சமீபத்தில் படித்த ஒரு ஆங்கிலக் கட்டுரையின் நினைவில் எழுதுகிறேன். சாதாரணமாக மொழி நமது அன்றாட வாழ்க்கை அவசியங்களுக்கும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் பயன்படும் அளவிற்கு அனுபவத்தின் நுணுக்கத்தையும் ஆழத்தையும் பிறருடன் என்று மாத்திரமன்று, படைப்பாளனுக்குக் கூட மொழியளவிற்கு அவற்றைத் தெளிவுபடுத்திக் கொள்வது ஒரு பிரச்சனையாக இருக்கிறது. ஆனால் இதை மொழியை வைத்துக்கொண்டுதான் செய்ய வேண்டியிருக்கிறது. இதனால்தான் படைப்பவன் தன் பாஷையை பாஷை மூலமாகவே படைக்க வேண்டிய அவசியம் வெற்றி பெறுகையில் அப்படி அனுபவமில்லாதவர்களுக்கு அது ஒரு பிரமிப்பை விளைவிக்கலாம். வெற்றி பெற்றவையில் கூட அனுபவத்தின் எல்லையும் ஆழமும் முழுமையாகக் கலந்து விடுகின்றனவா என்பது நம் கேள்வி.
சமீபத்தில் புதுக்கவிதை எழுதி வருபவர்களில் கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்யன் இவர்களை ஒரு கணக்கில் ஒரு வகையில் உட்படுத்தலாம். இவர்கள் மொழி பிராந்திய பேச்சுத் தமிழல் ஒரு படைப்புள்ளத்தினால் வகை செய்யப்பட்டு படைப்பு வேகம் பெற்றவை. இலக்கியத்திற்கு உருவம் பிரதானம் என்ற அடிப்படையில் இரண்டு விஷயங்களைக் கவனிக்கலாம். அடிப்படைகள் கூட, காலப்போக்கில் வேறு விதமாக பார்க்கப்படுவதால் அவைகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்துவிடுகின்றன. இதை இன்னொரு வகையில் சொல்வதென்றால் உருவமும் – உள்ளடக்கமும் வேறு பிரிக்க முடியாமல் போகையில் சம்பிரதாய பார்வைகள் ஒரு கலாபூர்வமான விளைவு ஏற்படுகிறது. உருவத்தையும் உள்ளடக்கத்தையும் வேறு பிரித்து விக்ரமாதித்தன் கவிதைகள் பொருளாதார நெருக்கடியில் மனிதன் உறும் அவஸ்தைகளைச் சித்தரிக்கின்றன என்று கூறுவதில் அர்த்தமே இல்லை. இதைப்ப ற்றி பின்னர், அவரது உள் உலகம் என்ற பகுதியில் விரிவாகப் பார்க்கலாம்.
அவர் கவிதையில் மொழி – கவிஞன் பாஷையில் பாஷையைக் சிருஷ்டிக்கிறான் என்றால் விக்ரமாதித்யன் கவிதை பாஷையில்- அதனுடைய இயல்புகள் என்ன என்று சற்று ஆலோசித்துப் பார்க்கலாம். இப்படிப் பார்க்கையில் ஒரு தளத்தில், அவருடைய பிராந்தியத் தமிழ் வருவதைப் பார்க்கலாம். இந்தப் பிராந்தியத் தமிழ், “திருநெல்வேலி பிள்ளைமார்கள் தமிழ்” என்று சொல்லலாம். “பிள்ளைமார் தமிழ்“ என்று சொல்வதில் ஒரு விசேஷம் இருக்கிறது. இந்தத் திருநெல்வேலித் தமிழை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். பேச்சுத் தமிழில் வரும் பின் வரும் தமிழ் வார்த்தைகள் கவிதையின் கட்டுக்கோப்புடன் முரணில்லாமல் இயைந்து கவிதைகளுக்கு ஒரு வேகத்தைக் கொடுத்துவிடுகின்றன. இங்கு நான் உத்தேசிக்கும் வார்த்தைகளுக்கு உதாரணம் – பட்டை அடிக்காமல், துடியான கருப்பசாமி, ஒத்திவைப்பார் பண்ணைமிராசு, தடிக் கழுந்தைகள், அதிக கிராக்கி, வக்கரித்த கனவுகள், ஜமா சேரத்தது, நித்தமும், ஆளாளாளுக்கு, மிச்சம் மீதி, கொலுசு ஒன்று, தீட்டு, சமைந்த பெண், சுடலையாண்டி சரக்கு, கும்பக்காரி. இந்தப் பேச்சுத் தமிழ் “பிள்ளைமார் தமிழ்” என்று சொல்லும் போது கவிஞனுடைய பிரக்ஞையை மீறி, அவன் பாரம்பரியத்தின் இயல்பான சில மதச் சார்பான சொற்களுடன் இயைந்து விடுகின்றன. இதற்குச் சில உதாரணங்கள்- அம்மாவின் பிம்பம்தான் “சக்தி“, தேரோடும் வீதியிலே, அம்மன் சன்னதித் தாழ்வாரத்தில், புலிப்பால் கொண்டு வரப்போனான் அய்யப்பன், ஆசாகம் நீலநிறம் என்ற கவிதையில் உள்வியாபகம் அமைந்த கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு போன்ற வார்த்தைகளை சூரிய சந்திரன், லௌகீக வாழ்க்கை, மிலேச்ச தேசம், இறந்து போன கடவுள், அடிக்கடி வரும் ஆத்மா என்ற வார்த்தை, ஏகாதசி,திருவோடு,சுயம்புகள், பூர்ணன்,தென்முகக் கடவுள்,லௌகீகச் சிலுவை, பெந்தகோஸ்தே, பிரபஞ்சவெளி, கங்காஸ்நானம், ஜோதி,அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்,குருமகராஜ், இந்திரசபை- ராஜசபை கனகசபை- தாமிரசபை-சித்ரசபை- பஞ்ச சபை போன்ற வார்த்தைகள். இந்த இருவித வார்த்தைகளைத் தாண்டி அவைகளிலிருந்து வேறுபட்டு, ஆனால் வித்தியாசப்படாமல் கவிஞனின், அவருடைய மொழித் தொடர்பையே உபயோகிப்பதென்றால்,- அவர் மனசின் பாஷை அவருடைய கவிதைக்குத் தரத்தைக் கூட்டுகிறது. இந்த பாஷை சப்தத்துடன் சேர்ந்து கவிதைகள் முழுவதும் அடிநாதமாக ஒலிக்கிறது. இதற்கு சில உதாரணங்கள் கொடுக்கலாம்.
1. எப்பவுமே ரசனை கெட்ட மனிதர்கள் (எப்பவுமே) என்ற வார்த்தை கவனிக்கப்பட வேண்டும்.
2. “ஆகாசம் நீல நிறம்” என்ற கவிதையின் முடிவு. “திசை முடிவுக்குத் தெரிவதெல்லாம்”,“ ஆகாசம்” ” நீல நிறம்”
3. “சிதைவுகள்” என்ற கவிதையில் முக்யமாக நான் கவிஞனின் நுண்ணிய, மென்மையான, நுட்பமான மன இயல்பைப் பார்க்கிறேன்.
லௌகீக வாழ்க்கை நெருக்கடியில்
மனதின் பாஷையை
யார் புரிந்து கொள்ளப் போகிறார்கள்
நண்பா,
இனிமேல்
எந்த சூரிய சந்திரன்
என்னை பூக்க வைக்கும்?
எனக்கில்லை
என் சந்ததிக்கேனும்
தப்பித்தல் அல்லாமல்
விடுதலை எப்போது பூக்கும்
“நிலை” என்ற கவிதை
மலையேறும் வாழ்க்கையில்
மகா உன்னதம் தேடி என்ன லாபம்?
சரிகமபதநி
மாறாத ஸ்வரம்
“நிறைவுகள்” என்ற கவிதை
அம்மாவின் பிம்பம் நான்
“சக்தி” என்றாகியிருக்கும்போல
பாஷையைக் கையாள்வதில் கவிஞன் சம்பிரதாயங்களை “இது சரி, இது தவறு” என்ற வரையறைகளை உடைத்தெறிந்துவிட்டு, அனுபவத்தினுடைய அடிஸ்தானமான மூர்க்கத் தன்மையையும் திறம்படக் காட்டிவிடுகிறான்.
இத்தொகுதியிலுள்ள “கடல்” என்ற கவிதைகள் தொகுப்பிலிருந்து உதாரணம் கொடுக்கலாம்.
“வாழ்க்கை
தேவடியாளின் வசீகரத்துடன்
இருத்தி வைத்திருக்கிறது.”
இங்கு “தேவடியாளின் வசீகரத்துடன்” என்ற தொடர் நான் முன் கூறிய சைவப் பிள்ளைமார்களின் வாழ்க்கை தரிசனத்தைக் காட்டுகிறது என்றே சொல்லலாம். மிகவும் உதாசீன பாவத்துடன் எழுதப்பட்ட இந்த தொடர், ஒரு அடிப்படைத் தத்துவ தரிசனத்தை உட்கொண்டிருக்கிறது. நான் இங்கு மனதில் வைத்திருப்பது “எது உண்மை”. அதே சமயம் இங்கு பொருளில்லார்க்கு வாழ்க்கை வசீகரமாக இருப்பதில்லை என்றும் – எது தோற்றம் என்ற மஹா வாக்கியம்.
இன்னும் ஒரு உதாரணம் கூடக் கொடுக்கலாம்
புதுக்கடன் கேட்கும்போது
பழையகடனை ஞாபகப்படுத்துவான்
பெட்டிக்கடை கருப்பையா
இந்தக் கவிதை நம் உள்ளத்தைக் கவர்வதற்கு காரணம் கடன் கேட்பது ஒரு வெட்கப்பட வேண்டிய விஷயம் என்ற ஒரு குறுகிய சமுதாய ரீதியை உடைத் தெறிகிறது. இங்கு கம்பனிலிருந்து ஒரு சொற்றொடர் பொருத்தமின்றி நினைவுக்கு வந்தாலும் –“கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்”- ஆனால் இங்கு நாம் காண்பது கடனில்லாமல் வாழ முடியாது என்ற நிலை வந்தபின் கடனுக்கு மேல் கடன் கேட்காமல் மனிதன் என்னதான் செய்வான்? என்பது மாத்திரமில்லாமல் இதில் ஒரு தர்மாவேசமும் ஒலிக்கிறது.
கட்டுக்கோப்பு
இங்கு நான் கட்டுக்கோப்பு என்று உத்தேசிப்பது கவிதையின் உருவ அமைப்பே. ஒரு கவிதையில் பகுதிகள் எவ்வாறு இணைகின்றன. அவற்றின் ஆரம்பம், நடு, இறுதி இவைகளிடையே நிகழும் இயக்கம் எவ்வாறு செல்கின்றது என்பதும். இந்தப் புற அமைப்பின் பின் கவிஞனின் மனதின் நுட்பமான இயக்கத்தை நாம் காணாம். வெகு எளிமையான உதாரணங்களிலிருந்து தெதடங்குவதென்றால் “தட்சிணாமூர்த்தியாக“ “ஏகாதசி“ “ஸ்வயம்புகள்” என்ற கவிதைகளில் கவிதை கடைசியிலிருந்து தொடர்ந்து தலைப்புடன் முடிந்து ஒரு மண்டலமிட்டுக் கிடக்கும் பாம்பு போல் தோற்றமளிக்கிறது. ”ஆகாசம் நீலநிறம்” என்ற கவிதையில் திசை களனைத்தும், உள்வியாபகமுற்று, படிப்படியாகத் தொடர்ந்து கடைசி பகுதியில் அவை சுவடு தெரியாமல் மறைந்து விடுவதைப் பார்க்கலாம். இந்தக் கட்டுக்கோப்பை கவிதையில் சொல்லப்படும் அனுபவத்தின் வீச்சையும் ஆழத்தையும் பல நிலைகளுக்கு –தளங்களுக்குக் கொண்டு சென்று விடுகிறது. பார்வை என்ற கவிதையில் “சிகரெட் நுனி” “முக்கால் சிகரெட்” என்ற படிமங்களின் நுட்பமான அமைப்பின் மூலம் “பார்வை“ என்ற அனுபவத்தைக் கூடமாகச் சொல்கிறார். இதைப் போலவே “கடல்” என்ற குறுங்காவியக் கட்டத்தில் “வேலை இல்லாதவன்” என்று தொடங்கும் கவிதை அதன் கடைசி வரியான “ஓயாத காற்று“ என்ற சொற்றொடர் மூலம் உச்ச கட்டத்தை அடைந்து விடுகிறது. கண்ணாடியில் தெரியும் கவிதை என்ற மூன்று வரிக் கவிதையில் கண்ணாடி என்ற சொல் மூன்று முறை திரும்பி வருவதில் வரிக்கு வரி அதன் அர்த்தம் திசை திரும்பி ஒரு முழுமையடைகிறது. இன்னொரு கவிதையில் (இருட்டுக்கு நட்சத்திரங்கள் நிறைய என்று தொடங்கும் கவிதையில் ) அதன் கட்டுக்கோப்பைப் பார்க்கும் போது –கண்ணால் மாத்திரம் படிக்கும் வாசகனுக்கு – கவிதை முடியாமலிருப்பது – அதற்கு அர்த்தமில்லை என்று தோன்றக் கூடும். சற்று சிரத்தையுடனும் ஈடுபாட்டுடனும் வாசிப்பவர்களுக்கு அர்த்தம் அதிகமாகவே காணப்படும். சி.சு.செல்லப்பாவின் சொற்றொடரை உபயோகிப்பதென்றால் கவிதையின் திறவுகோல் வரி ” இருட்டுக்கு நட்சத்திரங்கள் நிறைய” என்பது.
ஓசை
சரியோ, தவறோ நமக்குள் ஒரு அழுத்தமான நம்பிக்கை யாப்பின் வழியாகத்தான் ஓசை இயங்க வேண்டும் என்று. ஆனால் யாப்பிலக்கணத்தில் கூட – எனக்குத் தெரிந்த அளவில் கட்டுப்பாடுகளின் இறுக்கத்திலிருந்து விலகிய உருவாகிய செய்யுள் வடிவங்கள் ஆசிரியப்பா, விருத்தங்கள் என்று சொல்கிறார்கள். இதையும் மீறி எதுகைமோனை என்ற இரு உத்திகளை வைத்துக்கொண்டே கவிதையில் ஓசையைக் கவிஞனின் தரத்திற்கேற்ப கலாபூர்வமாக எழுப்பி விட முடியும். புதுக்கவிதையில் ஓசையே வேண்டாம் என்ற ஒரு அடிப்படை உண்டு. இதற்கு உலக இலக்கியத்தில் – நம்மில் சிலர் நினைக்கிற மாதிரி – உதாரணங்கள் இல்லாமலில்லை. உதாரணமாக பிரெஞ்சுக் கவிஞர்களான மல்லார்மே, சென் ஜார்ஜ் பர்ஸ் இவர்களைக் கூறலாம். இதற்கு ஒரு படி மேல் சென்று டபிள்யூ.பி.யேட்ஸ் என்பவர் தம் கவிதைத் தொகுதி ஒன்றில் முதல் கவிதையாக வால்டர் பேட்டர் என்பவர் எழுதிய ஒரு வசன கட்டுரையிலிருந்து ஒரு பகுதியைக் கவிதையாகக் கொடுத்திருக்கிறார். இதே அடிப்படையில் சரியோ, தவறோ எனக்கு குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய சில பகுதிகள், பிரபந்தங்களின் படிகள் கவிதையாகவே படுகின்றன. இதற்கும் மேல் சென்று ஒரு மௌனி கதையைக் கவிதையாகவே பார்க்க முடியும். தற்காலக் கவிஞர்கள் எழுதிவரும் கவிதைகளில் ஒரு ஓசை ஒழுங்கு இருக்கிறது. அது நமக்குப் பழக்கப்படாத ஓசையாக இருக்கலாம். ஆனால் அது ஓசையில்லை என்று சொல்ல முடியாது. இங்கு ஓசை ஒரு அமிழ்ந்த சீரில் அமைந்திருக்கிறது. இதை அலசிப் பார்க்கையில் நுட்பமாக அமைக்கபட்டிருக்கும் மோனை எதுகை விவகாரங்கள் இசையில் போல் திரும்பித் திரும்பி வரும் ஒரே சீரிலுள்ள ஓசைகள் இவைகளைச் சொல்லலாம். இதற்கு மேல் சென்று வரிகளில் அனுபவத்தின் உணர்ச்சிகளைக் குரல் துடிப்பினால் கண்டு கொள்ள முடியும் சில உதாரணஙகள் விக்ரமாதித்யன் கவிதைகளில்
1.மண்ணுண்டு
வாழ
பெண்ணுண்டு
போக
தினமுண்டு
கழிய
இனமுண்டு
சேர
ஆண் வாழ்க்கை
நடக்கும்
நியமமாக…
2.சிதைவும்
சீரழிவும்
கலைஞனுக்கில்லை
3.எனக்கில்லை
என் சந்ததிக்கேனும்
தப்பித்தல் அல்லாமல்-
விடுதலை எப்போது பூக்கும்
4.வீடு என்ற கவிதையின் கடைசிப் பகுதி
வொத்தையடிப் பாதையிலே
வொரு சுவடும் மிச்சமில்லை
உள் உலகம்
ஆரம்பத்தில் சொன்னபடி ஒவ்வொரு கலைஞனும் கடவுளுக்குப் போட்டியாக தன் சிருஷ்டித் தொழிலைச் செய்கிறான். இந்த சிருஷ்டிக்கு. எப்படி கடவுள் படைத்த உலகிற்கு- வாழ்விற்கு –திட்டவட்டமாக, தீர்மானமாக “இதுதான் உலகம்- இதுதான் வாழ்க்கை- என்று கூற முடியாது. கலைஞன் சிருஷ்டிக்கும் பொருந்தும். இந்த சமயத்திலும் மல்லார்மே என்ற கவிஞன் தன் நண்பனான ஒரு ஒவியனுக்கு அவன் எந்த அனுபவத்தைக் கொண்டு கவிதை எழுதுவது என்று கேட்ட போது – கவிதை எழுதுவதற்கு அனுபவம் முக்கியமில்லை, வார்த்தைகள் தான் முக்கியம் என்று சொன்னது ஞாபகம் வருகிறது. இதைப் போலவே யேட்ஸ் என்ற ஆங்கிலக் கவிஞன் தான் தரிசனம் என்ற ஒரு தத்துவநுாலை உருவாக்கியது கூட அந்த நுால் தனக்கு கவிதை எழுதுவதற்குப் படிமங்களைத் தருவதற்கே என்றான். ப்ராஸ்ட் என்ற அமெரிக்கக் கவிஞன். ஒவ்வொரு கவிஞனுக்கும் அடிப்படைச் சுதந்திரமான அமைவது ஒரு தத்துவத்தையோ, ஒரு கொள்கையையோ எழுத வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அவனுக்குக் கிடையாதது. அவனுக்கு அடிப்படை சுய நிர்ப்பந்தம். அவன் இச்சைப்படி எதைப் பற்றியானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுத வேண்டும் என்பதே. ஒரு படைப்பு நமக்கு இன்பத்தைத் தருவது என்பது அது ஒரு சன்மார்க்க போதத்தைக் கூறுவது என்பதாலோ அல்லது ஒரு அரசியல் கொள்கையை வற்புறுத்துவது என்பதாலோ அன்று எந்தப் படைப்பும் நமக்கு அது கட்டமைப்பில் சிறப்பினால், நடை உயர்வினால் கவிஞனின் பிரத்யேகப் பார்வையால், நமக்கு ஒரு கலை இன்பதைத்தை தருகிறது. இந்த அடிப்படைகளுக்கு அரசியல், தத்துவம் எந்த விஷயமும் பயன்படுத்தப்படலாம். இதை இன்னும் தெளிவாகக் கூறுவதென்றால் இவை கவிதை சிருஷ்டிக்காக இங்கு வந்து சேர்ந்திருக்கின்றனவேயன்றி, இவைகளுக்காக கவிதை பயன்படுத்தப் படுவதில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் விக்ரமாதித்யன் கவிதைகள் மனதில் வைத்துக்கொண்டுதான் சொல்கிறேன். டாஸ்டாவ்ஸ்கி ஒரு நுாலில் கூறியது போல வாழ்க்கையின் எந்த அனுமானத்தையும் விட வாழ்க்கை தான் முக்கியம். விக்ரமாதித்யன் தன் கவிதைகளில்- (இருக்கலாம் அவை கசப்பாக) தன் அனுபவத்தை கலை வடிவமாகத் திறம்பட மாற்றியிருக்கினாறர். இ்நத அடிப்படைியல் விக்ரமாதித்யன் என்ற கவிஞன் மார்க்சிய வாதியா? வாழ்க்கையின் சுமையைச் சகித்துக்கொண்டு ஒரு சிலுவையைத் தாங்சிக் செல்லும் ஒரு பக்தனா? அல்லது நம் வேதாந்திகள் கூறுவது போல வாழ்க்கை முழுவதையும் கண்டுவிட்டு –இவைகளையெல்லாம் தாண்டிதான் வாழ்க்கை இருக்கிறது என்று கூறும் ஒரு பூர்ணனா? என்ற இத்தகைய அனைத்துக் கேள்விகளும் இலக்கிய விமர்சனத்திற்குப் பொருத்தமற்றவை. ஆனால் இந்தத் தன்மைகள் அனைத்தும் ஒரு சேர விகற்பமின்றி இணைந்து சில உத்தமமான கவிதைகளை அவர் நமக்குத் தந்திருக்கிறார் என்பதுதான் அவர் கவிதையின் சிறப்பு
அவர் வாழ்க்கையின் கசப்பு அவர் கவிதையில் எவ்வளவு இனிமையாக ஒலிக்கிறது என்பதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஒரு கவிதையில் இவர் எழுதுகிறார்
கற்றுக்கொண்டுவிட்ட தமிழ்
கவிதை எழுத மட்டும் உதவும்
இதனால் தான் விக்ரமாதித்யன் என்ற ஒரு ஆத்மாவைப் பற்றி நான் ஒரு கட்டுரை எழுதவும் அதை உங்களுக்கு வாசித்துக் காட்டவும் சாத்யமாகிறது. அவர் வாழ்க்கைப் பார்வையில் ஒருவித தத்துவ- அரசியல் – மதச் சார்பான கொள்கைகள் எல்லாம் பின் தள்ளப்பட்டு ஒரு கவிஞனின் பார்வை- அவன் அவனளவில் வாழ்க்கையை நுண்மையாக, ஆழமாக, விரிவாக, பார்த்தவிதம் நமக்கு ஒரு சிறந்த கலை இன்பத்தைத் தருகிறது. இங்குதான் அவர் கவிதை வெற்றி பெறுகிறது.
(இது 7.8.1982 அன்று கேரளப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையில் ”கருத்து வட்டம்” கலந்துரையாடலில் படித்து விவாதிக்கப்பட்டது)
—————
விக்ரமாதித்தயனின் வீடு
சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட குறிப்பிடத்தகுந்த அனுபவங்களில் செப்டம்பர் 5,6,7 என்ற தேதிகளில் குற்றாலத்தில் நடந்த கவிதைப் பட்டறையைக் குறிப்பிட வேண்டும். இப்பட்டறையில் எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது, மிகவும் சர்ச்சைக்குட்பட்ட நாகார்ஜீனனின் ”கவிதை முயற்சியில்” என்ற கட்டுரை.
விக்ரமாதித்யன் என் அபிமானக் கவிஞர்களில் ஒருவர். அவருடைய “வீடு” என்ற கவிதையை நாகார்ஜீனனின் அணுகல் முறையைப் பின் பற்றி அமைப்பியல் ரீதியில் பார்த்தால் கவிதையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். கவிதையில் குறிப்பிடத்தக்க அம்சம் அதன் உணர்வு வெளிப்பாடு. ”வீடு” என்ற கவிதையின் மூன்று பிரிவுகள் வருமாறு. 1. முதல் வரியிலிருந்து ”அன்றைக்கும் வீடுதான்” என்பது ஒரு பகுதி. 2. ”கடவுள் கைவிட்டுவிட்டான்” என்பதிலிருந்து ”விதி வெறுமையில் தள்ளிற்று” என்பது வரையில் ஒரு பகுதி. 3. ”ஆறுதலாக இருக்கிறாள் இவள்” என்பதிலிருந்து ”விச்ராந்தியாக இருக்க இங்கே வாய்த்தது எப்போதும் வீடுதான்” என்பது ஒரு பகுதி. “வீடு” என்ற வார்த்தையே இருமுகமுடையது என்பதும் இங்கு நினைவிற்கு வருகிறது, நாகார்ஜீனன் ரீதியில் இன்று நாம் சமிக்ஞைகளிலிருந்து தப்பிக்க முடியாது.
என்னளவில் கவிதை திருப்திகரமாகவே இருக்கிறது. கவிதை என்பது கவிஞனில் உணர்ச்சி (அதாவது கவிஞனின் தனி மனித உணர்ச்சிப் பீறிடல் அன்று) உணர்வாக வெளிப்பட்டு உருவமும் உள்ளடக்கமும் பிணைய ஒரு கலைப் பொருளாக உருவாகிறது. கவிதையில் நாகார்ஜீனனால் கூறப்பட்ட “பன்முக வாசிப்பு” என்பது இரு தளங்களிலேயே இயங்குகிறது. சமூகத்திற்கும் தனி மனிதனுக்கும் ஏற்படும் மோதலில் சமூகம் சமிக்ஞைகள் முற்றிலும் வெற்றி பெறவில்லை. அதாவது மரபு மதிப்பீடுகள் விஷயத்தில் வெற்றி பெறுகிறது. இது நமது வாழ்வு இன்னும் முற்றிலும் சிக்கலாகவில்லை என்பதைக்காட்டுகிறது. உருவத்தைப் பற்றிய வரை பன்முக வாசிப்பு இடம் கொடுப்பது கவிஞரின் வார்த்தைத் தேர்வில் அதுவும் சில குறிப்பிட்ட வார்த்தைகள் மூலமே சாத்தியப்படுகிறது. இதைக் கவிதை முழுவதிலும் காணலாம். அப்படிப்பட்ட சில வார்த்தைகள் 1.வீடு, 2 அப்பிக் கொள்கிறார்கள் 3.வாய்த்தது எப்போதும் வீடுதான்.
கணையாழி, அக்டோபர் 1987