சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘புன்னகை’ – சிறுகதை குறித்து
தமிழில் நவீனத்துவத்தை பாரதி தொடங்கிவைத்தார் என்ற ஒரு கருத்தாக்கம் நம்மில் உண்டு. அத்தனை புதுமைகளுக்கும் அவரே முன்னத்தி ஏர். அதிகார பீடங்களை நோக்கி அல்ல “கேளடா மானிடா” என அப்பாவி மக்களை நோக்கி அவர் பாடினார். அவரிடமிருந்தே மக்களாட்சிக்கான விழுமியங்கள் பிறந்தது.
பாரதியைப் பின்பற்றி நம் மண்ணில் நவீனத்துவத்தையும் நவீன தமிழ் இலக்கியத்தையும் பரவலாக்கிய ஆசான்களுக்கு பாரதியிடம் காணக்கிடைத்த பன்முகத்தன்மை இருக்கவில்லை. மரபிடமிருந்து கற்றுக்கொள்வதும் மரபினை மறுபரிசீலனை செய்வதும் நிகழாமல் போயிற்று. ஆங்கிலம் உந்தித்தள்ள, அலைபுரண்டோடிய மறுமலர்ச்சிக் கண்ணோட்டங்களின் தாக்கத்தால் மனிதக்கீழ்மையை வேரறுப்போம் என்கிற முழக்கத்தோடு அதுவரை இருந்த மரபினையும் அள்ளிச்சேர்த்துப் பிடுங்கி விட்டெறிந்தார்கள். வேர்களற்ற அந்தகாரத்தில் இருந்து நவீன தமிழ் இலக்கியத்தின் பேராளுமைகள் தோன்றி நிலைத்தனர். பெரியாருக்கும் அதுவே நிகழ்ந்தது.
நேற்றைய புதுமைப்பித்தனில் ஆரம்பித்து இன்றைய சுரேஷ் பிரதீப் வரை “அரசியல் விலக்கம்” என்பது பேணப்பட வேண்டிய இலக்கிய நெறிகளில் ஒன்று. அரசியலில் நிகழும் மாற்றங்கள் நவீன இலக்கியவாதிகளின் அக்கறைகளுக்கு அப்பாற்பட்டவை. பெரியார் போன்ற பேராளுமைகள் எண்பதாண்டுகள் நம்மிடையே வாழ்ந்து மறைந்தாலும் அவர் மீதான நடுநிலைப்பார்வை கொண்ட பதிவுகள் இல்லை. இத்தனை இலட்சம் பேர்களின் அன்றாடத்தோடு தினந்தோறும் ஊடாடிச்செல்லும் அரசியல் மாற்றங்களைப்பற்றி இவர்கள் ஏன் எழுதவில்லை என்ற வினாவும் இலக்கிய விமர்சனத்தில் எழுப்பப்பட வேண்டியதே.
தமிழின் ஆகச்சிறந்த படைப்பாளுமைகள் திராவிடக்கட்சிகளின் வளர்சிதை மாற்றத்தை ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னர்களின் ஆட்சியின் கீழ் இவர்களின் கவலையெல்லாம் யாருடைய நடமாடும் நிழல்கள் நாம்? என்கிற புல்லரிப்புகளின் நுனிகளில் சுடர்ந்து நின்றது. ராமச்சந்திரனா என்று கேட்டேன், ராமச்சந்திரன் என்றார், எந்த ராமச்சந்திரன் என்று நான் கேட்கவில்லை, அவர் சொல்லவுமில்லை என்கிற இருத்தலிய வரிகளில் சிக்கிக்கிடந்தது. அன்றைய ராமச்சந்திரனை எதிர்கொண்ட நம் கவிமனதின் விம்மல்கள் இவ்விதம். கலை கலைக்காக என்பதும் கலை மக்களுக்காக என்பதும் இன்றுவரை தொடரும் யுத்த சரித்திரம். பாண்டவர்களும் கௌரவர்களும் பெருகிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.
தொண்ணுாறுகளின் இலக்கியச் சூழல் இசங்களின் கண்டுபிடிப்புகளாக இருந்தது. இசங்கள் பலவிதங்களாக நாள்தோறும் அறுவடையாகிய பருவம். புதுமைப்பித்தனின் கபாடபுரம் போன்ற கதைகளை விஞ்சியெழும் புனைவுகளை அப்போதைய இளம் எழுத்துக்காரர்கள் எழுதித்தள்ளினார்கள். பனிக்கத்திக்குள் உறையும் சிறுத்தைகளும் நாகத்தைப் புணரும் அன்னையர்களும் சிறுகதைகளில் அலைந்து திரிந்தார்கள். அம்மணம் பற்றியெரியும் வீதிகளில்தான் அன்றெல்லாம் நடந்தே ஆகவேண்டும்.
கதைகளற்ற கதைகளாக சுரேஷ்குமார இந்திரஜித் கதைகள் அன்று இருந்தன. அபார பீடிகையோடு ஆரம்பிக்கும் ”விரைந்துசெல்லும் ஓர் இடத்திற்குப் பல வரைபடங்கள் ஒரு காலத்திற்குப் பல சரித்திரங்கள்” போன்ற கதைகளை வாசித்து முடிக்கும்போது நம் மனதில் ஒன்றுமே எஞ்சியிருக்காத ஓர் உணர்வே தேங்கும். தென்றலைப்போன்று தீண்டி அப்பால் சென்றுவிடும் கதைகளாக அவை இருந்தன. அந்த அனுபவங்களே அவரின் புனைவுகளின் மீது ஒருவித புதிர்த்தன்மை கவியும் கரியநிழலை உறைய வைத்துவிட்டன.
கடந்த ஐந்தாண்டுகளில் அவரின் படைப்பூக்கத்தின் மலர்ச்சி உச்சமடைந்திருக்கிறது என நான் நம்புகிறேன். குறிப்பாக நடனமங்கை மற்றும் இடப்பக்க மூக்குத்தி தொகுப்புகள். பெரும்பாலான கதைகள் சிறுகதைகளுக்கே உரிய “பெரும்வாழ்வின் ஒருதுளியின் உருப்பெருக்கம்” என்கிற கட்டுக்களை தாண்டிக்குதித்தவை. ஒரு சிறுகதைக்குள் ஒட்டுமொத்த வாழ்க்கையை சொல்ல முயன்றவை. சில கதைகளில் இரண்டு மூன்று தலைமுறைகளின் கால மாற்றம் சொல்லப்பட்டுள்ளது.
மேற்சொன்ன இரண்டு தொகுப்புகளும் தீவிர வாசகர்கள் அத்தனைப் பேர்களாலும் கொண்டாடப்பட வேண்டியவை. சாரு நிவேதிதாவை நான் பொருட்படுத்தி விரும்பி வாசிக்கக் காரணமாக அமைந்த புனைவு வெளியின் துல்லியம் கூடிய துாரிகைத் தீற்றல்கள். அவை தனித்தனியே சுமார் மூன்றாண்டுக்கால இடைவெளியில் வந்திருப்பினும் உள்ளடக்கத்தில் ஒரு தொகுப்பே. அல்லது ஒரு நாவலின் கலைந்த வடிவங்கள் என்றும் கொள்ளலாம்.
அத்தனை கதைகளும் பெண்களைப் பற்றியவை. பெண் எழுத்தாளர்களால் ஒருபோதும் எழுதிவிட முடியாத பார்வைக்கோணங்கள் கொண்டவை. எனக்கு அசோகமித்திரனோடுதான் இவரை ஒப்பிடத் தோன்றுகிறது. அசோகமித்திரனை விட எளிய படைப்பு மொழி கொண்டவர். ஆனால் மணல் துகள்களைக்கொண்டே பெரும் கோட்டைக் கொத்தளங்களை இவரால் உருவாக்கிக்காட்ட முடிந்திருக்கிறது. அசோகமித்திரினின் பெண்கள் இன்று நம்மிடையே இல்லை. மாறாக இவரின் பெண்களோடுதான் நாம் வாழ்ந்து வருகிறோம்.
நீதிக்கட்சியின் தோற்றத்தோடு துவங்குகிறது திராவிடக் கட்சிகளின் வரலாறு. காங்கிரசிற்கு காந்தியின் வருகை எவ்வளவு முக்கியமோ அதற்கிணையானது நீதிக்கட்சிக்கு பெரியாரின் வருகையும். பெரியார் நம் மண்ணில் நிகழ்ந்த அற்புதம். ஒரு குறிப்பிட்ட இனத்தவர் மீது ஒட்டுமொத்த சீரழிவையும் குவித்துவைத்து அவர்களின் இருப்பை பொசுக்கிவிட்டார் என்பதொன்றே அவர் மீதான விமர்சனம். ஆனால் அவர் நிகழ்த்திக் காட்டியிருக்கும் சமூக மாற்றங்களை இல்லையென்று சொல்லிவிட முடியுமா? அதன் புனைவுச் சாட்யியே இக்கதை.
”புன்னகை” அதுவரை பெரியார் குறித்து எனக்கிருந்த எண்ணங்களை திருத்தி அமைத்த சிறுகதை. எண்பதுகளில் பிறந்த என்போன்றோருக்கு பெரியாரின் ஆளுமை என்பது செவி வழிச்செய்திகள் மட்டுமே. பெரியாரை தமிழ் புனைவுவெளிக்குள் கைப்பிடித்து அழைத்துவந்த பெருமை சுரேஷ்குமார இந்திரஜித்தையேச் சாரும். இரண்டு மூன்று கதைகளில் பெரியாரைப்பற்றிய நினைவுப்பதிவுகள் வந்து போகின்றன. புன்னகை-யில் பெரியாரின் ஆளுமை கச்சிதமாக வெளிப்பட்டுள்ளது.
நீலமேகத்தின் மகள் லலிதா பதினெட்டு வயதில் திருமணமாகி பத்தொன்பது வயதில் விதவையானவள். குழந்தை இன்றி கைம்பெண்ணாக அவள் வீடு திரும்பியதில் இருந்து நீலமேகத்தை ஆழ்ந்த கவலை பீடித்துவிடுகிறது. பலவாறாக குழம்புகிறார். தனக்குப்பின் லலிதாவின் வாழ்க்கை என்னவாகும்? அவளுக்கென்று யார் இருக்கக்கூடும்? என்று தவிக்கிறார். தன் மகன் மீதும் மருமகள் மீதும் அவருக்கு நம்பிக்கையில்லை. கைம்பெண்ணாக அவளை படிக்க வைக்க அனுப்புவதிலும் அச்சம் இருக்கிறது.
அப்போதுதான் தன் நண்பர் ஒருவரின் திருமண விழாவின்போது பெரியாரைப் பார்க்கிறார். சாமானியனின் மீது பெரியார் என்கிற பேராளுமை தொற்றி ஏறுகிறது.
வெறும் பிரச்சாரக்கதையாக மாறிவிடும் ஆபத்து இக்கதைக்கு உண்டு. சிறந்த படைப்பாளிக்கே உரிய நுட்பங்களைச் சொல்லி அவ்வாபத்தைத் தாண்டி வருகிறார். நீலமேகம் பெரியாரால் உத்வேகம்பெற்று, தன்மகளுக்கு மறுமணம் செய்துவைத்தால் என்ன என்கிற முடிவினை வந்தடைகிறார். அங்கே அவரைத்தவிர பிற அத்தனைபேருக்கும் அது மீறக்கூடாத எல்லையாக இருக்கிறது. பெத்த தாய்க்கே தன் மகள்மீதான கருணை சமூகம் தரச்சாத்தியமுள்ள அழுத்தத்தால் வற்றிப்போகிறது. லலிதாவின் அம்மா அவரிடம் இருந்து மறுமண எண்ணத்தை கேட்டபோது பதறிப்போகிறாள். லலிதாவின் அண்ணணோ சாமிக்குத்தம் என்கிறார்.
மறுமணத்தை லலிதா எதிர்கொள்ளும் விதம்தான் இக்கதையை இலக்கியச் சாதனையாக மாற்றியமைக்கிறது. அவளுக்கு அந்தச்செய்தியைக் கேட்டவுடன் மகிழ்ச்சி பீறிட்டுப்பாய்கிறது. ஆனால் வெளிக்காட்டாமல் அதை வரவேற்காத தோரணையில் இருந்து விடுகிறாள். அம்மா வந்து பேசும் போது அம்மாவிற்கு பிடித்தமாதிரியே பதில் சொல்கிறாள். எனக்கு விருப்பமில்லை என்று தள்ளிப்போகிறாள்.
விதவையாக தன் மகள் வீட்டில் இருக்கும்போது ஒருவரை ஒருவர் அருகில் நின்று பார்ப்பதோ தொட்டுப்பேசுவதோ கூட பெற்றோர்களால் இயலாமல் போகிறது. நீலமேகம் வாசலில் அமர்ந்திருந்த தன் மனைவியைத் தொட்டதும் அவள் உடம்பு திடுக்கிட்டு ஒருகணம் நடுங்குகிறது என்ற சித்தரிப்பிற்குப்பின் உடைத்துப்பரவும் உன்மத்தக்காட்சிகள் எத்தனை எத்தனை.
சுயசாதியை மீறவும் முடியாமல் சுற்றத்தாரின் எதிர்ப்பை புறக்கணிக்கவும் இயலாமல் மதில் மேல் பூனையின் இருப்பில் நீலமேகம் சிக்கிக்கொள்கிறார். அவருக்கு கிடைத்த பாதுகாப்பு அரண்தான் பெரியார். நீலமேகத்தின் நண்பர் உற்சாகப்படுத்துகிறார். “பெரியாரை அழைத்துவந்து திருமணத்தை நடத்தி வைப்போம். அப்போதுதான் ஒருபயலும் நம்மை விமர்சனம் செய்யமாட்டான்” என்கிறார். பெரியார் கலகக்காரர். சமூகத்தின் ஒவ்வொரு அங்குலமும் சென்று சேர்ந்தவர். யுகமாற்றத்தின் ஒரு புள்ளியை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது இக்கதை. ஜெயகாந்தனின் அக்னிப்பிரவேசத்திற்கு இணையானது. இறந்த லலிதாவின் முகத்தில் உறைந்திருக்கும் புன்னகை, நம் தமிழ்ச்சமூகத்தின் ஒரு காலகட்டத்தின் புன்னகையும் கூட. இருள்மண்டிய தமிழ்ப்பெண் கதாப்பாத்திரங்களுக்கு மத்தியில் நின்றெரியும் ஒரு சுடராக லலிதா.