25.விக்ரமாதித்யனின் கவித்துலக உலகு:இருமையிலிருந்து இன்மை வரை.

1

விக்ரமாதித்யனின் ஐந்து கவிதைத் தொகுப்புகளையும் ஒன்றாக வைத்து வாசிக்கையில், அவரது கவித்துவப் பரப்பின் முதிர்ச்சி தெளிவாகத் தெரிகிறது. இரண்டாயிரம் ஆண்டுக் காலக் கவிதை சரித்திரம் உள்ள ஒரு மொழியில், இன்று வந்து கவிதை எழுதுகிறவன் தனக்கொரு இடத்தை அந்த சரித்திரத்தில் ஏற்படுத்திக் கொள்வது சிரமமானது. அந்த சிரமமான காரியத்தைத் தமிழ்ப் புதுக்கவிதை இயக்கம் ஏற்படுத்திய சிலபல வசதிகளைப் பயன்படுத்திச் சாதித்திருக்கிறார் விக்ரமாதித்யன்.

இவரது கவிதைகள், தமிழ்ப் புதுக்கவிதையின் இரண்டு முக்கிய போக்குகளான நகர்சார்ந்த புதுக்கவிதை வெளியீட்டு முறை (ஞானக்கூத்தன். ஆத்மாநாம் போன்றோர்), மற்றும் நகர்சாராத புதுக்கவிதை வெளியீட்டுமுறை (கலாப்ரியா போன்றோர்) என்ற இரண்டு பாணிகளுக்கும் மத்தியில் உள்ள கவித்துவமாக வளர்ந்துள்ளது. எனவே, நுணுகி நோக்கும் போது, ஞானக்கூத்தனும், ஆத்மாநாமும், சி.மணியும், கலாப்ரியாவும் ஆங்காங்கு ஒரு வாக்கியமாய், அல்லது கவிதை முடிப்பாய், அல்லது தொனியாய் வெளிப்பட்டுள்ளனர் இவர் கவிதைகளில். * இப்படி நான் சொல்லும்போது, விக்ரமாதித்யனுக்கு எந்த கௌரவக் குறைச்சலும் இல்லை. இப்போது மேற்கத்திய நாடுகளில் ஒரு குழுவினர் இருக்கிறார்கள்; எந்த கொம்பனான படைப்பாளியும் இன்னொரு படைப்பாளியின் அல்லது ஒரு படைப்பு இயக்கத்தின் பாதிப்பால் தோன்றியவன்தான் என்று நிரூபிப்பது இவர்கள் கோட்பாடு. எனவே, தமிழ்ப் புதுக்கவிதையின ஆரம்ப காலத்தைப் போலன்றி, இரண்டாம் கட்டத்தில் தோன்றிய விக்ரமாதித்யன் போன்றோர், முதல் கட்டத் தமிழ்ப் புதுக்கவிஞர்களிடம் இருந்த கவித்துவ ஆற்றலின் ஆகர்ஷிப்பில் கவரப்பட்டு, அவர்களைப் போலவோ அல்லது அவர்களைத் தாண்டிய கவித்துவ ஆளுமையுடனோ தோன்றியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட இரண்டாம் தலைமுறைக் கவிஞர்களின் தோற்றம் புதுக்கவிதை இயக்கம், சங்ககால கவிதை இயக்கம் போலவும், தனிக்குணமும் தனி அந்தஸ்தும் பெற்றுவிட்ட கவிதை இயக்கம் என்பதை விளக்குகிறது.

இவரது கவிதைகள், தமிழ்ப் புதுக்கவிதையின் இரு வெளியீட்டு பாணிகளுக்கு மத்தியில் உள்ள பாதை வழி உருவாகி, தனி ஆளுமை பெற்றபின், பிற இரு பாணிகளிலிருந்தும் வேறுபட்ட மூன்றாவது வெளியீட்டு பாணியாய் முழுமை பெற்றுள்ளன. இதனால்தான், இவரது கவிதைகள் தமிழ் கவித்துவ சரித்திரத்தில் இதுவரையில்லாத ஒரு கொடுப்பினையாய் (Contribution) அமைந்திருக்கின்றன என்கிறேன். ஆனால், இந்தப் புது ஆளுமையைத் தன் போக்கில் ஏற்றுள்ள விக்ரமாதித்யனின் கவிதைகள், சைவ சித்தாந்த கவிதைகள் என்று இலக்கிய ஆசிரியர்கள் பேசும் பழைய கவிதை மரபோடு சிலவேளை தோரணையில் ஒத்தும் காணப்படுகின்றன. அதுபோல, ஒருவித ஜப்பானிய ‘ஹைய்கு’ பாணி வெளியீட்டுமுறையும் இவர் கவிதை இயக்கப் பயணத்தில் இனம் காண முடிகிறது. இவையெல்லாம் உருகி இணைந்து விக்ரமாதித்யனின் சொந்தக் கவிதைகளாய் இறுதியில் கிடைக்கின்றன.

இப்படி இவரது கவிதைகள் மேல் விழும் பாதிப்புகள் பற்றி ஏன் பேசுகிறேன் என்றும் சொல்லி விடுகிறேன். திக்குத் தெரியாத காட்டில் சென்றுவிட்டவுடன் ஒரு யாத்ரீகன். தெரிந்த  தடயங்கள், தெரிந்த பாதைகள், ஒலிகள் எங்காவது தெரிகிறதா என்று பார்ப்பான். இப்படித் தெரிந்த அடையாளங்கள் மூலம், தெரியாத காட்டை அறிய முயல் வான். அதுபோல், விக்ரமாதித்யனின் புதிய கவித்துவ காட்டை எனக்குத் தெரிந்த அடையாளங்களான பிற கவிஞர்களின் வரிகள், கவிதை முடிப்பு, தோரணை இவை மூலம் அறிய முயல்கிறேன். இதுபோல், எனக்குத் தெரிந்த வேறு அடையாளங்கள் மூலம், அல்லது இன்று உலக அளவில் பயன்படுத்தப்படும் சிந்தனை உலகக் கருவிகளைப் பயன்படுத்தி, இவரது கவிதை உலக சாதனைகளைப் புரிந்துகொள்ளவும் விளக்கவும் முயல்கிறேன்.

2

ஓரளவு தத்துவ நிலையில் எழுதப்பட்ட கவிதை வரிகள் இவரது பல தொகுப்புகளில் பரவிக் கிடக்கின்றன.

‘ஊருங்காலம்’ தொகுப்பில் ஒரு கவிதையின் வரிகள் இவை:

‘எது நிஜம்

எது பொய்

யாருக்குத் தெரியும்’                                (பக்கம்: 20)

இந்தக் கேள்வியை எழுப்பும் இக்கவிதை வரிகளுக்குப் பதில் போல, இன்னொரு கவிதையின் இரண்டு வரிகள் வருகின்றன. அதே தொகுப்பில்.

‘தோற்றம் காட்டும் முரண்பாடு

ஏகமானது இருப்புக்கு’                                    (பக்கம்: 47)

என்ற பதில்கூட திருப்தியில்லாமல், மீண்டும் ஒரு பதில் சொல்லப்படுகிறது, ‘எழுத்து, சொல், பொருள்’ என்ற தொகுப்பில். அதாவது, ரகம் அல்ல இறுதி உண்மை என்பது இப்பகுதியில் வரும் பதிலாகும்.

‘ஒன்றென்றால் ஒன்று

வேறென்றால் வேறென்கிறது தத்துவம்’                      (பக்கம்: 44)

இந்த வகையில் ஒன்றா வேறா என்ற இரட்டைத் தன்மை. (துவந்துவம்), ‘இது’, ‘அது’ என்ற அல்லாட்டமாய் மாறுகிறது.

‘ஓம்

அது நிறைந்திருக்கிறது

இது நிறைந்திருக்கிறது

நிறைவு நிறைவினின்றும் எழுகிறது

நிறைவினின்றும் நிறைவு எடுத்து

நிறைவே எஞ்சுகிறது

ஓம் சாந்தி சாந்தி சாந்தி’                        (‘ஊருங்காலம்’)

என்கையில், ‘அது’, ‘இது’ என்ற வேறுபாடே இறுதி உண்மையாகப்படுகிறது.

இந்த அது X இது என்ற வேறுபாடு, அர்த்தத்தின் தோற்றம். மொழியானது இப்படிப்பட்ட பல்லாயிரம் அர்த் தங்களின் ஜன்ம ஸ்தானமாகிறது. இந்த அர்த்தங்களின் பிறப்பு, இப்படிச் சில எதிரும் புதிருமாய்ப் பரவிக் கிடக்கும் மொழி அடையாளங்களை அடிப்படையாய் வைத்து நடக் கிறது என்கையில், அடையாளங்களுக்கும் அர்த்தங்களுக்கும் உள்ள உறவு பற்றிய சிந்தனை உருவாகிறது.

3

இந்தச் சிந்தனை பற்றிய சூட்சுமமான அறிவு, பழந்தமிழ்ச் சிந்தனையாளர்களான இலக்கணக்காரர்களிடம் இருக்கிறது. எனவே, ஓர் இலக்கணவாதி, “எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே” என்கிறார். அதாவது, அர்த்தம், சொல் இரண்டுக்கும் உள்ள உறவு பற்றிய தன் அபிப்பிராயத்தை இந்த இலக்கணக்காரர் கூறுகிறார். இவ் விஷயத்தையே தனது கவிதைக்கான உள்ளடக்கமாய் எழுதுகிறார் விக்ரமாதித்யன்.

கவிதை இதோ:

‘லோகநாயகி

ரேணுகாதேவி

உமாமஹேஸ்வரி

ராஜராஜேஸ்வரி

தாட்சாயனி

குழல்வாய்மொழி

…  …. ….

பெயர்கள்

பெயர்கள்

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே

என்பான் தொல்காப்பியக் கவிஞன்.’                             (‘ஊருங்காலம்’)

இப்படிப் பெயர்கள் (சொல்) என்ற அடையாளத்துக்கும் (sign), அது சுட்டும் அர்த்தத்துக்கும் உள்ள உறவு பற்றிய தனக்கான நிலைபாட்டைக் கவிஞர் எடுத்துள்ளார்.

தொல்காப்பியனைப் போலவே, உரைக்காரர்கள்கூட அர்த்தம் சொல்லும்போது, சொற்களின் இலக்கண அம்சத்திற்கு மிக அதிகம் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். அது போலவே, தமிழிலும், சமஸ்கிருதத்திலும் ‘காவிய மீமாம்சை’ என்ற துறையில் அலங்கார சாஸ்திரங்கள், சொல் மற்றும் ஒலியிலிருந்து தம் சிந்தனையை ஆரம்பிக்கின்றன. சங்க கவிதைகளில் வரும் உள்ளுறை, குறிப்புமொழி போன்ற அலங்காரங்களுக்கு உரையாசிரியர்கள் உரை எழுதும் போது, மொழியின் ஆரம்பக் கூறாகிய எழுத்தோடும், இலக்கணக் கூறுகளோடும் இணைத்து விவாதிப்பதை நாம் காணலாம். இவ்வாறு மொழிக்கும் கவித்துவ சர்ச்சைக்கும் ஒரு சம்பந்தம் உண்டு என்று அறிகிறோம்.

ஆக மொத்தம், ஒரு விஷயம் தெளிவாகிறது; அர்த்தத்தின் உலகம்,மொழியின் உலகத்தோடு இணைந்தது. ஆனால், அந்த இணைவு, நேரடி இணைவு அல்ல. அது ஒரு வகையில், பொத்தானை அமுக்கினால் விளக்கு எரிவது போன்ற உறவு. அதாவது, மொழி – பொத்தான்; விளக்கு – அர்த்தம்.

விக்ரமாதித்யன் கவிதைகளில் அவர் அறிந்தோ அறியாமலோ வெளிப்படும் கோட்பாடும், நம் தமிழ், சமஸ்கிருத இலக்கணம் மற்றும் அலங்கார சாஸ்திரம் பற்றிய சிந்தனையாளர்கள் வெளிப்படுத்தும் கோட்பாடும் ஒன்று போலுள்ளன என்று கூறி மேலே போவோம்.

4

அர்த்த உலகத்துக்கும் மொழி உலகத்துக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆய்வில், மொழியியல் வல்லுநர்கள், நாம் பார்த்தது போல், சப்தத்தின் வேற்றுமைதான் அடிப்படை என்கிறார்கள். இது இப்போது பரவலாக ரொம்ப பேர் பேசும் விஷயம். சப்தம், மொழிக்கும் சங்கீதத்துக்கும் அடிப்படை. மொழி, சப்தத்தை ஒரு வகையில் அறிந்தால், சங்கீதம் இன்னொரு வகையில் அறிகிறது. மொழி சப்தத் தின் அடிப்படையாக ஒரு ‘இருமை எதிர்வை’ (binary opposition -உதாரணம்: பல் X கல்; இதன் வித்தியாசம், ப் X க் என்ற அடிப்படை சப்த பிசிறின் X க் வித்தியாசத்திலிருந்து முளைக்கிறது) வைக்கிறது. அதுபோல் சங்கீதத்தின் அடிப்படை அதன் ஸரிகமபதநிஸ என்ற அடிப்படை யான ஏழு ஸ்வரங்கள். மிருதங்கத்தில் இதுபோல, ‘த்தி ‘தோம் நம்’ என்ற அடிப்படை, சப்த உலகின் பல்வேறு விகசிப்புகளை உருவாக்கக் காரணமாகிறது. இதே சப்த அலகுதான், நடனத்தின் அடிப்படை அலகாகவும் ஆகிறது. மரபுச் செய்யுளில் நேர், நிரை என்ற சப்த அடிப்படைதான் பல்வேறு வடிவங்களில் பெருகி, அசைகள், தளைகள், பா, பாவினம் என்று பெருகுகிறது.

இப்போது, கவித்துவத்தின் அடிப்படையானது மொழி யின் அடிப்படையான சப்த உலகில் இருக்கிறதென்று நான் விளக்குவதற்கு அதிகம் எதிர்ப்பு இருக்காதென்று நம்புகிறேன்.

ஆக, சப்தம் பல்வேறு அடையாள ரூபங்களாக (symbolic forms) மாறி, ஒவ்வொரு துறைக்கும் இசைக்கும் ஏற்றவிதமாகவும், நடனத்திற்கும் கவிதைக்கும் ஏற்றவிதமாகவும் பயன்படுகிறதென்று அறிகிறோம். இதுபோன்று கவிதைக்கான அடிப்படை அலகு, மொழியின் வடிவத்தில் உள்ள இருமை எதிர்வு (binary opposition) ஆகும். இதே இருமை எதிர்வுத் தன்மை, கவித்துவ எதிர்வாக விக்ரமாதித் யனில் வருகிறது என்று விளக்க முடியும். சில உதாரணங் களைப் பார்ப்போம்.

‘ஒளியெனில்

இருள்

உறவெனில்

பிரிவு

வாழ்வெனில்

சாவு

இருமையை ஏற்கமுடியா மனசை

என்ன சொல்லித் தேற்ற                               (‘எழுத்து, சொல், பொருள்’)

என்ற கவிதையில் இருமைதான் மனசின் அடிப்படை என் கிற அறிவு, விக்ரமாதித்யனுக்கு இருப்பதைத் தெரிந்து கொள்கிறோம். இந்த இருமை எதிர்வு, இரண்டு வகை. ஒன்று, வெளிப்பட்டு நிற்கும் இருமை எதிர்வு. இன்னொன்று, வெளிப்படாமல், பூடகமாக நிற்கும் இருமை எதிர்வு. இதுபோல் வெளிப்பட்டு நிற்கும் சொல் எதிர்வுகள்,

‘மென்மை

பூவாயிற்று

உக்ரம்

தீயாயிற்று’                                     ( ‘எழுத்து, சொல், பொருள்’)

என்ற கவிதையிலும்,

இல்லைக்கிடைக்குறை இலையாமெனில்

முல்லைக்கிடைக்குறை முலையாகும்மே’               (‘எழுத்து, சொல், பொருள்’)

என்ற கவிதையிலும் வருகின்றன. இந்தக் கடைசி கவிதையில், ‘இல்லை’ என்ற சொல்லின் வெறும் சப்த எதிர்வாக ‘முல்லை’ என்ற சொல் கொண்டு வந்து பொருத்தப்படுகிறது. மற்றபடி, ‘இல்லை’க்கும் ‘முல்லை’க்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்தக் கவிதை, வெறும் (அர்த்தம் பற்றிக் கவலையில்லாத) சப்தத்துக்கும் சப்தத்துக்குமான ஒரு சம்பந்தத்தின் மூலம் உருவாகும் கவிதையாகும். (மொத்தக் கவிதை உருவான பின்பு அர்த்தம் வருகிறது.)

இதுபோலவே, ஒளியெனில்..’ என்று தொடங்கும் கவிதையிலும் ஒளி இருள், உறவு X பிரிவு, வாழ்வு X சாவு என்ற வெறும் சொல் எதிர்வுகள் (opposition of words) மொத்த கவிதையும் உருவாகக் காரணமாகின்றன. அக்கவிதையின் இறுதி வரி,

“இருமையை ஏற்கமுடியா

மனசை என்ன சொல்லித் தேற்ற”

என்பது, பொதுவாக விக்ரமாதித்யன் கவிதைகளில் வரும் தொனி கொண்ட வரிதான். ‘என்ன சொல்லித் தேற்ற’ என்பது பார்வைக்குத் தெரிவதுபோல் ஒரு கேள்வி அல்ல, ஒரு கேள்விக்கான பதிலாகும். ‘என்ன சொல்லித் தேற்ற என்பது, ஒரு ஸ்தம்பித்த மனநிலையின் வார்த்தை ரூபமாகும். இது போன்ற ஸ்தம்பித்த மனநிலை, இவர் கவிதைகளில் பல இடங்களில் வருகிறதென்று காணமுடியும். ஒரே ஒரு உதாரணம் மட்டும் காட்டுகிறேன்.

‘ஆகக் கடைசிக்குக்

கெட்டுப் போக்கியதைப் பார்த்தால்

முதலில் கவிதை

அப்புறம் நம்பிக்கை

பிறகு வாழ்க்கை

முடிவில் ஆத்மா என்றாலும்

இனியொன்றும் செய்வதற்கில்லை                           (‘ஆகாசம் நீல நிறம்’)

இனி நாம் பார்த்து வந்த விஷயத்துக்கே வருவோம். மென்மை X உக்ரம் என்ற எதிர்வு ஒரு கவிதையில் வெளிப்படையாக வந்துள்ளது கண்டோம்.

இந்த எதிர்வுகள் வெளிப்படையாக வந்துள்ளதுபோல், உள்ளுறைந்து, ரகசியமாக பிரசன்னமாகும் எதிர்வும் உண்டு என்று பார்த்தோம். அதற்கொரு உதாரணம் இங்குக் காட்டுகிறேன்.

வாழ்க்கை

‘பறத்தல் சந்தோஷமானது.

ஆனால்

பட்டுப்பூச்சிகள்

மல்பரி இலைகளில் தூங்கும்.                              (‘ஆகாசம் நீல நிறம்’)

இக்கவிதை படித்தவுடன் ஒரு ‘ஹைய்க்கு’ பாணியிலான முதல் படிமத்திற்கும் இரண்டாம் படிமத்திற்குமான தர்க்கத் தொடர்ச்சியற்ற கவிதையாகத் தெரிகிறது. என்றாலும், யோசிக்கும்போது, நாம் ஒரு தர்க்கத் தொடர்ச்சியைக் கண்டுபிடிக்க முடியும். பறப்பது, சந்தோஷமானது. ஆனால், பறக்கும் நிலையை விட்டுத் தூங்குவதில் சந்தோஷம் கொள்கிறது, மல்பரி இலையில் இருக்கும் பட்டுப் பூச்சி. எனவே, பறத்தல் நீ தூங்குதல் என்ற எதிர்வு உள்ளுறைந்து காணப்படுகிறது இங்கே. இக்கவிதையில் இன்னும் சில விக்ரமாதித்யன் கவிதைக் குணங்களும் காணப்படுகின்றன.

அதில் ஒன்று, கவிதையின் ஒவ்வொரு படிமமும் அப்படி அப்படியே விடப்படும் தன்மை. இன்னொன்று, குறியீட்டு அர்த்தம் (symbolic meaning); பறத்தல் என்பது சந்தோஷம் என்ற அர்த்தத்தையும், தூங்குதல் என்பது துக்கத்தையும் குறிக்கிறது. தூங்கும் பட்டுப்பூச்சிகளாக மனிதர்களைக் காணும் தொனி அர்த்தமும் இந்தச் சின்ன கவிதையில் உண்டு.

எதிர்வு என்ற பண்பு பொதுவாகப் பல இடங்களில் இருந்தாலும், பிற கவித்துவப் பண்புகளும் அத்தகைய எதிர்வுகளுடன் காணப்படுகின்றன என்பதற்கு உதாரணமாகச் சில கவிதைகளைக் கண்டோம்.

‘இருமையை ஏற்க முடியா மனசை

என்ன சொல்லித் தேற்ற’

என்ற வரியில் வெளிப்படும் மனிதன் ஸ்தம்பித்த நிலை, அக்

என்ற வரியில் வெளிப்படும் மனிதன் ஸ்தம்பித்த நிலை, அக்கவிதையின் முந்தின வரிகளில் அடுக்கப்படும் எதிர்வுகளின் மூலம் வலிமைப்படுகின்றன.

வெறும் வார்த்தை எதிர்வுகளான ‘மென்மை நீ உக்ரம்’ போன்றன வரும் கவிதையையும் மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். அக்கவிதையில் ஒரு திடீர் முடிப்பு மூலம் புதுவித கவிதைப் பண்பு உருவாகிறதென்றே படுகிறது. மென்மையானது பூவாகியது என்று கூறும்போது, ஒருவித மாயாஜாலப் படிமம் எழுகிறது. உக்ரம் தீயாகிறது என் கையிலும், ஒருவித மாந்திரிகப் பண்பு உள்ளே இருப்பது தெரிகிறது.

‘இல்லை’ என்று ஆரம்பிக்கும் கவிதையில் எதிர்வு, வெறும் சப்த எதிர்வாக மாறி, வாழ்வு பற்றிய அர்த்தமற்ற தன்மையை விளக்குகிறது.

5

இதுவரை நாம் பார்த்துவந்த எதிர்வுகளை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று, வெளிப்பட்டு நிற்கும் வார்த்தை எதிர்வுகள்; இன்னொன்று, வெளிப்படாமல், அதே நேரத்தில், பூடகமாக நிற்கும் வார்த்தை எதிர்வுகள்.

கொண்டிருப்பதையும் தொடர்ந்து பார்த்து வந்தோம். இனி இந்த எதிர்வுகள் தம்மிடம் வேறு கவித்துவப் பண்புகளைக் இந்த வார்த்தை எதிர்வு, ஒரு புதிய பண்பாக வளர்வதை விக்ரமாதித்யனின் கவித்துவ பிரபஞ்சத்தில் காணமுடியும் என்பது என் நம்பிக்கை. அதாவது, இரு வார்த்தைகள் மத்தியில் இருந்த எதிர்வுப் பண்பானது வளர்ந்து, ஒரு எதிர்வுப் படிமமாகவோ, ஒரு முழுக் கவிதையாகவோ உருவாவதை இவர் கவிதைகளில் காணலாம். ஆக, வார்த்தைகளின் எதிர்பதப் பண்பு வளர்கையில், படிமங்களின் எதிர்வுப் பண்பாக அது மாறுகிறது. இவ்வாறு ஒன்றின் எதிர்வு, இன்னொன்றின் எதிர்வாக உருமாற்றம் (trans-fomation) பெறுவது இங்கு கவனிக்கத்தக்க ஒரு விஷயமாகும்.

‘ரத்தத்தில்

கை நனைத்ததில்லை நான்

எனினும்

ரத்தம் சிந்த வைப்பவர்களின் நிழலில்

தங்க நேர்கிறது எனக்கு

சோரம்

தொழிலாகக் கொண்டதில்லை நான்

எனினும்

சோரம் போகிறவர்களிடம்

சோறு வாங்கித் தின்ன நேர்கிறது எனக்கு’                 (‘ஊருங்காலம்’)

‘…… கனவுகள் நொறுங்கிப் போக

கற்பனைகள் அழிந்து பட

யதார்த்தம் அலைக்கழிக்க

உன்மத்தம் கொண்டு

உலகு புறந்தாள்…’                                                                                 (‘ஊருங்காலம்’)

இந்த இரண்டு கவிதைகளிலும் ஒருவகை எதிர்வுத் தன்மை இருக்கிறது என்பது என் எண்ணம். இதை விளக்க முனைகிறேன்.

முதல் கவிதை, விக்ரமாதித்யனுக்கு உரிய பண்பு கொண்ட கவிதை. ஒரு வகை அடுக்கல், கவிதையாக வளர் கிறது. இங்கு வரும் அடுக்கல், எதிர்வுப் பண்பு கொண்ட அடுக்கல்களாகும். முதலில், ‘நான்’ என்ற வெளிப்பட்ட எதிர்வும், ‘அவர்கள்’ என்ற வெளிப்படா எதிர்வும் இக் கவிதையாக உருவாகின்றன.

நான் – ரத்தத்தில் கை நனைத்ததில்லை அவர்கள்- ரத்தத்தில் கை நனைத்தவர்கள்; இந்த எதிர்வு பலவித சித்திரங்களாய் வளர்கிறது.

இது ஒருவகை என்றால், இன்னொரு பண்புள்ள கவிதையும் விக்ரமாதித்யன் எழுதுகிறார். அப் பண்பு, மேலே வந்த, “கனவுகள்…” என்ற பத்தியில் வெளிப்படுகிறது. ஒரு சாதாரணப் பெண் (ஒரு இந்தியப் பெண்) பற்றிய படிமங்கள்.

“கனவுகள் நொறுங்கிப் போக…” என்று உருவாகின்றன. அப்பத்தியின் முடிவில், அப்பெண், ஓர் இந்தியப் பெண் கடவுளாக மாறுகிறாள். கவிஞன்,

‘யதார்த்தம் அலைக்கழிக்க உன்மத்தம் கொண்டு உலகு புறந்தாள்’

என்கையில், பெண் X தெய்வம் என்ற எதிர்வு ஒரு பத்திக் குள்ளேயே கிடைப்பது தெரிகிறது.

இப்படி, சாதாரண மொழியில் அலகான இருமை எதிர்வு, கவிதை உற்பத்திக்கான அடிப்படையாய் இருந் தது மாறி, கவிதையின் உருவத்தை தீர்மானிக்கும் கட்டத் திற்கு வருகிறது. இந்த உருமாற்றம் (Transformed) பற்றி விரிவாக நாம் காணவேண்டும்.

வார்த்தைகளின் எதிர்வு என்பது, எளிய, கட்டத்தைச் சார்ந்த எதிர்வு. இந்த எதிர்வு, அடுத்தபடி ஆரம்ப வார்த்தையின் பொருளை விட்டுவிடுகிறது. பின்னர், இது தூய எதிர்வுகளாக – அதாவது, வெறும் அடையாளங்களாக ‘X’ x ‘Y’என்றோ. ‘+’ x ”என்றோ மாறும் பண்பு இங்குத் தெரிகிறது. எனவே, அடுத்த கட்டமாக, இந்தத் தூய எதிர்வு, உருமாற்றம் (Transformation) பெற்று, (ரத்தத்தில் கை…) அல்லது ஒரு பத்தியின் உருவாக்கத்துக் கான ஒரு கவிதையின் உருவாக்கத்துக்கான மொத்த எதிர்வாகவோ உருமாற்றமாகவோ வளர்வதைப் பார்க்கலாம்.

இந்த உருமாற்றம் பற்றிச் சிந்திக்குமிடத்தில், இன்னொரு உதாரணத்தையும் தரலாம். அகராதி எதிர்வு கள் (நல்லது) கெட்டது =மென்மை X உக்ரம் போன்றவை) மட்டுமின்றி, கவிஞன் தனது சிந்தனைச் சாய்வுக்குத் தகவும் X எதிர்வுகளைப் பிறப்பிக்க முடியும்.

‘மனம்

உண்டுபண்ணும் இருமை

ஞானம்

கண்டுகொள்ளும் ஒருமை’                                  (‘எழுத்து. சொல். பொருள்’)

என்ற கவிதையில், இருமை x ஒருமை என்பது அகராதி எதிர்வாகும். மனம் X ஞானம் என்பது, அகராதி எதிக்வல்ல. கவிஞன் உருவாக்கும் எதிர்வாகும். இதுபோல, சுவிஞன் சொந்தமாக உருவாக்கும் இன்னொரு எதிர்வு, மனம் X முலை என்ற, தத்துவ உலகுக்கும் உடல் சார்ந்த பாலியல் உலகுக்குமான எதிர்வாகும்.

‘கைபட

 தளர்வது முலை

கவலைப்பட

தளர்வது மனம்.’                                                   (“எழுத்து, சொல், பொருள்’)

இத்தகைய கவிஞனின் சுயமான கண்டுபிடிப்புகளான கருத்தியல் (Concept) எதிர்வுகள், அடுத்து, வேறு வேறு கருத்தியல் எதிர்வுகளைக் கண்டுபிடிக்கும். மனம் X ஞானம் என்பது எதிர்வு என்று கண்டுகொண்ட கவியின் மனம், தொடர்ந்து கருத்தாக்கங்களை உருவாக்க இந்த எதிர்வைப் பயன்படுத்துகிறது. மனம் இருமையை உண்டுபண்ண காரணம் என்று கூறிய கவிஞன், அடுத்ததாக, மனம் சார்ந்த கருத்தாக்கங்களை யோசிக்கிறான்.

உடனே அவனுக்கு ‘மனம் செத்தால் பயம் இல்லை’ என்ற சுருத்தாக்கம் கிடைக்கிறது.

‘பயம்

இன்றி வாழ

மனம்

இன்றி சாக வேண்டும்’                               (‘எழுத்து, சொல்,பொருள்’. பக்கம் 48)

என்ற கவிதையும்,

‘ஊர் பூராவும்

ஒரே மாதிரி

காண்ப தெல்லாம்

அதே காட்சிகள்

வித்யாசம்

தேடுவது

கலைஞன் மனது’                                   (‘ஆகாசம் நீல நிறம்)

என்ற கவிதையும், மனம் × ஞானம் = இருமை X ஒருமை என்ற சமன்பாட்டு கருத்துருவ வளர்ச்சிமூலம் கிடைக்கிறது. எல்லாம் ஒரேமாதிரி; அதில் வித்தியாசம் காண்பது, மனது. ஏனெனில், (கவிஞனின்) மனம் இருமைக்கு (வித்தியாசத்துக்கு காரணம் என்று நம்புகிறானே ! இப்படியே இவரது ஐந்து தொகுப்புகளுக்குள்ளும் நிறைய உதாரணங்களைச் சுட்டலாம். அந்த உதாரணங்களுக்குப் போகாமல், ஒரு மொழியியல் எதிர்வு உருமாற்றம் பெற்று வேறு வேறு கவித்துவ வளர்ச்சிகளுக்குப் போவதைக் காட்டுவதே இங்கு என் உத்தேசம்

6

எதிர்வு பற்றிய இன்னொரு விஷயத்தையும் சிந்திப்போம். இரண்டு காட்சிகளைக் கொண்டு வந்து அப்படி அப்படியே எதிரும் புதிருமாக நிறுத்தும் ஒரு காரியத்தைப் பல கவிதைகளில் விக்ரமாதித்யன் செய்கிறார். “மென்மை பூவாயிற்று, உக்ரம் தீயாயிற்று” என்ற கவிதையை எடுத்துக்கொள்ளலாம். ‘தீயான பின்?’ என்ற கேள்விக்குப் பதில் இல்லை. இப்படி நிறுத்தும்போது, ஒரு ‘தளத்தை’ (Space) சிருஷ்டிக்கிறான் கவிஞன். இது ஏற்கெனவே ‘ஹைய்க்கு’ பாணியில் இவர் எழுதிய கவிதையின் உருவாக்கப்பட்டது என்றும் பார்த்தோம். ஆக, இரு காட்சிகளை (பறத்தல் சந்தோஷமானது…) மத்திய பாகத்தில் சுவிஞனால் எதிரும் புதிருமான வார்த்தைகளின் (மென்மை X உகரம்) துணையுடன் நிறுத்திய கவிஞன், அடுத்த கட்டத்தில் வெறும் படிமங்களை நிறுத்துகிறான். அத்தப் படிமங்கள் இரண்டும் எந்தத் தொடர்பும் இல்லாமல், சுயேச்சையான ஒரு உள்யாந்திரிக कंधी (Automatic inner urge) काक्रा (Spontaneous) வெளியீடாய் வருகின்றன. கீழேவரும் முழுக்கவிதை ஒன்றில் இப்படிப்பட்ட தளம் சிருஷ்டிக்கப்படுகிறது.

‘தூக்கம் புதுப்பிக்கும்

தண்ணீர் உயிர்ப்பிக்கும்.’                                         (‘ஆகாசம் நீல நிறம்)

இவ்வாறாக தளசிருஷ்டி, வரிகளுக்கிடையிலும், இரு எதிர்வுகளுக்கிடையிலும், இன்னும் சில வேளை, கவிதை களுக்கிடையிலும் ஏற்படுகிறது. கீழ்வரும் மொத்த கவிதை யிலும் இந்தத் தளம் (Space) கவிதைக்கு உருவம் கொடுக்க உதவுகிறது. மேல் கவிதையில் இரு வரிகளுக் கிடையில் இருந்த தளம், இங்கு மூன்று பத்திகளுக்கும் இடையில் புகுந்துள்ளது. ஒரு பத்திக்கும் இன்னொரு பத்திக்கும் தர்க்க நீட்சியோ தொடர்ச்சியோ இல்லை. மூன்றும் தனித்தனி கவிதைகள் போலுள்ளன.

  1. என் புத்தகங்கள்

            என் எதிரிகள்

  1. ஒரு பெண்ணின் அறை

          எப்படி இருக்குமென்று எனக்கு எழுதத் தெரியாது

  1. ஆற்றைக் கண்டேனா

           அழகரை சேவித்தேனா.

இவ்வாறு, எதிர்வுகளின் திடீர் முடிப்புகள் மூலம் உருவாக்கிய ஒரு அதைப்பு (Effect), கவித்துவ சிருஷ்டிக்குப் பயன்பட்டதைக் கண்டோம். இந்த விதத்தில், ஒரு தளம் அல்லது ஒரு முடிப்பற்ற தன்மையை (Opening), இரு எதிர்வுகள் மூலம் அல்லது படிமங்கள் மூலம் உருவாக்குவது விக்ரமாதித்யனின் பல கவிதைகளில் தொடர்ந்து வரும் பண்பாகும். எனவே இந்தத் திறப்பு (Opening) எப்படி இவர் கவிதைகளில் உருவாகிறதென்று ஓரளவு உதாரணங்களுடன் பார்க்க வேண்டும்.

இந்தத் தள சிருஷ்டி, விக்ரமாதித்யன் எழுதிய ‘ஹைக்கூ’ பாணி கவிதைகளில் எவ்வாறு பிரசன்னமானது என்றும் இக்கட்டுரையில் ஏற்கெனவே பார்த்துள்ளோம். ‘ஹைக்கூ’ பாணி கவிதைகள் பற்றிப் பார்க்கும்போது, அக் கவிதைகளின் தத்துவப் பின்னணி பற்றிக் கூறுகிறவர்கள் ‘ஸென்’ புத்தத்தின் (Zen Buddhists) பாதிப்பையும் பேசுவார்கள். ஸென் புத்தத்தின் ‘சூன்யாதா என்ற ஒரு வகை இன்மை, விக்ரமாதித்யனுக்கும் தெரியாததல்ல.

‘இன்மை

இன்மைகள் தாம்

இவனை

குழப்பமிக்க கலைஞனாக்கிற்று.’                                   (‘ஆகாசம் நீல நிறம்)

இந்த இன்மை, தள உருவாக்கம், திறந்த முடிப்பு போன்றவற்றை ஓரளவு ஒத்த அர்த்தத்தில் நான் பயன்படுத்துகிறேன். திறந்த முடிப்பு, கவிதையின் முடியும் உணர்வை (Sense of an ending), ஓர் இன்மையுணர்வாய்த் தருகிறது. இன்மைக்கும் இடம் (தளம்) பற்றிய தீவிர சிந்தனைகளுக்கும் தொடர்புண்டு. இரண்டு நிகழ்வுகளுக்கு மத்தியில் இருப்பது ஒரு வெளி. இந்த இடைவெளி, பிரக்ஞையின் தூய நீட்சி. தூயதாகும்போது, உணர்வுகளுக்கு வெளியில் இயங்குகிறது. தனிப்பட்ட முறையில் விக்ரமாதித்யனை அறிந்தவர்கள், அவரது போதைப் பழக்கத்தை அறிவார்கள். இவ்வாறு இவரது கவிதைகளின் கவித்துவ கேந்திரம்,சில வேளைகளில் போதைப்பாங்கான இன்மையாய்,தளமாய், திறந்த முடிப்பின் மன உணர்வாய் அமைகின்றது. இக்கட்டத்தில், இந்த உணர்வு, முதலும் முடிவுமற்ற உணர்வாய், ஏகத்துவத்தினை வெளிப்படுத்தும் கவிதைகளாய்க் கிடைக்கின்றன.

இரண்டு கவிதைகளை உதாரணத்திற்குத் தருகிறேன்.

தக்ஷிணாமூர்த்தியான

‘மாமிசம் தின்னாமல்

சுருட்டு பிடிக்காமல்

பட்டை யடிக்காமல்

படையல் கேட்காமல்

உக்ரம் கொண்டு

சன்னதம் வந்தாடும்

துடியான கருப்பசாமி

இடையில் நெடுங்காலம்

கொடை வராதது பொறாமல்

பதினெட்டாம்படி விட்டிறங்கி

ஊர் ஊராகச் சுற்றியலைந்து

மனிதரும் வாழ்க்கையும்

உலகமும் கண்டு தேறி

அமைதி கவிய

திரும்பி வந்தமரும்

கடந்தகால கைத்த நினைவுகள் வருத்தவும்

எதிர்கால நிச்சயமின்மை உறுத்தவும்.”                          (‘ஆகாசம் நீல நிறம்)

என்ற கவிதையில், முதலும் முடிவுமற்ற உணர்வு கவிதை யாகிறது. பதினெட்டாம் படி விட்டிறங்கி, ஊர் ஊராகச் சுற்றி அலைந்து, மனிதரையும் வாழ்க்கையையும் (இதுவரை கருப்பசாமிக்கு மனிதரும் வாழ்க்கையும் தெரியவில்லை யாம்.) கண்டு தேறி, தற்காலத்தின் அமைதி கவிய வந்து அமர்கிறது. அந்த அமர்தல் என்பது,

‘சும்மா இரு

சும்மா இரு.’

என்று சொல்ல வைக்கிறது. இதே சும்மா இருத்தல் நிலைதான், கீழ்வரும் கவிதையின் மைய ஆக்கமாக அமைகிறது.

‘பாமரன்

பாடுபடுகிறான்

மேஸ்திரி

வேலை வாங்குகிறாள்

மேலாளன்

நிர்வாகம் செய்கிறான்

முதலாளி

லாபம் சம்பாதிக்கிறான்

பொதுவில்

காய்கிறான் சூரியன்

பொதுவாகப்

பெய்யவும் பெய்கிறது மழை’                          (‘உள்வாங்கும் உலகம்)

என்ற கவிதையில் சுவிஞன் எதையும் வலியுறுத்தவில்லை, விமர்சிக்கவில்லை, வேண்டவில்லை, கண்டிக்கவில்லை என்பது மிக முக்கியமாகும். ஒவ்வொன்றும் “சும்மா இருக்கிறவைகளாக, அதன் சுயத்தில் தம்மை வைப்பவைகளாக விளக்கப்படுகின்றன. இது கிழக்கத்திய மதங்களின், தத்துவங்களின் சாரம். தாயுமானவருக்கும் ‘ஸென்’ மாஸ்டருக்கும் பொதுவானது. இதனை, தாவோ (Tao) என்றால் என்ன என்று கேட்டதற்கு, ‘ஸென்’ மாஸ்டர் சொன்ன பதில் மூலம் அறியலாம்: “அயர்வு வருகையில் தூங்குகிறேன், பசி வருகையில் உண்கிறேன். இதுதான் தாவோ.” இந்தக் கிழக்கத்திய மனநிலை, விக்ரமாதித்யன் கவிதைகளின் முக்கிய அடிப்படையாகிறது.

இவ்வாறு இருமையின் பல்வேறு ரூபங்கள் விக்ரமாதித்யனின் கவிதைகளாகின்றன. அதுபோலவே, இருமை ஏற்படுத்துகிற இன்மையும், முடிப்பற்ற நிலையும், தள சிருஷ்டியும், தாவோ நிலையும்கூட அந்த இருமையின் தீவிரத்துவம் ஏற்படுத்திய உருமாற்ற வெளியீடுகள்தான் (expressions of the transforme binarism) என்று இக்கட்டுரையில் விளக்குகிறேன்.

இந்த வகையில் நகர் சார்ந்த புதுக்கவிதை இயக்கத்தின் வீச்சில் பாதிக்கப்பட்டு எழுத ஆரம்பித்த விக்ரமாதித்யன், உடனேயே கிராம தெய்வத்தின் மௌனம் போன்ற ஒரு உக்ரத்தைக் கண்டடைகிறார். அந்த உக்ரம், இருமையாகவும், இன்மையாகவும் (தளமாகவும்) இருப்பதை உணர்ந்துள்ளார். அந்த இரு நிலையும் மொழியின் (lingustic) வெளிப்பட்ட மற்றும் வெளிப்படா தன்மை என்று இக்கட்டுரையில் விளக்கியுள்ளேன். இப்படி விளக்குவதன் மூலம், இவரது அதீத கவிதையாற்றல் கிழக்கத்திய தத்துவ மரபின் அடியாழங்களில் சஞ்சரிப்பதை மிக வசதியாக விளக்க முடிகிறது.

இந்த மதாதீதமான சஞ்சரிப்பு, ஒரு சுத்திமீது நடப்பது போன்ற விஷயமாகும். சற்றுத் தப்பினாலும், சறுக்கல் நிச்சயம் உதாரணத்துக்கு, ‘உதயம்’. என்ற கவிதையின் தோல்வி. எனவே, விக்ரமாதித்யன் கவிதை, வழக்கமான பக்திக் கவிதையும் அல்ல என்பதை எல்லோரும் நினைக்க வேண்டும்.

உதயம்

(கருக்கிருட்டின் திரைகிழித்து

விடியலின் சுடர்சுமந்து

வருகிறது உதயம்

உதயம் வரும் வழியெல்லாம்

ஒளிவெள்ளம்

உயிர்வெள்ளம்

உதயம்

ஜோதியின் தனிவடிவோ

சக்தியின் மேனிச்சாயலோ

சிவத்தின் உருநிழலோ.)

7

இறுதியாக, இக்கட்டுரையை ஆரம்பித்த இடத்திற்கே வருகிறேன்.

மொழியின் ஒலியின் குணத்தைக் கண்டுபிடிக்க, மொழியியல்வாதிகள் ஒரு இருமை எதிர்வு என்ற கோட்பாட்டை மையமாக வைத்துள்ளார்கள். அதுபோல, மொழியின் அர்த்தத்துக்கும் சப்தத்துக்குமுள்ள தொடர்பை அறிய சில வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளனர். அதில் நான், நீ, அது, இது போன்ற சொற்கள் (Index) முக்கியம் என்கிறார்கள். அதாவது, பறத்தல் என்ற சொல் பறவை பறப்பதையும் குறிக்கும்; பட்டம் பறப்பதையும் குறிக்கும். அந்த வகையில் ஒரு மயக்கம் இருக்கிறது. நான், நீ, அது, இது போன்ற சொற்களில் எப்போதும் அந்த மயக்கம் இல்லை. நான் என்ற சொல்லுக்குப் பின்னால், ஒரு மனித உயிர் இருப்பதைத்தான். எப்போதும் அர்த்தப்படுத்துவோம். நீ என்ற சொல்லும், ஒரு மனித உயிருக்கு முன்னால் இருக்கும் ஏதோ ஒன்றை அல்லது ஒருவரைத்தான் அர்த்தப்படுத்தும். அதாவது, நான், நீ என்ற சொற்களையும், அதுபோன்ற சில சொற்களையும் சொல்ல ஒரு மனித உயிர் வேண்டும்.

இவ்வகையில் நான் × நீ (I x Thou) என்ற இருமை எதிர்வு, இவர் கவிதைகளுக்கு அடிப்படை பிறப்பு ஸ்தானம் என்று சொன்னால் தப்பில்லை.

“உன்

மேய்ச்சல் நிலத்தில்

நானும்

என் மேய்ச்சல் நிலத்தில்

 நீயும்

எப்படி முடியும்

மேய…..                              (‘ஆகாசம் நீல நிறம்’)

என்ற கவிதையில் வெளிப்பட்ட நான் x நீ இரு குறிகளாய் எதிர்வு கொண்டு, அவற்றின் சமிக்ஞைகளான கருத்தாக் ங்களாய் அதன்பின் உருவம் மாறி எதிர்வு கொண்ட ஒரு நீண்ட -யணத்தை விக்ரமாதித்யனில் காண்கிறோம். இப்படிப்பட்ட ரு விளக்கம், உரையாசிரியர்களின் மொழியடிப்படை விமர்சன யக்கத்தை ஒரு நவீன இலக்கிய விமர்சனத்துக்குத் தக்கதாய் ளர்க்கும் முயற்சிக்குக் கால்கோள் இடுவதாகும்.

நன்றி- தமிழவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *