“எல கருப்பியா.. என்னடா அது.. இந்த மாரியாலே கொண்டான் கொடுத்தான் வீட்டுக்கு வந்துகிட்டு இருக்கது… என்னல நினைப்பாங்க நம்ம பத்தி யாருக்குல கேவலம் இது. உங்க அம்ம எவ்வளவு வைராக்யக்காரி. நீ இப்டி இருக்கியலே.. இனிமே இந்த மாரி சோறு திங்க வரக்கூடாது.. அக்காவும் ஏற்கனவே சொல்லியிருக்காளாம்லா அவ என்கிட்ட வந்து சொல்லுதா. நீ சொன்னாதான் கேட்பாங்க.. அவளுக்குக் கஷ்டம் கொடுக்கலாமா… புத்தியா பிழைச்சுக்கோ, அவ்வளவுதான் சொல்வேன்.”
(வெறுஞ்சோற்றுக்குத்தான்)
நெட்டித் தள்ளிப் பிடரியில் ஒங்கி ஓர் அடி விட்டார்…
“ராணிய பார்க்கப் போறிஹளோ… மூதி.. செத்த மூதி அவ பின்னாலே போலாம்லாலே… எதுக்கு இங்க வரணும்… போடா நாயி!”
மைதீன் சைக்கிளை எடுத்துக் கொண்டு போனார். அவர் தலைமறைகிற வரை மைதீன் பாய் ஒன்றும் பேசவில்லை. சற்று நேரம் பொறுத்து, “சுல்தானா அக்காகிட்டே எல்லாத்தையிம் நீ சொல்லிட்டியா” என்று கேட்டார்.
(எலிசபெத் ராணி)
விடிகாலை போல ஒரு கனவு வந்தது அப்பா அவளை அணைத்தபடி அம்மாவைப் பார்த்து எக்காளமாகச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்; அம்மா ஏதோ சாபமிட்டு விட்டு, இவர்களைக் கூட்டிக் கொண்டு கீழ்த்திசை நோக்கி நடந்து போய் கொண்டிருந்தாள்; சூரியன் மேலே வரவர இருள் விலகி வெளிச்சம் பரவியது.
(சூரிய சந்திரர்கள்)
ஒருவிதமான மனநோய்; அம்மாவுக்கு மனநோய்தான் பக்கத்தில் இருக்கிற பெண்களையெல்லாம் தேவடியாளென்று சொல்வது என்னவாக இருக்கும்.
பசியும் மனக்கஷ்டமுமான வேகத்தில் இவன் கத்தினான்: “நீங்கள்லாம் சாவுங்க… யாரைப் பார்த்தாலும் தேவடியாங்கே… பக்கத்திலே பொம்பளையே இருந்துரப்படாதே உனக்கு, சக்களத்தியாக்கிருவியே முண்ட. உன் புருஷன்மம்முத ராஜா… ஊர்ல உள்ளவள்லாம் அலையுதா.. பெத்த பிள்ளையக்கூட சந்தேகப்படுவியே நீ அந்த மனுஷன் என்னைக்கோ கூத்தியார் வச்சிருந்தான்னா இதுக்கு இப்படியா… அப்படிப் போனாத்தான் போறாரு என்ன குடிமுழுகிப் போகுது…”
அம்மாவை அப்படிப் பேசியிருக்க வேண்டாம் என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது. (திரிபு)
இவை விக்ரமாதித்யன் எழுதிய 11 சிறுகதைகள் அடங்கிய ‘திரிபு’ சிறுகதைத் தொகுப்பின் சில கதை வரிகள். இவை போன்ற கதைவரிகள்தான் இக்கதைகளின் மொழிதல்கள் ஆகியிருக்கின்றன.
இம்மொழிதல்களின் பின்புலத்தில் இருக்கும் கதையாடலைக் காண்பது இப்பிரதிகளை அறியும் வேலையாக அமையும். தமிழ்ச் சொல்லாடலின் வரலாறு, இம்மொழிதல்கள் உருவாகும் சூழலைக் காட்டுகிறது. தமிழ் வணிகக் கலாச்சார மொழிக்கு மாற்றாக சிறுபத்திரிகைக் கலாச்சார மொழி உருவான தமிழ்ச்சூழலின் காலக்கிரமத்தைத் தொடரும் வேலையைத்தான் ‘திரியு’ எனும் இச்சிறுகதைத் தொகுப்பு செய்துள்ளது.
இச்சிறுகதைத் தொகுப்பின் கதை கூறன்கள், தமிழ்ச் சிறுபத்திரிகைக் கலாச்சார மொழியின் பாரம்பரியத்தைத் தாங்கி நிற்பதில், இலக்கியத்திற்கும் மொழிக்கும் இடையிலுள்ள ஊடாட்டத்தைக் காட்டுகின்றன. தமிழ்ச் சிறுபத்திரிகைக் கலாச்சார மொழி உருவாக்கும் மனித அவல புராணிகங்களைச் சலிக்காமல் முன்னெடுத்துச்செல்கின்றன இத்தொகுப்பின் பிரதிகள் ‘எதிர்ப்பு எனும் சமூகவியல் வடிவமாக’ சிறுபத்திரிகை கலாச்சாரக் குரல் கொள்ளப்படுவதன் காரணிகளாக இவை போன்ற பிரதிகள் இருக்கின்றன.
தமிழ்ச் சிறுபத்திரிகைக் கலாச்சார மொழி இலக்கிய உற்பத்திகளால் பட்டுமல்ல, நுகர்வு அரசியலாலும் கட்டமைக்கப்படுகிறது. இந்த நிலையில் இது போன்ற கதைக் கூறன்கள் வாசிப்பின் மொழியிய மானுடவியலின் மீது வினைபுரிபவையாக அமைகின்றன. இவை போன்ற கதைக்கூறன்களின் ஒலிஅலைகளுக்குத் தகவமைக்கப்பட்டிருக்கும் நுகர்வு அரசியல் குழாம், தமிழ்ச் சிறுபத்திரிகைக் கலாச்சார மொழியை மறு உற்பத்தி செய்கிறது. தமிழ் என்ற மொழியின் பயன்பாட்டுத் திறன் வெளிப்படுத்தும் மதிப்பு இவ்வாறு தொடர் ஆக்கமாக நடைபெற்றுக்கொண்டே போகிறது.
தமிழ்ச் சிறுபத்திரிகைக் கலாச்சாரம் இலக்கியத்தில் தேக்கி வைத்திருக்கும் ‘உண்மைகள்’ சிறுகதைத் தொகுப்பிற்குள்ளிருந்தும் உதிர்கின்றன. தமிழ் வணிகச் சூழல் வெளிப்படுத்த மறுக்கும் கலாச்சார மறைவுகளை சிறுபத்திரிகைகள் அவணிகத்தன்மையுடன் காட்டுவதற்கு இச்சிறுகதைத் தொகுப்பையும் எடுத்துக்காட்டாகக் கொண்டுவிடலாம்.’
தமிழ்ச் சிறுபத்திரிகைக் கலாச்சாரத்தில் இன்னும் தொடர்ந்திருக்கும் தந்தையுரிமையின் ஆதிக்கம், தமிழ்ச் சிறுபத்திரிகைக் கலாச்சாரத்தின் ஒலிப்புகளான இச்சிறுகதைப் பிரதிகளின் மீதும் இருப்பது தவிர்க்க முடியாததுதான் இவை போன்ற பிரதிகள் தமிழ்ச் சிறுபத்திரிகைக் கலாச்சார நோய்மை பீடித்திருக்கும் தந்தையுரிமை தெடர்புறுத்தங்களாகவே இருக்கின்றன.
பெண்மை, பெண் பாலியல் போன்றவை பற்றித் தமிழ்ச் சிறு பத்திரிகைக் கலாச்சாரம் உருவாக்கியிருக்கும் புனைவுக் கருத்தாக்கங்களைத் தொடர் உற்பத்தி செய்வதில் இச்சிறுகதைப் பிரதிகளும் விதிவிலக்கில்லை. பெண் குறித்த நிலைப்பட்ட இம்மொழிச் செயல்பாடுகள் மனித வளத்தின் மறைக்கப்பட்ட வரலாறுகளாகவே தங்கிவிடுகின்றன.
நன்றி – முபீன்,
முன்றில் இதழ்: 16, ஏப்ரல் 1994

