கோணங்கியின் ‘அப்பாவின் குகையில் இருக்கிறேன்’ சிறுகதையை முன்வைத்து
ஏறக்குறைய நாற்பதாண்டுகளாக தொடர்ந்து இயங்கிவரும் கோணங்கியை தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் ஐந்தாயிரம் வாசகர்களாவது வாசித்திருப்பார்களா? நவீன தமிழிலக்கியம் என்பதே எப்போதும் அதிகபட்சம் ஐந்தாயிரம் வாசகர்களால், ஐந்தாயிரம் வாசகர்களுக்காக நுரைத்துப்பொங்கியழிந்துசீறியெழும் சிற்றலைதான். ஐம்பதாண்டுகள் தொடர்ந்து எழுதியும் ஐந்தாயிரம் வாசகர்களைத் தாண்ட முடியவில்லை என்ற அங்கலாய்ப்பு கடைசி வரை சுந்தர ராமசாமிக்கு இருந்தது. ஒரு தீவிரவாத இயக்கத்தைப்போன்றுதான் நம் மகத்தான படைப்பாளிகள் தமிழில் தொடர்ந்து எழுதியும் வாசித்தும் வந்திருக்கிறார்கள்.
கோணங்கியை அவரின் ஆரம்பக்கால சிறுகதைகளில் இருந்து ஆரம்பிக்கலாம். ஜெயமோகனை விஷ்ணுபுரத்தில் இருந்து ஆரம்பிப்பது எவ்வளவு கடினமோ அதைப்போன்றதே கோணங்கியை அவரின் முதல் நாவலான பாழியில் இருந்து தொடங்குவதும். ஜெயமோகனுக்கு விஷ்ணுபுரம் சாதனை நாவல். கோணங்கிக்கு பாழி புனைவுச்சிகரம். மதினிமார்கள் கதை மற்றும் கொல்லனின் ஆறுபெண் மக்கள் ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளில் காணக்கிடைக்கும் கோணங்கி மகத்தான கதைசொல்லி. தமிழ்ப்பண்பாட்டின் அத்தனை கூறுகளையும் கதைகளாக்கிய பெருங்கலைஞன்.
கோணங்கியின் சிறுகதைகளில் எனக்கு மிகப்பிடித்த கதை கொல்லனின் ஆறு பெண்மக்கள் தொகுப்பில் உள்ள அப்பாவின் குகையில் இருக்கிறேன் என்ற கதைதான். லெட்சுமி என்கிற சிறுமியில் தொடங்கி பரமுசம் என்கிற அப்பாவில் தொற்றி வேல்ச்சாமித்தேவர் என்கிற தாத்தாவில் எழுந்து அமராவதியின் பட்டாம்பூச்சியாக பறந்து பஞ்சவர்ணம் என்கிற அம்மா மீது அமர்ந்து மீண்டும் லெட்சுமியின் ஊதாப்பாவாடையாக காற்றில் அலைந்து நிற்கிறது அக்கதை. கோணங்கியின் தற்போதைய எழுத்து முறை தானியிங்கி எழுத்து என்று வகைப்படுத்தப்படுகிறது. தமிழின் ஜேம்ஸ் ஜாய்ஸ் என்று அழைக்கும் தகுதியுள்ளவர் கோணங்கி. ஜெயமோகனுக்கு இதுகுறித்து மாற்றுக்கருத்து இருக்கிறது. ஆரம்பக்கால சிறுகதைகளைத் தவிர்த்து பிறவற்றை சொற்குப்பை என்கிறார். கோணங்கியின் மொழி தானியிங்கி எழுத்துமுறைக்கு போதாமை கொண்டது என்று விமர்சிக்கிறார்.
கதைசொல்லியாக கோணங்கியின் மொழி கிராமியத் தோற்றம் உடையது. மகள் லெச்சுமி அப்பாவிற்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு ரயில்நிலையம் வருகிறாள். முதல் சில பத்திகளில் ஒரு வழக்கமான ரயில்நிலையம் கண்முன் வந்துநிற்கிறது அதன் அத்தனைக் கோலங்களுடன். எஞ்சின் புகைமூட்டத்திலிருந்து பரமுசம் (பரமசிவம் தான்) மகளை வரவேற்கிறார். லெச்சுமி தன்னையும் ரயிலில் அழைத்துச்செல்லக் கேட்க அடுத்தமுறை என்று மறுக்கிறார் பரமுசம். மகளிற்கு கடும்கோபம் அப்பா கொடுத்த தீனித்துட்டை வாங்கமறுத்து விரைந்து ஓடுகிறாள். பரமுசம் ”லெச்சூ..எம்புட்டு..வளந்திட்டா..அவளோட தாத்தா மாதிரியே கோபப்படுதாளே..“என்று நினைக்கிறார். பரமுசத்தின் அப்பா வேல்ச்சாமித்தேவர் கரிப்புகை மண்டிய முகத்தோடு நம்மை நோக்கி வருகிறார். அப்பாவின் நண்பர் தர்மர் மாமா, அவரின் மகள் அமராவதி என்று கதை ஒளிரத்தொடங்குகிறது. அமராவதியை அவருக்கு கட்டிவைப்பதாக அப்பாக்கள் முடிவுசெய்துகொள்கிறார்கள். அமராவதியும் ருதுவாகி பரமுசத்தின் மீது பற்றிப்படரத் தொடங்குகிறாள். பணியிட மாற்றம் அவ்வுறவைத் துண்டாடுகிறது. தர்மர் மாமா போய் அவரிடத்திற்கு லோகோ பைலட் எம்.எஸ்.தேவர் வந்தடைகிறார். பயல் மீது அதீத பாசம் உள்ளவர். தகப்பனைப்போல பரமுசத்தை கண்டிப்போடு வளர்க்கிறார். அமராவதியின் தோளில் அமர்ந்து குனுகிய வெள்ளைப்புறாக்கள் நீண்ட நாட்களுக்குப்பின் பஞ்சவர்ணத்தின் வருகையோடு சிறகொலி எழுப்பி அலைகின்றன.
மதுரை ஜங்சனில் பரமுசத்தின் இரண்டாம் காதல் துளிர்க்கிறது. பஞ்சவர்ணம் அவர்மேல் வந்து விழுகிறாள். இரண்டுதோசை, சட்டினியை உண்டு அவர் அவளை செரிக்கத்தொடங்குகிறார். ரயில் தாத்தாவுக்கு இதெல்லாம் தெரியத்தான் செய்கிறது. ”அடே… பரமுசோம்… நீ போற போக்கு ஒண்ணும் சரியில்ல… வம்பா… மாட்டிக்கிடாதப்பா… அவளப்பாத்தா அசல் தேவடியான்னுதான் தெரியுது… பெழப்பக் கெடுத்துக்கிறாதாப்பா…” என்கிறார். அவர் அளிக்கும் புத்திமதிகள் பரமுசத்திற்கு கேட்டுக்கேட்டு புளித்துப்போகிறது. பரமுசம் பஞ்சவர்ணத்தை அலைத்து வந்து குடும்பம் நடத்துகிறான். யுகம் புரண்டுகொள்கிறது. கரிஇஞ்சின் போய் மின்சார இஞ்சின்கள் வருகின்றன. அடுத்த தலைமுறைக்காக சாம்பல் புறாக்கள் காத்திருக்கத் தொடங்குகின்றன.
கோணங்கியின் சிறப்பென்று மிக சாதாரணமாக நடந்துசெல்லும் படைப்புமொழி ஒரு சன்னத நிகழ்வாக விண்ணோக்கி எழுந்தாடும் காட்சியைச் சொல்லலாம்.
”காலம் வெகுவிரைவில் அய்யாவின் முதுகையும் தொற்றி ஏறிக்கொண்டது.”
”அடி மௌனம் தாங்கிவரும் புறாவின் குரலில் எந்தப் பெண்ணாலும் தீர்க்க முடியாத துக்கம்”
”தீயிடம் பழகிப் பழகி இருகி வரும் முகம்” போன்ற வரிகள் கதைச்சூழலை கவித்துமாக்குகின்றன.
இக்கதை நெடுக பாசஞ்சர் ரயிலும் கரிப்புகையும் தண்டவாளங்களின் கிரீச்சிடும் ஒலிகளும் சாம்பல் புறாக்களின் சிறகடிப்பும் நீண்ட பெருமூச்சுகளிட்டு சோர்ந்து நிற்கும் எஞ்சின்களும் வந்தபடியே இருக்கின்றன. ஒரு லோகோ பைலட்டின் கதை கடிகாரப்பெண்டுலம் போன்று காலத்தில் முன்பின்னாக பயணிக்கிறது.