எழுபதுகளின் பிற்பகுதியில் மதுரை நகரப் பேருந்து நிலையக்கடையொன்றில், மட்டமான தாளில் அச்சடிக்கட்டிருந்த “விழிகள்“ பத்திரிகையை வாங்கிப் புரட்டினேன். அதில் வெளியாகியிருந்த, “கரடி சைக்கிள் விடும்போதும் நாம் வாழ்க்கையை அர்த்தப்படுத்த முடியாதா?” என்று முடியும் கவிதை எனக்குப் பிடித்திருந்தது, எஸ்.வைத்தீஸ்வரன், நாரணோ ஜெயராமன், சி.மணி, பிரமிள் போன்றோரின் இறுக்கமான கவிதைகளுக்கிடையில், விக்ரமாதித்யனின் அந்த நெகிழ்வான வரிகள் வித்தியாசமாக இருந்தன. “விழிகள்“ இதழை நடத்திய மு.ராமசாமியிடம், “யார் இந்த விக்ரமாதித்யன்?” என்ற கேட்டேன். அவர், “யாருன்னு தெரியலை, கவிதை அனுப்பியிருந்தார். பிடிச்சிருந்தது. போட்டேன்” என்றார். அப்புறம் அவர் ஓரிரு ஆண்டுகளில் என்னைத் தேடி சமயநல்லுார் வந்ததும், அதனால் ஏற்பட்ட நட்பும், அனுபவங்களும் தனிக்கதை.
அன்னம் பதிப்பகம் வெளியிட்ட “நவ கவிதை” வரிசையில், விக்ரமாதித்யனின் “ஆகாசம் நீலநிறம்” கவிதைத் தொகுப்பு தனித்துவமானது. எளிய சொற்களில், சிடுக்குகள் அற்ற மொழிநடையில் எழுதப்பட்டிருந்த கவிதைகள் வாசிப்பில் நெருக்கத்தை ஏற்படுத்தின. அன்றைய காலகட்டத்தில், மைய நீரோட்டத்தில் இணைய முடியாத நிலையையும், அதனால் நொம்பலமாகும் மனிதனையும் சித்திரித்த கவிதைகள் பலரைக் கவர்ந்தன. வாசகரை முன்னிறுத்தி, கவிதைகளின் வழியாக விக்ரமாதித்யன் நிகழ்த்திய சொல்லாடல்கள், புதிய போக்கினை அறிமுகப்படுத்தின. நவீனத் தமிழ்க்கவிதையில் அவருடைய இடத்தினை உறுதிப்படுத்தின. அவருடைய இரண்டாவது தொகுப்பான “ஊருங்காலம்” மிகவும் வெளிப்படையாகக் கருத்தை முன்னிறுத்தியது. சொற்கள் தேர்வில் அக்கறையில்லாமல், மொழியின் மீது ஆளுமையற்று எழுதப்பட்டிருந்த கவிதைகள் வாசிப்பல் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. விக்ரமாதித்யனின் முதல் தொகுப்பின் மீதான கவனத்துடன், அவரைக் கவிஞராகக் கொண்டாடிய என்னைப் போன்றோர், “ஊருங்காலம்” வெளியானவுடன் நேரில் சொன்ன விமர்சனங்களை அவர் புறக்கணித்தார். தொடர்ந்து பல்வேறு இதழ்களில் அவர் எழுதிய கவிதைகள் பிரசுமாயின. அதிக அளவில் கவிதை எழுதுகிறவராக அவரை அடையாளப்படுத்தின. அவர் தனக்கெனத் தனித்த பாணியில் எழுதிய கவிதைகள், இளம் வாசகர்களைக் கவந்தன. கவிதை என்பது “கம்ப சித்திரம்” என்ற கட்டமைப்பசை் சிதைத்து, எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று அறிமுகப்படுத்திய எளிய கவிதை வரிகளைப் பின்பற்றிக் கவிஞர்கள் சிலர் உருவாகினர். இரண்டாயிரமாண்டுப் பாரம்பரியமான தமிழ்க்கவிதைப் பரப்பில் அருவி, சிவன், அம்மன், கொலுசு, பத்தினி…எனக் கவிதை மூலம் விக்ரமாதித்யன் சித்தரித்தது புதிய போக்குதான். எனினும் தொடர்ந்து அதேமுறையில் எழுதப்பட்ட கவிதைகள் தீவிரமான வாசகருக்கு ஆயாசத்தை ஏற்படுத்தின.
எண்பதுகளின் நடுவில், “மகாகவி“யாகத் தன்னைக் கருதிய விக்ரமாதித்யனின் கனவில் அர்த்தமிருந்தது. ஏனெனில், அன்று படைப்பாளர்கள் எல்லோருக்கும் ஏதோ ஒரு லட்சியம், அடைய வேண்டிய இலக்காக இருந்தது. கவிதைகளின் மூலம் தமிழகமெங்கும் பரவலாக நண்பர்களைப் பெற்று, “மகாகவி“யாக வலம்வந்த விக்ரமாதித்யன் தனது நடவடிக்கைகள் மூலம் தனித்து விளங்கினார். இந்நிலையில் தொண்ணுாறுகளில் தொடங்கிய நவீன கவிதைப்போக்கு, தமிழில் பெரும் பாய்ச்சலாக வெளிப்பட்டது. புதிது புதிதான இசங்களின் அறிமுகமானது, புதிய வகைப்பட்ட கவிஞர்களைத் தமிழுக்கு அடையாளங்காட்டியது. பெண் கவிஞர்களும், தலித்தியக் கவிஞர்களும் தங்களுக்கென உருவாக்கிய புதிய மொழியில் எழுதிய கவிதைகள் சூழலில் அதிர்வை ஏற்படுத்தின. மொழியின் அதிகபட்ச சாத்தியப்பாடுகளைச் செறிவாகக்கொண்டு புனையப்பட்ட கவிதைகள் நவீன கவிதைப் போக்கினைத் தீர்மானித்தன. இத்தகு சூழலிலும் விக்ரமாதித்யன் அவருடைய வழமையிலிருந்து மாறாமல் தொடர்ந்து கவிதைகள் எழுதிக்கொண்டிக்கிறார். அவருடைய கவிதைகளை மதிப்பிட வழமையான அளவுகோல்கள் போதாது. புதிய வகைப்பட்ட விமர்சன அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன.
கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாகப் படைப்புலகில் தீவிரமாக இயங்கிவரும் மூத்த படைப்பாளியான விக்ரமாதித்யன், அவ்வப்போது புனைகதை, கட்டுரைகள் எழுதினாலும் அவர் கவிஞர் என்றே அறியப்படுகின்றார். புதுக்கவிதை மூலவரான ந.பிச்சமூர்த்தியின் மரபில் வந்தவரான விக்ரமாதித்யன், “பக்தி இலக்கியம்“ மீது பற்று கொண்டவர். எல்லாருடனும் சாதி வேறுபாடு இல்லாமல் பழகும் அவருக்குக் கவிதை என்பது உயர்சாதிக்கார்களுக்கு மட்டுமேகைவரக் கூடிய “புனித வஸ்து“ என்ற அபிப்ராயமுண்டு. தாமிரபரணி ஆறு, திருநெல்வேலி, சைவ உணவு, தேவாரம், பிள்ளைமார் வீட்டு வளவு போன்றவற்றை உன்னதம் என்று கருதுகின்ற சைவப் பிள்ளைமார்த்தனம் அவருக்குள் ஆழமாகப் பொதிந்துள்ளது. மதம் என்ற ரீதியில் சைவம் ஏற்படுத்திய கொடூரங்களையோ, சம்பந்தரும் நாவுக்கரசரும் தேவாரப் பதிகங்களில் பதிவாக்கியுள்ள வன்முறைகளையோ மறந்துவிட்டு, அவற்றைத் தமிழரின் அடையாளமாகத் துாக்கிப்பிடிப்பது, அவருடைய சாதிய ஈடுபாட்டின் வெளிப்பாடு அன்றி வேறு என்ன? அவர் மரபின் வேர்கள் என்று கவிதைகளில் மூலம் விதைக்கும் கனவு, சைவசித்தாந்தப் பின்புலமுடையது.
பொதுவாக விக்ரமாதித்யனின் கவிதைப் பரப்பு, அன்றாடக் காட்சிகளைப் பதிவாக்க முயலுகின்றது. ஓய்வாக அல்லது குழப்பத்துடன் இயங்கிடும் மனித மனத்தில் பளீரிடும் எண்ணங்களைச் சொற்களாக மாற்றுகின்றது. ஆனால், கவிதைக்குச் சொற்சிக்கனம் அடிப்படையானது என்பதை மறந்திட்ட கவிஞர். இஷ்டம் போலச் சொற்களின் வழியே பயணிக்கிறார். விரல்களின் இடுக்கில் கசிந்திடும் சொற்களின்மீது எவ்விதமான ஆளுமையும் இல்லாமல் பயன்படுத்துகிறார். சங்கக்கவிதை முதலாகக் கவிதையின் தொழில்நுட்பம் குறித்து அறிந்திருந்தும், விக்ரமாதித்யன் தனது கவிதையாக்கத்தில், எவ்வதமான தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த மறுப்பது ஆய்விற்குரியது.
விக்ரமாதித்யனுக்குக் கவிதையின் பாடுபொருள், வடிவம், செய்நேர்த்தி குறித்துப் பெரிய அக்கறை எதுவுமில்லை. தான் ஒரு செம்மாந்த நிலையில் அல்லது பித்து மனநிலையில் போதமற்று எழுதிக் குவிக்கின்றார். கவிதை எழுதுவது என்பது அவரைப் பொறுத்தவரையில் புகைப்பதும் குடிப்பதும் புணர்வதும் போலத்தான். இன்னும் சொன்னால், சுவாசிப்பது போன்றதாகும். அவர்மீது வன்முறை செலுத்த வேண்டுமெனில், கவிதை எழுதக்கூடாது என்று தடைவிதிக்க வேண்டும். வாழ்க்கையின் நல்லது, கெட்டது பற்றி நன்கறிந்தும் தன் இஷ்டம் போல வாழ்வேன் என அவர் தேர்ந்தெடுத்த வாழ்க்கையைப் போலவே அவருக்குக் கவிதையும் உள்ளது. எனவேதான் கவிதைப் பற்றிய நண்பர்களின் விமர்சனங்களையும், ஆலோசனைகளையும் செவிமடுக்கத் தயாராக அவர் இல்லை.
கவிதை எழுதுதல். கவிதையை நகலெடுத்தல், ஏதோ ஒரு சிறுபத்திரிகைக்கு அனுப்புதல், அது எப்பொழுது வெளியாகும் எனக் காத்திருத்தல், ஒருகால் அப்பத்திரிகை நிறுத்தப்பட்டுவிட்டால், வேறு பத்திரிகைக்கு அதே கவிதையை அனுப்புதல்.. என்ற விக்ரமாதித்யனின் பௌதிக முயற்சிகள் கடுமையான உழைப்பின் அடிப்படையிலானவை. தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையிலிருந்து நான்கைந்து இளைஞர்களால் நடத்தப் பெறும் குட்டியூண்டு பத்திரிகைக்குக்கூட “வித்தியாசம்“ பார்க்காமல் கவிதைகள் அனுப்பும் ஒரே மூத்த கவிஞர் விக்ரமாதித்யனாகத்தான் இருப்பார். கவிதைகள் எழுதி அனுப்புவதன் மூலம் தன்னுடைய பொருளியல் வாழ்க்கைக்கு எந்தப் பயனும் கிடைக்காது என்று அறிந்தும், அவர் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கிறார். அவரைக் கவிதைப் பிசாசு பிடித்துள்ளது என்றுதான் கருத வேண்டியுள்ளது.
உ.வே.சா.வின் ஆசிரியரான மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஓர் ஊரில் தங்கியிருந்து. ஓரிரு மாதங்களுக்குள் ஆயிரக்கணக்கான செய்யுள்கள் அடங்கிய புராணம் இயற்றுமளவு வல்லமை பெற்றிருந்தார். அவரைப் போன்று புலவர்கள், தமிழ்க்கவிதை மரபில் எல்லாக் காலகட்டத்திலும் செல்வாக்குடன் விளங்கினர். இருபதாம் நுாற்றாண்டிலும் “ஆசுகவி“ எனக் கவிதைமழை பொழியும் கவிஞர்கள் தமிழகத்தில் வாழ்ந்தனர். இத்தகைய கவிராயர்கள், ஊர் ஊராகச் சென்று பாடல்கள் பாடிய சங்ககாலப் பாணர் மரபின் வழித்தோன்றல்கள் ஆவர். “தனிப்பாடல்“பாடிய புலவர்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களை ஆராய்ந்தால், அவர்கள் ஊர்கள்தோறும் அலைந்து திரிந்து வாழ்ந்ததை அறிய முடியும். புலவர் என்று தன்னை அடையாளம் காணும் நிலையில், வேறு தொழில்கள் எதுவும் செய்யாமல், எப்பொழுதும் பாடல் எழுதும் மனநிலையுடன் அலைந்து திரிதல் என்பது புலவர்களுக்கே உரியதாகும். “எத்திசை செலினும் அத்திசைச் சோறே” என்ற வார்த்தைகள் வெறுமனே வீராப்புக் கருதிச் சொல்லப்படடவை அல்ல. புலமைச் செருக்குடன் திமிராகச் சொல்லப்படவை. இத்தகைய கவிராயர்களுக்குத் தமிழ்ச் சமூகத்தில் பெரும் மரியாதை இருந்தது. கவிஞர் விக்ரமாதித்யனைக் கவிராயர் மரபில் வந்தவராகத்தான் கருத வேண்டியுள்ளது. நாடோடி போலப் புலப் பெயர்ந்து கொண்டிருப்பதுடன், கவிதைகளைத் தனது அடையாளமாகக் கொண்டிருப்பவரை வேறு எப்படிக் குறிப்பிடவியலும்?
விக்ரமாதித்யன் தனது முதல் தொகுப்பில் எழுதிய கவிதைகள மீண்டும் மீண்டும் நகலெடுக்கிறார் என்று அவர்மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. யோசிக்கும் வேளையில், கவிராயர் மரபில் வந்த அவரால் வேறு எப்படிச் செயற்பட முடியும்? பொருளியல் ரீதியில் தனது இருப்பைத் தீர்மானிக்க முடியாத அவலமும், சுய இரக்கமும் தனி மனிதப் புலம்பல்களாக அவருடைய கவிதைகளில் தொடர்ந்து இடம் பெறுவது தற்செயலானது அல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பொதிகைமலை உச்சியிலிருந்து கொட்டுகின்ற அருவிக்கும் விக்ரமாதித்யனுக்கும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை. அன்றாட வாழ்வின் கசப்புகள், கொண்டாட்டங்கள், துக்கங்கள், பெருமிதங்கள் போன்றவை அவருக்குள் ஏற்படுத்திய உணர்வுகள் அப்படியே கவிதை வரிகளாக வெளிப்படுகின்றன. கவிதைகள் மூலம் அவர் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் என்று எதுவுமில்லை. கவிதையைப் பூடகமாக்கி மர்மப்படுத்துதல், திருகப்பட்ட மொழியின் மூலம் ஏதோ ஒன்று கவிதைக்குள் இருப்பதாகப் பம்மாத்துப் பண்ணுதல், எல்லாம் தெரிந்தது போன்று பாசாங்கு செய்து, கவிதையைத் தத்துவ வாகனமாக மாற்றுதல்.. போன்றவை அவருடைய கவிதையாக்கத்தில் இல்லை என்பதையும் இங்குப் பதிவு செய்ய வேண்டியுள்ளது.
பாலைநிவலன் ,யவனகா ஸ்ரீராம், லஷ்மி மணிவண்ணன், கைலாஷ்சிவன், பிரான்சிஸ் கிருபா, ஷங்கர ராமசுப்ரமணியன் போன்ற முக்கியமான கவிஞர்களைப் பற்றியெழுதி “ப்ரமோட்“ செய்யும் விக்ரமாதித்யனுக்கு நவீன கவிதையின் சூட்சுமங்கள் நன்கு தெரியும். மொழியை நுணுக்கமாகக் கையாளும் திறன் பெற்றுள்ளவர், கவிதையாக்கத்தில் ஏன் சோதனை முயற்சியில் ஈடுபடவில்லை என்பது முக்கியமான கேள்வி. அவர் தனது இருப்பினைக் கவிதையின் மூலம் விசாரிக்க மட்டும் முயலுகின்றார். எழுபதுகளில் கிராமத்து மந்தை/சாவடியில் உட்கார்ந்து விட்டேத்தியாகப் பேசிக்கொண்டிருக்கும் கிராமத்தினரின் மனத்தடைகளற்ற பேச்சுகள் போல, விக்ரமாதித்யனின் கவிதைகளின் பரப்பும் விரிந்து கொண்டேயிருக்கின்றது. சுருங்கக்கூறின், மரபான கவிதை சொல்லியாக வெளிப்படும் விக்ரமாதித்யனின் படைப்புலகு, மரபிற்குள்ளேயே தோய்ந்துள்ளது. தேங்கியுள்ளது.
அண்மைக்காலத்தில் விக்ரமாதித்யன் எழுதியுள்ள கவிதைகளின் தொகுப்பான, “வியாழக்கிழமையைத் தொலைத்தவன்“ நுாலினை நவீன கவிதை பற்றிக் கோட்பாட்டு ரீதியில் கட்டமைக்கப்படடுள்ள பிம்பங்களை ஒதுக்கிவிட்டு வாசித்துப் பார்க்க வேண்டுகிறேன். அவை உங்களுக்குள் புதிய அனுபவங்களை ஏற்படுத்தும். கவிஞர் விக்ரமாதித்யனோ, ஜெர்மன் நாவலாசிரியரான ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதியுள்ள “சித்தார்த்தா“ நாவலில் வரும் கோவிந்தன் போல, வாழ்க்கை எனும் ஆற்றங்கரையோரம் அமர்ந்து வெள்ளம் சுழித்தோடுவதை நிதானமாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
நன்றி
திரு.ந.முருகேசபாண்டியன்.
தலைப்பு இதழாசியர் இட்டது.