பிள்ளைக்கவி மகிழ் ஆதனின் ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ கவிதைத் தொகுப்பு ஒருபுறம் அதிர்ச்சியை அளித்ததென்றால் மறுபுறம் அதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். தொகுப்பை வாசித்தவுடன் எழுத்தாளர் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் உடனடியாகக் கட்டுரை எழுதியதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தக் கவிதைகளைப் பற்றிப் பேசாமல் இருக்கமுடியாது. ஆறுவயதிலேயே ஒரு தொகுப்புக்குத் தேவையான அளவு கவிதைகளைச் சொல்லியிருக்கிறான் மகிழ் ஆதன். அவன் சொல்லச் சொல்ல சக கவிஞரும் தந்தையுமான ஆசை தனியாக ஒரு குறிப்பேட்டில் எழுதி வந்துள்ளார்.

வாழ்க்கை அளப்பரிய சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது. வண்ணத்துப் பூச்சியின் நடுக்கமும், நிலைகொள்ளா பறத்தலுமாய் உலக வாழ்வு எல்லாக் குழந்தைகளுக்கும் ஒன்றாகத்தான் இருக்கிறது. பின்னர் வாலிபப் பருவத்தின் அடையாளச் சிக்கல் வரும்போது, செல்ல வேண்டிய பாதையின் வாசலுக்கு வந்துவிடுகிறோம். நீண்டு நீண்டு செல்லும் அந்தப்பாதை ஒரு குகையைப் போலிருக்கிறது. வேறு சாத்தியங்களே இல்லாமல். தொடக்கத்திலிருந்தே முடிவை நோக்கி நகர்வதாயிருக்கிறது அது. இந்த இடத்தில்தான் பெரியவர்களுக்குக்கூட குழந்தை இலக்கியம் முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது.

சமீபத்தில் முதுபெரும் கவிஞர் ஒருவரின் கவிதையை வாசித்தேன். பல்போன கிழவன் ஒரு மிட்டாயை வெகுநேரம் சப்பிச்சப்பிச் சுவைப்பதுபோல ஒரு வார்த்தையை தினுசு தினுசாகப் புரட்டிப் போட்டு ஒரு கவிதை எழுதி வைத்திருக்கிறார். மொழி விளையாட்டும் வியாக்கியானமும் கலந்த பண்டம். வியாக்கியானம் செய்வது கவிதையின் வேலை அல்ல. வரிக்கு வரி முறித்துப் போட்டு, காட்டில் யானை ஒன்று ஓடோடி வந்து எதிர் நிற்பதைப் போல அதிர்வைக் கொண்டிருப்பது. செறிவு என்பது வார்த்தைகளிலோ, சொற்சிக்கனத்திலோ அல்ல. அனுபவத்திலும் உணர்வுதளத்திலும் நிலை கொண்டிருப்பது அது. அப்படியொரு அனுபவத்தை மகிழ் ஆதனின் கவிதைகள் எனக்கு அளித்தன.

மகிழின் கவிதை அனைத்தும் தரையிலிருந்து மேலெழும்பிப் பறக்கின்றன. அத்தனை இலகுவாய், மெலிதாய். வாசிக்கும்போது நமக்குள் ஒரு பதட்டம் வந்துவிடுகிறது. பரிசுத்தத்தைக் காணும்தோறும் நமக்குள் தோன்றும் அதே பதட்டம்.  நான்தான் இந்த உலகத்தை வரைந்தேன் என்ற தத்துவத்தை எப்படி இந்தக் குழந்தை எட்டினான்?

மகிழ் தனது கவிதைகளில் கண்ணீரை தியானத்துக்கான சமர்ப்பணமாக மாற்றிக் கொள்கிறான். என் மகள் கவிதாயினியுடனான எனது அவ்வப்போதைய உரையாடல்களை முகநூலில் பதிந்து வந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளுமே அவள் கவிதையாக நுரைத்துப் பொங்கிக் கொண்டிருந்தாள். ஒருநாள் இரவு நெடுநேரம் ஆகிவிட்டதால், தூங்கலாம் விளக்கை அணைக்கப் போகிறேன் என்றதற்கு அவள், ‘ப்ளீஸ்பா, லைட்டு பாவம்ல, கொஞ்சநேரம் எரியட்டும்’ என்றாள்.

ஏசு அதனால்தான் தன்னுடைய இராஜ்ஜியத்துக்குள் வர ஒருவர் குழந்தையாக மாறவேண்டும் என்றார். மிகமிகக் கடுமையான சவால் அது. குழந்தைகள் கவித்துவத்தால் நிறைந்திருக்கும் அதேநேரம் அவர்களிடம் சொற்கள் அதிகமிருப்பதில்லை. சொற்கள் அறிதலின் அறிகுறி. அதிர்ஷ்டவசமாக மகிழ் ஆதனுக்கு வழிகாட்டியாக, சக கவிஞராக அவனது தந்தை ஆசை வாய்த்திருக்கிறார். நான்கு வயதில் மகிழ் சொன்ன கவிதை இது.

எனக்கு ஏசப்பா ரொம்பப் பிடிக்கும்

ஆனா அம்மா என்னை ஏசப்பா

கோயிலுக்கு அடிக்கடி அழைச்சுட்டுப்

போக மாட்டேங்கிறா

(ஏசப்பா உன்னோட பேசினாரா?)

அவர் எப்படிப் பேசுவாரு?

அவரு நிஜம் இல்லை வரைஞ்சது

நாமளும் வரைஞ்சதுதான்

நம்மளை யாரோ வரைஞ்சு

அனுப்பியிருக்காங்க

(யாரு?)

ஸ்பைடர்மேன்

எந்தக் குழந்தையும் ஜடத்தை ஏற்பதில்லை. குழந்தை எல்லாவற்றையும் உயிருள்ளதாய்ப் பார்க்கிறது. நாம் சொன்னாலும் அது நம்புவதில்லை. அது ஒரு கனவைக் கெடுப்பது போலத்தான். அறிதலுக்கு முந்தையதொரு அழகிய கனவு. “நாமளும் வரைஞ்சதுதான்” என்கிறது குழந்தை. யார் மறுக்கமுடியும். ஜி. கிருஷ்ணமூர்த்தி அறிந்ததினின்றும் விடுதலை என்று அறைகூவுகிறார். அதையொற்றியே பிரமிள் தனது கவிதைகளில் மாய உருத்திரிபைக் கையாள்கிறார். அறியும்தோறும் எல்லாவற்றையும் நாம் ஜடமாக்குகிறோம், உயிருள்ள மனிதர்கள் உட்பட.

“அங்க யாரோ இருக்காங்க

அது யாரும் இல்ல

அது நம்மதான்”

கடைசிவரியில் அந்தக் குழந்தையின் சிரிப்பு தெரிகிறதல்லவா. ஆனால் அது மட்டுமா. எல்லாம் நான், நானே உலகம், என்னால் பார்த்து அனுபவிக்கப்படுவது இவ்வுலகம். அனைத்தும் என் புலன்களுக்குள் அடக்கம். அதைத் தாண்டி ஒன்றில்லை என்ற தத்துவத்தில் அல்லவா நிற்கிறது இது.

“பூக்கள் நம்மளை

வாசனை ஏத்த வைக்கும்

நம்மள்

புல்லாங்குழல் வைச்சு

வாசனை ஏத்த வைப்போம்”

படித்தவுடன் புல்லரித்துவிட்டது. அந்தக் குழந்தைமையைக் கைகளில் அள்ளி முகர முடிகிறது இந்த நான்கு வரிகளில். ஒரு பூவுடன் பேசும் மொழி. பூ காற்றில் வாசனையை அனுப்பி ஏதோ சொல்கிறது. பதிலுக்கு புல்லாங்குழல் வழியே இசையை அனுப்பிப் பதில் சொல்வோம். காற்றின் மொழிதான் அதற்குப் புரியுமே. நாம் காணும் பொருட்கள் அதன் வடிவத்தின் அளவோடு நின்று விடுகின்றனவா என்ன. பார்வை வீச்சு, மணங்கள், வெப்பம், குளிர் இவை எங்கு தொடங்கி எங்கு முடிகின்றன? இந்தக் குழந்தை இப்படி தர்க்கிக்கவெல்லாம் இல்லை. தன் மீது வீசும் வாசத்தை ஃபூ என்று ஊதி விளையாட்டாய் ஒரு கவிதை சொல்கிறது.

”என் கால் தடங்களை

என் கால் தடங்களை

என்னைப் பெத்த

அம்மாவாகப் பார்க்கிறேன்”

நம்மைச் சிந்திக்க விடாமல் உணர நிர்பந்திப்பது நல்ல கவிதையின் அடையாளம். கடைசிவரி வெடித்துத் திறந்து கொள்கிறது. அப்படியொரு நிர்வாணம். சமயங்களில் கவிதைகளை விளக்குவதோ அதன் உணர்வுத்தளம் பற்றிப் பேசுவதோகூட இரசக்குறைவாகத் தோன்றுகிறது. மகிழ் ஆதன் கவிதைகளைப் படிக்கும்போதுதான் ஞானசம்பந்தர் மூன்றுவயதில் உமையிடம் ஞானப்பால் அருந்தியதை நம்பத் தோன்றுகிறது.

“ரோஜாப் பூ

என்னை மோந்து பார்த்து

மோந்து பார்த்து

பார்த்தே விட்டது”

கவிதை எப்படி ஆரம்பிக்கிறது பாருங்கள். முகர்வது ரோஜாப்பூ தான். ’தான்’ இல்லை. திரும்பவும் ஆடியபடியே தயங்கித் தயங்கி ஒரு நாய்க்குட்டி மோப்பம் பிடிப்பதுபோல வாசம் பிடித்து,

“பார்த்தே விட்டது”.

மோப்பத்தின் மூலம் அது காண்கிறது. மகிழின் பெரும்பாலான் கவிதைகள் ஜென் கவிதைகளைப் போலிருக்கின்றன. அது அவனது கவி மனமா அல்லது அவன் தந்தை, கவிஞர் ஆசையின் தாக்கமா என்று தெரியவில்லை. ஆசையின் கவிதைகளில் ஜென் கூறு உண்டு.

“என் வெயில்

என் முகத்திலே பட்டு

நினைவாய் ஆகிறது”

முதலில் கவனிக்கிறோம். கண்ணி தட்டுப்படாத காலச் சரடு. முந்தைய கணம் பட்ட வெயில் எங்கே? இப்போது படுவது எது? இரண்டும் ஒன்றா? இல்லை. முந்தையது நினைவு. திரும்பத் திரும்ப விடிகிறது. வெயில் பரவுகிறது. கோடிக் கணக்கான ஆண்டுகள் புரந்துவருகிறது சூரியன் இப்பூமியை. ஒளியைக் கொட்டியபடியே இருக்கிறது. இன்று பகலில் பெய்த ஒளியெல்லாம் என்னவாயின?

“கண்ணில் பட்ட ஒளி

காணாமல் பறந்து போச்சு

பறந்து போன ஒளி

சூரியனாகத் திரும்பி வரும்”

எத்தனை நித்தியமாய் இருக்கின்றன சூரியனும், பூமியும். இழக்க ஏதுமில்லை. எதுவும் தொலைவதில்லை. தொலைந்தவை எல்லாம் பன்மடங்கு பிரகாசமாய்த் திரும்பி வரும் சூரியனாய்.

சுவரில் பொருத்தப்பட்ட மின்விசிறி சுற்றுகிறது. எனை நோக்கித் தள்ளும் காற்று அருவியைப் போலக் கொட்டுகிறது மர்ம ஓசையுடன். மின்விசிறி ஓயாது ஒலிக்கிறது. ஒரு கவிதையில் மகிழ் சொல்கிறான், “நுரை பொங்கும் ஒலி”. இந்தச் சிறுபிள்ளைகளுக்குத்தான் இந்தக் கனிகள் எத்தனை எளிதாய்க் கிட்டிவிடுகின்றன. இன்று என் மகள் கவிதாயினி அவள் பாட்டியின் கன்னத்தைக் கிள்ளி, ‘பழுத்த பழம் பூத்தது மாதிரி’ என்றாள். இந்த அறிவுச்சுமையை நாளெல்லாம் சிலுவையைப் போல தூக்கிக் கொண்டு திரிய வேண்டியிருக்கிறது. பூப்படையும்போதுதான் அந்த ஆப்பிளைத் தின்றுவிட்டோம் போலும். அப்போதிருந்து ஏதேன் தோட்டத்துக்கு வெளியில் திரிகிறோம்.

“என் சட்டை நிழல்

என் உடம்பில்

பூசிக்கும்

என் சட்டையாகத்

திரும்பி வரும்

என் கண்ணுக்குள்ளே

போய்விடும்”

இது மிக நுட்பமான அவதானம். சட்டை அணியும்போது சட்டையின் நிழல்தான் நம்மீது முதலில் படிகிறது. பொத்தான்களைப் போட்டதும் நிழல் மறைந்து சட்டை வெளியில் தெரிகிறது. உற்றுப் பார்க்கிறோம். குறுக்கும் நெடுக்குமாய்ப் பின்னப்பட்ட இழைகளை, நிறங்களை. இப்போது முழுச்சட்டையும் தெரியவில்லை. ஒரு புள்ளி மட்டுமே. சட்டை எங்கே? கண்ணுக்குள்ளே போய்விட்டது.

”கண்ணில் இருக்கும்

இடத்தில்

காத்து அடிச்சி

அந்த இடத்தில்

மழை பூக்கும்”

கவிஞார் பிரான்சிஸ் கிருபாவின் கவிதையைப் போலிருக்கிறது. தூசுக்குக் கண்கலங்குவதை யாருக்கோ நடந்ததுபோல் இந்தக் குழந்தையால் கவனித்து அழகான கவிதையைத் தரமுடிகிறது.

“என் கண்ணில் இருந்து

கண்ணீர் வழிந்து வரும்

அதைப் பார்த்து

நான் ஓவியம்மாரி வரைவேன்

அது என்னைப் பட்டப்பகல் போல்

வரையும்”

இந்தத் தொகுப்பின் கவிதைகளை நேர்த்தியாகத் தொகுத்திருக்கிறார் ஆசை. முதல் கவிதை ஒரு ஓவியத்தை வரையத் தொடங்குவதுபோலத் தொடங்கி கடைசிக் கவிதையில் முழுமை பெறுகிறது. நேர்த்தியான வடிவில் அச்சிடப்பட்டிருக்கிறது. இந்தத் தொகுப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பலரையும் சென்றடைய வேண்டும். ஆசை அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முதல் பக்கத்தில் “சக்தி நூலகத்துக்கும், பாலா மாமாவுக்கும் அன்புடன்” என்று மகிழ் ஆதன் கையொப்பமிட்ட தொகுப்பு என்னிடம் உள்ளது. நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும், அன்பு முத்தங்களும் மருமகனே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *