தென்காசிக்கும் கடையநல்லுாருக்கும் இடையே உள்ளது மங்களாபுரம். ஐந்தாண்டுகள் ஆர்பனேிஜில் தங்கிப் பயின்று பத்தாம் வகுப்புத் தேறினேன். மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்து ஏங்கும் நினைவுகள் அதிகம் உள்ள ஊர்.
ருக்மணி உயர்நிலைப்பள்ளியின் தாளாளருக்கு இரண்டு மகன்கள்.பெரியவர் மங்களாபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சின்னவர் புளியங்குடியில் எங்கள் தெருவில் பணி நிமித்தமாக அந்நாட்களில் தங்கியிருந்தார்.
பத்துவயது சிறுவனாக நான் செய்த சேட்டைகள் கணக்கில் அடங்காதவை. “அறுதலி வளத்த கன்னுக்குட்டியாக” இருந்தேன். இன்று ஒரு அப்பனாக அனுபவப்பட்ட பிறகுதான் புரிகிறது என் சேட்டைகள் எந்தளவிற்கு அம்மாவிற்கு மனவருத்தத்தை அளித்திருக்கும் என்பது.
அப்பாவைப் போல அரளி விதைகளை அரைத்துக் குடித்து தற்கொலை செய்துகொள்வேன் என்று அம்மாவை மிரட்டுவது என்னுடைய கடைசி ஆயுதப் பிரயோகம். அம்மா தங்கையின் படிப்பை பாழாக்கி பீடி சுற்ற பழக்கியிருந்தாள். இருவர் சுற்றும் பீடிக்கட்டுகளில் இருந்தே அன்றைய நாட்களுக்கான அப்பங்கள் கிடைத்து வந்தன.சீனிக்கிழங்கு,துட்டுமிட்டாய்,சீனிமிட்டாய்,கல்கோணா,தேன்மிட்டாய் என சிறுதின்பண்டங்களும் கேட்டபோதெல்லாம் கிடைத்தன.
முருகேசன்,நாக்குத்தள்ளி, கூல்ப்பானை,பட்டாளத்துக்காரன் பையன் என்று தெருச் சகாக்கள். புளி,வேம்புகளில் கூடு கட்டியிருக்கும் கொக்குகளின் முட்டைகளைத் தேடி எடுத்து குடிப்பது அன்றாடச் சாகசங்களில் ஒன்று. மரக்கிளைகளின் உச்சானிக் கொம்புகளுக்கு தொற்றி ஏறவேண்டும். காற்றில் கிளைகள் மேலும் கீழும் இடதும் வலதும் ஆட்டங்கள் போடும். பயம் துளியும் இருக்காது. கொக்குகள் பரிதவித்து இறக்கைகளை கொட்டி விரட்டும். அழுது அரற்றும். கூடுகளில் பக்குவமாக இடப்பட்டிருக்கும் முட்டைகளை விரல்களால் எடுத்து டவுசர் பாக்கெட்டுகளில் பத்திரப்படுத்திக் கொள்வேன். அதுவரை தாய்ப்பறவைகளின் அரவணைப்பில் இருந்த முட்டைகளில் அம்மாக்களின் வெக்கைகள் உறைந்திருக்கும். அதன் வெதுவெதுப்பு தொடைகளைச் சுடும்.
பெருந்தீனிக்காரனாக இருந்தேன். நாடார் கடைகளில் விற்பனைக்கு வரும் தீனி வகைகள் அனைத்தும் வேண்டும் என்று அடம். தேனப்பம், முருக்கு, அதிரசம் தேன்முருக்கு விற்றுவரும் பாட்டியிடம் அம்மாவுக்கு கணக்கு உண்டு. முதல் நாள் வாங்கியவை மறுநாள் காலியாகிவிடும். வாரச் சம்பளம் வராத நாட்களில் அம்மா என் செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் திகைத்து நிற்பாள். அவளை வழிக்கு கொண்டு வரும் விதமாக பகல்பொழுதுகளில் நீண்ட நேரமாக வீட்டில் சண்டையிட்டு சோற்றுப்பானையை அப்படியே துாக்கி முற்றத்தில் எறிந்துவிட்டு, எங்காவது சென்று ஒளிந்து கொள்வேன். அம்மா சாப்பாடு நேரத்தில் வீடு திரும்பாத என்னைத்தேடி தெருத்தெருவாக அலைவாள். “ல்லே..சங்கரு..ஏலே..சங்கரு“ என்ற குரல் தெரு முழுக்க பரிதவிப்போடு என்னைத் தேடும்.
அஞ்சடிச்சான் முக்கும் மந்தையும் இராயகிரியின் தென் வடல் எல்லைகள். வடக்கே தறிச்செட்டு வரை சென்றிருக்க வாய்ப்பிருக்கும். சிலநாட்களில் தெற்கு சத்திரம் வரை நடந்தே சென்று விடுவேன். வேப்பங்குளத்தின் கரைகளில் அமர்ந்து எதிரே அடர்ந்து நிற்கும் கருவேல மரங்களில் ஊடாடித் திரியும் பறவைகளைப் பார்த்துக் கொண்டிருப்பேன். அருணாசலம் தொடக்கப்பள்ளி எங்கள் தெருவிற்கு கொஞ்சம் வடக்கே தள்ளி எதிர்த்திசையில் உள்ள தெருவில். சில சமயங்களில் மாடசாமி கோவில் மாந்தோப்பில் சென்று பதுங்கிக்கொள்வேன். தெருவின் மேற்புரம் கூட்டுறவு சொசைட்டி தறிச்செட்டுக்கு எதிரே பாழுங்கிணறு. தெருவின் விளிம்பு வரை புஞ்சை. பருத்தியோ சோளமோ பயிராகி காற்றில் தளும்பிக் கிடக்கும். அவற்றின் நீராதாரமாக ஒரு பெரிய கிணறு. அதைச்சுற்றி உடைமுள் செறிவு. அங்கேயும் ஒளிந்து கொள்வேன். கள்ளச்சாராயப் பாட்டில்கள் பதுக்கி வைக்கப்படும் இடமும் அதுதான். வெள்ளைப் பிளாஸ்டிக் கேன்களில் வெறுந்தண்ணீர் போன்று இருக்கும் அவற்றை திருடி அருந்தியதும் உண்டு.
சொல்லிக்கொண்டே இருப்பதை ஒருவேளை செய்துவிடுவானோ என்று அம்மா உண்மையில் பயந்தாள். அப்பாவைக் கொன்ற பாவம் வேறு அவள் கணக்கில் வரவாகியிருந்தது. புளியங்குடியில் இருந்து காய்கறிகள் அரிசி பருப்பு என்று துணிப்பைகளில் அள்ளி வந்து எங்களை பேணிக்காக்கும் அக்கா –அம்மாவின் அம்மா-என் சேட்டைகளைப் பற்றி கேள்விப்பட்டாள். சின்னவரிடம் கெஞ்சிக் கூத்தாடி மங்காளபுரம் ஆஸ்டலில் என்னைக்கொண்டு வந்து தள்ளினாள்.
பத்துவயதில் இராயகிரியில் இருந்து பிரித்து வைக்கப்பட்டேன். குடும்பம், சொந்த தெரு, சாதி சனங்கள், நண்பர்கள் என பூர்வீகமாக எனக்கு கிடைத்து வந்த அனைத்தும் உடனடியாக இரத்து செய்யப்பட்டன. எங்கள் தெரு, அஞ்சடிச்சான் முக்கு, ஆவுடையானுார் நாடார் ஸ்கூல்,கருப்பசாமி கோவில், சின்ன பெரிய மாரியம்மன் கோவில்கள், மாசித் திருவிழாக்கள். திருவிழாக்களில் நிகழ்த்தப்படும் கரகாட்டங்கள்,கரகாட்டக்காரிகளின் ஜிகினா ஒளிரும் மெலிந்த தொடைகளும் முலை முகடுகளும், பாட்டுக்கச்சேரிகள். அன்று கொண்டாட்ட நிகழ்வுகளாக கருதப்பட்ட திரைகட்டி சினிமா பார்க்கும் வைபவங்கள். டி.வி.டெக் வாடகைக்கு எடுத்து விடிய விடிய மூன்று சினிமாக்கள் பார்க்கும் தொடர் சாதனைகள். திருவாதிரை சப்பரங்கள். மருதமலை மாமணியே முருகையா என்று ஒலிக்கும் டூரிங் டாக்கீசின் கடைசிப்பாட்டு. பிள்ளைபிடிக்க வரும் கல்கோணா, வேப்பங்குளத்தில் ஊதிப்பெருத்து நாறிக்கிடந்த பெண்ணுடல், கருப்பசாமி கோவில் திண்ணையில் பழங்கதைகள் சொல்லி கதைகேட்கும் ஆர்வத்தை வளர்த்த இராமையா பிள்ளைத் தாத்தா. கோயில்களில் அவ்வப்போது தங்கிச்செல்லும் செவ்வாடை துறவிகள். அவர்களைச் சுற்றி பம்மிக்கிடக்கும் கஞ்சாபுகை நாற்றம். “அம்மாட்ட பால்குடிச்சியால“ என்று என்னைப் பார்க்கும் போதெல்லாம் கேட்கும் மேஸ்திரி பெரியப்பா. பசித்த கண்களை அடையாளம் கண்டு ”ஊர்ச்சோறு” ஊட்டி வளர்த்த செவிலித்தாய் அனந்தம்மாள், ஊர்த்துணி மூட்டைகளின் மேல் ஒய்யாரமாக சாய்ந்திருக்கும் முருகேசன். ராமராஜனின் தீவிர ரசிகையான குருவக்காள். சிலோன் ரேடியோவின் காற்றில் வந்த கீதங்கள். செவ்வரளி,நந்தியாவட்டை, மல்லிகைச் செடிகள் சூழ்ந்த துலாக் கிணறு. கருப்பசாமிக்கோவிலின் நாதஸ்வர இசை. மாரியம்மன் பாடல்கள். டி.எம்.சௌந்தரராஜனின் உள்ளம் உருகுதையா என்ற உள் உருகுதல்கள், முனி அடித்து அகாலத்தில் இறந்த சுடலையாண்டி இவைதான் இராயகிரி குறித்து என் நினைவுகளில் மீந்திருப்பவை.
கட்டாய புலம் பெயர்வு. மங்களாபுரத்தில் அகதியாக உணர்ந்தேன். வெய்யிலின் ஒளிக்கற்றையில் பிகுபிகுவென ஒளிரும் செம்மண் நிலம். கடையநல்லுார் அட்டைக்குளத்தின் கரைவழியாக நடந்து மங்களாபுரம் ஊருக்குள் வந்துவிடலாம். அல்லது ஊரைப் பகுத்துச் செல்லும் ரயில் தண்டவாளங்களில் இரண்டு கைகளையும் விரித்து சமன் செய்து நடந்துவந்தும். இணையாக கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை. சதா சரக்குகள் ஏற்றிச்செல்லும் வாகன இரைச்சல்கள். நிசிகளில் காற்றின் மூர்க்கத்தால் எழுந்து வரும் விடுதி சன்னல் கதவுகள் எழுப்பும் டப்..டப்கள். பேய்களுக்கு அஞ்சி நடுங்கிக்கொண்டே படுத்திருப்பேன். தேசிய நெடுஞ்சாலையில் கனத்து திணறிச்செல்லும் வாகனங்களின் விரைவு ஒன்றே ஆறுதல். வாகன இரைச்சல் அன்னையின் மறுவடிவாக மாறி துயிலச் செய்யும்.
மங்களாபுரத்தை மேலுார் கீழுர் என்று பிரிப்பது சுரண்டைக்கு செல்லும் ரோடு. மேலுாரில் பள்ளி இருந்தது. கீழுரில் பள்ளியில் உடன் படித்த சுரேஸ் இருந்தான். ஓடையைத்தாண்டி தென்வடல் தெருவில் அவனின் வீடு. ஓடு வேய்ந்த சிறிய அறைகள் கொண்டவை. செம்மண் தரை. மங்கிய விளக்கொளியில் ஒரு சோக நாடகத்தின் அரங்கம் போன்று காட்சிதரும். இடுங்கிய அதன் அறைகளில் ஒன்றில் இருந்துதான் என்னுடைய பொன்னுலத்தின் பக்கங்களை சுரேஸ் எடுத்துத் தருவான். மாயாவி, டயானா வரும் சித்திரக் கதைகள். காமிக்ஸ் புத்தகங்கள் அவனிடம் நிறைய இருந்தது. க்ரைம் நாவல்கள், பாக்கெட் நாவல்கள் சேகரித்து வைத்திருப்பான். வாசிக்கும் பழக்கத்தை என்னிடம் அறிமுகம் செய்த நண்பன் சுரேஸ். அவனிடம் இருந்தே விதவிதமான சட்டைகளை இரவல் பெற்று அணிந்தபடி ஊருக்குச் சென்று வருவேன். உடுக்கை இழந்தவனின் கைபோல இருந்தான் சுரேஷ்.
வயிறு நிறைய சாப்பாடு வேண்டும் என்பதே என்னுடைய நிரந்தர ஏக்கம். எப்போது எதைக்கொடுத்தாலும் சாப்பிட்டு விடுவேன். காலையில் கோதுமை உப்புமா அல்லது கஞ்சியும் ஊறுகாயும். மதியம் சாம்பார் அல்லது ரசம் அல்லது புளிக்குழம்பும் சோறும். அரிதாக சில நாட்களில் ஊன் உணவு. இரவு மறுபடியும் கோதுமை உப்புமாவோ கஞ்சியோ. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி விடுதி. அண்ணாச்சியின் பங்களாவிற்கு எதிரே இருந்தது பெண்கள் விடுதி. வடக்கேயும் தெற்கேயும் இரண்டு மாணவர்கள் ஆஸ்டல்கள். நான் வடக்கே இருந்த விடுதியில் தங்கியிருந்தேன். ஒரு குடோன் போன்ற பெரிய கட்டிடம். ஆஸ்பெஸ்டாஸ் ஓடுகள். விடுதியின் உள்ளே மாணவர்களின் டிரங்கு பெட்டிகள் வரிசையாக இடம் பிடித்து வைக்கப்பட்டிருக்கும். பெட்டிகளின் எதிரே உள்ள இடம் மாணவர்களுக்கான அறைகள். பாய்கள் விரித்துப் படுத்துக்கொள்ளலாம். அவ்வளவுதான். பத்திருபது சன்னல்கள். காற்று எப்போதும் அறைக்குள் பாய்ந்து வரும். தாழ் இல்லாத சன்னலின் கதவுகள் அறைபட்டுக்கொண்டே இருக்கும். ஊ..ஊ..என்ற ஓங்காரத்தோடு அறைக்குள் அத்துமீறி நுழைந்து கொடிகளில் கிடக்கும் ஆடைகளை அள்ளிவீசிச் செல்லும் காற்று. இன்று அந்த விடுதிகள் எதுவும் இல்லை. நான் தங்கியிருந்த ஆஸ்டலில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்த பிராந்தியத்திலேயே ஒரு தலைமுறைக்காலம் மாற்றம் நிகழாத ஒரு நிலக்காட்சியாக இன்றும் இருக்கிறது. விடுதியின் எதிரே விளையாட்டு மைதானம். அதன் எதிரே சர்ச். அதன் பின்னர் ரயில் தண்டவாளங்கள்.
விடுதிக்கு வடக்கே ஓடை. ஓடையின் பள்ளத்தில் இறங்கி காலைக்கடன்கள். துடைத்துக்கொள்ள நயம் சீனிக்கற்கள். ஓடைக்குச் செல்லும் வழியிலேயே தேடி எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பள்ளி நோட்டுப்புத்தகத்தின் தாள்கள். வடக்கே கடையநல்லுாரை நோக்கிச் செல்லும் தண்டவாளத்தில் நடந்து சென்றால் வரிசையாக வயல்கள். தோப்புகள். அவற்றின் நடுவே இருக்கும் கிணறுகளில் குளித்து துவைத்து மீண்டும் விடுதிக்குத் திரும்புதல். அப்பகுதியில் இருந்த அத்தனை கிணறுகளிலும் சொருக்கு அடித்து கண்கள் சிவக்க குளித்திருக்கிறேன். சம்சாரிகள் யாரும் எங்களை குளிக்கக் கூடாது என்று விரட்டியதில்லை. அத்தனைக்குள் நாங்கள் வெள்ளாமைக்குள் புகுந்த மாடுகள்தான். தக்காளிச் செடிகளில் இருந்து கனிந்த பழங்களைப் பிடுங்கி தின்றுவிடுவோம். நிலக்கடலைச் செடிகளை மண்ணில் இருந்து இழுத்து செம்மண் ருசியோடு உடைத்துச் சாப்பிடுவோம். வெங்காயங்கள் கூட எங்களின் தின்பண்டந்தான். சோளக்கதிர்களின் பால் ருசி அலாதியானது. மிளகாய் பிஞ்சுகள் கூட தின்பண்டமாக பாவிக்கப்படும். மோட்டார் கட்டிடத்தின் மேலேறி தலைகீழுாக சொர்க்கு அடித்து கிணற்று மண் எடுத்துவருவது மாணவர்களுக்கிடையே பிரமிப்பாக பார்க்கப்படும் நிகழ்வு. காதுகளில் நீர் குத்தி வலியெடுக்கும். இளம் கன்றுகளின் துணிச்சல்.
அம்மா எப்போதாவது என்னைப் பார்க்க விடுதிக்கு வருவாள். நான் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலைகளை எதிர்பார்த்து தவம் இருப்பேன். கடையநல்லுார் வரை நடந்தே சென்று இராயகிரிக்கு பஸ் ஏறிவிடுவேன். அந்நாட்களில் மங்களாபுரத்தில் ரூட் பஸ்கள் நிற்காது. டவுன் பஸ்கள் மட்டுமே பயண ஊர்திகள். பெரும்பாலான நாட்களில் கடையநல்லுார் பஸ் ஸ்டாண்டில் இறங்கி தலையைக் குனிந்தபடி சாலைகளில் ஏதாவது தென்படுகிறதா என்ற தேடலுடன் கூடிய பொடி நடை. இரும்பு ஈயம் பித்தளைப் பொருட்களுக்கு சீனிக்கிழங்கு விற்கும் சைக்கிள் வியாபாரி ஒவ்வொரு நாள் சாயந்திரமும் விடுதிக்கு வந்து செல்வார். அவிக்காத சீனிக்கிழங்கிற்கு அமுதத்தின் ருசி அப்போது இருந்தது.
கர்த்தரையும் இயேசுவையும் ஜெபத்தையும் அறிமுகம் செய்து கொண்டேன்.பெந்தகோஸ்தே சபை. பெண்கள் பூவும் பொட்டும் அணிந்து கொள்ளமாட்டார்கள். ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகளில் விடுதி மாணவர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும். விடுதிக்கு எதிரேதான் சர்ச். தேவ கீதங்கள் மனப்பாடம் ஆயின. இரவுகளில் துாங்கும் முன் மண்டியிட்டு தொழும் பழக்கம் ஏற்பட்டது. “ஏசுவே..ஸ்தோத்திரம்..ஸ்தோத்திரம்” என்பது ஆபத்துக் காலங்களில் மீட்பின் வழியாயிற்று. ஏசுவின் சோகம் கப்பிய முகத்தின் மீது அத்தனைப் பிரியம்.
கீழுரில் மாதத்திற்கு இரண்டுமுறை டி.வி.டெக் வாடகைக்கு எடுத்து புது சினிமாப்படங்களை ஒலிபரப்புவார்கள். தேவேந்திரகுல வேளளார்கள் வாழும் பகுதி என்பதால் பிரசாந்தின் படங்கள் அனைத்தும் உடனுக்குடன் பார்த்துவிடலாம். செம்மண் புழுதியோ நடுநிசிக்குளிரோ ஒரு பொருட்டல்ல. நாய்களைக் கண்டுதான் அச்சம். இரவு படிப்பு முடிந்து பத்துமணிக்கு வார்டன் வீட்டுக்கு கிளம்பிவிடுவார். பூனைப்பாதங்களில் ஒவ்வொருவராக படம் பார்க்க கிளம்புவோம். சிலர் தண்டவாளங்களில் நடந்துசென்று கடையநல்லுார் மங்களசுந்தரி,மனோகரியில் இரண்டாம் ஆட்டம் பார்த்து திரும்புவார்கள்.
வேலி தாண்டிய வெள்ளாடு என்கிற அடல்ஸ் ஒன்லி படத்தை என்னுடைய பத்து வயதிலேயே பார்க்க நேரிட்டது. ஒரே கட்டணத்தில் மூன்று படங்கள் ஓட்டும் உன்மத்த நாட்கள். கட்டிலில் தகித்துப் புரண்ட வெண்தொடைகளைக் கண்டு பரவசம் ஆகி உள் பாவாடை மேலும் விலகாதா என்று திரையை வெறித்த சிறுவனின் கண்கள் இன்றும் என்னிடம் உள்ளன. சினிமா ஒன்றே கொண்டாட்ட வெளி. பேசுபொருள். சண்டை சச்சரவிட்டு நிலைநிறுத்த வேண்டிய கொள்கை மயக்கங்கள். தியேட்டர்களின் பொற்காலங்களும் அதுதான். ஒரு படம் நுாறு நாட்கள் ஓடியது அப்போதுதான். தென்காசி பரதனிலோ பத்மம் தியேட்டரிலோ சின்னத்தம்பி நுாறுகளைத் தாண்டி ஓடியதை வியப்போடு பேசிக்கொள்வோம். நான் ராமராஜனின் ரசிகனாக இருந்தேன். அமலா பைத்தியம்.
ருசிகள் உருவாகி வரும் பால்யம். பேய்களும் சாத்தானும் ஏசுவும் உள்ளே நுழைந்தார்கள். ஏசுவைப் பேசும்போதெல்லாம் பாதிரிமார்கள் சாத்தானையும் சபித்தார்கள். விடுதியைச் சுற்றி மரங்கள். மேல்புறம் கணக்கற்ற விழுதுகள் கிளைத்து பூதலித்து பரந்து கிடக்கும் ஆலமரம். விழுதுகளும் அதன் ஆயிரம் ஆயிரம் கிளைகளும் வான்நோக்கி பறக்கத் தவிக்கும் இலைகளும் இரவுகளில் பீதியைக் கிளப்பும். திறந்த சன்னல்களின் வழியே பீறிட்டு வரும் காற்றின் ஊளைகளுக்கு பகைப்புலமாக ஆலமரத்தின் இருப்பு. ஒளிரும் பச்சைக்கண்களை பார்க்க நேரிடும் போதெல்லாம் கால்கள் நடுங்கும். மரக்கிளைகளின் இருள்வெளிகளுக்குள் கருப்பு உருவங்கள் தோன்றி விஸ்வரூபம் கொண்டு பரவி வெடித்து காற்றில் கலந்து செல்லும். விடுதி மாணவர்கள் யாரும் அந்த ஆலமரத்தின் பக்கம் செல்வதில்லை. கைமுட்டி அடிக்கச் செல்லும் அண்ணன்கள் ஆலமரத்தின் கிளைகளில் முனி வசிப்பதாக வதந்தி பரப்புவார்கள்.
சதா பசியும் அன்பிற்கான ஏக்கமும் கொண்ட சிறுவனாக வளர்ந்தேன். பசங்களுக்குள் அப்போதே சாதி சார்ந்த ஒட்டுதலும் விலக்கமும் இருந்தது. யாருடனும் நெருங்கிப் பழக முடியாதவனாக இருந்தேன். ஆதி திராவிடர்கள் நிறைந்த விடுதி அது. என்னைப் போல வெளியாட்களும் சிலர் படித்தார்கள். விடுதியின் பெரும்பாலானவர்களுக்கு இலவச புத்தகங்களும் நோட்டுகளும் சீருடைகளும் செருப்புகளும் கிடைக்கும்போது நானும் நாவூறி நின்றிருக்கிறேன். என் பொருளாதார நிலை ஒன்றும் அவர்களைவிட மேம்பட்ட நிலையில் இல்லை.
மூன்றாம் தரமான தமிழ்ச்சினிமாக்களைப் பார்ப்பது கூட அன்று விலை ஏறிய காரியங்கள். பெரும்பாலான வீடுகளுக்கு டி.வி.க்கள் வந்து சேர்ந்திருக்கவில்லை. தியேட்டர்கள் நிரம்பி வழிந்தன. தென்காசிக்கு சென்று ஒரு தமிழ்சினிமா பார்ப்பது மிகப்பெரிய சாதனை. தென்காசி பேருந்து நிலையத்தில் இறங்கி யானைப்பாலம் நோக்கி நடந்துசெல்லும்போது தென்காசியின் தென்றலும் குற்றாலம் சீசனுக்கு வந்திருக்கும் வெளியூர் ஆட்களின் உற்சாகம் பீறிடும் முகங்களும் பரவசமாக இருக்கும். தென்காசியின் தென்றலை எதிர்கொள்ளும் ஒவ்வொரு கணமும் இன்றும் நான் அந்நாட்களின் சிறுவனாக மாறிவிடுகிறேன். அதே ஏக்கமும் தனிமையும் பசியடங்காத பரிதவிப்பும் உடனே உடலில் தோன்ற ஆரம்பிக்கும். பால்யத்தின் அடைதல்களும் இழப்புகளும் ஒட்டு மொத்த வாழ்விலும் அலையடித்துக்கொண்டே இருக்கும் போலும்.
உலகம் புரியாததாக இருந்தது. உறவினர்கள் காட்டும் பரிதாபமும் ஆறுதல் வார்த்தைகளும் அவர்களிடம் இருந்து விலக்கி வைத்தது. நிறைய கிடைத்த நேரத்தில் புத்தகங்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. மாயாவி டயானாவில் இருந்து விவேக் ரூபலா, நரேன் வைஜெயந்தி, பரத் சுசீலா வரை வந்து சேர்ந்தேன். பாலகுமாரனின் வெண்ணையாக யோசிக்கும் கதாபாத்திரங்களும் உருகி உருகி அன்பு காட்டும் முதிர்கன்னிகளும் யதார்த்த உலகத்தை அறிந்து கொள்வதன் மாயத்திரைகளாக இருந்தன.
தீராத வறுமை, தாழ்வுணர்ச்சியின் நடுக்கம். பெண்களின் கண்களை எதிர்கொள்ள முடியாத அச்சம். யாரைக் கண்டும் சந்தேகம் கொள்ளும் அவநம்பிக்கை, எதிர்காலம் என்பது குறித்து எந்தவித திட்டமிடல்களும் இல்லாத வெள்ளந்தித் தனம் என பதின்பவருங்கள் கழிந்தது. அதன்விளைநிலமாக மங்களாபுரம். மங்களாபுரத்தின் செம்மண் நிலத்தின்மீது எனக்கு இருக்கும் பெரும்பித்து அம்மண்ணின் சாரம் ஊட்டமாக மாறிய நிலக்கடலைகள்,வெங்காயங்கள், சோளக்கதிர்கள், பச்சை மிளகாய்கள் உண்டதன் வழியாக உள்ளே உறைந்ததுதான். வாசிப்பின் துணை கொண்டு வழிநடக்க கற்றுக்கொண்ட நாட்கள் நிகழ்ந்த மண் அது. இன்று என் ஒரே அடையாளமாக வாசிப்பும் எழுத்தும் இருக்கிறது என்றால் அதன் விதைநிலம் மங்களாபுரம்.