும், வாராந்திர மாதாந்திர இதழ்கள் வாங்கத் தோதாகவும் எந்நேரமும் எகியா பெட்டிக்கடை திறந்திருக்கும், எந்தச்சாமத்திலும் எழுந்து போய் நான்கு புரோட்டாக்களைப் பிய்த்துப்போட்டு, அதன் மத்தியில் முறுக்கை உள்ளங்கைக்குள் பொடித்துத் துாவி சால்னா ஊற்றிக் குழைத்து சாப்பிட புரோட்டாக்கடைகள் உண்டு. அதிகாலை என்றால் ரவை உப்புமா. வாழையிலை நறுக்கில் சீனி துாவி ஆவி பறக்கத் தருவார்கள்.கொத்துப்புரோட்டகள் போடும் கரண்ட்டிக் குத்தல்கள் விட்டு விட்டு ஒலிக்கும். பெருச்சாலிகள் இரவின் குழந்தைகளாக மாறி தெருவின் இருளுக்குள் ஓடி விளையாடும். மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ்களும் வாகனங்களும் விடியும் வரை உராய்ந்து கொண்டே இருக்கும். கேரளாவிற்கு காய்கறிகள், வைக்கோல்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள் முக்கித்திணறி நகரும் சத்தம் கனவிலும் கேட்கும். மட்டுமின்றி இளந்தாரிகள் தெருமுக்கில் கூடி நின்று நடு நிசி வரை பாலியல் கதைகள் பேசிக்கொண்டிருப்பார்கள்.
சோர்ந்து திரும்பினேன். ரோட்டில் வடக்கேயும் தெற்கேயும் கொஞ்சத் தொலைவு தேடிப் பார்த்தேன். அம்மா அப்போதும் கோடிக்குள் நடந்து கொண்டிருந்தாள். “யாரும் இல்லையேம்மா….உள்ள வா” என்று தோள்களை அணைத்துக் கூட்டி வந்தேன். சாப்பிட்டு முடித்து அங்கணத்தில் குந்தியிருந்தவனை திடீரென்று உலுக்கியது அம்மாவின் குரல்.
“ஏலே..அந்நா..எட்டிப்பார்க்காம் பாருலே..த்தாயோளி..அவனை வெட்டிப் புதைக்கணும்ல..அறுதலினா..ஆம்பிளைக்கு அலந்துபோய் கிடக்கானு நெனைக்காணுவோ“
மறுபடியும் பாய்ந்தோடிப் போய்த் பார்த்தேன். இருளுக்குள் தேடினேன். யாருமில்லை. அன்றிரவுதான் முதல் முறையாக அம்மாவின் மனநிலையின் மீது சந்தேகம் தோன்ற ஆரம்பித்தது. அன்றிரவு அம்மாவும் நானும் துாங்கவே இல்லை.
அம்மாவிற்கு மட்டும் குரல்கள் கேட்க ஆரம்பித்தன. அதுவும் ஆண் குரல்கள். அதிலும் மிகுதி அவளைப் படுக்க அழைக்கும் குரல்கள். ஆபாச வார்த்தைகளை உரக்க ஒலிக்கும் குரல்கள். அவளுக்கு மட்டும் கேட்கும் குரல்களை அம்மா எதிர்கொள்ளும் விதமாக தனிமையில் காற்றைப் பார்த்து ஏசித்தீர்ப்பாள். “ஏம்மா..பேசாம படுக்கியா..இல்லியா” என்று கத்தினால் ஐந்து நிமிடம் எந்தவித அசைவும் இருக்காது. உறைந்த மௌனம். பின்னர் மெல்லிய முணுமுணுப்பு தோன்றி சிறிது நேரத்தில் பழையபடி வசைப் பொழிவுகள் உக்கிரம் எடுக்கும். சொந்த வீடு என்பதால் பக்கத்து வீட்டுக்காரர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எம்.வி.வெங்கட்ராமின் காதுகள் நாவல் வாசித்த அனுபவம் அம்மாவைப் புரிந்து கொள்ள உதவியது. ஆனால் எப்படி சரியாக்குவது என்பதுதான் விளங்கவில்லை.
பாபநாசத்திற்கு வந்த பிறகு அம்மா அடங்கிப்போனாள். ஐந்தாறு ஆண்டுகள் அவள் நடத்திய அட்டூழியங்கள் ஓய்ந்தன. நடமாட்டமும் குறைந்தது. நோயில் இருந்து மீள அவளால் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் முயன்று பார்த்தாள். வாசுதேவநல்லுார் மாரியம்மன் கோவிலில் மூன்றுமுறை பூக்குழுி இறங்கினாள். ஒருமுறை பாதம் முழுக்க அனலில் வெந்து நடக்க முடியாமல் நான்கு மாதங்கள் படுக்கையில் கிடந்தாள். செய்வினைக் கோளாறாக இருக்கும் என்று மாந்ரீகம் தேடிப்போனாள். ஆயிரக்கணக்கான பணத்தை இழந்ததுதான் மிச்சம். திடீரென்று பள்ளிவாசலில் பாங்கொலி எழும் சமயங்களில் முக்காடிட்டு மண்டியிட்டாள். கண்ணீர் மல்க செபித்தாள். எங்கிருந்தோ குரான் நுாலொன்றை வாங்கி வந்து வாசிக்க ஆரம்பித்தாள்.
அவளுக்கு ஏற்பட்ட அச்சங்களுக்கு எல்லையே இல்லை. ஆண்கள் யாரைப்பார்த்தாலும் குரோதம் கொள்வாள். அறைச் சுவர்களோடு மல்லுக்கு நிற்பாள். சுவர்களில் இருந்து கரங்கள் தோன்றி அவளை அடிக்க வரும். கொக்கியில் தொங்கிக்கிடக்கும் சட்டைப்பையில் இருந்து பணத்தை அக்கரங்கள் திருட முயற்சிக்கும்.
கொட்டாரத்தில் நாங்கள் இருந்த வீடு வயலை நோக்கியது. முப்போகம் விளையும் நஞ்சை நிலம். தாமிரபரணியின் வண்டல் படிந்த கரை.நாய்களும் சேவல்களும் கோழிகளும் மாடுகளும் ஆடுகளும் ஊடேப் பாய்ந்துசெல்லும் தெரு. அம்மா வாசல் திண்ணையில் அமர்ந்து சில்வர் தட்டில் சாப்பிடுவாள். அவளுக்கென்று தனித்தட்டு, தனிச்செம்பு, தனி டம்ளர். அவளை நம்பி சமையல் கட்டிற்குள் விட முடியாது. டம்பளர் விளிம்பைக்கொண்டு நாக்கு வளிப்பாள். பெரும்பாலும் பல் துலக்குவதில்லை. அவள் பொறுப்பில் வீட்டைத் திறந்து போட்டு வெளியே போனால் தெருநாய்கள் சுதந்திரத்தோடு அடுக்களைக்குள் சென்று குழம்புச் சட்டிகளை உருட்டிக்கொண்டிருக்கும். அம்மா வேறொங்கோ சஞ்சரித்தபடி கண்டு கொள்ளாமல் அமர்ந்திருப்பாள். அவளோடு சேர்ந்து கோழிகளும் நாயும் ஒரே தட்டில் சாப்பிடும். அம்மா அவைகளைப் பார்த்து கொஞ்சிப் பேசுவாள். “பதறாமத் தின்னுட்டி” என்று கோழியை ஏசுவாள். அவளுக்கு வைத்த சோற்றில் பெரும்பகுதியை நாய்க்கு பகிர்ந்து கொடுப்பாள். வீட்டில் சண்டை வர அம்மாவே காரணம்.
அப்படி ஒரு நாள் சண்டை முற்றியது. அம்மாவைத் திருத்த முடியாது. சகித்துக்கொள்ளவும் இயலாது என்பது உறுதியானது. என்னசெய்வது என்று தீவிரமாக யோசித்த போது அவளை எங்காவது தொலைவான இடங்களுக்கு அழைத்துச்சென்று விட்டு விட்டு வருவது சரி என்று பட்டது. அம்மா மட்டுமே அப்போது தாங்கிக்கொள்ள முடியாத துயரமாக இருந்தாள். அவள் பொருட்டே வீட்டில் சண்டைகள். அம்மாவின் வசவு ஈட்டிக்குத்தல் போன்றது. என் மனைவி அவள் வாழ்நாளிலேயே அதற்கு முன்பும் சரி பின்பும் சரி அவ்விதமான வசைகளை எதிர்கொண்டிருக்கவில்லை.
அன்று ஒரு முடிவெடுத்தேன். “வா..எந்தி..ஊருக்குப் போவோம்” என்றேன் அம்மாவைப் பார்த்து. அவளும் எங்கு? ஏன்? என்றெல்லாம் கேட்கவில்லை. ஒரு மஞ்சள் பையை எடுத்து உடுமாத்துத் துணிகளை திணித்துக்கொண்டாள். அம்மாவுடன் சமமாக செல்வதை நான் என்றுமே தவிர்ப்பேன். அவளை முன்னே செல்ல விட்டு பின்னால் கண்காணித்தபடி நடந்து செல்வேன்.
அதுதான் அவளுடனான கடைசி இரவு என்று நம்பினேன். இரவு முழுக்க பஸ்சில் நல்ல துாக்கம் அம்மாவுக்கு. கோயம்பேடு இறங்கி லெட்ரின் போய்வரச்சொல்லி நான்கு இட்லிகளை சாப்பிட வைத்தேன். மதியம் போல திருமலைக்குச் சென்று விட்டோம். அம்மாவை ஒரு பஸ் நிறுத்தத்தின் அருகிலேயே அமரச்செய்து “மொட்டை போட்டுவிட்டு வருகிறேன். அது வரை இங்கே இரு ” என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.
மயிர்கள் ஈரம் கசிந்த தரையில் விழும் போது கண்ணீர் பீறிட்டது. உதடுகளை உள்மடித்து ஒளிக்கப் பார்த்தேன். மொட்டையடிப்பவருக்கு என் அழுகைக்கான காரணம் புரியவில்லை.தெலுங்கில் ஏதோ சொல்லித் தேற்றினார். அருகில் இருந்தவர்கள் என்னை புருவத்துாக்கலோடு ஏறிட்டார்கள். குளித்து வெளியே வந்தேன். அம்மா எப்பவும் போல வானத்தையும் தன்னைச் சுற்றி நிகழும் சம்பவங்களையும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். கையில் அவள் கொண்டு வந்திருந்த மஞ்சள் பை. அதை நெஞ்சோடு சேர்த்து இறுக்கியிருந்தாள்.
கடைசியாக ஒருமுறை பார்த்துவிட்டு, எதிர்ப் பக்கத்தில் கீழே இறங்க தயாராக நின்றிருந்த பஸ்சில் ஏறினேன். பயணச் சீட்டு வாங்கி பேருந்து ஓடத் தொடங்கியது. உள்ளே திகுதிகுவென ஏதோ எரிவதை உணர்ந்தேன். ஒரு குரல் என்னிடம் மன்றாடியது. அவள் என்ன கேட்கப்போகிறாள். ஒரு வேளை உணவுதானே. உனக்காகத்தானே அவள் இத்தனைப் பாடுகளும் பட்டாள்.இப்படி அநாதையாக விட்டுவிட்டு கிளம்பிச் செல்கிறாயே..அவள் சாப்பாட்டிற்காக என்ன செய்வாள். நீ ஏமாற்றி விட்டு சென்றுவிட்டாய் என்று அறிய நேரிடும்போது அவள் மனம் என்ன பாடு படும். நாஞ்சில் நாடனின் சாலப்பரிந்து காளியம்மையின் முகம் நினைவில் வந்து கெஞ்சியது. தாங்க முடியாமல் திணறினேன். உடல் உதற பாய்ந்து எழுந்து, பஸ்ஸை நிறுத்தச் சொல்லி கத்தினேன். பஸ் அதற்குள் ஒரு மைல் துாரம் சென்றிருந்தது. அம்மாவை விட்டுச் சென்ற இடத்திற்கு வந்தேன். அம்மா அப்படியே அமர்ந்திருந்தாள். அருகே சென்று “வாம்மா..வீட்டுக்குப் போவோம்” என்று கையைப் பிடித்து இழுத்தேன்.
“மொட்டையைப் போட்டுட்டு..சாமி கும்பிடாமப் போனா எப்பிடில..” என்றாள். சிறிது நேரம் கழித்து ”பசிக்குதுல” என்றாள் என் வாழ்நாளில் முதல் முறையாக.