ஆரம்ப வாசகனாக ஒரு பழக்கம் என்னிடம் இருந்தது. ஒரு படைப்பாளியின் அத்தனைப் படைப்புகளையும் ஒரே கால கட்டத்தில் தொடர்ந்து வாசித்து முடிப்பது என. அந்நாட்களில் நான் அத்தக்கூலிக்கு வாழ்நாட்களைத் தொலைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் கண்களில் கொதி இருந்தது. ஐந்தாறு நுாலகங்களில் உறுப்பினர் ஆகி தெற்கேயும் வடக்கேயும் சைக்கிளில் அலைந்து திரிந்தது அதற்காகத்தான்.
அன்று இந்நாட்களின் வசதிகள் ஏதும் இல்லை. புத்தகங்கள் கிடைப்பதற்கு அரியனவாக இருந்தன. நேற்றுத்தான் விக்ரமாதித்யனின் அத்தனை நுாற்களையும் படைப்பு குழுமத்தில் இருந்து வாங்கினேன். என்னிடம் அண்ணாச்சியின் 37 நுாற்கள் கைவசம் உள்ளன. இனி அவற்றை வாசித்து தீரும் வரை –கற்றுத் தேரும் வரை- அண்ணாச்சியின் சொற்களின் உள்ளேதான் நீந்திக்கிடப்பது. சென்ற மாதங்களில் கலாப்ரியாவின் படைப்புகளோடு வாழ்ந்து கொண்டிருந்தேன்.
உண்மையில் ஒரு நீண்ட கால வாசகனாக இருப்பதன் அனுகூலம் இது. பெரும்படைப்பாளிகளை ஒரு சேர வாசித்து அவர்களின் உலகத்தை நாளும் பொழுதும் உள்வாங்கிக்கொள்வது. அது ஒன்றே அவர்களின் உண்மையான உலகத்தை அனுபவம் கொள்ள இருக்கும் ஒரே வாய்ப்பு. இதை விடுத்து அங்கொன்றும் இங்கொன்றுமாக – விமரிசகனின் பலமான பரிந்துரையைப் பின்பற்றிய போதும்- வாசிப்பது அரைகுறை ஞானந்தான். அல்லது குறைவு பட்ட வாசிப்புதான்.
இதுநாள் வரை நான் முழுக்க வாசித்து முடித்தவர்கள் யாரும் என்னை ஏமாற்றியிருக்கவில்லை. வாசிப்பதற்கு முன்பு இருந்து வந்த குறைபட்ட சித்திரங்கள் சிதைந்து முழுப்பரிமாணத்தையும் கண்டடைந்திருக்கிறேன். அசோகமித்ரனாக இருக்கட்டும், சுந்தர ராமசாமியாக அமையட்டும், நாஞ்சில் நாடனாக நிகழட்டும், கலாப்ரியாவாக மலரட்டும், கீரனுார் ஜாகிர்ராஜாவாக எதிர்கொள்ள நேரிட்ட போதும் அவர்களின் மீது அதன்பிறகு பெரும் பிரியம் கொண்டவனாக இருக்கிறேன். இது வாசகனாக ஒருவர் கொள்ள வேண்டிய அர்ப்பணிப்பு.
வாசித்த சில நுாற்களின் மூலமாக துலங்கி வரும் விக்கி அண்ணாச்சியின் சித்திரம் மனதிற்கு மிகுந்த உவப்பாக இருக்கிறது. தீயின் விளைவாகச் சொல் பிறக்கிறது என்பது அவரின் கட்டுரைத் தொகுப்பொன்றின் தலைப்பு. ஒரு மந்திரம் போல அதை சதா உச்சாடனம் செய்து கொண்டிருக்கிறேன். இதுநாள் வரை நான் வாசித்த மிகச்சிறந்த கட்டுரைத் தொகுப்புகளில் அது ஒன்று. கவிதை குறித்த கட்டுரைகள்தான் என்றாலும் அத்தொகுப்பினை வாசித்து முடித்த போது எழுந்த மன உத்வேகமும் கவிதையின் இருண்மையின் மீது ஏற்பட்ட போதமும் அரிதிலும் அரிது. பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டிய வேலையை விக்கி அண்ணாச்சி தன் வாழ்நாள் முழுக்க தனியாளாக செய்து முடித்திருக்கிறார்.
விக்கி அண்ணாச்சியின் எழுத்துலகத்தை மூன்று பெருந்தொகையாகப் பிரிக்கலாம். முதலாவது அவரின் கவிதைகள். தமிழின் ஆகச்சிறந்த கவிதைகளாக அவற்றில் பெரும்பகுதி அமையவில்லை என்றாலும் சிறந்த கவிதைகள் என நுாற்றுக்கணக்கான கவிதைகளைச் சொல்லலாம். வாழ்வியல் ஞானமும் அலைந்து திரிகிறவரின் அழகியலும் வெளிப்படும் கவிதைகள் அவை. உந்தி தீயின் விளைவாகப் பிறக்கும் சொற்கள் அவருடையவை. பக்தி மரபின் சமகாலப் பெருங்கவி.
நவீன கவிஞர்களின் உள்ளொடுங்கிய இருண்மை வெளியை அண்ணாச்சியின் கவிதையில் காண முடியவில்லை. அவர் தமிழ்க்கவிதையின் ஐம்பதாண்டுக்கால வளர்சிதை மாற்றத்தோடு தன்னை இணைத்துக் கொண்டவர்தான். ஆனால் அவை அவரை பாதிக்க வில்லை. மாறாக நவீன தமிழ்க்கவிதையைத்தான் அவர் பாதித்து அதன் பங்களிப்பை விகசிக்கச் செய்துள்ளார். தமிழ் மொழியின் ஞானமும், பக்தியின் நம்பிக்கை உண்டாக்கும் பெருவெளிச்சமும் கொண்டிருப்பவை அவருடைய கவிதைகள். அவ்வகையில் மனதிற்கு மிகுந்த அந்நியோன்யத்தைக் கொண்டிருக்கின்றன.
இரண்டாவது பெரும் பங்களிப்பு அவர் தேடித் தேடி வாசித்து எழுதிக்குவித்துள்ள கவிதை குறித்த அறிமுகக் கட்டுரைகள். ஒரு வகையில் தமிழில் கவிதை வாசிக்க விரும்புகிறவர்கள் அத்தனைப்பேரும் விக்கி அண்ணாச்சியின் கவிதை குறித்த கட்டுரைகளை ஒரு முறையேனும் வாசித்து விடுவது நல்லது. அவற்றை கவிதை குறித்த கோனார் நோட்ஸ்கள் என்பேன். இதற்கு முன்பு நான்வாசித்த நல்ல கவிதை விமர்சன நுால் சுந்தர ராமசாமியினுடையது, ந.பிச்சமூர்த்தியின் கலை மரபும் மனித நேயமும்.
விக்கி அண்ணாச்சி அறிமுகம் செய்துள்ள கவிஞர்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றனர். நான் இன்னமும் முழுக்க வாசித்து முடிக்க வில்லை. தீயின் விளைவாகப் பிறக்கிறது சொல் தொகுப்பில் அஷ்டவக்கிரன் என்கிற கவிஞரின் கவிதைகளை வாழ்நாளில் முதன்முதலாக வாசிக்கிறேன். அவ்விதம் மிக மிக பிந்தி வாசிக்க நேரிட்டது குறித்து வெட்கமும் அவமானமும் ஏற்படத்தான் செய்தது. நல்ல கவிஞரின் அறிமுகத்தைக் கூட நான் ஒரு தற்செயல் நிகழ்வாகத்தான் சந்திக்க நேரிடுகிறது.
அஷ்டவக்கிரனின் “அந்தகனின் சொல்“ தொகுப்பில் உள்ள ஒரு கவிதை இது
வாழுங் காலத்திலேயே
கீர்த்தி பெறும் தருணமிது
கையசைவை எதிர்நோக்கி
காத்திரு கதவருகே
அழைப்பவனின் மஹோன்னத தரிசனத்திற்கு
கபடப் புன்னகை அதை மறைக்கும்
ஒரு பிடி மயிர்க்கொத்து
முகமூடியெனத் தங்கிவிட்ட கோரம்
விஷயஞானத்தைத் தவிர்த்த
வெறுந்தகவல் சேகரிப்பின்
கனம் தாளாமல் தொங்கியது தலை
காற்றில் கலந்து கரைந்தது குரல்
பெயர்கள் பதிவாயின வரலாற்றின் ஏடுகளில்
லேசான அலுமினியக் காசுகளும்
அழுக்கு கரன்சி காகிதங்களும்
நிரம்பிப் பிதுங்கிய சட்டைப்பை
கூழாங்கல் பொறுக்கும் வாரிசுகளின்
புகழ் அஞ்சலி
தவளையின் ஓயாத வறட்டுக் கத்தல் போல்
மழைநீர்ப் பள்ளத்தில் எதிரொலிக்கும்
வாழுங் காலத்திலேயே
கீர்த்தி பெறும் தருணமிது
மற்றொரு கவிதை
கட்டை விரலளவு
இடமிருந்தால் போதும்
ஊன்றிக் கொள்ள
உட்பொறி வீச்சில் வியாபகம் கொள்வாய்
அதற்கு ஏன்
இடமில்லாமற்
போய்விட்டது
இவ்வளவு பெரிய உலகில்?
வேறொரு அருமையான கவிதை
வருடிச் சென்ற காற்றின்
ஸ்பரிசத்தில்
நாணித் தலைசாய்க்கும் புல்
கூடல் முடியுமுன்னமே
பிரிந்துவிட்ட தகிப்பில்
சிலித்து நிமிரும்
தன்வழிச் செல்கையில் காற்று
புற்கூட்டத்திடம்
சொன்ன தென்னவென்று
வீண்சர்ச்சை வேண்டாம்
உனக்கும் எனக்கும்
என் கற்பனைத் திறனுக்கும்
நீ கற்பிதம் கொள்வதற்கும்
ஊற்றுக் கண் வேறு வேறு.
யார் இந்த அஷ்டவக்கிரன்? ஏன் இத்தனை நாட்களில் இவரைப் பற்றி யாரும் பேசியிருக்கவில்லை. யாரைப்பற்றித்தான் யார்தான் விக்கி அண்ணாச்சியைப் போல விரிவாக பேசி எழுதியிருக்கிறார்கள்? இருபது கவிதைகள், இருபத்தெட்டு மொழி பெயர்ப்பு கவிதைகள் ஒரு சிறுகதை இணைந்த தொகுப்பு 2012-ல் வெளியாகி இருக்கிறது. எப்போது எனில் அஷ்டவக்கிரன் 2004-ல் பத்ரிநாத் செல்லும் வழியில் பயணம் செய்த பேருந்து விபத்துக்குள்ளாகியதில் இறந்த பிறகு). நிச்சயம் இந்த நுால் வாசிக்க கிடைக்கப் போவதில்லை. அண்ணாச்சியின் அருமையான காரியங்களில் இந்த அறிமுகக் கட்டுரைகளும் ஒன்று.
இவ்விதம் தமிழில் இதுநாள்வரை எழுதியுள்ள அத்தனைப் பேரைப்பற்றியும் அண்ணாச்சி அறிமுகம் செய்துள்ளார். அவருக்கு உகந்த கவிஞர்களை – உதாரணமாக ல.மணிவண்ணன், ஷங்கர ராம சுப்பிரமணியன், யவனிகா போன்றோரைக் கொண்டாடியுள்ளார். ஒரு கவிஞர் பிற கவிஞர்களின் மீது இத்தனை அப்பட்டாக பேசியும் எழுதியும் இருப்பது அண்ணாச்சி ஒருவரிடம் மட்டுமே காணப்படும் பெருந்தன்மை.
அண்ணாச்சியின் அறிமுகப் பாணி தனித்துவமானது. ஒட்டி வெட்டும் எடிட்டர் வேலைதான். ஒரு கவிஞனின் ஆகச்சிறந்த கவிதையை நமக்கு வாசிக்கக் கொடுக்கிறார். அந்தக் கவிஞனின் கவிதா மண்டலத்தை மிகச் செறிவாக சொல்லிக்காட்டும் அறிமுகக் குறிப்புகளை – பிறர் எழுதியது- அதைத் தொடர்ந்து அமைத்துக்கொடுத்து வாசிக்கச் செய்கிறார். அப்புறம் அவரின் தனித்த பார்வைகளால் அக்கவிதையின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறார்.
குவளைக்கண்ணன் குறித்த கட்டுரையில் ஒரு கவிதை. இக்குறிப்பை எழுதும் போதும் செண்டிமெண்டல் இடியட்டாக கண்கலங்க வைத்த கவிதை. கொட்டாரக்கரை தாண்டி அடுர் செல்லும் பேருந்தில் அமர்ந்து முதல்முறையாக வாசித்தபோதும் விசித்து அழ ஆரம்பித்துவிட்டேன்.
எங்கே போனாய் அம்மா?
காற்றில் உப்புக்கரிக்கும் கிராமத்திலிருந்து
கணக்குகள் நிரம்பிய நகரத்துக்கு
வாழ வந்து
பிள்ளைகள் பெற்றாய்
தினுசுக்கு ஒன்றாக
அந்தத் தலையில்
எத்தனை இடி இறங்கியிருக்கும்?
பிள்ளைகளுக்குச் சொல்லாமல்
எதையெல்லாம் விழுங்கியிருப்பாய்?
வீட்டைத் தாண்டி எங்கும் போனதில்லையே
எங்கே போனாய்?
எனக்கா தெரியாது?
ஓரிடத்தில் இருந்து
ஒவ்வோர் இடத்திலும் வசிக்க
அறியாததில் இருந்து அறிந்ததற்குள்
இருளில் இருந்து ஒளிக்குள் போயிருக்கிறாய்
சரியம்மா
ஒரு சிரிப்பு சிரிப்பாயே
இனி
அந்தச் சிரிப்பாக வா அம்மா.
இந்த கவிதையின் அறிமுகத்தின் பிறகு குவளைக்கண்ணன் பெரும் பிரியத்திற்குரிய என் கவிஞர்களில் ஒருவராகி விட்டார்.
தானப்பர் தெரு என்றொரு கவிதை. சமயவேல் எழுதியது. மின்னிப்புற்களும் மிதுக்கம்பழங்களும் தொகுப்பில் உள்ளது.
வாழ்நாளில் என்னால் ஒருபோதும் மறந்துவிட முடியாத கவிதை. ஒரு சாதாரண கணம் அசாதாரண பொற்கணமாக மாறும் அதியசத்தை நிகழ்த்திய கவிதை.
ஒரு கவிதை அன்றாடத்தை என்ன செய்துவிட முடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்.
தேடிச் சென்ற நண்பரின்
மூடிய கடைப்படிகளில்
ஓய்ந்து உட்கார்ந்தோம்
மனைவி பற்றிய புகார்களை
புகைக்கத் தொடங்கினான் நண்பன்
உறவுகளின் கசப்பு எங்கள்
கண்களில் கசிந்து கொண்டிருக்க
குறுக்கிட்டது ஒரு குழந்தைக் குரல்
ராணி பேக்கரி அய்யா வீடு
எங்க சார்?
ஒரு சிறுவன் அவன் கையைப் பிடித்தபடி
பார்வையற்ற ஒரு அப்பா, அப்பாவின் கையில்
பார்வையற்ற அம்மா, அம்மாவின் கையில்
ஒரு துறுதுறு சிறுமி
சார் உங்களுக்குத் தெரியாதா,
வாங்கப்பா அங்க கேக்கலாம்
நகர்ந்தது குடும்பம்
கைகளாலும் குரல்களாலும் இணைந்த
அந்தச் சிறு குடும்பம்
ஒரு பேரதிசயமாய் மிதந்து கொண்டிருந்தது
தானப்பர் தெருவில்
இந்தக் கவிதைக்கு பாதக்குறிப்பாக சமயவேலின் இந்த வரிகள்.
“சோற்றுக்கும், தண்ணிக்கும், புணர்ச்சிக்கும், துாக்கத்துக்கும் அல்லாடுகிற எளிய மனிதர்களின் வாழ்க்கைதான் என்னைப் பெரிதும் ஈர்த்து எழுதத் துாண்டுகிறது. தத்துவக்குழப்பங்களுக்கும், கண்டுபிடிக்கிற மாயப் பயணத்துக்கும் சத்தியமாய் நான் தயாரில்லை. நிலவு கேட்டு அழுகிற குழந்தை இல்லை நான். தெருவில் விற்கிற ஐந்து காசு முறுக்கு போதும்.”
சமயவேலின் கவிதை உலகத்தைப்புரிந்து கொள்ள உதவும் வரிகள். இது போதுமே.
விக்கி அண்ணாச்சி எழுதாத கவிஞர்கள் அரிதாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அந்த வகையில் விக்கி அண்ணாச்சி நவீன தமிழ்க்கவிதைக்கு பெரும் பங்களிப்பு செய்திருக்கிறார்.
அப்புறம் அவரின் சிறுகதைகளும் நினைவோடைப் பத்திகளும். அவையும் முக்கியமானவை.
விக்கி அண்ணாச்சியின் எழுத்தில் எழுந்து வரக்கூடிய பிரமிளுக்கு ஒளியின் முகம். விக்கி அண்ணாச்சியும் பிரமிளும் திருவண்ணாமலையில் வசித்த விசிறிச் சாமியாரைப் பார்க்கச் சென்ற காட்சிகளை விக்கிரமாதித்யன் கதை என்கிற கட்டுரைத் தொகுப்பில் எழுதியிருக்கிறார். அதில் தென்படும் பிரமிள் ஞானத்தேடலில் தத்தளிப்பவராக இருக்கிறார். விசிறிச் சாமியார் தன்னிடம் இருந்த பணப் பொதியை பிரமிளுக்கு திறந்து காட்டி தேவையானதை எடுத்துக்கொள்ளச் சொல்கிறார். அண்ணாச்சியின் உலகில் தென்படும் பிரமிளுக்கு குரூரம் இல்லை.
“விக்கி அண்ணாச்சியுன் படைப்புகளோடு ஒருநாள்” என்கிற தலைப்பில் ஒரு கருத்தரங்கத்தை நண்பர்கள் சேர்ந்து நடத்த உள்ளோம். அந்நிகழ்வு அக்டோபர் மாத்தில் ஒரு நாள் நிகழும்.
அதற்கு முன்னோட்டமாக அண்ணாச்சி குறித்து அவரின் வாசகர்கள் சக படைப்பாளிகள் அடுத்த தலைமுறை கவிஞர்கள் எழுதிய கட்டுரைகள் அறிமுகக் குறிப்புகள், வாசிப்பு அனுபவங்கள் என அனைத்தையும் ஒரு குடையின் கீழ் வெளியிட்டு ஒரு நுாலாக தொகுக்கும் திட்டமும் உள்ளது. அண்ணாச்சியே அதற்கான பெரும் பணியைச் செய்து தந்திருக்கிறார். அவரிடம் இதுநாள் வரை சேகரிப்பில் இருந்த கட்டுரைகளைத் தந்திருக்கிறார். அவற்றை ஒரு தொடராக மயிர் மின்னிதழில் வெளியிட உள்ளேன்.
ஏற்கனவே அவர் குறித்து எழுதியவை, புதியதாக எழுதி வரப்பெற்றவை என இது நீண்ட தொடராக நாளும் புதியவை கொண்டதாக அமையும்.
அண்ணாச்சியின் படைப்புகள், அவருடன் பழகிப்பெற்ற அனுபவங்கள், விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
படைப்புகள் அனுப்ப
mayir magazine@gmail. Com
அண்ணாச்சியின் படைப்புகள் நக்கீரன் பதிப்பகமும் படைப்பு பதிப்பகமும் வெளியிட்டுள்ளன.