1.
வீதியிலிறங்கக் காத்திருந்ததுபோல்
உடலெங்கும்
முத்தங்களைப் பொழிகிறது மழை
மெல்லத் தீண்டுகையில் பிள்ளைகளின்
இதழ்களையும்
வேகம் வளரும்போது
மனைவியின் இதழ்களையும்
நினைவூட்டுகிறது மழை!
பட்டும் படாமல் ஒற்றியெடுக்கையிலோ
மழைக்கு அம்மாவின் உதடுகள்!
ஏங்கி ஏங்கிக் கடந்துவந்த
ஆயிரமாயிரம் உதடுகளின் நிரல்களை
உணர்ந்து மகிழ
எத்தனை நேரம் பெய்யவேண்டியிருக்குமோ
இந்த மழை!
2.
மழைக் குளிருக்கஞ்சி
போர்வையின்கீழ் அடைக்கலமாகிறேன்
முதலில் வந்தண்டியது
தாபமெழுந்த மனையாளின் உடல்வெப்பம்
பின்வந்து என்னைத் தீண்டுகிறது
பிள்ளைகளின் தளிர்விரல்ச் சூடு
கடைசியில் வந்து என்னைத் தேற்றுகிறது
அம்மையின் கருப்பை வெம்மை!
3.
உலகளந்த பெருமாளுக்குப் போட்டியாய்
துளிகளால் இரவளந்துகொண்டிருக்கிறது
மழை!
4.
அனைத்தையும் புறமொதுக்கி
வீடே பார்த்துக்கொண்டிருந்தது மழையை!
ஆஸ்துமாவுக்கு அஞ்சி
முதலில் மழையைக் கைவிட்டாள் மனைவி!
அதிசயம் சலித்தபோது
நழுவிக்கொண்டனர் பிள்ளைகள்
இங்கே பாரென்னும்
நித்திராதேவியின் காதல் கண்சிமிட்டலில்
நானும் கவனமிழக்க,
கடைசி வரை மழையாடிய
நைலான் கொடிக்கயிறுக்கு மட்டும்தான்
குளிர்ந்த முத்தாரத்தை
வாங்கிச் சூடும் வாய்ப்பமைந்தது
5.
நான் பகலை
அரிந்து கொண்டிருக்கிறேன்
முழுப்பகலையும் பிள்ளைகள் கையில்
கொடுத்துவிட முடியுமா?
ஒரு கீற்றை
அரிந்து வைக்கிறேன்
மனைவிக்கு சதைப்பற்றுள்ள
ஒரு துண்டு
அலுவலகத்துக்கு
மூன்றிலொரு பங்கு
நண்பர்களுக்கு
அங்கொன்றுமாய்
இங்கொன்றுமாய்
ஒரு துணுக்கு
வரிசையின் கடைசியில்
நிற்கிறது கவிதை
அட..அதை
மறந்து போனேனோ..
வேறென்ன செய்ய..
முகம்பார்க்காமல்
உத்தரவிடுகிறேன்
“கொஞ்ச நேரத்தில் இரவை
பங்கிடுவேன் போய்
அந்த வரிசையில் நில்”