சுகுமாரன் கவி உலகு
உபரி உணவே நாகரீகம் என்கிறது மார்க்சியம். சொல்லிற்கு மொழிக்குள் சாத்தியப்படும் உபரி அர்த்தங்களே கவிதை என்று ஆகின்றன. சொல் அடையும் பித்துநிலை கவிதை. சன்னதம் கொண்ட மனிதனிடம் குடிகொள்ளும் அமானுஸ்யம் போன்றது. எழுத அமரும் கவிஞன் வேறு ஒருவன். எழுதி முடித்து அன்றாடத்திற்கு திரும்பும் அவன் ஆழமுள்ள ஒரு நதியைக் கடந்த பயணி. வீடு துறந்து நாடு துறந்து ஆட்சி அதிகாரம் துறந்து கானகம் புகும் துறவியைப்போல கவிதைக்குள் அமைகிறது புத்தம் புதிய பயணம். பறத்தலை தன் சுதந்திரம் எனக்கொள்ளும் இயல்பு.
தமிழ் மொழியில் எழுதப்புகும் இளம்கவிஞன் எதிர்கொள்ளும் சவால் உலக மொழிகளில் ஒருசிலவற்றிற்கே உரியது. சங்கக் கவிதைகளின் நுட்பங்களை மலரினும் மெல்லிய கூறுமுறைகளை அவன் கற்றுத்தேர்ந்திருக்க வேண்டும். சிகரத்தின் நுனியே அவனின் பயணம் தொடங்கும் நிலம்.
தொண்ணுாறுகளில் உலகமயமாக்கல் நம் மண்ணில் பிறந்து கிராமங்களின் கடைக்கோடிவரை தனது பகுமானத்தை பரப்பிய பின் நவீன கவிதைக்கு லட்சியவாத முகம் இல்லாமல் ஆனது. மனிதர்களின் நற்குணங்களைப்போலவே கிராமங்களின் நல்லியல்புகளும் பாமரத்தனம் என்று கைவிடப்பட்டன. மாநகரம் அளிக்கும் கையறுநிலைக்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல இன்றைய கிராமங்களின் எக்குதல்கள். கூடுதலாக சாதிப்பற்றின் பாறைத்தழும்புகள் வேறு. இப்பகைப்புலத்தில் வாழநேர்ந்த ஒரு எளியனின் சொற்களாக இருக்கின்றன சுகுமாரனின் கவிதைகள்.
சுகுமாரனின் கவிதைகளில் சதா நிர்ப்பந்தங்களின் மூச்சுத்திணறல். நம்பிக்கைக்கும் செயலுக்கும் இடையே உள்ள இடைவெளி குறித்த ஆவலாதிகளே மிகுதியும்.. சூரியனை உள்ளங்கையில் ஏந்திய இலைகளில் கூட நிச்சயமின்மையின் நிழலாட்டம்..
அவசர யுகம் என்கிறார்கள். பத்துப்பதினைந்து வரிகளுக்குள் அநேகம் புதுக்கவிதைகள் முடிந்துவிடுகின்றன. ஆயினும் நம்முடைய கரங்களுக்கு கவிதை நுால்கள் வந்து சேர மறுக்கும் பிடிவாதம்தான் ஏன் என்று தெரியவில்லை. கவிதை நமக்கு பொழுதுபோக்கு, நன்னெறிக் கருத்துக்களின் தானியங்கிடங்கு, காதலைச் சுமந்து செல்லும் துாதுக்கிள்ளைகள். அரசியலையும் சினிமாவையும் தவிர்த்து பொது ஜனத்தால் மிக அதிகமாக பாவிக்கப்படும் மொழி உபகரணம் புதுக்கவிதை.
நவீன மனிதனின் வாழ்வியல் நெருக்கடிகள் மீது நவீன கவிதை தனியான அக்கறை கொள்கிறது. ஏக்கப்பெருமூச்சுக்களோடு ஆற்ற வேண்டியவைகளை எண்ணி துயர்மூண்டு கடந்து செல்கின்றன நாட்கள். அகம் மகிழும் தருணங்களுக்காக வாழ்நாளெல்லாம் காத்திருக்கிறோம். என்றாவது வந்தே தீரும் வசந்தம் என. அந்நம்பிக்கையின் ஒளிக்கீற்றாகவும் இருக்கிறது கவிதை
சுவர்கள்
வந்த வழிகளெல்லாம் அடைபட்டன
புறங்கள் நிமிர்ந்து சுவர்களாயின
விவரங்களற்று
அகப்பட்டேன் நான்.
வானம் சதுரமாய்ச் சிறுத்தது
இரண்டு எட்டில் கால்கள் திரும்ப
என் உலகம்
நொடியில் சுருங்கியது
மீண்டும் மீண்டும் நானே சுவாசித்துக்
காற்று விஷமாயிற்று
வெளியேற வழியற்றுத் திகைத்தேன்
பறவை நிழல் தரையைக் கடக்க
அண்ணாந்தால்
நீல வெறுமை
ஆதரவுக்காய் அனுப்பிய குரல்
சுவர்களில் மோதிச் சரியும்
வீணாகும் யத்தனங்கள்
தளிர்ப் பச்சைக்கோ
சிரிப்பொலிக்கோ
மழைத்துளிக்கோ
பூக்களுக்கோ ஏங்கும் புலன்கள்
நாள்தோறும் சுவர்கள் வளரக்
கையளவாகும் வானம்
சுதந்திரம் நகர்ந்து போகும்
கதவுகள் இல்லையெனினும்
வெளியைக் காண
சுவருக்கொரு ஜன்னலாவது அனுமதி
நிச்சயம் வெளியேறிவிடுவேன்
பால்யத்தில் வேர்ப்பிடிக்கும் கனவுகள் நாள்பட வெளுக்கத் தொடங்குகின்றன. உறவுகள் என்பவை துாண்டில் முள்ளில் துடிக்கும் தசைத்துணுக்கு. சுற்றமும் நட்பும் நம்மைச் செரித்துத் துளிர்க்கும் சிற்றிலைகள். சகல உறவுகளும் நீர்மையற்று வரண்டுவருகின்றன. இருபத்தொன்றாம் நுாற்றாண்டின் மனங்களுக்கு நம்பிக்கைக் கொள்ள கடவுள்களும் இல்லை, தேவதுாதர்களும் இல்லை. மகத்தான தலைவர்களும் இல்லை. சிறு கிளை தாங்கிய பெரும்பழத்தின் கனம் நம்மை நசுக்கி வருகிறது. துாக்கிலிடும் கயிற்றில் இருந்து உட்கொள்ளும் நச்சுவரை நம்பகத்தன்மையற்றுப் போன அவலம். வாழ்வதைப்போலவே சாவதும் சவாலாக இருக்கிறது.
சாகத்தவறிய மறுநாள்
கடைசி மாத்திரை விழுங்கியதும்
மனம்அலைகளடங்கி அமைதியானது
இறப்பு கருணையுடன் நெருங்கியது
இனி
விழிப்பின் அவலங்கள் இல்லை
கண்ணீரோ
ஓயாமல் கசியும் காயங்களோ
அலைக்கழிதலோ இல்லை
பொய்யின் கசப்போ
அழுகிய புன்னகைகளின் துா்நாற்றமோ
நொந்துகொள்வதோ இல்லை
பயமோ
நிரந்தரமாய்க் கவிந்த வெறுமையோ
நேசமற்ற கணங்களோ இல்லை
காலம் வெளி பெயர்கள் இல்லை
மேலாக
வாழ்வின் குமட்டல் இல்லை
மனம் அலைகளடங்கி அமைதியானது
நினைவில் புதைந்த இசை
வெளிப்பட்டுத் ததும்பியது
மனம் அலைகளடங்கி அமைதியானது
காலையில்
ஒளி வந்து அழைக்க எழுந்து
என் கிளிக்குப்
பழங்கள் பொறுக்கப் போனேன் வழக்கம்போல
சந்தோஷம்
துக்கம் என்னும் சலனங்களற்று
சிறுநீர் அடக்கிய அடிவயிறாய்க்
கனத்தது மனம்
உலகம் முழுவதும் ஒலிக்கும் கவிக்குரல்களில் பாதிக்குமேலானவை உறவுகளில் ஏற்பட்டுவிடும் சிடுக்குகள் பற்றியவை. மனித மனங்களின் கொதிநிலை எப்போதும் ஒரே புள்ளியில் இருப்பதில்லை போலும். எரிமலைக் குழம்பினைக் கொண்டு கொட்டினாலும் நெக்குருகாமல் நீடிக்கும் உறவு சிலபோது பனித்துகளால் அதிர்ந்து நீங்குவதும் சாத்தியமே. ஒருவரை ஏற்றுக்கொள்ள பெரிய காரணங்கள் தேவையில்லை என்பதைப் போல ஒருவரை நிராகரிக்கவுந்தான். முந்தியநாள்வரை உலகம் என்றிருந்த நம்பிக்கையை ஒரு சொல்லோ ஒரு முகச்சுளிப்போ இல்லாமல் ஆக்கிவிடுகிறது. தொலைந்து போனவர்கள் நிரந்தரமாக இல்லாமல் ஆவதில்லை. தொடுவானமாகி முடிவிலியின் சாத்தியங்களால் நம்மை கொந்தளிக்கச் செய்கிறார்கள். மீண்டும் ஒரு வாய்ப்பு அமைந்தால் ….சரிசெய்துவிட வேண்டியவைகளின் முறைப்பாடுகள் நீண்டுகொண்டே இருக்கின்றன. காலத்தின் செவிகளுக்கு கடந்ததின் குரல்கள் கேட்பதில்லை போலும்.
தொலைந்து போன உலகம்
எனக்கு இருக்கிறது ஓர் உலகம்
உனக்கு இருக்கிறது ஓர் உலகம்
நமக்கு இல்லை ஓர் உலகம் –குஞ்ஞண்ணி
என்று துவங்கும் கவிதை பின்வருமாறு கவித்துவ பனிமூட்டத்தோடு முடிகிறது.
ஒருமுறையேனும்
நாம் முத்தமிட்டு இருக்கலாம்
இரண்டு பூனைகள் முத்தமிடுவது போல
ஒரு முறையேனும்
நான் அணைத்துக்கொண்டிருக்கலாம்
இரண்டு குஸ்திக்காரர்கள் அணைப்பது போல
நமது உலகம்
காலம் விழுங்கிக் காணாமல் போனது
நம்மில் யார் செய்த தவறு
நீயோ அல்லது நானோ?
துணையறிதல் ஆண் பெண் உறவின் மாயத்தன்மையை நிலைப்படுத்தும் கவிதை. ஆணின் உள்ளே நின்றெரியும் பெண் எனும் சுடர் ஒருபோதும் அணைந்துவிடுவதே இல்லை. சுடர்களின் நடுக்கங்கள் அதிகரிக்குந்தோறும் அகஉலகத்தின் நிலச்சரிவுகள் உக்கிரம் கொள்கின்றன. நிலையழிந்து கண்கள் வெறிக்க தனித்திருந்து வெற்றுச்சுவரை வெறிக்கும் விழிகளுக்கு பின்னால் உள்ளது ஓசையும் நுரைத்துமில்களும் அற்ற அலைகள். காதலும் காமமும் கையும் சைகையுமாக மாறி மாறி நம்மை குழப்புகின்றன. கைகளைக்கோர்த்து மணற்பரப்பில் நடப்பது சைகை எனினும் வெகுதொலைவில் ஒளிப்புள்ளியாக பதறி பதறி தெரிவெதென்ன காமந்தானே?
எட்டுக்காலியும் நானும் கவிதை இத்தொகுப்பின் சிறந்த கவிதைகளில் ஒன்று. அங்கதமும் சினமும் ஒன்றுசேர்ந்த மணியாரம்.
எட்டுக்காலியும் நானும் ஒன்று
இருவரும் பிழைப்பது
வாய் வித்தையால்
எட்டுக்காலிக்க எச்சில்
எனக்குப் பொய்
இருவரும் வலைபின்னுகிறோம்
அது எச்சிலைக் கூட்டி
நான் உண்மையைக் குறைத்து
எட்டுக்காலி வலை
ஜீவித சந்தரப்பம்
எனது வலை
சந்தரப்ப ஜீவிதம்
எட்டுக்காலிக்குத் தெரியும்
எச்சிலின் நீளமும் ஆயுளும்
எனக்கும் தெரியும்
பொய்யின் தடுமாற்றமும் அற்பமும்
எட்டுக்காலியின் நோக்கம் தக்கவைத்தல்
எனவே
வலை ஒருபாதுகாப்பு
எனது தேவை தப்பித்தல்
எனவே
பொய் ஒரு பாதகம்
வாய்வித்தைக்காரர்கள் இருவரும்
எனினும் எட்டுக்காலி
என்னைவிட பாக்கியசாலி
சொந்த வலையில் ஒருபோதும்
சிக்குவதில்லை அது.
சுகுமாரன் இரண்டாயிர வருடத்தமிழின் மற்றுமொரு மகத்தான கவிஞர். கவிதையென்பதின் சாத்தியப்பாடுகளை மேலும் விரிவுசெய்தவர். தமிழில் கவிஞனாக வாழ்ந்த காரணத்தினாலே. புறக்கணிப்பும் கண்டுகொள்ளப்படாமையும் அவர் கைவசமுள்ள கச்சாத்துக்கள்.. காலந்தான் கவிஞனின் சொத்து. காலத்தில் நீந்திக்கடக்கும் வல்லமையுள்ள கவிஞன் அவன் நிகழ்ந்த மொழியின் பெருமிதம்.