உயிருடன் இருக்கும்போதே அவர் உடல் அம்மணம் ஆக்கப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்க வைக்கப்பட்டு மருத்துவர்கள் அவரைச் சூழ்ந்திருந்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு உள்ளே செல்லும் வழியும் அதுதான். உள்ளே பத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள். குறுக்கும் நெடுக்குமாக செவிலியர்கள். கதவு திறந்து மூடும் வேளைகளில் எட்டிப்பார்க்க முடிந்தது. ஆடை களைந்திருந்த அவர் உடலில் என் கண்கள் உடனே தேடியது அவரின் உறுப்பைத்தான்.
தகவல் கிடைத்தபோது சிறிய அதிர்ச்சி. மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் நம்பிக்கை. தெருவே திரண்டிருந்ததைக் கண்டபோதுதான் அவரின் நிலைமையை ஒருவாறு ஊகிக்க முடிந்தது.
மாவட்டத் தலைநகர் என்ற போதும் அடிப்படை வசதிகள் அதிகம் இல்லை. தனியார் மருத்துவமனைகளில் மூன்று மட்டுமே இருபத்து நான்கு மணிநேர அவசரச் சிகிச்சையை வழங்கி வந்தன. அவற்றில் சிறந்த ஒன்றைத் தேர்வு செய்து கொண்டு வந்து சேர்த்திருந்தார்கள். வாகன விபத்து. விபத்து நடந்த விதத்தை வீடியோ துணுக்கில் காண முடிந்தது. ஐம்பது தடவைகளுக்கு மேல் அன்று இரவு மட்டும் பார்த்தேன். ஒருவரின் முடிவு இத்தனை அபத்தமாகவா அமையக் கூடும்?
தீபாவளி முடிந்த மறுநாள். தீபாவளி பொங்கல் போன்ற விழா நாட்களில் மதுவின் அணைப்பில் இருந்து தப்பிக்க முடியாது. நண்பர்கள் கூடினால் மதுப்புட்டிகளும் நிழலாகி விடுகின்றன. நாற்பதைத் தாண்டிய சாமானியர்கள் மது ஒன்றையே போக்கிடமாக கருதுகிறார்கள். எல்லாம் அர்த்தம் இழந்து போய்விடுகிறது. லட்சியங்கள் கனவுகள் ஏதும் மீதம் இருப்பதில்லை. இருக்கிற கொஞ்சக் காலத்தில் முடிந்தளவு சுகித்து வாழ்ந்து செத்துப்போக வேண்டும். பெண் அதிக விலை கோரும் உல்லாசம். மதுவோ மிகச் சிக்கனமானது. வருவாயில் மூன்றில் ஒரு பங்கு போதும். சட்டங்கள் மது அருந்துவதைத் தண்டிப்பதில்லை. பெண் விசயம் அப்படியில்லை. உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.
இம்முறையும் அழைப்பு வந்தது. நண்பர்கள் ஓயாமல் துாண்டில் வீசினர். எனக்கு மது என்பது உபரித் தொந்தரவு என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. உடல் உபாதைகள், மது போதையில் வீட்டையும் வெளியையும் எதிர்கொள்வதில் சந்திக்க நேரிடும் அவமானங்கள். போன்றவற்றால் மதுவைக் கைவிட முயன்று வருகிறேன். தீபாவளி கழிந்த மறுநாள் இரவு “இந்த முறை மதுவின் தாக்குதலில் இருந்து தப்பித்து விட்டேன்” என்று எண்ணிய போதுதான் அழைத்துச் சொன்னார்கள்.
விபத்துக்குள்ளானவர் என் உறவினர். அறுபதை நெருங்கியவர். பிறந்ததில் இருந்து பிழைப்புத் தேடி வெளியூர் செல்லாதவர். பிறந்த ஊரிலேயே தன்னுடைய கடைசிக்காலம் வரை வாழ்ந்து முடித்தவர். அவர் அன்றாடம் வணங்கும், துதிகள் பாடும், போற்றிப் பராமரிக்கும் தெய்வத்தின் வாசல் அருகேதான் அந்த விபத்து நடந்தது, குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் எதிர்திசையில் மிதிவண்டியில் எவ்வி மிதித்து வந்தவரைக் கவனிக்காமல் மோதி வீசினார்கள். சைக்கிளில் இருந்து தரையில் விழுந்தவர் அருகில் இருந்த கடையின் சுவரில் பின் மண்டை மோதி தரையில் உறைந்தார். அதன் பிறகு அவர் கண்விழிக்கவும் இல்லை, எழுவதற்கு முயலவும் இல்லை. ரோட்டோரத்தில் இருந்தவர்களும் நண்பர்களும் அவரை அடையாளம் கண்டு ஆம்புலன்சிற்குப் போன் செய்தனர். நகர மருத்துவனையில் பரிசோதித்துப் பார்த்துவிட்டு மாவட்ட தலைநகருக்கு பரிந்துரை செய்தனர். முதலுவதி சிகிச்சை ஏதும் அளிக்கவில்லை.
அந்த மருத்துவமனை புராதனமானது. பலநுாறு உயிர்கள் அங்கே அதுவரை தோன்றியிருக்கலாம். பலநுாறு உயிர்கள் அங்கே வந்த மறைந்து போயுமிருக்கலாம். பேறுகால வார்டுகளுக்கு அருகில் தீவிர சிகிச்சைப் பிரிவு. இரவு முழுக்க குழந்தைகள் அழும் குரல்கள். பேறுகால நோவில் அயர்ந்து துாங்கும் அன்னையர்கள். அப்பாக்களின் முகங்களில் கூடுதல் அக்கறை. செவிலியர்கள் சிறுதெய்வங்கள் என்றால் மருத்துவர்கள் பெரும் தெய்வங்கள்.
விபத்துக்குள்ளானவரின் தம்பி என்னைவிட ஐந்தாறு வயது மூத்தவர். கால் நுாற்றாண்டுக்கும் அதிகமான பழக்கம். அவரின் இயல்புகள் ஊருக்கே தெரியும். முன்கோபி. மூளைச்சாவு என்று கடைசியில் கண்டு பிடித்தார்கள். பிழைப்பதற்கு தொண்ணுாறு விழுக்காடு வாய்ப்பு இல்லை. எனவே அளித்து வரும் சிகிச்சையை நிறுத்திவிடலாம். விடிந்ததும் உடலை எடுத்துச்சென்று கடைசிக் காரியங்கள் செய்யலாம் என்ற முடிவினை மருத்துவர் தெரிவித்தார். மருத்துவர் ஒருமையில் அவரை அழைத்தார். மருத்துவருக்கு இருபத்தைந்து மேல் முப்பதுக்குள் இருக்கும். நண்பருக்கோ நாற்பதுக்கு மேல். ஆனாலும் “டேய்” என்று விளித்தார். அதிகாரம் இருந்தால் அதை துஷ்பிரயோகிப்பது இயல்புதானே.
செயற்கைச் சுவாசத்தால் கழுத்திற்கு கீழே உள்ள பாகங்கள் இயல்பாக உயிர்த்து எழுந்து அடங்கின. வயிறும் நெஞ்சும் அவர் இறந்து கொண்டிருக்கிறார் என்பதை ஐயம் கொள்ளச் செய்தன. கால் விரல்களில் ,கைகளில் மாட்டியிருந்த மருத்துவ உபகரணங்களும், சிறுநீர்ப்பையும் மட்டுமே அவர் ஆபத்தில் இருக்கிறார் என்பதைச் சொல்லின. மூளையில் சிறிய அறுவைச் சிகிச்சை. முகம் வீங்கியிருந்தது. உதடுகள் பூதாகரமாக பெருத்திருந்தன. அவரைக் காண்பதற்கு மனதில் கூடுதல் தன்னம்பிக்கைத் தேவைப்பட்டது.
இரவு கடந்த பின்னர்தான் அறுவைச் சிகிச்சையின் முன்னேற்றம் பற்றி உறுதியாக கூற முடியும் என்பது மருத்துவர்கள் நிலைப்பாடு. காத்திருப்பதைத்தவிர வேறு வழியில்லை. அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டிற்கு மாற்றினார்கள். மருத்துவமனையின் கடைசி வரிசையில் கடைசி அறை. முட்டுச் சந்தைப் போலிருந்தது. நாலுகட்டு வீடு போன்ற அமைப்பை அப்படியே மருத்துவமனையாக மாற்றியிருந்தார்கள். பழைய கட்டடங்கள். மிகப் பழைய அறைகள். அறைகளின் வயதினை அவற்றில் கேட்க நேரிட்ட யுகத்தனிமையை வைத்தே தெரிந்துகொள்ள முடிந்தது. நன்கு கனிந்து மூத்த மனிதர்களைப் போன்ற அறைகள். ஆயிரம் கதைகளை உதடுகளுக்குள் சதைத்துக் கொண்டிருக்கும் உப்பிய பாவனைகள். சிதைவுகள் ஏற்பட்ட பகுதிகளை மட்டும் பராமரித்து புதுப்பித்து வந்திருந்தார்கள். பெரிய பண்ணை வீட்டை பார்த்தது போலிருந்தது.
பேசித் தீர்த்து விட்டோம். உடலில் சோர்வு கனத்து வலிக்க ஆரம்பித்தது. கண்களில் உறக்கம் இறங்கி தலையை தள்ளாடச் செய்தது. அருகே இருந்த டீக்கடைக்குச் சென்று அருந்தி வந்தோம். ஊர்க்காரர்கள் ஒவ்வொருவராக துயிலச் சென்றனர். நெருங்கிய உறவினர்கள் என ஐந்தாறுபேர்கள் அங்கேயும் இங்கேயும் சிதறிக் கிடந்தோம். அவ்வளவு பெரிய மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் அமர்ந்து கொள்ள ஓரிடம் இல்லை. வீடட்டறவர்களைப் போல, புலம்பெயர் அகதிகளைப் போல கொசுக்கள் உறிஞ்சித் தவிக்க, சிலைத்து அமர்ந்திருந்தார்கள்.
அறைக்கு எதிரே இருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தோம். மூன்று பேர்களின் சிந்தனையிலும் விபத்துக்குள்ளானவர் குறித்து வேறு வேறான எண்ணங்களும் நம்பிக்கைகளும் இருந்திருக்கலாம். நாற்பது ஆண்டுகள் விபத்துக்குள்ளானவரோடு பழக்கம் இருந்தது. கடைசி இருபதாண்டுகள் நான் அவரைச் சந்திப்பதை தவிர்த்து வந்தேன். தலைமுறை இடைவெளி பிரதான காரணம். தவிர வேறு காரணங்கள் ஏதும் எனக்கு இருக்கவில்லை. அவரிடம் என்னைக் கவரும் இயல்புகள் ஒன்றும் இல்லை போலும். கடைசி பத்தாண்டுகளில் அவர் என்னை மதிக்க ஆரம்பித்தார். முன்பு புத்திமதிகள் சொல்லும் இடத்தில் இருந்தவர். அதன் பின்னர் என்னிடம் ஆலோசனைகள் கேட்கும் பாவனையைக் கைக்கொண்டார்.
அவருக்கும் மதுவும் புகையும் உண்டு. ஆனால் அவற்றை மிக இரகசியமாக பாவித்து வந்தார். ஐம்பதைத் தாண்டியதும் கடவுள் பக்தி அதிகரித்தது. பக்தியின் விளைவான நற்காரியங்களில் தன்னை சிரமத்திற்குள்ளாக்கி ஈடுபடுத்திக் கொண்டார்.
இறந்து கொண்டிருக்கும் மனிதனை மிக அருகில் இருந்து கவனிப்பது அச்சம் அளிப்பது. அவருக்குள் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது? விபத்து நடப்பதற்கு ஒரு கணம் முன்பு வரை அவர் உத்தேசித்திருந்த எண்ணங்களுக்கு என்ன பொருள்? ஆற்ற வேண்டிய கடமைகளும், அவருக்கு இருந்த பொறுப்புகளும் இனி யாரைத் தேடும்? இன்னும் சிறிது நேரத்தில் இந்த பூமியைவிட்டே அவர் காணாமல் சென்று விடுவார் எனில் இங்கே வந்தது ஏன்? அடைந்தது என்ன? அறுபது சொச்சம் ஆண்டுகள் அல்லல்கள் பட்டதும் ஏன்? கேள்விகள் மண்டைக்குள் கிளைத்தன.
சலித்து வேறு சிந்தனையின் பக்கம் மனம் திரும்பியது. மூவரும் மறுபடியும் ஒரு டீ அருந்தி விட்டு வரலாம் என்று கிளம்பினோம். திரும்பி வரும்போது செவிலியர் எங்களைக் கண்டதும் வேகமாக வந்தார்.
“நீங்கள்ளாம் மனுசங்க தானா? அவர் பாவம் இல்லையா? இப்படி ஒத்தையில விட்டுட்டுப் போயிட்டீங்களே?”
எங்களுக்கு ஏன் இப்படி யோசிக்கத் தோன்றாமல் போனது? அவர் முடிந்து விட்டார் என்று நாங்களே நம்ப ஆரம்பித்து விட்டோமா? அவர் இனி மீண்டு வரமாட்டார் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையா? கண்விழித்துப் பார்த்து என்னை விட்டு எங்கே சென்றீர்கள்? என்று கேட்க வாய்ப்பில்லை என்பதனாலா?
அவர் உடல் கனத்துப் போனது. பிணவறை போன்ற ஒன்றில் அவரைக் கிடத்தினார்கள். அதிகாலையில் அவர் எங்களை விட்டுச் சென்றிருந்தார். அதுவரை விட்டு விட்டு ஒலித்துக்கொண்டு இருந்த உயிர்ப்பின் ஓசைகள் அடங்கியிருந்தது. உயிர் சென்றதும் உடலில் சவக்களை படிந்திருப்பதை பார்த்தேன். உறுப்புகள் விரைத்திருந்தன. உயிர் என்பது சதையை அழகாக வைத்திருக்கும் ரசவாதம்.
காவல் துறை கடிதம் வரவேண்டும். காவல் நிலையத்தில் உறவினர்கள் சிலர் காத்திருந்தனர். அதிகாரி வர நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. அதிகாலையில் இறந்தவரை உடற்கூராய்வு செய்ய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல மதியம் மூன்று ம ணிக்கு மேல் ஆனது. உடற்கூராய்வு வேகமாக நடக்கவும், காத்திருந்த பிணங்களில் முதல் பிணமாக அறுபடவும் விதி மீறல்களைச் செய்ய வேண்டியிருந்தது. அரசியல் அழுத்தம் முதற்கொண்டு பணத்தாள்களை மறைத்து அளிப்பது வரை.
பிணவறையில் நான்கு பேர் துாக்கி கிடத்தினோம். நேரம் ஆக ஆக உடலின் கனம் அதிகரித்து வருவதைப் போன்ற சுமை. பிணம் என்று அறிந்த உடன் அருகில் செல்ல மனம் அஞ்சுவது ஏன்? தானும் ஒருநாள் அப்படி ஆகப்போகிறோம் என்கிற எச்சரிக்கையா?
பிரபல சினிமா நடிகர் ஒருவரின் தீவிர ரசிகர் அவர். எண்பதுகளில் அவர் உச்சபட்ச நட்சத்திரம். அந்த நடிகரின் போட்டாவை வீட்டின் வாசல் படியில் மாட்டியிருந்தார். அந்த சினிமா நடிகரைப் போன்ற நடை உடை பாவனைகள் அவரிடம் இருந்தன. எனக்கு அந்த சினிமா நடிகரைப் பார்க்கும் போதெல்லாம் இவரின் நினைவே.
காலையிலும் மாலையிலும் இரண்டு கோயில்களுக்குச் சென்று வணங்கி வந்தார். வழிபாடுகள் அவர் ஊரில் இருக்கின்ற நாட்களில் ஒருநாளும் தவறியதில்லை. மீறல்கள் எதுவும் இன்றி அவர் ஆற்றிவந்த காரியங்களில் இறை வழிபாடே முதன்மையானது. சமூக மனிதர். சமூகத்தின் இருப்பும் விரிவும் அ வருக்கு நன்கு தெரியும். அயோக்கியர்களே அதிகம் என்பதையும் அறிவார். ஆயினும் அவருடைய நடவடிக்கைகளில் சமூக விமர்சனமோ, சக மனித வெறுப்போ வெளிப்பட்டதில்லை. அவருக்குள் அவர் என்னவாக இருந்தாரோ?
அவர் குறித்து எனக்கு தீவிர வெறுப்போ விருப்போ இருந்ததில்லை. விபத்தின் மூலம் அவர் என்னை ஆழமாகப் பாதித்து விட்டார். எதிர்பாராத மரணம் அவரை மறக்க முடியாத மனிதராக மாற்றிவிட்டது. கூடுதல் நினைவாக அவரின் அம்மணமும்.