உற்சாகத்துடன் கவிதையிலும், கவிதை பற்றிய விவாதங்களிலும் ஈடுபாடு காட்டுவதில் சமகாலத் தமிழ்க் கவிஞர்களிடையே விக்ரமாதித்யன் முக்கியத்துவம் கொள்கிறார். தனக்கு நேர்ந்துவிட்ட வாழ்க்கைக்கு உயிர்ப்புடன் எதிர்வினை காட்டுவதில் இவருடைய கலை தீவிரம் பெறுகிறது. இவருடைய கவிதைகளை விமர்சனத்துக்குள்ளாக்குவது இவருக்கும், வாசகர்களான நமக்கும் நன்மை தரும் செயலாக இருக்கும். மூன்று அம்சங்களில் இவருடைய கவிதைகள் என்னை ஈர்க்கின்றன.
- இவர் தன் வாழ்வனுபவங்களை கலை நேர்மையுடன் கவிதைகளாக்குகிறார். இது எல்லா நல்ல எழுத்தாளர்களுக்குமான பொது அம்சம்தான் என்றாலும், இவரைப் பொருத்த வரை இது ஒரு பிரத்தியேகத் தளத்தில் இயங்குகிறது. வேரூன்றி விட்ட சமூக ஒழுங்குகளும், நியதிகளும் விக்ரமாதித்யனிடத்தில் முரண் கொண்டுள்ளன. இந்த முரண்பாடும் ஒரே சீரான போக்கில் செல்வதில்லை. சில சமயங்களில் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டும், சில சமயங்களில் ஒரு நெருடலை இவருக்கு ஏற்படுத்தியும் செல்கிறது. இதில்தான் இவருடைய நேர்மையே அடங்கியிருக்கிறது. இது மாதிரியான எழுத்து தமிழில் அபூர்வமாகவே நமக்குக் கிடைக்கிறது.
- பாசாங்கற்ற எளிமையான கவிதை விக்ரமாதித்யனுடையது. கவிதைக்கரு, அமைப்பாக்கம் இரண்டிலும் இந்தப் பாசாங்கின்மை வெளிப்பாடு கொள்கிறது. படிமங்களையும், உருவகங்களையும் கவிதையின் உயிர்நாடியென கவிதை விமர்சகர்கள் வற்புறுத்தினாலும், இவருடைய பெரும்பாலான கவிதைகள் ஒரு நேரடித்தன்மையைக் கொண்டுள்ளன. இந்த நேரடித்தன்மையை இவர் பெரும்பாலும் சரியாகவே கையாள்கிறார். இவருக்குக் கை வரும் இயல்பான கவிதை வேகம் இவருடைய எளிமையை நீர்த்துப் போகாமலிருக்கச் செய்கிறது.
- இவரே சொல்லிக்கொள்கிற மாதிரி இவரிடம் இயங்கும் திராவிட மரபு மனம் மிக ஆரோக்கியமான இலக்கிய அம்சம். தமிழ்க் கவிதையின் பாரம்பரிய நீரோட்டத்தில் இவர் இயல்பாகக் கலந்து விடுகிறார். இந்த மண், இந்த மொழி, இந்த கலாசாரம் என்ற மரபு தந்துள்ள பலன்களை விக்ரமாதித்யன் சுவீகரித்துக் கொண்டுள்ளார். சில நவீன தமிழ் எழுத்தாளர்களிடையே மரபு குறித்த பார்வை நோயுற்றதாக உள்ளது என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டிய கட்டாயமிருக்கிறது.
இனி “உள்வாங்கும் உலகம்” பற்றி
நேர்மையும் கவிமனமும் கொண்ட தனி மனிதன் ஒருவன் கபடமான சமூக நியதிகளோடு ஒத்துப்போக முடியாத அவலம் இவரது பிரதான பிரச்சனை. மனிதத்தன்மையற்றதும், நச்சுத்தன்மை கொண்டதுமான ஒரு சூழலில் தன்னைப் பொருத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் இவரை வெகுவாகத் துன்புறுத்துகிறது. இந்தச் சமூகத்தில் இவர் விரும்புவது “நதிக்கரை நாகரிகம்”தான்; ஆனால் விதிக்கப்பட்டது “ நெரிசல் மிக்க நகரம். எளிமையும், சுகமும், அன்பும் நிறைந்த ஓர் உலகத்துக்கு ஏங்குபவர்களுக்கு பார்க்கக் கிடைப்பது,
அவரவர் வயிற்றுக்கு(ம்)
அவரவர் அடித்துக்கொள்ள
அங்கிங் கெனாதபடி
எங்கும் எரியும் தீயும்,
‘வெளியெங்கும் வியாபதித்து
வெக்கை பரவும்; காட்சியும்தான்
ஐம்பது ரூபாய் ரேஷனுக்குப் புரட்ட முடியாத பிள்ளையாகவும் வாழத்தெரியாத கணவனாகவும் உள்ள பல சாதாரண மனிதர்கள் கடவுளையும், விதியையும், ஜாதகத்தையும் நம்புவது போலத்தான் இவரும் நம்புகிறார். ஆனால் ஒரே வீச்சில் இந்த சாதாரண நபர் கவிஞராகி விடுவது
“நட்சத்திரங்களுக்கு வானம்
நமக்கு? என்ற வரியில்தான்.
இவருடைய சில கவிதைகளை சுய பரிதாபம் மிக்கவை என்று சிலர் நிராகரித்து விடக்கூடும். சுய பரிதாபத்தை வெல்வது “வித்தகர்க்கல்லால் வேறே யாருக்கு வாய்க்கும்? நான் கவிதையில் பார்க்க விரும்புவது வித்தகனையல்ல, தன் வாழ்வுக்கு நேர்மையாக உள்ள கவிஞனைத்தான். சுய பரிதாபம் உள்ள கவிதைகள் சமூக நோய்களின் அறிகுறிகள் என்ற அளவில் தேவையானவைதான் என்று படுகின்றது.
ஓடவொரு காலம்
உட்கார ஒரு காலம்
உண்டு எல்ரோருக்கும்
ஓடவும் முடியாமல்
உட்காரவும் முடியாமல்
ஒழியும் என் காலம்
என்று எழுதும் விக்ரமாதித்யன்தான்,
தயவு செய்து
உங்கள் நிபந்தனைகளை முன்விதியுங்கள்
கடைசி நிமிஷத்தில்
கட்டாயப்படுத்தாதீர்கள்
மண்டியிடவோ மறுதலிக்கவோ
யோசிக்க வேண்டும் நான்.
என்று சுய பரிதாபத்தை மீறி, தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் முயற்சியையும் செய்கிறார்.
இன்பம், துன்பம், நம்பிக்கை, அவநம்பிக்கை, சமூக மனிதன், இளைஞன், என்ற எதிர்முனைகளிடையே இழுபட்டு அல்லல்படும் நம் வாழ்வைத்தான் இத்தொகுப்பில் நாம் பல இடங்களில் எதிர்கொள்கிறோம்.
(என் ) வீடு
ரொம்ப சின்னது
யாராவது நண்பர்கள் வந்தால்
தங்க வைக்க முடியாது
இரவில்
ஏதாவது தோன்றினால்
இருந்து எழுத முடியாது
எதையும்
போட்டது போட்டபடி
போடமுடியாது
இஷ்டத்துக்கு
சிகரெட் பிடிக்க முடியாது
கடன்காரர்கள் தேடிவருகையில்
ஒளிந்து கொள்ள முடியாது
அண்டை வீட்டாருக்குத் தெரியாமல்
எந்தக் காரியமுமு் முடியாது.
இத்தனை அவஸ்தைகளும் தரும் அதே வீடுதான் வேறொரு தருணத்தில் வேறொரு பரிமாணமும் கொள்கிறது.
“வரவேற்று
வைத்துக்கொண்டது இப்போதும்
அன்றைக்கு
அம்மா
இன்றைக்கு
மனைவி
என்றைக்கும்
வீடுதான்
விச்ராந்தியாக இருக்க இங்கே
வாய்த்தது எப்போதும் வீடுதான்.
வீடு தன் பௌதிக இருப்பைத் துறந்து ஆன்மீகப் பரிமாணம் பெற்று விடுகிறது.
“என் தோட்டத்தில்
சில சில பூக்கள்
என் வானத்தில்
கொஞ்சம் கொஞ்சம் நட்சத்திரங்கள்
என் நதியில்
சிறிது நீரோட்டம்
காத்திருக்கிறேன் நான்.
இது ஒரு காட்சி. கொஞ்சம் கழித்து
“மெல்ல
வற்றிக்காய்ந்தது நதி
விரிந்து
பரந்து சுட்டது மணல்வெளி
வானிலிருந்து
வரவில்லை மழை
முகத்துவாரத்தில்
காத்துக்கிடக்கிறது கடல்
நம்பிக்கையும், கொஞ்ச இன்பமும் கரைந்து போகும் நிஜம், மனித வாழ்வின் தவிர்க்கவியலாத அம்சம். இது இங்கே கவிதையாகியிருக்கிறது.
இந்த அவலமான வாழ்க்கை இவரை முற்றாகச் சிதைத்து விடவில்லை என்பதற்கான சான்றுகள் இவர் கவிதைகளிலேயே இருக்கின்றன. அன்பான மனைவியையும், குழந்தைகளையும் “மனசு கிடந்து அடித்துக்கொள்ள“ பிழைப்புக்காகப் பிரிந்து வந்தபோதும், முதல் பேருந்தின் ஓட்டுநர் இருக்கைக்குப் பின்புற ஜன்னலோரம் உட்காரத் தெரிகிறது இவருக்கு. பிரிவு ஏற்பட்ட அன்றைய அதிகாலை வியாபித்திருந்த சாரல் மழைக்குப் பின் ஏற்பட்ட சுகமான குளிரை அனுபவிக்கத் தெரிகிறது இவருக்கு. இவர் சுகித்த பெண்களின் நல்ல குணாம்சங்களைப் போற்றும் மனமே இவரைக் காப்பாற்றுகிறது.
பிற கவிஞர்களிடமிருந்து இவரை வேறுபடுத்தும் இன்னோர் அம்சம், தன் கலையைப் பற்றியும், தன் சுதந்திரத்தைப் பற்றியும் இவர் எப்போதும் தீவிரமாகக் கவலை கொள்வது. “வீணாக அழிந்தாலும் நான் கலைஞன்“ என்ற உணர்வு இவரை விட்டு எப்போதும் அகலுவதில்லை. விவஸ்தையின்றி சினிமா சம்பந்தப்பட்ட மூன்றாந்தர நபர்களுக்கும், பிறரால் நல்ல கலைஞர்களைக் குறித்தும் “கலைஞன்“ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு நல்ல கலைஞன் தன்னைத் தானே கலைஞன் என்று அழைத்துக்கொள்வது கொஞ்சம் வித்தியாசமாகத்தான் படுகிறது. சிலருக்கு இது அகங்காரமகாத் தோன்றலாம். ஆனால் இதில் ஒரு பெருமிதமும் நம்பிக்கையும்தான் தோன்றுகிறது, சுயமரியாதை தொனிக்கும் சொல்லாகத்தான் இதுபடுகிறது. தமிழர்களான நமக்குக் கலைஞர்கள் மற்றும் கலைகளின் மேன்மை, மரியாதை குறித்து ஆரோக்கியமான பார்வை கிடையாது. கலையை conscious ஆக பாவிக்கும் மனப்பான்மையும் தமிழ்க் கலைஞர்களுக்கு கிடையாது. தான் கலைஞன் என்ற எண்ணம், விக்ரமாதித்யனைப் பொருத்தவரையில் தன் இருப்பு குறித்த நியாயத்திற்கும், பிரதிகூலமான சூழலில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் சுதந்திரப் போக்கிற்கும் வலுவூட்டுவதாக அமைந்திருப்பதாகவே தோன்றுகிறது. தான் ஒரு கலைஞன் என்ற எண்ணம் உணர்வு பூர்வமாக பாரதி, ஜெயகாந்தன் ஆகியோரிடடையேயும் இருந்ததை இங்கு நாம் நினைவபடுத்திக் கொள்ளலாம்.
லௌகிக தளத்திலிருந்து மேலெழும்பி தத்துவ விசாரத்திற்கும் விக்ரமாதித்யனுடைய கவிதை சில சமயம் போகிறது. இவருக்கிருக்கும் தத்துவப் பிரச்சனைகள் அரூபத்திலிருந்து பிறந்தவையல்ல. தொட்டுணரும் வாழ்விலிருந்து இயல்பாக முளைக்கும் பிரச்சனைகள்தாம் அவை.
நினைவினும் நில்லாது
மேகம்
மறைவது போல
காணாமல் போக
என்ன வழி
காணாமல் போகும்வரை
கணக்கில்லாத பிரச்னைகள்
கணக்கில் இல்லாமல் போனால்
காணாமல் போகும் பிரச்னைகள்
காணாமல் போனபின்பும்
நாணாமல் பேசலாம் நாலுபேர்
ஆனாலும் காணாமல்
போவதெப்படி“
வாழ்வு நதியின் மாயத் தோற்றங்களைப் பேசுகிறது இன்னொரு கவிதை
“அக்கரையில்
என் தோட்டம் காடு வயல்கள்
இக்கரையில்
என்வீடு வாழ்வு மனசு
நதி
எதிரில்
என்பது போன்ற கவிதைகளில் ஒலிக்கும் குரல் தமிழ்ச் சித்தர்களினுடையதாகத்தான் கேட்கிறது. இந்தக் குரல் இன்னும் வலுவாக,
“இதிகாசமும்
வரிகளாலானது
வரிகளையுடைத்தால்
வாக்கியங்கள்
வாக்கியங்களை முறித்தால்
வார்த்தைகள்
வார்த்தகளைப் பிரித்தால்
எழுத்துகள்
எழுத்தில் என்ன இருக்கிறது“
மேலெழுந்தவாரியாக இக்கவிதை இதிகாசம், எழுத்து போன்றவற்றின் ஸ்திரத்தன்மையையும், பருண்மையையும் குறித்த கேள்விகள் என்று தோன்றினாலும் இது உண்மையில் மனித வாழ்வு பற்றியதுதான். வாழ்வு ஒரு பொதுப்பார்வையில் அர்த்தமுள்ளதாகவும், முக்கியத்துவமுடைய ஒரு பொருளாகவும் தோன்றலாம். ஆனால் அதனுடைய கூறுகளைப் பிளந்து பார்த்தால் அதனுடைய வெறுமையும், மாயத்தன்மையும் தோன்றுகின்றன.
“எனது தள்ளாடும் நிழலோடு நான்“ என்ற கவிதையில் இவருடைய தள்ளாடும் நிழல் இவருடைய தோல்விகளுக்கான, சரிவுக்களுக்கான குறியீடாக இருக்கிறது. இக்கவிதையும் ஒரு பெளதிக அனுபவத்தைத் தத்துவத் தளத்திற்குக் கொண்டு செல்கிறது. தோல்விகள் இவரை விழுங்கப் பார்த்தாலும், அவற்றையும் மீறி வென்று மேற்செல்வேன் என்று கூறுகிறார். எப்படியிருப்பினும் இவருக்கும், அவருடைய தள்ளாடும் நிழலுக்கும் உள்ள உறவு பிரிக்க முடியாதது.
“எனது
தள்ளாடும் நிழல்
எங்கே போகும்
என்னை விட்டு
நான் எங்கே போவேன்
எனது
தள்ளாடும் நிழலை விட்டு
எனினும்
எனது தள்ளாடும் நிழல் சமயங்களில்
என்னை விழுங்கப் பார்க்கும்
நான்
எனது தள்ளாடும் நிழலை
மிதித்து மிதித்து நடப்பேன்“
திருவேற்காடு போய் அம்மனைத் தரிசிக்காமல், மஹாபலிபுரம் போய் சிற்பங்களைப் பார்க்காமல், பெண்களோடு மட்டும் “போய் வந்த“ ஒரு சுகபோகி, எப்போதோ/ இறந்து போன / செண்பகச் செடிகளுக்காக/ இப்போதும் கவிதையில் /வருத்தப்பட முடிகிற“ மென்மையான ஒரு மனுஷன். விலை கூவி விற்க சரக்கு இருந்தாலும், வியாபாரி அல்ல. வீணாக அழிந்தாலும் ஒரு கலைஞன், தீப்பெட்டிப் படம் சேகரித்துக் கொண்டிருக்கும் தன் மகனுக்கும் கவிதை எழுதிக் கொண்டிருக்கும் தனக்கும் அடிப்படையில் பெரிய வித்தியாசமொன்றுமில்லை என்று கண்டுகொண்டு விட்ட ஒரு முதிர்ச்சி பெற்ற ஆளுமை எ்னறு ஒரு வித்தியாசமான தமிழ்க் கவிஞரை இத்தொகுதியில் சந்திக்கிறோம். ஓரிரண்டு கவிதைகளைத் தவிர, மற்றவை நிஜத்தை நம் முகத்துக்கு நேராகக் கொண்டு வந்து நிறுத்தி, ஒரு சமயம் சாதாரண மனிதன், மறுசமயம் கலைஞன் என்ற ஊசலாட்டமான ஓர் ஆளுமையின் சிக்கல்களை வெளிப்பாடு கொள்ள வைக்கிறது.
இத்தொகுப்பின் சிறந்த கவிதைகளில் ஒன்று, கூண்டுப்புலிகளை உருவகமாக்கி, அடர்ந்த காட்டில் கம்பீரத்துடனும், சுதந்திரத்துடனும் ஆதியில் திரிந்து கொண்டிருந்த மனிதன் இன்று கூனிக்குறுகி, பேடிமையுடன் தன் சரிவு பற்றிய பிரக்ஞையுமின்றி, தன் இழிநிலைக்குத் தன்னைச் சமரசம் செய்துகொண்டுவிட்டதைக் கூறுகிறது. சமகால மனித அவலம் இக்கவிதையில் மிகச் சரியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தொகுப்பிலுள்ள கவிதைகளுக்கு ஓர் இனிமையான ஓசை நயம் கிட்டியிருக்கிறது. வாய்விட்டுப் படித்தால் கவிதை படிக்கும் சுகத்தை அனுபவிக்க முடிகிறது. அந்த சப்த ஒழுங்கு, விக்ரமாதித்யனுக்குத் தமிழ்க்கவிதையின் நீண்ட பாரம்பரியத்தோடு இருக்கும் தொடர்பால் விளைந்திருக்கும் என்று தோன்றுகிறது.
தமிழின் சகாலக் கவிஞர்கள் பெதுவாக நீண்ட கவிதைகள் எழுதுவதில்லை, ஒன்றிரண்டைத்தவிர. விக்ரமாதித்யனும் இத்தொகுப்பில் நீண்ட கவிதைகள் எழுதவில்லை. ஓர் அனுபவத்தின் பல பரிமாணங்களையும் காட்ட உதவும் என்ற வகையிலும், கவிஞனின் சிருஷ்டி வேகத்தின் தாக்குப்பிடிக்கும் தன்மையை சோதிக்க உதவும் என்ற வகையிலும் நீண்ட கவிதைகளுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. இத்தொகுப்பில் பெரும்பாலும் பத்துப் பதினைந்து வரிக் கவிதைகளும், சில நான்கு வரிக்கவிதைகளும் உள்ளன. சிறு கவிதைகள் என்ற பெயரில் புளித்துப்போன கருத்துகளைச் சொல்லும் வெறும் வாக்கியங்கள் சில உள்ளன. சில உதாரணங்கள்
யுத்தம்
தோன்றியபோதே
யுத்த
தந்திரமும்
உண்மைகளுக்கும்
தேவை வண்ணங்கள்
கவிஞனும்
கணக்கு வைத்துக்
கொள்ள வேண்டியிருக்கிறது.
அதேசமயம் சில அருமையான சிறுகவிதைகளும் தொகுப்பில் இருக்கத்தான் செய்கின்றன.
கரையோர அலைகள்
கடக்க வேண்டும்
கட்டுமரங்கள்
வானத்தில்
நிறைய நட்சத்திரங்கள்
பூமி
எதிர்பார்த்திருப்பது மழை
பெரிய வித்தியாசமொன்றுமில்லை அடிப்படையில்
தீப்பெட்டிப்படம்
சேகரித்துக்கொண்டிருக்கிறான் என் மகன்
கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறேன் நான்.
கவிதை எழுதத் தெரிந்த விக்ரமாதித்யனுக்குத் தன் கவிதைகளைத் தொகுப்புக்குத் தேர்ந்தெடுக்கத் தெரியவில்லை. இத்தொகுப்பில் உள்ள மூன்றில் ஒரு பங்கு கவிதைகளைத் தவிர்த்திருந்தால் தொகுப்பு செறிவாக அமைந்திருக்கும். ஒருவேளை இந்தப் பலவீனமும் சேர்த்துத்தான் விக்ரமாதித்யன் என்ற ஆளுமையோ?
நன்றி
ஆர்.சிவகுமார்
நட்புறவுப்பாலம்