ஆங்கிலேயர்களின் உண்மையான வாரிசுகள் என்று தமிழர்களைச் சொல்வது சரியென்றே தோன்றுகிறது. எதையும் விலைபேசிவிட அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அரசியல் பதவிகள், உத்யோகங்கள்,கல்வி இவற்றை மட்டும் அல்ல இலக்கியத்தையும் விலைகூறி மலிவாக்கி சந்தைக்குக் கொண்டுவந்து விடுகிறார்கள். நாவல் கலை,தொடர்கதைக் குப்பையாக விலைபோகிறது. தொடர்கதைக் குப்பைகள் மாதாந்திர நாவல்களாக விலைபோகின்றன. ஒரு காலத்தில் கவிதை விலைமதிக்க முடியாத மணியாக இருந்திருக்கலாம். இப்போது கவிதைகள் பத்திரிகைத்துணுக்குகளாக, சினிமா பாட்டுகளாக விலை போகின்றன. சிலருக்கும் புகழ்சேர்க்க உபயோகப்படுகின்றன.
விக்ரமாதித்யனின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் ஏற்கனவே வெளி வந்திருக்கின்றன. இப்போது வெளிவந்துள்ளது மூன்றாவது தொகுப்பு. இதில் ஒரு கலை முதிர்ச்சியுடன் சொல்லில் ஒரு லாவகமும் இருப்பதுபோல எனக்குப் படுகிறது. ஒரு முழுமையான பார்வையும் அவரது சிறுசிறு கவிதைகளிலும்கூட பளிச்சென்று இடம்பெறுகின்றது என்பதும் தெரிகிறது.
விக்ரமாதித்யனின் “உள்வாங்கும் உலகம்” உண்மையிலேயே உலகமாகவும் இருக்கிறது, உள்வாங்குவதாகவும் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. “புத்திக்கும் மனசுக்கும் இதுதான் சரி என்று பட்டுப்பட்டு அனுபவங்களையும் உணர்வுகளையும் சொல்வதே கவிதை“ என்பது இந்தக் கவியின் கோட்பாடு என்று முன்னுரை எழுதிய திருமேனி குறிப்பிடுகிறார்.
“உள்வாங்கும் உலகம்” என்னும் ஐந்து பக்கம் நீண்ட கவிதை, இருபது சிறுசிறு பகுதிகளால் ஆனது. ஒரு பகுதியும் ஆறு வரிகளுக்கு மேல் இல்லை. புதுக்கவிதையில் முடிச்சுகள் அதிகம், புரிவதில்லை என்று கூறுகிறவர்களுக்கு சவால் விடுவது போலவே புரியாத விஷயம் என்று சொல்ல எதுவுமில்லாமல் இது அமைந்திருக்கிறது. கவியின் பார்வை மிகவும் தெளிவாகவே விழுகிறது.
“துாரத்திலிருந்து
பார்க்கும்போது
அழகாகத்தான்
இருக்கிறது ஊர்”
என்றும்
“வானத்தில்
நிறைய நட்சத்திரங்கள்
பூமி எதிர்பார்த்திருப்பது
மழை”
என்றும்
“பெரிய
வித்தியாசமொன்றுமில்லை அடிப்படையில்
தீப்பெட்டிப் படம்
சேகரித்துக்கொண்டிருக்கிறான் என் மகன்
கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறேன் நான்”
என்றும் எழுதக்கூடிய கவி விக்ரமாதித்யன்.
அவர் பார்வையில் ஒரு முழுமையும், ஒரு பயனின்மையும், தனித்துவமும் இருக்கிறது. இந்தக் கவிதைகள் மிகவும் சிறப்பான கவிதைகள். விக்கிரமாதித்யனை எத்தனைப் பாராட்டினாலும் தகும்.
—
நன்றி
அமரர் க.நா.சுப்ரமண்யம்