கம்பராமாயணம் முழுமையாக வாசிக்கக் தொடங்கி சென்று கொண்டிருக்கும் போது கவிஞர் விக்ரமாதித்யன் அண்ணாச்சியின் ஆகாசம் நீல நிறம் (முதல் தொகுப்பு) துவங்கி அவரது கவிதைகளை முழுமையாக வாசிக்க நேர்வது ஒருவித உவகையளிக்கிறது. கவிஞர் விக்ரமாதித்யன் அவர்கள் விஷ்ணுபுரம் விருது பெற்ற போது அவரது கவிதைகள் குறித்து அவரது ஆளுமை குறித்து தமிழின் முதன்மை எழுத்தாளுமைகளாலும் வாசகர்களாலும் தீட்டப்பட்ட சித்திரம் மீண்டும் மனதில் எழுந்தது.
காவிய கர்த்தாவான கம்பர் தராசின் ஒரு தட்டில் இருக்கிறார் என்றால் அதன் மறுதட்டில் அமரக் கூடியவர்களுள் ஒருவராக அண்ணாச்சி இருக்கிறார் என்று தோன்றியது. கம்பனை அறிந்து ரசித்து, ஆழ்ந்து – பிறகு அவனை கேலியும் செய்யும் ஒரு தரப்பு. வெண்முரசில் அரச பெருவிழாவின் போது வரும் சார்வாகரைப் போல. கம்பனை கேலி செய்ய துணிவும் அதே சமயம் தகுதியும் கொண்ட தரப்பு. அண்ணாச்சி கம்பனை கேலி செய்தவரல்ல. சார்வாகரும் அல்ல.
கம்பருக்குரிய வானளாவிய சுதந்திரத்தை அண்ணாச்சியின் தன்னைத் தானே மட்டுப்படுத்திக் கொண்ட தன்மையுடன் ஒப்பிட்டுக் கொள்கிறேன். காவியத்துடன், காவிய கர்த்தாவுடன் மற்ற கவிஞர்களை ஒப்பிட்டு நோக்குவது சரியா என்றால் சில சமயம் சரிதான் என்பேன். காவியங்கள் பெரும் கனவுகள். அவை எப்போதும் இனியவையாகத் தான் இருக்க வேண்டும். காவியம் கைக்கொள்ளும் பெரும் துயரும் கூட இனியதே.
வரம்பு எலாம் முத்தம்; தத்தும்
மடை எலாம் பணிலம்; மா நீர்க்
குரம்பு எலாம் செம் பொன்; மேதிக்
குழி எலாம் கழுநீர்க் கொள்ளை;
பரம்பு எலாம் பவளம்; சாலிப்
பரப்பு எலாம் அன்னம்; பாங்கர்க்
கரம்பு எலாம் செந் தேன்; சந்தக்
கா எலாம் களி வண்டு ஈட்டம்.
கோசல நாட்டின் வளம் கூறும் கம்பரின் சொற்கள் – மேற்கண்ட பாக்களின் முன்னரும் பின்னுரும் யாவும் இனியவை. சொல்லிக் கொண்டே செல்ல செல்ல செல்ல…. இனிது இந்த வளமை, இனிது இதன் எழில், இனிது இவ்வண்ணம் சொற்கள், இனிது இந்த இசை.
ஏகாதசி
யாசகத்திற்கென்று
ஏழெட்டு வீடுகள் சென்று
இருந்த நிலையைப் பார்த்ததில்
திருவோட்டைத் தூக்கித்
தூர எறிந்தேன்
திரும்பி வருகையில்
(ஆகாசம் நீலநிறம் தொகுப்பு)
இக்கவிதை கூறும் யாசகர் யாசிக்கச் சென்ற ஏழெட்டு வீடுகள் கம்பரின் கோசல தேசத்தில் இருந்தது என்று சொல்லவும் நியாயமில்லை. எனினும் கோசலம் எங்கிருந்ததோ அதே பெருநிலத்தில் தான் இந்த வீடுகளும் இருந்தன/இருக்கின்றன. அன்றும் இன்றும் ஒன்றா என்பதற்கு அப்பாற்பட்டு என்றுமுள்ள ஒன்று தான் இதுவும்.
நாடினால் தான் வளம் தருவேன் என்று சொல்லும் நாடெல்லாம் ஒரு நாடே அல்ல என்று சொல்லும் திருவள்ளுவர் தான் பதறி உலகியற்றியோனை பரந்து கெடவும் சொல்கிறார். இரு வேறு தரப்புகளுக்கு இடையே தராசின் நடு முள் போல திருவள்ளுவர்.
பெரும் பஞ்சுப் பொதிகளை சிறு இரும்பின் எடை சமன் செய்வதைப் போல. கனவு இனிது, நிஜம் மறுக்கப்பட முடியாதது. கம்பர் எழில் வண்ணங்கள் மிகுந்த வானில் பறக்கிறார். நிலத்தையும் கூட வானிலேயே நிகழ்த்துகிறார். உணர்ச்சிக் கொந்தளிப்புகள் கூட அங்கே கனவை கலைப்பவை அல்ல. அந்த பட்டம் தரையில் விழுந்து விடாமல் சென்று கொண்டிருக்கிறது. பிறிதெண்ணாமல் தொடர சடையப்ப வள்ளல் என்னும் போற்றுதலுக்குரிய தோழமை அவருக்கு இருக்கிறது. எண்ணங்கள் எங்கு பறந்தாலும் தன் கால்கள் மண்ணில் இருப்பதை முற்றாக மறந்தவர் அல்ல கம்பர்.
பூமியில் கால் பாவாமல் மஹாகவியென இறுமாந்திருக்குமவன்
உச்சி வெயில் உறைக்கும் நேரம் மனிதனாவான் சமயத்துக்கு
என்கிறார் விக்ரமாதித்யன். அவர் குறிப்பிடும் மஹாகவி விக்ரமாதித்யனே தான். தன்னுள் மஹாகவி நிகழும் தருணங்களைப் பெறாத எந்த ஒரு உண்மைக் கவிஞனுமில்லை. தன் மஹாகவியை நிகழ அனுமதிப்பது ஒருவரது தனிப்பட்ட தெரிவு அல்லது சூழல் சார்ந்தது.
வாழ்க்கை
பறத்தல்
சந்தோஷமானது
ஆனால்
பட்டுப் பூச்சிகள்
மல்பரி இலைகளில் தூங்கும்
வாழ்க்கையின் மீதான பார்வையில் தோன்றும் கோண வேறுபாடுகள். கம்பர், தாகூர், பாரதி, விக்ரமாதித்யன் அண்ணாச்சி என்று. பாரதியின் அணியில் அண்ணாச்சியைக் காண்கிறேன். தாகூருக்கும் பாரதிக்குமான ஒப்பீட்டு விவாதங்கள் நடப்பதுண்டு. தனிப்பட்ட சூழலைக் காரணம் காட்டக் கூடாது என்று அதில் கூறப்படுவது உண்டு. உண்மையுடனான அணுக்கம் தாகூரை விட பாரதிக்கு அதிகம். பாரதி ஒரு பூசாரிக் கவிஞன். ரஷ்யா புரட்சியை வரவேற்கும் போதே அது சென்றடையப் போகும் முடிவையும் அப்போதே பார்த்துவிட்டவன். அது ஒரு வரம். அதுவே ஒரு இடையூறும். கூட.
சன்னதம் வந்து சாமியாடியாக பாரதி சொன்னதெல்லாம் பலித்தது. ஆனால் கவிஞனை அவன் கவிதைகளை வைத்துப் பேச வேண்டும் அவன் சாமியாடி குறி சொன்னதையெல்லாம் கொண்டுவரக் கூடாது எனில் இங்கு ”கவிஞன்” சாமியாடும் போது அதை கணக்கில் எடுக்கத் தான் வேண்டும் என்பேன் ஆதிகவி வான்மீகியிலிருந்து தொல்வேதங்கள் எனும் சொற்கள் எவரிடமெல்லாம் எழுந்ததோ அவர்கள் அனைவரும் அவ்வாறானவர்களே. அவர்கள் பெரும் கவிஞர்கள் என்பதை எவர் மறுக்க முடியும்?
கவிதை என்னும் சொற்கள் அதை வாசிப்பவன் அதிலிருந்து என்ன அடைகிறான், எங்கு சேர்கிறான் என்பதைப் பொறுத்தது. வீசப்பட்ட கயிற்றைப் போல சொற்களைப் பற்றி சென்று விட முடியுமென்றால் அங்கு வாசிப்பவனும் கவிஞனும் வேறல்லவே.
வெளிப்படையாக கவிதை அதிகம் துலங்கும் காமத்துப் பாலை விட்டுவிட்டு அறத்துப்பாலையும் பொருட்பாலையும் கொண்டு பார்த்தாலும் திருவள்ளுவர் நீதி நூல் உரைத்த பெரியோரும் சான்றோரும் முனிவரும் மட்டுமல்ல…மாபெரும் கவிஞரும் கூட. எவர் மறுக்க முடியும்?
பெரும் காவியம் எதுவும் எழுதாததனால் திருவள்ளுவர் என்கிற பெரும் கவிஞரை கவிதைத்துறை தவிர்க்க முடியுமா? ”கம்பனைப் போல், வள்ளுவன் போல், இளங்கோவைப் போல்” என்ற பாரதியின் வைப்பு முறை ஒன்று, இரண்டு, மூன்று என்ற தர வரிசை என்பதல்ல. கம்பனையும் இளங்கோவையும் நிறுத்துச் சொல்லும் – முன் சொன்ன தராசின் முள்ளைப் போல நடுவே உயர்ந்து நிற்கிறார் திருவள்ளுவர். மாபெரும் கவிஞனான கம்பரைக் கேட்டால் அவர் சொல்வார் அவரது கவிதை திருவள்ளுவரிடம் இருந்து பெற்றுக் கொண்டது என்னவெல்லாம் என்று.
இதெல்லாம் ஏன் என்றால் இதற்கு முன்பு சித்தராய் பக்தராய் கணியன் பூங்குன்றனாய் இதன் முன் நிகழ்ந்த விக்ரமாதித்யன் அண்ணாச்சிகளை எல்லாம் கருதி அங்கிருந்து கருத வேண்டும் என்பதால் தான்.
மேற்சொன்னபடி, கம்பரின் கோசல நாட்டு காட்சி விவரிப்பு. அவர் விவரிப்பு முற்றிலும் கற்பனை என்றல்ல. அப்படி இனிதின் காட்சி கொண்ட நாடு இருக்கவே இருந்தது, உண்மை. வேண்டுமானால் கம்பர் மிகைப்படுத்தினார். அது காவிய இயல்பு.
வெறுமை
தேரோடும் வீதியிலே
தினம் தினமும்
நாய்களும் பன்றிகளும்
எருமை மாடுகளும்
மொட்டை வண்டிகளும்
இரவு வேளைகளில்
தடிக் கழுதைகளும்
எப்பவுமே
ரசனைகெட்ட மனிதர்களும்
போவது வருவதை
பார்த்துச் சலித்துப்
பல வருஷமாச்சு
வெறுமை தரும் சலிப்பூட்டும் காட்சி. ஆனால் இதன் நிஜத்தை மிகைத்தாலும், நிஜத்திற்கு தொடர்பே இல்லாமல் போனாலும் நன்றாக இருக்காது. இது கூறப்பட வேண்டும். கற்பனை ஊருக்கு போய் செட்டில் ஆக மாட்டேன் இந்த நிஜத்தில் தான் இருப்பேன் என்னும் கவிஞரை என்ன செய்வது?
விகசிப்பு
தோடுகளில்லாக் காதில்
கரிகுழல் இழையவிட்டு
தாய் உடுத்திக் கிழத்த சேலையை
தன் தாவணியாக்கி
அந்தரங்க சோகம்
விழிகளில் ஒளிந்திருக்க
வெற்றுப் பாதங்களொடு
நித்தமும் என்
வாசல் வீடு கடந்து செல்லும் அவளில்
காதலுற்றதில்
முன் அந்திக் கருக்கலில்
பூத்து வரும்
நட்சத்திர மஞ்சரி போல
ஆயிரம் கவிதைகள் மனசுக்குள்
காதல் காதலியைப் பொருத்ததல்ல காதலிப்பவனின் இயல்பைப் பொறுத்தது. கருணை இயல்பினர் உள்ளம் கொள்ளும் காதல் ஒருவகை, ஒவ்வொரு இயல்பினருக்கும் ஒருவகை.
வானிலிருந்து மண் அல்ல மண்ணில் இருந்து விண்.
இப்படித்தான் எதுவும்
”எதுவும் முக்கியமில்லை”
“எல்லாமே முக்கியம்தாம்”
“இரண்டும் ஒரு குரலா இது எப்படி”
“சாத்யம்தான்
சந்தர்ப்ப சூழ்நிலையைப் பொருத்தது”
“பசி நேரத்தில்தான் உணவு
பிறகு?”
“தகை வந்தால்தான் தண்ணீர்
அப்புறம்?”
“இல்லாத காலத்தில்தான் செல்வம்
பிற்பாடு?
“புரிகிறதா எதுவும் இப்படித்தான்”
பாரதியும் அண்ணாச்சி போலத் தான் என்பது இப்படித் தான். பாரதி அப்படி கஷ்டப்பட்டார் இப்படி கஷ்டப்பட்டார் என்று யார் யாரோ பேச, அப்படியெல்லாம் இல்லை அவர் போல மகிழ்ந்திருந்த ஆள் அவர் காலத்தில் இல்லை என்னும் அளவில் இன்னொரு பாரதியும் இருந்தார். அந்த பாரதியும் உண்மை தான். ஆனந்த ராமனை விட்டு ஆனந்தம் ஒரு கணமும் விலகியதே இல்லை. அவன் மனைவியைக் காட்டில் தொலைத்து விட்டுத் தேடி கண்ணீர் விட்டதும் உண்மை.
அதே சமயம்,
ஆறு
வற்றிப் போகலாகாது
அரசு
பிழைகள் இழைக்கலாகாது
வான்மழை
பொய்க்கலாகாது
வள்ளல்கள்
கை சுருங்கலாகாது
பஞ்சமாபாதகங்களுக்கு
பின்னேயுள்ளது என்னவாம்
பசியும் பட்டினியும்தான்
தோழர்களே
இலக்கியத்தின் அடிப்படையே
அனுபவமும் உணர்வும்தான்
பின்நவீனத்துவ பண்டிதர்களே
கூறத்தான் வேண்டும்.
வியக்கிறேன். அறத்தை விலக்கம் செய்து கொண்ட, கருணையை விலக்கிக் கொண்ட ஒரு கவிஞர் கூட இல்லை. அவையில்லாமல் எப்படி ஒருவன் கவிஞன் ஆக முடியும்? அழகை, ஆசையை, சுகத்தை, இனிமை மட்டும் வைத்துக் கொண்டு……அவையில்லாமல் அவையும் கூட எப்படி?
தன் குழந்தையின் மென்மையில், மழலையில், அழகில் திளைத்து அதை கவிதை எழுதும் ஒருவன் எல்லாக் குழந்தைகளையும் தன் குழந்தைகளாக கருதும் உள்ளம் கொண்டவனாக இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் அவன் சூடோ கவிஞன். அருள் இல்லாதவன் போலிக் கவிஞன்.
இயற்கையின் திருமுன்
அருவி
அங்கேயேதான் விழுந்துகொண்டிருக்கிறது
ஆறு
அப்படியேதான் ஓடிக்கொண்டிருக்கிறது (அபூர்வமாய் பாதை மாறுவது வேறு)
கடல்
அன்று கண்டது போலவே
காடுகள்
அந்தந்த இடத்திலேயே
மலைகள்
அப்படியப்படியேதாம் (ஆயிரமாயிரம் வருஷங்களுக்கு முன்பான கதை தனி)
மனிதர்கள் வீடு மாறுகிறார்கள்
ஊர் மாறுகிறார்கள்
வேலை மாறுகிறார்கள்
மனம் மாறுகிறார்கள்
குடிபெயர்கிறார்கள்
புலம் பெயர்கிறார்கள்
என்ன சொல்ல வருகிறாய் விக்கி
இயற்கையே பெரிதென்றுதான் அமர்
இயற்கையின் சந்நிதானத்தில் மானுடம் சிறிதென்றுதான் பூர்ணா
இயற்கையின் சந்நிதானத்தில் விக்கிரமாதித்தன் அண்ணாச்சிக்கு என் வணக்கங்கள்.