(பட்டினத்தார் பாடல்கள் குறித்த பார்வையின் தொடர்ச்சி)
’பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே’ என்பது எத்தனை அழகிய சொற்றொடர். பால்யகாலம், முதற்காதல், இனிமையான நாட்கள், இளமை, உறவுகள் எல்லாம், எல்லாம் பொய்யோ எனும்படித் தோன்றுகிறது. காரணம் அதைக் கடந்துவிட்டதினால் உணரமுடிவதில்லை. நாட்கள் செல்லச்செல்ல ஏதோ பழங்கதைபோல பின்னர் கனவாக மெல்லப் போய்விடுகிறது. நம்மிடம் மிச்சமிருப்பதுதான் என்ன? புராணங்கள் நமக்கு பத்திரகிரியாருக்கே முதலில் முக்தி கிடைத்ததாகச் சொல்கின்றன. கடைசியாக எஞ்சியிருந்த திருவோட்டையும், நாய் மீதான பிரியத்தையும் உடைக்கும்போது அவருக்கு முக்தி கிடைக்கிறது.
நானெத் தனைபுத்தி சொன்னாலும் கேட்டிலை நன்னெஞ்சமே
ஏனிப் படிக்கெட்டுழலுகின் றாயினி யேதுமிலா
வானத்தின் மீனுக்கு வன்தூண்டி லிட்ட வகையதுபோல்
போனத்தை மீள நினைக்கின் றனையென்ன புத்தியிதே.
மிக எளிய வரிகள். பொருட்களைத் துறப்பது பெரிய விசயமல்ல. வெளியிலிருக்கும்
பொருட்களைவிட உள்ளே அள்ளி எறிய வேண்டியது பல மடங்கு உள்ளது. நினைவுகளின் சுமை அத்தகையது. வானத்து மீனுக்கு தூண்டில் போடுவதுபோல் போனதையேன் திரும்ப நினைக்கிறாய் என்று கடிந்து கொண்டாலும் முதலடியில் பாருங்கள், அன்போடு நன்னெஞ்சமே என்கிறார். ஒரு நெருங்கிய நண்பனோடு பேசுவது போலிருக்கிறது. யோசிக்கையில் நம் நெஞ்சத்தைவிட உற்ற நண்பன் ஒருவனில்லை என்றுதான் தோன்றுகிறது. நம் நெஞ்சம் அறிந்த அளவு எந்த நண்பனும் நம்மை அறிந்துகொள்வதில்லை. பட்டினத்தார் பாடல்களில் ஒரேயொரு பாடல் மட்டும் தனித்துக் கிடக்கிறது. அது,
தோடவிழும் பூங்கோதைத் தோகைஉனை இப்போது
தேடினார் போய்விட்டார் தேறியிரு – நாடிநீ
என்னை நினைத்தா லிடுப்பி லுதைப்பேன் நான்
உன்னை நினைத்தா லுதை.
இது ஒரு குறிப்பிட்ட சம்பவத்தின்போது தொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. எதன் பொருட்டு என்று தெரியவில்லை. ஆனால் இந்தப் பாடலையொட்டி விசமத்தனமான கதைகள் உள்ளன. பட்டினத்தார்கள் மூவர் என்பதையும் அவர் பாடல்களிலும் இடைச்செருகல் உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெரும்பாலான சித்தர்கள் பத்தாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள். 9-10ம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படும் சிவவாக்கியர் விக்கிரக வழிபாட்டைக் கடுமையாகத் தாக்குகிறார். ஓக மார்க்க ஞானநிலைக்கான வழிகளையும்பாடல்களில் வெளிப்படுத்துகிறார். பட்டினத்தார் பாடல்களில் ஒன்றோ இரண்டோ பாடல்கள்மட்டுமே குண்டலினி பற்றிச் சொல்கிறது. ஏனையவை உடல் நிந்தை, துறவு, கோவில் தலங்களைப் புகழ்பவை என உள்ளன. தலங்களைப் புகழ்ந்து பாடியிருப்பினும், விக்கிரக வழிபாட்டை ஆதரித்தாலும் அவர் சடங்குகளை எதிர்த்தற்கு அறிகுறியாக இந்த ஒரேயொரு பாடல் உள்ளது.
நேமங்கள் நிட்டைகள் வேதங்க ளாகம நீதிநெறி
ஓமங்கள் தர்ப்பணஞ் சந்தி செபமந்த்ர யோகநிலை
நாமங்கள் சந்த்னம் வெண்ணீறு பூசி நலமுடனே
சாமங்கள் தோறும் இவர்செய்யும் பூசைகள் சர்ப்பனையே.
(சர்ப்பனை-ஏமாற்று, வஞ்சகம், தீய நோக்குடைய செய்கைகள்)
சடங்குகளுக்கு ஆதாரமாக அமைபவை விக்கிரகங்கள். விக்கிரகங்கள் இருந்தால் கோவில் உருவாகும். அங்கு வழிபாடு இருக்கும். வழிபாடு இருந்தால் அதிலிருந்து முறைகளும் சடங்குகளும் தானாகவே உருவாகிவிடும். இன்னொரு பாடலும் உள்ளது. ஆனால் அதில் வைதீகத்துக்கெதிரான குரல் தீர்க்கமாக வெளிப்படவில்லை. திருத்தலங்களைப் பாடிய சித்தரிடமிருந்து இத்தகைய பாடல்களையும் எதிர்பார்க்க முடியாதுதான்.
எட்டுத் திசையும் பதினாறு கோணமும் எங்குமொன்றாய்
முட்டித் ததும்பி முளைத்தோங்கு சோதியை மூடரெல்லாங்
கட்டிச் சுருட்டித்தம் கக்கத்தில் வைப்பர் கருத்தில்வையார்
பட்டப் பகலை இரவென்று கூறிடு பாதகரே.
இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்பதைக் கருத்தில் வையாமல் பட்டப்பகல் போல் உள்ள உண்மையை மறைத்து இரவென்று கூறும் பாதகர்கள் என்று வைதீகர்களைச் சாடுகிறார்.
சினந்தனை யற்றுப் பிரியமும் தானற்றுச் செய்கையற்று
நினைந்தது மற்று நினையா மையுமற்று நிர்ச்சிந்தனாய்த்
தனந்தனி யேயிருந் தானந்த நித்திரை தங்குகின்ற
வனந்தனி லென்றிருப் பேனத்த னேகயி லாயத்தனே
இதை வாயாரப் பாடிப்பாருங்கள். எத்தனை இனிமையாக இருக்கிறது. “தனந்தனி யேயிருந் தானந்த நித்திரை”/”வனந்தனி லென்றிருப் பேனத்த னேகயி லாயத்தனே”. கோபமின்றி, பிரியமும் இன்றி, தான் என்ற மையமின்றி, அதன்கண் செயலுமின்றி, நினைந்தவைகள் இல்லாமல், நினையாமையும் இல்லாமல்-அதாவது அது வெறும் மறதியாக இருக்கக்கூடாது, பிரக்ஞை அக்கணத்தில் நிற்கவேண்டும் என்பதைக் குறிக்கிறது. நாம் பெரும்பாலும் நினையாமையில் இருக்கிறோம். மனதின் அடியாழத்தில் நாம் ஒதுக்கிவைத்த, மறக்கவிரும்பும் அல்லது சமூகஒழுங்கு காரணமாக அடிமனதுக்குத் தள்ளிவைத்திருக்கும் எண்ணங்கள் புழுப்போல் நெளிந்தபடிஉள்ளன. உணவுக்கும் கனவுக்கும் தொடர்புண்டு என்கிறது உளவியல். ஒவ்வொரு உணர்வுக்கும் உடலின் ஒவ்வொரு உறுப்பு மையமாய் இருக்கிறது. பயம் வயிற்றோடு தொடர்புடையது.
செரிக்காத உணவு துண்டு துண்டு எண்ணங்களோடு கோர்த்து உலவுகின்றன. அடிமனதைத் தூய்மை செய்வது எப்படி? இதற்கு ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ போன்ற நவீனகாலத்து ஞானியர் சொல்வதைக் கேட்கலாம். எண்ணங்களைக் கட்டுப்படுத்தாமல் அவற்றை அப்படியே கவனித்துவர அவை அடக்கப்படவோ, ஒளிக்கப்படவோ செய்யாமல் முழுமையாக மறையும் நிலையை அடையும்.
உடைகோ வணமுண்டு உறங்கப் புறந்திண்ணை உண்டுணவிங்கு
அடைகா யிலையுண் டருந்தத்தண் ணீருண் டருந்துணைக்கே
விடையேறும் ஈசர் திருநாம முண்டிந்த மேதினியில்
வடகோ டுயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே.
கடைசிவரி கவித்துவத்துடன் அமைந்திருக்கிறது. தெற்கே கடலால் கொள்ளப்பட்டதால்
தென்திசை கூற்றுவன் திசையாகவும், இமயம் உயர்ந்ததால் அது புண்ணியதிசையாகவும் கருதப்படலாயிற்று. சிவபெருமான் திருமண வைபவத்தையொட்டி வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்த கதையைக் கேட்டிருப்போம். இந்தப் பாடலின் இறுதிவரி இதையொட்டி நிகழ்ந்த சச்சரவுக்குப் பதில் சொல்வதுபோல இருக்கிறது. கோவண உடை இருக்கிறது; உறங்கத் திண்ணை இருக்கிறது; உணவுண்டு; அருந்தத் தண்ணீருண்டு; துணைக்கு ஈசன் நாமமுண்டு; பிறைநிலவுக்கு வடக்கு உயர்ந்தால் என்ன; தெற்கு தாழ்ந்தால் என்ன? அது எட்டா உயரத்தில் இந்த சச்சரவுகளுக்கு அப்பாற்பட்டு இருக்கிறது.
சூதுற்ற கொங்கையு மானார் கலவியுஞ் சூழ்பொருளும்
போதுற்ற பூசலுக் கென்செய லாம்செய்த புண்ணியத்தால்
தீதற்ற மன்னவன் சிந்தையி னின்று தெளிவதற்கோ
காதற்ற ஊசியைத் தந்துவிட் டானென்றன் கைதனிலே
இந்தப் பாடலில் தனக்கு மகனாக அவதரித்த சிவன் காதற்ற ஊசியைக் கொடுத்துவிட்டு மறைந்ததை நினைவுகூர்கிறார். என்னைக் கவர்ந்த வரி ‘போதுற்ற பூசலுக்கென் செய’ அதாவது, சூதுள்ள கொங்கைகளுடன் மனைவியும், புணர்ச்சியும், பொருட்களும் சூழ இருப்பினும் மரணம் வரும்போது ஏற்படும் பூசலுக்கு எதுவுதவும் எனக் கேட்கிறார். மரணம் வரும்போது என்ன பூசல்? உடல்தான். உயிரைத் தக்கவைக்க கடுமையான போராட்டம் நடக்கிறது. தவிர்க்கமுடியாத பூசலது.
கீழேயுள்ள பாடலும் அரிதான ஒன்று. வழக்கமான பட்டினத்தாரின் தொனி இதில் இல்லை.
சீதப் பனிக்குண்டு சிக்கெனக் கந்தை தினம்பசித்தால்
நீதுய்க்கச் சோறு மனைதோறு முண்டு நினைவெழுந்தால்
வீதிக்குள் நல்ல விலைமாத ருண்டிந்த மேதினியில்
ஏதுக்கு நீசலித் தாய்மன மேஎன்றும் புண்படவே.
பனிக்கு இறுக்கிப் பிடிக்கும் கந்தை உண்டு; பசிக்கு உண்ண வீடு மனைதோறும் உண்டு; நினைவு எழுந்தால் வீதியில் விலை மாதருண்டு; எப்போதும் புண்படும்படி எதற்குச் சலிப்படைகிறாய் மனமே? தேவைப்பட்டால் விலைமாதரைத் தேடிப் போகலாம் என்று பட்டினத்தார் பாடியிருப்பது ஆச்சரியமானது. சாமானியர்களைப் பார்த்து, இத்தனை சுகமிருந்தும் எதற்கு உன் மனம் சலிக்கிறது எனக் கேட்பதாகப் பாடியது என்றும் சொல்லமுடியாது. காரணம் இது துறவியைத்தான் குறிக்கிறது. எப்படியாயினும், இந்தப் பாடல் இக்கியூ சோஜுன் என்ற ஜப்பானிய ஜென் கவிஞரின் கவிதையொன்றை நினைவுபடுத்துகிறது.
எட்டங்குல நீளம் அது. உறுதியானது. என் செல்லப்பொருள்.
இரவில் தனித்திருக்கும்போது முழுக்கத் தழுவிக் கொள்கிறேன் அதை
வெகுகாலமாயிற்று அழகான பெண்ணொருத்தி அதைத் தொட்டு.
என் கோவணத்துக்குள் இருக்கிறது
ஒரு முழுப் பிரபஞ்சம்!
(மொழிபெயர்ப்பு: யுவன் சந்திரசேகர், பெயரற்ற யாத்ரீகன்)
ஔவையார் ஒரு பாடலில் தினசரி உண்ண வேண்டியிருக்கிறதே என்று வேதனைப்படுகிறார். உடல் என்னும் கருவியை வைத்துத்தான் எல்லாம் செய்யமுடிகிறது. ஆனால் உடல் மீது அக்கறை காட்ட ஏன் இப்படி சலித்துக் கொள்கிறார்கள்? ஐம்புலன்களும் அனுபவங்களைக் கிரகித்து மூளைக்கு அனுப்பி அந்த உணர்ச்சிகள் (emotions) உணர்வுகளாக (sensibility) ஆக மாறும் ஓர் சாதனமாக அல்லவா இந்த உடல் துணை புரிகிறது? உயிரைத் தடுத்தாட்கொள்ளும் உடலின்றி இந்த எல்லாவித உணர்வுகளையும் எப்படி அனுபவிப்பது? உடலல்லவா உயிருக்கு உறைகல்? ஆனால் ஒவ்வொரு அனுபவமும் உடலை நோக்கி மனதைச் செலுத்துவதாயுள்ளன. அதில் ஆன்மா அலைக்கழிகிறது. சும்மாயிரு; நிர்ச்சிந்தையில் உன்னுள் ஆழ்ந்திரு; அந்த ஆனந்தத்தைப் பருகு என்று சொல்லும்போது வயிறு கூப்பாடு போடத் தொடங்குகிறது. இந்திரியங்களை அடக்கினாலும் நள்ளிரவு நாயின் குரைப்பைப் போன்ற பசியின் கூச்சலை எப்படித் தடுப்பது?
பூணும் பணிக்கல்ல பொன்னுக்குத் தானல்ல பூமிதனைக்
காணும்படிக்கல்ல மங்கையர்க் கல்லநற் காட்சிக்கல்ல
சேணுங் கடந்த சிவனடிக் கல்ல என் சிந்தைகெட்டுச்
சாணும் வளர்க்க அடியேன் படுந்துயர் சற்றல்லவே
ஆடை ஆபரணங்களுக்காக அல்ல; பொருளுக்காக அல்ல; நிலங்களுக்காக அல்ல; பெண்களுக்காகவும் அல்ல; எதையும் கண்டுகளிக்கவும் அல்ல; சிவனே உன் திருவடிக்காகவும் அல்ல; இந்த ஒரு சாண் வயிற்றை வளர்க்க நான் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல- சிவனே உனக்காகக்கூட நான் இப்படிக் கஷ்டப்படவில்லை. இந்த வயிறை வளர்க்க அல்லவா இவ்வளவுசிரமப்படுகிறேன் என்கிறார். அவர் பிச்சை கேட்டுச் செல்வதை நிறுத்திவிட்டதையும் கவனிக்க வேண்டும். யாராவது வந்து கொடுத்தால் மட்டும் உண்கிறார்.
தத்துவத்தைப் பார்த்துமிகத் தன்னை அறிந்தறிவால்
உய்த்துனைத்தான் பாராமல் உய்வாரோ பூரணமே
ஒருவர் தன்னை உணர்ந்து அதிலிருந்து வரும் சொற்கள் சத்திய வாக்காகவே அமையும். அது ஏற்கெனவே சொல்லப்பட்டதாய் இருந்தாலும் ஒருவரது அனுபவத்திலிருந்து வருவதால் புதியதாய் இருக்கும். அப்படி தன்னையறியக்கூடிய அறிவால் ‘உய்த்துணர்ந்து’ இறைவனைக் காண வேண்டும். இதைத்தவிர வேறு மார்க்கமில்லை என்கிறார். தத்துவத்தைப் பார்த்தறிவதைவிட இதுவே மிகவும் தேவையானது. இங்கே இலக்கியக் கோட்பாட்டாளர்கள் கிளிப்பிள்ளைகளைப் போல தாங்கள் மேற்கத்திய நாடுகளிலிருந்து இறக்குமதியான சரக்குகளை உள்ளே தள்ளி வாந்தியெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட தங்களுக்கென சுயமான பார்வை ஏதுமற்றவர்களாகப் போகுமளவுக்கு இது அவர்களை ஆக்கிரமித்திருக்கிறது. ஒரு சிந்தனாவாதியாக வேசம் போடுவதற்கு இந்தத் திரையைவிட்டால் வேறு கோவணம் ஏதுமில்லை என்பதால் அவர்களும் இறுக்கப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இலக்கியம் வாசிப்பதால் ஏதேனும் பயனுண்டா என்றொரு கேள்வியை முகநூல் நட்பு வட்டத்தில் ஒருவர் எழுப்பியிருந்தார். பட்டினத்தாரின் மேலேயுள்ள பாடல் இதற்குப் பதிலளிக்கிறது. வெறுமனே விசயார்த்தமாகவோ, இரசனைக்காகவோ எதையும் வாசிக்கும்போது நாம் பெறுவது ஒன்றுமில்லை. தனக்குள் அதை வாழ்ந்து பார்க்க வேண்டும். வார்த்தைகளை ஓணானின் நாவைப்போல அள்ளி உள்ளிழுத்து அறிவில் உணர்ச்சியாக முகிழ்க்கச் செய்து அதை கூருணர்வெனும் இலை நுனிகளுக்குக் கடத்தி வெளியை அந்த நுனிகள் தீண்டும் அனுபவத்தைப் பெறவேண்டும். இதுவே வாசிப்பின்பம். இப்படியான வாசிப்பே அர்த்தமுள்ளது. இப்படி ஒரு புத்தகத்தை வாசித்தால்கூடப் போதும். அவர் மிகச்சிறந்த வாசகராய் இருப்பார். இதைத்தான் பாரதியும்,
அணிசெய் நூல்கள் ஆயிரம் கற்கினும்
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்
என்கிறார். ஆயிரம் நூல்கள் கற்பதால் ஒரு பிரயோசனமும் இல்லை. ஒவ்வொரு வரிக்கும் பின்னால் அதை எழுதுவதற்கான ஓர் உந்துதல் இருக்கிறது. அந்த உந்துதல் கவியுள்ளத்திலிருந்து பிறக்கிறது. வாசிப்பதன் மூலம் வாசகர் அந்தக் கவியுள்ளத்தைத் தொடவே முயற்சிக்க வேண்டும். ஏனென்றால், எழுதுபவரின் நோக்கமும் அதுவே.