பிரமிள் உரையாடல்கள்

பிரமிளின் விமர்சனத் தொடர்ச்சியாக அவரது உரையாடல்கள்-பேட்டிகளை எடுத்துக்கொள்வது சரியாக இருக்கும். கட்டுரைகளில் சொல்லியவைபோக இன்னும் தனக்குள் தன்னை தெளிவுபடுத்தக்கூடியவையாக அவர் கருதியவற்றை பேட்டிகளிலேயே சொல்லியிருக்கிறார். கட்டுரைகளில் ஆளுமையின் fragments மட்டுமே வெளிப்படுகிறது. அது ஆளுமையின் ஒரு குறிப்பிட்ட விஷயம் சார்ந்த கருத்து நிலையாக வெளிப்படுகையில் பெரும்பாலும் வாசகரால் ஊகித்து அறியவும் உணரவும் கூடிய ஒன்றாயிருக்கிறது. பேட்டிகளில் துறை சார்ந்த திட்டவட்டமான கருத்துக்களையும் ஆளுமை குறித்த கோட்டுச்சித்திரத்தையும் நாம் உருவாக்கிக் கொள்ளமுடியும். இவற்றை விமர்சனங்களுக்கான கூடுதல் இணைப்பாகச் சொல்லலாம். மிகச்சரியான கேள்விகள் கேட்கப்படுவதை விரும்பக்கூடியவர் பிரமிள்.

‘பிரதிரூப சம்வாதம்’ என்ற தலைப்பில் (இதழ்: கொல்லிப்பாவை, 1977) அவரே கேள்விகளைக் கேட்டு பதில்களையும் சொல்லியிருக்கிறார். கேள்விகள் ஒன்றைச்சார்ந்து ஒன்றாய், தொடர்ந்து வாசிப்பவருக்கு மட்டுமே புரியக்கூடிய விதத்திலும் உள்ளன. ஒரு படைப்பை படைப்பாக ஆக்குவதற்கு எழுத்தாளரிடமிருந்து வெளிப்படும் உத்வேகமே அடிப்படை என்று அவர் கூறியிருப்பதை முன்பு பார்த்தோம். இலக்கியச் சூழலில் சில எழுத்தாளர்கள் ஒரு கட்டத்துக்குப் பிறகு எழுதுவதை நிறுத்திக் கொண்டுள்ளனர். பெரும்பாலானோரின் எழுத்துக்களில் உயிர்ப்பு இல்லாமல் போய்விடினும், தொழில்முறை பழக்கத்தால் தொடர்ந்து எழுதுகிறார்கள். இதற்குக் காரணம் உத்வேகம் இன்மையே என்கிறார் பிரமிள்.

‘உண்மையில் உத்வேகம் உள்ள கலைஞர்கள், எத்தகைய வரம்புகளினுள் தாம் நிற்கிறோம் என்று பேசாமல், வரம்பை முறிக்கவும் கூடும். வரம்புகள் தம்மை மறிப்பதாகக் கூறுகிறவர்களோ, பெரும்பாலும் தங்களது ஆரம்பகால வீர்யத்தின் இயல்பான ஒரு உந்துதலையே, உத்வேகத்திற்குக் கருவியாக்குகிறார்கள். இந்த நிலையை, தொடர்ந்து கலைஞன் தன்னைத்தானே போஷிக்கிறதானால், பிரச்னாபூர்வமான விழிப்பு நிகழவேண்டும். தமிழில் இத்தகைய விழிப்பு, பெரும்பாலான சிறந்த கலைஞர்களுக்கே தொடர்ந்து இருப்பதில்லை. சுயாபிமானத்திலும், அதைச்சார்ந்த இன அரசியலிலும், லௌகீகத்திலும் மூழ்கி மறைகிறார்கள். அதே சமயத்தில், தாங்கள் ஏதோ ஒரு சமயத்தில் சாதித்தவற்றின் விளைவாகக் கிடைத்த கௌரவத்தைத் தொடர்ந்து காப்பதற்காக, தொடர்ந்து எழுதுவதற்குப் புறம்பான செயல்முறைகளில் இறங்குகிறார்கள். இதன் இன்னொரு காரணம், வெறும் திறன் மட்டுமே முடிவானது என்ற மனோபாவமே என்றுகூட சொல்லலாம். வெறும் திறன்கூட, உத்வேகத்தைச் செயல்படுத்தாது. உத்வேகம், நெருக்கடிகளினால் கதவு இடிக்கப்பட்டாலே வெளியேறும். இந்த நெருக்கடி, பிரச்னாபூர்வமான விழிப்புகளை மேற்கொள்ளுகிற மனசுக்கே இருக்கும்.’

புராணக்கதைகள், இதிகாசங்களில் முடிவில் அல்லது துவக்கத்தில் இதை வாசிப்போருக்கு பல புண்ணிய நதிகளில் மூழ்கியெழுந்த பலன் உண்டு அல்லது சொர்க்கம் உண்டு என்பார்கள். மேலேயுள்ள பத்தியை உணர்ந்து வாசித்தோர் எது படைப்பு எது படைப்பில்லை என்று உணரும் திறன் பெற்றவராகும் தகுதிபெற்றவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. கவிதை ஏன் சாமானியமாய் வந்துவிடுவதில்லை அல்லது ஏன் திடீரென்று அடுத்தடுத்து வந்து பாய்கிறது என்பதற்கும் இதில் விடையுள்ளது. இதைத்தொடர்ந்து, ‘கலைஞனின் கண்காணிப்பு இல்லாவிட்டால் எத்தகைய நுண்மையும் தொடர்ந்து ஜீவிக்காது என்பதை ஒரு அவசியமான – கலாச்சார வாழ்வுக்கு அவசியமான – சூத்ரமாகக் கொள்ளலாம்.’ என்கிறார். எழுத்தாளருக்கு நேரும் எழுத்து மரணத்திலிருந்து உயிர்ப்பிக்கும் சூத்திரம் இது.

ஏன் ஒரு வயதுக்குப் பின் அல்லது திடீரென படைப்பூக்கம் தீர்ந்துபோய்விடுகிறது? ஆன்மீகம் என்ற வார்த்தைக்கு பிரமிள் தரும் வியாக்கியானத்தை ஏற்கெனவெ பார்த்திருக்கிறோம். இது வைதீகம் சாராதது. தனிமனிதனின் அகத்தேடல். ஆனால் புறத்தில் வாழ்வுக்கான தேடல் இலௌகீகமாக உள்ளது. சுய விழிப்பும், சதா கண்காணிப்பும், சுய கேள்வியும் உள்ள மனிதருக்குக்கூட ஒருகட்டத்தில் இவை மறதிக்குச் சென்று இலோகாயதத்தில் கரைந்துவிட வாய்ப்புள்ளது. சமூக அந்தஸ்து, பிறரால் பாராட்டப்படுதல், பாராட்டுக்காக எதையாவது செய்தல், வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்வதில் நாட்டம் கொள்ளுதல் இப்படி பல காரணிகளால் சுய விழிப்பை இழக்க நேரிடுகிறது. அதற்காக ஒருவர் சுகபோக வாழ்வை நிராகரிக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. புறம் சார்ந்த எவையும் மகிழ்ச்சியை நிரந்தரமாக்கிவிட முடியாது (’நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமானால்…இருங்கள்’- டால்ஸ்டாய்). இந்த விழிப்பு உள்ள படைப்பாளி ஒருபோதும் தன் வீர்யத்தையும், படைப்பாற்றலையும் இழப்பதில்லை. இதனால்தான் பெரும்பாலான எழுத்தாளர்கள் தான் இக்கட்டுகளில் இருக்கும்போதுதான் படைப்பாற்றல் வெளிப்படுகிறது என்கிறார்கள். காரணம், அந்நேரத்தில் ஒருவர் தனக்குள் இறங்குகிறார். அது ஒருவரது ஆழத்துக்குள் செல்லவைக்கிறது. அங்கே தன்னை கவனிக்க முடிகிறது. சதா விழிப்புடன் உள்ள ஒருவருக்கு பாதை எல்லாம் புதிது. ஒவ்வொரு கணமும் அவர் முடிவுகளை சுயமாய் எடுக்கிறார். விளைவுகளுக்கு பொறுப்பேற்கிறார். அனுபவிக்கிறார். விழிப்பின்றி அனுபவம் இல்லை. ஒருவயதுக்குப் பின் கண்டடையக்கூடியவை எதுவுமின்றிப் போகிறது. படைப்பூக்கம் என்பது சுயத்திலிருந்து எழுதுவது. சிலர் தொழில்முறை யுக்திகளை வைத்து நளினமாய் மறைக்க முயற்சி செய்கிறார்கள். ஆனாலும் அவை எடுபடுவதில்லை.

கருகித்தான் விறகு
தீயாகும்.
அதிராத தந்தி
இசைக்குமா?
ஆனாலும்
அதிர்கிற தந்தியில்
தூசி குந்தாது.
கொசு
நெருப்பில் மொய்க்காது. (பிரமிள்)

இதையொட்டி கைப்பிடியளவு கடல் தொகுப்பில் வரும் கவிதை வரிகளையும் குறிப்பிடுவது பொருந்தும்:

தார்மீகத் தெளிவற்ற கலையில்லை. ஆனால் கலைஞனுளான். தனது தெளிவின்மை என்ற தடுமாற்றத்தினால் தீண்டப்படாத சங்கதிகள் பற்றி இவன் எழுதி சிகரங்கள் சிலவற்றை சாதிப்பதுண்டு. இருந்தும் ஆரம்பத்தில் உயிர்ப்புக் காட்டி போகப்போக தார்மீகச் சத்தின்மை என்ற ஷீணிப்பினால் மெல்ல மடியும் கலைஞரிவர். தொடர்ந்து எழுதினால் கக்குகிறார் சக்கைகளை. ஆரம்பத்தில் சாதித்ததையே திரும்பச் சுட்டிச் சுட்டிக் காட்டி தகுதி தேடுகிறார்.

ஒருகட்டத்தில் எழுத்தாளனுக்கு தான் உரையாடிக்கொண்டிருப்பது யாரிடம் என்றே சந்தேகம் தோன்றிவிடுமளவு சமூகம் புறக்கணிப்பு மௌனத்துக்குச் சென்றுவிடுகிறது. எழுத்தாளன் தனிமையில் உழல்கையில் அவனது எழுத்தின் நிகழ்காலம் பிற்கால புகழஞ்சலிகளுக்காக சேமித்துவைக்கப்படுகின்றன. தார்மீகமான கோபத்தை, எழுத்தாளன் வெளிப்படுத்துகையில் சராசரி வாசகர்களை சொற்களுக்குள் மூழ்கடித்து எதிர்க்கருத்துக்களை ஸ்தாபிக்கும் திறனை பெற்றவர்களாக எதிரிலிருப்பவர்கள் ஆகிவிடுகிறார்கள். படைப்பாளி மேலும் மேலும் தனது அஸ்திரத்தைக் கூர் தீட்டும்போது சாமானிய வாசகனுக்கு அதன் கூர்மை கண்ணுக்குத் தட்டுப்படாத அளவுபோய் ஆர்வமிழந்து விடுகிறான். அவனுக்குத் தெரிவதெல்லாம் பெரிய எழுத்துக்கள். ஓரளவு முனை மழுங்கிய விளிம்புகள். தீட்சண்யமிக்கவனைத் தாக்க முனை மழுங்கிய ஆயுதம் போதுமானதாகி விடுகிறது. இதுவே எப்போதும் சரித்திரமாயுள்ளது. பிரமிளை கிறுக்கு என்று வெ.சாமிநாதன் குறிப்பிட்டது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பிரமிளின் பதில்:

“என்னைக் கிறுக்கு என்று சொல்லிவிட்டதும் நான் ஓடிப்போய் விடுவேன் என்று இவர்கள் எதிர்பார்த்தால், இவர்கள் அபத்த சொரூபிகள் என்றே ஆகும். ஆனால் இன்னொன்று இருக்கிறது. இதன் பெயர் ‘தர்மார்த்த அதிர்ச்சி’. ஆழ்ந்த அர்த்தங்களில் நம்பிக்கை வைத்து வாழ்பவன், இந்த அர்த்தங்களற்ற போலிகளே பெருகிவருகின்றனர் என்று உணரும்போது, தர்மார்த்த அதிர்ச்சியடைகிறான். தனது கடையைக் கட்டுகிறான். தனது மறைவின் விளைவாக ஒரு புதுவேகம் தனது கருத்துகளுக்கு ஏற்படக்கூடும் என்ற எண்ணம், இந்த அவனது முடிவுடன் சம்பந்தம் கொள்கிறது. யேசுவின் மறைவு இத்தகையது. தம்மைச் சூழ இருப்பவர்கள் மனசாட்சியை இழந்த நிலைகண்டு காந்தி மரணத்தை விரும்பிய சரித்திரப் பதிவுகளும் இத்துடன் ஒப்பிடத் தக்கது. பாரதிக்கு ஏற்பட்டது பற்றி, கொல்லிப்பாவை இதழ் 10ல் எழுதி உள்ளேன்.

இதையொட்டி இன்னொன்றையும் இங்கே சொல்லிவிட வேண்டும். ஒருகட்டத்தில் ந.பிச்சமூர்த்தியைத் தவிர பிற எழுத்தாளர்கள் அனைவரும் பன்றிகள் என்று சொன்னவர் வெ.சா.. பிரமிளை கிறுக்கு என்று சொன்ன இதே நபர்தான், பிரமிளின் ‘கண்ணாடியுள்ளிருந்து’ தொகுப்பின் பின்னட்டையில் இப்படி எழுதுகிறார்: ‘இவரது சமகாலத்திய எழுத்தாளர்கள், இவரைவிடப் பல மைல்கள் பின்தங்கியே நிற்கிறார்கள்”. இலக்கிய விமர்சனமாக ஸ்தாபிதம் பெறாமல் இவை எழுதப்படக் கூடாதவை என்று பிரமிள் எவ்வளவோ கூறியும் வெ.சா. நீக்க மறுத்துவிட்டார். இப்படிப்பட்ட எடுத்தோம் கவிழ்த்தோம் வகையான நபர்களை எப்படி விமர்சகர்களாக சில எழுத்தாளர்கள் கொண்டாடுகிறார்கள் என்பது வியப்புக்குரியது. இந்தவகை அபிப்ராய வீச்சுகளை இப்போது சாரு நிவேதிதா கையாள்கிறார். ந.பிச்சமூர்த்தி குறித்தும் பிரமிள் குறித்தும் இவர் அபிப்ராயங்களைப் பார்க்கையில், ஒருவரை உயர்த்திச் சொல்கையில் மற்றவர்களை குரூரமாகத் தரமிறக்கும் செயலை நாம் பார்க்கமுடிகிறது. இது அப்பட்டமான பிராமணீயத் தந்திரோபாயமன்றி வேறில்லை.

பிரமிள் (ஓவியம்: நெகிழன்)

இந்த தந்திரோபாயம் பற்றிச் சொல்கையில் இன்னொன்று நினைவுக்கு வருகிறது. வெ.சா. கூறிவந்த ‘சூழலை உருவாக்குதல்’ மேற்பார்வைக்கு சாதாரணமாகத் தோன்றும். 2000 ஆண்டுகளாக பிராமணர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிறுவி வந்திருப்பதன் பின்னுள்ள சூட்சுமம் இது. ஒரு படைப்பானது தனது தராதரத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளதே தவிர அவை ஏற்படுத்தப்படும் ஒன்றல்ல. மதிப்புகள் சூழலுக்குத் தக்க மாறுமானால், காலத்துக்குத்தக்க வெளிச்சம் குறிப்பிட்ட நபர்கள்/படைப்புகள் மீது விசிறப்படுமானால் அவற்றின் மதிப்பு அதைக் கையாள்பவர்களால் கூட்டிக்குறைக்கக் கூடியதாக ஆக்கப்படுகிறது. தங்களுக்கு சாதகமானவற்றை உயர்த்திப் பிடிப்பது இவர்கள் போக்கு. அவை இயல்பான படைப்பூக்கம் கொண்டவையாக இருப்பதில்லை. இந்த மழுங்கலான படைப்பியலாளர்கள், தங்கள் தகுதிக்கேற்ப, திட்டத்துக்கேற்ப மேலும் மொண்ணையான படைப்புகளை பிரஸ்தாபிப்பார்கள். கொண்டாடுவார்கள். இதன் தரம் எந்தளவு இறங்குகிறதோ அந்தளவு பெருவாரி இரசிகர்களின் ஆதரவு கிட்டும். இது ஒருவகை இலக்கியச் சூழல் மாசுபாடு. தற்போது ஜெயமோகனும் சாரு நிவேதிதாவும் இந்த வேலையை பிரமாதமாகச் செய்துவருகிறார்கள்.

அதேபோல் எழுத்து இதழில் எழுத சி.சு.செ. வாய்ப்பு தந்திருக்காவிட்டால் பிரமிள் என்று ஒருவர் வந்திருக்கவே மாட்டார், அவர் உருவாக்கத்துக்கு எழுத்து சூழலே காரணம் என்றும் வெ.சா. முதலியோர் சொல்கின்றனர். மேலோட்டமான பார்வைக்கு இது வாதத்துக்கு எடுத்துக்கொள்ளத்தக்க கூற்றாகவே படும். இங்கு எதுவும் ‘உருவாக்கப்படுவதல்ல’. அவ்வவற்றின் மதிப்பும் அருகதையும் தானாக வெளிப்படுகிறது. சமகால இலக்கியச் சூழலை நோக்கினால் நான் சொல்லவருவது புரியும். வெக்கை நாவல் வாசிக்கப்பட அசுரன் படம் தேவைப்படுகிறது. சூல் நாவல் வாசிக்கப்பட சாகித்ய அகாடமி விருது தேவைப்படுகிறது. புத்தகத்தை விளம்பரப்படுத்த யாராவது பேர்போன எழுத்தாளர் அதைப்பற்றி பேசவேண்டியிருக்கிறது. வாசகன் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறான். வாங்கும்பொருள் தரமானதாய் இருப்பதற்கான குறைந்தளவு உத்தரவாதம். இப்படியான வணிகச் சூழலில் பிரமிள் என்ன சொல்கிறார் என்றுகூட யாருக்கும் புரிவது கடினம். எளிதாய்ச் சொல்வதாய் இருந்தால் ஒருவரின் அருகதைக்கு அவரே காரணமே தவிர அது உருவாக்கப்படும் ஒன்றல்ல.

மேலும் சில எழுத்தாளர்கள் படைப்பைவிட மனிதார்த்தமே முக்கியமானது என்ற கருத்தை வலியுறுத்துகிறார்கள். பிரமிளிடம் மற்றவர்கள் சொல்லும் இன்னொரு குறை அவர் நன்றி கெட்டவர். அதாவது ஒருவர் எனக்கு ஓர் உதவிசெய்தால் அவருக்கு நான் கடன் பட்டவன் ஆகிறேன். இதன் பலனை இலக்கியத்தில் அறுவடை செய்வதற்கு மறைமுகமாக நிர்பந்தம் ஏற்படுத்த உரிமையுள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். 90% இங்கே இன்னொருவர் படைப்பைப்பற்றி ஒருவர் பேசுகிறார் என்றால், அவர் என்ன சொல்கிறார் என்பதைவிட அவருக்கும் இவருக்கும் என்ன தொடர்பு என்பதைத்தான் முதலில் கவனிக்க வேண்டியதிருக்கிறது. அந்தளவு ஆபாசக்குட்டையாகக் கிடக்கிறது இங்கே.

பார்வை சிற்றிதழுக்காக எம். கண்ணன் என்ற 18 வயதே நிரம்பிய மாணவருக்கு அவர் தந்திருக்கும் பேட்டி பிரமிளை அணுகுவதற்கு நல்ல துவக்கமென்று சொல்லலாம். இந்தப் பேட்டியில் கவிதை, கலைகள், கம்யூனிசம், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, எழுதுவதன் நோக்கம், படைப்பு மன நிலை என பலவிஷயங்களை ஒட்டுமொத்தமாக வெளிப்படுத்தியுள்ளார். இதில் பேட்டியாளர் எம். கண்ணன் ‘நீங்கள் anti-communist-டா?’ என்று கேட்கும் கேள்விக்கு பிரமிள் தரும் பதில் சுருக்கமாக:

“கம்யூனிஸம் என்று சொன்னால், அது ஒரு அமைப்பு. முக்கியமாக மனிதர்கள் எல்லோருக்கும் அடிப்படைத் தேவைகள் கிடைக்க வேண்டும். அவை கிடைக்க முடியாமல் தடுப்பது எது? முதன்மையாக முதலாளித்துவம், அதனுடைய மதிப்பீட்டு அமைப்பின் அடிப்படை என்ன? சுரண்டல். நீங்கள், எப்படி எந்த அடிப்படையில் சுரண்டப்படுவீர்கள்? அதன் மனோதத்துவ ரீதியான அடிப்படை என்ன? எனக்கு எது பிடிக்கவில்லையோ அதிலிருந்து, எனக்குப் பிடித்ததை நான் பிடுங்கி எடுத்துக்கொள்வேன். எனக்கு உங்களைப் பிடிக்கவில்லை. ஆனால் உங்கள் பாக்கெட்டில் இருக்கிற பணம் வேண்டும். உங்களை உழைக்கவைத்து, உங்களுடைய உழைப்பிலிருந்து நான் லாபத்தை அடைவேன். ஆனால் உங்களை எனக்குப் பிடிக்கவில்லை. அதற்காக நான் உங்களை ஏய்க்க வேண்டும். உங்களுக்கு, அதற்கான போலித்தனமான மதிப்பீடுகளை நான் தருவேன். சநாதன மதத்தின் பூதாகரமான வளர்ச்சியே முதலாளித்துவம் ஆகும். இவையிரண்டும் சேர்ந்து இயங்குகின்றன. இதற்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. ஆனால் கம்யூனிச சித்தாந்தத்தில் வாழ்க்கையை அணுகும் முறை சரிதானா? பரிபூரணமானதா? அந்த அணுகல் முழுமையானதல்ல. சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அடிப்படையான கட்டுமானங்கள் நிறைய எழுப்பவேண்டும் என்று அது நினைக்கிறது. அதுதான் கம்யூனிசத்தினுடைய குறைபாடு. நான் தனி, என்னுடைய பிரக்ஞை தனித்துவமானது. என்னுடைய கருத்துகள் சுதந்திரமானவை. நான் சுதந்திரத்தை விரும்புகிறேன். செ குவேரா ஒரு பரிபூரணமான கம்யூனிஸ்ட். ரொம்பவும் வேகம் நிறைந்த தனிமனிதவாதி. செ குவேராவின் மனம் free mind என்பதன் உச்ச நிலை. அவருக்கு selflessness, freedom இரண்டும் ஒன்றுதான். சோவியத் ரஷ்யாவில் அவர் இருந்திருந்தால் அவர் freedom-மிற்காக அங்கே சைபீரியாவுக்கு அனுப்பப்பட்டிருப்பார். மனிதன் மனதுக்குள்ளே எவ்வளவோ ரகசியங்கள் இருக்கின்றன. இன்றைக்கு நவீன விஞ்ஞானமே இந்த விஷயங்களை ஒப்புக் கொள்கிறபோது இவர்கள் தங்கள் கட்சியின் வறட்டுக் கருத்தில் தொங்கிக் கொண்டிருப்பது அபத்தம். கம்யூனிசத்தை சரிவரப் புரிந்துகொள்ளாதவர்களுக்குத்தான் நான் கம்யூனிச எதிர்ப்பாளன்; உண்மையில் நான் கம்யூனிச எதிர்ப்பாளன் அல்ல.”

மீறல் 4ம் இதழ் பிரமிள் சிறப்பிதழாக (அக்டோபர் 1993) வெளியானது. இந்த சிறப்பிதழுக்காக பிரமிளிடம் கேட்கவிரும்பும் கேள்விகளை வாசகர்களை அனுப்பச்சொல்லி கேட்டுள்ளனர். அந்தக் கேள்விகளில் சில:

சாரு நிவேதிதா:

1) உங்களுக்குப் பிடித்த சினிமா நடிகை யார்?

2) சே குவாராவின் குசு அதிக வாசனையா? அல்லது விசிறி சாமியாரின் குசு அதிக வாசனையா?

3) உங்களின் விந்து சக்தியை குண்டலினியாக மாற்றிக் கவிதை எழுதுகிறீர்களாமே, இது உண்மையா?

4) குஷ்புவின் பின்னழகு – சுகன்யாவின் பின்னழகு, ஒப்பிடுக.

5) ஜெனே – ஜே.கே. இந்த இருவரில் தங்களை அதிகம் திருப்திப்படுத்தியவர் எவர்? யாரிடம் அதிகபட்ச உச்ச இன்பம் கிடைத்தது?

விக்ரமாதித்யன்:

1) சில்க் ஸ்மிதாவின் அழகு கண்ணிலா உடம்பிலா?

2) கனகா, சுகன்யா, கஸ்தூரி, கௌதமி, குஷ்பு இவர்களில் யாரை உங்களுக்குப் பிடிக்கும்?

3) வரும் தேர்தலில் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள்?

4) இலங்கை விஷயம் உங்களை எப்போதாவது பாதித்தது உண்டா?

5) நீங்கள் அகதியா, இலங்கைக் குடிமகனா? இந்தியக் குடியுரிமை பெற்று விட்டீர்களா?

சாரு நிவேதிதாவின் எழுத்தை வாசித்தவர்களுக்கு அவரது கேள்விகள் ஒன்றும் அதிர்ச்சியளிப்பவை அல்ல. தமிழின் ஆகச்சிறந்த விமர்சகன், நிகரில்லா கவிதைகளைத் தந்தவனிடம் கேட்பதற்கு இந்தக் கேள்விகள்தான் உள்ளன என்றால் என்ன சொல்ல?

1980 அல்லது 81ல் சாரு பிரமிளுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் வெங்கட் சாமிநாதனுக்கு sexual poverty உள்ளது. அதற்குக் காரணம் அவரது மனோவியாதி பிடித்த சஹதர்மிணி. ஒரு மன நோயாளியான பெண்மணியுடன் 10, 15 வருடம் குடும்பம் நடத்தியதால் சாமிநாதனே ஒரு மன நோயாளியாகப் போய்விட்டார். மேலும் இதையெல்லாம் அவர் தெரியப்படுத்துவதன் நோக்கம் வெ.சா.வின் மனநோய் வெளிவைக்கப்பட வேண்டும் என்ற பொது நலனை உத்தேசித்தே என்று எழுதியுள்ளார். இலக்கியம் சார்ந்து, கருத்தியல் சார்ந்து விமர்சிப்பதற்கு இவர்கள் பார்ப்பது ஒருவரது அந்தரங்க வாழ்க்கையைத்தான் போலும். இதே சாரு, மனுஷ்யபுத்திரன் கவிதைகள் குறித்து ஜெயமோகன் விமர்சிக்கையில் அவரது கவிதைகளின் உணர்வுத்தளத்தின் பின்புலத்தில் அவரது ஊனம் முக்கிய காரணமாய் உள்ளது என்ற கருத்தை முன்வைத்தபோது அவரை அடிக்கக் கிளம்பியவர்தான் இவர். நிற்க.

எம். கண்ணன் எடுத்த பேட்டி பிரமிளுக்கு ஒரு நல்ல அறிமுகம் என்றால் அதன் அடுத்த நிலையாக அவரை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள அதே மீறல் சிறப்பிதழுக்கு (மேலே சாரு நிவேதிதாவும், விக்ரமாதித்யனும் அனுப்பியிருந்தவை இந்த சிறப்பிதழுக்குத்தான்) கால சுப்ரமணியம் எடுத்த பேட்டியையும் அதன் தொடர்ச்சியாக லயம் இதழ் (1994) பேட்டியையும் சொல்லலாம். ’படைப்பையும் படைப்பாளியையும் வித்யாசப்படுத்துகிறீர்கள் ஆனால் படைப்பாளியாகிய தனிமனிதனிடம் உள்ள குறைபாடுகளை – குறிப்பாக மௌனி போன்றவர்களிடம் உள்ள ஜாதீயக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுகிறீர்கள். இதன் தேவை என்ன?’ என்ற கேள்விக்கு பிரமிள்,

‘இனக்குழுவாதப் பார்வை உள்ள ஒருவரிடம் எவ்வளவு பெரிய திறனாளியாக இருந்தாலும், போகப்போக, அந்தத் திறனை இந்த இனக்குழுப் பார்வை அரித்து ஓட்டை போட்டுவிடும். இனக்குழுப் பார்வை இங்கே கலைத்துறையில் செயல்படுகிறது. அப்படி அது செயல்படக்கூடாது. கலாரீதியான உணர்வு என்பது, எல்லாவிதமான மனத்த்டைகளையும் சமூகரீதியான தடுப்புக்களையும் வேலிகளையும் தேசங்கள் மொழிகள் சம்பந்தமான எல்லைகளையும் நம்பிக்கைகளையும் தாண்டி, மனிதனை மனிதன் தொற்றக்கூடிய தன்மையுள்ள ஒரு வீர்யம். இதை இனக்குழுப் பார்வை மழுங்கடிக்கிறது.

ஒரு படைப்பு தனக்கான இருத்தலையும் அதனளவில் அந்த இருத்தலுக்கான அழகையும் கொண்டுள்ளது. நீதிதேவதையைப் போல கண்ணைக் கட்டிக்கொண்டு வறட்டு கோட்பாட்டுத் தராசில் வைத்து எடைபோடப்படுவதல்ல படைப்பு. ஒவ்வொன்றுக்குமான தனித்த இருத்தலுக்குள் செல்லவேண்டும். பொதுவாக வாசகமனம் தனது வாழ்க்கைக்கு நெருக்கமான, தனது அனுபவத்தோடு தொடர்புடைய, தனக்குப் பிடித்த, தான் அபிப்ராயம் சொல்லத்தக்க படைப்புகளையே அடையாளம் காணவும் அதை பிரஸ்தாபிக்கவும் செய்யும். விமர்சகன் அப்படிச் செய்வதில்லை. ஒருவித selfless தன்மையுடன் படைப்பை முழுக்க ஏற்றுக்கொள்ளும் மனதுடன் அணுகுகிறான். இந்த நுகர்வு மனப்பான்மையை நீக்கிப் படைப்பை அணுகுவது, வாசகனுக்கும் விமர்சகனுக்கும் உள்ள முக்கிய வேறுபாடாகும். படைப்புக்கான இருத்தலைக் கண்டடைவது வாசகனின் கடமை என்பது மௌனியின் கொள்கை. பிரமிளின் நிலைப்பாடும் அதுவே. பிரமிள் விமர்சனங்களில் இதைக்கண்டு சிலாகித்தவர் மௌனி. மௌனி அளவுக்கு தனது விமர்சனங்களை ஆழ்ந்து உணர்ந்துகொண்டவர் யாருமில்லை என்று பிரமிளே சொல்கிறார். மௌனியிடம் செயல்பட்ட இனக்குழு மூர்க்கம்தான் அவரைத் தொடர்ந்து ஒரு கலைஞனாக இயங்கவிடாமல் தடுத்த ஒன்று. ஜாதீய மனோபாவத்தை மிகத் தந்திரமாக படைப்புகளில் திணித்துக் கொண்டவர் சுந்தர ராமசாமி. இதை தனது ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலுக்கான அவரது விமர்சனக் கட்டுரையில் காணலாம்.

ஞானம் கண்ணுக்குத் தெரியாத ஒன்று. ஞானமடைந்த ஒருவர் கூட தன்னை முற்றிலும் மறைத்துக்கொண்டு ஒரு பிச்சைக்காரராக பைத்தியமாக வாழ்ந்து மறைந்தாலும் கண்டறிவது கடினம். ஞானமென்பது தான் என்ன? ஏகப்பட்ட தகவல்களை தலையில் ஏற்றிக்கொள்வதா? சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறன் கொண்டிருத்தலா? ஞானியை அடையாளம் காணத் தெரியாவிட்டாலும் குறைந்தபட்சம் உண்மையான ஒருவருக்கு தான் அஞ்ஞானி என்பதாவது தெரிந்திருக்கும். இதைக் கொண்டு ஞானியை அளக்க முயல்வது அபத்தமாகவே அமையும். ’அறிந்தவற்றிலிருந்து விடுதலை’ என ஜி.கிருஷ்ணமூர்த்தி அறிவிக்கிறார். ஞானமென்பது ஞானத்தை விடுவதாய், அறிந்தவைகளைக் கைவிடுவதாக இது உள்ளது. அறிந்தவைகளைக் கைவிடுதல் என்பது மீண்டும் குழந்தையாதல். பரலோக சாம்ராஜ்யத்தில் நுழைய குழந்தைகளுக்கே அருகதையுள்ளது என்று சொன்ன இயேசுவின் செய்தியும் இதுவும் ஒன்றே. இது நாம் அவ்வப்போது உணர்ந்த, மன வெறிப்பு, இலயிப்பு, துக்கத்தில் தொலைதல், உச்சகட்டம் இப்படி பல நிலைகளில் இதனை நாம் அனுபவித்திருக்கிறோம். ஞானிகள் திரும்பத் திரும்பச் சொன்னதையேதான் சொல்கிறார்கள். அந்தளவு மரமண்டைகளாக நாம் இருக்கிறோமென்றுதான் சொல்லவேண்டும். அல்லது மேலும் மோசமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறோமோ என்னவோ.

பிரமிளின் பார்வையில் இயேசு, புத்தர், ஜி.கி. காந்தி, சே குவேரா இவர்கள் எல்லோரையுமே ஒன்றாகவே பார்க்கிறார். இதற்கு அவர் எடுத்துக்கொள்ளும் அளவுகோள் austerity. எளிமையில் ஒருவித selfless தன்மையோடு சமூகத்துக்காக தன்னையே அளிப்பதையே முக்கியமாகக் கருதுகிறார். வைதீகம் நீக்கப்பட்ட ஆன்மீகத்தையும் (இது நாம் புரிந்துகொண்டிருக்கும் அர்த்தத்தில் அல்ல) கம்யூனிசத்தின் குறைபாட்டையும் நிவர்த்திக்கும் புள்ளியாக இதைச் சொல்லலாம்.

இதே பேட்டியில் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை குறித்து வெ.சா. விமர்சித்திருப்பது குறித்த காலசுப்ரமணியத்தின் கேள்விக்கு எட்டு பக்கங்களுக்கு மேல் விரிவாகப் பதில் சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் வாசிக்கையில் சமயங்களில் சோர்வாகிவிடுகிறது. இவற்றையெல்லாம் அப்படியப்படியே வாசகர்கள் தான் நேரடியாக வாசிக்கவேண்டுமே தவிர அதைப் பற்றி விவரிப்பது அர்த்தக்குறைவானதாகவே அமையும் என நினைக்கிறேன். வெறும் சக்கையான வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு அர்த்தத்தை எடைபோடாமல், நமக்குள் எழும் எதிரொலிப்புகளையும், அர்த்தத் தேடலுக்கான நாவையும் கொண்டு பிரமிளை வாசித்தால் அவர் நம்மைப் பிடித்துக்கொள்வார். அவரது உச்சம் நமக்குப் புலப்படும். இந்த பதிலில் கண்ணகி (கண்+அக+இ=அகக்கண் கொண்ட நிலை), தொழுதல் (தன்னுள் ஆழ்தல்), கும்பிடுதல் (கூம்பிடுதல்) என அவர் சொற்களுக்குப் பொருள்காணும் விதம் ஆழ்ந்த உணர்நிலையோடு வாசிக்க வேண்டியவை. சொற்களின் வேரினைத் தொட உள்ளார்ந்த உணர் நிலையை முகர்ந்தறியும் திறன் தேவை. பிரமிளிடம் அவை வெளிப்படும் விதம் அபாரமானது. மேலும் கண்ணகியே மீனாக்ஷியாக பார்ப்பனீயத்தால் மாற்றப்பட்டாள் என்ற வாதத்தையும் முன்வைக்கிறார். கண்ணகி என்றால் தன்விழிப்பு கொண்டவள் என்பதுபோல், மீனாக்ஷி என்றால் மீன் போன்ற கண்->மீனின் கண் மூடாதது->சதா விழித்திருக்கும் கண்->எனவே அகக்கண் என்ற வாதத்தை வைக்கிறார். வால்மீகி இராமாயணத்தில் சீதையை இராவணன் அவளது பிறப்புறுப்பில் ஒருகையும் மார்பில் ஒருகையும் வைத்து தூக்கிச் செல்வதாக எழுதுகிறார். கம்பரோ, அவளை கற்பின் சிகரமாக அவள் அனுமதியின்றித் தொடமுடியாதவளாக வடித்துள்ளார். கம்ப ராமாயணமே இங்கே இராமாயணம் பரவலாக சிறப்புப்பெற காரணமயிற்று. கற்பு நெறியை கனலாக கம்பர் உருவாக்குவதன் பின்புலத்தில் நமது மரபான கண்ணகி வகுத்த கற்பு நெறி நிற்கிறது என்றும் வாதிக்கிறார் பிரமிள்.

அதேபோல் வேறொரு கேள்விக்குப் பதிலளிக்கையில் ஒளி-இருள் சொற்களை அவர் விளக்கும் விதம் தனித்தன்மையானது.

“‘ஒளி’ என்ற பதம் ‘ஒளித்துள்ளது’ என்று, ‘இருள்’ என்ற பதம் ‘(இப்போது) இருப்பது’ என்றும் பொருள்பெறும். அத்யாத்மீகத் தளத்திலேயே விளக்கமடையக்கூடிய பதங்கள் இவை. நடைமுறை அனுபவத்தின்படி இவற்றை மொழிக்கூற்றின் மூலம்கூட ஆய்ந்துகாட்ட இயலாது. ஒளித்திருக்கும் பெருநிலையே ஒளிர்தல் உண்டாகிறது. இருள் என்பதில், (கடவுள், செய்யுள் என்பவற்றில் போன்று) ‘ள்’ விகுதியாகும். பெருநிலை பெறாமல் இப்போதே இருக்கும் நிலையினையே இது குறிப்பிடுகிறது. இது, இரவு-பகல் இரண்டையும் உட்கொண்ட, நமது வாழ்வின் நிலையைக் குறிப்பிடும் பதமாகும். இப்படி, இரவு-பகலாக இருப்பதைத் தாண்டி இன்னொரு பர்மாணத்திலிருப்பதே ஒளித்திருக்கிற ஒளிர்மய நிலை.

லயம் இதழுக்கு அளித்த பேட்டியில் காலசுப்ரமணியத்தின் கேள்வி: நீங்கள் இன்குலாப் பெயரைக் குறிப்பிடுவது ஆச்சரியமாக இருக்கிறது?

பிரமிள்: புதுமைப்பித்தன், பாரதிதாசனைப் புகழ்ந்து விமர்சனக் கட்டுரையே எழுதி இருக்கிறார். காரணம், இலக்கிய சாதனை அல்ல. பாரதிதாசனின் தீவிரமான ஆரோக்கியமான சமூகவியல் கண்ணோட்டம் மட்டும்தான். சுத்த சாந்நித்ய இலக்கியப் போர்வைக்குள் மானுடத் துரோகக் கிசுகிசுக்களைச் செய்வது எப்போது என்னால் சீரிய தமிழ் எழுத்துத்துறையில் அம்பலப்படுத்தப்படத் தொடங்கிற்றோ, அப்போதே பட்டவர்த்தனமாகச் சமூக வக்ரங்களை அம்பலப்படுத்துவோர் சுத்த சாந்நித்தியச் சுருதியிலிருந்து பிசகினாலும்கூட, மிகுந்த மரியாதைக்கு உரியவர்களாகத் தென்படத் தொடங்கிவிட்டார்கள்.

துவக்கத்தில் இரசனைரீதியான விமர்சனங்களைக் கையாண்ட பிரமிளின் பார்வையில் ஏற்பட்ட முக்கியமான மாற்றம் இது. கலை கலைக்காகவே என்று இரசனையைக் கொண்டாடுவதன் பின்னால் பூர்ஷ்வாத்தனமும், வர்க்கமும், பிராமணீயமும் செயல்படுவதை உன்னிப்பாய் கவனித்து உணரலாம். உதாரணமாக பிரமிளின் படைப்புகள் குறித்து ‘கொந்தளிப்பின் அழகியல்’ என்ற பெயரில் ஜெயமோகன் கட்டுரை எழுதியிருக்கிறார். கொந்தளிப்பில் பங்கேற்பவன் அதன் அழகியலைப் பார்க்க மாட்டான். அது அவனையும் கொந்தளிக்கச் செய்யும். அதை அழகியலாகப் பார்க்கையில் படைப்பிலிருந்து நம்மை நாமே விலக்கிக் கொள்கிறோம். அதனுடனான உணர்வுரீதியான தொடர்பு விடுபட்டுவிடுகிறது. இத்தகு ஆசிரியர்களின் படைப்புகள் செயற்கையாய் உணர்வுகள் ஏற்றப்பட்டவையாக, எழுத்து ஆளுகையை நம்பி எழுதப்படுபவையாகவும், வாசகர்களின் அனுபவத்தை மையப்படுத்தி எழுதப்படுபவையாகவும் இருக்கும். இதில் நகைப்புக்குரிய விசயம் ஈழக்கவிஞர் சு. வில்வரத்தினம் குறித்து ‘அகமெரியும் சந்தம்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருக்கிறார் ஜெயமோகன். இரண்டுமே ஒன்றுபோலத் தோன்றுகிறதல்லவா? ஒருவன் தன்னைத்தானே எரித்துக்கொண்டிருக்கிறான்; அப்போது சதையுருகி கொழுப்பு உள்ளிருந்து வெடித்து, எலும்பு தெறிக்க தழல் காற்றில் ஆடுவதைப் பார்த்து, கேட்பதில் என்ன அழகியல் இருக்குமோ அதைத்தான் இந்தத் தலைப்பு எனக்கு உணர்த்துகிறது. தனிமனிதனின் உள்ளார்ந்த விடுதலை ஆன்மீகமானது. பிரமிள் இலக்கியத்தை ஆன்மீகத்தின் நிழல்களில் ஒன்றாகவே காண்கிறார். எனவேதான் அவர் எழுதுகிறார். இதற்கு ஊறு விளைவிக்கக்கூடியவற்றை கடுமையாக எதிர்க்கிறார். இங்குதான் அவருக்கு சமூக நீதி இலக்கியத்தைவிட முக்கியமானதாகிறது. பிரமிள் என்னதான் இடதுசாரிகளைக் கடுமையாய் தாக்கி விமர்சித்திருந்தாலும், அவரது சமூகம்சார்ந்த விமர்சனங்களில் அவர் இடதுசாரியப் பார்வையும், திராவிடச் சிந்தனைகளுக்கும் ஆதரவாகவே நிற்கிறார். அதேசமயம் தன்னை எந்தக் குழுவினரும் அவர்கள் கோஷ்டியாகக் கருதி இணைத்துக்கொள்ள முடியாது என்றும் எச்சரிக்கிறார்.

தி.க.சி. ஒருபக்கம் பிரமிளை ஈகோ பிடித்தவர் என்று தூஷிக்கிறார் மறுபக்கம் அவர் போன்றவர்கள் தமிழின் கொடை; அவர் தொடர்ந்து எழுதவேண்டும் என்று சொல்கிறாரே என்ற கேள்விக்கு பிரமிளின் பதில்:

“சுயமூளையற்றவர்களும் ‘நான் ஒரு கம்யூனிஸ்ட்’ என்று மார்தட்டியபடியே, தங்கள் குருட்டுத் தடவலால் தடவிப்பார்த்துக்கூட உணரமுடியாத சிருஷ்டிகர்த்தாக்களை, எடுத்தெறிந்து அபிப்ராயம் விளம்ப இடம் தந்தது, கம்யூனிஸ மார்க்ஸீய இயக்கம். இந்த இயக்கத்தை இத்தகையோர் வக்ரப்படுத்தியுள்ளனர். இதனை, நமது சூழலில் இடைவிடாமல் தாக்கி வருபவன் நான். எனது இந்தத் தாக்குதல், மறுபுறம் ஆரோக்கியமான இடதுசாரிப் பார்வைகளுக்கு உரமாகிக்கூட உள்ளது. இலக்கிய நயத்தை விண்டு காட்டுவது, எவ்வகை விமர்சனத்துக்கும் இன்றியமையாத அடிப்படை. இலக்கியமாகத் தேறாத ஒரு படைப்பை, வேறு எவ்விதத்திலும் ஆராய்வது அர்த்தமற்றது. அது ஒரு குற்றம் என்று நமது நன்னூல்கூடக் கூறுகிறது. ஆரோக்யமான இடதுசாரிப்பார்வை கொண்ட ஞானிகூட, இலக்கியமாகத் தேறாதவற்றைத் தமது ஆய்வுக்கு உட்படுத்தி வருகிறார்.”

இந்தத் தொடரின் இரண்டாவது கட்டுரையில் ஞானியின் விமர்சனப் பாங்கை விமர்சித்துள்ளேன். வீரனிடம் மட்டுமே வாள் அர்த்தமுள்ளதாகும். மார்க்ஸிய விமர்சனப்பார்வை இருக்கிறது என்பதற்காக இலக்கியத்தில் உள்ளொளியின்றி எதையும் விமர்சித்துவிட முடியாது. இங்கே இடதுசாரிகள் மட்டுமல்லாது, தமிழவன் & கோ இதுமாதிரி பல குப்பைகளை வாரியிறைத்தபடியே உள்ளனர். யாரும் வாசிப்பதில்லை என்பதைப் பற்றிய கவலையே இவர்களுக்கு இல்லை. தாங்கள் செய்துவருவது எத்தனை வியர்த்தமானது என்பது பற்றியும் அக்கறையில்லை. நான்குபேர் மட்டும் அமர்ந்து ஒருவர் முதுகை ஒருவர் சொறிந்துகொள்வதைத் தவிர்த்து இதற்கு வேறு அர்த்தம் எதுவும் தெரியவில்லை.

பிரமிளின் பேட்டிகளும் உரையாடல்களும் தொகுப்பில் தியானதாரா சேர்க்கப்பட்டுள்ளது. இது சாது அப்பாத்துரையின் ஞானமொழிகளைக் கொண்டது. இது பிரமிளின் ஆன்மீகத்தில்தான் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் எனினும் இது பிரமிள் அவரது ஞானமொழிகளை செவிமடுத்து எழுதியதன் காரணத்தால் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. 1995களில் மீறல் மற்றும் லயம் இதழ்களுக்கு பிரமிளிடம் எடுக்கப்பட்ட நீண்ட பேட்டிகளில் ஒரு கேள்வி அவரது ஆன்மீக வாழ்வு பற்றியது. அதற்குப் பதிலாக பிரமிள்:

“இதைப் பற்றி, நான் தொகுத்தளித்த சாது அப்பாத்துரையின் தியானதாரா என்ற நூலின் பின்னுரையில் தந்திருக்கிறேன். அதுவே ஜாஸ்தி! உண்மையில் இம்மாதிரி விஷயங்களை ஆன்ம யாத்ரீகன் ஒருவன் வெளியிடக்கூடாது என்றொரு கண்டிப்பு உண்டு. நான் இதை வெளியிட்டதுக்குக் காரணம், எனது யாத்திரையில் நான் பூரணம் பெறாமல் போய்விடக்கூடும் என்ற ஒரே எண்ணம்தான். இதனை நான் சொல்லவேண்டிய நிலை ஏற்படும்படி, சில தூண்டுதல்கள்…!”

1997ல் பிரமிள் இறந்துவிடுகிறார். பிரமிள் தான் பிறந்த மண்ணுக்குச் செய்த மிகச்சிறந்த பணியென்றால் ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை கட்டுரையாகும். ஆன்மீகத்தில் அவரது சிறந்த பணியாக தியானதாராவைச் சொல்லலாம். இந்த நூல் வெளியான காலத்தில் தமிழில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்று. இசைஞானி இளையராஜாவுக்கு பிடித்தமான நூல் இது. இந்த நூல் வெளியாக யோகி ராம்சுரத்குமார் மிகப்பெரிய தூண்டுதலாக இருந்திருக்கிறார். சாது அப்பாத்துரையின் வாக்கு செவிமடுக்கப்பட்டது 1963-64ல். சில மாதங்களிலேயே அப்பாத்துரை இறந்துவிடுகிறார். தியானதாரா முதன்முதலாக பதிப்பிக்கப்பட்டது 25 ஆண்டுகள் கழித்து 1989ல். பிரமிள் என்ற தனிமனிதனாக அவர் எப்போதும் அக விழிப்புக்கான ஞானத் தேடலில் இளமையிலேயே இருந்துள்ளார். அதுவே அவருக்கு வாழ்நாள் முழுதும் ஒளிவிளக்காக வழிகாட்டியுள்ளது. மற்றெவராலும் பார்க்க இயலாத கோணத்தில் பிரமிளின் பார்வை விரிவதற்குக் காரணம் உள்ளார்ந்த நுட்பமான அகத்தை நோக்கிய பார்வையே. இதுவே அவரது எழுத்துக்களின் ஆதார சுருதி. இங்கே தியானதாராவைப் பற்றிச் சொல்வதற்கு எவ்வளவோ இருக்கிறது. வரிக்கு வரி இரத்தினங்கள். ஆனால் அது இந்தக் கட்டுரையின் எல்லையைத் தாண்டிய ஒன்று.

ஒரேயொரு முதல்பக்கத்திலுள்ள பத்தியைப் பற்றி மட்டும் பார்த்துவிடலாம்.

“நிம்மதியாகச் சாகவேண்டும். அதுதான் முடிவில் முக்கியமானது. எல்லோருமே சாகப்பயந்துதான் சாகிறார்கள். அஞ்சாமல் மரணத்தை வரவேற்பவன் தன்னையறிந்தவன் மட்டும்தான். தன்னை அறிந்தவன் மரணத்தையும் அறிகிறான். கனவுகாணும்போது, நல்லகனவுகளைக் கனவுதானா என்று ஆராயாமல் அனுபவிக்கிறாய். கெட்டது, பயஙரமானது வந்ததும் விலவிலத்து விழிப்படைந்து, ‘சீ, கனவு!’ என்கிறாய். உலக வாழ்விலும் திருப்தி உள்ளளவும் விழிப்பு ஏற்படாது. அதிருப்தி ஏற்பட்டால்தான் தன்னைப் பற்றிய விழிப்பு ஏற்பட முடியும்.”

ஒருவயதுக்குப் பிறகு மரணம் பற்றிய சிந்தனை தொடர்ந்து சிந்தனையை ஆக்கிரமித்துக் கொள்கிறது. கோபங்கள், ஆசைகள், மனப்பீடிப்புகள் எல்லாமே மரணத்தின்முன் கேள்விக்குள்ளாகின்றன. ஒன்றுமற்று சுழியத்திற்குள் அடங்கும் இதற்கு ஏன் இத்தனை போராட்டம்? எனினும் மரணம் அத்தனை எளிதாய் ஏற்கக்கூடியதாகவும் இல்லை; இன்னொருபக்கம் அன்றாட வாழ்வின் ஈர்ப்பு. பிய்த்து எறிய எறிய மீண்டும் மீண்டும் ஒட்டிக்கொள்ளும் இகவாழ்வு. பயமற்ற மரணமே மிகப்பெரிய சாதனை. வாழ்வில் அதுவே மிகப்பெரிய கல்வி. அத்தகையவனுக்கு இழக்க ஒன்றுமில்லை. இந்த பின் நவீனத்துவ காலத்தில் இந்த ஞானத்தைக் கற்றுத்தருவது யார்? தனியொருவராக ஒவ்வொருவரும் நிற்கிறோம். இலோகாயத வாழ்வை நுகர்வதற்கான போட்டியும் பொறாமைகளும் சூழ்ந்த உலகில் இதற்கெல்லாம் அர்த்தமில்லை. இதில் யாருக்கும் ஆர்வமும் இருப்பதாகத் தெரியவில்லை.

அதிருப்தி ஏற்பட்டால்தான் தன்னைப்பற்றிய விழிப்பு ஏற்பட முடியும் என்ற சாது அப்பாத்துரையின் வாக்கு நேரடியாகத் தாக்குகிறது. ஓஷோ போன்றவர்கள் மாதிரி ஈகோவை சமாதானப்படுத்தவில்லை. கவிஞர்களுக்குக்கூட சிக்கலில்லாத சுமூகமான மனநிலையில் கவிதை எழுதிவிட இயலாது. அக நெருக்கடி தேவைப்படுகிறது. ஒருவிதத்தில் கவிதைகள் இதனால்தான் ஆன்மத் தேடலுடன் தொடர்புடையவையாய் உள்ளன.

பிரமிளுடன் பழகியவர்களில் சிலர் அவருடனான தங்கள் அனுபவங்களை இணையத்தில் பதிந்துள்ளனர். அவர்களில் டேவிட் சந்திரசேகர் மூலம் பிரமிளுக்கு நண்பரான வ. ஸ்ரீனிவாசனும் ஒருவர். ஒருமுறை ஒரு விஷயத்தை தத்ரூபமாக விவரித்து அதில் தன் ஆழ்ந்த கருத்தையும் சொல்லிவிட்டுக் கடைசியில் சொல்கிறார், “நான் சொன்னது எதுவுமே முக்கியமல்ல. எனக்கு இந்த ‘டிராமா’தான் முக்கியம்”. பிரமிளின் உள்ளங்கையை ஸ்பரிசித்த அனுபவம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *