பீகார் – சுற்றுலா: 2026 (2)

வெகுநாள் கழித்து நிம்மதியானதொரு உறக்கம். இங்கு இரவில் 7 டிகிரிவரை குளிர் இருக்கும். அதிகாலையில் தெருவில் இறங்கி நடந்தோம். சாலை முனையில் இருந்த தேநீர்க்கடையில் ஆளுக்கு இரண்டு தேநீர் அருந்தினோம். மில்லி கணக்கில் பார்த்தால் 50 மில்லிதான் இருக்கும். பத்து ரூ. ஒரிஸ்ஸாவில் இதேபோலத்தான் தருவார்கள். பீகார் மக்கள் மூன்றுபேர் நின்றால் அதில் ஒருவர் புகையிலையைக் கசக்கிக் கொண்டிருப்பார். புகையிலையை – அதாவது சிகரெட்டுக்குள் இருக்குமே அதே புகையிலை, நிறம் கருத்திருக்கும் – ஒரு சிட்டிகை கையில் கொட்டி அதில் பவிசாக சுண்ணம் தடவி குறைந்தது இரண்டு நிமிடங்கள் உள்ளங்கையில் வைத்துச் கசக்குகிறார்கள். பிறகு உதட்டுக்கு அடியில் அதக்கிக் கொள்கின்றனர். நிறைய பேருக்கு இளவயதிலேயே முன்பற்கள் விழுந்திருக்கின்றன.

வடமேற்கில் உள்ளவர்களைப் போலின்றி பீகார்வாசிகளிடம் நாம் தமிழ்நாட்டில் இருந்து வருகிறோம் என்றால் நம்மை மரியாதையாகப் பார்க்கின்றனர். நாங்கள் பேசியதில் பாதிபேர் தாங்கள் அங்கு இருந்ததாகவோ அல்லது தங்கள் உறவினர் அங்கு இருப்பதாகவோ கூறினர். நேற்று போர்வை வாங்கிய கடைக்காரர் கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்தவர். நாங்கள் தமிழர்கள் என்று அறிந்ததும் சந்தோசமடைந்தார். தமிழர்களிடம் நல்லொழுக்கமும் குடிமைப்பண்பும் (civic sense) அதிகமுண்டு என்றார். அதனாலேயே எங்கு போனாலும் நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து வருகிறோம் என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டோம்.

அறைக்குத் திரும்பிச் சென்றோம். தண்ணீர் சூடேறவே இல்லை. குளிராமல் இருந்ததே தவிர நீரில் சூடேறவில்லை.  அடுத்ததாக ராஜ்கிர் (ராஜகிருகம்) செல்வதாகத் திட்டம். பாட்னாவுக்குக் கீழே ராஜ்கிர், போதிகயா உள்ளன. மேலே வைசாலி. வைசாலியை கடைசி நாளில் வைத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டோம். இந்தமுறை உருப்படியான விடுதியைப் பதிவுசெய்ய வேண்டுமென்று 1500 ரூபாயில் ஓர் விடுதியறை பதிவு செய்தேன். விடுதியில் அருகில் நல்ல உணவகம் எதுவென்று விசாரித்துச் சென்றோம். கண்ணன் ஆலு பரோட்டாவும் எனக்கு பூரியும் ஆர்டர் செய்தோம். பேக்கரியோடு சேர்ந்த உணவகம். ஒரு பெரிய பெருச்சாளி அடுப்பறையிலிருந்து ஓடிவந்து பேக்கரி ஷோகேஷுக்கு அடியில் உடலைப் பிதுக்கித் தள்ளி நுழைந்தது. பாட்னாவிலிருந்து ராஜ்கிருக்கு 100 கி.மீ. வேறு வழியில்லை, டாக்சியில்தான் சென்றாக வேண்டும். சாப்பிடச் செல்லும்போது வெளியே ஒரு கார் நடைபாதை மீது ஏறி ஒரு ஸ்கூட்டரை இடித்துத் தள்ளி அது பழக்கடைமீது விழுந்து பழங்கள் சாலையில் சிதறிக் கிடந்தன. நாங்கள் வெளியில் வரும்போதும் அப்படியேதான் கிடந்தன.

வட பீகாருக்கும் தென் பீகாருக்கும் இடையே கங்கை நதி ஓடுகிறது. இதை ஐந்தரை கி.மீ. நீளமுள்ள காந்தி சேது பாலம் இணைக்கிறது. முன்பு இதுதான் இந்தியாவின் நீண்டபாலமாக இருந்துவந்தது. முன்பு அமர்நாத் பீகாரில் சாலைகள் படுமோசமாக இருக்கும் என்று சொல்லியிருந்தான். அப்படியெல்லாம் இல்லை. சாலைகள் நன்றாகவே இருக்கின்றன. இங்கு அரிசி, பருப்பு, பயறு வகைகள், சிறுதானியங்கள், கடுகு அதிகம் விளைகின்றன. காணுமிடமெங்கும் கடுகு பளீர் மஞ்சள் நிறத்தில் சில்லென்று பூத்திருந்தன.

 ஓட்டுநர் இடையில் ஓர் ஊரில் நிறுத்தி தன் சகோதரி அங்கிருப்பதாகவும் அவளிடம் ஒரு வார்த்தை பேசிவிட்டு வருகிறேன் என்றார். அது ஒரு சிறிய கிராமம். நாங்கள் நோக்கம்போல சாலையின் வலபுறம் நுழைந்து சற்றுத் தள்ளியிருந்த கடையில் ஜிலேபியும் காஜுவும் வாங்கிச் சாப்பிட்டோம். இது விசயத்தில் பீகார் ரொம்ப மோசம். ஊரில் உள்ள எல்லா இனிப்புக்கடைகளிலும் நம் கிராமங்களில் கருப்பட்டி மிட்டாய் அடுக்கி வைத்திருபப்தைப் போல, பப்ஸ் போன்ற வடிவில் இருக்கும் மைதாவில் செய்த இனிப்புப் பண்டமான காஜூ வைத்திருக்கிறார்கள். வரிசையாக பத்திருபது இனிப்புக் கடைகள். எல்லாவற்றிலும் காஜு, காஜூதான். எனக்குப் புரியவே இல்லை.

மதியம் ஒருமணி வாக்கில் கிரிதகுட்டா இண்டர்நேஷனல் என்ற விடுதிக்கு வந்துசேர்ந்தோம். உள்ளேயே உணவகம் இருந்தது. கூட 50 ரூபாய் கொடுத்தால் மலையைப் பார்த்தாற்போல் அறை என்று போட்டிருந்ததால் அதைத் தேர்ந்தெடுத்திருந்தேன். அருமையான விடுதி. நல்ல உபசரிப்பு. விடுதியை மிக நன்றாகப் பேணிவருகின்றனர். அறையில் ஒரு கெட்டில், சிறு பொதிகளில் தேயிலைத்தூள், பால் பவுடர், சர்க்கரை, காபித்தூள். எல்லாமே மிகக் கச்சிதமாக இருந்தன. நான் சிக்கனும் சாதமும் ஆர்டர் செய்தேன். கண்ணன் சைவம். சாப்பாடும் நன்றாக இருந்தது. விடுதியில் சொல்லி எலெக்ட்ரிக் ஆட்டோ வரவழைத்தோம். அவர்களுக்குத் தெரிந்தவர்போல. ஆட்டோக்காரர் பெயர் சிகேஷ்ராம் சிங். ஐந்தாறு இடங்கள் சுற்றிக்காட்ட ஐநூறு ரூபாய் என்றுபேசி ஏறிக் கொண்டோம்.

முதலில் மணியார்மடம் சென்றோம். முன்பு மணிநாகா என்ற நாகக்கன்னியின் வழிபாட்டுத்தலமாக இருந்துள்ளது. மௌரிய, குப்த என வெவ்வேறு அரசாட்சிகளின்போது புனரமைக்கப்பட்டு வந்துள்ளது. நிலத்தடியிலிருந்து உருளைவடிவ அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து பலதலைகள் கொண்ட நாகச் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உருளை அமைப்பைச் சுற்றிலும் முன்பு சிற்பங்கள் இருந்துள்ளன. இப்போது ஒரேயொரு விநாயகர் சிலை மட்டும் உள்ளது.

அடுத்ததாக ஜராசந்தனும் பீமனும் சண்டையிட்ட இடம் என்று சீனிக்கற்களால் சதுரமாக ஆளுயரத்துக்கு மேடையமைக்கப்பட்ட ஓர் இடத்தைக் காட்டினார். என்னங்கடா இது கதையாக இருக்கிறது என்று அடுத்த இடம் காட்டச் சொன்னோம். அவர் விஷ்ணுபாதம் என்று ஓர் இடத்துக்கு அழைத்துச் சென்றார். நாங்கள் இறங்கவே இல்லை. அடுத்த இடத்துக்குச் செல்வோம் என்றோம். கொடுத்த காசுக்குக் கணக்குக் காட்டுவதற்காகவே இப்படிச் செய்கிறாரோ என்று தோன்றியது.

பிம்பிசாரர் சிறைக்கு சிகேஷ்ராம் சிங் அழைத்துச் சென்றார். அஜாதசத்ரு தன் தந்தையை கி.மு. 493இல் சிறையிலடைத்துவிட்டு மகதநாட்டு அரியணை ஏறினார். பிம்பிசாரர் அப்போதே கிருதகுட்டா மலைக்குச் (வல்லூறு மூக்கு மலை) சென்று புத்தருடன் அடிக்கடி உரையாடுவதும் புத்த சன்னியாசிகளுக்கு தங்க இடமளித்து உதவுவதுமாக இருந்தார். தனது சிறையை வல்லூறு மூக்கு மலைக்கு அருகில் அமைக்கும்படி கேட்டுக்கொண்டாராம். சிறையிருக்குமிடத்திலிருந்து பார்த்தால் அந்த மலை தெரிகிறது. ஆனால் தூரம் சில கி.மீ. தூரமிருக்கும். அதனால் கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருக்கிறது. சிறையிருந்த இடத்தில் இப்போது சுற்றிலும் சுற்றுச்சுவர் மட்டும் இருக்கிறது. உள்ளே ஓரிடத்தில் தரையில் சிறிய அறைபோன்ற அமைப்புடன் கற்சுவர் தெரிகிறது. காவலுக்கு இருந்தவர் அது பாதாளச் சிறையென்றும், பிம்பிசாரரை அதில்தான் அடைத்து வைத்திருந்ததாகவும் சொன்னார். கி.மு. 478வரை அதாவது 15 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார். அந்த ஆண்டே அவர் இறந்தும்விட்டார். வல்லூறு மூக்கு மலையை நோக்கினேன். இதமான குளிரும், வெயிலும். புத்தனை எண்ணி மனம் குவிந்தது. புத்தம் சரணம்.

அப்புறம் வேணுவனம் சென்றோம். இந்த தலமும் பிம்பிசாரர் கொடையளித்ததுதான். இதுதான் முதலாவதாக உருவான பௌத்த மடாலயம். இதன் நடுவே ஒரு குளம் உண்டு. அதில்தான் புத்தர் தினமும் குளித்து வந்தார். மழைக்காலங்களில் இங்கு தங்கி பிக்குகளுக்கு போதித்தார். இப்போது குளமிருந்த இடத்தில் செயற்கையான குளமும் நீரூற்றும் வைத்திருக்கிறார்கள். முழுக்கவே பெரியதொரு நவீன பூங்காவாக ஆக்கியிருக்கிறார்கள். இது ஏமாற்றமாக இருந்தது. சீனா, ஜப்பான், திபெத் என பௌத்தம் பரவிய பல நாட்டவரும் இங்கே தங்கள் பங்குக்கு மணிமண்டபங்கள், புத்த உருவங்கள், கோவில்கள் எனக் கட்டி வைத்திருக்கிறார்கள். பழமையான அடையாளமென எதுவும் இல்லை. அங்கே சிறிதுநேரம் அமர்ந்துவிட்டு வெளியே வந்தோம்.

எதிரில் இருந்த கடைகளில் பல்வேறு கருங்கல், மார்பிள், உலோகச் சிற்பங்கள் இருந்தன. கண்ணன் தனக்கு விக்கிரக வழிபாட்டில் நம்பிக்கை இல்லை என்றான். எனக்கு விக்கிரகம் தேவை. விக்கிரகம் என்பது ஒருவகையில் நானேதான். மதுரையில் கல்லூரியில் படிக்கும்போது பெரியார் பேரூந்து நிலையத்துக்குப் பின்புறம் இருந்த காதிகிராஃப்ட் கடையில் மரத்தாலான பத்மாசனத்தில் இருக்கும் கையடக்க புத்தர் சிலை வாங்கினேன். இப்போதும் என் பூசையறையில் இருக்கிறது. நான் ஒரு சிற்பம் வாங்கினால் அதை சிறிதுநேரம் கூர்ந்து நோக்கிக் கொண்டிருப்பேன். அதற்கும் எனக்கும் ஒரு தொடர்பு தென்பட வேண்டும். அது என்னோடு உரையாட வேண்டும். அப்படி இருந்தால் வாங்கிவிடுவேன். அங்கு எதுவும் வாங்கவில்லை.

ராஜ்கிரில் இருந்து நாளந்தா 35 கி.மீ. போக இங்கே வல்லூறு மூக்கு மலைக்குச் சென்றாக வேண்டும். சப்தபர்னி மலைக்குகையும் பார்க்க வேண்டும். அந்தி சாய்ந்துவிட்டது. அறைக்குத் திரும்பினோம். வெளியே இரவில் ஒரு நடை கிளம்பினோம். கைபேசியில் வெப்பநிலை 7 டிகிரி எனக் காட்டியது. நேற்றைப் போலவே இன்றும் அருமையானதொரு உறக்கம். அறையில் மலையைப் பார்த்தாற்போல நீண்ட கண்ணாடிச் சாளரம் இருந்தது. நள்ளிரவில் விழிப்புத் தட்டியது. அரைநிலா என்னை நோக்கிக் கொண்டிருந்தது. மலை விளிம்புகள் மென்னொளியில் மினுமினுத்தன. ஒரு கனவென்ற நினைவில் துயிலில் ஆழ்ந்தேன்.

மறுநாள் விடிகாலையிலேயே எழுந்துவிட்டோம். வழக்கம்போல காலை நடைக்குக் கிளம்பினோம். விடுதிக்கு அருகிலிருந்த மண்பாதையில் இருபுறமும் கடுகுச் செடிகள் பூத்துக் கிடந்தன. இன்று நாளந்தா, சப்தபர்னி குகை, வல்லூறு மூக்கு மலை செல்வதாகத் திட்டம். நாளந்தா போய்விட்டு வந்து அறையைக் காலி செய்யலாம் என்று முடிவுசெய்தோம். விடுதியில் காலையுணவு இலவசம். எனக்கு பூரி கிழங்கு. கண்ணனுக்கு பிரெட், பட்டர் ஜாம். சிகேஷ்ராமையே திரும்ப வரவழைத்தோம்.

இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ அதுவும் சிகேஷ்ராமுடைய ஆட்டோ அதிகபட்சம் 40 கி.மீ வேகத்தைத் தாண்டாது. முதலில் அவர் குண்டல்பூர் அழைத்துச் சென்றார். இது மகாவீரர் பிறந்த ஊர். அங்கு அவருக்கு ஒரு சமணக் கோவில் உள்ளது. நேற்றும் சிகேஷ்ராம் இரவில் ஓர் சமணக் கோவிலுக்குக் கூட்டிச் சென்றார். அதன் பெயர் எனக்கு மறந்துவிட்டதால் குறிப்பிடவில்லை. அந்தக் கோவில் கீழ்த்தளத்தில் அமைந்திருந்தது. அரைக்கோள வடிவ விதானம். சுவர்களெங்கும் அரைக்கோள வடிவில் வெள்ளிப்பூச்சு கொண்ட சில்லுகள் பதிக்கப்பட்டிருந்தன. உள்ளே போனதும் எல்லா சில்லுகளிலும் நம் உருவம் பிரதிபலிக்க பெருமலைப்பு நம்மை ஆட்கொள்கிறது. அத்துடன் மேலிருந்து அந்தக் கோள விதானம் நம் தலைமீது புலனாகாதொரு அதிர்வலைகளைப் பரப்புகிறது. பௌத்தக் கோவில்களிலும் சரி, சமணக் கோவில்களிலும் சரி, கண்களை மூடி தியானிப்பதைவிட கண்களைத் திறந்திருந்தாலே மனம் எளிதில் ஓர்மையடைகிறது. இங்கே குண்டல்பூர் கோவிலிலும் அதேபோல மனம் கனமிழந்து போயிற்று. கோவிலைச் சுற்றிலும் சிவப்பு ரோஜாக்கள் பூத்துக் கிடந்தன. பூக்காத செடியேதும் இல்லை. ஒருவேளை அப்போதுதான் நட்டு வைத்தார்களோ என்று தோணச் செய்தது. சுற்றுவட்டாரத்திலேயே ஒரு சத்தமில்லை. கேட்காமலேயே இங்கு அழைத்து வந்ததற்காக சிகேஷ்ராமுக்கு மனதுக்குள் நன்றி கூறிக் கொண்டேன்.

இங்கே மண்ணில் சிலை வடிக்கும் பல கடைகள் கண்ணில் தட்டுப்பட்டன. ஆளுயரத்துக்குக் கையால் வடித்த அழகான பல உருவங்களைச் செய்து வைத்திருக்கின்றனர். உருவங்கள் சாண நிறத்தில் இருந்தன. காய்ந்தபின் அவற்றின்மீது வர்ணம் பூசுகின்றனர். பீகாரிலும் சரி, கல்கத்தாவிலும் சரி பல வீடுகள் பூசப்படாமல் இருப்பதைப் பார்த்திருந்தேன். எனக்கு முதலில் அவை ஏதோ லாரி பேக்கர் வகையான, எளிமையான அழகோடு இருப்பதாகத் தோன்றியது. பூசுகிறேன் பேர்வழி என்று எதற்கு தண்டத்துக்கு காசு அழ வேண்டும்; இது நல்ல யோசனையாக இருக்கிறதே என்று தோன்றியது. கண்ணன்தான் சொன்னான், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் வீட்டைப் பூசுவதற்கு அனுமதி இல்லை. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

உலகின் முதல் பல்கலைக்கழகமான நாளந்தா வந்தடைந்தோம். கி.பி. 5ஆம் நூற்றாண்டில் குப்தப் பேரரசு காலத்தில் இப்பல்கலைக்கழகம் உருவானது. கி.பி. 1200 வரையிலுமே செழித்தோங்கி இருந்தது. இங்கே தர்மகஞ்சா (மெய்மை மலை) என்ற நூலகம் இருந்துள்ளது. சீனா, கொரியா, ஜப்பான், திபெத் மற்றும் பிற ஆசிய நாடுகளில் இருந்தெல்லாம் இங்கு வந்து மாணவர்கள் பயின்றிருக்கின்றனர். மதம், இலக்கணம், தர்க்கம், வானியல், மருத்துவம், தத்துவம் போன்றவை இங்கு கற்பிக்கப்பட்டன. தோராயமாக 10,000 மாணவர்கள் இங்கு தங்கிப் படித்துள்ளனர். 2,000 ஆசிரியர்கள் இருந்துள்ளனர். கி.பி. 1193இல் குத்புதின் ஐபக் படையெடுப்பின்போது பல்கலைக்கழகம் அழிக்கப்பட்டது.

மாணவர்கள் தங்கும் அறைகள் 10க்கு 10 அளவில் இருக்கின்றன. அடுத்தடுத்து இரண்டு அடுக்கு தங்குமிடங்களாக நீள் சதுர வடிவில் தொகுப்புக் கட்டிடங்களாக இருக்கின்றன. முன்புற முற்றத்தில் உட்காருமளவில் சமதளக் கற்கள் இடப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையிலும் விளக்கு வைக்க ஒரு சிறு மாடமும் புத்தகங்கள் வைப்பதற்கென செங்கற்சுவரில் குழிவை ஏற்படுத்தி மாடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. எல்லாக் கட்டிடங்களிலும் சீரான வடிகால் அமைப்பு உள்ளது. பல கட்டிடத் தொகுப்புகளில் கிணறுகள் உள்ளன. அகழ்வாராய்ச்சியில் இங்கே மிகப்பெரிய சமையற்கட்டுகளையும் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு சமைக்கக்கூடிய அடுப்புகளையும் கண்டறிந்துள்ளனர். இந்தப் பல்கலைக்கழகத்தைப் பராமரிப்பதற்கென்றே 100 கிராமங்களை மன்னர் ஹர்ஷர் ஒதுக்கியிருக்கிறார். அங்கிருந்து பால், தானியங்கள், காய்கறிகள், இத்யாதிகள் வந்திருக்கின்றன.

இங்கே சிற்பங்கள் கிட்டத்தட்ட ஏதும் இல்லை. இருக்கிற ஒரேயொரு இடமான கோவில் எண் 3-இல் உள்ளே சென்று காண அனுமதியில்லை. அங்கே புத்தர் மற்றும் போதிசத்துவர்களின் பெரிய சுதைச் சிற்பங்கள் உள்ளனவாம். ஏனையவற்றை அருங்காட்சியகத்துக்குக் கொண்டு சென்றுவிட்டனர். அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பகுதி மொத்தம் 1600 அடி நீளமும் 800 அடி அகலமும் கொண்டது. ஆனால் இது அதன் மொத்தப் பரப்பளவில் 10%தான் என்று வரலாற்றாளர்கள் நம்புகின்றனர். தற்போது அகழாய்வு செய்யப்பட்ட இடத்திலுள்ள அறைகளை மட்டும் கணக்கில் கொண்டால் 2000-2500 மாணவர்கள் தங்கக்கூடிய இடங்களாக இவை உள்ளன. எனில், இன்னும் 80% அகழாய்வு செய்யப்படவில்லை என்பது தெரிகிறது.

நாளந்தாவைச் சுற்றிப் பார்க்க வெகுநேரம் ஆயிற்று. செங்கற்களில் மிக நுட்பமாகச் செதுக்கி வைத்த சின்னச் சின்ன ஒப்பனை வடிவங்களைக் காண முடிகிறது. ஒரு விடுதி அறையில் சுவரில் சாய்ந்து அமர்ந்துகொண்டேன். கையருகே இடதுபுறம் புத்தகம் வைக்கும் மாடம். இங்கிருந்த மாணவன் யார்? அவன் பெயரென்ன? அவன் என்ன படித்தான்? இங்கே அமர்ந்து தியானம் செய்திருப்பானா? தூரத்தில் சாம்பல்நிறக் குருவியின்று கத்துவதைப் போல தலையை சில நொடிக்கொருதரம் குனிந்து நிமிர்ந்தது. என்னை அழைக்கிறது போலத் தோன்றியது. நான் அருகில் சென்றேன். அது பறந்து நீள் சதுர விடுதியின் இடது கடைசி அறைக்கு மேல் நின்று திரும்பவும் தலையைக் குனிந்து குனிந்து நிமிர்ந்தது. அந்தக் கடைசி அறை ரொம்பச் சிதிலமடைந்து கிடந்தது. உள்ளே முழுக்க மண்மூடி செடிகள் முளைத்துக் கிடந்தன. குருவியைப் பார்த்தேன். அது பறந்துபோய்விட்டது.

பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதற்குமுன் வாசலில் உலோகச் சிலைகள் வைத்திருந்த ஒரு கடையைப் பார்த்திருந்தேன். பல அழகான சிலைகள் இருந்தன. ஐம்பொன் சிலைகள். தங்கமில்லை, ஆனால் ஏனைய பிற உலோகங்களால் ஆனவை. கிட்டத்தட்ட அந்தக் கடையில் அரைமணி நேரம் நின்றுகொண்டிருந்தேன். ஒவ்வொரு சிலையையும் கையில் வாங்கியெடுத்து அதனோடு தொடர்புகொள்ள முயன்று கொண்டிருந்தேன். கையில் வஜ்ரம் தாங்கிய சிற்பமொன்று அற்புதமாய் இருந்தது. அவர் அதை தாரா என்றார். அது தவறு. இது ஆண் உருவம். அப்புறமாக அது வஜ்ர சத்துவர் என்று தெரிந்துகொண்டேன். வஜ்ராயன பௌத்தத்தில் தூய்மையின் அடையாளமானவர் வஜ்ர சத்துவர். மனமாசுகளை நீக்குபவர். வலதுகையில் நெஞ்சுயரத்தில் வஜ்ரத்தை செங்குத்தாக ஏந்தி, இடதுகையில் மணியை மடியில் சரித்து வைத்தபடி பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். கண்கள் மூடியிருக்க, உள்ளூரப் பொங்கும் ஆனந்தத்தில் உதடுகளில் மெல்லிய புன்னகை.

புத்தர் நின்ற வாக்கில் இடதுகை வரத முத்திரையுடனும், இடதுகை விதார்க்க முத்திரையுடனும் நிற்கும் சிலையும் பிடித்திருந்தது. வரத முத்திரை என்பது உள்ளங்கை வெளித்தெரியும்படி மூன்றுவிரல்கள் கீழ்நோக்கி இருக்க, ஆட்காட்டி விரல் நுனியும் பெருவிரல் நுனியும் தொட்டுக் கொண்டிருக்கும். இது அளப்பரிய கருணையைக் குறிப்பது. வலது கையின் விதார்க்க முத்திரை இதேபோன்ற அமைப்பு ஆனால் கை கீழ்நோக்கி இல்லாமல் மேல்நோக்கி இருக்கும். இதில் ஆட்காட்டி விரலும் பெருவிரலும் உருவாக்கும் வட்டம் முடிவில்லா ஆற்றலையும் அறிவையும் குறிப்பது. சிலைகள் நல்ல கனம். இரண்டுக்கும் சேர்த்து மொத்தம் 10000 ரூபாய் சொன்னார். சிகேஷ்ராமைக் கூப்பிட்டு குறைத்துப் போடச் சொன்னோம். எவ்வளவு தருவீர்கள் என்று கேட்டார். எனக்கு 8 என்று வாயில் வருவதற்குள் கண்ணன் 5000 என்றான். அவர் கையெடுத்துக் கும்பிட்டு கட்டுப்படியாகாது ஐயா என்று மன்றாடினார். எப்படியாவது விற்க வேண்டும் என்று அவரும் தவித்தார். எப்படியாவது வாங்க வேண்டுமென்று நானும் தவித்தேன். கடைசியில் 6000 என்று சிகேஷ்ராம் பேசி முடித்தார். இரண்டாம் முறையாக சிகேஷ்ராமுக்கு மனதுக்குள் நன்றி கூறினேன்.

போகும்வழியில் ஒரு சின்ன உணவகமாய்ப் பார்த்து வண்டியை நிறுத்தச் சொன்னோம். கடுமையான போக்குவரத்து நெரிசல். அந்த உணவகம் படு கேவலமாய் இருந்தது. வந்ததற்கு சோற்றை அள்ளிப் போட்டுவிட்டுக் கிளம்பினோம். ஏற்கெனவே மதியம் 2 மணி ஆகிவிட்டதால் இன்றும் ராஜ்கிரிலேயே தங்கிவிடுவது என்று முடிவெடுத்தோம். அடுத்ததாக வல்லூறு மூக்கு மலை.

வல்லூறு மூக்கு மலைக்கு ஒரு தூரத்துக்குமேல் ஆட்டோ அனுமதியில்லை. நடந்து செல்லலாம் அல்லது குதிரை வண்டிகள். ஒரு வண்டிக்கு 600 ரூ. மலைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது எங்களை விடுதியில் இறக்கிவிட்டுவிடுவதாக குதிரைவண்டிக்காரர் சொன்னார். சிகேஷ்ராமை அனுப்பிவிட்டு குதிரை வண்டிக்கு மாறினோம். மலைக்குச் செல்ல ரோப்கார்கள் உள்ளன. ஆளுக்கு 120 ரூ. புத்தரின் சரிதத்தை விவரித்து திக் நியட் ஹான் எழுதி தமிழில் அமலன் ஸ்டேன்லியும் கமலக்கண்ணனும் இணைந்து மொழிபெயர்த்த ‘போதி சத்வ வெளியில் வெண்முகில்கள்’ நூல் வாசித்ததினால் வல்லூறு மூக்கு மலைக்குச் சென்றே ஆகவேண்டும் என்று பிடிவாதமாய் இருந்தேன்.

இந்த மலையிலிருந்து புத்தரின் உறவினரான தேவதத்தன் அவரை நோக்கி ஒரு பாறையை உருட்டி விட்டுக் கொல்ல முயன்றதுண்டு. ஞானமடைந்தபின் புத்தர் இங்கு பல ஆண்டுகளைக் கழித்திருக்கிறார். தாமரை சூத்திரம், பிரக்ஞாபாரமிதா சூத்திரம் ஆகியவற்றை இங்கிருந்து போதித்திருக்கிறார். புத்தருக்கு இந்த மலை மிகப் பிடித்தமான தியான தலம் என்று யுவான் சுவாங் குறிப்பிட்டிருக்கிறார். இந்த மலை அமைப்பு வல்லூறு போன்றிருப்பதால் இந்தப் பெயர். வல்லூறு மூக்கு போன்ற பாறைக்குக் கீழே இரண்டு சிறிய குகைகள் உள்ளன, அங்கு புத்தரின் முதன்மைச் சீடர்களான ஆனந்தரும் சாரிபுத்திரரும் தங்கியிருந்தனர்.

ரோப்கார் நேராக சாந்தி ஸ்தூபியில் கொண்டுபோய் விடுகிறது. காந்தியின் நெருங்கிய நண்பரும் பௌத்தத் துறவியுமான நிச்சிதட்சு புஜி இதை  உருவாக்கினார். இந்தப் பளீர் வெண்ணிறக் கட்டிடங்கள் உண்மையில் எனக்கு ஏமாற்றத்தையே அளித்தன. எதுவுமே இல்லாமல் இருந்தால்கூட அந்த மோன வெளியில் ஏதோவொரு விதத்தில் புத்தனின் இருப்பை உணர முடியும். நல்ல கூட்டமும் இருந்தது. ஏதோ சுற்றுலாத் தலத்துக்கு வந்த உணர்வே ஏற்பட்டது. சாந்தி ஸ்தூபிக்கு சற்று அருகிலேயே ஜப்பானிய பௌத்தக் கோவில் ஒன்றும் உள்ளது. ஜப்பானியக் கோவிலில் ஒருவர் சீரான இடைவெளியில் கொட்டில் ஓசையெழுப்பியபடி மந்திரம் ஓதியபடி இருந்தார். அந்த ஓசையைக் கேட்டபடி அமைதியாய் அமர்ந்திருந்தோம். தொலைந்துபோன ஒருவரைத் தேடுவதுபோலிருந்தது. எங்கும் காணோம். மலையிலிருந்து இறங்க ரோப்காருக்கு நிறையக் கூட்டமிருந்ததால் நடந்து இறங்கலாம் என்று முடிவெடுத்தோம்.

படிகளும் சறுக்குப் பாதையுமாக பாதை சென்றபடியே இருந்தது. மூச்சு வாங்கியது. ஒரு பெண் ஓடிக் கொண்டிருந்தாள். எனக்குப் பொறாமையாக இருந்தது. இன்ஹலரை எடுத்து உறிஞ்சிக் கொண்டு நடக்கத் தொடங்கினேன். புத்தர் இத்தனை உயரத்தை எத்தனைமுறை ஏறியிறங்கியிருப்பார் என்று நினைக்கவே மலைப்பாக இருந்தது. இருட்டிவிட்டது. குதிரைவண்டியில் ஏறிக்கொண்டோம். வண்டிக்காரருக்கு விடுதி இருக்குமிடம் தெரியவில்லை. சிகேஷ்ராமுக்கு போன்போட்டுக் கேட்டார். சிகேஷ்ராம் தானே வந்து அழைத்துச் செல்வதாகச் சொன்னார். ஒரு தேநீர்க்கடையில் மூவரும் தேநீர் குடித்தோம். திடீரென்று வண்டிக்காரர் குதிரையைப் பார்த்து பாவப்பட்ட சீவன் சார் என்றார். சிகேஷ்ராம் ஆட்டோவில் ஏறி விடுதிக்குச் சென்றோம். சிகேஷ்ராமுக்கு 200 ரூபாய் கூடக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். கண்ணன் மறந்துவிட்டான். அவனைத் திட்டினேன். இரவு சாப்பிட்டு வருவதற்காக கடுமையான குளிருக்குள் கிட்டத்தட்ட இரண்டு கி.மீ. தொலைவு நடந்துவந்தோம். கண்ணன் ஆலு பரோட்டா சாப்பிட்டான். நான் எதுவும் சாப்பிடவில்லை. இன்றிரவு வெப்பநிலை 10 டிகிரி காட்டியது. உதடுகள் உலர்ந்துவிட்டன. தண்ணீரை ஒரு மிடறு வாயில் வைத்து உதடுகளை நாவால் நீவிவிட்டு ஈரப்படுத்திக் கொண்டிருந்தேன். விடுதிக்குத் திரும்பினோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *