ஒரு முடிவோடு கிளம்பி வந்திருக்கிறேன்.
நதியின் படித்துறை யாருமற்று இருண்டிருந்தது. துாக்கம் வராத போது, என்னைச் சுமந்து இங்கே வருகிறேன். வந்தபோது இருந்த வேகமும் கனமும் போகும்போது இருப்பதில்லை. ஆச்சரியந்தான். ஆற்று நீர் அகச்சுமையையும் கரைத்துவிடுகிறது. நீரின் தணுமை பாதவிரல் நுனிகளில் தொற்றி, ஏறி உச்சந்தலைவரைப் பரவுகிறது. பூரான் ஊர்வதைப்போல அதை என்னால் உணரமுடியும். பாதங்களை நீருக்குள் புதைத்து மீன்களுக்காக காத்திருப்பேன். விரையும் நீரில் வேகம் தெரிவதில்லை. குளிர் ஊடுருவி உறைக்கும். நிற்பதென பாயும் நீர் நலுங்கல்.
கல்பொளிந்த கோவில் படித்துறை. காலம் பாசியைப் போல மேலும் மேலும் படிந்து உறைந்திருக்கும். கையால் தொட்டு காலத்தடிமனை துாலமாக உணர்ந்து கொள்ளலாம். மங்கல் நிலையில் எவர் எவரோ எழுதிச்சென்றவை. கல்லில் தன்பெயர் நிலைத்திருக்கும் என்பதை அறிந்துகொண்டவனின் கண்டுபிடிப்பு. அந்த ஆதிமனிதனின் பரவசத்தை சொற்களைத்தீண்டும் போது உணர்கிறேன்.
ஆற்றின் கரையில் பாபங்களை நாசம் செய்யும் மூர்த்தி. அன்றாடம் உற்சவ மூர்த்தியின் தோள்களின் மீது மலையத்தனை சுமை ஏறும். பாபவிமோசினிகள் வந்து கொண்டே இருக்கிறார்கள். பகல்பொழுதுகள் நெரிசல் மிகுந்தவை. மனிதர்கள் வணிகர்களாக மட்டுமே உலாவும் இடம். எந்நிலையிலும் கொடுக்கலும் வாங்கலும். நேர்மாறாக இரவில், கோவிலும் படித்துறையும் பாய்ந்தோடும் நீரும் கவித்துவம் கொண்டு விடுகின்றன. இரவின் மடியில் அசந்து துயிலும் ஒயில், என்னை எப்போதும் கவர்ந்திழுக்கக் கூடியது. பன்னிரெண்டு மணியைப்போல இந்தப் படித்துறைக்கு அமையும் சாந்தம் அதன்பின்னர் இருக்காது. கலையத்தொடங்கிவிடும். மூன்று, நான்குமணியில் இருந்து மனிதர்கள் வரத்தொடங்கி விடுவார்கள். மனிதர்களோடு ஒலிகளும் வந்துவிடும். . நாமகரணங்களும் நெடுஞ்சாண்கிடைகளும் எழத்தொடங்கும். வேண்டுதல்களாக வெளிப்படும் முணங்கல்கள்.
மனிதன் காற்றைப்போல, வரும்போதெல்லாம் எவற்றையோ உடன் அழைத்து வருகிறான். நெஞ்சுக்குள் இறக்கிவைக்க முடியாமல் போன சக மனிதர்களின் நினைவுகள். யாருக்கும் தனிமையில்லை. தனிமை மனிதனுக்கு விதிக்கப்பட்டதல்ல. தனிமை தனிமை தனிமை என்று தானாக கற்பனை செய்து கொள்ளலாம். என்னைப்போல. தனிமை ஒரு ஒற்றன். உங்களால் அவனை அறிய முடியாது.
படித்துறையில் அகலித்து பூத கணங்களாக நின்றிருக்கின்றன நீர்வாகைகள். முண்டுகளும் கிளைகளும் விண்நோக்கிச் செல்கின்றன. அவற்றைக் காணும்போது நிலவைத்தீண்டும் தீர்மானம் கொண்டிருக்கின்றன என எண்ணத்தோன்றும். இத்தனை அகலமும் உயரமும் நதியின் கரையில் அமைந்திருப்பதனால்தானா? ஆயினும் உயரத்திற்கேற்ப கிளைத்துப்பரவி, பெரும்பரப்பைக் கோர்த்திருக்க வேண்டிய நிலை. நீரைத் தேடி அலைய வேண்டியதில்லை அவ்வளவுதான்.
தலைக்கு நேர் மேல் கல்மண்டபம். கல்மண்டபத்தின் நேர்மேல் கோவிலின் ராஜகோபுரம். ராஜகோபுரத்தின் நேர்மேல் பொதிகைமலையின் பேருரு. அதன்பின்னர் என்றும் உள்ள வான்வெளி. முடிவின்மையின் விளிம்பில் அமர்ந்திருப்பதை நான் உணரும் கோணம் அது. நான் அமர்ந்திருக்கும் இடம் ஒரு புள்ளி. என்னுள் அப்புள்ளி விரிந்து வெளியே இருப்பதைப்போன்று விஸ்வரூபம் கொண்டிருக்கும் வேறோர் உலகம். உள்ளே வெளியே இவற்றின் நடுவே நான். சதைப்பிண்டம். காலத்தால் மெல்ல மெல்ல அழிந்து கொண்டுருப்பது. பிறக்கும், வளரும், முதிரும். மடிந்து கழியும். இரு உலகங்களும் சந்தித்துக்கொள்ளும் ஒரு புள்ளியே நான். நீங்களும்தான். தனித்தனி உலகங்களை எதிர் கொண்டிருக்கிறோம்.
கல் மண்டபத்தின் திண்டுகளில் சதா குளிர்ச்சி. உருக்கொண்டு அமர்ந்த இருள். கொசுக்களுக்கு குறைவிருக்காது. என்னதான் மலைக்காற்று பிய்த்துக்கொண்டு சென்றாலும் கொசுக்கள் இரத்த நாளங்களைக் குத்தி, வெதுவெதுப்பான குருதியினை உறிஞ்சிவிடுகின்றன. அதற்கான பரிணாம வளர்ச்சியைக் கொண்டிருக்கின்றன. மலைக்காற்றில் அவை தோற்றுப்போகும் எனில் எவ்விதம் உயிர்வாழும்? இரவுகளில் அங்கே யாராவது இருக்கிறார்கள். உற்றுக் கவனித்தால் படுத்திருந்தே தங்களுக்கான பத்திரங்களை அவர்கள் எழுதிக்கொண்டிருப்பதை அறியக் கூடும். எதைத் துறந்தாலும் பூமியை மனிதனால் துறக்க முடியாது.
காவி அணிந்தாலும் லௌகீகத்தின் கொதிப்பு அணையாதவர்கள். குளிருக்காக போர்த்திக்கொள்வதைப் போல வாழ்வின் வெக்கையில் இருந்து காத்துக்கொள்ள காவியைப் போர்த்திக்கொண்டவர்கள். மிகுதியும் போலிகள். காவியை பிழைப்பின் உபாயமாகக் கொண்டிருப்பவர்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களை நொடிநேர கவனிப்பில் துல்லியமாக கணித்து விடக்கூடியவர்கள். பகல்பொழுதுகளில் யாசிக்கும் முகங்கள். அவர்களின் கண்கள் யாசிக்கும். கைகள் யாசிக்கும். உதடுகள் யாசிக்கும். மொத்த உடலிலும் யாசித்தல் ஓர் அன்னிச்சை செயலாகியிருக்கும். உறங்கும்போது அவர்கள் முதலில் வீழ்த்துவது பிச்சைக்காக உட்சுருங்கிய பாவனைகளைத்தான். எந்த நிலையிலும் மனதின் அகங்காரம் ஓய்வதில்லை. சுய கழிவிரக்கம் கொண்டு ஏமாற்ற முயற்சிக்கலாம். மனச்சாட்சியும் அகங்காரமும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். துலாக்கணம் ஒன்றை ஒன்று சமன்செய்யும். என் பிரச்சினையே துலாவின் ஒரு பக்கத்தில் சமன்செய்ய முடியாச் பெருஞ்சுமைகள் கொண்டிருப்பதே. இரத்தம் படிந்தவை. துரோகங்களும் பேராசைகளும் குவித்தவை.
முப்பதாண்டு அரசு ஊழியம். யானை நடந்து வருவதைப்போல சாவகாசம் வாய்த்திருந்த நாட்கள். அறுபதுக்கு ஓராண்டு இருக்கும்போது அப்பா இறந்து போனதால் மடியில் வந்து விழுந்த வேலை. நான் கவிதைகள் எழுதுவதில் பித்துக்கொண்டிருந்தேன். கண்ணதாசனாக ஆகிவிடும் உத்தேசம். சினிமா இன்றைப்போல அன்றும் ஆளைக்கொல்லும் மோகினி. டூரிங் டாக்கீஸ்களின் மண்குவியல் மீதமர்ந்து ஏழு லோகங்களிலும் சஞ்சாரம் செய்வேன்.
முளைக்குச்சி நாட்டி பிணைத்தார்கள். அம்மா மகிழ்ந்தாள். இருபத்திரண்டு வயதில் திருமணம். கல்லிடைக்குறிச்சி அக்கா மகள். நதியைவிட்டு ஒருநாளும் பிரிந்ததில்லை. நீர் தீண்டாமல் ஒருநாளும் கழிந்ததில்லை. ஐப்பசி கார்த்திகைகளில் புதுவெள்ளம் பாய்ந்தோடும். சேறு கலங்கி கொப்புகளும் மரத்தடிகளும் உருண்டோடும். நுரைகள் தளிர்த்துப் பூக்கும். மில் பாலத்தைத்தாண்டும் நீர் மட்டம். பாய்ந்து நதியைப் பிளந்து குதிப்பதில்லை. அச்சத்தோடு முங்கிக்குளித்து வெள்ளம் ஓயக்காத்திருப்போம். நதி என்னளவில் நான் எழுதாத சொற்கள். பொதிகையின் சொற்கள். நதியில் நீந்தும்போது அவை என்னிடம் பேசுகின்றன. இரவில் இந்தத்தனிமையில் நான் வந்து அமர்ந்திருப்பதே அந்தப்பழக்கத்தினால்தான்.
இரவுகள் என்னைக் கைவிடத்தொடங்கி பத்தாண்டுகளுக்கும் மேல் ஆகின்றன. உறங்குவது பெரும் பாடு. புரண்டு புரண்டு படுத்தே விடியலைக்கொண்டு வருவேன். கண்களை மூடி உறக்கத்தில் ஆழ்ந்தால் கோரங்களும் கொடுமைகளும் துயில் கலைகின்றன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வெட்டிச்சாய்த்தவனின் உறைந்த விழிகள் உக்கிரம் கொள்கின்றன. தஞ்சம் புகுந்தவளின் முந்தானையை விலக்கியபோது எழுந்த கைப்பின் வாசம் முகத்தில் கவிகின்றது. கைகளில் கிளர்ந்தெழும் பச்சை ஊன் நாற்றம். வீடே அந்த நாற்றத்தால் நிரையும். கெட்டிச்சாந்து போலாகி என்னைச் சூழும். அவ்வளவு பெரிய அறைக்குள் நான் மட்டுமே இருப்பேன். ஆனால் கூட்டம் இருப்பதைப்போல நெருக்கத்தை உணர்வேன். வியர்வையும் மல்லிகையும் பலவிதமான உடல் திரவங்களின் சுகந்தமும் ததும்பும். ஓடி வந்து இந்தக்கரையில் அமர்ந்துகொள்வேன். வானில் நிலா இருக்கும் நாட்கள் வேறுவிதமான தத்தளிப்பினை கொண்டுவந்து சேர்க்கும். நிலாவின் ரச்மி பட்டு என் கண்கள் கலங்கும். பெருந்தனிமை என்பேன். தனிமையும் தனிமையும் சேர்ந்து தனிமை என்று ஆன பொழுது.
கல்மண்டபத்தில் யாரோ தும்முகிறார். காறித்துப்புகிறார். வரட் வரட்டென்று சொறியும் சத்தம். இத்தனைக்கு நடுவிலும் சிறிது நேரத்தில் அவரிடம் இருந்து ஆழ்ந்து உறங்கும் பெருமூச்சொலி கேட்கும். அதுநான் நான் பொறாமை கொள்ளும் இருப்பு. என்னால் அப்படி ஆழ்ந்து உறங்க முடியுமா?
என்னை எதிர்பார்த்து என் அறை காத்திருக்கும். அறைக்குள் இருப்பவர்கள் காத்திருப்பார்கள். நான் உள்ளே நுழைந்ததும் என் மண்டைக்குள் பாய்ந்து நீந்தத் தொடங்குவார்கள். அவர்கள் பேசும் அத்தனையும் ஒரே நேரத்தில் எனக்குள் ஒலிக்கும். தீனக்குரல்களால் என் உடல் நடுங்கும். கெக்கெலி விட்டு சிரிப்பார்கள். விலா எலும்பை உடைப்பார்கள். அசந்து அதிகாலையில் இரண்டு மணிநேர உறக்கம். உடலின் கெஞ்சுதலை அறிந்து மனம் மேற்கொள்ளும் தற்சிகிச்சை.
எதைக் கைவிட்டேன். எதைக் கைக்கொண்டேன். எதிலும் என் தேர்வு இல்லை. நதியின் போக்கு என்று சொல்லத் துணியேன். கால காலமாக எச்சரிக்கப்பட்டவை எனக்கு ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. உடலின் வலு உள்ளத்தின் வலுவும். நரம்புகள் தளர்ந்து ஓயும் என்பதை நம்பியிருக்கவில்லை. நாற்பதைத்தாண்டியும் நான் உள்ளீடற்றவன் ஆனேன். மண்டையில் ஓயா வெறுமை. குறைக்காலம் பெண்களின் பின்னால் ஓடினேன். இரவுகள் என்றாலே பெண்கள். பகல்களை மதுவிற்குள் முக்கி எடுத்து கடைவாயில் ஒதுக்கிக்கொண்டேன். அலுவலகத்தில் என் பணிகள் தேங்கின. இரண்டுமுறை தண்டிக்கப்பட்டேன். எதுவும் என்னை மாற்றிவிடவில்லை. என் வசம் நான் இல்லை. யார் என்னை இயக்குவது என்பதே புரியாமல் போனது. சட்டென்று சேமிப்பில் இருந்த பணத்தை அள்ளிக்கொண்டு பழனிக்குச் செல்வேன். படிகளில் அமர்ந்திருக்கும் அத்தனைப்பேர்களுக்கும் அவர்கள் கண்கள் விரியும் அளவில் தானம் அளிப்பேன்.காசின் சுமை குறையக் குறைய நான் பஞ்சு போல எடை குறைந்து லகுவாவேன். ஊர் திரும்பியதும் காலியிடத்தை காற்று நிரப்புவதை ப் போல என் குற்றங்கள் என்னைக் கனப்படுத்தும். என் கூனல் அப்படி விழுந்தது.
எழுந்து கொண்டேன். நடந்துசென்றால் விடிந்து விடலாம். விடியல் நிலையானது. நான் இந்த விடியலில் இருக்கிறேன். நாளையும் விடியும். நான் நாளை இருப்பேன் என்ற எண்ணம் என்னிடம் இல்லை.