தாமிரபரணியில் தான் கரைக்கப்படுவோம் என்று அம்மா நினைத்திருக்க மாட்டாள். கீழக் கொட்டாரத்தின் பசும்வயல்களுக்கு நடுவே அவளை சிதையில் ஏற்றினோம். ஊரைத் தாண்டியதும் ஆற்றை நோக்கி இறங்கும் வயல்வெளி. முப்போகம் விளையும் நஞ்சை. நெற்பயிர்களின் பச்சையத்தால் வெய்யில் ஒளிர்ந்தது.
ஒரு கார் செல்லும் அளவிலான சிமிண்ட் ரோடு. ஆற்றின் கரையோரம் எரிக் குழிகள். தடித்த நீர்வாகைகளின் அடர்வு. அவற்றின் நிழலாட்டக் குலைவுகள். கிளைகள் பரந்து விரிந்து நிழலினைத் தேக்கி வைத்திருந்தன. நிழற்செறிவிற்குள் ஜில்லிடும் குளிர்ச்சி. அம்மாவை அடுக்கிய சிதைமாடத்தின் தகரக் கூரையில் காகங்கள் பதறிப் பதறி அமர்ந்தன. பரிதவித்து கரைந்தன. கழுகினைப்போல உடல்பெருத்த காகமொன்று அவள் சிதையை சுற்றிப் பறந்து தலைமாட்டில் வந்து அமர்ந்தது. “ய்யோவ்..மச்சான்..அக்காளைப் பாக்க தேடீ..வந்தீட்டீரா…” என்றார் முருகேசன் மாமா.
நான் ஒருகணம் திடுக்கிட்டு, அப்பாவின் கண்களைப் பார்த்தேன். இறந்தவர்கள் காகங்களாகி விடுகிறார்கள் என்று நம்புவது ஆறுதல் அளிப்பதாகவும் இருந்தது. டிசம்பர் மாசத்தின் அடைமழை வேறு. ஆற்றில் புதுவெள்ளத்தின் கலக்கம். மண்கரைந்த செம்பவளத் தண்ணீர். தாமிரபரணியின் தணுமைக்குள் கால்கள் புதைபட நின்று அம்மாவின் எலும்புகளைக் கரைக்கும்போது குற்றவுணர்ச்சியால் என் மனம் வெந்து போயிருந்தது. அம்மா ஆசைப்பட்ட எதையும் ஒரு மகனாக நான் நிறைவேற்றியிருக்கவில்லை. அம்மா புளியங்குடியிலோ இராயகிரியிலோ சிதையில் புகையவே விரும்பியிருப்பாள். முன்னோர்கள் எரிந்து சம்பலான நிலங்கள் அவை. அவர்களின் எலும்பும் ஊனும் அம்மண்ணில் உரமாகி விருட்சங்களாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றோடு தன்னுடலும் கரைந்து போவதில் அவளுக்கு ஆசை இருந்திருக்கலாம்.
இராயகிரியில்தான் அவள் ஆன்மா சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. அஞ்சடிச்சான் முக்கிலும், வேப்பங்குளத்தின் கரைகளிலும், மந்தை பஸ் ஸ்டாண்டிலும் அவளை அரூபமாக எப்போது சென்றாலும் காணலாம். அவளை விரட்டியடித்த நிலங்களின் புழுதியில்தான் நிரந்தரமாக வாழ்ந்தாள். அந்நிலங்களின் மனிதர்களோடு அவளுக்குத் தீராத பிணக்குகள் இருந்தன. வெஞ்சினம் தகிக்கும் சொற்களின் விளைநிலங்கள் அவை. உடலாக என்னுடன் மேலக்கொட்டாரத்தில் வாழ்ந்தாலும் அவள் அங்கே குடியிருக்கவேயில்லை.
அம்மாவின் பங்கு வீட்டை விற்கும்போது கூட அவளிடம் அனுமதி கேட்கவில்லை நான். அம்மாவின் மீது நம்பிக்கை இழந்த அக்கா –அம்மாவின் அம்மா – என் பெயருக்கு அதை எழுதிக்கொடுத்ததுதான் பெரும்பிழை. வீட்டை விற்ற கையோடு விக்கிரமசிங்கபுரத்திற்கு அம்மாவை அழைத்துக்கொண்டு சென்றேன். அம்முடிவில் அவள் விருப்பம் என்ன என்று கேட்காமல். அவளை ஒரு அடிமையைப் போல நடத்தினேன். புத்தி பேதலித்தவளை ஒரு குழந்தையைப் போல நான் ஏந்தியிருக்க வேண்டும்.
அம்மா பாபநாசத்தில் நிலைகொள்ளாமல் இருந்தாள். மனிதர்களை விட நாய்களோடும் கோழிகளோடும் பூனைகளோடும் சிநேகம் கொண்டாள். குழந்தைகளோடு மட்டுமே உறவாடினாள். வீட்டிற்கும் ஆற்றிற்கும் இடைப்பட்ட பிராந்தியமே அவள் வாழ்நிலம்.
ஆறுமாதங்களுக்கு ஒருமுறை திடீரென்று காணாமல் போவாள். அது என்ன விதமான கணக்கு என்றே எனக்குப் புரிந்ததில்லை. அவள் எப்போது கிளம்பிச் செல்வாள் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது. குளிக்கச் சென்றவள் திரும்பி வரவில்லை என்ற போதுதான் அவள் ஊருக்கு கிளம்பியிருக்கிறாள் என்பதே உறுதிப்படும். அம்மாவிற்கு குறிப்பிட்ட சில ஊர்கள் மட்டுமே விருப்பம். புளியங்குடி, இராயகிரி, தெற்குமேடு, கூனியூர் வாசுதேவ நல்லுார் என்று அவள் தீர்த்த யாத்திரை செல்லும் இடங்களில் எல்லாம் உறவினர்கள் இருந்தனர். அம்மா சென்று சேர்ந்த மறுநாளே அங்கிருந்து அழைப்புகள் வரும். அம்மாவைப்பற்றிய ஆவலாதிகளே அதிகமும். உடனே வந்து அழைத்துப்போ என்ற மன்றாட்டும்.
முதல்முறை அவள் கிளம்பிச் சென்றபோது இருந்த பதற்றம் அதன் பின்னர் ஏற்படவில்லை. ஊரை விட்டு ஓடிப்போவது அவளது வாடிக்கை என்று கருதி இருந்தேன். அவளுக்கு அந்நாட்கள் புத்துணர்ச்சி அளிப்பவையாக இருக்கலாம். தன்னைத் தொகுத்துக்கொள்ளும் அவகாசத்தை அந்நாட்களில் அவள் அடைந்திருக்கலாம். விட்டுவந்த நினைவுகளை மீண்டும் மீட்டிப் பார்ப்பதன் உவகையை அளித்திருக்கலாம். எனவே நான் அவள் கிளம்பிச் செல்வதை ஒருநாளும் தடைசெய்தது இல்லை. தடுத்தால் நின்றுவிடக் கூடியவளும் அல்ல.
அம்மா வீட்டில் இல்லாத நாட்கள் எனக்கு மிகுந்த உற்சாகம் அளிப்பவையும் கூட. பத்துக்குப் பத்து அறைக்குள் நாங்கள் அச்சமின்றி அணைத்துக் கொள்வோம். இருபத்து மூன்று வயதில் விதவையான அம்மா அறியும் வண்ணம் தாம்பத்யம் கொள்வதில் சங்கடங்கள் இருந்தன. அவள் கண்களை என்னால் நிமிர்ந்து பார்க்க முடியாமல் போகும். ஒரு மகனை தாய் ஏசக்கூடாத வசவுகளால் தாக்குவாள். என் மனைவியின் சிவந்த நிறத்தின் மீது அவளுக்கு ஒவ்வாமை.
அம்மா இரவெல்லாம் துாங்குவதே இல்லை. எப்போது எழுந்து பார்த்தாலும் அசையா விழிகளோடு உத்தரத்தை வெறித்துக் கிடப்பாள். நெஞ்சு ஏறி இறங்குவதைக்கொண்டே அவள் உயிர்த்திருப்பதை உணர்ந்து கொள்ள முடியும். பாதிக்கண்களை மூடியபடி துயிலும் பழக்கம் உண்டு. தார்சாவில் தெற்கு வடக்காக கால்களை நீட்டிப் படுத்திருப்பாள். தலைக்கு விசுப்பலகை. கால்களைச் சுற்றி கொசுக்கள் ரீங்கரிக்கும். எந்தக்குளிரிலும் பாயை விரித்துக்கொள்வதில்லை. போர்வை போர்த்திக்கொள்ளும் பழக்கமும் கிடையாது. கொடுத்தால் ஏற்றுக் கொள்ளமாட்டாள். வெறுந்தரையில் உறைந்திருப்பாள். அவ்வப்போது கால்கள் மட்டும் தரையில் இழுபடும். உராயும். பறட்பறட் என்று தோல் பிராண்டல். மந்திர உச்சாடனம் போல வாய்க்குள் கொதிப்பு உயர்ந்து வரும் சொற்களும்.
அந்த முறை அம்மா காணாமல் போய் ஒரு வாரத்திற்கும் மேல் ஆனது. உறவினர்கள் எவரிடம் இருந்தும் அம்மா வந்து சேர்ந்ததற்கான தாக்கீது கிடைத்திருக்கவில்லை. தங்கையிடம் இரண்டுமுறை கேட்டுக்கொண்டேன். அம்மா புளியங்குடி வந்ததும் எனக்குத் தகவல் தெரிவிக்கும்படி. மூன்று நான்கு நாட்கள் தாண்டியதும் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. ஆறாவது நாளில் இருந்து அம்மா சென்றிருக்கச் சாத்தியமான ஊர்களில் வசித்த உறவினர்களிடம் விசாரிக்க ஆரம்பித்தேன். நம்பத்தகுந்த பதில்கள் கிடைக்கவில்லை. அம்மாவிற்கு என்ன ஆனது? அவளுக்கு பார்வைக்கோளாறு உண்டு. வாகனத்தில் அடிபட்டு எங்காவது தனித்துக்கிடக்கிறாளா? வீட்டிற்குத்திரும்ப வேண்டாம் என்று முடிவெடுத்து பேருந்து நிலையங்களிலோ கோவில் வாசல்களிலோ பிச்சையெடுத்து வாழ ஆரம்பித்து விட்டாளா? தீராத கேள்விகள். சங்கடங்கள். ஊகங்கள்.
அம்மா அருகில் இருந்தபோது அவள் தொலைந்து போனால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணியிருக்கிறேன். உண்மையில் அவள் தொலைந்து போன நாட்களில் என் மனநிலை கொந்தளித்துக்கொண்டே இருந்தது. நடுக்கம் இன்றி ஒரு கணம் இருக்க முடியவில்லை. அடங்காத கோபமும் எரிச்சலும் என்னை சதா தொந்தரவு செய்தன. மனைவியின் மீது எடுத்ததற்கெல்லாம் கொதித்து வழிந்தேன். யாசித்து நீட்டிய கரங்களோடு அம்மாவை எங்கும் பார்க்க நேரிடக் கூடாது என்று மட்டும் வேண்டிக்கொண்டேன். அம்மா பசித்திருப்பாள் என்ற நினைவே என்னை கண்ணீர் மல்கச் செய்தது.
முதலில் நான் தேடிச்சென்றது பாபநாசம் கோவிலுக்குத்தான். அங்கே நிரந்தரமாக பிச்சைக்காரர்கள் உண்டு. காவி அணிந்தவர்களோடு கலந்து வரிசையில் அமர்ந்திருப்பார்கள். பிச்சைக்காரர்களில் பல கிரிமினல்களும் அடக்கம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அம்மா அங்கே இருக்கிறாளா என்று தேடினேன். நான்குமுறை சுற்றி வந்த பின்னர் தான் நிம்மதி. அம்மா இல்லை. அம்மா திருடுவாள். உரிமையோடு பணத்தை எடுத்து ஒளித்து வைத்துக் கொள்வாள்.ஆனால் யாரிடமும் பிச்சை கேட்க மாட்டாள். அப்படி நிறைய நடந்திருக்கிறது. கரூரில் இருந்து விடிய விடிய பஸ் பயணம் செய்து வீடு திரும்பி சட்டையைக் கழட்டி ஆணியில் தொங்கவிட்டு துாங்கி, எழுந்தால் கொண்டு வந்த பணம் குறைந்திருக்கும். எத்தனை சத்தியம் செய்தாலும் உண்மையை ஒத்துக்கொள்ள மாட்டாள். அவ்விதம் எடுத்த பணத்தின் சேமிப்பு என்று சிறுதொகை எப்போதும் அவள் கைவசம் இருக்கும்.
அம்மா இரண்டு முறை கடன் பிரச்சினையால் ஊரை விட்டு ஓடவேண்டியது வந்தது. இரண்டு முறையும் நான் கேட்டேன். ஏன் கடன் வாங்கினாய் என்று. அதற்கு அம்மா ஒரு கதை சொன்னாள். அதில் எத்தனைச் சதவீதம் உண்மை என்று எனக்கு இன்றுவரை தெரிந்ததில்லை. அம்மா சொன்ன அந்த “தேவமாரு” பொம்பளையை நான் ஒருநாளும் நேரில் கண்டதுமில்லை. ஆனாலும் அவள் அவ்வளவு பெரிய தொகைக்கு கடனாளியாக மாற வேறு நம்பத்தகுந்த காரணங்களும் இல்லை.
அம்மா ஒருநாள் உறவினர் வீட்டு கல்யாணத்திற்காக புளியங்குடிக்கு பஸ் ஏற அதிகாலையில் அஞ்சடிச்சான் முக்கிற்கு வந்திருக்கிறாள். மூன்று மணியைப் போல முதல் பஸ் வரும். தளவாய்புரத்தில் இருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் கணபதி பேருந்து. இன்றும் கூட அந்தப்பேருந்து ஒடிக்கொண்டிருக்கிறது. பெட்டிக்கடை இருளுக்குள் ஓர் திடீர் அசைவு. நாயாக இருக்கும் என்று எண்ணி பதறி, தள்ளி நின்று திரும்பி பார்த்தாள். இருளுக்குள் இருந்து ஒரு உருவம் எழுந்து நிற்கிறது. நிற்க முடியாமல் தள்ளாடுகிறது. பெண் என்று அறிந்ததும் அம்மா நெருங்கிச் சென்றிருக்கிறாள். கலைந்த கூந்தல். அழுக்கடைந்த சேலை. உள்பாவடையை மீறிய இரத்தக்கறை. வீங்கிய கன்னங்கள். அம்மா அவளுக்கு என்ன ஆயிற்று என்று கேட்கிறாள். அந்தப் பெண்மணியை வீட்டிற்கு அழைத்து வந்து குளிக்கச் செய்திருக்கிறாள். தன்னுடைய சேலைகளில் ஒன்றை அணியக்கொடுத்து, அன்று முழுக்க வீட்டில் அவளை ஓய்வெடுக்க அனுமதித்திருக்கிறாள்.
“தேவமாரு பொம்பள..நல்ல சிவப்புடா..விலக்காகி இருக்குமோனுதான் நான் முதல்ல நெனச்சேன். ஆனா கெண்டக்கால் சதையில வெட்டுக்காயம். தர்மாஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போய் கட்டுப்போட்டேன். என்னை மாதிரி சீரழிஞ்சவனு பார்க்க பரிதாபமாக இருந்திச்சு..அப்புறம்தான் சொன்னா…நோட்டு மாத்துற தொழில் செய்றாளாம். அதில ஏதோ குடுக்கல் வாங்கல் தப்பிதமா போச்சாம். அதனால அவள நம்பினவங்க பொம்பிளனு பாக்காம கண்மண்ணு தெரியாம அடிச்சிப் போட்டுடாங்களாம்.”
அந்த தேவமாரு அம்மாளிடம் அம்மாவிற்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. அம்மா ஆயிரம் கொடுத்தால் ஒரு வாரத்தில் இரண்டாயிரமாக திரும்பித் தருவாளாம். அம்மாவிடம் போதிய பணம் இல்லாத போது பழகியவர்களிடம் வாங்கிக்கொடுக்க ஆரம்பித்தாள். அப்படியே நீண்ட நட்பு சில மாதங்கள் தொடர்பே அற்று துண்டித்துப் போவதும் உண்டாம். அந்நாட்களில் வாக்குக்கொடுத்து வாங்கிய தொகையைத் திரும்பி தரமுடியாமல் போகும். ரகசியமாக இருந்த கொடுக்கல் வாங்கல் தெருச்சண்டையாக மாறும். என் பால்யத்தை நடுக்கத்திற்குள்ளாக்கியதில் இந்த மாதிரியான தெருச்சண்டைகளுக்கு முக்கிய பங்கு உண்டு.
அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி,திருநெல்வேலி என அம்மாவைத் தேடி அலைந்தேன். வெளியே யாரிடமும் சொல்வதற்கும் தயக்கமாக இருந்தது. உடல் மெலிந்த, ஆடைகளில் அழுக்கைச் சுமந்த, கருத்த பெண்களைக் காண நேரிட்டபோது ஒரு கணம் அம்மா அவர்களில் தோன்றி மறைவாள். அம்மாவின் தோற்றத்தைக் கொண்டிருந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட தெருவோரவாசிகளை அந்நாட்களில் நான் காண நேரிட்டது. ஒடுங்கிய பின் தோற்றமும் குச்சியாக மெலிந்த உடலும் அம்மாவாக இருக்குமோ என்று பதறச் செய்திருக்கின்றன.
இரண்டு வாரத்திற்கு மேல் ஆனது. அம்மா உயிரோடு இருக்கிறாளா அல்லது எங்காவது அநாதைப் பிணமாக தெருவில் நாறிக்கிடந்து அழிந்து விட்டாளா? அவ்விதம் தனித்திருந்து உயிர் நீங்கியிருக்கும் என்றால் கடைசிக்கணங்களில் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பாள்? எண்ண எண்ண நிம்மதியின்மை பெருகிக்கொண்டே இருந்தது. ஒரு பித்தனைப் போல சுற்றித்திரிந்தேன். தெருவோர பைத்தியங்கள், பஸ் நிலையங்களின் இருளுக்குள் துயின்று மூடிக்கிடக்கும் உருவங்கள், குப்பைமேடுகளுக்குள் குந்தி இருந்து உணவு தேடும் ஜீவன்கள் என்று நெஞ்சம் பதற பதற தேடினேன்.
இரண்டு வாரங்கள் கழிந்தபோது கோவில்பட்டி சித்தியிடம் இருந்து தகவல் வந்தது. இருக்கன்குடியில் அம்மாவை சித்தியின் உறவினர்கள் பார்த்ததாக. மறுநாள் அதிகாலையில் தங்கையையும் உடன் அழைத்துக்கொண்டு கோவில்பட்டிக்கு கிளம்பினேன். நன்றாக விடியும் முன்னர் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் வளாகத்தை சென்றடைந்தோம். அம்மா அன்றிரவு அங்கே தங்கியிருந்திருக்க வேண்டும் இறைவா என்று வழிநெடுக பிரார்த்தனை.
பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவிலை அடையும் வரை இருந்த அத்தனை இடங்களில் இருந்தும் அம்மா வந்து கொண்டே இருந்தாள். கடைசியாக கோவில் பிரகாரத்தில் சேலைகளைப் போர்த்தியபடி படுத்திருந்த உருவங்களில் ஒன்றில் அம்மாவைக் கண்டேன். அம்மாவின் கால்களில் ஆறாத புண்கள் இருந்தன. அவற்றை மேலும் மேலும் சொறிந்து கால்களின் கறுப்பினை விட கூடுதல் கறுப்படைந்து ஒரு தனித்த திட்டுகளைப் போல அவை தடித்திருந்தன. அம்மாவின் உள்ளங்கால்களில் தீமிதிக் காயங்களும் தளும்புகளும் இருக்கும். பாதங்களைப் பார்த்த உடன் என்னால் அது அம்மாதான் என்று அடையாளம் கொள்ள முடிந்தது.
தலையை மூடிப்படுத்திருந்தவளை தட்டி எழுப்பினோம். பீளை சாடிய கண்களைத் திறக்க சிரமப்பட்டாள். ஆள் கிறங்கிப்போயிருந்தாள். சரியாக சாப்பிடாத பசி மயக்கம் கண்களில், உடலில், கைகளில், சொற்களில். எங்களைப் பார்த்து உற்சாகம் அடையக் கூட திறன் அற்றுப்போயிருந்தாள்.
“வீட்டிற்கு வராம இங்க ஏம்மா இருந்திட்ட?“ என்றேன்.
“பஸ்சுக்கு துட்டு இல்ல…..கொண்டு வந்த காசு காணாம போயிருச்சு“ என்றாள் பலகீனமான குரலில். கைத்தாங்கலாக அவளை எழுப்பி வெளியே அழைத்து வந்தோம்.