1.
உரையாடலில்
எதிர்பாராமல்
தலைகாட்டிவிட்டது
உள்ளாடையெனும்
பிரயோகம்
நீயும் நானும் தரிசித்தது
ஒரே உள்ளாடையாய்
இருக்கமுடியாது
அவற்றின் நிறம் ஒன்றா
வெவ்வேறா
எனவும் நிச்சயமில்லை
அதனுள் அமைந்த
திரட்சியும் வனப்பும்கூட
வெவ்வேறாய்த்தான்
இருக்கவேண்டும்
ஒருவேளை இருவரும்
அடைந்த
கிளர்ச்சி ஒன்றாயிருக்கலாம்
சருகில் பற்றிய நெருப்பு
வனத்தை
அள்ளிவிழுங்குவதைப்போல
ஒரு வார்த்தை
எத்தனை
அலைக்கழித்துவிட்டது
நம்மை.
2.
கனவு
தாபம் தீராத மங்கை
ஈனச் சலிக்காத கருப்பை
பிள்ளைக் குரல் கேட்டதற்கே
கசியத் தொடங்கும்
முலைக்கண்
பிள்ளைவாயில்
உலகத்தையே ஊட்ட முயலும்
பேராசைமிக்க தாய்
அபூர்வ தருணங்களில்
பிள்ளையைப்
பிய்த்துண்ணும்
ராட்சசம்
3.
ஒரு முயக்கத்தின் உச்சியில்
உப்புப் பூத்த அவள்
சருமத்தின் எதிரே
மலர்ந்தும் சுருங்கியும்
விலகியும் நெருங்கியும்
அத்தனை தடுமாறியது
நாசியின் துலா முள்
அதன்பின்தான் என் அகராதி
தடுமாறத் தொடங்கியது
வாசனைக்கும்
அல்லாததுக்குமான
பேதங்களைத்
தீர்மானிப்பதில்
4.
துயரம் என்று
வரும்போது மட்டும்
அதைத் தீர அனுமதிக்காத
அட்சய பாத்திரமொன்று
நம் அனைவருள்ளும்
இருக்கிறது போல.
5.
இந்த நாளின் கண்கூசும்
பிரகாசம்
பொறுக்காமல்
உருக்கி வகைப்பிரித்தபோது
உள்ளங்கையில் உருண்டு
நிலைகொள்கிறது
உனது கடுகனைய புன்னகை
6.
உங்களுக்கு மட்டுமன்றி
நெளியும் புழுவுக்கும்
இதே உலகம்தான்
பரிசளிக்கப்பட்டிருக்கிறது
7.
உங்களது அழகுணர்ச்சியை
நீங்கள்
வைத்துக்கொள்ளுங்கள்
இரையெடுத்த
வண்ணத்துப்பூச்சியை
ஓணான்
வைத்துக்கொள்ளட்டும்.