பேருந்தின் நெரிசலில்,கழுத்தில் லேசாய் தீண்டிய காற்று ,பின் காதுமடலில் உரசியதும் புல்லரித்தது. யாரோ உருவாக்கி அனுப்பும் காற்று ; வாயை விசிறியாக்கும் அந்நபரின் முகத்தை குனிந்து ஓரக்கண்ணால் பார்க்க, புருவத்தில் வெட்டப்பட்டிருக்கும் ஒருவன். முன்னாலிருப்பவர்களை இடித்துக்கொண்டே முன் நகர்ந்தேன்.
விசிறி பலமாய் காற்றை உருவாக்கியது . இது சரியா தவறா என இதயம் படபடத்து கிடந்து துடிக்க, வலப்பக்க இருக்கையிலிருந்து ஹேண்ட் பேக் வைத்திருந்த பெண்மணி எழுந்தாள். வியர்த்துப் போய் அமர்ந்தேன்.
ராணியாகயிருந்தால் இன்னொரு புருவத்திலும் கோடிட்டு விடுவேன் என சண்டையிட்டு இருப்பாள். அம்மாவும் சில முறை பொது இடங்களில் அவளுக்கெதிராய் ஏதாவது நிகழ்வதாகவோ அல்லது தகராறோ என்றால் சண்டையிட்டு பார்த்து இருக்கிறேன். நான் “அம்மாவிடம் மட்டுமே” சண்டையிட கற்றுக்கொண்டவள் .
முந்தைய நாள் காலை வீட்டினை ஒதுங்க வைத்துக் கொண்டிருக்கும் வேளையில் “ம்மா… நாளைக்கு நா போறேன்”. எதற்காக இவ்வளவு பிடிவாதமாகயிருக்கிறேன்,இதில் எனக்கொன்றும் அவ்வளவு ஆர்வம் இல்லையே என்று சில எண்ணங்கள் என்னை யோசிக்க வைத்தாலும் நான் என்னையும் ,அம்மாவையும் சம்மதிக்க வைத்தேன்.
காலை கிளம்பும் வேளையில் நான் பொறுமையாய் செய்த ஒரே காரியம், என் கருப்பு நிற சுடிதாருக்கு ஏற்ற கருப்பு நிற சின்ன பொட்டைத் தேடி வைத்தது தான் .
காலையில் அரைகுறையாக சாப்பிட்டிருந்தேன். எப்படியும் சந்திப்பிலும் சாப்பாடு தானே என்பதால். பஸ் இருக்கையின் வெளியே விழும் அளவு விழிப்பாயிருந்தேன். கம்பியிருக்கிறது என்ற நம்பிக்கையில்.
“இறங்கியதும் மெசேஜ் பண்ணு” என திவ்யாவின் குறுஞ்செய்தி வந்தது. நான் முகத்தை மொபைல் திரையில் பார்த்துக் கொண்டேன்.
ராணியிடம் சொல்லாதது கொஞ்சம் வருத்தமளித்தது .அவள் “தீபக்க பாக்கத்தான போற” என கடுகடுப்பாள்.
எனக்கு தீபக்கை பிடிக்கும் என்றெல்லாமில்லை வகுப்பின் பிற மாணவர்களைப் பிடிக்கவே செய்யாது, தீபக்கை அவ்வாறு சொல்ல முடியாது. திவ்யாவையும் ராணி வெறுத்தால் அவள் வாசனையை, அலங்காரத்தை.
ஒரு நடுவயது பெண்மணி என்னை எழுந்துக் கொள்ளச் சொன்னாள் .அதை பரிவாக கூட கேட்கவில்லை ஆனால் நான் எழுந்து கொண்டேன். பின்னால் விசிறி இல்லை என்ற சந்தோஷத்துடன் பின்னே நகர்ந்தேன். சற்று நேரமென தோன்றியது .பேருந்து நிறுத்தம் வந்தது.
ராணியிடம் சொல்லாததன் இன்னொரு காரணம் ,நான் இந்த “ஒத்திகையை ரகசியமாய் “வைத்துக் கொள்ள எண்ணினேன். ஒருமுறை கூட நான் செய்யாத ஒன்று, எவ்வாறு செய்ய வேண்டும் என ஒத்திகை செய்ய நினைத்தேன்.ராணியை தாண்டியும் நண்பர்கள் வேண்டுமென தோன்றியது. ராணி “ஹங்க் அவுட்” செய்வதில்லை, அவள் அண்ணன் சுவரோரத்தில் தூசியை அடித்து துடைப்பது போல் அவளை உதைப்பான்.
“பூ வாங்கிக்கோ…” என படி இறங்கியதும் கறாராக ஒரு பாட்டி அதட்டினாள். விலகி இடப்புறம் நடந்தேன். திவ்யாவும் இடப்புறமெதிரே வந்தாள். எங்களுக்குள் பெரிதாய் எதுவும் பேச்சில்லை. ஆனால் இந்த சந்திப்பில் எனக்கு அவள்தான் பரிட்சியம் அதிகம்.
ஹோட்டலென ஒரு இடம் சென்றோம்.
நான் மனதில் வைத்திருந்த உணவகம் வேறு மாதிரி இருந்தது . இது களேபரமாக என் கண்ணிற்குப்பட்டது. தீபக் வலது தோளைத் தட்டினான். “ஹாய் ராஜி” என்று நெருங்கி நின்றான். அவன் நெருக்கம் என்னை ரகசியமாக ரசிக்க வைத்தது.
எல்லோரும் அவரவர் இருக்கையில் அமர்ந்தோம்.மொத்தம் ஏழு பேர். ஏழு பேரில் ஐவரிடம் ஐந்தே வார்த்தைகள் தான் இதற்கு முன் பேசியிருப்பேன். ஒரு தட்டில் என்முன் நூடுல்ஸ் வந்து நெளிய, கைகழுவி விட்டேனோ என யோசிக்கும் அளவு தெளிவான மனநிலை.
எல்லோரும் விதிக்கப்பட்டதை செவ்வனே செய்கிறேன் என்பது போல் பேசினார்கள். நானும் , நான் மட்டுமல்ல யாருமே அங்கே நெருக்கமாய் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. “நூடுல்ஸ் சாப்பிட தான் வந்தேன்” என நினைத்துக் கொள்ள வேண்டியது தான் என முடிவெடுத்தேன்.
திவ்யா, தீபக் மற்றும் இன்னொருவன் சொல்வதற்கு தலையை ஆட்டிக்கொண்டிருந்தாள். திவ்யாவின் வாசனை மிக நுட்பமாகவும் , மிருதுவாகவும் இருந்தது. ராணியிடம் சொன்னால் , “ஓஹோ …அவ கட்சியாயிட்டியா ?”என வேண்டா வாதம் செய்வாள்.
தீபக்கின் மேல் திரவத்தை போல் மணம் வந்தது. அவன் பைக்கை பற்றியும் அதன் நுட்பங்களை பற்றியும் பேசிக்கொண்டிருந்தான்.
கைகழுவும் வேளையில் திவ்யாவிடம் என் பர்சை கொடுத்துவிட்டு சுற்றளவை பார்வையிடுவது போல் பாவனை செய்தேன். கழுவிய பின் கேட்கவா வேண்டாமா என தயங்கி ஒருவழியாக எனக்கு கேட்க தைரியம் வந்தது. அப்போதுதான் எல்லோரும் செல்பிகளும் குருப்பிகளும் எடுக்க வேண்டுமென்றனர்.
திவ்யாவின் விரலைத் தொட்டு பின் அவள் கையையிழுத்து “ரெஸ்ட்ரூம் எங்க இருக்குன்னு தெரியுமா?” என்றேன் . “இங்க இல்லன்னு நினைக்கேன்” என்று சொல்லி அவளும் கழுத்தை திருப்பி உணவக சுற்றளவை கணக்கிட்டாள்.கண்டிப்பாக போகனுமா என அவள் கேட்டது எதற்காக என புரியவில்லை. ஆனால் நான் “அவ்வளவு அர்ஜன்ட் இல்ல” என்றதும் சகஜமாய் வெளியே கிளம்பினோம்.
தீபக் , “பை… ராஜி” என்றான். “அவ்வளவு தானா” என நான் கேட்கவில்லை. “பஸ் ஸ்டாண்ட் வர வரணுமா ?”என்றாள் திவ்யா .”வரணுமா” என்பது எனக்குத் தோதாக தெரியவில்லை . “வேணாம் ..நா போய்க்கிறேன்” என்றேன்.
நிறுத்தம் சென்றதும் பூக்கார பாட்டியிடம் “பஸ் எப்போ” என்றேன் . “வரும்… இருபது நிமிஷம்” என்றாள் .இருபதாம் நிமிடத்தின் விளிம்பில் நின்றபோது என்னால் நிற்க முடியாமல் “கால் மேல் காலை அழுத்தி, பின்னி “ஆணவமாய் கல் இருக்கையில் அமர்ந்தேன்.
அருகே இருக்கையில் மொபைலில் சமையல்குறிப்பு பார்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் இதை இந்நேரம் கேட்பது சரியா என சிந்தித்து பின் அவள் மொபைலை உள் வைத்ததும் கேட்டுவிட்டேன்.
இடப்பக்கம் கைகாட்டி “நேர லாஸ்ட்…” என்றாள். நேராக நடந்தேன். கடைசியை அடைந்தேன் … திருப்பம் வந்தது.சுற்றிப் பார்த்தேன். நீல நிற இரும்பு கொட்டகை போல் காட்சியளித்த “மொபைல் டாய்லெட் “.
அருகில் போய் நின்றேன். தயக்கமாயிருந்தது. தயக்கத்தை பின்தள்ளிவிட்டு “பெண்” என போடப்பட்டிருந்த இடத்திற்கு படியேறி கதவின் வெளியே நின்றேன்.
உள்ளே கதவு திறக்கப்படுவதை போல் தோன்றியதும் நிமிர்ந்தேன். திறந்ததும் கோடுபோட்ட சட்டைபோட்டு ஒருவன் உயரமாய் வந்தான். என்னை பார்த்து நெளிந்துவிட்டு, எதையோ கூறவந்தவன் போல “திக்கிக் கொண்டே” படியிறங்கினான். ஆண் என டாய்லெட் தனியாய் ஒன்றிருந்தும் இங்கே ஏன் அவன்?நான் இதையெல்லாம் கேட்பதில்லை.
கதவை தள்ளி திறந்தேன் .உள்ளே சென்றதும் தாழிட்டேன். பின்னால் சிறு இடுக்கின் வழி வந்து என் கழுத்தை உரசியது காற்று.கதவின் தாழ் ஆடியது.சிறிது பலமாய் காற்று வீசினால் கதவே விழுந்துவிடும் போலிருந்தது.