“டிச்“ திண்டின் மீது அமர்ந்திருந்தார் “என்ன ஏது எவ்விடம் மாமா“. மாமாவின் இயற்பெயர் காலத்தில் கரைந்து மறைந்து என்ன ஏது எவ்விடம் என்பதே அவரின் அடையாளம் என்றாகிவிட்டது.படுத்திருப்பவரை எப்போது எழுப்பினாலும் பதறி எழுந்து என்ன ஏது எவ்விடம் என்ற விசாரத்தோடு தரையைத் தொட்டு தடவி பரிதவித்தே எழுவார் என்பதன் காரணப்பெயர்.
மாமாவிடம் சில விநோதப் பழக்கங்கள் இருந்தன. –அந்த விநோதப் பழக்கங்களே அவரை இதுநாள் வரை நினைவில் நிறுத்தி வைத்திருக்கிறது.
இரண்டு பீடிகளையும் ஒரே நேரத்தில் பற்ற வைத்து ஒன்றன் பின் ஒன்றாகப் புகைப்பார். புகைக்கும் வேகமும் இயல்பினை விட அதிகம். யாரோ அவரை ஒற்றறிந்து பீடி குடிக்கும்போது கையும் களவுமாக பிடிக்கக் காத்திருப்பதைப் போன்ற பதற்றம். பிறருக்கு அவரின் புகைப் பழக்கம் வேடிக்கையாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளதால் பொதுவெளியில் அவரை பீடிகளுடன் பார்க்க முடியாது. நீண்ட நாட்களாக எனக்கும் இது தெரியாது. ஒருநாள் இரண்டாம் காட்சி சினிமா முடிந்து இரவு வீடு திரும்பிய போது கழிவறையின் இருளுக்குள் இரண்டு தீத்துளிகள் மின்னி மின்னி சீற்றம் கொள்வதைக் கண்டு ஒருகணம் திடுக்கிட்டு விட்டேன். நடை விளக்கினைப் போட்டதும்தான் அது மாமா என்று தெரியவந்தது.
“ஏது..மருமோனே..செகண்ட் ஸோவா?” என்றார் குழந்தைத்தனமான சிரிப்புடன். கண்கள் சிவந்திருந்தன. மீதமிருந்த பிராண்டியைக் காலிசெய்திருப்பார் போல. நெஞ்சுரோமங்களை வாஞ்சையோடு நீவிவிட்டார்.
தொடைவரை கைலியை மேலேற்றி சிமிண்ட் திண்டின்மீது அமர்ந்திருந்தார். ஒரு வாசலுக்குள் நான்கு அறைகள் உள்ள காம்பவுண்ட் வீடு. கடைசி அறையில் நான். முதல் அறையில் மாமா.இடைப்பட்ட இரண்டு அறைகளில் இரண்டு குடும்பங்கள். நான்கு அறைகளுக்கும் பொதுவான குளியலறை என் அறைக்கு எதிரே இருந்தது. குளியலறைக்கும் என் அறைக்கும் இடைப்பட்ட பகுதியில் கழிவோடைசெல்லும். அதன் மீது திண்டு கட்டியிருந்தார்கள்.
“ப்ச்ச…கேட்டீகளா..உங்க தாத்தா அந்தக்காலத்திலே இருந்த இருப்பென்ன..ஆளு பீமனாட்டம். கரு கருனு இருந்தாலும் அவ்வளவு தேஜஸ். நாங்க அவர் கண்ணைப் பார்த்து பேசமாட்டோம். அப்படி ஒரு ஆளுமை. எட்டு வருசம் அவருக்கு தறி ஓட்டினேன்…உங்க அத்தையைக் கட்டின பிறகுதான் மெசூரா கோட்சுல வேலை கிடைச்சது…இப்ப நீங்க என் மகன்கிட்ட கூலிக்கு நிக்கீக..இதுதான் காலம்ங்கறது..கப்பலும் ஒருநாள் ஓடத்தில ஏறும்னு கேள்விப்பட்டிருக்கேன்..அத என் வாழ்நாள்ல பாப்பேன்னு நினைக்கல” பெருமிதம் பொங்க ஓயாமல் என்னிடம் பகிர்ந்துகொள்வார்.
மாமாவும் அவரின் ஒரே மகனும் அங்கே தங்கியிருந்தார்கள். நான் தனியாக அறை வேண்டும் என்ற முடிவில் கரூர் முழுக்க அலைந்து கொண்டிருந்தேன். குத்தாலத்துப் பசங்க என்று கேள்விப்பட்டதுமே வாடகைக்கு விடுவது குறித்து வீட்டுச் சொந்தக்காரர்கள் தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்து விட்டனர். கடைசியாக மாமாவைப் பார்த்து முறையிட்டேன் அதுவும் வழியில் சந்தித்து. அப்போதும் மேலே உள்ள பத்தியை உடனே சொல்லிவிட்டு “என்ன இருந்தாலும் நீங்க நம்ம மோலாளி வீட்டு கொசுறுலா..வாங்க பாத்துக்கிடுவோம்” என்றார் ஆறுதலாக.
இரண்டு குடும்பங்கள். அதில் இரண்டு சமைஞ்ச குமருகள். கவுண்டரம்மா முதலில் மறுத்தார். மாமா “நானாச்சு…நம்ம மருமகன்..நல்ல குணமாக்கும்..நீங்க என்ன நம்பி குடி வைக்கலாம்..பீடி சிகரட்டுனு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது” என்று சத்தியம் செய்தார். இரண்டையும் அப்போதுதான் பழகியிருந்தேன். தனியான ஆண்களை குடும்பங்களுக்கு மத்தியில் குடிவைக்க அவர் தயங்கியது உண்மையிலேயே கவலைகொள்ள வேண்டிய ஒன்றுதான்.
மகன் இல்லாத இரவுகளில் மாமா தவித்துப்போவார். அவரால் இரவில் தனியாக இருக்க முடியாது. விளக்கினை விடிய விடிய எரிய விடுவார். கண் அயரும் வரை டி.வி.யில் அறுபதுகளின் தேவ கானங்கள் வழிந்து நிறையும். தானாக துாக்கம் வரும்வரை சினிமாவின் துணை. அதன் பின்னரும் வீட்டிற்குள் டம்ளரோ செம்போ குழம்புக் கரண்டியோ டங்..டங்..டங்..என்று மெதுவாக தரையில் மோதும் ஓசை கேட்டுக்கொண்டே இருக்கும். நிசப்தம் மாமாவை துயர்கொள்ள வைக்கும். எப்படி அவரால் இவ்விதம் அசைத்து ஒலி எழுப்பிக்கொண்டே துாங்க முடிகிறது என்பது தீராத புதிர்தான். ஒருமுறை நல்ல போதையில் இருந்தபோது அவரிடமே கேட்டுவிட்டேன்.
“அதை ஏன் கேக்கீக…சொன்னா சிரிக்கக் கூடாது. நான் கையைக் கால அசைக்காம இருந்தேன்னு வையுங்களேன்…உடனே அந்த மூலி கனவுல வந்துருவா..ஒரே ஆங்காரந்தான்…நாக்கு தொப்புள் வரை தொங்கும். மொல ஒவ்வொன்னும் வருக்கைச் சக்க கணக்கா..நெஞ்சில வந்து ஏறி ஒக்காந்துக்கிடுவா..ரெண்டு கையாலயும் கழுத்தைப் பிடிச்சு நெரிப்பு..கொட்ட கலங்கி காணாமப் போயிடும்…ஒருக்கா படுக்கையிலேயே கக்கா போயிருச்சுனா பாத்திக்கிடுங்களேன்..முண்ட வங்கொலயா செத்து நாப்பது வருசமாச்சு..ஆனா இப்பவும் கண்ணை மூடினா உடனே கக்கத்துக்குப் பக்கத்துல வந்து குந்தி இருப்பா…நான் அசந்திட்டேன்னு தெரிஞ்சா அழிச்சாட்டியந்தான்..”
நெய்யாற்றின்கரை ஈழுவத்திதான் மாமாவின் முதல் தாரம். உயர்குடிப் பெண்களைப் போன்ற பாவனைகள் அத்தையின் இயல்புகளாக இருந்தன. அதற்குத் தகுந்த நிறமும் உடல் அமைப்பும். திருத்தமான முகம். கூர் நாசி. அகன்று விரிந்த விழிகள். பார்ப்பவரை பரிதவிக்க வைக்கும் முலைகள். இடை குறுகி விரிந்திருக்கும் பின்பகுதி. நடையின்போது தனித்து அசைந்து பயணம் மேற்கொள்ளும் பேரழகு.கருநாகப் பிணையல் போன்ற கூந்தல்.
எதையோ சொல்லி ஏமாற்றி மாமா திருமணம் செய்து அழைத்து வந்துவிட்டார். வந்த நாள் முதல் மாமாவிற்கு நிம்மதி இல்லை. பேரழகிகளை திருப்தி படுத்த முடியாது என்பது பால்யத்தில் மனதில் பதிந்துவிட்ட ஒரு எச்சரிக்கை. நிறைவேறாத ஆசைகளுடன் தனித்திருக்கும் பேரழகி சூழ இருக்கும் ஆண்களை சீண்டும் இடைவிடாத அழைப்பு என நம்பினார். எடுத்ததெற்கெல்லாம் சந்தேகம். அழுக்குத் துணி வாங்கவரும் வண்ணார் கிழவரையும் கூட ஆண் என்பதால் வீட்டிற்குள் நுழைய அனுமதிப்பதில்லை.மாமாவின் தடுமாற்றம் அத்தையையும் பாதித்தது. அவரைக்கண்டாலே ஏளனம் வெளித்தெரியும் முக பாவனை. அதுவும் ஆண்களுக்கு மத்தியில் அத்தையால் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாது. சிரிப்பும் துள்ளலும் இயல்பைவிட பன்மடங்கு அதிகரிக்கும். நடையின் நளினம் மேலும் கூடும். மாமா வெறித்த விழிகளுடன் மறைவிடம் தேடி ஒளிந்து கொள்வார். ஆயினும் அத்தையின் நடமாட்டத்தையும் பாவனைகளையும் நெஞ்சம் பதற உற்று நோக்கிக்கொண்டே இருப்பார்.அருகில் இருக்கும் அரூபத்திடம் தன் பாடுகளை மெல்ல முணுமுணுப்பார். திருமணமான புதிதிலேயே தாது புஷ்டி லேகியங்களை எடுத்துக்கொண்டார்.
மாமாவிற்கு மற்றொரு தனித்திறன் உண்டு. வீட்டுக்கு விலக்காகி இருக்கும் பெண்களை கண்களால் பார்த்தே கண்டு பிடித்து விடுவார். அவர்களின் உடலின் வெப்பம் காற்றில் கலந்து அவரிடம் சேதியைச் சொல்லிவிடும் என்பார். தீட்டு வந்த பெண்களிடம் இருந்து ஐந்தடி தொலைவில் நிற்பதே ஆரோக்கியம். நெருங்கி நின்றால் அவர்களின் வெக்கை அருகில் நிற்கும் ஆண்களின் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் என்பார். அவர் அவதானிப்புகள் அனைத்தும் அபத்தங்கள் என்றாலும் அவர் அதை நம்பத்தான் செய்தார். மறுத்து வாதிட முடியாது. பிறர் சொல்லும் எதையும் கேட்கும் எளிய குணம் அவரிடம் இல்லை.
“மருமகனே சீக்கரம் வெளிய வாங்க” என்றார் மாமா. நான் ஆணைக்கு கட்டுப்பட்டு உரித்துக்கொண்டிருந்த வெங்காயங்களை தட்டில் வைத்துவிட்டு அவரைப் பின்தொடர்ந்தேன்.
“நான் சொன்னத நீங்க நம்பல தான..இப்ப நேரே கக்கூஸ் போயி குத்தவச்சிட்டு வாங்க” என்றார் விஞ்ஞானியைப் போல.
எனக்குத் தயக்கமாக இருந்தது. யாரும் இந்த விளையாட்டை கண்டறிந்து விடக்கூடாதே என்ற பயமும். மாமா பரபரத்துக்கொண்டே இருந்தார்.
“ரெம்ப லேட்டாக்காதீக…வாசனை இல்லாமல் போயிடும்” அவரே என்னை உந்தித் தள்ளினார்.
கதவைச் சாற்றிவிட்டு அமர்ந்தேன். முன் இருந்து சென்றவரின் வெக்கையை என்னால் உணர முடிந்தது. முன் இருந்து சென்றது நடுவீட்டிற்கு உறவாடி வந்திருக்கும் கன்னி. குளித்தலையில் இருந்து வந்திருப்பவர். மாமாவின் ஊகத்தினை உறுதி செய்யும் விதத்தில் வழக்கமான நாற்றத்தை விட ஒரு சுகந்தம் நிலைகொண்டிருப்பது போன்ற பிரமை. இனிப்பும் ரோஜாக்களின் வாசனையும் கலந்த தனிமை.
முடிவெடுக்க முடியாமல் வெளியே வந்து கால்களில் தண்ணீரைக் கொட்டிக்கொண்டேன்.
“மணக்குதாவோய்..பெரியாளு சொன்னா நம்பணும்”
மாமா சொல்லியதை அப்படியே சொல்ல வேண்டும் என்றால் – பத்தினிப் பெண்களின் கழிவறைப் பிரவேசத்திற்கு பிறகு கழிவறையில் தற்காலிகமாக சுகந்தம் இருக்கும் என்பதே மாமாவின் கண்டுபிடிப்பு. இதை மிகத்தீவிரமான முகபாவனையோடு முக்கால் போத்தலும் காலியான இரவொன்றின் இறுதியில் என்னிடம் பகிர்ந்துகொண்டார்.
தலை நடுங்கிய போதையிலும் எனக்கு அது திகைப்பை ஏற்படுத்தியது. அறுபதைத்தாண்டிய ஆணின் மனதில் இத்தனை பெண் பித்தா?. பெண்களைப் பற்றித்தான் எத்தனை விதமான நம்பிக்கைகள். ஒழுங்காக மனைவியோடு வாழ்ந்திருந்தால் இந்த திருகல் நிகழ்ந்திருக்காதோ? மகள்களைப் பெற்ற அப்பனாக கனிந்திருந்தால் இதுபோன்ற கிறுக்குத்தனமான எண்ணங்கள் தோன்றியிருக்காதோ? ஆண்களின் கழிவறைப் பிரயோகத்திற்கு ஏதும் கண்டுபிடித்து வைத்திருக்கிறாரோ?
மாமாவின் நளபாகம் ஒரு வரம். சோறை வடித்துவிட்டு மாமாவிடம்தான் குழம்பு வாங்குவேன். மிகச்சிக்கனமான சமையல்தான். இரண்டு கத்தரிக்காய்களுக்கு மேல் நறுக்குவதில்லை. தேங்காய் ஒன்றை உடைத்தால் ஒருவாரத்திற்கு வைத்துக்கொள்வார். வெங்காயங்களை மட்டுமே பயன்படுத்துவார். பெரிய வெங்காயத்தின் மீது அவருக்கு ஒவ்வாமை. புளிக்குழம்பினை பிரமாதமாக சமைத்துவிடுவார். இருப்பதிலேயே சிரமமான குழம்பு வகைகளில் ஒன்று புளிக்குழம்பு என்பது என் நம்பிக்கை. அவரின் கைப் பக்குவத்தை ஒரு உச்ச நிகழ்வாக இன்று வரைநினைவில் வைத்து,சாப்பிட நேரும் புளிக்குழம்புகளை மாமாவின் குழம்போடு ஒப்பிட்டு மதிப்பெண்கள் போட்டுக்கொள்வேன். அவரை வென்ற ஒரு தயாரிப்பு இதுவரை எனக்கு வாய்க்கவில்லை.
என்னிடம் நடுவீட்டு யுவதி காதலைச் சொன்ன மறுநாள் மாமா கண்டுபிடித்துவிட்டார்.
“அவுக..என்னாளுகனு தெரியுமா…நம்மளவிட குறைஞ்ச சாதி. சிவப்பா இருந்தா போதுமா.. ரெண்டு பந்தும் ஒரு பொந்தும் எப்ப வேணும்னாலும் கிடைக்கும்..காமாட்சி அம்மன் கோவில் தெருவில விதவிதமா இருக்குதே….போயிட்டு வந்திர வேண்டியதுதானே..இந்த சோலி வேணுமா…பேசாம ரூம காலிபண்ணிடு”
மாமாவின் வெளிப்படையான பேச்சை அன்றுதான் வெறுத்தேன்.
மாமா மற்றொன்றையும் உடனே சொன்னார்.
“அவ பத்தினி கிடையாது”
எனக்கோ ஆத்திரத்தில் கைகள் நடுங்கின.
மாமாவின் வீட்டிற்குள் மேற்குப் பார்த்த சுவர் முழுக்க அம்மன் படங்கள். செவ்வாடை உடுத்திய அம்மன். மயிலில் ஒய்யாரமாக சாய்ந்திருக்கும் தேவி. இடத்தொடையில் அமர்ந்திருக்கும் வாணி. வெள்ளி செவ்வாய் ஆசாரங்களை மாமா தவறவிடுவதில்லை. எங்கு சென்றாலும் நல்லநேரம் படுவச்சி பார்த்துவிட்டே கிளம்புவார்.சாயந்திரம் சைக்கிள் ஊதுவத்தியின் நறுமணம். அசையாமல் நின்றெரியும் சுடரின் முன் அமர்ந்து ஐந்துநிமிடத் தியானம். வீட்டை துாத்துத் துடைத்து பளிங்கு போன்று பராமரிப்பார். பாத்திரங்களை உடனுக்குடன் கழிவி வைத்து துண்டுகொண்டு ஒற்றியெடுத்து வரிசையாக அடுக்கி வைப்பார். விளக்கு ஒளியில் பட்டு அவை மின்னும். புற ஒழுங்கின் நேர்த்தி வியக்க வைக்கும்.
ஒரு சித்திரை மாதத்தில் சொந்த ஊர் சென்றவர் திரும்பி வரவில்லை. விசாரித்துப் பார்த்தால் இசைக்கி அம்மன் கொண்டாடியாக கோவிலிலேயே காவி உடுத்தி இருந்துவிட்டார் என்றார்கள். ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே கொடை நடக்கும் சிறிய ஊர்க்கோவில் அது. இசைக்கியின் காலடியில் படுத்துக்கிடப்பது தனக்கு நிம்மதியாக இருக்கிறது என்று தாடியைத் தடவிக்கொண்டே மாமா பூரித்து சிரிப்பதாக நண்பர்கள் சொன்னார்கள்.
முன்பைப் போல மாமா இப்போது பதறி எழுவதில்லை என்றும் சொன்னார்கள்.