
எனக்கு ஜனவரி 13ஆம் தேதி காலை 8 மணிக்கு விமானம். இரண்டு மணிநேரம் முன்னதாக நிலையத்தில் இருக்க வேண்டுமென்பதால் 12ஆம் தேதி இரவு 9 மணிக்கு பேரூந்தில் ஏறினேன். அப்போது பேரூந்தில் யாரும் இல்லை. வெளியில் நின்ற நடத்துநரிடம் அண்ணே அண்ணே ஓர் அஞ்சு நிமிசம் பஸ் நிக்குமா, இந்தா பாத்ரூம் வரைக்கும் போயிட்டு வந்துடுறேன் என்றேன். உள்ள லக்கேஜ் வச்சிருக்கீங்களா என்றார். ஆமென்றேன். சீக்கிரம் வாங்க என்றதும் நான் சீக்கிரமே போய் சீக்கிரமே கட்டணக் கழிப்பறையில் சிறுநீரைச் சிறிதளவு கழித்துவிட்டு விரைநடையில் வருவதற்குள் வண்டி கிளம்பிவிட்டிருந்தது. அய்யா அய்யா என்று கூப்பாடு போட்டு வண்டியை நிறுத்தி ஏறிக் கொண்டேன்.
பேரூந்துகளில் இப்போது கியூவார் பே வேலை செய்கிறது. நடத்துநர் மதுரைக்காரர். லக்கேஜெல்லாம் இப்படி வச்சிட்டுப் போகக்கூடாது சார், பூரா திருட்டுப் பயலுக. இப்படித்தான் ஒருக்க வயசான தாத்தா பாட்டி ரெண்டுபேரு ஏறுனாங்க. என்ன செஞ்சிருக்கான், பையத் தூக்கிட்டு பின் சீட்டுல ஒக்காந்து ஒன்னொன்னா துணிய வெளிய எடுத்துப்போட்டு ஒன்னுமில்லைன உடனே அப்படியே போட்டுட்டு எறங்கிப் போய்ட்டான். அப்புறம் கொஞ்சநேரம் கழிச்சி அந்தத் தாத்தா பார்த்துட்டு லபோதிபோன்னு கத்தி வண்டிய விட்டு இறங்குனாங்க. அப்புறம் அதுல வெறும் துணிதான் இருக்கு, போனாப் போவுதுன்னு திரும்பவும் ஏறிக்கிட்டாங்கன்னு வைங்க. நான் தற்செயலா டிக்கெட் சரிபார்க்கிறப்ப வாரேன், பின் சீட்டுல பையும் துணியும் கிடக்கு. இன்னொருக்க ஒருத்தன் பையக் கொண்டாந்து மேல வச்சிட்டு பக்கத்துல இருக்கவர்கிட்ட சார் இந்தமாதிரி ஐநூறு ரூபாயா இருக்கு சில்லறை இல்ல, அல்வா வாங்கணும் ஒரு இருநூறா இருந்தாக் குடுங்க அப்புறம் சில்லறை மாத்தித் தந்துடுறேன்னு சொல்லவும் இவரும் குடுத்திருக்கார். அப்படியே போனவன்தான். அதனால, ஒன்னுக்குப் போனா கூடவே லக்கேஜக் கொண்டு போயிடுங்க என்றார்.
நான் மண்டேலா நிறுத்தம் கேட்டிருந்தேன். அங்கிருந்து 100-150 ரூபாய் கொடுத்தால் ஆட்டோக்காரர் விமான நிலையத்தில் விட்டுவிடுவார். நான் நிறுத்தத்தைச் சரியாகக் கவனிக்கவில்லை. அது அவனியாபுரமெல்லாம் தாண்டி கிட்டத்தட்ட மாட்டுத்தாவணிக்கு அருகில் போய்விட்டது. அப்புறம்தான் நடத்துநரிடம் கேட்க அது அப்பவே போயிடுச்சே என்றார். என்ன சார், மண்டேலான்னுதானே டிக்கெட் எடுத்தேன், சொல்ல வேண்டாமா என்று முனகிக்கொண்டே இறங்கினேன். மணி பனிரெண்டு. நல்ல குளிர். கொஞ்சநேரத்தில் ஓர் ஆட்டோ வந்தது.
ஆட்டோக்காரப் பையன் 500 ரூபாய் சொன்னான். பேசி 350க்கு ஒப்புக்கொண்டான். நான் இந்தமாதிரி இந்தமாதிரி நடந்துவிட்டது என்றேன். அவன் எங்கண்ணே போறீங்க என்றான். பீகாருக்குச் சுற்றுலா செல்வதாகச் சொன்னேன். கொஞ்சநேரம் அமைதியாக இருந்தவன், எப்படின்னே உங்களை வீட்டுல இப்படி விடுறாங்க என்று கேட்டான். அது ஒரு கலை தம்பி என்றேன். இல்லனே நிஜமாத்தான் கேட்கேன். என் வீட்டுக்காரி என்னை ஃப்ரெண்ட்ஸ்களோட படத்துக்குக்கூடப் போவ விடமாட்டீங்கண்ணே. நாங்க யார்கூடப் போவன்னு கேட்குறா. அதுவும் சரிதான். ரொம்ப இதா இருக்குன்னே. நீங்க அரேஞ்சுடு மேரேஜாண்ணே? ஆமா. அதான், நான் லவ் மேரேஜ்ண்ணே. அவ முஸ்லீம். ஒத்தயா இருக்கோமா அதான். ஏன் உங்க வீட்ல சப்போர்ட் இல்லையா? எனக்கு அப்பாம்மா இல்லைண்ணே. அவ கல்யாணம் பண்ணாலோ பண்ணணும்னு ஒத்தக் கால்ல நின்னா. வேற வழியில்லாம பண்ணிப்போட்டேம்ண்ணே. அப்புறம் அவங்கப்பன் போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் குடுத்து மூனு மாசம் என்னை உள்ள தூக்கி வச்சுப்புட்டாம்ண்ணே. என்னய்யா சொல்ற? சட்டமே காதல் திருமணத்துக்கு ஆதரவா இருக்கே? அவளுக்கு கல்யாண வயசு ஆவலண்ணே. ஸ்கூல் போயிட்டுருந்தா. அது சரி. அவங்க கூட்டிட்டுப் போய் வச்சிருந்தாங்க. அப்புறம் இவ வீட்ட விட்டு ஓடிவந்துட்டா. அவங்களும் அப்புறம் கண்டுக்கிடலை. அவங்க வீட்ல ஆறு பொட்டப் பிள்ளைங்க, ரெண்டு பசங்கண்ணே. இவதான் கடைசி. ரெண்டு பிள்ளை ஆச்சிண்ணே. மூத்தவனுக்கு ஆறு வயசு. அடுத்தவனுக்கு மூனு வயசு. ஒரு சப்போர்ட்டும் இல்லைண்ணே. பேறுகாலத்துலகூட வந்து பார்க்கலை. பேச்சு வார்த்தை கொஞ்சம் கொஞ்சம் இருக்குன்னு வைங்களேன். இப்படியாண்ணே இருப்பாங்க மனுசங்க?

முடியலண்ணே. ரொம்பக் கஷ்டமா இருக்கு. ஆட்டோ ஓட்டி பெண்டாட்டியையும் ரெண்டு பிள்ளைகளையும் வச்சிக் காப்பாத்தணும்னா எம்புட்டுக் கஷ்டம்ண்ணே, கொஞ்சம் கொஞ்சம் உதவ வேண்டாமாண்ணே. வண்டிக்கு டியூ கிடக்குண்ணே. பல்லைக் கடிச்சி கட்டித் தீர்த்துறணும்னு பணத்தச் சேர்த்துவச்சு ஒருத்தன்ட்டக் குடுத்தேண்ணே. அவன் ஏமாத்திப்புட்டாண்ணே. ஒன்றை இலட்சம். இன்னித் தேதிக்கு இந்த வண்டி சொந்த வண்டியாயிருக்க வேண்டியது. இப்ப இன்னும் ஒன்றை வருசம் கட்டணும். அவங்க வீட்ல ஏதாவது உதவி பண்ணலாம்லண்ணே? சரி விடும்மா. அப்படி எதிர்பார்க்க வேண்டியதில்லை. எதுன்னாலும் இது உன் குடும்பம். அவங்க உதவினாலும் இல்லாட்டியும் நீதான் பார்த்துக்கணும். நானா எதுவும் கேட்டதில்லைண்ணே. ஆறுல ஒன்னு கழிஞ்சுதுன்னு நிம்மதியா இருக்காங்க போல. எனக்கென்னண்ணே, ரெண்டு கையிருக்கு, காலுருக்கு. கடவுள் பார்த்துக்குவார்ண்ணே.
விமான நிலையம் வந்துவிட்டது. இறங்கிக் கொண்டேன். பெயர் கேட்டேன், சுரேஷ் என்றான். ரொம்பக் குளிர்கிறது, காதுக்கு ஏதாவது வைத்துக் கொள்ளச் சொல்லி விடைகொடுத்தேன். விமான நிலையத்தில் பாதுகாவலர்கள் என்னை வினோதமாய்ப் பார்த்தார்கள். முன்பதிவு செய்த தாளையும் அடையாள அட்டையையும் காட்டினேன். வட இந்தியக் காவலாளி பார்த்துவிட்டு, பாட்னாவா? என்ன விசயமாப் போறீங்க என்று கேட்டார். சுற்றுலா செல்கிறேன், புத்தகயா, ராஜ்கிர் செல்லவிருப்பதாகச் சொன்னதும் அவருக்கு மகிழ்ச்சி. எனக்கு பீகார்தான் என்றார். பக்கத்திலிருந்த தமிழ்க் காவலர் இப்ப அல்லோ பண்ண மாட்டோம். காலைல 4 மணிக்கு வாங்க என்றார். சார், உள்ள இருந்துக்கிறேனே? உள்ள அனுமதி இல்ல. வெளில சேர்ல உட்காருங்க என்றார். வெளியே சேர்களில் 4 நாய்கள் ஆழ்துயிலில் கிடந்தன. அதிகக் குளிர். அதிகக் கொசு. கிண்டிலில் வாசித்துக் கொண்டிருந்த நாவலை உறக்கம் வரும்வரை தொடர்ந்தேன். முழுசாய் ஒருமணி நேரம் தூங்கியிருப்பேன். அப்புறம் 4 மணியானதும் உள்ளேபோய் ஒன்றரை மணிநேரம் உறங்கினேன்.
இண்டிகோ நிறுவனம் செய்த குளறுபடியால் விமானச்சீட்டுகளின் விலைகள் 40% அதிகரித்திருந்தன. போக, நேரடியாகவும் விமானங்கள் கிடைக்கவில்லை; அப்படி இருந்தால் யானை விலைக்கு இருந்தன. அதனால்தான் ஒரேயடியாய் மதுரையிலிருந்தே பயணச்சீட்டு எடுத்திருந்தேன். வழக்கமாய் நான், கண்ணன், அமர்நாத் என மூன்று நண்பர்கள் செல்வோம். இந்தமுறை அமர்நாத் வரமுடியாத சூழல். கண்ணன் சென்னையிலிருந்து பாட்னா வர, நான் தனியே பாட்னாவில் சென்று இறங்கினேன். பாட்னா விமானநிலையம் மிக நேர்த்தியாக இருந்தது. மதியம் 1 மணி. வெளியே ஓலாவில் டாக்சி எடுத்து விடுதிக்குச் சென்றோம்.
எனக்கு சில முன்முடிவுகள் இருந்தன. பீகாரில் எல்லாமே விலை மலிவாக இருக்கும். அங்கே மக்கள் முரட்டுத்தனமாக இருப்பார்கள். ஏமாற்றுப் பேர்வழிகள் நிறைய இருப்பார்கள் என்றெல்லாம் கற்பிதம் செய்துகொண்டிருந்தேன். ஆன்லைனில் விடுதியைத் தேடியபோது, The Ashiyana Inn Hotel என்ற விடுதி வாடகை 539 ரூபாய் என்று காட்டியது. வெளிப்பார்வைக்கு எனக்கு பெரிதாகக் குறையொன்றும் தெரியவில்லை என்பதால் முன்பதிவு செய்துவிட்டேன். அங்கே விடுதிக்குச் சென்று வரவேற்பறையில் முன்பதிவு செய்த காகிதத்தைக் கொடுத்தேன். கொஞ்சம் பொறுங்கள் என்று கணினியில் எதையோ உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். முகக்கவசம் அணிந்து வரக்கூடாது என்று பிரிண்ட் அவுட் ஒட்டியிருந்தது வித்தியாசமாக இருந்தது. அப்போது ஓர் இளஞ்சோடி அறையைக் காலி செய்து சாவியை ஒப்படைக்க வந்தனர். அந்தப் பெண் முகக்கவசம் அணிந்திருந்தாள். சில நிமிடங்களில் இன்னொரு இளஞ்சோடி அறை கேட்டு வந்தனர். அந்தப் பெண்ணும் முகக்கவசம் அணிந்திருந்தாள். அப்புறம் சில நிமிடங்களில் இன்னொரு சோடி வந்தது. அந்தப் பெண் முகக்கவசம் அணிந்திருந்தாள். பள்ளிச் சீருடையில் இருந்தாள். வரவேற்பறையில் இருந்தவன் எரிச்சலுடன் சீருடையில் இருந்தால் அறை கிடையாது என்று மறுத்துவிட்டான். எனக்கு எல்லாமே திகிலாய் இருந்தது. காசு கட்டியிருக்கவில்லை. பேசாமல் கிளம்பிவிடுவோமா என்று நினைத்த சமயத்தில் அறைச்சாவியைக் கொடுத்தான். இரண்டாவது தளம்.
இரண்டாவது தளத்துக்கு படியேறித்தான் செல்ல வேண்டும். மின் தூக்கி இல்லை. வைக்கும் உத்தேசம் இருப்பதாகவும் தெரியவில்லை. படியெங்கும் தூசு மண்டிக் கிடந்தது. எனக்கு மூச்சுத் திணறியது. விடுதி கட்டியபிறகு ஒருநாள்கூட கூட்டிப் பெருக்கியிருக்க மாட்டார்கள் போல. அறையைத் திறந்தால் முடை நாற்றமடித்தது. அழுக்கடைந்த படுக்கையும் போர்வையும் கிடந்தன. கண்ணனுக்கு அகோரப் பசி. அவன் காலையில் சாப்பிட்டிருக்கவில்லை. உடனே சாப்பாடு வேண்டும் என்று அந்த விடுதியிலேயே ஆர்டர் செய்துவிட்டான். அறையில் சாளரம் ஏதுமில்லை. எல்லாவற்றையும் அட்டையால் அடைத்து வைத்திருந்தனர். சாப்பாடு வந்தபாடில்லை. கீழே சென்று உடனே கொண்டுவரும்படி அவசரப்படுத்தினோம். அடுப்பறை செல்லும் வழியெங்கும் மாதக்கணகில் தொட்டுப்பார்த்திராத தூசுமண்டிய தட்டுமுட்டுச் சாமான்களாகக் கிடந்தன. அந்த மதிய வேளையிலும் நல்ல குளிர். ஒரு பெண்பிள்ளை சாதம், பருப்பு, சப்பாத்தி குருமாவுடன் அறைக்கு சாப்பாடு கொண்டுவந்தாள். மோசமில்லை. அறையில் வெந்நீர் இல்லை. காலையிலும் இரவிலும் மட்டும்தான் ஹீட்டர் போடுவார்களாம். உள்ளே ஹீட்டர் இருந்தது. ஆனால் சுவிட்சு இல்லை. ஒருவழியாகக் குளித்துவிட்டு வெளியே கிளம்பினோம்.
2.
மணி 3:30. காந்தி காட் இங்கிருந்து 8 கி.மீ. இது கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளது. காந்தியின் அஸ்தி கரைத்த இடம். சனி ஞாயிறுகளில் மட்டும் கங்கைக்கு ஹரித்துவார், ரிஷிகேஷைப் போல இங்கும் கங்கா ஆரத்தி காட்டப்படும். அதனால் இங்கே போவோம் என்று கண்ணன் அடம்பிடித்தான். நான் இந்த அரைநாளை ஷாப்பிங் போக ஒதுக்கிவிட்டால் மீதி நாட்கள் முழுக்க சுற்றிப் பார்க்கலாம் என்றேன். சரி, காந்தி காட் போய்விட்டு பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்பினோம். பாதி வழியிலேயே பீகார் அருங்காட்சியகம் கண்ணில் தென்படவும் அதைப் பார்த்துவிடலாம் என்று இறங்கிக் கொண்டோம். பீகாரில் ஆட்டோ, டாக்சி கட்டணங்கள் எல்லாம் ரொம்ப நியாயமாக அல்லது குறைவாக இருக்கின்றன. டாக்சிக்கு ரேபிடோ பயன்படுத்தினோம்.

பீகார் அருங்காட்சியகம் அட்டகாசமாய் இருந்தது. இப்படியொரு அருங்காட்சியகத்தை இந்தியாவில் நான் வேறெங்கும் பார்த்ததில்லை. அத்தனை நவீனமாக அமைத்திருந்தார்கள். வெவ்வேறு தொல்பொருட்களுக்கேற்ப தனித்தனி அறைகள். கண்ணாடிப் பேழையை நாம் நெருங்கினால் தானாகவே எரியும் உணர்திறன் கொண்ட விளக்குகள். பழங்கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள், மட்பாண்டங்கள், மௌரியர் காலத் தொல்பொருட்கள் முதலாவது கேலரியில் உள்ளன. மண்ணால் செய்த சின்னச் சின்ன சிற்பங்கள் கலைநயத்துடன் நுட்பமாகச் செய்யப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. இந்த கேலரியில் 2300 ஆண்டுகளுக்கு முன் செதுக்கப்பட்ட திதர்கஞ்ச் யட்சிதான் ஹைலைட். இத்தனை ஆண்டுகள் கழிந்தும் இந்தச் சிற்பம் அசரடிக்கும் எழிலுடன் மேல்பூச்சின் பளபளப்பு குறையாமல் அப்படியே உள்ளது.

இரண்டாவது காலரியில் குஷாணர்கள், குப்தர்கள் காலத்தைச் சேர்ந்த சிற்பங்கள். இங்கே நாளந்தா பல்கலைக் கழகத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்த சிற்பங்களும் வெண்கலச் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. தாரா, போதி சத்துவர், வஜ்ர சத்துவர் முதலான சிற்பங்கள் இங்குள்ளன. மூன்றாவது காலரியில் முகலாயர்கள், சீக்கியர்கள் காலத்துக் கலைப்பொருட்கள்.
நாங்கள் உள்ளே நுழைந்தபோது மணி நான்கைத் தாண்டிவிட்டது. ஐந்து மணிக்கெல்லாம் பூட்டிவிடுகிறார்கள். நல்ல குளிர். பீகாரில் எல்லா இடங்களிலும் ஆட்டோக்களும் டாக்சிகளும்தான் கண்ணில்படுகின்றன. பேரூந்துகள் மிகக் குறைவு. சுற்றி இருப்பவர் எல்லோருக்கும் காது சரியாகக் கேட்காது என்பது ஒவ்வொரு டிரைவரின் அசைக்கமுடியாத நம்பிக்கை. காட்டுத்தனமாய் ஒலிப்பானை அழுத்துகிறார்கள். கல்கத்தாவைப் போலவே இங்கும் போக்குவரத்தில் எந்த ஒழுங்குமில்லை. கிடைத்த இண்டு இடுக்கெல்லாம் வண்டியைக் கொண்டு செருகிக் கொள்கிறார்கள். பெரும்பாலான ஆட்டோக்கள் பேட்டரியில் இயங்குபவை. கட்டணமும் குறைவு.

ஐந்து கி.மீ. தொலைவில் இருந்த கேதான் மார்க்கெட்டுக்கு ஆட்டோவில் சென்றோம். சின்னச் சின்னதாய் குறுக்கும் நெடுக்குமாய் ஏகப்பட்ட கடைகள். நாங்கள் பேசிக்கொண்டே நடந்துகொண்டிருந்தோம். ஒரு இனிப்புக் கடையில் கண்ணன் ஏதோ இனிப்பு வாங்கிச் சாப்பிட்டான். பலகாரத்தின் மீது ஜீரா ஊற்றிக் கொடுத்தார்கள். வருடா வருடம் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதாவது ஒரு சேலை வாங்கி மனைவிக்குக் கொடுத்துவிடுவேன். இந்த முறை உருப்படியாய் ஒன்றும் கண்ணில் தட்டுப்படவில்லை. கடைசியாய் சிவனே என்று ஓரமாய் இருந்த ஒரு கடைக்குச் சென்று சிவனே என்றிருந்த அந்தப் பெரியவரை உசுப்பி சேலைகளைக் காட்டச் சொன்னேன். விலை பேரம் பேசவேண்டிய அவசியமில்லாத விலைகளில் இருந்தன. ஜார்ஜெட் சேலைகளைக் காட்டினார். அதை ஜார்ஜெட் என்று நம்புவது சிரமமாக இருந்தது. அதில் நிறைய எம்பிராய்டரி வேலைகள் இருந்ததால் என்னால் கணிக்கவும் முடியவில்லை. கடைசியில் பிளீச் சில்க்கில் ஒரு சேலையை எடுத்துக் கொண்டேன். ஒரு மப்ளர் வாங்கினேன். ரொம்பநாளாய் கம்பளிப் போர்வை வாங்க வேண்டுமென்று ஆசை. கண்ணில் தட்டுப்படவே இல்லை. ஒரு கடையில் ஒரு போர்வையை எடுத்துப் போட்டார். அது மட்டுமே 3 கிலோ தேறும். விலை 550 ரூ. நான் பட்டிக்காட்டான் மாதிரி இவ்வளவு எடைக்கு இவ்வளவுதான் காசா என்று வியந்தேன். கண்ணனும் நானும் ஆளுக்கொன்று வாங்கிக் கொண்டோம்.

சாப்பிடலாம் என்று பிரதான சாலைக்கு வந்தோம். மெக்டொனால்ட்ஸ் பிரம்மாண்டமாய் வலதுபுறம் நின்றிருந்தது. கண்ணாடி அறைக்குள் நேர்த்தியான மனிதர்கள், நேர்த்தியான இருக்கைகள், நேர்த்தியான பணியாளர்கள். அதற்கு முன்னால் தள்ளுவண்டிக் கடைகள் மட்டும் ஐம்பதாவது இருக்கும். தரையெங்கும் தண்ணீரும் சகதியுமாய்க் கிடக்க அதில் தோசா கார்னர் என்றொரு கடை தெரிந்தது. மெக்டொனால்ட்ஸ் கடைக்கு முன்பாக தோசை சாப்பிட வேண்டும் என்று ஆசை. ஆளுக்கொரு தோசை சொன்னோம். எனக்கு தோசை மாவு புளித்தால் அதை விரும்பிச் சாப்பிடுவேன். ஆனால் இந்தத் தோசைமாவை அவன் போனமாதம் அரைத்திருக்க வேண்டும். வாயில் வைக்க முடியவில்லை. முதலில் விடுதி. இப்போது சாப்பாடு. இரண்டுமே தவறான முடிவுகள். மீதி வைத்துவிட்டு அறைக்குத் திரும்பினோம். கண்ணன் பெரும்பாலும் ரேபிடோவில் ஆட்டோவோ டாக்சியோ புக் செய்துவிடுவான். அவர்கள் போனில் அழைத்து விபரம் கேட்பார்கள். எங்களுக்குத் தெரிந்த 1% இந்தியை வைத்து பெடல் ஓட்டுவோம். முதலில் ஆட்டோக்காரருக்கு நாங்கள் இருக்குமிடத்தைச் சொல்வதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். ’மெக்டொனாட்ஸ் சாம்னே, ஜல்தி ஆகையா’ என்போம். அவன் ஏதாவது சொன்னால், ‘இந்தி நஹி மாலும் பையா, இங்கிலீஷ், இங்கிலீஷ்’ என்போம். இல்லாவிட்டால் பக்கத்தில் உள்ளவரிடம் கொடுத்து இருக்குமிடத்தைச் சொல்லச் சொல்வோம். இந்த முறை கொஞ்சம் கூகுள் டிரான்ஸ்லேட்டரை உபயோகித்துக் கொண்டேன்.
விடுதிக்குச் சென்றதும் திரும்பவும் மூச்சு முட்டத் தொடங்கியது. ரூம்பாயைக் கூப்பிட்டு துவைத்த போர்வை வரவைத்தோம். நல்ல அசதி. கடுமையான குளிர். படுத்தவுடன் தூங்கிவிட்டோம்.
(தொடரும்)
