அரூபத்தின் நிழற்படம்

என்னை உலுக்கியது ஒரு கரிய பறவையின் குரல். சமீப நாட்களாக சதா என் தலைக்குமேல் பறந்து சென்ற சின்னஞ்சிறிய பறவை. இருள் திரண்டு உருக்கொண்டது போன்ற உடல்வாகு. அதன் கண்களில் இருந்த ஈர்ப்பும்,  அழைத்துப் பகிர முயன்ற  அதன் குரலும்,  அத்தனை வசீகரமாய் இருந்தது.  எங்கோ ரீங்கரித்து திடீரென்று காற்றில் மிதந்துவந்து என் காதுமடலை தீண்டிய போது என் உடல் நடுங்கியது. அப்படி ஒரு பறவையை அதற்கு முன் நான் பார்த்ததில்லை.

 பறவை என்றாலும் விலங்கு தான் என்ற நினைவே ஏற்றுக் கொள்ள இயலாத ஒரு அந்நியத் தன்மையை அளித்திற்று. புரண்டு படுத்தேன். ஈர நசநசப்பில் செதில்கள் வழுக்க தண்ணீர் மெத்தையின் குலுங்கல்.  எழுந்தமர்ந்து என் இருப்பை உறுதி செய்து கொள்ள முயன்றேன். நீண்டநாள் பழக்கமாக இருப்பினும் ஒவ்வொரு முறையும் நான் ஒரு புகையைப் போன்றவன் என்ற எண்ணமே வலுப்பெற்று வந்தது. இம்மண்ணில் என்னிடம்  ரூப வெளியாய் வெறுமை ஒன்றே உறைந்திருக்கக் காண்கிறேன்.

அறை கண்களுக்குப் பழகி வர மின்விசிறியின் இரைச்சல் தாங்க முடியாத பாரமாக என்மேல் மோதியது. அவளை இருளுக்குள் தேடினேன். மெல்லிய சீறலாக அவள்  என்னருகில் இருந்து கொண்டிருந்தாள். ஆனால் வழக்கம்போல என் கைகளுக்குச் சிக்காமல் போக்குக்காட்டி நின்றாள்.

நான் ”ரிதும்மா” என்றேன்.

விறுட்டென்று கொலுசுகளின் சிணுங்கல். நீட்டியிருந்த கால்களை இழுத்துக்கொண்டதாலோ அல்லது மடக்கியிருந்த கால்களை நீட்டியதினாலோ எழுந்த ஒலியரவம். திரைச்சீலைக்குள் அவளின் உரு வலுப்பெற்றது. மெலிந்த இடைக்கும் கனத்த மார்புகளுக்கும் இடைப்பட்ட பகுதியை என் கண்கள் ஆவேசமாகத் தேடின. ஆம். அவை அங்கே இருக்கின்றன. இரண்டு நான்கு எட்டு என்று என் கண்முன்னே அவற்றின் எண்ணிக்கை பல்கிப்பெருகின. அவள் சுமைதாளாமல் மண்டியிட்டாள். நான் பதறி “ஐயோ” என்ற வீறிடலுடன் எழுந்தேன். என் கால்களை அவளின் கரங்கள் வலுவாக பிணைத்திருந்தன.  இமைக்காமல் அவள் கண்களைப் பார்த்தேன். பச்சை நிறச்சுடர்கள் நீரின் ஆழத்தில் இருந்து விரைந்துவரும் ஒளிப்புள்ளிகளைப்போல எழுந்து வந்தன.

பகலில் இந்த அறையை அவள்தான் தேர்ந்தெடுத்தாள். அவளுக்கு எப்போதுமே கடைசிகளின் மேல் பெரும் விருப்பம்.. அவள் நான்கு சகோதரிகளுக்கு மத்தியில் பிறந்து வளர்ந்தவள். அவள் தேர்வு எப்போதும் கடைசியாகவோ அல்லது முதல் வரிசையில் ஓரிடமாகவோ இருக்கும். நான் தனித்திருக்க அஞ்சுபவன். எனக்கு முன்னும் பின்னும் எப்போதும் யாராவது இருக்கவேண்டும்.

அறைக்குள் நுழைந்து தாளிட்டுக்கொண்டதும் கழிவறைக்கு ஓடினேன். தனித்த அறைகள் புதிர்கள் நிறைந்தவை. அதுவும் விடுதிகளின் அறைகள் என்றால் ஒருவித போதை தொற்றிக்கொள்ளும். கதவைச் சாத்திக்கொண்டேன். சிறிதுநேரம் பீங்கான் கோப்பையையும் முகம்கழுவும் சிங்கையும் உற்றுப்பார்த்தேன். மழுங்கலான மஞ்சள் நிறத்தில் கழிவறைக் கோப்பை சுத்தமாக ஒளிர்ந்தது. ஆடைகளை தொங்கவிடும் சில்வர் கொக்கி அருகே நான் எதிர்பார்த்திருந்த அதன் இருப்பு. யாரோ விட்டுச்சென்றிருந்த சிவப்பு நிற நெற்றிப்பொட்டு. நகக்கண் அளவில். குளிக்கும்போது எடுத்து ஒட்டிச்சென்றிருக்க வாய்ப்புள்ள அந்தப்பெண் குறித்து தீவிரமாக கற்பனை செய்ய ஆரம்பித்தேன். கண்முன்னே காற்றில் இருந்து ஒரு பெண்ணின் உடல் தோன்றி நிலைக்க ஆரம்பித்தது. அதற்குள் என் வேகம் தணிந்திருந்தது. கதவைத்திறந்து வெளியே வந்தேன். உடனே ஊருக்குத் திரும்பிச்சென்றால் தேவலை என்ற எண்ணம். அவள் நைட்டிக்கு மாறி ஆயாசமாக மெத்தையில் சாய்ந்திருந்தாள். என்னைப் பார்த்து உதடு விரிய சிரித்து இரண்டு கைகளை நீட்டி அழைத்தாள். நான் உடல்முழுக்கக் கொதிப்புற்று அவளை நோக்கி நடந்தேன். பாதை நீண்டுகொண்டே சென்றது.

அவளை நெருங்கி ”நானும் வரட்டுமா? என்றேன்.

 அவளின் பின்பகுதியை வெறித்தபடி நின்றேன். என் ஏக்கம் அழுகையாக மாறி உதடுகளை துடிக்கச் செய்தது. முக்குத் திரும்பும்போது அவள் ஒருகணம் நின்று என்னைப் பார்த்து தலையசைத்துச் சென்றாள். ஓடினேன். அதற்குள் ஒரு இருசக்கர வாகனம் அவளை நெருங்கி நின்றது. அதில் அவள் ஏறிக்கொண்டாள். அவளின் சேலைத்தலைப்பு காற்றில்  மிதந்து அவளின் பின்னால் ஒரு பறவையைப்போலச் சென்றது. அச்சேலை அவள் கணவன் இருபத்தியெட்டாவது பிறந்த நாள் பரிசாக அவளுக்கு வெளிநாட்டில் இருந்து  அனுப்பியது. அதற்கு மேட்சாக புல்வாயில் ஜாக்கெட் துணியை நான்தான் வாங்கிவந்து கொடுத்திருந்தேன்.

கடிதத்தை வாங்கி மாராப்பிற்குள் வைத்துக்கொண்டு என்னைப் பார்த்து ”என்னை உனக்குப் பிடிக்காதா?” என்றாள். நான் அதை எதிர்பார்க்கவில்லை.  பாலமுருகனின் காதல் கடிதத்தை கொடுத்துவிட்டு அவளின் பதிலைப் பெற்று வரவே அனுப்பப்பட்டிருந்தேன்.

“பிடிக்கும்தான்”

”என்ன பிடிக்கும்”

”அழகான கண்கள்” என்றேன். ஆனால் நான் அவளின் அவைகளைப் பார்த்து சட்டென்று மீண்டேன்.

கண்களைப் பார்க்கத் தயக்கமாக இருந்தது. அப்போது நான்  கண்களாக இருந்தேன். உண்மை வேறாக இருந்தது.

”அப்ப நீ என்னை சினிமாக்கு கூட்டிட்டு போறீயா?”

”நானா…..அவனுக்குத் தெரிஞ்சா்…என்னைக் கொன்னுருவான்”

”ச்சீய்..நீயெல்லாம் ஒரு ஆம்பளயாடா..கரடி மாதிரி உடம்பெல்லாம் முடியிருந்தா போதுமா?”

”நீ..அவனைத்தானே லவ்பண்ற?”

”அவந்தான் என்னை விரும்பறான்..”

”ஐயே..கேட்கவே..கண்றாவியா இருக்கு”

”கேட்க..அப்படித்தான் இருக்கும்..ஆனா ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு விதம்..அதை உன்னால புரிஞ்சிக்கவே முடியாது..எனக்கே நானொரு தீராத ஆச்சரியம்” என்றாள். அங்கே ஒரு நாடகம் அரங்கேறியது.

வாசலை நெருங்க நெருங்க என் இதயத்தின் ஓசை நாராசமாய் ஒலித்தது. காலுான்றி வலுவாக நிற்க முயலும் தோறும் காலடி மண் வழுக்கிச்சென்றது. ஒரு கட்டத்தில் வயோதிகனைப்போன்று சுவரினை கைகளால் தொட்டுக்கொண்டு நடந்தேன். முடியாமல் பெருமூச்சுக்களை வாரியிறைத்தபடி நின்றேன்.

என் பேத்தி முன்னால் சென்றவள் நின்று என்னைத் திரும்பிப் பார்த்தாள். அவள் சிரிப்பில் எனக்கு உடலெல்லாம் பூரித்தது.

”தாத்தா..பூங்கா பக்கத்திலதான் இருக்கு” என்றாள். அவள் சாலையில் விரைந்துசெல்லும் வாகனங்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டிருந்தாள். நான் அவளுக்கு விபத்துக்கள் ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்று வேண்டிக் கொண்டேன். சர்க்கரையை குறைக்க மருத்துவர் அறிவுறுத்தியிருந்தார்.

எப்போதுமே காலையில் நான்குமணிக்கு விழிப்பு வந்துவிடும். சிறிதுநேரம் விடிவிளக்கின் மங்கிய ஒளியில் சுவர்களையே பார்த்துக்கொண்டு படுத்துக்கிடப்பேன். சுவர்களின் வண்ணத்தீற்றல்களில் இருந்து முகங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முகம்.   நினைவிற்கே வராது. யாருடைய முகம் அது என்று யோசித்து தவித்துக் கிடப்பேன். சிலபோது அந்தமுகங்களை அடையாளம் கண்டு கொள்வேன். பேச ஒன்றும் இருக்காது. இனி பேசிப்பகிர என்ன இருக்கப்போகிறது. ஆனாலும் அந்தக்கண்கள் வாஞ்சையினால்  பார்க்கும். அவையும் என்னைப்போல வயோதிகம் வீழ்த்தி எங்கிருந்தோ இரவை விழித்திருந்துக் கடக்க விதிக்கப்பட்டிருக்கும் ஒரு தனித்த ஆத்மாவின் கண்கள்.

அவள் இப்போது என்னைப்பிடித்து உலுக்கினாள். நான் விழித்தெழுந்து ”என்னம்மா என்னம்மா” என்று பிதற்றினேன். அவள் கண்கள் சிவந்து, வீங்கிய முகத்துடன் நின்றிருந்தாள். அவள் நின்ற கோலம் என் அடிவயிற்றைக் கலக்கியது.

”நம்ப பாப்பா ஓடிப்போயிட்டாங்க”

”ஏய்…என்ன சொல்றே..நீதானே..ஆபிஸ்ல டூர் கூட்டிட்டுப்போயிருக்காங்கனு சொன்னே..என்னடி ஆச்சு உனக்கு” கைலியைத் தேடி எடுத்து நன்றாக கட்டிக்கொண்டேன். தலையை கடுமையாக வலித்தது. கொஞ்சம் குறைவாக குடித்திருக்கலாம்.

”அவ இப்பத்தாங்க..போன்ல கூப்பிட்டு சொன்னா..திருப்பதியில மாலை மாத்திக்கிட்டாங்களாம்”

”நம்ம கிட்ட சொல்லியிருக்கலாமே.. பண்ணி வச்சிருப்பமே”

”கூருகட்ட முண்ட..நாலு மாசமா தலைக்கு குளிக்கலயாம்” அவள் சொல்லியபின் ஓ….வென்று முழங்கால்களை கட்டிக்கொண்டு அழத்தொடங்கினாள். எனக்கு அவளின் தலைமுடியைக் கொத்தாகப்பிடித்து ஓங்கி ஓங்கி அடிக்கவேண்டும் என்ற வெறி எழுந்தது. தசை முகடுகள் மேலும் வெறியேற்றின.

அடக்கிக்கொண்டு காத்திருந்தேன். இப்போதெல்லாம் எந்த ஒன்றையும் உடனே வெளிப்படுத்துவது ஆகாமல் போயிருந்தது. பசி வயிற்றில்  பூகம்பத்தைப்போல புரட்டிப்போடும். ஏழு உலகங்களும் ஒன்றுடன் ஒன்று முயங்கி கலங்கி நிற்கும். ஆனாலும் சாந்தம் வழியும் முகத்துடன் காத்திருப்பேன். என் முன் எச்சில் இலைகள் வந்து விழும்வரைதான் அவையெல்லாம். விழுந்த கணத்தில் நானும் அந்த பொறுக்கி நாய்களைப்போல முண்டிப் பாய்வேன். எவ்வளவு முறை இதுகுறித்து தனிமையில் கண்ணீர் விட்டு அழுதி்ருப்பேன்.

 வாழ்நாளெல்லாம் தொடர்ந்து அழுதவண்ணம் வளர்ந்திருக்கிறேன். எப்போதும் அழுதுவிடும் பெரும்பேறு பெற்றவன் நான். பாப்பாவை டான்சில் அறுவைச் சிகிச்சைக்காக வண்ணார்பேட்டையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்திருந்தேன். அவளுக்கு தொண்டையெல்லாம் பயங்கர வலி. வாயைத் திறந்து காட்ட உள்ளே சிவந்த கொப்புளங்களைப்போல உள்வாய்ப்பகுதி எச்சில் நுரைப்பூக்களுடன். வாயில் குருதி வழிய அவளை படுக்கையில் கிடத்தியபோது நான் கதறிக் கதறி அழுதேன். என்னால் அழுகையை அடக்கவே முடியவில்லை. எனக்காக, என் தோல்விகளுக்காக ,என் இயலாமைகளுக்காக, என் சுயநலங்களுக்காக, என் அழுக்காறுகளுக்காக அன்றி என் மகளின் கண்ணீரால் துாண்டப்பட்டு பெருங்குரலெடுத்து அழுதேன். அன்றுதான்  அழுவது  ஆணுக்கு எத்தனைப் பெரிய விடுதலையைத் தருகிறது என்பதை  துயரத்தோடு உணர்ந்து கொண்டேன்.

”வ்வியிக்” என்றது கரிய பறவையின் குரல். அதன் கூரலகு சூரிய ஒளியில் பளீரிட்டது. கண்களுக்கு நிறமே இல்லை. மரக்கிளை அதிகாலைக்காற்றில் இதமாக ஆடியது.

நான் வாசல் கதவைத்திறந்து வெளியில் வந்தேன். என் முன்னால் புத்தம்புதிய ஒரு நாள்.

திரும்பிப் பார்த்து ”நன்றி” என்றேன்.

இருளில் இருந்து அறை காட்சிக்குவர சிறிது நேரம் ஆனது. வனங்களுக்கே உரிய வாசனை என்னைச்சுற்றி. வெகுதொலைவில் நதியொன்று சிலுசிலுத்து ஓடும் நீர்த்தளும்பல்.  மரக்கிளைகளை விசையோடு அசைக்க பறவைகளின் இடைவிடாத சிறகடிப்பு. பின்கழுத்தில் பெருமூச்சுக்காற்றின் சீற்றம். காது ரோமங்கள் அசைந்தன. என் போதம் அதை  அறிந்தது. அஞ்சி உற்றுப்பார்த்தேன். மின்விசிறியின் மந்திரச் சுழற்சி நாட்காட்டியின் பக்கங்களைப் புரட்டி உலுக்கிளது. நாட்காட்டியின் நாட்கள் அறைக்குள் விழுந்து சிதறிப் பரவின.

வெள்ளொளியென என்னருகே ஓருடல் இருள் கிழித்து நீராழத்திலிருந்து மேல் எழுந்து வந்தது. என்னைத்தொட்டு நின்றது.  அவ்வுடலின் கருங்கூந்தல் தரையில் படிந்து நதியென கிளைத்தது. பதறிப் பின்னால் நகர்ந்தேன்.  மொசைக்தரை இரு சுவரென வெடித்தது. அதளபாதாளம் நோக்கி விழுந்தேன்.

கையூன்றி எழுந்த இடம் ஒரு நுாலகம். மிகப் பழமையான பனுவல்கள். அவை இரும்பு அலமாரிகளில் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. படை படையாக நுாலாம்படைகள் அப்பியிருந்தன. தொடர்ந்து தும்மல்கள். தாகம் எடுத்தது. நாவறட்சி ஆளைக்கொன்றுவிடும் போலிருந்தது. மிகுந்த சோர்வாகவும் இருந்தது. என் எண்ணம் முழுக்க ஒருபோத்தல் குளிர்ந்த நீருக்காகத் தவித்தது. இலக்கின்றி ஓடினேன். ஊடும் பாவுமாக பாதைகள் எட்டுத்திசைகளிலும் பிரிந்து கிடந்தன.

மனித வாசம் அற்ற அந்த அறைக்குள் விரைந்து செல்லும்போது என் முகத்தில் நுாலாம்படைகள் படிந்துகொண்டே இருந்தன. மீண்டும் மீண்டும் ஒரே வழியையே கடந்திருந்தேன். இல்லை இல்லை என்னால் நகர இயலவில்லை. மூச்சிறைக்க ஓடினாலும் என் கால்கள் ஒரே இடத்தில். யாரோ என்னைக் கட்டிப்போட்டிருந்ததை உணர்ந்து என் முயற்சியைக் கைவிட்டேன்.  முதல்முறையாக நுாலகமொன்றினைக் குறித்து தீவிர அச்சம் கொண்டேன்.

என்னருகே இருந்த நுாலடுக்கில் இருந்து மிகத்தடிமனான புத்தகம் ஒன்றை எக்கி எடுத்தேன். அப்போது வாசிப்பு ஆறுதலாக இருக்கலாம் என்றும், என் கையறு நிலையில் இருந்து தற்காலிகமாக என்னை மறக்கச்செய்யலாம் என்றும் நம்பினேன். அதன் கனம் தாளாமல் இருகைகளாலும் ஏந்திக்கொண்டேன். அங்கிருந்த மங்கிய ஒளியில் அது என்ன புத்தகம் என்பதை என்னால் அறியமுடியவில்லை. பக்கங்களைப் புரட்டி கண்களுக்கருகில் கொண்டு சென்று வாசிக்க முயன்றேன்.  புழுக்களென சொற்கள் நெளிந்தன.  கருநாகமொன்று வரிகளில் இருந்து உருத்திரண்டு முகத்தருகே சீறியது. நுனிபிளந்த இரட்டை நாக்கின் ஈரத்தில் ஒளிப்பிழம்பின் பிம்பம் மின்னலென வெட்டியது. திடீரென என் காதுகளில் யாரோ கிசுகிசுக்கும் குரல்.

”ஆதியிலே இவ்வுலகம் ஒரு சொல்லாக இருந்தது. சொல்லில் இருந்தே பிரபஞ்சம் தோன்றியது. நட்சத்திரங்களும் உடுமண்டலங்களும் கோள்களும் நுண்துகள்களும் துாசிப்படலமும் அறிய முடியாத அத்தனையும் சொற்களே. தோழரே..”

புத்தகத்தை மூடினேன். அக்குரல் எனக்கு மிகுந்த பரிச்சயம் உள்ள நண்பரொருவரின் குரல். ஆம் இது நண்பரின் அறை. நண்பர் எனக்குப் பயம் உண்டாக்க நிகழ்த்திக்காட்டும் நாடகம் இது. எனக்குச் சிரிப்பு வந்தது. புத்தகத்தை பழையபடி ரேக்கில் வைத்துவிட்டு ”நண்பரே இதென்ன விளையாட்டு“ என்று கத்தினேன். அவ்வளவுதான் என் குரல் அவ்வறையின் நான்கு மூலைகளிலும் எதிரொலித்து அணையுடைந்த பெருவெள்ளம்போன்று பீறிடத்தொடங்கியது. பற்பல குரல்களாக நுால்களின் கார்வை. குரல்கள் ஒன்றோடு ஒன்று முண்டியடித்தன. குரல்களின் தேஜாவு.

காதுகளைப் பொத்திக்கொண்டேன். கழுத்திலிருந்து தலையைக் கொய்தேன். ஊற்றென பீறிட்ட குருதி தரையில் வரைந்த ஒவியம் என்னுடையதாய் இருந்தது. அதன் கணகள் என்னையே வெறித்துப் பார்க்க நிழலென தனித்திருந்தேன்.

”சவத்து மூதி..வேலைக்குப் போகலையால..பொச்சுல வெயிலடிச்சும் எழுந்திரிக்க மனசு இல்லயோ”

 பகல் தகித்து நின்றது.

3.

 ஒரு முடிவிற்கு வந்தாக வேண்டிய நெருக்கடிக்கு ஆளானேன். குருநாதர் என்னிடம் இரண்டு வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார். ஊரில் என் பெயரில் இருக்கும் சொத்துக்களை விற்றுவிட்டு கிடைக்கும் பணத்தை ஆசிரமத்தின் வங்கிக்கணக்கில் செலுத்தியபிறகு இங்கே நிரந்தரமாகத் தங்கிக்கொள்ளலாம். அல்லது வீட்டில் இருந்து கொண்டே ஒரு துறவியைப்போல வாழ்ந்து வரலாம். முடிவு உன் கையில் என்றார்.

நான் குருவின் கண்களைப் பார்த்தேன். அவற்றில் எனக்கான பதில் ஏதும் இல்லை. தெட்சணா மூர்த்தி அவருக்கே உரிய தேவாங்கு பார்வையில் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் எப்போதுமே ஒருவித சவக்களை. ஆசிரமத்தின் அமைதி அக்கணம் என்னை கடுமையாக மிரட்டியது. நாற்பதாண்டுகளாக ஓயாத வணிக இரைச்சலில் வாழ்ந்து பழகியவன் நான். மரங்கள் சூழ்ந்த அமைதியும், மனிதர்கள் வாழ்ந்தும் அரவமற்ற தனிமையும் எனக்கு புதிய அனுபவம். நிலைகொள்ளாத பதற்றம்.

தீட்சை பெற்றுக்கொண்டேன். புலால் உண்பதில் இருந்தும், மனைவியைக் கூடுவதில் இருந்தும் என்னை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று குருநாதர் கேட்டுக்கொண்டார். தீட்சை என்பது ஒர் அறைகூவல். ஒரு லௌகீகியாக இருப்பது எளிமையானது. இச்சைகள் தானாகவே இழத்துச்செல்லும் நாம் வெறுமனே மிதந்திருக்கும் சூட்சுமத்தைக் கற்றுக்கொண்டால் போதும். துறவியாக வாழ்வது ஒரு கற்புநெறி. நமக்கு  காப்பு. நம் அகமே. குருவின் சொற்கள்.

குருவின் பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்தேன். பௌர்ணமிகள் தோறும் ஆசிரமம் வந்து குருவின் ஆசிபெற்றுச்செல்வதாக கூறிவிட்டு கிளம்பினேன். குரு சித்தானந்த பாஷ்யம் என்கிற நுாலொன்றை எனக்கு அளித்தார். ”உனக்கு எப்பொழுதெல்லாம் மனதில் கேள்விகளும் ஐயங்களும் தோன்றுகிறதோ அப்போது மட்டும் இந்த நுாலைப்பிரித்து வாசிக்கத் தொடங்கு. இந்நுாலின் ஒவ்வொரு சொல்லும் நான்”. என்றார் குரு.

ஐந்தருவியில் இருந்து குற்றாலம் செல்லும் சாலை இருபுறமும் பச்சை செழித்து நின்றது. எங்கெங்கு காணினும் தாவரச்செறிவு. காற்றின் குளுமை என் அகத்தை நெகிழச் செய்திருந்தது. ஒரு தாய்க்குரங்கு தன் குட்டிகளோடு என்னை வெறித்துக் கடந்தது. நான் அக்கணத்தில் இருந்து  வேறொரு ஆண். பழைய மாணிக்கத்தை குருவின்முன் கொன்றிருந்தேன்.. யானைப்பாலத்தின் அடியில் கண்ணாடி போன்று நலுங்கிச்சென்ற  நீரோடையைக் கண்டேன்.. இறங்கிச்சென்று குளித்தேன். தண்ணீரின் குளுமை தீண்டி என்னுடலில்  பெண்ணுடலுக்கான ஏக்கம். நீந்திக்கொண்டிருந்த அயிர மீன்குஞ்சுகளை சிறிது நேரம்  வேடிக்கைப் பார்த்து நின்றேன். வெள்ளைக்கொக்குகள் சில என் இருப்பை அஞ்சாமல் அருகில் வந்தமர்ந்து தண்ணீரைத் துழாவின.

ஐந்தாண்டுகள் மின்னல் போல கடந்துவிட்டது. குருநாதர் ஜீவ சமாதி அடைந்து இரண்டு குருபூஜைகள் முடிந்துவிட்டது. சித்திரை இருபதில் குரு சமாதியானார். குரு சமாதி அடையும் முன் தினம் நான் வீட்டில் என் அறையில் தியானத்தில் இருந்தேன். எப்பவும் இரண்டு மூன்று மணி நேரத்திற்கு மேல் என் தியானம் நீளும். தியானத்திற்கு இரவுகளே உகந்தவை. இரவுகளில் மட்டுமே ஒலியடங்கி தெருவும் வீடுகளும் தங்கள் இயல்பிற்கு திரும்பி விடுகின்றன.  ஆரம்பத்தில் பத்மாசனத்தில் அமர்வதில் சங்கடம் இருந்தது. கால் மூட்டிகள் வலித்தன. இரண்டு மாதகால அவகாசத்தில் பழகிக்கொண்டேன்.. ஜமுக்காளம் விரித்து இரவு விளக்கின் குறைந்த ஒளியில் தியானம். சில நாட்கள் கண்களில் இருந்து கண்ணீர் தானாகவே வழிந்து செல்லும்..

      சுந்தரி அங்கணத்தில் மோளும் நீர்ச்சீற்றம் என் தியானத்தைக் கலைத்துப்போட்டது.  நின்றுகொண்டு கால்களை அகட்டி, வெள்ளைத் தொடைகள் பளீரென்று தெரியும்படி இருப்பதே அவள் பழக்கம்.. அப்போதே மூத்திர நாற்றம் என் மூக்கில் மண்டியது. மறுபடியும் கண்களை மூடி தொடர முயன்றேன். கூடவில்லை. கறுப்பு வண்ணக் குழம்பும்  ஊதாநிற படிகமும் ஒன்றுடன் ஒன்று  முயங்கி  நிறக்கொப்புளங்கள் ரெப்பைக்குள் குமுறி அலைந்தன. ஒளியே இல்லாத நெடும் பயணம். சட்டென்று மனம் சொற்களின்றி சூன்யத்தை அடையும் நிலை. முகத்தை இரண்டு கைகளாலும் துடைத்துக்கொண்டேன். அவளிடம் இருந்து இப்போது பீறிடும் குசுவின் ஓலி.

திடிரென்று யோரோ என்னை உற்றுநோக்கும் உணர்வு. அவற்றைக் கண்டு அஞ்சினேன். சிறிதுநேரத்தில்  அது குருவின் கண்கள் என்பதை உணர்ந்து வணங்கினேன். அச்சம் விலகி அக்கண்களில் இருந்த கருணை என்னை ஆற்றுப்படுத்தியது. குருவின் கண்களில் நான் எப்போதும் பார்த்திராத ஒருவித துயரம். அது என் நிலை மீதான விமர்சனமா? அல்லது குருவின் கையறுநிலையா?  பின்னாட்களில் பலமுறை அக்கண்களின் துயரத்தை எண்ணி யோசித்திருக்கிறேன். அதன்பின் ஒருபோதும் குற்றஉணர்ச்சிகள் இன்றி குருநாதரை வணங்க முடிந்ததில்லை என்னால்.

எனக்கோ மீண்டும் திரும்பிப்போக முடியாத நிலை.  லௌகீகவாதியாக திரும்பச் சாத்தியமுள்ள அத்தனைப் பாலங்களையும் உடைத்திருந்தேன். சக மனிதர்களோடு முற்றாக தொடர்புகளைத் துண்டித்திருந்தேன். தொப்புளைத்தொடும் நீண்ட வெண்தாடி. தோளில் சடைபீடித்து சுருண்டுதொங்கும் கூந்தல். நான்குமுழ வெள்ளைக் கதர்வேட்டி. மேலுக்குக் கதர் துண்டு. சுந்தரியைத் தொட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும். குந்தி அமர்ந்து மலம்கழிக்கும் போது சிலசமயங்களில் விந்து ஒழுகும். உள்மூலம் வந்தபின் மாமிசத்தை கைவிட்டு இருந்தேன்.

துறவிக்கோலம் பல சம்பிரதாயங்களில் இருந்து என்னைக் காப்பாற்றியது. உறவினர்களின்  காரியங்கள் அனைத்தில் இருந்தும் விலக்குகள் பெற்றுக்கொண்டேன். நாளடைவில் குடும்ப விசேஷங்களுக்கு என்னை அழைப்பதை அவர்களும் குறைத்துக்கொண்டார்கள். தெருவிற்குள் நிகழும் துஷ்டி வீடுகளுக்குக்கூட நான் செல்வதில்லை. என் சொந்த அத்தான் இறந்தபோது வீட்டின் அறைக்குள் அமர்ந்து ஊதுபத்தி உருட்டிக்கொண்டிருந்தேன். குடும்பத்தின் வீழ்ச்சி தாளாமல் அவர் துாக்குமாட்டிக்கொண்டிருந்தார். சங்கு ஊதி நீர்மலை எடுத்துச்செல்லும்போது அடிவயிற்றில் விட்டுவிட்டு அலையடித்தது.  பொலபொலவென்று கண்களில் நீர்த்துளிகள்.

சுரண்டையில்  கரகாட்டக்காரியின் வீட்டுத்திண்ணையில் அவரோடு அமர்ந்திருந்த காட்சிகள் மிதந்து எழுந்தன. உள்ளாற்று நாடார் பனையில் இருந்து அப்போதே இறக்கிய ஒருபானைக் கள்ளைக் குடித்திருந்தோம். அத்தானுக்கு வாயெல்லாம் கெட்ட வார்த்தைகள் பொங்கி பொங்கி வந்தது. மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு கரகாட்டம் ஆட வந்தபோது அவளைப் பழக்கம். ”நல்லா முத்தி விளஞ்ச தெங்குடா ரெண்டும்” என்பார். அத்தான் அவளின் முகவரியை டைரியில் குறித்து வைத்திருந்தார்.

கூடிச் சோர்ந்து மல்லாக்கப்படுத்து ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். அவள் திரும்பிப் படுத்தாள். படுத்த சிலநிமிடங்களில் அவளிடம் இருந்து ஆழ்ந்த குறட்டை. அவளுடல் மீது எழுந்த வெறுப்பும் அலுப்பும் எனக்கு எரிச்சலை அளித்தது. நான் தவித்துக்கொண்டிருந்தேன். மனதில் என்ன செய்தாலும் அகலாத வெறுமை.

. அப்பாவின் காலத்தில் பெரிய ராஜ்ஜியம் போன்று பரவியிருந்த சொத்துக்கள் ஒவ்வொன்றையும் உடைத்து விற்றுத் தின்றுகொண்டிருந்தேன். தறிகள் நெய்வதை நினைத்தாலே கசந்தது. பாவாற்ற வார்க்கும் கஞ்சியின் வாசனை கண்டாலே குமட்டும். வியாபாரத்தந்திரங்கள் என் மூளைக்குள் ஏறப்பயந்தன. இலக்கியம் வாசிப்பதிலும், ஊர் ஊராகச் சென்று விதவிதமான உணவுகளையும் பெண்களையும் அடைவதில் தீராத வெறியிருந்தது. அப்பா இறந்த பதினைந்து வயதில் இருந்து இந்த பழக்கங்களை அறிமுகம் கொண்டிருந்தேன்.

கஞ்சா புகைத்து வீட்டுச்சுவர்களில் நடந்துசென்ற ஒரு பின்மதியத்தில் அவளை படுக்கையறைக்குள் இழுத்தேன். முடிந்து குப்புறப்படுத்து உறங்கிப்போனேன். எழுந்தபோது மறுநாள் மதியம் ஆகியிருந்தது. அவள் வீட்டைவிட்டுச்சென்று மூன்றுநாட்கள் கழிந்தபின் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தேன். அவளின் துணையின்றி மூன்று குமருகளையும் என்னால் பாதுகாக்க முடியாது என்பதை எண்ணி நடுங்கினேன்.

ஒரு வாரத்தில் அவள் ஷீரடியில் இருந்து திரும்பியிருந்தாள். அவளிடம் இருந்தே ஆசிரமம் சென்று தங்கிவிடும் உத்தேசம் என்னிடம் தொற்றிக்கொண்டது. குற்றாலத்தில் குளிக்கச் சென்றபோது ஐந்தருவி ஆசிரமம் குறித்துக் கேள்விப்பட்டேன். அவளைக் கதறச்செய்ய வேண்டும் என்ற அகங்காரத்தில் அங்கே சென்றேன். குரு என்னை ஆறுமாதங்கள் அலைய விட்டார். ஏழாவது மாதத்தில் நான் உண்மையாகவே அங்கு இருக்க விரும்புகிறேன் என்பதை உறுதி செய்துகொண்டார்.

மூத்தவளை செங்கோட்டையில் கட்டிக்கொடுத்து, மூன்றாவது மாதத்தில் அவள் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்ட பின்தான் நான் எட்டுமாதங்கள் வீடு திரும்பாமல் அலைந்து திரிந்தது. மாப்பிள்ளை பார்க்க வந்த அன்றே சுந்தரி அந்த சம்பந்தம் வேண்டாம் என்றாள். மாப்பிள்ளையின் முழி சரியில்லை என்றாள். ஒரு ஆணைப் பார்த்ததும் அவன் எப்படிப்பட்டவன் என்பதை ஒரு ஆணைவிட ஒரு பெண்ணால் துல்லியமாக உணர முடியும் என்றாள். நான் ”சும்மா கெட மூதி. ஒரே பிள்ளை. பத்துத்தலைமுறைக்கு தாங்கக்கூடிய நிலபுலன். ஐவேசு இருக்கு.  அவுக தாத்தா அந்தக்காலத்துல பெரிய பண்ணையாரு”  என்று அவளை எச்சரித்தேன். மூத்தவளுக்கு அப்பாவின் சொற்களின் மேல் அபார நம்பிக்கை. மாப்பிள்ளையையும் பிடித்திருந்தது.  மாப்பிள்ளை கொடிமரம் போல வளர்ந்திருந்தார். எங்கள் சாதியில் அப்படி ஒரு முகவெட்டு அபூர்வம். நெஞ்சை நிமிர்த்தி தோள்களிரண்டை விரித்து நடக்கும் ராஜதோரணை. மண்ணாண்ட நினைவுகள் உறைந்திருக்கும் வம்சம் அல்லவா?

பாதிச் சொத்தை அளித்துத்தான் மூத்தவளை செங்கோட்டையில் குடியமர்த்தியது. மாப்பிள்ளைக்கு ஜவுளி வியாபாரம் இருந்தது.. காந்திபஜாரின் மத்தியில் பெரிய கடை. பத்திருபது பேர்களை வேலைக்கு வைத்திருந்தார். மறுவீட்டுக்கு அழைத்து வந்திருந்தபோதே தாயும் மகளும் குசுகுசுவென்று பேசிக்கொண்டார்கள். எனக்குத்தான் அப்போது அதை அறிந்துகொள்ளும் புத்தி இல்லை. கைமருந்து அளித்தும் அவனை உசுப்ப முடியவில்லை. கிழிபடாத கன்னித்திரையோடு அவள் எரித்துக்கொண்டாள்.

மனதில் அருவிபோன்று சொற்கள் வீழ்ச்சியடைய ஆரம்பித்தன. கோபமும் உக்கிரமும் ஏறிய சொற்கள். உலகில் உள்ள அத்தனை ஆண்குறிகளையும் பிடுங்கி தீவைத்து எரிக்கும் ஆவேசம். மூத்தவளை தலைமேல் இருத்தி பனையூர் கோவில் திருவிழாவிற்கு அழைத்துச்செல்கிறேன். உச்சிக்குடுமியை இறுகப் பற்றிக்கொண்டு கோவில் வாசல் முன் நின்று துதிக்கை தவிக்க, ஒளிரும் முகபடாம் கண்டு அவள் துள்ளிக் குதிக்கிறாள். ”அப்பா..ஆனை..அதோபார்..பெரிய ஆனை.”

அவர்கள் கிளம்பிச் சென்றார்கள். சங்கரனை அழைத்து தண்ணீர் கேட்டேன். அவன் சுந்தரியிடம் சென்று செம்பு நிறைய வாங்கி வந்தான். புன்னையாபுரம் சென்று மறுநாள் அங்கிருந்து ஐந்தருவி செல்லும் திட்டம். சங்கரனின் அப்பாவிற்கு என்மேல் ஐயத்திற்கு இடமில்லாத நம்பிக்கை. என் பெயரில் ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி பண்டாரங்களுக்கு நாள்தோறும் ஒருநேர உணவளிக்க வேண்டும் என்று யோசனை சொன்னார்.

நான் எல்லாவற்றில் இருந்தும் முற்றாக விலகியிருந்தேன். முந்தல் மலைக்கருகில் புறம்போக்கில் ஒரு சிறிய மண் குடிசை.  மாடுகள் ஓட்டிவந்த சங்கரன் என்னைக் கண்டதும் காலில் விழுந்தான். அழுக்கேறி சடைமண்டியிருந்த என் கோலம் அவனை வீழ்த்தியிருக்கலாம். ”சாமி …வாழைப்பழங்கள் வாங்கி வரட்டுமா? என்று பணிவாக கேட்டான். நான் உணவு உண்டு நான்கு நாட்கள் ஆகியிருந்தது. சுனை நீரை குடித்து வாழ்ந்திருந்தேன். சங்கரன் மூலம் புன்னையாபுரத்தின் சாமியாக உருமாறினேன். வெள்ளி செவ்வாய்களில் என் குடிசை முன் குறிகேட்கவென்று சனங்கள் வரஆரம்பித்தனர். கொஞ்சம் சில்லறைகள் சேரத்துவங்கின.

நான் விட்டுவந்த ஒவ்வொன்றும் பன்மடங்கு வேகத்தில் என்னிடம் மீண்டு வந்தன. இப்போது எதையுமே விலக்குவதில்லை. இப்பிறவியில் அடைய முடிந்தவை எவை என்பதை நன்கு அறிந்திருந்தேன். ஏற்பட்டிருந்த இடைவெளி அனுபவித்திருந்தவை மேல் தவிர்க்க முடியாத ஈர்ப்பை உண்டாக்கிற்று. நான் என் எழுபத்திரெண்டாம் வயதில் மீண்டும் ஒரு விதவைப் பெண்ணைச் சேர்த்துக்கொண்டேன். அவளுக்கு ஒரு மகனும் ஒரு காதலனும் இருந்தார்கள். அவர்கள் என் ஆசிரமப்பணிகளில் பொறுப்பாக இருப்பார்கள் என்று அவள் உறுதியளித்தாள்.

என் பிரதான சீடனுக்காக நான் காத்திருக்கத் தொடங்கினேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *