என் பணி என்பது பெரும்பாலும் பணம் வசூல் செய்வதும் புது வேலைகளுக்காக அலைவதும்தான். கிட்டத்தட்ட என் முதலாளி செய்ய வேண்டிய வேலைகள் இவை. அவர் முதல் கொரானா அலையில் இறந்ததால் இப்போது என்னிடம் இந்த பணிகள் வந்து விட்டன. முதலாளி அப்படி ஒன்றும் நல்லவர் இல்லை, இறந்தார் என்று அறிந்த போது முதலில் ஒரு உற்சாகம் தோன்றி மறைந்தது, அது ஏன் என்று சொல்ல இயலவில்லை, அவரிடம் இருந்த பத்து வருடங்களில் அவர் அளித்த கசப்புகளின் தொகுப்பு அந்த மகிழ்வை எனக்களித்திருக்கலாம்.
அவர் இறந்த பிறகு அவர் மனைவி தொழிலைப் பார்க்க வந்து விட்டார். அவருக்கு தொழில் பற்றி எதுவும் தெரியாது என்றாலும் சொந்தக்காரர்கள் கையில் போனால் தன் கைவிட்டு போய்விடும் என்பதால் உள்ளே வந்தார். சில நாட்கள் மட்டுமே அடங்கி நிற்கும் குழந்தை போல இருந்து ஒவ்வொன்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டாள். சரியாக இரண்டு வாரம்தான், பிறகு அப்படியே தோரணை மாறி விட்டது, முதலாளியே பரவாயில்லை என்றும் தோன்றும் அளவிற்கு வேலை வாங்கினாள். கணக்குகள் கேட்டாள். நான் மட்டும் தப்பித்தது எப்படி எனில் இந்த தோரணையை அவளால் வெளியில் கொண்டு செல்லவில்லை, அதற்கு பதில் என்னை வசூலுக்கு அனுப்பினாள். ஆர்டர்கள் கேட்க அனுப்பினாள். ஒவ்வொரு அரைமணிநேரத்திற்கும் போனில் கட்டளை வந்து கொண்டே இருக்கும். என் அதிர்ஷ்டம் அவளுக்கு வெளியுலகம் தெரியாது என்பது. என் சவுரியத்திற்கேற்ப பொய்கள் சொல்வேன். ஆனால் பண விஷயத்தில் ஏமாற்றியதில்லை. முழுதும் ஏமாற்றியதில்லை என்று சொல்ல முடியாது. தினச் செலவு அளவுக்கு திருடிக் கொள்வேன், மற்றபடி வேலைகளை சரியாக செய்து கொடுத்து விடுவேன். என்ன ஒன்று பாதி நேரம் அங்கங்கு அமர்ந்து கொண்டு ஓப்பியடிப்பேன். இப்போது அப்படித்தான் வேலைநேரத்தில் அமர்ந்து கொண்டு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். எப்படியாவது இதை ஒரு சிறுகதை ஆக்கிவிட வேண்டுமென்று. நான் எழுத இருப்பது என் முதலாளியின் கதையோ அல்லது அவரது மனைவியின் கதையோ அல்ல. இங்கு தற்போது நான் வசூல் செய்ய வந்து அமர்ந்திருக்கும் கம்பெனியில் துடைக்கும் பெருக்கும் வேலை செய்யும் மாரியம்மாள் கதையை சொல்லவே.
இந்த கம்பெனிதான் எங்களுக்கு நிறைய வேலைகள் கொடுக்கும் கம்பெனி. எனவே வேலை சார்ந்த தகவலுக்காக, வசூலுக்காக, பொருட்களை எடுத்துச் செல்வதற்காக, கொண்டு வந்து போடுவதற்காக என தினமும் எப்படியும் ஒருமுறையாவது வந்து விடுவேன். அப்படி வந்து பேசிப்பேசிதான் மாரியம்மாள் பழக்கம். அவளுக்கும் எல்லா வயதான பெண்களைப் போல மாமியார் மருமகள் பிரச்சனைதான். அதை அவள் கையாண்ட விதம் மிக அழகு, அந்த பக்குவம் அவளில் வர அவளது மொத்த வாழ்வையும் தெரிந்து கொள்வது அவசியம்.
அவள் நடையில் ஒரு கோணல் இருக்கும். வலதுகால் சற்று உயரம் குறைவு. அதனால் உருவான கோணல் அது. எம்பிஎம்பி தான் நடப்பாள். அந்த நடைதான் அவளை என்னை கவனிக்க வைத்தது என்று இப்போது தோன்றுகிறது. ஒருமுறை இந்த கம்பனியில் காத்திருந்து நேரம்ஆகி பசி வந்து சோர்வாக அமர்ந்திருந்தேன். ” ஏன் கண்ணு சாப்பிட போலையா ” என்று அவள் கேட்டபோதுதான் பதில் சொல்ல முதன்முதலாக அவளிடம் பேசத் தொடங்கினேன். அழகு என்று சொல்லமுடியாது, ஒல்லியாக இருப்பாள், கழுத்து எலும்புகள் தெரியும், முடியில் செம்பட்டை நிறம் சற்று தெரியும், ஆனால் தூய்மையாக இருப்பாள், வாயில்மட்டும் எப்போதும் வெத்திலை இருக்கும், அவள் சும்மா உட்கார்ந்திருந்தாள் என்றால் வெத்திலை போட்டு கொண்டிருக்கிறாள் என்று அர்த்தம், கம்பனியில் யாரும் அவளை மிரட்ட முடியாது, வெடுக்குவெடுக்கென்று பதில் சொல்லிவிடுவாள், கம்பெனி ஆட்கள்கூட குறை சொல்ல பயப்படுவார்கள், இந்த கம்பெனி மானேஜரே அவளிடம் சற்று யோசித்துதான் பேசுவார், ஆனால் எல்லோருக்கும் அவளைப் பிடித்திருந்தது, பேசாவிட்டாலும் அவள் மீதான மதிப்பு எல்லோரின் பார்வையிலும் இருந்தது. இப்போது யோசிக்க அவளது தலைகுனியாத அந்த மனநிலைதான் அவளுக்கு அதை பெற்றுக் கொடுத்தது என்று தோன்றுகிறது. ஒரு துப்பரவு செய்யும் பெண்மணியை எங்கும் இவ்வளவு நிமிர்வாக நான் பார்த்ததில்லை, எனக்கும் கூட இந்த இயல்புதான் இவளுடன் தொடர்ந்து பேச, நட்படைய வைத்தது என்று தோன்றுகிறது.
ஒருமுறை நீண்ட நேரம் ஏதும் செய்யாமல் படிக்கட்டின் திட்டில் அவள் அமர்ந்திருந்ததை வரவேற்பு அறையின் இருக்கையில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். போய் அவளிடம் நின்று பேசலாமே என்று தோன்றியது. உட்கார்ந்து காத்து சலித்திருந்தேன். நேராகப் போய் “என்னாச்சு, ஏன் இப்படி உட்கார்ந்திருக்கீங்க ” என்றேன்.
அப்போதுதான் தன் மருமகள் பற்றி முதன் முறையாகச் சொன்னாள். அண்ணன் மகள்தான், குடும்பம் பிளக்கக்கூடாது என்று தம்பி மகளையே சொல்லிவைத்து மருமகளாக கொண்டுவந்திருந்தாள். மகனுக்கும் மருமகள் மீது அன்பு உண்டு, மருமகள் கூட நல்ல பெண்தான், அம்மா போன்ற உரிமையில்தான் அவளிடம் பழகுவாள். வீட்டின் செல்லப்பெண். ஆரம்பத்தில் நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது. பிறகு மருமகளுக்கு சலிப்பு உருவாகத் துவங்கி இருந்தது. அறை சின்னதாக இருக்கிறது என்றாள், வீட்டில் தேவையான பொருட்கள் இல்லையென்றாள், நல்ல உடைகள் குறைவு என்றாள், மகனின் பைக் பழையது நன்றாகவே இல்லை என்றாள். பிறகு அத்தை செய்யும் ஒவ்வொன்றும் மருமகளுக்கு ஒவ்வாததாகவே மாறியது. சுவை நன்றாக இல்லை என்றாள். அத்தை கஞ்சப்பிசினாறி என்றாள். அத்தை ஒவ்வொன்றையும் கேட்டு தொல்லை தருகிறாள் என்றாள். இந்த வீடு எனக்குச் சிறைச்சாலை போல இருக்கிறது என்றாள். ஒரு நாள் சண்டை முற்றி அம்மா வீட்டிற்கே கிளம்பிப் போய் விட்டாள். மருமகளை திரும்ப கொண்டுவர முயன்று முயன்று சலித்திருந்தாள். அந்த சலிப்பில்தான் நான் கேட்டபோது இருந்தாள். நான் கேட்கவும் இதையெல்லாம் சொன்னாள். “பையன் என்ன சொல்றான் ” என்று கேட்டேன். ”அவன் பாவம், ‘விடுமா வரும்போது வரட்டும் அவங்கிறான் மகன்” என்றாள். ” பொறுமையா கையாளுங்க ” வரவேற்பு அறையில் இருந்து எனக்கு அழைப்பு கிளம்பி விட்டேன்.
பிறகு ஒரு நாள் சாயங்காலம் அவளைப் பார்த்தேன். என்னை கவனிக்காது பணியில் ஆழ்ந்திருந்தாள். ” மாரியம்மா ” என்றேன். சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்து சற்று சிரித்தாள், ” என்னாச்சு மருமக வந்துட்டாளா ” என்றேன். ” இல்லை, இன்னும் கொஞ்சம் பார்ப்பேன், வரலைனா அவ வீட்டுல சொல்லி முடிச்சுட்டு பையனுக்கு வேற பொண்ணை பார்த்திடலாம்னு யோசனை வருது ” என்றாள், ” அது பாவம், சேர்த்தி வைங்க ” என்றேன், ” அதுக்கு அவ வரணும்ல, அவதான் போனா, அவளே வரணும், நான் போய் கூப்பிட மாட்டேன், தம்பி கூட கூப்பிட்டு கூப்பிட்டு போனு சொன்னான், முடியாதுனு சொல்லிட்டேன், வேணும்னா அவளே வரட்டும் ” என்றாள். எனக்கும் இவள் சொல்வது சரியானதாகவே தோன்றியது. “ஆக கடைசில பையன்தான் பாவம் ” என்று சொல்லிச் சிரித்த படி நகர்ந்து விட்டேன்.
என் பணி சார்ந்து சொல்லாமல் விட்டுவிட்டேன். நான் பணி செய்வது பனியன் துணிக்கு வண்ண அச்சு ஏற்றித் தரும் தொழிற்கூடம், 20 பேர் வரை உள்ளோம். முதலாளியின் மனைவி மற்றும் நான் பார்த்துக்கொள்கிறோம். மற்றவர்கள் அச்சுப் பணி செய்பவர்கள். நாங்கள் பிற பனியன் கம்பெனிகளில் இருந்து பனியனின் முன்பக்க துணியை மட்டும் எடுத்து கொண்டுவந்து அச்சேற்றி அனுப்புவோம். பிறகு அது தைக்கப்பட்டு முழுதாகும். அச்சில் எவ்வளவு வண்ணங்கள் உள்ளதோ அந்த அளவு அச்சின் விலை இருக்கும். போலவே அளவு பெரிதுசிறிதிற்கேற்ப விலை கூடும் குறையும். மற்றபடி அச்சு வடிவத்தில் என்ன ஓவியம் அது என்றெல்லாம் பார்க்கவே மாட்டோம். அல்லது பார்த்துப்பார்த்து சலித்து ஓவியங்களை, படங்களை பார்க்கும் நுண் ரசனையையே இழந்து விட்டோம். எங்களைப் பொறுத்தவரை சாம்பிளின் வண்ணத்திற்கு துளியும் மாறாமல் இருக்கவேண்டும். அச்சு எந்த விதத்திலும் பிசகக் கூடாது. அப்படி ஆனால் டெபிட் போட்டு கொடுக்கும் பணத்தை குறைத்து விடுவார்கள்.
மாரியம்மா பணிசெய்யும் ‘தேவகி அப்பேரல்ஸ் ‘ கொஞ்சம் நல்ல கம்பெனி. எங்களுக்கு மெயின் கஸ்டமரே இந்த கம்பனிதான். இந்த கம்பெனி முன்பக்கம் பார்க்க பிரமாண்ட மாளிகை போல இருக்கும். ஓனரின் ஆடி கார் போர்டிகோ முன்பு ஒய்யாரமாக நின்று கொண்டிருக்கும். என்னை கிட்டத்தட்ட இந்த கம்பெனியின் ஊழியர் போல நடத்துவார்கள். எங்கு வேண்டுமானாலும் செல்வேன், சுற்றுவேன், நீண்டநாள் பழக்கம் என்பதால் யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள். ஓனர் எப்பாவது அழைத்துப் பேசுவார். முன்பு எப்போது பார்த்தாலும் அழைத்துப் பேசிக் கொண்டிருப்பார். அவருக்கும் நேரம் போகாது, எனக்கும் இன்னும் பண்டில் ரெடி ஆகாமல் இருக்கும். என் புத்தக வாசிப்பை எல்லாம் அவரிடம் சொல்லியிருக்கிறேன். ஜெயமோகனை கிட்டத்தட்ட என் குருநாதர் ரேஞ்சில் சொல்லி இருக்கிறேன். பிறகு கம்பெனி பெரிதாக பேசுவது குறைந்தது. ஆனாலும் எப்போதாவது பார்க்க நேரிடும் சமயத்தில் பேசுவார். நல்லா டிரஸ் பண்ணுடா என்பார். தீபாவளிக்கு முன்பு தனியாக அழைத்து ஸ்வீட்பாக்ஸும், கவரில் பணமும் வைத்து தருவார். விஷஸ் சொல்வார். எவ்வளவு உயர்ந்தாலும் அவரின் குணம் மாறவில்லை, முகத்தின் ஆரம்பத்தில் இருந்த புன்னகைதான் எப்போதும்.
மாரியம்மாளுடன் ஒருமுறை நின்று பேசி கொண்டிருந்ததை பார்த்து சிரித்தார், “இவனோடு பேசாதீங்க, ஜெயமோகன்னு ஏதாவது சொல்லி கொல்லுவான்” என்று சொல்லிச் சென்றார். மாரியம்மாளுக்கு எனக்கு ஓனருடன் இந்த அளவு நெருக்கம் இருந்தது ஆச்சிரியம் அளித்தது. அவள் கண்கள் மின்ன “யாரு ஜெயமோகன் ” என்றாள். “அது என் சொந்தக்காரர் ஒருத்தரு, இவருக்கும் தெரிந்தவரு ” என்று சொல்லி அந்த பேச்சை முடித்தேன். “ஓ ” என்றாள் பொதுவாக. சட்டென்று முகம்மாறி ” எனக்கு என் பிரச்சனையே தீர மாட்டேங்கிது ” என்று வேலை செய்ய ஆரம்பித்தாள். எனக்கு சட்டென ஞாபகம் வந்து ” என்ன சொல்றா மருமக ” என்றேன். ” தனி குடுத்தனம்னா வரேன்னு சொல்றா ” என்றாள். எனக்கு கேட்க கொஞ்சம் சங்கடம் வந்தது. பிறகு ” விடுங்க, சின்னபுள்ளைக ” என்று சொல்லிச் சிரித்தேன். அவளும் சிரிப்பினில் கலந்து கொண்டாள்.
சிலநாட்கள் போன பின்பு கம்பெனி உணவுக் கூடத்தில் மாரியம்மாவை பார்த்தேன். எல்லோரும் சுற்றி அமர்ந்து உண்டுகொண்டிருக்க இவள் தனியாக ஓரத்தில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். நான் நீர் அருந்த அங்கு வந்திருந்தேன். அவளைப் பார்க்கவும் போய் அவள் அருகில் அமர்ந்து கொண்டேன். என்னை சாப்பிட சொன்னாள். வேணாம் என்று சொல்லி அவள் சாப்பிட நான் அருகில் அமர்ந்து கொண்டிருந்தேன். ” உங்களுக்கு ஒரு பையன்தானா ” என்றேன். “ஆமாம்” என்றாள். பிறகு நான் “வீட்டுக்காரர் என்ன பன்றார் ” என்று எதேச்சையாக கேட்டேன். ” சும்மாதான் இருக்காரு ” என்றாள். “இங்க ஏதாவது வேலை வாங்கி கொடுத்டலாம்ல “என்றேன். அவள் சற்று மவுனமாகி பின் ” அவரு என் கூட இல்ல, மகன் பிரசவத்துக்கு முன்னாடி அம்மா வீட்டுக்கு வந்தேன், பிறகு போகவே இல்ல” என்றாள். கேட்டு சற்று அதிர்ச்சி ஆகிவிட்டேன். சில கணம் அமைதியாகி விட்டேன்.
அவளாகவே சொல்ல ஆரம்பித்தாள் “அம்மாவோட தம்பிதான் என் வீட்டுக்காரரு, 16 வயசுலயே கல்யாணம் நடந்துருச்சு, ரொம்ப ஆசை ஆசையா கட்டிகிட்டேன், கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாம் மாமா மேல ரொம்ப பாசம், ஆனா பயமும் அதிகம், பார்க்க மாடு கணக்கா இருப்பாரு, வீட்டுக்கு வந்தார்னா தூரத்துல நின்னு வச்ச கண்ண மாத்தாம பாத்துட்டே இருப்பேன், என்னடினு அவரு சொன்னாலே பயந்து ஓடிடுவேன், டவுன்ல வேலை அவருக்கு, மாசம் ஒருக்கா இல்லைனா எதாவது விசேசத்துக்குத்தான் வருவாரு. அதும் அதிகம் இருக்க மாட்டாரு. அம்மாதான் இப்படியே வெளிய சுத்திட்டு இருந்தா ஆகாதுனு சொல்லி, பேசி என்னைக் கட்டி வச்சாங்க. “
“கல்யாணம் ஆன பிறகுதான் எனக்கு பயம் அதிகமாச்சு. டௌன்க்கு கூட்டி போயிட்டாரு. ஒத்த வீடு அது. நைட்தான் வருவாரு. விடியக்கால போயிடுவாரு. நான் தனியா பயந்துட்டு இருப்பேன். கொஞ்ச நாள்லயே அவருல வித்யாசம் தெரிஞ்சது. குடியோனு நினைச்சேன். ஆனா குடியில்ல, வேறொன்னு, கஞ்சா. நான் பயந்து நடுங்கிட்டேன். கஷ்டப்பட்டு தைரியம் வரவளச்சு ” என்னங்க இது” னு கேட்டேன், நைட் பூரா அடிச்சாரு. துணியெல்லாம் புடிச்சு கிழிச்சு வீசுனாரு. பயந்து பதுங்கி அழுதேன், அழுதா மேலும் அடி. இப்படியே ஒரு மாசம் போச்சு. அம்மா ஒருநாள் வீட்டுக்கு வந்தாங்க, என்னால சொல்ல முடியல, அதும் பாவம், தெரிஞ்சா மனசொடிஞ்சுடும், ஏதும் சொல்லல, ஆனா கண்டுபிடிச்சுடுச்சு. ஏன் புள்ள இப்படி இருக்கானு தம்பி கூட சண்டை போட்டுச்சு.
ஆனா அவரு ஏதும் சொல்லாம கிளம்பி போயிட்டாரு, அம்மா அழுதுட்டே ” கூட வரயாமா ” கேட்டுச்சு. நான் போல. ஒன்னுமில்லமானு சொல்லி இருந்துட்டேன். இரண்டுமாசம் கூட தாங்க முடியல. ஒருநாள் விறகு கட்டைல அடிஅடின்னு அடிச்சான். நடுராத்திரி, வெளிய ஓடி வந்துட்டேன். கரும்பு காட்டுக்குள்ள விடியற வரை ஒளிஞ்சுருக்கேன். பயம்னா அம்புட்டுப்பயம். என்னாகுமோன்னு, மாசானியம்மா காப்பாத்துன்னு னு சொல்லிட்டே சத்தம் வராம அழுதுட்டே இருந்தேன். இப்ப யோசிக்க சிரிப்பு வருது. சின்ன பூச்சு போனாலும் பயம், தூங்கலை, கரும்பு காடு இருட்டு. வானத்த பார்த்துட்டே இருந்தேன். கண்ணு அதுலயேதான் இருந்தது. எப்ப வெளிச்சமாகும்னு, வெளிச்சமாச்சுன்னா எழுந்து ஓடிடலாம்னு. இப்பவும் வானத்தை பார்த்தா பார்த்துட்டே இருப்பேன், என்னை முழுசா வானத்துக்கு தெரியும்னு தோனும்.
வெளிச்சம் வந்ததும் ரோட்டுக்கு வந்து அலைஞ்சு எப்படியோ அம்மா வீட்டுக்கு போயிட்டேன். அம்மா என்னை பார்த்து அழுதா. வா போய் கேட்போம்னு சொன்னா. நான் வேணாம்னு சொல்லிட்டேன். இரண்டு மூணுநாள் போக நான் உண்டாயிட்டேன்னு தெரிஞ்சது. பயம் வந்தது. அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டா. எல்லாம் சரியாகிடும்னு சொன்னா. அவன் திருந்தி வந்து உன்ன கூட்டிட்டுப் போவான்னு சொன்னா. அத கேட்கும் போதே உடம்பு நடுங்கிடும், கொஞ்சநாள் போக கொஞ்சம் தைரியம் வந்தது. மாசானியம்மா என்னை காப்பாத்துவானு நினைச்சேன். அவதான் என் வயித்துல என்னை பாத்துக்க பையனை கொண்டுவந்துருக்கானு நினைச்சேன். நான் உண்டாயிட்டேன்னு தெரிஞ்சதுமே அது பையன்தான்னு உறுதியா நினைச்சேன். பையன்மட்டும்தான் உறுதியா நின்னேன். அவன்தான் எனக்கு பாதுகாப்பு எல்லாம்னு நினைச்சேன். ஒருவேளை பொண்ணு பிறந்தா தற்கொலை பண்ணியிருப்பனோ என்னமோ, நான் நினைச்சது போலவே ராஜன் பிறந்தான்.
பையன் பிறந்ததை ஆள்விட்டு அம்மா தம்பிக்குச் சொல்லி அனுப்பிச்சு. அவரு வரவே இல்ல. அம்மாக்கு பயம் அதிகமாயிட்டு இருந்தது. எனக்கு அவரு வராம இப்படியே இருக்கணும்னு இருந்தது. பையன் எப்ப வளந்து பெரியாளாவான்கிறதுல மட்டும்தான் ஆர்வமில்ல. வெறியே இருந்தது. அம்மாவே என்னோட போக்கைப் பார்த்து அரண்டுட்டா.
ஒருநாள் சண்முகம் மாமா பதறி வீட்டுக்கு வந்தாரு. அம்மாகிட்ட உன் தம்பி பத்ரகாளி அம்மன் கோயில்ல இன்னொரு பொண்ண கூட்டிவந்துட்டு கல்யாணம் பண்ணிட்டு இருக்கான்னு சொன்னாரு. அம்மா அத கேட்டு வெறிகொண்டு கோயிலுக்கு ஓடினா. எனக்கு அத கேட்டு எப்போதைக்குமான ஏதோ இழந்துட்டோம்னு தோனிச்சு. அழுக வந்துச்சு. பையனை தூக்கிட்டு அம்மா பின்னாடி ஓடினேன். சண்முகம் மாமாவும் கூட வந்தாரு.
நாங்க போறதுக்குள்ள கல்யாணம் முடிஞ்சுடுச்சு. வெளிய வந்துட்டு இருந்தாங்க. எங்களை பார்த்ததும் அப்படியே நின்னுட்டாங்க. அம்மா மண்ணு வாரி வீசி திட்டினா, அழிஞ்சுருவே, நாசமா போவ, புழுத்து நாறுவனு என்னமெல்லாமோ சொல்லி அவரை திட்டுச்சு. திடீர்னு என்னமோ நினைச்சு திரும்பி என்னை பார்த்து கைபுடிச்சு இழுத்துட்டு வந்து கோவில்ல வாசல்ல சாமி தெரியமாதிரி நின்னு, என் மகளோட புருஷன் செத்துட்டான்னு சொல்லி என் தாலியை புடுங்கி அவரு மேல வீசிச்சு. பையனை கீழ தள்ளி என் இரண்டு கையையும் புடிச்சு இழுத்து, இரண்டு கையையும் ஒன்னொடு ஒன்னை இடிச்சு எல்லா கண்ணாடி வளையலயும் ஒடச்சுருச்சு, கையெல்லாம் ரத்தம். அங்க இருந்த எல்லாரும் எங்களதான் பார்த்துட்டு இருந்தாங்க. அம்மா வாடி னு இழுத்துட்டு திரும்ப போனாங்க. நான் அம்மா கைய உதறி புள்ளையை தூக்கி வச்சுக்கிட்டு, அம்மா பின்னாடி போனேன். என் கைல இருந்த ரத்தம் பையன் மேலயும் ஒட்டிக்கிச்சு. அவன் என்னன்னே புரியாம அழுதுட்டு இருந்தான். அதோட அவரை விட்டதுதான்.
மாரியம்மா சொல்ல அப்படியே நிகழ்வுகளை கண்முன்பு பார்த்து கொண்டிருந்தேன், பதிலாக என்ன சொல்வது என்று தெரியாமல் இருந்தேன், பிறகு ” இங்க திருப்பூர் எப்படி வந்தீங்க ” என்றேன்.
இரண்டுமூணு வருஷம் அம்மா கூட இருந்தேன். தம்பிக எல்லாம் சின்னப்பசங்களா இருந்தாங்க. அம்மாக்கு பாரம் கொடுக்க கூடாதுனு தோனிட்டே இருந்தது. ஏதாவது வாய்ப்பு கிடைக்குமானு பார்த்துட்டே இருந்தேன். அப்பத்தான் எங்க ஊர்ல இருந்து திருப்பூருக்கு வேலைக்கு வர தொடங்கி இருந்தாங்க. வேலை கத்துக்கிட்டா நல்ல சம்பளம்னு பேசிக்கிட்டாங்க. எங்க வீட்டுப்பக்கத்துல ஒரு அண்ணன் தன் குடும்பத்தோட திருப்பூர் வந்தாரு. நான் அவங்க கிட்ட என்னையும் கூட்டிட்டு போக சொல்லி கேட்டு இங்க வந்துட்டேன். வந்த இரண்டாவது நாளே பனியன் கைமடிக்கற வேலை கிடைச்சது. ஒரு மாசத்துக்குள்ள டைலர் வேல கத்துக்கிட்டேன். கொஞ்சம் காசு வந்ததும், அண்ணன் பக்கத்துலயே ஒரு வீடு காலியாக அத எனக்கு புடிச்சு கொடுத்தாரு. அம்மாவையும் தம்பிகளையும் இங்க கூட்டியாந்துட்டேன். தம்பிகளுக்கு படிக்க ஆர்வமில்லாம ஆகி ஆளுக்கு ஒரு வேலைக்கு போனாங்க. அப்பறம் நின்னுட்டோம். தம்பிகளுக்கு முன்னாடி நின்னு கல்யாணம் பண்ணி கொடுத்தேன். இப்ப இருக்கற மருமக என் தம்பி பொண்ணுதான். அதான் இவ்வளவு பொறுக்கறேன், தம்பியும் புள்ளையா ஆசையா வளத்தினவன், அவனுக்கும் என்ன பண்றதுனே தெரியல.
எனக்கு சட்டென்று சிரிப்பு வந்து விட்டது, “இவ்வளவு நெருங்கின பிள்ளையையா விட்டுப்போட்டு வேற பிள்ளையை பிடிச்சு கல்யாணம் பண்ணி கொடுத்துவேன்னு சொன்னேங்க “என்று சொல்லி சிரித்தேன். “இப்பத்த காலமே வேற, யாரையும் என்ன நினைக்கறாங்க, என்ன நினைச்சுக்குவாங்கனு ஒன்னும் புரிஞ்சுக்க முடிய மாட்டேங்கிது “என்றாள். ” ஏன் டைலர் வேலைய விட்டீங்க ” என்றேன். ” அது சலிச்சுடுச்சு, ஒரு இடத்துல உட்கார முடியல, அப்பறம் வேலைக்கு போகாம இருந்தேன், பொழுது போகாம எங்காவது போலாம்னு நினைச்சு இங்க சேர்ந்துட்டேன் ” என்றாள்.
எனக்கு வேறொன்று தோன்றி” பிறகு உங்க வீட்டுக்காரரை பார்க்கவே இல்லையா? என்றேன் ” ” “பார்க்காம என்ன விசேஷங்கள்ல பார்ப்பேன். இப்ப மாறிட்டாரு. என் மேல பாசம் இருக்கு ” என்றாள். நான் அதிர்ச்சியாகி “அப்ப இரண்டாவது மனைவி ” என்றேன். “அவ நாலஞ்சு மாசத்துலயே இன்னொருத்தனோட ஓடி போயிட்டா” என்றாள். மேலும் ” மனுஷன் இப்ப எல்லா ஆட்டமும் போயி அடங்கி இருக்காப்புல, உடம்பெல்லாம் போச்சு, குச்சி மாதிரி ஆகிட்டாரு, பயந்த எலி கணக்கா இருக்காரு” என்றாள். மேலும் ” எனக்கு மனசு கேட்க்காம பையனை பேச வச்சேன், போய் பார்க்கற மாதிரி எல்லாம் பண்ணேன். பையன் மேல உசுரா இருக்கார். பையன சிலநாள் அங்க தங்கவும் வச்சேன். அப்பத்தான் ஒன்னு தெரிஞ்சது. அந்த ஆள் கஞ்சாவ விடல, வீட்டுல பொட்டணத்தை பார்த்து பையன் கேட்டபோது என்னால இத விட முடியலனு சொல்லி கால்ல விழுந்து அழுத்துருக்கார்” என்றாள்.
எனக்கு மனம் பொங்கி விட்டது ” சேர்த்திக்கலாமே ” என்றேன். அவள் “தம்பி, அம்மா கோவில் முன்ன நின்னு பேசினது, தாலிய வீசினது, வளையலை உடைச்சது எல்லாம் இப்பவும் கண்ணுமுன்ன இருக்கு. அப்படியே இப்ப நடந்ததை போல, அம்மா எனக்காக பண்ணினா, அவளோட தம்பி அவரு, எனக்காக தூக்கி வீசினா, இப்ப அம்மா இல்ல, இறந்து மூணு நாலுவருசம் ஆச்சு, அவளை ஏமாத்த விரும்பல”
என்னால் மேற்கொண்டு பேச முடியவில்லை. “சரி நேரம் ஆச்சு கிளம்பறேன்மா” என்று சொல்லி சிரித்தபடி கிளம்பினேன்.
சிலநாட்கள் அந்த கம்பெனிக்குப் போகவே இல்லை. வாரக் கடைசிதான் போனேன். உண்மையில் போக வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் மாரியம்மாளை காண வேண்டும் என்பதற்காக சென்றேன். அவள் வழக்கம் போல பணியில் சுறுசுறுப்பாக இருந்தாள். நான் அழைத்ததும், என் குரலுணர்ந்து திரும்பிப் பார்த்து சிரித்தாள். “மருமக வந்தாச்சா “என்றேன் . “தனிக்குடித்தனம் வச்சு கொடுத்துட்டேன், வாடகை கொடுக்கறது எல்லாம் அவங்க பாடு” என்றாள். மேலும் “என்னயிருந்தாலும் நம்ம புள்ளதான “என்றாள்.
தன்னைச் சார்ந்த எல்லாருடைய தப்புகளையும் மாரியம்மா என்ற பாத்திரம் மன்னித்து ஏற்றுக்கொள்வது தப்பு செய்யும்
பாத்திரங்கள் மீதான நம் கோபத்தையும் சமன் செய்து விடுகிறது. அலட்டிக்கொள்ளாமல் எழுதிய அருமையான படைப்பு.